Tuesday, January 12, 2016

ஒளி விழாத இடங்கள்!


- முஜீப் இப்றாஹீம் -

நேற்றிரவு இஷாவுக்கு பிறகு பயான் முடித்துவிட்டு பள்ளிக்கு வெளியே உள்ள சீமெந்து பென்ஞ்சில் வந்தமர்கிறார் ஹஸ்ரத்.

பயான் தொடர்பான ஒரு சந்தேகம் தீரவேண்டி இருந்ததால் நானும் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன்.

சந்தேகம் தீர்ந்தது.
அதன் பின்னர் பொதுவான உரையாடல் தொடர்ந்தது.....

ஆனாலும் அவருக்குள் ஒரு தேக்க நிலையினை உணர்ந்தேன். வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு பஸாருக்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அதில்தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை உணரமுடிந்தது.
இந்த பள்ளிக்கு வந்த காலத்திலிருந்து தனது கஷ்டத்தை சொல்லி இதுவரை இங்கே வருகிற யாரிடமும் ஒரு சதம் கூட கை நீட்டி வாங்கியிராத கௌரவமான மனிதர்!

பள்ளி செயலாளர் அவரை நோக்கி நெருங்கும் போது விடைபெற்று வந்துவிட்டேன்.

அனேகமாக அவரைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

நமது நாட்டில் திருவோடு ஏந்த வேண்டிய பௌத்த துறவிகள் இன்டர் கூளரில் பவனி வருகிறார்கள், கிறிஸ்தவ பாதிரிமார் செல்வச்செழிப்போடு வாழ்கிறார்கள், பள்ளிவாயல்களில் பணிசெய்யும் மௌலவிமாரின் நிலையோ பரிதாபம்.

எங்கள் பள்ளி ஹஸ்ரத்துக்கு மாதச்சம்பளம் இருபத்தையாயிரம் ரூபாய். எந்த வருமானமுமின்றி இயங்குகிற பள்ளியாதலால் ஒரு நிறுவனந்தான் அந்த சம்பளத்தையும் வழங்குகிறது!

இந்த வருவாயோடுதான் ஆறுமாதக்குழந்தையோடு பள்ளி ஹஸ்ரத் இங்கே தலை நகரில் காலந்தள்ளவேண்டியிருக்கிறது!

கத்தம், பாத்திஹா, மௌலிது, மையத்து வருமானம், ட்ரஸ்டிமாருக்கு தலைசொறிவதால் வருகிற டிப்ஸ், பசையுள்ள பணக்கார்ர்களுடன் பல் இழிப்பதால் அவ்வப்போது கிடைக்கும் கையூட்டு இவை எதுவும் அவருக்கில்லை!

இஷாவுக்கும், சுப{ஹக்கும் பிறகு நாள்தோறும் அவரது பயான் நிகழ்த்தப்படுகிறது.

அவ்வப்போது விடுமுறை நாட்களிலும் தூய இஸ்லாத்தை விளக்கும் நிகழ்வுகளும் அவரால் நடாத்தப்படுகிறது.

இப்படியொரு பள்ளி ஹஸ்ரத்தை எனது வாழ்நாளில் இப்போதுதான் பார்த்திருக்கிறேன்.

பள்ளி வாயல்களில் வழங்கப்படுகிற இந்த குறைந்த சம்பளத்தின் காரணமாக விடயதானமுள்ள மௌலவிமார் பள்ளி இமாம்களாக கடமையாற்றுவது மிக குறைவு.

நளீமிய்யாவில் இருந்து வெளியாகிற உலமாக்கள் பள்ளிவாயல்களில் இமாம்களாக இருப்பதை காணமுடியவில்லை, அவர்களுக்கு அரச தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் தொழில் கிடைத்து விடுகிறது.

சவூதி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வருகிற உலமாக்களுக்கு மாதாந்தம் சவுதி அரசால் கணிசமான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அத்தோடு அவர்கள் வேறு அரச ஃ தனியார் துறை சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு நல்ல வருமானமும் பெறுகின்றனர்.

அவர்களுக்கு பள்ளி இமாம்களாக பணி செய்வதற்குரிய தேவைப்பாடும் கிடையாது.

மறுபுறம் இங்கே வருமானம் ஈட்ட முடியாத உலமாக்கள் தமது பொருளாதார தேவை கருதி மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் தேடி செல்கின்றனர். அவர்களில் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமானது.

ஜித்தா விமான நிலையத்தின் கழிவறைப்பகுதியில் சுத்திகரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த குர்ஆனை மனனஞ்செய்த ஹாபிழ் ஒருவரை கண்டு மனமுடைந்து போனதாக ஓரு முஸ்லிம் அரசியல்வாதி அடிக்கடி கூறிக்கொள்வார்.

இன்னும் மத்திய கிழக்கு நாடொன்றில் காரைக்கழுவிக்கொண்டே குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த இன்னொரு ஹாபிழை கண்ணுற்ற அறபி ஒருவர் மிக்க மனம் வருந்தி அந்த ஹாபிழை வேறொரு கௌரவமான தொழிலுக்கு நியமித்து, சம்பளத்தையும் அதிகரித்து கொடுத்த நிகழ்வொன்றை அதற்கு சாட்சியான நண்பர் ஒருவர் சொன்னதுண்டு.

இது போல் ஏராளமான சம்பவங்கள் நிகழ்கின்றன!

இப்போது நமது நாட்டில் பல அரேபிய நிறுவனங்களும், தனி நபர்களும் தர்ம காரியங்களில் அறப்பணி புரிகிறார்கள். அதில் பெரும்பாலானவை பள்ளிவாயல்களை கட்டுவதாகவே காணப்படுகிறது.

தெருவுக்கு நான்கு பள்ளிகளை கட்டுவதைவிட இருக்கிற ஒரு பள்ளிவாயலை ஒழுங்காக பராமரிக்கவும் அங்கே கடமையாற்றும் இமாம் மற்றும் முஅத்தினுக்கு நல்ல சம்பளத்தை வழங்கவும் வழி செய்தால் அது பாரிய நன்மையாக அமையும்.

ஒரு பள்ளி ஹஸ்ரத்துக்கு மாதாந்தம் அறுபதினாயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியுமாக இருந்தால் நமது பள்ளிகளில் நல்ல வினைத்திறண் மிக்க உலமாக்களை இமாம்களாக பெற முடியும் அவர்கள் தொழில் தேடி வேறெங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது சாதாரணமாக அறபிகள் ஒரு பள்ளிவாயல் நிர்மாணத்திற்கு இலங்கையில் இரண்டரைக்கோடி ரூபாய்கள் வரை சராசரியாக அன்பளிப்பு செய்கின்றனர். இவ்வாறு நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள் கட்டப்படுகின்றன!

இதற்காக செலவிடப்படும் பெருந்தொகைப்பணத்தினை சரியாக முகாமை செய்து இருக்கின்ற பள்ளிவாயல்களின் வளர்ச்சிக்கும் அதன் பணியாளர்களின் கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்த முடியும்.
அறபிகளோடு பணி செய்யும் நிறுவனங்களும், தனி நபர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதன் ஊடாக பாரிய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த முடியும்.

அதே போல், மாதாந்தம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக பெறும் பள்ளிவாயல்கள் மாதாந்தம் இமாமுக்கு இருபதாயிரம், முஅத்தினுக்கு பத்தாயிரம் என்று வழங்கிவிட்டு, பெருந்தொகை பணத்தினை செலவிட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிக்கு மாபிள்களையும் , வர்ணங்களையும் மாற்றிக்கொண்டிராமல், இமாமையும், முஅத்தினையும் உரிய முறையில் கவனிக்கும் மன நிலைக்கு தங்கள் நிர்வாகத்தில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும்.

நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய்கள் இருந்தாலே போதாதென்ற நிலையில் இலங்கையில் வாழ்க்கைச்செலவு எகிறிப்போய் இருக்கும் நிலையில், பள்ளி இமாமுக்கு கிடைக்கும் இருபத்தையாயிரம் ரூபாய் வெறும் பன்னிரெண்டு நாட்களில் தீர்ந்து போனால் எஞ்சி இருக்கும் நாட்களுக்கு அவர் என்ன செய்வார்? எங்கு போவார்?

ஒரு பௌத்த தேரோவுக்கு, கிறிஸ்தவ பாதிரிக்கு இலங்கையில் கிடைக்கும் வருவாயும், வாழ்க்கைத்தரமும் நமது பள்ளி இமாம்களுக்கு கிடைப்பதில்லை என்பதில் நமக்கு வெட்கமில்லையா?

சமூக ஆர்வலர்களே, பள்ளி நிர்வாகிகளே, இஸ்லாமிய சமூக இயக்கங்களே, அறபிகளோடு பணி செய்வோரே, செல்வந்தர்களே இந்த கேள்விகள் உங்களுக்கே!

(முகநூல் பதிவு 12.01.2016)

Wednesday, January 6, 2016

'ஸச்ச வொண்டர்புல் கேர்ள்!'

- 32 -


01
'நீ ரொம்ப அழகா இருக்கே..!'

'என்னைச் சந்தோஷப்படுத்த பொய் சொல்லாதீங்க.. இங்கப் பாருங்க... முகத்துல எத்தன பரு இருக்குதெண்டு...?'

'ஐயோ.. அதுதான் உன்ட அழகைக் கூட்டிக் காட்டுது... முகத்துல முத்துக்கள் பதிச்ச மாதிரி எவ்வளவு அழகா இருக்கு...!'

மேற்படி உரையாடலை தனது உரை ஒன்றில் சொல்லிக் காட்டியவர் மறைந்த பேராசிரியர் பெரியார்தாசன் அப்துல்லாஹ் அவர்கள். 

திருமணம் செய்து கொண்ட புதிதில் கணவன் மனைவிக்கிடையிலான உரையாடல் இப்படித்தான் இருக்கும் என்று சொன்ன அவர் சில காலம் சென்ற பிறகு மனைவியைத் தேடும் போது  'எங்க பெய்த்து இந்த மூதேவி?' என்று கணவன் கேட்பானாம் என்றார்!

02
வலீமா விருந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

மணமகனின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாகத் தொழில் புரிந்து வரும் சாதாரணர் என்ற போதும் பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்களுக்கும் அறிமுகமானவர். ஒரு பெயர் பெற்ற திருமண மண்டபத்தில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வாத்தியங்களை நொறுக்கித் தள்ளிக் கொண்டிருந்த ஆங்கிலப் பாடல்களைப் பாடும்  கோஷ்டி விருந்து ஆரம்பமானதும் தமது குரல்களைத் தளைத்துக் கொண்டது. 

ஏறக்குறைய விருந்தின் இறுதிக் கட்ட வேளை பாடகர் கோஷ்டியின் ஒலிவாங்கியை உருவி எடுத்தார் மணமகன். அவர் ஆங்கிலத்தில் பேசினார். 'லேடீஸ் அன்ட் ஜென்ட்ல்மன்..' என்று விளித்தார். 'நீங்கள் எல்லாரும் வந்து எமது விருந்தில் கலந்து கொண்டதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி' என்றார். 'இந்தத் திருமணத்துக்காக எனது தாய், தந்தையருக்கும் (பெயர்களைச் சொல்லி) நன்றி' என்றார். 'எனது மாமா, மாமி மற்றும் நண்பர்கள், உறவினர்களுக்கும் நன்றி' என்றார்.

அதற்குப் பிறகுதான் அந்த முக்கியமான விடயத்தைச் சொன்னார்.

'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி... இப்படி ஒரு மனைவி - 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' - (இதுதான் ஆங்கிலத்தில் மனைவியைப் பாராட்டச் சொன்ன வார்த்தை) எனக்குக் கிடைத்ததையிட்டு நான் உண்மையில் பெருமைப் படுகிறேன்' என்றார். ''ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' என்னை முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளார்' என்றார்.

பிறகு மனைவியைச் சுற்றியே அவரது பேச்சுத் தொடர்ந்தது. 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' என்ற வார்த்தையை பதினைந்து முறைக்குமேல் அவர் பிரயோகித்துக் கொண்டிருக்கும் போதே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க முடியாமல் நான் வாயிலை நோக்கி நகர ஆரம்பித்தேன்.

திருமணம் முடிந்து மூன்று தினங்கள் கூட முழுமையாக முடிந்திருக்கவில்லை.

நான் வெளியே வரும் போது கோர்ட் ஷூட் அணிந்த ஒரு இளைஞன் மற்றவனிடம் சொல்வது எனது காதில் துல்லியமாக விழுந்தது...

'என்னடா இவன்.. நட்டுக் கழன்டவன் மாதிரி ஒளத்திக் கொண்டீக்கான்?'

இரண்டே இரண்டு இரவுகளில் மணமகளைக் கற்றுக் கொண்ட மணமகனை நினைத்துப் பார்த்தேன். இந்த இரண்டு நாட்களில் நிகழ்ந்தவைகள் அந்த இளைஞனைப் பொறுத்தவரை புதியவை, சில வேளை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காட வைத்தவை என்றும் கூடச் சொல்லலாம். இல்லையென்றால் மனைவியை முன்னிறுத்தி இப்படி அவர் பொங்கி வழிந்திருக்க முடியாது!

03
அது சரி... இனி அதுக்கென்ன என்று ஒரு கேள்வி உங்களுக்குள் இப்போது கொக்கி போட்டிருக்க வேண்டும்.

பெரிதாக ஒன்றுமில்லை.

இன்றைய தலைமுறையின் ஒரு பகுதியினர் - அரசியல், மார்க்கம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கும் பிரதிபலிப்பதற்கும் மணமகனின் 'ஸச்ச வொண்டர்புல் கேர்ல்!' - என்ற பொங்குதலுக்குமிடையில் வித்தியாசங்கள் எதுவுமில்லை என்று சொல்ல வந்தேன்!

06.01.2016