Showing posts with label மன்ஸூர் அல் ஹல்லாஜ். Show all posts
Showing posts with label மன்ஸூர் அல் ஹல்லாஜ். Show all posts

Tuesday, April 18, 2017

அனல் ஹக்!



புதிய தலைமுறையில் அநேகருக்கு அறிமுகமற்ற, பழைய தலைமுறையில் பெரும்பகுதியினர் தெரிந்து வைத்திருந்த, ஆனால் பேச விரும்பாத விடயத்தோடு சம்பந்தப்பட்ட பெயர்தான் மன்ஸூர் அல் ஹல்லாஜ்.

இறைவிசுவாசம் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு வார்த்தையை அவர் மொழிந்தார் என்பதே அதற்கான காரணம். அவர் சொன்னார்...

 'அனல் ஹக்! - நானே இறைவன்!'

'அனல் ஹக்' என்ற தலைப்பில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய சிறுகதையை அண்மையில் படித்தேன். அதாவது மன்ஸூர் அல் ஹல்லாஜ் பற்றியும் அவர மொழிந்த வார்த்தையால் ஏற்பட்ட குழப்பங்களையும் அவருக்கு நேர்ந்த அவலத்தையும் கதையாக எழுதியிருக்கிறார் பஷீர்.

'ஹிஜ்ராவுக்குப் பிந்தைய நான்காம் நூற்றாண்டின் தொடக்கம். ஞானிகளும் கவிஞர்களும் கலைஞர்களும் சர்வாதிகாரிகளின் முன் தலைகுனிந்து நின்றிருந்தனர், வெறும் ஸ்துதிப் பாடகர்களாக! பாரசீக தேசம் திராட்சை மதுவின் இனிமையிலும் பன்னீர்ப் பூக்களின் அழகிலும் அழகிகளின் ஆலிங்கனத்திலும் மூழ்கிக் கிடந்தது. அப்போதுதான் மன்ஸூர் ஹல்லாஜ் வருகிறார். ................ அண்மை நகரமான துஷ்தாரின் பெரிய பாடசாலையில் சேர்ந்தார். ஆன்மீகம், சமூகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற புலமை பெற்றார். பண்டிதராக வெளிவந்த மன்ஸூருக்குள் போதாமைகள் இருந்தன. ...........அவர் இருளில் தவிப்பதாக உணர்ந்தார். .....ஃபக்கீராக அலைந்தார். இறுதியில் உமர் இப்னு உஸ்மானைச் சந்தித்தார். ...சற்கரு ஒரு புதிய பாதையைக் காட்டினார். சூபிஸம்!'

'ஆன்மீக அறிவின் ஒளி மிகுந்த மேன்மை. அதில் அவர் ஆழ்ந்து இறங்கினார். யுகங்களின் ஆர்வத்துடனும் கொடுங்காற்றின் வேகத்துடனும் பௌதீக எல்லையைக் கடந்தார். அழிவற்றதும் நிரந்தரமானதுமான பேரொளியில் சிறு மேகப்படலம் போல் மயக்கத்தில் ஆழ்ந்தார். தியான வயப்பட்ட நிலையில் மன்ஸூர் அறிவித்தார்... 'அனல் ஹக்!''

மன்ஸூரின் வார்த்தையில் அங்கிருந்த குருவும் சீடர்களும் அதிர்ந்து போயினர். குரு உபதேசித்தார்:- 'மன்ஸூர் சிருஷ்டித்தவனையும் சிருஷ்டியையும் ஒன்றாகப் பார்ப்பது மாபெரும் தவறு. இது சமூகச் சட்டங்களுக்கு எதிரான பார்வை. 'ஷரீஅத்'தை மீறினால் மரண தண்டனை கிடைக்கும் என்பதை அறிவீர்கள்தானே?'

ஆனால் மன்ஸூர் அடங்க மறுத்தார். அந்த நிலையத்தை விட்டு வெளியேறினார். மக்கள் அவரை ஒரு பைத்தியக்காரன் என்றனர். கல்லெடுத்து எறிந்தனர். மீண்டும் இருக்க இடம் தேடி அலைய ஆரம்பித்தார். எங்கும் இடம் கிடைக்காத நிலையில் பக்தாதை வந்தடைந்தார். புகழ்பெற்ற சூபி ஞானி ஹஸ்ரத் ஜூனைத் நிபந்தனையுடன் அவருக்கு அபயமளித்தார். எனினும் அது நீடிக்கவில்லை. அங்கிருந்த மாணவர்களுடன் மன்ஸூர் விவாதிக்கவும் ஆவேசப்படவும் செய்தார். முடியாத நிலையில் ஹஸ்ரத் ஜூனைத் அவருக்கு எச்சரிக்கை செய்தார்.

'மன்ஸூர், கவனம் தேவை. ஆபத்தான நாளொன்று உம்மை அண்மித்துக் கொண்டிருக்கிறது. சூடான உமது நிணநீர் யூப்ரதீஸ் நதிக்கரையின் வெண்மணலைச் சிவப்பாக்கும். அந்தத் தினத்தின் மீதும் உமது கவனம் பதியட்டும்!'

ஹஸ்ரத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்த மன்ஸூர் அங்கிருந்து வெளியேறினார். பொது இடங்களில் ஆவேசமாக முழங்கினார். அறிஞர் பெருமக்கள் அவரது உரைகளால் பதட்டமடைந்தனர். அரசின் வலை அவருக்கு நெருக்கமாகிக் கொண்டே வந்தது. அடுத்த ஐந்து வருட காலத்தில் அவர் 47 நூல்களை எழுதித் தள்ளினார். அரசு அவற்றைத் தடைசெய்து அவரது பெயரைப் பரவலாக்கிற்று. மன்ஸூரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டது. அறிஞர்கள் அவரோடு சமரசஞ்செய்து அவரை ஆற்றுப் படுத்த நாடினர். அவரோ விவாதத்துக்கு வருமாறு கொக்கரித்தார். அவ்வாறான ஒரு வாத சபையில், 'என்னுடைய சிந்தனைகள் யாருடைய கட்டளைக்கும் அடிபணியாது' என்று முழங்கினார்.

பத்வா தயாரானது. மரண தண்டனைக்குரிய குற்றவாளிக்கான தீர்ப்பு எழுதப்பட்டது. ஆயிரக் கணக்கான ஆலிம்கள் அதில் கையெழுத்திட்டனர். ஆனால் சுல்தான் முக்ததிர் பில்லா கையெழுத்து வைக்க மறுத்தார். ஹஸ்ரத் ஜூனைத்தின் கையெழுத்துக்காக அவரது இருப்பிடத்துக்கு அறிஞர் கூட்டம் ஆறுமுறை சென்று திரும்பியது. கடைசியில் சூபி ஞானியின் ஆடை அணிகலன்களைக் களைந்து விட்டு நீதிவான் ஆடையுடன் கையெழுத்திட்ட போதும் தனது முத்திரையைப் பதிக்க மறுத்தார்.

1946ம் ஆண்டு இந்தச் சரிதத்தை வைக்கம் முகம்மது பஷீர் கதையாக எழுதியிருந்தார். 'அனல் ஹக்' என்றும் 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' என்றும் இறைவனின் அநேக படைப்புக்களில் ஒன்றான மனிதன் சொல்வது தவறு என்பது எனது கருத்தாகும் என்று கதையின் பின் குறிப்பில் பஷீர் தெரிவித்திருக்கிறார். மன்ஸூரின் வரலாறாக ஒரு கதையை எழுதியிருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்த போதும் தகவல்களைக் கொண்டே இக்கதையைப் பின்னியிருக்கிறார்.

கதையின் இறுதிப் பகுதி பயங்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது.  அவர் தூக்கிலிடப்பட்டடபின் என்ன நடந்தது என்பதை ஐதீகம் சொல்கிறது என்று பின்வருமாறு பஷீர் எழுதிச் செல்கிறார்:-

'அவர்கள் ஆயிரமாயிரம் துண்டங்களாக மன்ஸூரை வெட்டினார்கள். ஒரு பெரிய சிதை மூட்டி, துண்டுகளைக் கூட்டி அதிலிட்டு தீ மூட்டினார்கள். தீயின் ஜூவாலையைப் பார்த்து அவர்கள் அட்டகாசமாகக் குரலெழுப்பினார்கள். இறுதியில் அந்தச் சாம்பலை நதியில் கரைத்தார்கள். இப்படியாக அவர்களது பெருங்கோபம் அடங்கியது.

ஆனால்..

அதுவரை அமைதியாகத் தவழ்ந்து கொண்டிருந்த யூப்பிரதீஸ் நதி திடீரெனக் கலங்கிப் புரண்டு இரத்த நிறமானது. இயற்கை நிச்சலனமானது. அப்போது ஹூங்காரத்துடன் மலைபோல் உயர்ந்த நதியலைகள் ஆர்ப்பரித்தன. கோபத்தில் கொந்தளித்த மகா சமுத்திரமாக, அண்ட சராசரங்களையும் நடுங்க வைப்பது போல்  உக்கிரத்துடன் கன கம்பீரமாக இரைந்தது யூப்பிதீஸ் நதி...

'அனல் ஹக்!............ அனல் ஹக்!!'

மன்ஸூர் அல் ஹல்லாஜ் தன்னை இறைவன் என்று பகிரங்கமாகச் சொல்லிச் சென்று விட்டார். அதற்குரிய தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டாயிற்று.

ஆனால் அல்லாஹ்வின் இடத்தில் நின்று 'அனல் ஹக்' என்ற எண்ணத்துடன் தீர்ப்பு வழங்கும் மன்ஸூர்களின் மறு பதிப்புக்கள் இன்னும் என் கண்கள் முன்னால் இருப்பதை நான் கண்டு கொண்டிருப்பதும் அவர்கள் பேசுவதை எனது காதுகளால் நான் கேட்டுக் கொண்டிருப்பதும் பிரமையா உண்மையா என்று பிரித்தறிய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.