மிகுந்த மனப்பாரத்துடன் இன்று தர்ஹா நகரில் ஒரு விழாவில் கலந்து கொள்ள நேரிட்டது.
அது ஒரு நூல் வெளியீட்டு விழா. நூலின் தலைப்பு - silent Struggle.
ஒரு மாற்றுத் திறனாளியின் தந்தையாக சகோதரர் ஹாபிஸ் இஸ்ஸதீன் தனது அவஸ்தைகளை அடக்க முயன்றபடி நிகழ்த்திய விழாவின் ஆரம்ப உரையின் போது, அவ்வாறான ஒரு தந்தையின் நிலையை உணர்கையில் எனக்கும் கண்ணீர் துளிர்த்தது.
வேதனையூடு நிகழ்ந்த சாதனை. அதனை நிகழ்த்தியிருந்தவர் ஹாஃபிஸ் இஸ்ஸதீனின் புதல்வர் இர்பான்.
இர்பான் ஒரு மாற்றுத் திறனாளி. ஐந்தாம் ஆண்டோடு பாடசாலைக் கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் அவருக்கு. டி.எம்.டி - Duchenne Muscular Dystrophy என்ற தசையோடு சம்பந்தப்பட்ட வியாதியால் பீடிக்கப்பட்ட இர்பான் தனது 15வது வயதிலேயே கட்டிலோடு காலம் கழிக்கவேண்டிய நிலைக்குள்ளானார்.
மூவாயிரத்து ஐநூறு சிறுவர்களில் ஒருவருக்கு இந்நோய்த் தாக்கம் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. அமெரிக்கா வரை சென்று இந்நோய் பற்றிய கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு பற்றியுள்ள இர்பானின் தந்தை, இந்த நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார். ஒரு கதிரையில் அமரவோ, சாய்ந்திருக்கவோ, எழுந்து நிற்கவோ இயலாமல் கட்டிலே கதியாகிறது இர்பானுக்கு. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் 18 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
இர்பானின் உடல் செயலிழந்த போதும் மனம் விழித்துக் கொள்கிறது. மடிக் கணினி உதவியுடன் தானாக ஆங்கிலம் கற்கிறார். முகப்புத்தகத்தில் மாற்றுத் திறனாளிகள் பக்கத்தில் ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறார். அவரது கவிதைகளுக்கு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. பாராட்டுக்கள் கிடைக்கின்றன. அவரது தந்தையார் மகன் கவிதை எழுதுவதை அறிய வந்த போது நான்கு கவிதைகளை முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார் இர்பான்.
அவற்றைக் கூட கீ போர்ட்டில் அவரால் எழுத்துத் தட்டி இணைக்க முடியவில்லை. திரைக் கீ போர்ட்டில் மவுசைக் கிளிக் கெய்வதன் மூலம் ஒவ்வொரு எழுத்தாகக் குருவி ஒன்று சேர்ப்பது போல் தனது கனவை வரைகிறார். இர்பானுக்கு இப்போது வயது 30.
பதினைந்து கவிதைகளாவது இருக்குமானால் ஒரு நூலை வெளியிடலாம் என்கிறார் தந்தை. இர்பானுக்கு உற்சாகம் பிறக்கிறது. இன்று அவர் கோத்த 22 கவிதைகள் நூலாக வெளியிடப்பட்ட நாள்.

