Thursday, September 17, 2009

தப்பித்து வாழ்தல்

பயங்கரத்தை எனக்கு உணர்த்திய முதலாவது குண்டு 1983ம் ஆண்டு வெடித்தது. அப்போது யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி மாணவனாக இருந்தேன். தின்னவேலி என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற திருநெல்வேலிச் சந்தியில் அந்தக் குண்டு வெடித்தது. 13 இலங்கை இராணுவத்தினரைப் பலி கொண்ட அக்குண்டு வெடிப்புத்தான் கறுப்பு ஜூலை என அறியப்பட்ட தமிழர்களுக்கெதிரான பெரும்பான்மையின் வெறியாட்டத்துக்குக் காரணமாயமைந்தது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நடந்த தாக்குதல் அது என்று பிற்காலத்தில் சிலர் சொல்லக் கேட்டும் எழுதப் படித்தும் இருக்கிறேன். கலாசாலையில் அக்குண்டு வெடிப்புப் பற்றி வௌ;வேறு விதமான கருத்துக்களையும் கதைகளையும் அங்கு கற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நண்பர்கள் சொன்னார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட இட்டுக் கட்டப்பட்ட பெரும் பொய் என்னவெனில் அந்தச் சம்பவத்தில் படுகொலையான பதின்மூன்று இராணுவச் சிப்பாய்களும் ஒரு தமிழ் யுவதியைக் கற்பழித்தவர்கள் என்பதுதான். ஒவ்வொருவரும் இஷ்டத்துக்குச் சார்பாகவும் எதிராகவும் கருத்துக்களையும் கதைகளையும் பேசினார்கள் என்பதற்கு இந்தக் கற்பழிப்புக் கதை உதாரணம்.
இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் முழு நாடும் ஸ்தம்பித்தது. நானும் எனது ஊர் நண்பரும் இரண்டாவது தினம் மன்னாருக்குச் சென்று அங்கிருந்து அடுத்த தினம் அனுராதபுரம் வந்து பொலன்னறுவை வந்தடைந்தோம். அச்சத்துடன் நாம் மேற்கொண்ட இந்தப் பயணம் வாழ்நாளில் மறக்க முடியாதது. பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள அடுத்த ஊரான மன்னம்பிட்டிக்கு வந்தவுடன் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் பயணம் தடைப்பட்டது. இப்போது நகரமாகி வரும் மன்னம்பிட்டி அந்நாளில் வெறும் காடு. அந்த ஊரில் உள்ள சின்னஞ்சிறிய பள்ளிவாசலுக்குள் இரண்டு இரவுகளை நாம் கழிக்கவேண்டியிருந்தது. பகல் பெழுதுகளைக் காட்டில் மேய்ந்து திரிந்தோம். மூன்றாவது நாளே ஊருக்குச் செல்ல முடிந்தது.
1984ம் ஆண்டு துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் மாட்டிக் கொண்ட மற்றொரு அனுபவம் கிடைத்தது. அவ்வாண்டின் விளையாட்டு விழாவில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்களை அச்சிடுவதற்கு யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஓர் அச்சகத்தில் கொடுத்திருந்தோம். பிற்பகல் 2.00 மணிக்கு விழா ஆரம்பமாகவிருந்த நிலையில் காலையில் அவற்றை எடுத்து வரும் பொறுப்பு விளையாட்டு நிகழ்வுகளின் செயலாளர் என்ற வகையில் எனக்கிருந்தது. சரியாகப் பத்து முப்பதுக்குச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு பஸ்ஸை நோக்கி நடந்த போது துப்பாக்கிச் சன்னங்கள் பறந்தன. இராணுவத்தினரையோ போராட்டக் குழுக்களையோ அந்த இடத்தில் நான் காணாத போதும் எனக்கு முன்னால் ஒரு சுற்றுச் சன்னங்கள் தெறித்தன. அவ்விடத்தில் நின்ற தனியார் பஸ் ஒன்று பின்பக்கமாக வேகமாக நகர, அதிலிருந்த பையன் “அண்ணே ஓடி வாருங்கோ” என்று என்னைப் பார்த்துக் கத்தினான். ரிவர்சிலேயே ஓடிய பஸ்ஸில் தாவி ஏறித் தப்பிக் கொண்டேன்.
அதற்குப் பிறகு நடந்தது காத்தான்குடிப் பள்ளிவாசல்களின் படுகொலை. எனது இரண்டாவது தாய்மாமாவின் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளியிருந்தது ஹ_ஸைனியா பள்ளிவாசல். படிக்கும் வயதில் விடுமுறை காலத்தில் மாமா வீட்டில் தங்கியிருக்கும் போது இந்தப் பள்ளிவாசலில் மஃரிபுக்கும் இஷாவுக்கம் நான்தான் பாங்கு சொல்லுவேன். 1990ம் ஆண்டு மார்ச் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு நாள் மஃரிபுத் தொழுகைக்கு வந்த 98வீதமானவர்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. அந்தப் பிரதேசத்தைச் சூழ மாமாவின் மனைவி குடும்பத்தினர்தான் வசித்தார்கள். பாங்கு ஒலித்தால் எட்டி நடைபோட்டுப் பள்ளிக்குள் வந்து விடுவார்கள். முஸ்லிம்களைப் போல் தொப்பி அணிந்து வந்த விடுதலைப் புலிகள் மின்சாரத்தைத் துண்டித்து விட்டு கைக்குண்டை வீசி வெடிக்கச் செய்து விட்டு தொழுதுகொண்டிருந்தோர் மீது யன்னலுக்குள்ளால் துப்பாக்கி நீட்டிச் சுட்டுத் தள்ளினார்கள். மாமாவுக்கு ஒரு கை வழங்காது. தனது மற்றக் கையினால் தனது ஆறு வயது மகனை அணைத்தபடி கிடந்த மையித்துக்களின் புகைப்படத்தை நான் பார்த்தேன். அந்தக் கால கட்டத்தில் எந்த ஒரு முஸ்லிமாலும் தமிழ்ப் பிரதேசத்தை ஊடறுத்துப் பயணிக்க முடியாது. சம்பவம் நடந்து அடுத்த தினம் கொழும்பில் தரித்திருந்த மாமாவின் மூத்த மகன் நல்மனமுள்ள அரசியல்வாதிகளின் உதவியுடன் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் அங்கு போய்ச் சேர்ந்தான். மையித்துக்களையும் அவற்றைப் பள்ளிவரை கொண்டு அடக்கம் செய்ததையும் ஒளிப்பதிவு செய்திருந்ததை அவன்தான் எனக்குக் கொழும்புக்குக் கொண்டு வந்து காட்டினான். நல்லடக்கத்தின் போது மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த ஜனாஸாக்களின் கபன் புடவைகளைத் தாண்டி இரத்தம் வழிந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். மையித்துக்களைத் தூக்கிய அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.
பிறகு 1992ம் ஆண்டு டிஸம்பரில் எமது பிரதேசமே கலங்கிய சம்பவம் நடந்தது. கொழும்பில் வசித்த நான்; குடும்பத்தோடு கதிர்காமம் சென்று அங்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் (சனக் கூட்டம்) அன்றிரவே திரும்பியிருந்தோம். வீட்டுக்கு வந்து வாகனத்தை நிறுத்தும் போது எனது நண்பர் ஒருவர் நின்றிருந்தார். எனது கடைசித் தாய்மாமன் மற்றொரு தாக்குதலில் அன்று காலை அதே இடத்திலேயே மரணமடைந்த செய்தியை எனக்குச் சொன்னார். எமது பிரதேசத்தின் மீது அச்சத்தையும் உச்சகட்ட அடக்கு முறையையும் ஏற்படுத்துவதற்காக தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப் புறப்பட்டவர்கள் செய்த நிகழ்வு அது.
அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஆறுபேர். மேலதிக அரச அதிபர் (இந்தியாவில் கலெக்டர்) வை.அகமது (இவர் ஓர் பிரபல்யம் பெற்ற எழுத்தாளரும்கூட), அரசாங்க அதிபர் உதுமான், சட்டத்தரணி முஹைதீன் (எனது சகோதரனின் மனைவியின் சாச்சா), பாடசாலை அதிபர் மகுமூது (எனது கடைசித் தாய்மாமன்), சாரதி மகேந்திரன், கொலைகளைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தமைக்காகக் கொல்லப்பட்ட மற்றொருவர் சாஹ_ல் ஹமீத்(விறகு சேகரித்து வாழ்க்கை நடத்துபவர்) ஆகியோர். இவர்களில் கடைசி நபர் தவிர்ந்த ஏனையோர் மாருதி ஜிப்ஸியில் சென்று கொண்டிருந்த போது மீயான்குளச் சந்தியில் கண்ணிவெடி மூலம் ஜீப்பைப் புரட்டி கீழே விழுந்தவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர்.
நான் அடுத்த நாள் மதியம் ஊர் போய்ச் சேருவதற்குள் மையித்துக்களை அடக்கியிருந்தார்கள். மாமாவின் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்ததாகவும் ஒரு கால் உடைக்கப்பட்டிருந்ததாகவும் எனது மச்சான் சொன்னார். மேலதிக அரச அதிபராக, அரச அதிபராகவெல்லாம் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்ற விடுதலை வீரர்களின் தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்தக் கொலைகள் நடைபெற்றதாகப் பேசப்பட்டது. இதற்கு முன்னரும் இப்றாஹீம், ஹபீப் முகம்மத் ஆகிய அரச அதிபர்கள் காரணமின்றிக் கொலை செய்யப்பட்டதன் அடிப்படையில்தான் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நான் கொழும்பில் கற்பித்துக் கொண்டிருந்த காலப்பிரிவில் என்னுடன் ஒரே பாடசாலையில் கற்பித்த இரண்டு ஆசிரிய நண்பர்களும் குண்டுகளில் அகப்பட்டிருக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிவிட்டார்கள். கொழும்பு புறக் கோட்டையில் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் வெடித்துப் பெரும் இழப்பை ஏற்படுத்திய குண்டில் அகப்பட்டவர் மாவனல்லையைச் சேர்ந்த காமில். முகத்தில் ஆங்காங்கு ஏற்பட்டிருந்த பள்ளங்களில் பிளாஸ்ரிக் ஸர்ஜரி செய்து சதைத் துண்டங்கள் பொருத்தப்பட்டிருந்ததை கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சென்று பார்த்தேன். மற்றையவர் கொழும்பில் என்னுடன் கற்பித்த, என்னுடன் ஒரே போர்டிங் ஹவுஸில் (லாட்ஜ்) தங்கியிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஹகீம். அரசியல் கூட்டம் பார்க்க என்னையும்தான் அழைத்தார். எனக்கு சனக் கூட்டமென்றாலே அலர்ஜி. தவிர அவர் போகும் போது கூட எச்சரித்தே அனுப்பினேன். கூட்டம் பார்;க்கப் போனவர் திரும்பி வரவில்லை. தேடினால் முதுகில் காயமேற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதுகுப் பக்கமாகத் துளைத்த வெடிகுண்டின் ஒரு துண்டுத்தகடு இதயத்துக்கு அருகில் உள்ள எலும்பில் தடையாகி நின்றிருந்ததை மருத்துவர்கள் சொன்னார்கள். பிறகு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சத்திர சிக்கிச்சை செய்து அதனை வெளியே எடுத்து அவரைக் காப்பாற்றினார்கள்.
இவ்வாறு உள்நாட்டு யுத்த காலத்தில் இழப்புக்களைச் சந்தித்த பலர் இந்நாட்டில் இருக்கிறார்கள். தமிழர் விடுதலைக்குப் புறப்பட்ட ஆயுதமேந்திய இளைஞர்கள் பெரும்பான்மை சிங்கள அரசுடன் ‘அடக்குமுறையிலிருந்து விடுதலை’ என்ற கோஷத்துடன் போராடிய அதே சமயம் ‘சிறுபான்மை முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி வைப்பது’ என்ற ரகசியக் கோஷத்துடனும்தான் இயங்கினார்கள். பெரும்பான்மைச் சிங்களவரால் முஸ்லிம் சமூகத்துக்கு ஒருவீத பாதிப்பு என்றால் மீதி முழுவதையும் நிரப்பிப் புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் தமிழர் விடுதலை இயக்கங்களில் இருந்தவர்களே. சிங்களப் பிரதேசத்துக்குள் நாளின் எந்த வேளையிலும் போய் வர முடிந்த முஸ்லிம் ஒருவரால் ஒரு தமிழ் ஊருக்குள் பகலில் கூட சென்று திரும்ப முடியாத நிலை நீண்ட காலம் இருந்திருக்கிறது என்றால் அது எவ்வாறான அடக்குமுறை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சில காலங்களுக்கு முன்னர் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த தமிழரான சக மூத்த ஒலிபரப்பாளர் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தை நினைவு கூர்ந்தார். யாழ்ப்பாணத்தில் தனக்கு நீள் காற்சட்டை (பேண்ட்) தைத்துத் தரும் டைலரான முஸ்லிம் நண்பரைத் தற்செயலாகக் கண்ட போது தனக்;குக் கண்ணீர் வந்து விட்டது என்று சொன்னார். காரணம் அவரது டைலர் நண்பர் 24 மணிநேர அவகாசத்தில் புலிகளால் துரத்தப்பட்டவர் என்பதுதான். நான் நண்பரை எதிர்கொள்ள மிகவும் சங்கடப்பட்டேன் என்று சொன்னார். இவ்வாறான நல்ல உள்ளங்களும் தமிழர்களில் இருக்கவே செய்கின்றனர். அதே Nவைளை புரிய முடிந்த அநியாயங்களையெல்லாம் புரிந்து விட்டு ஐரோப்பாவில் அகதியாகப் போயிருந்து கொண்டு சமூக நீதியும் விளிம்பு நிலை மக்கள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்போரும் உள்ளனர். அதற்கு அவர்களது எழுத்துக்களே சாட்சி. குண்டு வெடிப்புப் பற்றிப் பேச ஆரம்பித்த நான் வேறு எங்கோ போய் விட்டேன் போலத் தெரிகிறது. 10.03.09 அன்று தென்னிலங்கையில் கொடப்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் தேசிய மீலாத் விழா நிகழ்வுகளை ஆரம்பிக்கும் போது வெடித்த குண்டுதான் கடைசியாக இலங்கையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய கடைசிக் குண்டு. இந்தக் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய எனது சகோதரரும் ஏனைய அமைச்சர்களும் தங்களை சுதாகரித்துக் கொண்டு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களைப் பார்ப்பதற்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்குச் சென்றார்கள். அங்கும் ஒரு தற்கொலைதாரி நின்றிருந்தார் என்பது இவர்களுக்குத் தெரியாது. முதலாவது குண்டில் அமைச்சர்கள் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது அவர்களைப் பார்ப்பதற்காக ஜனாதிபதி அங்கு வருகை தருவார். அவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக மற்றொரு தற்கொலைதாரியைப் பயன்படுத்துவது விடுதலைப் புலிகளின் திட்டமாக இருந்தது. அமைச்சர்களில் ஒருவர் தவிர வேறுயாரும் காயமடையவில்லை என்பதாலும் இரண்டாவது குண்டுதாரி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாலும் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதுவே இறுதித் தற்கொலைக் குண்டாகவும் இருந்தது. இரண்டாவது தற்கொலைதாரி கைது செய்யப்பட்ட விடயம் சம்பவம் நிகழ்ந்து சிலவாரங்களுக்குப் பின்னரே ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இங்கே நான் குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளும் தாக்குதல்களும் எனக்கும் எனது உறவினர்களுக்கும் எனது நண்பர்களுக்கும் தொடர்பானது. என்னைப் போல அனுபவங்களைப் பெற்றவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். இந்தக் கால் நூற்றாண்டுக்குள் வெடித்த துப்பாக்கிக் குண்டுகளிலும் துப்பாக்கி ரவைகளிலும் தமிழ் விடுதலை இயக்கங்களின் கடத்தல்களிலும் தப்பி இன்னும் உயிர் வாழ்வது கூட ஒரு கொடுப்பினை என்றே கருதுகிறேன்.
18.08.2009

அரச சாஹித்திய தேசிய விருது















2008ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுதிக்கான அரச சாஹித்திய தேசிய விருது ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ நூலுக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த 14.09.2009 அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற விழாவின் போது இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.