Thursday, August 28, 2014

மொழியாள்கை


மொழியாள்கை

தஃலிமுல் குர்ஆன் அல்லது தத்ரீஸூல் குர்ஆன், அதிலிருந்து அல்குர்ஆனின் இடது புறமாக ஆரம்பிக்கும் 5 ஜூஸ்உ களின் தொகுப்பு, பிறகு முழு குர்ஆன், தொழுகை ஷாபிஈ, மவ்லூதுகள் ஆகியவற்றுடன் குர்ஆன் பாடசாலை இஸ்லாமியக் கல்வி முடிவடைய சாதாரண தரம் வரை படிக்கும் பளீல் மௌலவியின் 'சாந்தி மார்க்கம்' நூலுடன் ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் இஸ்லாம் பற்றிய கல்வி பூரணத்துவம் பெற்றதாகக் கருதப்பட்டது.

இன்று சுருங்கிய உலகு, அரபு நாடுகளுடனான தொடர்பு, சமூகங்களின் வாழ்வியல் மேம்பாடு, சிந்தனை மேம்பாடு, பிறதேசக் கல்வி என்று ஒரு பரந்த வெளிக்கு நமது சமூகம் வந்துவிட்டது. இஸ்லாமிய வரலாறு, சட்டவாக்கம், பொருளாதாரம், நபிகளாரினதும் தோழர்களினதும் வாழ்க்கை முறைகள் என்று எல்லாத் துறைகளையும் நம்மவர்கள் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாந்தி மார்க்கத்துடன் இஸ்லாம் பூரணத்துவம் பெற்ற காலத்தில் அமைதியாக வாழ்ந்த இந்த சமூகம் இன்று அறிவியலில் விரிவான விளக்கங்களை வைத்தே தன்னைப் பிரித்து மோதிக் கொண்டிருக்கிறது. நான் பேச வருவது இந்த விடயம் அல்ல.

இஸ்லாம் குறித்த, இஸ்லாமிய சிந்தனையாளர்கள் குறித்த, அவர்களது சிந்தனைகள் குறித்த, உலகளாவிய இஸ்லாமிய அரசியல் குறித்த, நவீன சட்ட விளக்கங்கள் மற்றும் ஆய்வுகள் குறித்த பலநூறு நூல்கள் இன்று கற்றறிந்த நமது சகோதர்களால் எழுதப்பட்டும் மொழிபெயர்க்கப்பட்டும் வருகின்றன. அவை விற்பனைக்கிடப்பட்டும் உள்ளன.

கல்வி என்பது தேடி அடைய வேண்டியது என்பது உண்மை. பலர் இன்று அவற்றைத் தேடிப் படிக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் இவ்வாறு எழுதப்படும் நூல்கள் சாதாரணப் பொதுமகனின் வாசிப்புக்கு, அவனது புரிதலுக்கு உகந்தவையாக இருக்கின்றனவா என்ற ஒரு பலமான கேள்வி எனக்குள் அவ்வப்போது எழுவதுண்டு. வலைப் பூக்களில், சமூக வலைத்தளங்களில், பத்திரிகைகளி கூட இவ்வாறான 'படித்தவர்'களுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்ட மொழி நடையுடன் பல ஆக்கங்களை நான் பார்க்கிறேன்.

சாதாரணப் பொது மகனை விட படித்தவர்களே 'ஈகோ' மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் எழுதியதை மற்றொருவர் கண்டு கொள்வதுமில்லை, அது குறித்துப் பேசுவதுமில்லை, மற்றொருவருக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. ஆக இவ்வாறான பல நல்ல விடயங்கள் ஒரே வட்டத்துக்குள் சுழல்வதும் சாதாரண மக்கள் சமூகத்தைச் சென்றடைய முடியாமலும் இருப்பது குறித்து நாம் கவனம் செலுத்துவதுமில்லை.

சாந்தி மார்க்க இஸ்லாத்தைப் பூரணப்படுத்தியிருந்த எனக்கு அடுத்த கட்ட நகர்வைத் தந்தவை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் குத்பாப் பிரசங்கங்களின் தொகுப்பு நூல்கள். மிகச் சிறிய அளவில் அந்நாட்களில் பகுதி பகுதியாக அவை சிறு நூல்களாக விற்பனைக்கிருந்தன. இப்போது முழுத் தொகுப்பாகக் கிடைக்கிறது.  அவற்றிலிருந்து இஸ்லாம் குறித்த தெளிவைப் பெற்றுக் கொள்ள எந்த ஒரு சாதாரணப் பொது மகனாலும் முடியும். மிக இலகுவான முறையில் குழப்பமற்ற மொழி நடையில் அந்தத் தொகுப்பு அமைந்திருப்பதே அதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.

அந்நாட்களில் புதிதாக இஸ்லாத்துக்குக் கொண்டு வரப்பட்டவன் பற்றிய ஒரு கதை கிராமங்களில் நிலவி வந்தது. தர்மகர்த்தாவால் இஸ்லாம் மார்க்கம் அறிமுகம் செய்யப்பட்டு 'கத்னா' செய்த பிறகு அவனுக்கு இஸ்லாம் சொல்லிக் கொடுக்க முஅத்தினாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான. பள்ளிவாசலுக்குள் முஅத்தினாரின் மேற்பார்வையில் அவனது வேலை தொழுவது மட்டுமே. தஹஜ்ஜத் தொழுகையிலிருந்து முன் பின் சுன்னத்துத் தொழுகை, மேலதிக சுன்னத்துத் தொழுகைகள் ஈறாக இரவில் வித்ருத் தொழுகையில் அவனது இஸ்லாம் தினமும் முடிவடையும்.

இஸ்லாம் மார்க்கத்துக்கு வந்த அவன் மூன்றாம் தினம் எங்கிருந்து வந்தானோ அங்கேயே போய்ச் சேர்ந்து விட்டான். 'ஏன் திரும்பி வந்து விட்டாய்?' என்று அவனிடம் அவனது நண்பன் ஒருவன் கேட்ட போது,

'இஸ்லாத்தில் இருப்பது லேசான வேல இல்ல!' என்று பதில் சொன்னானாம்.

(மீள்பார்வை இதழ் - 300 -பத்திரிகை பத்தித் தொடர் - 01)

Thursday, August 21, 2014

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் தஞ்சமடைந்தவன்!


முகம்மத் அல் அரீர் தனது குழந்தையுடன்

- ரீஃபாத் அல் அரீர் -
தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
-------------------------------------------

எனது சகோதரர் முகம்மத் அல் அரீர் தனது வீட்டில் இருக்கும் போது இஸ்ரேலிய வான்படைத் தாக்குதலால் உயிரிழந்தான். 31 வயதான அவன் இரண்டு பிள்ளைகளின் தந்தை.

மூன்று தினங்களாக இரத்தம் வெளியேறி இறந்தானா அல்லது வெடி குண்டின் அதிர்வினால்  அல்லது அதன் சப்தத்தினால் இறந்தானா அல்லது இடிபாடுகளுள் சிக்கி இறந்தானா அல்லது இவையெல்லாம் சேர்ந்து அவன் மரணிக்கக் காரணமாய் அமைந்தனவா என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.

உண்மை என்னவெனில் நான் என் சகோதரன் முகம்மதை இழந்து விட்டேன்!

நான்கு வயதுடைய ரனீம், ஒரு வயது நிரம்பிய ஹம்ஸா ஆகிய அவனுடைய அழகழகான இரண்டு பிள்ளைகளும் தங்களது தந்தையை நிரந்தரமாகவே இழந்து விட்டனர். எங்களுடைய ஏழு வீடுகள் கொண்ட மாடி வீட்டையும் நாங்கள் இழந்து விட்டோம்.

நாலடுக்கு மாடிகள் என்ன... ஆயிரக் கணக்கான மாடிகள் இப்போது இங்கு அழிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் என்றைக்குமே கண்டிராத கொடூர ஆக்கிரமிப்பின் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களது பெற்றோரின் பிள்ளைகளுக்குள் நான் இரண்டாவது நபர். ஒரு பெண், நான் ஆண்களுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்தவன் முகம்மத். எனது பழைய ஞாபகங்களுக்குள் முகம்மத் பிறந்த நிகழ்வு மறக்க முடியாதது. அப்போது எனக்கு நான்கு வயது.

எனது சகோதரனுக்கு முகம்மத் என்று பெயர் வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட போது நான் அழுது ஆகாத்தியம் பண்ணி அதை மறுத்தேன். 'அவனுக்கு முகம்;மத் என்று பெயர் வைக்கக் கூடாது, ஹம்தா என்றுதான் பெயர் வைக்க விரும்புகிறேன்... ஆம் ஹம்தா!'

அவனை யாராவது முகம்மத் என்று அழைத்தால் எனது முழு மூச்சையும் பலத்தையும் ஒன்று திரட்டிக் கோபத்தில் சத்தமிடுவேன். எனது எதிர்ப்புக் கணக்கில் கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்படும் வரை நான் அப்படித்தான் நடந்து கொண்டேன். பிறகு பலரும் அவனை ஹம்தா என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். இந்தச் சொல்லும் முகம்மத் என்ற பெயரைச் சார்ந்ததுதான்! எல்லோரும் அவனை ஹம்தா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் எனது கோபத்தைச் சட்டை செய்யாமல் எனது தந்தையார் மட்டும் அவனை முகம்மத் என்றே அழைத்து வந்தார்.

எப்போதும் ஹம்தாவின் நலனே எனது நோக்கமாக இருக்கும். அவன் எனக்கு மட்டும் சொந்தமானவன் போல... இன்னும் சொல்வதானால் அவனது பெயர் ஹம்தா என்று நிரந்தரமாக அழைக்கப்பட வேண்டும் என்றும் அவனை எனது மகனைப் போலவும் பார்த்துக் கொண்டேன்.

1983ல் பிறந்த ஹம்தா தயக்க சுபாவம் கொண்டவனாக இருந்த போதும் நகைச்சுவை உணர்வுள்ளவனாகவும் துணிவுள்ளவனாகவும் இருந்தான். அதிகமாகவும் அமைதியாக இருக்கும் ஹம்தா பேச ஆரம்பித்து விட்டால்  அவனை மிஞ்ச முடியாது.

2000 ம் ஆண்டு உருவான இன்திபாதாவின் போது அவனுடைய வாழ்வில் உண்மையான ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவனது பாடசாலை நண்பர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட போது மரண ஊர்வலத்தை முன் நின்று நடத்தும் பிரதான பாத்திரத்தை அவன் வகித்தான்.

மக்கள் தொடர்பாடலில் பட்டம் பெற்ற ஹம்தாவுக்கு பொது மக்களை அணுகும் முறை கைவரப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்திபாதா நடந்து கொண்டிருந்த போது காஸாவில் எங்கு சென்றாலும் 'ஹம்தா உங்கள் சகோதரனா?' என்று என்னிடம் கேட்குமளவு அவன் பிரபல்யம் பெற்றிருந்தான்.

உள்ளார்ந்த ஆச்சரியத்துடனும் ஒரு புன்னகையுடனும் தலையசைப்பேன். இவனை இந்த அளவுக்கு வேகம் கொள்ளச் செய்தது எது என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். தயக்க சுபாவமுள்ள எனது சகோதரன் ஜெரூசலத்திலும் ஷூஜாஇய்யாவிலும் பலஸ்தீனின் எல்லாப் பகுதிகளிலும் நடக்கும் அடக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யவும் வழி நடத்தவும் உயிர்த்தியாகிகளின் மரண ஊர்வலங்களை ஏற்பாடு செய்யவும் கவிதை நடை ஆர்ப்பாட்ட வார்த்தைகளை உரத்து ஒலிக்கவும் துணிந்து விட்டான் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டேன்.

பதினான்கு சகோதர உறவுகளுக்குள்ளும் தனித்தன்மை வாய்ந்தவனாகவும் படைப்பூக்கம் கொண்டவனாகவும் ஹம்தா விளங்கினான். 20 வயதை அடைந்ததும் அவனில் பெரும் மாற்றங்களையும் இயங்காற்றலையும் நான் கண்டேன். பொதுமக்கள் முன் லாகவமாகப் பேசும் அவனது திறன் காஸாவின் அல் அக்;ஸா தொலைக்காட்சியினால் நடத்தப்படும் 'நாளைய தலைமுறையை நோக்கி' நிகழ்ச்சியில் வரும் 'கார்க்கோர்' என்ற குறும்பு மிக்க கோழியின் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.

Monday, August 11, 2014

எந்த புத்தர்? யாருடைய பௌத்தம்?


ஆங்கிலத்தில்  - திஸரணீ குணசேகர
சிங்களத்தில் - ஹேமன்த ரணவீர
துட்டகைமுனு மன்னன் முதலில் தனது குடும்பத்தினருடனேயே போர் தொடுத்தான். மகாவம்சம் குறிப்பிடுவது போல, தனது இளைய சகோதரன் திஸ்ஸவுக்கு எதிராக போர் தொடுத்தான். தனது முடியைத் தான் தக்க வைத்துக் கொண்டதன் பின்னரே ஏனைய சிற்றரசர்களுக்கு எதிராகவும் கடைசியாக எல்லாள மன்னனுக்கு எதிராகவும் போர் தொடுத்தான். மகாவம்சத்தின்படி இந்த சிவில் யுத்தத்தில் ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாயின. இங்கு பலியானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆயினும் தனது சகோதர மதத்தவர்களை கொடூரமாகக் கொன்றொழித்தது தொடர்பில் மகாவம்சம் எதுவும் பேசாமலேயே இருக்கின்றது.

அங்கு துட்டகைமுனு எல்லாளன் போரில் காவுகொள்ளப்பட்ட உயிர்கள் பற்றியே வருந்திநின்றான் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு பௌத்த தேரர்கள் பின்னடையவோ பயப்படவோ தேவையில்லை என மன்னன் துட்டகைமுனு குறிப்பிட்டுள்ளான். “(யுத்தத்தில் ஆட்களை கொன்றதனால்) நீங்கள் இறைசந்நிதானம் செல்லும் வழியில் எவ்வித தடையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் ஒன்றரை பேரை மட்டுமே கொன்றிருக்கிறீர்கள். ஒருவர் இறை சந்நிதானத்திற்குச் சென்றவர். அடுத்தவர் பஞ்சமா பாதகங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டவர். மற்றையோர் மார்க்கத்தைப் பின்பற்றாத போலி நம்பிக்கையுடையவர்கள். அவர்கள் மனித மிருகங்களாகவே கருதப்படுகின்றனர்” என்றிருக்கின்றனர். என்றாலும், அவர் பதவி மோகத்தினால் கொன்றொழித்த மக்கள் தொகையை எடுத்துப் பார்க்கும்போது இச்சான்றிதழ் செயலற்றுச் செல்லும். மகாவம்சம், “ஒரு யுத்தத்தில் ஏற்பட்ட மனித உள்வேதனையை ஒரு போலிவேஷமாகவே காண்கின்றது. கொன்றொழிக்கப்பட்டவர்களை மனித மிருகங்களாகவே வர்ணிக்கின்றது. அவர்கள் இறந்ததனால் எவ்விதப் பாவமும் ஏற்படுவதில்லை. அவர்கள் நேரடியாக இறை சந்நிதிக்குச் சென்றுவிடலாம்” என்ற போலி நம்பிக்கையை விதைக்கின்றது.

இந்த நம்பிக்கையை வலுப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் மகாநாம தேரருக்குப் பின்னணியில் சிலர் இருந்தனர். அவ்வாறு செய்வதற்குக் காரணம் இதுதொடர்பில் புத்தபெருமான் குறிப்பிடும் கருத்துக்கள் நன்கு தெளிவாகின்றமையேயாகும். ஓர் உயிரைக் கொல்வது (அதாவது மனிதனாயினும் விலங்காயினும்) மாபெரும் பாவமாகும். அப்பாவத்திலிருந்து எந்தவொரு முறையிலும் வெளியேற முடியாது.
சங்யுக்த நிகாயவில் காமினி சங்யுக்தவில் வருகின்ற யோதஜீவ சூத்திரத்தில், கிராமத் தலைவனான யோதஜீவ புத்தரிடம் “யுதத்த்தில் மரணிப்போர் தேவலோகம் (சுவனம்) அடைவார்களா?” எனக் கேட்கிறான். புத்தர் யோதஜீவ்வின் வினாவுக்கு மூன்று முறை பதிலளிக்காமல் மௌனம் காக்கிறார். மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் காரணமாக கீழ்வருமாறு பதிலளிக்கிறார் புத்தர்.

“யுத்தத்தில் எதிரியைத் தாக்குவதற்கு முற்படுகின்றவனுக்கு எதிரியைக் கொன்றொழிக்க வேண்டும், வெட்ட வேண்டும், அழித்தொழிக்க வேண்டும் என்ற சிந்தனையே இருக்கும். அவ்வேளை எதிரியைத் தாக்கிக் கொன்றொழித்தால் அவர் மீண்டும் நரகத்தில்தான் பிறப்பார்…” யுத்தத்தில் இறப்போருக்கு நடப்பது இதுதான். இதில் எவ்வித மாற்றமோ சிறப்போ கிடையாது. புத்த சமயத்தைக் காப்பதற்காக இறந்துபோவோர் சுவனத்தை அடைவர் என புத்தர் ஒருபோதும் சொல்லவில்லை.

மாற்றமுடியாத இந்த இயற்கை நியதி மகாநாம தேரருக்கும் அக்காலத்தில் இருந்த தாதுசேன மன்னனின் இராஜதந்திரங்களுக்குப் பொருந்துவதாக இல்லை. தாதுசேன மன்னன் மகாநாம தேரரின் பக்தனும் மருமகனுமாவான். மாமன் மருமகனை தன் கெட்ட காலத்திலேயே தன்னுடன் இணைத்துக் கொண்டான். இலங்கை 30 வருடங்கள் பாண்டியர் வசம் மண்டியிட்டிருந்தது. கடைசி பாண்டிய அரசனைத் தோற்கடித்தே தாதுசேனன் ஆட்சிக்கு வந்தான். யுத்தத்தில் ஆட் பலி நடக்கும். சிலவேளை தாதுசேன மன்னனின் கரங்களால் ஆரம்ப தம்ம பதம் முழுமையாக சிதைக்கப்படலாம். அவனது படைவீரர்கள் மரணத்தின் பின்னரான வாழ்க்கை பற்றி சிந்தித்திருக்கலாம். இந்நேரம் மகாநாம தேரர் எதிரேவந்து, “பாவமில்லா யுத்தம்” என்ற பொய்யை உருவாக்கி மன்னனையும் அவனது படையினரையும் உற்சாகப்படுத்தியிருக்கலாம்” என்று கருதுவதில் பிழையில்லை. அது அவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே…

Sunday, August 3, 2014

ஆகஸ்ட் 3, 1990


- கலாநிதி அலவி ஷரீப்தீன் -


அனல் கக்கும் 90இன்
ஆகஸ்ட் 3
வருடம் தோறும்
வந்து செல்லும் !

சிரியாவின் சித்திரவதைகள்,
காஸாவின் கண்ணீர்க் கதறல்கள்,
ஈராக்கின் இரத்த வெள்ளம்
எம் இதயங்களைப்  பிழிந்தெடுத்தாலும்
ஆகஸ்ட் 3 மட்டும்
எம்மை அதிர வைத்துக் கலக்கி வைக்கும் !

சுதந்திரத்தின் பெயரில்,
போராட்டம் என்று சொல்லி
கண்ணியக் காவியத்தைக் களங்கப்படுத்தி
குமர் தாத்தாமார்களின்
முன்தானைப் புடவையிலும்
உம்மாமார்களின் முக்காட்டு முகட்டிலும்
ஈனச் செயல்கள்  எழுதப்பட்டதை
ஆகஸ்ட் 3
எடுத்துச் சொல்லும் !

ஓந்தாச்சி மடத்தில் ஓங்கி அலறிய
மஹ்ரூப் நானாவின்
அப்பாவி அலறல்கள்;;;;;;
கல்முனையின் காட்டுப்புறத்துக்கு,
விறகு சேர்க்கச் சென்ற
இப்றாஹீம் காக்காவின்
இறந்து போன பைசிக்கல் ;
உன்னிச்சையில்
கண்டதுண்டமாய்  வெட்டி வீசப்பட்ட
வயல் வேலை செய்த தம்பிமார் ;
பூநொச்சிமுனையில்
பூண்டோடு பிடுங்கப்பட்ட
மினாறாவின் அடித்தளங்கள் ;..
தாராபுரத்தில்.. தம்பலகாமத்தில்..
கிண்ணியாவில்..கீச்சான் பள்ளத்தில்
மூதூரில், முல்லைத்தீவில்
முஸ்லிம் என்பதற்காக
பால்மனம் மறக்காத பாலகர்கள்
குற்றம் தெரியாத குடுகுடு ஆச்சிமார்
போராட்டம் என்று
பெயர் போட்டுக் கொண்ட
பொறுக்கிப் பயல்களின் வெறியாட்டங்களுக்கு
இரையாகிப் போனதை
இந்த ஆகஸ்ட் 3
மீண்டும் கிளறி
எம் சிந்தையைச் சீண்டி எடுக்கும் !

எம் வீட்டு அயலில்;,
எம் முற்றத்து ஒரங்களில் சேர்ந்திருந்து
எம்மிடம் நீர் அருந்தி
எம் உதவியோடு உண்டு வாழ்ந்தவர்கள்,
கெப்டன்கள் லெப்டினன்கள் என்று
ஒரு இரவில் பெயர் மாறி,
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த
கர்மக் கதையைக்
கறை படிய விட்டார்கள்
தமிழ் முஸ்லிம் உறவைக்
கறுப்பாக்கி விட்டார்கள் !

செல்வராசா மாஸ்டரும் சீனிக் காக்காவும்
சித்திரா அக்காவும், சித்தி ராத்தாவும்
அமலன் அண்ணாவும், அஹ்சன் தம்பியும்
நடராஜா நண்பனும், நிசார் மச்சானும்
ஒரே கூரையின் கீழ்
ஒன்றாய் இருந்து பெருநாள் உண்டதை
வரலாற்றின் கனவாய்
வடித்து வைத்தார்கள் !

தீபாவளி நாட்களில்
சிவராத்திரி இரவுகளில்
பொங்கல் நாட்களில்
பொங்கிய பாசங்களைப்
பொசுக்கிய சோகத்தை
அதன் அகோரத்தை
ஆகஸ்ட் 3
அமைதியாய்ச் சொல்லும் !

மியான் குளத்தில்  மஹ்மூது சாச்சாவும்
அடுத்த புத்திஜீவிகளும்
இனவெறி கண்ணிவெடிக்குள்
கலைந்து போனதும்
என் சாச்சி பிள்ளைகள்
கலங்கி நின்றதும்
கண் முன்னே வரும் !

வயிற்றுப் பசியில்
பொட்டணி கட்டிச்சென்ற
பக்கத்து வீட்டு அச்சியின் குழந்தைகள் -
காலாகாலமாய் கதறிய கதறல்கள்
காது நிறைய ஒலிக்கும்.

எமது -
ஹூஸைனியா மஸ்ஜிதின்  
புறாக்கூட்டச் சிறார் கூட்டம் -
மஸ்ஜிதின் மூலை யெங்கும்
வெறி கொண்ட வேங்கை
எனும் கோழைகளால்
குதறப்பட்டு கொல்லப்பட்டதை
வெந்த புண்ணில் வேலாய்
குத்திக் காட்டும் !

'ஸஜ்தா'விலும்
'ருக்கூ'விலுமாய்
கூனிக்குறுகியிருந்த கூன் பிறையின்
இறை நேசக்கூட்டம்
இரக்கமில்லா இனவெறியர்களின்
நரமாமிச வேட்டைக்குப்
பலியாகிப் போன சோக காவியத்தை
இந்த ஆகஸ்ட் 3
அன்று
மீண்டுமொரு ஆகஸ்ட் 3
வரக்கூடாதென்று சொல்லி நிற்கும்!

இனவெறி பேசி
இரத்த வெறியில்
ஏராளமான
அப்பாவி உயிர்களை
காவு கொண்ட
முள்ளிவாய்க்கால் வாசிகள்
பல ஆயிரம் தடவைகள்
நொறுக்கப்பட்டாலும்....
ஓந்தாச்சிமடத்தின்
ஓலங்களைப் பார்த்து
எம் ஊர்ப்பள்ளியில்
எம் உடன் பிறப்புக்கள்
இரத்த வெள்ளத்தில்
துடித்ததைப் பார்த்து
பட்டாசி கொழுத்தி
கைகொட்டிச் சிரித்த
கரிகாலன்கள்
காலா காலமாய்
கண்ராவியாய்
அழுந்திச் செத்தாலும்
எமதூர் மூலையில்
பொக்கை வாய்ப் புலம்பல்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
கடத்தப்பட்ட மகனை
வெட்டப்பட்ட வாப்பாவை
அரியப்பட்ட ஆச்சியைப் பற்றி
பேசிக் கொண்டேயிருப்பர்

வரலாற்றில் வேர் பதித்த
தமிழ் முஸ்லிம் உறவை அழித்த
தன்தாய் தாலி அறுத்து
தமிழீழம் என்ற பெயரில்
வெறியுலகை விதைக்கப்பார்த்த
வெறியர்கள் அழிப்பட்டதை
இறைநியதி வந்து
கொலையுலகு நிலைக்காது
சத்தியம் ஜெயிக்கும்
என்று
இந்த ஆகஸ்ட் 3
அடித்துக் சொல்லும்

 (1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் இரண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் நினைவாக இந்தக் கவிதையை எழுதிய கலாநிதி அலவி ஷரீப்தீன் நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவத்தில் தனது தந்தை, 5 வயதான தனது சகோதரன், மற்றும் உறவினர்கள் பலரைப் பறிகொடுத்தவர்.)




Friday, August 1, 2014

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்!


- Gary Corseri -

மூஸா (அலை) வினது அல்லது ரோமர்களது
வருகைக்கு முன்பு
ஈஸா (அலை) வினது அல்லது முஹம்;மது (ஸல்) 
அவர்களது வருகைக்கு முன்பு
துருக்கியருக்கும் ஆங்கிலேயருக்கும் முன்பு
நாங்கள் இந்த நிலத்தில் வாழ்ந்திருந்தோம்!

புழுதியிலிருந்து நாங்கள்
நகரங்களை எழுப்பினோம்
கண்ணீர் கொண்டு நீரிறைத்தோம்
மகிழ்ச்சியில் திழைத்திருந்தோம்
கைவிடப்பட்டிருந்த கடல்களில்
மீன் பிடித்தோம்
குளிர்மிகு ஒலிவ் தோட்டங்களில்
எங்களது பிள்ளைகளின்
திருமணங்களை வாழ்த்தினோம்!

என்றென்றும் சாசுவதமான
'மக்கள்' என்ற சொல்லை
எங்களுக்கு நாங்களே சூட்டிக் கொள்வதில்
ஒருபோதும் கவலை கொண்டதில்லை

ஆக்கிரமிப்பாளர்கள் வருகை தந்தனர்
எங்களது நிலத்தில் அணிவகுத்துச் சென்றனர்
இரும்பு ஆயுதங்களையும்
ஆகாயக் கடவுளரையும் கொண்டு வந்தனர்
எமது குழந்தைகளைப் படுகொலை செய்தனர்

முதிய ஆண்கள் இறைவனை வணங்கினர்
வணங்கிய இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்
பெண்கள் ஒப்பாரி வைத்தனர்
ஒப்பாரி வைத்த இடத்திலேயே
அவர்கள் படுகொலையாயினர்

உலக சபைக்கு மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம் முறையீடு செய்தோம்
சிலபோது அவர்கள் அமைதியாகச் செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென
அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோது எங்கள் காயங்களைப் பார்த்து
அவர்கள் கொட்டாவி விட்டனர்

பாலைச் சூரியன் சுட்ட
எமது தோல் நிறம் கருப்பானது
இளஞ்சிவப்பு நிறத்தோல் கொண்ட
அமெரிக்கர் வந்தனர்
இளஞ்சிவப்பு நிறங்கொண்ட பிள்ளைகளுடன்
வெள்ளை நிறப் பெண்கள்
இங்கிலாந்திருந்து வந்தனர்
இது எமது நிலமென்றனர்
அவர்களே அவர்களை
செமித்தியர் என்றனர்
அவர்களது நிறமோ
செமித்தியர்களின் நிறமாயிருக்கவில்லை
பொன்நிறத் தலை மயிரும்
நீலக் கண்களும் 
செமித்தியருக்குரியவை அல்ல!

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
உங்களது சிறாருக்குத் தேவைப்படுவதைவிட
குறைந்த அளவே
எமது சிறார்களுக்கு
எதிர்பார்க்கிறோம் என்று நினைக்கிறீர்களா?
உங்கள் சிறார்களை விடவும்
குறைந்தளவு பெறவேண்டியவர்கள்
என்றா நினைக்கிறீர்கள்?
எமது அப்பாவிச் சிறுவர்கள்
பெறுமதி குறைந்தவர்களா?
அவர்களது சிரிப்பும் அழுகையும்
மதிப்புக் குறைந்தவையா?
அவர்களும் இந்தப் பூமியின்
குழந்தைகள் இல்லையா?
அவர்களும் இறைவனின்
குழந்தைகள் இல்லையா?
எமது ஆண்கள் குறைந்த வீரமும்
எமது பெண்கள் குறைந்த துணிச்சலும்
கொண்டவர்களா?

நாங்கள் மக்கள் -
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம்
பெரிய மீனைக் கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப் புழு எத்தகையது?
நீங்கள் கௌரவத்தை இழந்து விட்டீர்களா?

நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப் பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்
அந்தத் தெய்வத்துக்கு
உங்கள் குழந்தைகளைப் பலி கொடுக்குறீர்கள்
மற்றவர் குழந்தைகளையும் பலி கொடுக்கிறீர்கள்
உங்களது குழந்தைப் பலி கேட்கும் தெய்வம்
மற்றவர் குழந்தைகளைப் பலி கொண்டு
பெருத்து வளர்ந்து கொண்டிருக்கிறது

பலமும் செல்வமும் 
உங்களை நுகர்கின்றன
மலைகளைத் தகர்க்கிறீர்கள்
பெண்களை அச்சமூட்டிப் பணிவிக்கிறீர்கள்
உங்களது புத்தகங்களில்
உங்களது பெயர்களைக் காண்பிக்கிறீர்கள்
ஆனால்
மரங்களின் வேர்களில் எழுதப்பட்டும்
பழம் பாறைகளில் பொழியப்பட்டும் இருக்கும்
எமது பெயர்களை
உங்களால் கண்டடைய முடியவில்லை

முழங்கும் ஆயிரமாயிரம் யுத்தத் தாங்கிகளால்
எங்களைப் பணிய வைக்க முடியவில்லை
உண்மை கருப்பு நிறம் கொண்டது
நாமும் கருப்பு நிறமான
எமது கண்களால்தான் பார்க்கிறோம்
துருக்கியர் வந்தார்கள்
அவர்க்குப் பிறகு மற்றவர்களும் வந்தார்கள்
ஆங்கிலேயர் வந்தார்கள்
அவர்களுக்குப் பின்
மற்றவர்கள் வந்தார்கள்
கடவுளின் பெயரால்
அவர்கள் கொலை புரிந்தார்கள்
கடவுளின் பெயரால்
கடவுளையே கொலை செய்தார்கள்

நாங்கள்தாம் பலஸ்தீனியர்கள்
எங்கள் வாழ்வாதாரங்களை
எடுத்துக் கொள்ளத வரை...
எம்மை தாழ்மைப்படுத்தாத வரை..
நாங்கள் வாழ்பவர்கள்
வாழவும் விடுபவர்கள்

நாங்கள் சுதந்திரமற்றிருக்கும் வரை
எல்லா ஆண்களும் சுதந்திரமற்றவர்களே
எமது சிறார்கள்  சுவர்களுக்குள் உள்ள வரை
எல்லாச் சிறார்களும்  
சுவர்களுக்குள்ளேயே இருப்பார்கள்
எங்கள் வணிகத்துக்கான உபகரணங்களைக்
காலம் கூர்மைப்படுத்துகிறது
துயரம் எங்களை
மெருகு படுத்துகிறது
நாங்கள் எங்களது கருவிழி கொண்டே
பார்க்கிறோம்!