Tuesday, March 31, 2015

அடைந்து கொள்ளப்படாத ஆயுதம்!

 - 16 -

'சிட்டுக் குருவி.. சிட்டுக் குருவி சேதி தெரியுமா?', 'பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே..!', 'பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்..', 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..!', 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?', 'பூவா மரமும் பூத்ததே..!', 'வானில் முழுமதியைக் கண்டேன்..!', 'ஏரிக்கரையின் மேலே போறவளே..!' - போன்ற பழைய பாடல்களை அறியாதோரும் ரசியாதோரும் இல்லை என்று தைரியமாகச் சொல்லி விடலாம்.

அக்கால சினிமாப் படங்களைத் தூக்கி நிறுத்திய இந்தப் பாடல்கள் இந்த நிமிடம் வரை இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அவற்றின் கவிதை அழகும் மொழியின் லயமும் இசையின் கோலமும் இணைந்து மனித மனங்களின் அழகியல் நாட்டத் தாகத்தைத் தீர்த்து வைத்தமையே காரணம். அசிங்கமான இரட்டை அர்த்தங்களும் மனதைச் சுளிக்கச் செய்யும் காட்சிகளும் இல்லாமல் அருமையான, யதார்த்தமான கதைகளோடு பிணைந்து வெளிவந்த அன்றையத் தமிழ் சினிமாவில் அதே கௌரவத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்துத்தான் பாடல்களும் எழுதப்பட்டன.

இன்றும் இறவாமல் சுகமான ஞாபகத்தில் நிலை கொண்டிருக்கும் இந்தப் பாடல்களை எழுதியவர் ஒரு முஸ்லிம் கவிஞர் என்பது இன்றைய தலைமுறையில் பலருக்குத் தெரிந்திருக்காது. கவி கா.மு. ஷரீப் என்ற அந்த அற்புதமான கவிஞன் பிறந்து கடந்த வருடத்துடன் 100 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.

சினிமா என்றதுமே அந்தச் சத்தம் வந்த திக்கில் காறித் துப்பி விடவோ, கம்பெடுத்துச் சுழற்றவோ எழுந்தமானமாக முனைப்புக் கொள்கிறார்கள். சினிமா என்பது நடிகைகளில் நிர்வாணமும், வெறும் ஆடலும் கூத்தும் கும்மாளமும் சிற்றின்பமுமே என்ற மனப் பதிவே பலருக்கு இருக்கிறது. இவற்றுக்கு மேல் அதில் எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு அதில் எதுவும் இருக்கப் போவதுமில்லைத்தான்.

1948ல் அறிஞர் அண்ணா எழுதிய 'சந்திரமோகன்' என்று நாடகத்தில் கா.மு. ஷரீப் அவர்கள் எழுதிய 'திருநாடே' என்ற பாடலை முணுமுணுக்காதவர்கள் இல்லை என்கிறார் கலைமாமணி விக்ரமன். அந்தாளில் புகழ் பெற்ற 'கொலம்பியா' இசைத் தட்டுக்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். 1857ல் வெளிவந்த 'முதலாளி' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய புகழ் பெற்ற பாடல் 'ஏரிக்கரையின் மேல் போறவளே!' கலைஞர் கருணாநிதியைத் தமிழ் சினிமாவுக்குள் சேர்த்து விட்டவர் கா.மு. ஷரீப் அவர்கள்.

அப்படியானால் முஸ்லிம்களுக்கான சினிமா குறைந்தது 70 களிலாவது கருக் கொண்டிருக்க வேண்டும். குடி, கூத்து, கும்மாளம், அரை குறை ஆடை ஆட்டங்களற்ற, மக்களின் வாழ்வியலைப் பேசும் சினிமாக்கள் அனைத்தும் இஸ்லாமிய வரைமுறைக்குள் வருபவைதான். ஆயினும் மற்றொரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் சினிமா என்பது 'நடிகை', 'நிர்வாணம்' என்ற எண்ணத்தால் நிறைந்து போயிருக்கும் போது அன்றும் காதல் பேசுவது கதையின் அம்சங்களில் ஒன்றாக இருந்த காரணங்களால் மூளை காய்ந்த முல்லாக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும்.

கவி கா.மு.ஷரீப் வெறும் சினிமாக்காரர் மட்டுமல்ல என்பதை அவரது நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்டிருக்கும் மலரில் உள்ள கட்டுரைகள் மூலம் தெரிந்து கொள்ளக் கூடிதாக இருக்கிறது. பணத்துக்குப் பின்னால் அவர் அலைந்தவரில்லை. சிறுகதை நூல்கள் - 3, நவீனம் -1, நாடக நூல்கள் - 4, பயண நூல் - 1, இலக்கியக் கட்டுரை நூல் - 1 என எழுதிக் குவித்தவர். அக்கால சினிமாக்காரர்கள் கூட அவரிடம் ஒதுங்கி நின்று பேசியிருக்கிறார்கள். 'மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் என்ற சான்றிதழ் இஸ்லாத்துக்கு உண்டு. இந்தியாவில் இஸ்லாம் இந்து மதத்துக்கு எதிரானது என்ற கருத்தும் நிலவி வருகிறது. இக்கருத்துத் தவறானது என்பதை விளக்க, கவி கா.மு. ஷரீப் 'இஸ்லாம் இந்து மதத்துக்கு எதிரானதா?' என்று நூலை எழுதினார்' என்கிறார்  கவிக்கோ அப்துல் ரகுமான்.

எந்த நிலையிலும் தலையிலிருந்து அகற்றப்படாத தொப்பி, முகம் நிறைந்த, அழகாகக் கத்திரிக்கப்பட்ட தாடி, எதையும் நிதானமாக உள்வாங்கும் பார்வை, எளிமையான தோற்றம் - இவைதான் கா.மு.ஷரீப். அன்னாரது ஆளுமையும் திறமையும் இருட்டடிக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவி வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆளுர் ஷாநவாஸ், கவிஞர் ஜலாலுத்தீன், கவிஞர் உஸ்மான் ஆகிய மூவரின் பங்களிப்புடன் கா.மு.ஷரீப் அவர்களது நூற்றாண்டு மலரை முஸ்தபா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது.

கா.மு.ஷரீப் ஒரு மகா கவிஞன். இஸ்லாமிய சினிமா அல்லது முஸ்லிம்களுக்கான சினிமா அவரிலிருந்த ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் பிறந்து நூறு ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர் எப்படிப்பட்ட ஒரு பக்குவமான வாழ்க்கையை வாழ்ந்தார், கவிதைகளும் பாடல்களும் எழுதினார் என்பதிலிருந்து கற்றுக் கொள்ள முஸ்லிம் சினிமா அல்லது இஸ்லாமிய சினிமாவுக்கு நிறைய இருக்கிறது.

இஸ்லாமிய சினிமா ஓர் ஆயுதம் என்பதை இந்த நூற்றாண்டு கடந்த பின்னராவது சமூகம் புரிந்து கொள்ளும் சாத்தியம் இருப்பதால் அது குறித்து நம்பிக்கையுடன் இருந்து விடலாம். ஆனால் 'பார்த்தீர்களா.. கா.மு. ஷரீப் தாடியை வளரவிடாமல் கத்திரித்து வந்திருக்கிறார்?' என்று நமது 'அறிவுக் கொழுந்துகள்' விமர்சித்து விடுவார்களோ என்ற பயம் என்னை வாட்டி வதைக்கிறது!

நன்றி - மீள்பார்வை

Wednesday, March 25, 2015

நீ படித்த பெரும் படிப்பு!

போகும் போதிருந்ததை விட
இரண்டு சுற்றுப் பருத்திருந்தாய்
பெயருக்குப் பின்னால்
ஏகப்பட்ட ஆங்கில எழுத்துக்கள்
புள்ளிகளுடன்...

பெரும்புள்ளிதான் இனி நீ
தொங்கல் வரை படித்திருக்கிறாய்

விமான நிலையத்துக்கு வந்திருந்த
சொகுசுக் காரில்
ஒரு தேசத் தலைவனைப் போல்
வந்திறங்கினாய் ஊரில்

சில நாட்களில்
கார் அனுப்பிய வீட்டில் இருந்த
பெண்ணிடம் அடைக்கலமானாய்
சொத்துக்களுக்கு அதிபதியானாய்..

அந்நாள் நண்பர்களைக் கண்டால்
ஒரு லேசான தலையாட்டலுடன்
துண்டித்துக் கொண்டாய்

ஊர் அழுக்காக இருப்பதால்
நீ வெளியே வருவதில்லை

அந்நதள் நண்பர்களைக் கண்டால்
ஒரு லேசான தலையாட்டலுடன்
துண்டித்துக் கொண்டாய்

உன்னை மறந்து விடாத பலரை
நீ
மறந்திருந்தாய்!

திருமண வீட்டிலும்
மையித்து வீட்டிலும்
அழைக்கப்படும் பொது நிகழ்வுகளிலும்
பிரமுகரின் கதிரை வரிசையை
எதிர்பார்த்தாய்..

எல்லாமே பழங்காலத்தில் இருப்பதாகத்
தோன்றியது உனக்கு,
பெற்றார், உற்றார், நண்பர் உட்பட
நவீன யுகத்துக்கு மாறாதிருக்கும்
இந்த சமூகத்தின் மீது
சீற்றம் வந்தது உனக்கு!

உனது பாதம் படுமிடங்களிலெல்லாம்
பணம் வரவேண்டுமென்று
நினைத்தாயேயொழிய
நான் என்ன செய்ய வேண்டும்
என்று எண்ண
உன் படிப்பு இடந்தரவில்லை

யார் எந்தச் சிக்கலோடு வந்தாலும்
இறுதித் தீர்ப்பு
உன்னுடையதாக இருக்க வேண்டும்
என்று நினைத்தாய்
ஏனெனில்
உனது படிப்பு அத்தகையது!

உன்னைக் கண்டுகொள்ளத சமூகம்
உருப்படமாட்டாது
என்று தோணுகிறது உனக்கு
ஏனெனில்
தூரநோக்கு உனக்கு மட்டுமே விளங்கும்
அப்பேர்க்கொத்த படிப்பு அது!

நீ மட்டும்
பேசுவதைத்தான்
மற்றவர்கள் கேட்க வேண்டும்
என்று நினைக்கிறாய்
மற்றவர்கள் பேச
நீ கேட்க முடியாது என்பதில்
நியாயம் உண்டு
நீ
தொங்கல் வரை படித்திருப்பதால்!

பிள்ளைகளைத்
தொங்கல் வரை படிப்பிக்க வேண்டுமெனவும்
கற்ற சமூகமே உயிர்க்குமெனவும்
அன்று ஒரு கூட்டத்தில்
உன் குரல் கேட்டது!

நான் சொல்வது என்னவெனில்
உன்னைப் போல் உயர்வதற்கு
தொங்கல் வரை படிப்பதை விட
பம்பாய் முட்டாயோ
பப்படமோ விற்றுப் பிழைப்பது
பெருங் கௌரவம் என்பதைத்தான்!

25.03.2015

Tuesday, March 17, 2015

அவனன்றி அணுவும் அசையாது!


 - 15 -

மஞ்சமாமாவின் கதையை இன்று நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தக் கதை முழுக்கவும் உண்மைகளால் ஆனது. சம்பவங்களுக்குக் கற்பனை சேர்த்தும் எழுதலாம். தப்பில்லை! கற்பனை சேர்க்காமல் எழுதும் போது சுவை குன்றி விடுவதாக பலரும் நினைப்பதுண்டு. எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

மஞ்சமாமாவின் கதை எழுத்து வடிவில் வருவதற்கு முன்னே கதையை எழுதியவர் எனக்குச் சொல்லி விட்டார். எழுத்தில் வந்த பிறகு அது தரும் தாக்கத்தை விட அவர் அக்கதையைச் சொன்ன விதமும் அதில் உறைந்திருந்து எழுந்து எனது கன்னத்தில் அறைந்தது போன்ற முடிவும் இன்று வரை மறக்க முடியாதது. ஓர் இலக்கியக்காரனான என் மனதிலேயே அது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தியிருக்குமானால் நாதாரண வாசகர்களுக்கு எத்தகைய தாக்கத்தை உண்டு பண்ணும் என்ற எண்ணம்தான் இது பற்றி எழுதத் தூண்டியது என்று சொல்வேன்.

எல்லோராலும் பேசப்படுகின்ற, நல்லதும் அல்லதும் பற்றிப் பேசப்படுகின்ற, தீர்ப்புகள் வழங்குவதற்கு வாய்ப்பான ஓர் அம்சமாக இஸ்லாம் இன்று மாறிவிட்டது. தான் எப்படி இருக்கிறேன்? என்ன செய்கிறேன்? எனது பண்புகளில் எவை சரியானவை? நான் யாருடன் எதைப் பேசுகிறேன்? எதற்காகப் பேசுகிறேன்? போன்ற வினாக்களை நாம் அதிகம் நம்மை நோக்கிக் கேட்டுக் கொள்வதில்லை!

நம்மளவில் நாம் புனிதராக இருப்பதை விட்டு விட்டு யாருடையவாவது முதுகைச் சுரண்டிப் பார்ப்பதில்தான் பெரும்பாலும் பொழுதைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். தெரிந்ததை வைத்துக் கொண்டு தெரிந்து கோள்ள வேண்டி அம்சங்களை முழம் போட்டு அளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மஞ்சமாமாவின் ஒரேயொரு கேள்வி என்னை அதிர வைத்து விட்டது. ஆழச் சிந்திக்கத் தூண்டியது. நாம் நமக்குள் வழங்கிக் கொண்டிருக்கும் தீர்ப்புக்களைப் பார்த்து எள்ளி நகையாட வைத்து விட்டது. எனது அறிவைப் புடம் போட்டது. சிந்தனையைத் தெளிவு படுத்தியது.

கிராமப்புறங்களில் மாட்டுப் பட்டி வைத்திருக்கும் நபர்கள் - இதன் காரணமாகவே செல்வந்தர் என்று கருதப்படுபவர்களும் இருக்கிறார்கள் - தங்கள் மாடுகளைப் பராமரிக்க ஒரு 'மாட்டுக் காரன்' அல்லது 'காலைக்காரன்' இடம் பொறுப்புக் கொடுப்பார்கள். இந்த மாட்டுக்காரர்கள் அல்லது காலைக்காரர்கள் கிராமங்களிலிருந்து பல மைல்கள் தூரத்தில் பசுமையான மேய்ச்சல் நிலம் உள்ள காட்டுப் பகுதியில் மாட்டுக் காலைகளை வைத்திருப்பார்கள். காலைக்காரர்களிடம் பலருடைய மாடுகள் பொறுப்பில் இருக்கும்.

அவர்கள் அநேகமாகவும் படிப்பறிவு உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். இத்தனை கன்றுகள் பிறந்தால் அதில் ஒன்று அவர்களுக்குக் கிடைக்கும். மற்றப்படி தினமும் அவர்கள் பசுக்களில் கறக்கும் பாலை வியாபாரிகள் நேரடியாக வந்து பெற்றுச் செல்வார்கள். அந்த வருமானமும் அவர்களுக்கு உண்டு. இதைக் கொண்டுதான் அவரது குடும்பம் நகரும். பசுக்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்கள், கன்றுகளுக்கு இட்டிருக்கும் பெயர்கள், அவற்றைச் சொல்லி மாடுகளை அழைக்கும் அழகு எல்லாம் எழுதி மாளாதவை.

மஞ்சமாமா ஓர் உம்மி! பகலில் காடு இரவில் வீடு. இதுதான் அவரது வாழ்க்கை. சில வேளைகளில் இரவிலும் கூட காலையோடு அமர்ந்திருக்கும் பரணில் தங்கி விடுவார். வெள்ளிக் கிழமை, பள்ளிவாசல் என்று எந்தத் தொடர்பும் அவருக்குக் கிடையாது. தானும் தன் ஏழ்மை மிக்க குடும்பமுமாக ஊரில் ஓர் இடத்தில் அவர் வாழ்ந்து வந்தார். வீடும் காடும் மாடும்தான் அவரது வாழ்க்கை. தன்னளவில் நேர்மையாக, யாருடனும் எந்தச் சிக்கலும் இன்றித் தன்பாட்டில் வாழ்ந்து வந்தவர். பெண் பிள்ளைகள் நிறைந்த குடும்பம்.

ஊர் உலகத்தில் என்ன கோலாகலம் நடந்தாலும் அவருக்கு அது பற்றிய அக்கறை கிடையாது. யார் யாருடன் கோபம், யார் தேர்தலில் நிற்கிறான் - தோற்கிறான், வெல்கிறான், பாடசாலையில் யார் அதிபராக இருக்கிறார்,  யார் ட்ரஸ்டியாக இருந்து பள்ளிவாசலை நிர்வகிக்கிறார் என்பதெல்லாம் அவரைப் பொறுத்த வரை அவசியமற்ற சமாச்சாரங்கள்.

ஒரு நாள் ஜூம்ஆவுக்குப் பள்ளிக்குள் நுழைந்த கதாசிரியர் அங்கே மஞ்சமாமா அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போகிறார். இப்போது எழுத்தாளரின் மனசில் ஒரு கேள்வி பிறக்கிறது. 'மஞ்சமாமாவுக்குத்தான் ஒரு இழவும் தெரியாதே.. என்ன ஓதித் தொழப் போகிறார்?' என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்வி எழுத்தாளரை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. எப்படியாவது இதை மஞ்சமாமாவிடம் கேட்க வேண்டும்.. ஆனால் எப்படிக் கேட்பது?

இரண்டு வாரங்களுக்குப் பிறகு கதாசிரியர் மருதூர் ஏ மஜீத் மஞ்சமாமாவை அகஸமாத்தாகத் தெருவில் யாருமற்ற இடத்தில் சந்திக்கிறார். கேள்வி மனதுக்குள் இருந்து துள்ளத் துள்ள அடக்கிக் கொண்டு மஞ்சமாமாவிடம் சுகம் விசாரித்துக் கொண்டு வந்து 'அன்றைக்குப் பள்ளிக்குள் கண்டேனே...?' என்கிறார். மஞ்சமாமா சிரிக்கிறார். 'அதுசரி... ஓதல் கீதல் ஒன்டும் தெரியாம எப்பிடித் தொழுதீங்க?' அஸ்திரத்தை எடுத்து விட்டார்.

அதற்கு மஞ்சமாமா சொன்னார் பாருங்கள் ஒரு பதில்... அதுதான் முக்கியமானது!

'எனக்கு ஓதத்தெரியாதென்டு அல்லாஹ்க்குத் தெரியாதா?'

எழுத்தாளர் வாயடைத்து நிற்க மஞ்சமாமா நடையைக் கட்டினார்.

அடுத்த வாரம் மஞ்ச மாமா மௌத்தாகிப் போனார்!

Monday, March 9, 2015

நாச்சியாதீவு பர்வீனின் மூன்றாவது இதயம்!


நாம் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் உடனே நமது மனதில் ஒட்டிக் கொள்வதில்லை. வெகு சிலரே எந்த வித நிபந்தனையுமில்லாமல் மனதில் வந்து அமர்ந்து விடுவார்கள். அப்படித்தான் நானும் பர்வீனும் பரஸ்பரம் ஒருவரில் ஒருவர் ஒட்டிக் கொண்டது நடந்திருக்க வேண்டும்.

பர்வீனுக்கும் எனக்குமான உறவுக்கு ஏறக்குறையப் பத்து வருடங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். குறிப்பாக இலக்கியமும் சமூகாபிமானமுமே எங்களது உறவைப் பாதுகாத்து வந்திருக்கின்றன. இவற்றை விட வேறு அம்சங்களுக்கு எங்களது உரையாடலில் முக்கியத்துவம் அன்றும் இருந்ததில்லை, இன்றும் இருந்ததில்லை!

இவ்வாறான நட்புக்குள் ஒருவர் மற்றவரின் கவிதைத் தொகுதியை முன் வைத்துப் பேசுகையில் பரஸ்பர முதுகு சொறிதல்களுக்கு பெருமளவில் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த நட்புக்கு அப்பால் நின்றே நான் பேசியாக வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் எனது காலத்துக்குப் பிந்தி வந்தவர்கள் பலர் என்னை அழைத்துப் பேச வைத்ததில் தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் ஏமாந்திருக்கிறார்கள். அது எனது வித்துவத்தை முன்வைக்கவோ எனது முன்னோடி அந்தஸ்தைத் தக்கவைக்கவோ செய்யப்பட்ட எத்தனங்கள் அல்ல. என்னளவில் எனது தராசு முள்ளு சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்.

இந்தத் தொகுதியில் 51ம் பக்கம் 'என் எதிரிகளுக்கு' என்று ஒரு கவிதை இருக்கிறது. இந்தக் கவிதையை மாத்திரமே முன் வைத்து பர்வீன் என்ற படைப்பாளியை நம்மால் முழுவதுமாக எடை போடக் கூடியதாக இருக்கும். உணர்வு பூர்வமானதும் உணர்ச்சிபூர்வமானதும் தனது மண்ணின் மீதுள்ள காதலின் ஆழத்தைப் புலப்படுத்துவதாகவும் சிறுமை கண்டு பொங்கிச்;   சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் அப்பால் எதுவுமில்லை என்றும் உரத்துப் பேசுவதுமான இந்தக் கவிதையை அவர் வானொலி இலக்கிய மஞ்சரிக்காக எனக்கு முன்னிலையில்தான் முதலில் வாசித்தார்.

நியாயத்தைப் பேசும் குரல் எப்போதும் அழுத்தமாகவும் வீரியமாகவும் வெளிப்படும். அப்படித்தான் அந்தக் கவிதை அவரது வாயில் இருந்து வெளிவந்தது. அக்கவிதை கொண்டுள்ள தீயதைத் தன் காலில் போட்டு ஆவேசத்துடன் நசுக்கும் வார்த்தைகள் ஒரு கணம் என்னைப் பயமுறுத்தியதை நான் மறைக்க முடியாது. ஆனால்  மனிதனின் ஏழ்மையை விற்றுப் பிழைப்பவர்களுக்கு எதிராக ஒரு கவிஞன் தனது சொல்வாளை வீசும் போது இன்னொரு கவிஞனால் அதைத் தடுப்பது சாத்தியம் இல்லை. அவ்வாறு செய்வதும் கவிதையைப் படைத்த கவிஞனை சமரசத்தின்பால் தள்ளி விடுவதும் அல்லது அந்த எல்லை நோக்கி நகர்த்துவதும் ஒரு பாவ காரியம் என்பதை நான் அறிவேன்.

நூல் வெளியீடு - முதல் பிரதி பெறும் ஹாஜி இஸ்ஹாக்

பர்வீன் என்ற படைப்பாளியின் பலமும் பலவீனமும் தனது பிரதேசமும் அது சார் மக்களுமாகவே இருப்பதைத் தொடர்ந்தும் நான் கண்டு வந்திருக்கிறேன். அவரது கவிதை, அவரது எழுத்து, அவரது சிந்தனை, அவரது நடவடிக்கைகள், அவரது அரசியல் என்று யாவுமே தனது பிரதேசம், தனது சமூகம் என்றே இருந்து வருகிறது. வேறோர் இடத்தில் ஒரு தினத்தில் பர்வீனும் கலந்து கொள்ளும் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தாலும் கூடத் தனது பிரதேசத்தில் ஒரு சிறிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமானால் அவர் தனது பிரதேசத்தில் தங்கி விடுவதையே தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார். இதுதான் பர்வீன் என்ற கவிஞன் தனது பிரதேசம், தனது பிரதேச மக்கள், தனது சமூகம் ஆகியவற்றின் மீது வைத்திருக்கும் பேரபிமானம், பற்று, பாசம் எல்லாமே!
இந்தக் கவிதைத் தொகுதியில் 30 கவிதைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றுள் மூத்தமா, உம்மா, மனைவி என்று மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளதுடன் எட்டாத கனியாகவே போய்விட்ட ஆனால் மனதில் நின்று விட்ட காதலி பற்றியும் இரண்டு கவிதைகள் உள்ளன. யார் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - அநேகமாகவும் எல்லா ஆண்களின் நெஞ்சுக்குள்ளும் மரணம் வரை ஒரு பெண் வாழ்ந்து கொண்டேயிருக்கிறாள் என்பது ஒரு மறைக்கப்பட்ட உண்மை. பலர் ஒரு போதும்... ஒரு போதும் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் அதைச் சொல்லும் தைரியமும் ஓர்மமும் கவிஞனுக்கு மட்டுமே உண்டு.

எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தைரியமும் திறந்த நூலாகவே வாழ்ந்து விட்டுப் போவோம் என்ற தெளிவும் உள்ள ஒரு படைப்பாளி இதைச் சொல்ல மட்டுமல்ல, எதைச் சொல்லவும் அச்சப்பட மாட்டான். அது ஒரு சிறந்த படைப்பாளிக்குப் பெரும் அழகு சேர்ப்பது என்று நான் கருதுகிறேன்.

சவூதியில் கொலை செய்யப்பட்ட ரிஸானா பற்றிய கவிதை, பனை, முருங்கை, புளியமரம், அரச மரம் என ஒவ்வொரு கவிதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு பழமில்லாத மரம் - என்றும் ஒரு கவிதை உண்டு. அது முஸ்லிம் அரசியலைப் பேசுவதாக நான் கருதுகிறேன். மீனவர்கள், ஆசான்கள் பற்றியும் இரண்டு கவிதைகள் அடங்கியுள்ளன.

ஒட்டு மொத்தமாக ஒரே மூச்சில் இத்தொகுதியைப் படித்து விட முடியும். பர்வீன் என்ற படைப்பாளியின் கொடுமை கண்டு கொதிக்கும் ஆவேசம், கையறு நிலைக்குள்ளானவர்கள் மீதான பச்சாதாம், நடந்திருக்க வேண்டியவை நடக்காமல் போன ஏக்கம், பிரதேசம் - சமூகம் எனக்கருதப்படும் மக்களின் நலன் குறித்த எதிர்பார்ப்பு ஆகியன இக்கவிதைகளின் வடி ரசமாக அமைந்துள்ளன.

கவிதையின் போக்கு மாறிக் கொண்டே செல்லுகிறது. ஒவ்வொரு படைப்பாளியும் தான் நினைத்த விதத்தில் தத்தமது கருத்துக்களை தனக்கு வாலாயமான விதத்தில், மொழியில் சொல்லிச் செல்கிறார்கள். சிலருடைய கவிதைகள் பெரும் மயக்கத்தை உண்டு பண்ணுபவை. சிலருடைய கவிதைகள் எதைப் பேசுகின்றன என்று மீண்டும் மீண்டும் படித்தும் புரிந்து கொள்ள முடியாதவை. பர்வீனின் கவிதை மொழி நேரே பேசுகிறது. படிப்பாளி முதற்கொண்டு சாதாரண வாசகன் வரை சென்றடையும் மொழியாக அது அமைந்திருக்கிறது.

தினமும் ஆயிரக் கணக்கான கவிதைகள் எழுதப்படுகின்றன. கோடிக் கணக்கில் கவிதைகள் குவிந்தாலும் கவிதை என்று நாம் சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவற்றுள் அதி உன்னதமானவை என்று பொறுக்கியெடுப்பதற்கு இருப்பவை அபூர்வம். உயிருள்ள ஒரு கவிதை என்றைக்குமே தன்னளவிலும் படிப்பவர் மனதுக்குள் சதா துடித்துக் கொண்டேயிருக்கும்.

Wednesday, March 4, 2015

நீ சொன்னால் காவியம்!


- 14 -

ஒருவர் கருத்து ஒன்றை வெளியிடுகிறார். அது சரியானதாக, பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது எனில் சகலதும் சுபமே!

ஒருவர் கருத்து ஒன்றை வெளியிடுகிறார். அது சரி என ஒருசிலரும் பிழை என மற்றும் சிலரும் சொல்லுகிறார்கள். சரி அல்லது பிழைக்கான காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. காரணங்களைப் படித்து முடிக்கையில் அது உண்மையில் சரியான கருத்தா இல்லையா என்பது தெளிவாகும். அந்தத் தெளிவின் அடிப்படையில் சரியைச் 'சரி' என்றும் பிழையைப் 'பிழை' என்றும் ஏற்றுக் கொண்டால் சகலதும் சுபமே! பிழையைச் 'சரி' என்றும் சரியைப் 'பிழை' என்றும் வாதிட ஆரம்பித்தால் அதன் முடிவு வினையாகும்.

இயல்பாகவே சரியைச் 'சரி' என்றும் பிழையைப் 'பிழை'யென்றும் உணர்த்தும் மனச் சாட்சி மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஒரு விடயத்தின் ஆழ, அகலங்கள் அல்லது அதன் பின்னணி தெரியாமல் பேசப்படும் வார்த்தைகளுக்கு அப்பால் - இந்த மனச்சாட்சி சரியாகவே இயங்கும்.

ஒரு பண்பட்ட மனம், ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பட்ட மனம், அனுபவத்தில் பழுத்த மனம் சரியைச் 'சரி' எனவும் பிழையைப் 'பிழை' எனவும் ஏற்றுக் கொள்ளும். இந்த மனப்பாங்கு கொண்டவர்கள் சரியைச் 'சரி' என்று சொல்வதோடு தமது ஈடுபாட்டை நிறுத்திக் கொள்ளலாம். 'மிக அருமையான கருத்து' என்ற ஒரு பாராட்டு வார்த்தையுடனும் முடித்துக் கொள்ளலாம். பிழையைப் 'பிழை' என்று சொல்லியோ அதற்கான காரணங்களை முன் வைத்து விட்டோ நிறுத்திக் கொள்ளலாம்.

ஒரு சிலர் இதை அணுகும் முறை வித்தியாசமானதாக இருக்கும். பலரால் 'சரி' எனக் காணப்பட்ட கருத்தைப் 'பிழை' என்று சாதிக்க முயல்வார்கள். பிழை எனப் பலர்  சுட்டும் கருத்தைப் 'பிழை' என்பதோடு மட்டுமோ அதற்கான காரணங்களை முன் வைப்பதோடு மட்டுமோ அவர்கள் நின்று கொள்வதில்லை. பிழை என்பதைக் குறிக்க அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் ஆபத்தானவை. 'இந்தக் கருத்துத் தவறானது' என்று சொல்வதற்கும் 'இது ஒரு அடிமுட்டாள்தனமான கருத்து' என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதன் தொனி 'நீ ஒரு முட்டாள்' என்றும் 'மடையன் மாதிரிப் பேசுகிறாய்' என்றும் 'நீ ஓர் அறிவு கெட்ட மனிதன்' என்றும் ஒலிக்கும்.

ஒரு பண்பட்ட மனிதன் இந்தத் தாக்குதலை மீண்டும் தனது பண்பட்ட வார்த்தைகள் கொண்டே எதிர் கொள்வான். ஆனால் அது ஒரு கட்டம் வரைதான். சற்று உணர்ச்சி வசப்படும் மனிதன் திருப்பிடிக்க ஆரம்பித்து விடுவான். எனவே இந்த இடத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டு விடுகிறது. கலவரம் ஆரம்பித்தால் அது சம்பந்தப்பட்ட கருத்தை விட்டு விட்டுக் கருத்துச் சொன்னவரின் மற்றும் அதை மூர்க்கமாகத் தாக்கியவரின் பிறப்பு, வளர்ப்பு, தாய், தந்தை, குடும்பத்தினர், தொழில் என்று ஆளுக்காள் இழிவு படுத்த ஆரம்பித்து அவர்கள் சார்ந்த நட்பு வட்டாரத்தின் முக்கிய பேசு பொருளாக மாறிவிடுகிறது.

சிலர் இந்த அடிப்படையில் 'சரி' களைப் பிழைகளாகவும் 'பிழை'களைச் சரிகளாகவும் மாற்றி மாற்றிப் பேசுவதில் வல்லவர்கள். அநேகர் தமது பிடிமானத்தை விட்டுக் கொடுப்பதில்லை. தமது கௌரவம், தமது பேரறிவு, தமது சிந்தனையில் ஆழம், தமது அந்தஸ்து எல்லாமே இதில் தங்கியிருப்பதாக நினைத்துக் கொள்வதுவும் இவை யாவும் அதி உச்ச அளவில் தம்மிடம் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்பதும்தான் சோகமானது. எந்த வழியிலேனும் பணத்தை மட்டும் உழைத்துச் செல்வந்தானான ஓர் மனிதன் காட்டும் அற்பப் பெருமைக்கும் மேற்படி மனோ நிலைக்குமிடையில் பெயரிய அளவில் வேறுபாடுகள் கிடையாது.

ஒரு மனிதன் படித்த நூல்களும் அதன் மூலம் அவன் பெற்ற அறிவும் அவனது அனுபவங்களும் அவனிடத்தில் சரியைச் சரி என்றும் பிழையைப் பிழை என்றும் உணரவும் அதனை ஏற்றுக் கொள்ளவும் பிழையை யாருக்கும் வலிக்காத வகையில் யாரையும் அவமதிக்காத வகையில் சுட்டிக் காட்டவும் வழி செய்யவில்லை என்றால் அந்த நூல்களும் அவற்றின் மூலம் அவன் பெற்ற அறிவும் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை வேறு வார்த்தைகளில் எழுதி விளக்கும் அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்றவெனில் இஸ்லாம் குறித்த கருத்துப் பரிமாறல்களில் இவ்வாறான ஓர் அவல நிலை ஏற்படுவதுதான். இஸ்லாம் எத்தகைய பண்பாட்டை, சகோதரத்துவத்தை, விட்டுக் கொடுப்பை, சமாதானத்தை வாழ்க்கை வழியாகப் போதித்து நிற்கிறது என்பது தெரிந்தும் அதே இஸ்லாமிய, சமூக, பொருளாதார, அறிவியல், மார்க்கக் கருத்தாடல்களில் இவ்வாறான வாத விவாதங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் ஆழ்ந்து கவனிக்கவும் சிந்திக்கவும் வேண்டியது.

நாம் எதை எப்படி அணுகுகிறோம், எதை எப்படிப் பேசுகிறோம், எதை எப்படி எழுதுகிறோம் - இவற்றை யாருக்காகச் செய்கிறோம் - இவை யாரைச் சென்றடையப் போகிறது - இதனால் யாருக்கு என்ன லாபம் - இது மற்றொருவரை நோவிக்குமா - அல்லது மகிழ்வூட்டுமா - அல்லது சிந்திக்கத் தூண்டுமா - இதனால் யாருக்காவது பிரயோசனம் கிடைக்குமா - இதைச் சொல்லும் தகுதி எனக்குண்டா - நான் சரியாக இருக்கிறேனா - என்னிலிருந்து யாருக்காவது பிரயோசனமான ஏதாவது சக மனிதனுக்குக் கிடைக்கிறதா - என்பன போன்ற வினாக்களில் அரைவாசியையாவது நம்மை நாமே கேட்டுக் கொண்டால் பெருமளவில் மேற்படி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

எனக்கு மேல் யாரும் இல்லை, எனது கருத்தே சரியானது, இன்னொருவனுக்கு எனது கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்லத் தகுதியில்லை, எனது கருத்தைச் சரி என்று ஏற்காதவனை நான் கீலம் கீலமாகத்தான் கிழித்துத் தோரணங்கட்டித் தொங்க விடுவேன் என்று எண்ணம் வருகிறது என்றால் -

அது மனநோயின் பாற்பட்டது!

நன்றி - மீள்பார்வை