Wednesday, February 22, 2012

“யாத்ரா“ வருகிறது...!


‘யாத்ரா’ - 20 இதழ் வெளிவருகிறது.

புத்தாயிரத்தின் முதல் தமிழ்க் கவிதை இதழ் என்ற பெருமையுடன் தமிழ்க் கவிதை இதழாக 2000ஆம் ஆண்டிலிருந்து ‘யாத்ரா’ வெளிவர ஆரம்பித்தது. 19 இதழ்கள் வரை கவிதை இதழாக வெளிவந்த ‘யாத்ரா’, 20வது இதழிலிருந்து கலை, இலக்கியச் சஞ்சிகையாக வெளிவருகிறது.

20வது இதழில் முல்லை முஸ்ரிபா, எஸ்.போஸ், கிண்ணியா எஸ். பாயிஸா அலி, காத்தநகர் முகைதீன் சாலி, ஃபஹீமா ஜஹான், கிண்ணியா ஏ.எம்.எம். அலி, எஸ்.மதி, வெலிமட ரபீக், நியாஸ் ஏ.சமத், ஜெஸீம், எம்.ரிஷான் ஷெரீப், இளைய அப்துல்லாஹ், நீலா பாலன், பி.அமல்ராஜ் ஆகியோரது கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

அல் அஸூமத் எழுதிய ‘அலையழிச்சாட்டியம்’, ஜயந்த ரத்னாயக்க எழுதிய ‘வெள்ளைப்பாம்பு’ (மொழிபெயர்ப்பு) ஆகிய சிறுகதைகளும் அறிவிப்பாளர் ஏ.எல். ஜபீர் எழுதிய ‘டாக்டர் மாப்பிள்ளை’ நாடகமும் இவ்விதழில் உள்ளன. ராஜா மகளின் ‘பனிக்கட்டியாறு’ தீரன் ஆர்.எம். நெஷாத்தின் ‘கொல்வதெழுதல்’ ஆகியன இவ்விதழில் பிரசுரமாகியுள்ள பத்தி எழுத்துக்கள்.

‘அறுவடைக் கனவுகள்’ நாவல் பற்றி பஸ்லி ஹமீதும் ‘சிறுவர் உளவியலுக்கூடாக சிறுவர் இலக்கியம் - ஓர் அவதானக்குறிப்பு’ என்ற தலைப்பில் மறைந்த கவிஞர் ஏ.ஜீ.எம். ஸதக்காவும்,’ஈழத்து முஸ்லிம்களால் பாடப்பட்ட தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் - அணுகுமுறைகள்’ என்ற தலைப்பில் சி.ரமேஷூம் ‘கம்பநாடன் கற்றுத் தந்த காட்சிப்படுத்தல்’ எனும் தலைப்பில் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் எழுதிய கட்டுரைகளுடன் ‘நவீன அறபுக் கவிதை - தரிசனமும் எதார்த்தமும்’ என்ற தலைப்பில் அறபுமொழிப் பேராசிரியர் :பஸ்ஸாம் பிரங்கியே எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது.

இவை தவிர ஆசிரியரின் ‘உள்ளந் திறந்து’ என்ற தலைப்பிலான நான்கு பக்கக் கடிதம், ‘அஜமியின் அஞ்சறைப் பெட்டி’ என்ற பல்சுவைப் பகுதியும் இடம் பிடித்துள்ளன.

96 பக்கங்களில் வெளிவரும் ‘யாத்ரா’வின் தனிப் பிரதி ஒன்றின் விலை, 100.00ரூபாய்கள். சந்தாதாரராக விரும்புவோர் 500.00 ரூபாவுக்கான குறுக்குக் கோடிடப்பட்ட காசோலையை ‘யாத்ரா’ முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ‘யாத்ரா’ இதழ்களை மொத்தமாகப் பெற்றுப் பிரதேச இலக்கியவாதிகளுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்துதவ விரும்புவோர் ஆசிரியருடன் 0777 303 818 என்ற இலக்கத்துடனோ நிர்வாக ஆசிரியருடன் 0771 877 876 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளலாம். ‘யாத்ரா’வின் மின்னஞ்சல் முகவரி: ashroffshihabdeen@gmail.com
25.02.2012 அன்றிலிருந்து பின்வரும் புத்தகக் கடைகளில் ‘யாத்ரா’ கிடைக்கும்.

இஸ்லாமிக் புக் ஹவுஸ் - 77, தெமடகொட றோட், கொழும்பு -9

பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, செட்டியார் தெரு, கொழும்பு -11


பின்வரும் இடங்களிலும் ‘யாத்ரா’வை வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்விடங்களுக்கு சஞ்சிகை அனுப்பப்பட்டதும் திகதி இதே பதிவில் தெரிவிக்கப்படும்.

லக்கி புக்ஸ் - 5/2, கெலி ஓய ஷொப்பிங் கொம்ப்ளக்ஸ், தவுலகல றோட், கெலி ஓய

இன்போ டெக் சிஸ்டம் - எம்.பி.சி.எஸ்.றோட், ஓட்டமாவடி.

-------------------------------------------------------------------------------------------------------

‘யாத்ரா’ - 21 வது இதழுக்கான படைப்புக்கள் கோரப்படுகின்றன. ஆக்கங்களும் 20வது இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களும் தாமதமின்றி வந்தடையுமானால் உரிய வேளை சஞ்சிகையைக் கொண்டு வர இலகுவாக இருக்கும். வெளிநாடுகளிலுள்ள வாசகர்கள் சஞ்சிகையைப் பெற்றுக் கொள்ள ‘யாத்ரா’ மின்னஞ்சல் முகவரியடன் தொடர்புறுமாறு கேட்கப்படுகிறார்கள்.

Sunday, February 19, 2012

அமைதிப் போராட்டம் - வேதனையும் சாதனையும்!


மிகுந்த மனப்பாரத்துடன் இன்று தர்ஹா நகரில் ஒரு விழாவில் கலந்து கொள்ள நேரிட்டது.

அது ஒரு நூல் வெளியீட்டு விழா. நூலின் தலைப்பு  - silent Struggle.

ஒரு மாற்றுத் திறனாளியின் தந்தையாக சகோதரர் ஹாபிஸ் இஸ்ஸதீன் தனது அவஸ்தைகளை அடக்க முயன்றபடி நிகழ்த்திய விழாவின் ஆரம்ப உரையின் போது, அவ்வாறான ஒரு தந்தையின் நிலையை உணர்கையில் எனக்கும் கண்ணீர் துளிர்த்தது.

வேதனையூடு நிகழ்ந்த சாதனை. அதனை நிகழ்த்தியிருந்தவர் ஹாஃபிஸ் இஸ்ஸதீனின் புதல்வர் இர்பான்.

இர்பான் ஒரு மாற்றுத் திறனாளி. ஐந்தாம் ஆண்டோடு பாடசாலைக் கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் அவருக்கு. டி.எம்.டி - Duchenne Muscular Dystrophy என்ற தசையோடு சம்பந்தப்பட்ட வியாதியால் பீடிக்கப்பட்ட இர்பான் தனது 15வது வயதிலேயே கட்டிலோடு காலம் கழிக்கவேண்டிய நிலைக்குள்ளானார்.

மூவாயிரத்து ஐநூறு சிறுவர்களில் ஒருவருக்கு இந்நோய்த் தாக்கம் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. அமெரிக்கா வரை சென்று இந்நோய் பற்றிய கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு பற்றியுள்ள இர்பானின் தந்தை, இந்த நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார். ஒரு கதிரையில் அமரவோ, சாய்ந்திருக்கவோ, எழுந்து நிற்கவோ இயலாமல் கட்டிலே கதியாகிறது இர்பானுக்கு. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் 18 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

இர்பானின் உடல் செயலிழந்த போதும் மனம் விழித்துக் கொள்கிறது. மடிக் கணினி உதவியுடன் தானாக ஆங்கிலம் கற்கிறார். முகப்புத்தகத்தில் மாற்றுத் திறனாளிகள் பக்கத்தில் ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறார். அவரது கவிதைகளுக்கு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. பாராட்டுக்கள் கிடைக்கின்றன. அவரது தந்தையார் மகன் கவிதை எழுதுவதை அறிய வந்த போது நான்கு கவிதைகளை முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார் இர்பான்.

அவற்றைக் கூட கீ போர்ட்டில் அவரால் எழுத்துத் தட்டி இணைக்க முடியவில்லை. திரைக் கீ போர்ட்டில் மவுசைக் கிளிக் கெய்வதன் மூலம் ஒவ்வொரு எழுத்தாகக் குருவி ஒன்று சேர்ப்பது போல் தனது கனவை வரைகிறார். இர்பானுக்கு இப்போது வயது 30.

பதினைந்து கவிதைகளாவது இருக்குமானால் ஒரு நூலை வெளியிடலாம் என்கிறார் தந்தை. இர்பானுக்கு உற்சாகம் பிறக்கிறது. இன்று அவர் கோத்த 22 கவிதைகள் நூலாக வெளியிடப்பட்ட நாள்.

Friday, February 10, 2012

மரபு - ஜெயபாஸ்கரன் கவிதை


தமிழ் இலக்கியத்தில் இன்று அதிகமாக எழுதப்படுவது கவிதை. அதாவது கவிதை என்ற பெயரில் பல வார்த்தைக் கோலங்கள் எழுதப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை அரைகுறைகளாகவே தென்படுகின்றன. அதாவது ஒரு முழுமையான கவிதையைக் காண்பது அரிதாக இருக்கிறது.

இந்தக் கருத்தை எனது சொந்த இரசனையை வைத்தே சொல்கிறேன். வசன அடுக்குகளும் வார்த்தைக் கோலங்களிலும் மயங்கிக் கிடக்கும் நபர்கள் என்னுடன் முரண்படலாம் என்பதற்காகவே இவ்வாறு சொல்கிறேன். ஒரு படைப்பு ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான கருத்தை வழங்கக் கூடியது.

கோஷ்டியில் உள்ளவர் என்பதால், நட்பின் பெயரால், தன்னைப் பற்றி உயர்வாகப் பேசும் நபர் என்பதால், ஒரு தேவையின் பேராலெல்லாம் ஒரு முழுமையற்ற படைப்பு உலக இலக்கியத்தைத் தாண்டிப் போய்விட்டதாகப் புல்லரித்துப் போய்க் கிடப்பதையும் பார்க்கிறோம்.

ஆயிரமாயிரம் கவிதைகளைப் படிக்கிறோம். அவை எல்லாமே நமது நெஞ்சில் நிலைப்பதில்லை. ஞாபகத்திலும் வருவதில்லை. லட்சத்தில் ஒன்றாக, ஆயிரத்தில் ஒன்றாக அவை எங்கோ ஒரு இடத்தில் உயிரற்றுப் போய்க் கிடக்கின்றன.

ஒரு நல்ல கவிதை தன்னைப் பற்றிப் பேசத் தூண்டக் கூடியது. தன்னைப் படித்தவர் நெஞ்சுக்குள் கிடந்து சதா துடித்துக் கொண்டிருப்பது. தன்னைப் படைத்தவனை காலாதி காலத்துக்கும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பது.

அவ்வாறு சில கவிதைகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. அவை படைத்த கவிஞனை ஞாபக அடுக்குகளில் மறக்காமல் வைத்திருக்க உதவுகின்றன.

எனக்குப் பிடித்த கவிஞர்களுள் ஒருவர் ந. ஜெயபாஸ்கரன். அவரது “நானும் நீயும்” என்ற கவிதையைப் பல அரங்குகளில் படித்துக் காட்டியிருக்கிறேன். அவரையும் அக்கவிதையையும் அறிமுகப்படுத்தி நான் தினகரனில் எழுதிய பத்தி “தீர்க்க வர்ணம்” நூலில் “இலை மறை பழம்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

ஜெயபாஸ்கரன் கவிதைத் தொகுதி 2002ல் வெளி வந்தது. அவரது கவிதை நூல் ஒரு குறுகிய காலப் படிப்புக்கு எனக்கு இரவல் கிடைத்தது. அத் தொகுதியிலிருந்து சில கவிதைகளை புகைப்படப் பிரதியெடுத்தேன்.

Tuesday, February 7, 2012

ஆகாயத்திலிருந்து வந்த செய்தி!


வில்பர் ரைட்டை இரண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் கண்டேன்.


அதுதான் விமானத்தைக் கண்டு பிடித்தார்களே... அவர்களில் மூத்தவர்தான் வில்பர் ரைட்.

கனவுகள் என்னென் விதமாக வருகின்றன பாருங்கள். ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. சம்பந்தா சம்பந்தமில்லாத எத்தனை விடயங்கள் உலகத்தில் நடக்கின்றன பாருங்கள். உங்களைச் சுற்றிச் சிந்துப் பார்த்தாலே பல உண்மைகள் புரியும். அறிவழகன் என்று பெயர் வைத்திருப்பவன் அடி முட்டாளாக இருப்பதைப்போல.

அப்புறம் அவருடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

“ஏன்யா இந்தத் தேவையில்லாத வேலையைப் பார்த்துவிட்டுச் சென்றீர்கள்?” என்பது எனது கேள்வி.

மெல்லச் சிரித்துவிட்டுக் கேட்டார்:

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

“இல்லை... உங்கள் கண்டு பிடிப்பை வைத்துத்தான் போர் விமானங்களைச் செய்யத் தொடங்கினார்கள். எத்தனை ஆயிரம் மனிதர்கள் செத்து மடிகிறார்கள் தெரியுமா?”

“எங்கள் கண்டு பிடிப்பால் உலகு எவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பது தெரியும்தானே...”

“அழிவும் அது மாதிரி இருக்குதுதானே...!”

“எங்கள் நோக்கம் நல்லதை நோக்கியே இருந்தது...”

அதற்குப் பிறகு பேச்சை வேறொரு விடயத்தை நோக்கித் திருப்பினேன்.

“உங்களுக்கு முதல் இந்தியாவில் ஒருத்தர் விமானத்தைக் கண்டு பிடித்தாராமே...”

- நான்.

Sunday, February 5, 2012

மீலாதுன்னபி தினம்



நெருப்பெடுக்கும் பாலை நிலம் படுத்திருக்கும்
நீசர்களும் பூசல்களும் நிறைந்திருக்கும்
இருட்கிடங்காய் வரலாறு சித்தரிக்கும்
இதயத்து நிலப்பரப்பு மதுவெறிக்கும்
உருவத்து வழிபாடும் உயிர்க் கொலையுமாக
உன்மத்தங் கொண்டோர்கள் உலவுங்காலை
அருட்பிழம்பாய் அவதரித்தார் முஹம்மத் இந்த
அகிலமெலாம் அருள் ஒளியாய் ஆனதன்றே

குலப்பெருமை கொண்டிருந்தார் - கோஷ்டியாகி
குருதியிலே குளித்தெழுந்தார் பிறந்ததோ பெண்
குலக்கொழுந்தே யானாலும் குழியிலிட்டார்
கொடுமைகளே கொள்கையென் றார்த்தாரிடையே
வலம் வந்தார் வள்ளல் நபி வாஞ்சை சொன்னார்
வல்லவனில் தக்வாவைக் கொண்டார் மட்டும்
நலங்கண்டார் என்றுரைத்தார் நங்கையர்தம்
நலங்காத்தார் விதவைக்கும் வாழ்வு தந்தார்

கல்லெறிந்தார் கஸ்தூரிமேனி ரத்தக்
காடாக - ஆனாலும் கருணை செய்தார்
பொல்லாத மூதாட்டி குப்பை போட்டாள்
பூமேனி அழுக்காகப் பொறுமை காத்தார்
கல்லாத காட்டரபி கைகள் தொட்டுக்
கடுமுழைப்புக் காகநல் வாழ்த்துச் சொன்னார்
வல்லாரால் வறியவரின் வாழ்வு ஓங்க
வாழ்வியலின் தத்துவங்கள் விதந்துரைத்தார்

Thursday, February 2, 2012

காகமும் வடையும் - ஒரு புதிய கதை!


01


முன்னொரு காலத்தில் பாடசாலைக் கட்டடத்துடன் இணைந்த பாதையோரத்தில் உள்ள பென்னம்பெரிய ஆல மர நிழலின் கீழ் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள்.

இடைவேளைக்கு முன்னர் அவசர அவசரமாக வந்த ஒரு மாணவனுக்கு வடை கொடுத்துப் பணம் பெறுவதில் பாட்டி கவனம் செலுத்திய கெப்பில் மரத்தின் மீதிருந்த காகம் சட்டெனக் கீழ் நோக்கிப் பறந்து வந்து ஒரு வடையை லபக்கிக் கொண்டு மரக் கிளைக்குச் சென்றது.

கோபமும் ஆத்திரமும் நெருப்பாய்ப் பொங்க மரக்கிளையில் தனது வடையுடன் அமர்ந்திருந்த காகத்தைப் பார்த்தாள். கிழவியின் சாபத்தால் தான் பொசுங்கி விடுவேனோ என்ற பயத்தில் கிராமத்தை அண்மியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் காகம் பறந்து சென்றது.

அடிக்கடி இவ்வாறு காகங்கள் வடைகளைத் தந்திரமாக அபகரித்துச் செல்வதால் பாட்டி பெரிதும் கவலையுற்றிருந்தாள்.

காட்டுக்குள் மரக் கிளையில் அமர்ந்திருந்த காகம் நரிகளைக் காணவில்லை. ஆனால் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அது அமர்ந்திருந்த மரத்தை நோக்கி வருவதைக் கண்டது. அவர்களில் ஒருவர் தனது தோளில் கிடந்த துப்பாக்கியைக் கையில் எடுத்த போது அவர் தன்னைச் சுடப் போகிறார் என்ற பயத்தில் கால்களால் பற்றியிருந்த வடையை விட்டு விட்டு எழுந்து பறந்தது. வடை கீழே விழுந்தது.

மரத்துக்குக் கீழே வந்த காவல் துறையினர் கண்களில் பட்டது வடை. இருவரும் ஆளையாள் ஆச்சரியத்துடன் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் வடையை எடுத்து எல்லாப் புறங்களையும் பார்த்தார்.

“இது இப்போதுதான் சுட்ட வடை போலத் தெரிகிறது...”

என்று சொன்னபடி வடையில் முழுசாக இருந்த ஒரு பருப்பை நகத்தால் கிண்டி வாய்க்குள் போட்டு மென்றார். மற்றவர் அவரது செய்கையைப் பார்த்துச் சிரித்தார். அந்த வடையை ஒரு தாள் துண்டில் சுற்றியெடுத்துக் கொண்டு இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

காவல் நிலையப் பொறுப்பதிகாரி முன் வடையை வைத்து விடயத்தைச் சொன்னதும் பொறுப்பதிகாரி நிமிர்ந்து உட்கார்ந்தார். சரையைப் பிரித்து வடையைக் கையிலெடுத்துப் பார்த்தார். அதில் இரண்டு இடங்களில் சுரண்டப்பட்டிருப்பதை அவதானித்து விட்டு அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

Wednesday, February 1, 2012

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது வேதாளம்!


வருடாவருடம் அரச தேசிய சாகித்திய விழா பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த கையோடு பரிசளிப்பிற்கான நூற்தேர்வுகளில் இடம்பெறும் மோசடிகள், பித்தலாட்டங்கள் பற்றிய செய்திகள் கசிவது
வழக்கமாகியுள்ளது.

இது தொடர்பாக கடந்த சிலவருடங்களாக அவ்வப்போது ஞானம் ஆசிரியத் தலையங்கங்களில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். நடந்து முடிந்த தேசிய சாகித்திய நூற்பரிசுத் தேர்வுகளிலும் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக
அறிய முடிகிறது.

23-01-2012 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மல்லிகை 47ஆவது ஆண்டுமலர் வெளியீட்டின்போது,பல பத்திரிகையாளர்களும், சஞ்சிகையாளர்களும், இலக்கிய வாதிகளும், ஊடகவியலாளர்களும் குழுமியிருந்த கூட்டத்தில் நான் பேசும்போது, பரிசுத் தேர்வுகளில் இடம்பெறும் மோசடிகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எனது ஆதங்கத்தை வெளியிட்டேன்.

எனக்குப் பின்னர் பேசிய ‘கொழுந்து’ சஞ்சிகை ஆசிரியர் அந்தனி ஜீவா, நடந்து முடிந்த தேசிய சாகித்திய பரிசுத் தேர்வில் சில தவறுகள் நடந்திருப்பதாகவும் அவை தொடர்பாக இப்பொழுது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அதேவேளை, ஒரு துறை சார்ந்த நூல்களின் பரிசுத்தேர்வில் நடுவராகக் கடமையாற்றிய எனது நண்பர் ஒருவர், தன்னால் மிகக் குறைந்த புள்ளிகள் வழங்கப்பெற்ற நூல் ஒன்றினை வேறொரு நடுவருக்கு அனுப்பி அதிக புள்ளிகள் போடவைத்து அந்த நூலுக்குப் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது என்று என்னிடம் குறைபட்டுக் கொண்டார்.

தேசிய சாகித்திய மண்டல நூற்தேர்வுகளில் மட்டுமன்றி வேறு பரிசுத் திட்டங்கள் சிலவற்றிலும் இத்தகைய முறைகேடுகள் இடம்பெறுவதாகப் பிரபல எழுத்தாளர் அல் அஸ_மத் ‘படிகள’; சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். “அண்மையில் நடத்தப்பட்ட கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசுப் போட்டிபற்றி அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “ஒரு மாதத்தின் முப்பதாம் திகதியைக் குறிப்பிட்டு போட்டி முடிவுத் திகதி என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த மாதம் முடிய மூன்று வாரங்கள் இருக்கும் போதே போட்டி முடிவு
வெளிவந்துவிட்டது. கடந்த ஆண்டும் இதுதான் நடந்தது ஏன் இந்தப் பித்தலாட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்குறிப்பிடும் மூன்று வாரம் முன்பே முடிவு வெளிவந்து விட்டது என்ற உண்மை உலகளாவிய ரீதியில் பலருக்கும் தெரிந்ததொன்று.

சமீபத்தில், தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய கு. சின்னப்பபாரதி அவர்கள், தனது உரையில் திரு. அந்தனி ஜீவாவும் திரு. கலைச்செல்வனும் தனக்குப் பல ஆலோசனைகள வழங்கியதாகக்
குறிப்பிட்டார். குறிப்பாக, பரிசளிப்புப் பரப்பினை உலகளாவிய அளவில் விரிவு படுத்தி புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கும் பரிசு வழங்கவேண்டும் என்பதை இவர்களே முன்மொழிந்தார்கள்” எனவும் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள். இது போன்ற நல்ல காரியங்களே இலக்கிய உலகிற்கு வேண்டப்படுவன.
மேலும், சின்னப்பபாரதி தனது உரையில் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்ட நூல்கள் சிலவற்றிற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன என்றும் ஆனால் தான் களத்திற்குச் சென்று பார்த்தபோது அந்த விமர்சனங்கள்
ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.

உண்மையில் நடப்பது என்ன?

கொழும்பில் சில இலக்கியத் தரகர்கள் குழுவாக இயங்குகிறார்கள். இவர்களை அணுகினால் பரிசு பெற்றுவிடலாம் என்ற ஒருநிலை இருப்பதாகப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். இவர்கள் தேசிய சாகித்திய மண்டல உயர்மட்ட தேர்வுக்குழுவினர் சிலரையும் வேறு சில பரிசுத் திட்டங்களை நடத்துபவர்களையும் தமது கைக்குள் போட்டு வைத்துள்ளார்கள். இந்தத் தரகர்களை அணுகி ஏதோ ஒருவகையில் அவர்களைச் சந்தோசப்படுத்தினால் இலகுவாகப் பரிசு பெற்றுவிடலாம் என அரசல்புரசலாகக் கதை அடிபடுகிறது.

இந்த நிலைமை மாறும்வரை பரிசு பெறும் சிறந்த படைப்புகள் கூட சந்தேகக் கண்களோடு நோக்கப்படும் துர்ப்பாக்கியம் நீண்டு கொண்டே போகும்.

பரிசுப்போட்டியை நடத்துபவர்களது நல்ல நோக்கமும் வீணாகிவிடும்.
இத்தகைய தரகுச் செயற்பாடுகள் ஆரோக்கியமானவையல்ல.
 இவை நிறுத்தப்பட வேண்டும்

பூனைக்கு மணிகட்டுவது யார்?
 
-----------------------------------------------------------------------------------------------------------
ஞானம் பெப்ரவரி 2012 - இதழ் 141 - ஆசிரியர் தலையங்கம் - நன்றி - ஞானம்.