Tuesday, July 18, 2017

'அப்பாவின் துப்பாக்கி!'


இலக்கியம் உண்மையான வரலாற்றை எடுத்துச் சொல்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாகக் குறிப்பிடப்படக் கூடிய அண்மையில் வெளியான நூல்களில் ஒன்று 'அப்பாவின் துப்பாக்கி!'

1964ல் ஈராக்கிய குர்திஸ்தான் நிலப்பரப்பில் பிறந்த ஆசாத் ஷெரோ செலீம் என்ற இயற்பெயர் கொண்ட ஹினெர் சலீம் எழுதிய இந்தப் படைப்பு ஒரு நாவலாகவும் சுய சரிதையாகவும் வரலாற்று உண்மைகளைக் கொண்ட ஆவணமாகவும் அமைந்திருக்கிறது.

சத்தாம் உப ஜனாதிபதியாக இருக்கும் போது ஆரம்பிக்கும் கதை சத்தாம் ஜனாதிபதியாகியதுடன் முடிவுக்கு வருகிறது. சத்தாமின் அகண்ட அறபு தேசக் கனவு, அவராலும் அமெரிக்கா, ஐ.நா. ஆகியவற்றாலும் ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் ஆயுத மோதலுக்குள் வாழ்ந்த ஒரு சிறுவன்;, முன் கட்டிளமைப் பருவத்தை அடைவது வரை இக்கதையை இரத்தமும் சதையுமாகச் சொல்லிச் செல்கிறான்.

இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் பிறந்த சலீம் இனப் போராட்டதில் தந்தை முதல் சகோதரர்கள் உட்பட அனைத்து ஆண்களும் தமக்கான சுதந்திரத்துக்காப் போராடியதை இக்கதையூடே சொல்லிச் செல்கிறார். பலாத்காரமான இடப்பெயர்வு, குர்திஸ் மலைப்பாங்கான நிலத்தின் எழில், இனப்போராட்டத்தின் ஆதரவாளர்கள், காட்டிக் கொடு;ப்பவர்கள், அறபு இராணுவம், அதன் அட்டூழியம், கிராமத்தின் வறுமை, பெண்களில் அழகு, ஒரு கோலா பானத்துக்கான ஏக்கம், வறுமை, இடத்துக்கு இடம் மாறி வாழ்தல், கைதிகளாதல், ஏமாற்றப்படுதல் என்று ஏகப்பட்ட விடயங்களை இந்தத் தன் கதை சித்தரிக்கிறது.

கதையில் வரும் முக்கிய பாத்திரங்களில் முதன்மை இடத்தைப் பெறுபது சலீமின் தந்தையாவார். அவர் குர்திஸ்தான் போராட்டக் குழுத் தலைவரின் முக்கிய தகவலாளியும் நம்பிக்கைக்குரியவருமாக இருந்ததுடன் அவர் வைத்திருந்த பழைய, மிகப் பழைய துப்பாக்கியும் கதையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டொரு நாட்கள் வீட்டில் இருப்பதும் மாதக் கணக்கில் போராட்ட அணியுடன் இணையவும் சென்று விடும் சகோதரர்கள், எந்நேரமும் இருந்த இடத்திலிருந்து கிளம்பத் தயாராக இருக்கும் தந்தை, பாசம் மிகுந்த ஆனால் எல்லாவற்றையும் புரிந்து அமைதியும் பொறுமையுமாக இருக்கும் தாய், வயது முறுக்காலும் இனப் பற்றினாலும் தானும் தன் நண்பரும் போராட்டக் குழுவில் சேரச் சென்று திரும்பும் அபாயம் மிக்க பயணம், ஓவியம், பாடல் ஆகியவற்றில் சலீமுக்கு இருந்த ஆர்வம், நிறைவேறாத அற்பக் காதல் என்று பல விடயங்களை இக்கதை நமக்கு எடுத்துச் சொல்வதோடு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஈராக் குர்திஸ்தானில் மக்கள் பட்ட அவதியையும் துன்பத்தையும் மனதில் பதித்து விட்டு நகர்கிறது.

அவர் கதையைச் சொல்லிச் செல்லும் போது ஒரு புன்னகையை வாசகனின் முகத்தில் தோன்றச் செய்யும் வகையிலான வசனங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தாலும் கதையைப் படித்து முடிக்கின்ற போது வாழ்வில் சுதந்திரத்தை மட்டுமல்ல மகிழ்ச்சி என்ற ஒன்றை அனுபவித்திராமல் வாழ்நாள் பூராகவுமே கலக்கத்தோடும் நிம்மதியின்றியும் வாழ்ந்த மக்களின் துயர் ஒரு பாறாங் கல்லாய் மனதை அழுத்துகிறது.

அறபி - குர்திஸ் என்ற பாகுபாடு காரணமாகவும் அறபியரோடு இணைந்து ஒரு சமூகத் துரோகியாக மாறி வாய்ப்புக்களைப் பெற்றுக் கற்று உயராமல் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் சலீமின் சிறு வயது ஆசையான சினிமா தயாரிக்கும் கனவு நிஜத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அது அவரது கதையில் இல்லை.

இத்தாலியில் தஞ்சம் புகுந்த சலீம் அங்கு குர்தியருக்கு பிரசாவுரிமை வழங்கப்படாத காரணத்தால் பிரான்ஸில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.

சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் தமிழ் மொழிபெயர்ப்பு இடறல் இல்லாதது. இந்நூல் காலச் சுவடு வெளியீடு - 2013

(16.07.2017 தினகரன் பிரதிபிம்பம் பகுதியில் பிரசுரமானது)

Monday, June 5, 2017

"முஸ்லிம் பெண்களும் கத்னாவும் - நாங்களும் பேசுகின்றோம்"டாக்டர் இஸ்ஸதுன்னிஸா

(இந்தக் கட்டுரை சகோதரி டாக்டர் இஸ்ஸதுன்னிசாவால் எழுதப்பட்டு அவரது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அவரது அனுமதியுடன் எனது வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறேன்.)

பெண் கத்னா அல்லது female circumcision என்ற விடயம் எமக்கிடையே தற்போது பேசு பொருளாக மாறியுள்ள இக்காலத்தில் இரண்டு நோக்கங்களில் இரு பகுதிகளாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
முதலாவது அது சார்ந்த மருத்துவ நோக்கிலும் (Medical aspect) அடுத்து சமூக நோக்கிலுமாக (Social aspect) சில விடயங்களை மாத்திரம் நான் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்.

மார்க்க மற்றும் கலாசார நோக்கு (Religious and cultural aspect) என்னால் இக்கட்டுரையில் அணுகப்படவில்லை. பொருத்தமானவர்கள் அப்பணியை தொடரலாம்.

பகுதி 1.
Female circumcision தொடர்பான மருத்துவ நோக்கு.
WHO இன் வரைவிலக்கணப்படி, female circumcision  நான்கு வகைப்படுத்தப்படுகிறது.

Type 1- Removal of the prepuce of clitoris.
அதாவது, கிளிட்டோரிஸின் முற்தோலை நீக்குவது. இது முழுவதுமாக male circumcision இற்கு ஒப்பான removal of the penile prepuce என்ற முற்தோல் அகற்றல் முறையாகும்.

Type 2-4/ Female genital mutilation (FGM) :
removal or extraction of labia minora, labia majora and clitoris.
அதாவது, l.minora , l.majora and clitoris போன்ற பகுதிகளை அகற்றுதல் அல்லது சிதைத்தல் என்று பொருள்படும்.

இதில் எமது நாட்டிலும் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் இஸ்லாமிய வழக்காறாக நடைமுறையில் இருக்கும் நடைமுறை மேற்குறிப்பிட்ட type 1 அதாவது கிளிட்டோரிஸின் முற்தோல் நீக்கம் ஆகும். இதற்கு ஆதரவாக காட்டப்படும் ஹதீஸ்கள் முற்தோல் நீக்கத்தையே ஆகுமாக்கியதாகவும் ஏனைய சிதைத்தல் அல்லது அகற்றுதல் ஹராம்(தடுக்கப்பட்டவை)யாகவும் குறிப்பிடுகிறது.

ஏனைய வகை சிதைப்பு அல்லது அகற்றுதல் என்பது ஆப்பிரிக்க மற்றும் ஆசியாவின் ஏனைய சில பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாகும்.
ஆக, முற்தோல் நீக்கம் எனப்படும் விடயம் female circumcision எனவும் ஏனைய வகையறாக்கள் FGM எனவும் பிரித்து நோக்கப்படுகிறது. அதே நேரம் முறையான பாதுகாப்பில் female circumcision எனப்படும் முதலாம் வகையறா குறிப்பிடத்தக்க சுகாதார ஸ்தளங்களில் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்கின்றது.
(பார்க்க: இதழ் we eradicate HIV/ நாள் 2017.05.17.

இணைப்பு
http://www.pgspl.net/we-eradicate-hiv/our-press-release/why-female-circumcision-is-legally-not-a-part-of-female-genital-mutilation-fgm.html

ஒரு வைத்தியராக நான் இந்த 'நீக்கல் முறை'யை (technique of the removal procedure)அணுகிய போது அந்த குறித்த கத்னாவை மேற்கொள்வோர் பிரயோகித்த பதங்கள் 'சுரண்டுதல், நோண்டுதல், வழித்துவிடல், கீறியெடுத்தல் என்ற வகையறாக்களினுள்ளேயே அடங்கியது. மருத்துவத்தில் இவ்வார்த்தைகளை நாங்கள் abrasion or superficial cutting என்போம்.

இது laceration, extraction, removal எனப்படும் ஆழ்ந்த காயப்படுத்தல், சிதைத்தல், நீக்குதல் என்ற முறைமைகளில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டது என்பதை இதற்கான வார்த்தைப் பிரயோகங்களை பாவிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டும். சிதைத்தல் என்ற FGM உள்வாங்கும் வார்த்தைப் பிரயோகம் circumcision என்ற முதல் வகையறாவிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது.
இங்கு விரிவாக இல்லாவிட்டாலும் இச்சமூக வழக்காறின் மார்க்கப் பின்னணியை கொஞ்சம் தொட்டுக்காட்டுவது பொருத்தமாகும்.
இஸ்லாமிய வழக்காறில் உள்ள கிளிட்டோரிஸ் முற்தோல் நீக்கம் என்பது சில ஹதீஸ்களின் பிற்பாடாய் வந்ததாக அடையாளப்படுத்தப்படுகிறது. பிரதானமாக இரு ஹதீஸ்களை இதற்கு சார்பானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதே நேரம், இச்செயல் இஸ்லாமிய வலியுறுத்தல் இல்லை. இது ஒரு சமூகத்தின் கலாசார வழக்காக வந்ததே என தம் வாதத்தை முன் வைக்கும் நபர்கள் அந்த இரு ஹதீஸ்களும் ஆதாரபூர்வமாக மிகப் பலவீனமானவை. ஆக, பலவீனமான நிலையில் உள்ள ஹதீஸ்களுக்கான இஸ்லாமிய சட்டங்கள் அத்துடன் சமூக விழுமியங்கள் என்பவற்றை கருத்திற் கொண்டு இச்செயற்பாட்டை முற்றாய் கண்டிக்கின்றனர். தவிர்க்கப்பட வேண்டியதாய் அடையாளப்படுத்துகின்றனர்.

இலங்கை முஸ்லீம்களை பொறுத்தவரை, ஆரம்பத்தில் சாதகமாக முதலாம் தரப்பினருள் உள்வாங்கப்பட்ட (not an obligation) இந்த விடயம் பிற்பாடு இரண்டாம் தரப்பாரின் வாதத்திற்கு உள்வாங்கப்பட்டு குறிப்பிடத்தக்களவு தவிர்க்கப்பட்டது. இன்றளவும் அந்தத் தோரணையிலேயே பகிரங்க விழிப்புணர்வுகளும் அதற்கெதிரான மார்க்க உபன்னியாசங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் மத்தியிலேயே இலங்கை முஸ்லிம்களின் இந்த female circumcision தொடர்பான நிலமை உள்ளது என்பதே உண்மை. சரியான ஆய்வுகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது தொடர்பான நிகழ்தகைமைகளை சரியாகக் கணிக்க முடியாதிருப்பினும் பல தரப்பட்ட கருத்தாடல்கள் மற்றும் எதிர்விளைவுகளானது அத்தகைய செயற்பாடு ஒரு வழக்காறின் இயல்பாக இன்னும் நடைமுறையில் ஆங்காங்கே இருந்து வருவதாகவும் அதே நேரம் பெருமளவில் குறைந்து வரும் ஒன்றாகவும் மிகக் குறுகிய காலத்தில் மருவிப் போய்விடக் கூடியதாகவுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, female circumcision இனது மருத்துவ சாதக பாதகங்களை அலசும் போது,
அதை சாதகமாகப் பேசுவோர்,
- அது தங்கள் குழந்தைக்கு வழங்கும் சுகாதாரப் பெறுமதி (hygienic measure) எனவும்
- சிறுனீர் வழி தொற்றுகளில் இருந்து(urinary tract infection) பாதுகாக்கிறது எனவும்
- HPV எனும் human papilloma virus இனால் ஏற்படக் கூடிய வாய்வழி மற்றும் கருப்பைக் கழுத்து (oral and cervical cancer) புற்று நோய்களில் இருந்தும் காக்கிறது எனவும்
- முற்தோலுக்கு கீழே தேங்கும் சுரப்பினால் ஏற்படும் அவிந்த முட்டை போன்ற நாற்றத்தையும் (unpleasant foul smelling because of the secretion beneath the prepuce) அதனால் ஏற்படும் அசெளகரியங்களையும் தடுக்கிறது எனவும்
- தேவையற்ற வகையில் எழும் மேலதிக பாலியல் ஆசையை (excessive libido) குறைக்கிறது எனவும்
- தேவையற்ற சாதாரணமாக அன்றாடம் நிகழும் முற்தோல் தூண்டுதலால் ஏற்படும் சதை வளர்ச்சியையும் அதனால் ஏற்படும் வலி மற்றும் பாலியல் அசெளகரியங்களையும் ( enlargement of the size of the clitoris because of excessive stimulation of the prepuce) தவிர்க்கிறது எனவும்
தமது வாதங்களை முன் வைக்கின்றனர்.

மருத்துவ ரீதியாக இதன் பாதகங்களை முன் வைப்போர்,
-இது சிறுவர் துஷ்பிரயோகம் (child abuse) என்ற வாதத்தை பிரதானமாகவும்
- பாலியல் ரீதியாக பெண்களுக்கு எதிராக நிகழும் துஷ்பிரயோகம் (sexual abuse against women) என்பதையும்
-பாதுகாப்பற்ற முறையில் மேற்கொள்ளப்படும் சுகாதாரமற்ற வழக்கம் ( unsafe and unhygienic measure) எனவும்
-கலாசார அடையாளமாய் திணிக்கப்படும் ஒரு வன்முறை (a cultural violence) எனவும் தமது வாதத்தை முன் வைக்கின்றனர்.

மேற்கூறப்பட்ட சாதக பாதக காரணிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆங்காங்கே ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருப்பினும் குறிப்பிடத்தக்க தொடரான ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் வேண்டி நிற்பவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எது எவ்வாறிருப்பினும், இதற்கெதிராய் எழுந்துள்ள 'சிறுவர் துஷ்பிரயோகம்' என்ற பிரதான வாதமானது அதே முறையில் நடந்தேறும் ஆண் குழந்தைகளுக்கான male circumcision இனை சிறுவர் துஷ்பிரயோகமாக தட்டிக் கேட்கத் தவறியமையினாலும் அதையும் அதன் மூலமான மருத்துவ நன்மைகளை மருத்துவ உலகம் அங்கீகரித்து அதை ஊக்குவிப்பதனாலும் அர்த்தமற்றுப் போகின்றது என்றே சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது.
இதன் சாதக பாதகங்கள் தனித்தனியாக முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்படாத வரை மருத்துவ உலகு இவ்வழமையை முற்றாக அங்கீகரிக்கவோ முற்றாக மறுதலிக்கவோ இயலாத நிலையிலேயே இருக்கின்றது என்பதும் மறுக்க முடியாதது.

அடுத்து,
திடீரென இப்போது எழுத்தாளர்களிடையே இது பேசுபொருளாக்கப்பட்டதன் பின்னணியும் அது சார்ந்த சில சமூக நோக்கையும் வேறொரு பாணியில் குறிப்பிடுகிறேன்.

பகுதி 2:
சமூக நோக்கு.
Female circumcision என்ற சமூகக் கொடுமையைப் பற்றி அக்கறை கொண்டு பொங்கியெழுந்துள்ள அந்த நபர்களுக்கு, எங்கள் மீதான உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி.

நீங்கள் அடிக்கடி பச்சாதாபப்படுகின்ற அந்த 'பாவப்பட்ட' சமூகத்தை சேர்ந்த ஒருத்தியாய் நான் இதை எழுதுகிறேன்.

ஒரு மருவிச் செல்லும் கலாசாரப் பழக்கத்தில் நிகழும் எங்களுக்கான அனீதியைக் கூட காண்பதற்கு உங்கள் நெஞ்சங்கள் பொறுக்கவில்லை என்பதை நினைக்கையில் மெத்தப் பெருமிதம் எமக்கு. சொல்லப்போனால் ஏனைய சமூகப் பெண்களை விடக் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள். கொஞ்சமென்றால் ஓடோடி வந்து குரல் கொடுக்க உலகமே கொள்ளிக் கண்கொண்டு நோக்கிக் கொண்டிருப்பது நாங்கள் செய்த அதிஷ்டமன்றி வேறில்லை.

விடயத்திற்கு வருகிறேன்.
நீங்கள் பேசிக் கொண்டே செல்கிறீர்கள். எம் சமூகத்து ஆண்களும் மூச்சு முட்ட பதில் தந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் எங்கள் மீது கொண்டிருப்பது நிஜமான அக்கறையல்ல என்பதாய் தெரிந்திருக்கிறது. அதையும் தாண்டிய உங்களது அப்பட்டமான சில சுய நலங்களுக்காய் நாங்கள் அல்லது எங்களது கிளிட்டோரிஸ் பயன்படுவதை ஆங்காங்கே துகிலுரிக்கவும் தவறவில்லை அவர்கள்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அதிலும் குறிப்பாக நான் வாழும் கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் பற்றிய ஒரு மிகப் பெரும் பிழையான பிம்பத்தை கட்டியெழுப்பி இருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும்.
சொல்லப்போனால், உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். நீங்கள் பேசு பொருளாக மாற்றியுள்ள அந்த பெண் கத்னா விடயம் எத்தனை சதவீதம் நடைமுறையில் தற்போது இருக்கின்றது என்பது. சத்தியமாய் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

என்னால் ஒன்று அல்லது இரண்டு தசாப்தத்திற்கும் மேல் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் ஆட்கொண்டிருந்த அந்த நடைமுறை இப்போது எவரும் மறுக்க இடமின்றி கிட்டத்தட்ட மிகச் சில, (உதாரணத்திற்கு 5-10) வீதங்களுக்கு குறைந்திருக்கின்றதென்றால் சத்தியமாய் அதற்குக் காரணம் நீங்களோ அல்லது உங்களது எழுத்தோ அல்ல. மார்க்க மற்றும் கலாசார விழிப்புணர்வூட்டல்கள் மாத்திரமே அதற்குக் காரணமாய் அமைந்தது. இப்போதும் அமைகிறது.

நிலமை அவ்வாறிருக்க, தொக்கிக் கொண்டிருக்கின்ற குறைந்தது அடுத்த ஓரிரு தசாப்தத்திற்கிடையே அடையாளமிழக்கப் போகின்ற அந்தச் சிறியதோர் வீதத்திற்காய் தடாலடியாய் நீங்கள் சிலர் களத்தில் குதித்திருப்பது பெருத்த ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் சாதாரணமாகவே உருவாக்கிவிட போதுமாயிற்று. நீங்கள் சார்ந்த ஒரு சில பின்புலங்கள் அந்த சந்தேகங்களை உறுதியும் படுத்துவதாயும் தோன்றுகிறது.

ஆக, அந்த ஒரு சில வீதங்களுக்காக யார் குரல் கொடுப்பது என்ற உங்கள் பெருங்கருணை புரிகிறது. நல்லது, அந்தத் தூய்மையான நோக்கத்திற்காக அப்பணியை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள். அது கட்டாயம் செய்யப்பட வேண்டியதே. ஆனால் அதற்கு முதல் உங்களிடம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டிய ஒரு சில விடயங்கள் கிடப்பில் கிடக்கின்றன. நீங்கள் யாரும் அவை பற்றி பேசுவதாய் தெரியவில்லை. கிளுகிளுப்பில் இருக்கும் ஆர்வம் காத்திரமான விடயங்களில் இல்லை என்பது ஒரு வகையில் நிஜம்தானே.
இதோ -

இலங்கை (குறிப்பாக கிழக்கு) முஸ்லிம் பெண்களுக்கெதிரான கொடுமை ஒன்றிற்காய் போர்க்கொடி தூக்கி இருக்கிறீர்கள். ஆனாலும் இந்த சமூகத்தை ஆட்கொண்டிருக்கின்ற மிகப் பாரதூரமான வன் கொடுமைகளை உங்களது எழுத்துக்கள் அடையாளம் காணவில்லை. காணப்போவதும் இல்லை.
எங்களுக்கெதிரான வன்முறைகளை அடையாளப்படுத்தும் போது பூதாகாரமாய் தலை தூக்கி சிரிக்கிறது அந்த 'சீதனம்' எனும் அத்துமீறிய பொருளாதார ஒழுங்கு. அதைத்தாண்டி பேசவே முடியாதளவு விகாரங்களையும் அகோரங்களையும் இங்கு அது ஏற்படுத்தி இருக்கிறது. அதைப் பற்றி நான் இங்கு விளாவாரியாய் குறிக்கவில்லை. ஆனாலும் உங்கள் கண்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை. இரண்டே இரண்டு காரணம் அதற்கு. உங்கள் மூலதனமான ஆபாசம் அதில் உள்ளடங்கவில்லை. அத்தோடு உங்களை போசிப்பவர்களின் அடியாய் வந்த அடுத்த இன கலாசார வழக்கம் அது. ஆக அதற்கெதிரான சலசலப்பை விவாதத்தை நீங்கள் எம் சமூகத்திற்கு கொண்டு வரப் போவதில்லை.

அடுத்து, சாதியப் பிரிவினை.
என்ன சொல்ல. யானை போன வழி அறியாது எலிப்புழுக்கை போன வழி பற்றி கதை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். எங்களுகெதிராய் நீங்கள் வெளிக்கிளம்பும் போதெல்லாம் சப்தமேயில்லாமல் சிரித்துக் கொண்டு உங்களோடு சேர்ந்து எங்கள் கரிசனை(?)க்காய் ஒப்பாரி வைக்கும் எங்களை அடுத்து வாழும் சக சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சனை இது. இலங்கைப் பெண்களுக்கு மீண்டும் குறிப்பாக கிழக்குப் பெண்களுக்கு நிகழும் அடுத்த கொடுமைகளுள் ஒன்றான சாதிய வேறுபாட்டால் நிகழும் மூப்பேறிய வயது, திருமணமாகாமலேயே வாழ்தல், தவறான பாலியல் தொடர்புகள், தற்கொலைகள், வன்முறைகள்,போன்றன இந்த சமூகப் பெண்களில் குடும்பங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது பற்றி உங்கள் எழுத்துக்கள் கோஷமெழுப்பப் போவதில்லை. கிளிட்டோரிஸ் மீது நிகழும் அனீதிக்காய் கொதித்துப் போயுள்ள உங்களுக்கு இந்தக் கேவலமான சமூக சமய கலாசார ஆதிக்கங்கள் பற்றி கிஞ்சிற்றும் கவலை இல்லை. அதில் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் அடங்கிப் போய் தன் ஆயுளை முடித்துக் கொள்ளும் நூற்றுக் கணக்கான ( கவனிக்க: நூற்றுக்கணக்கான) பெண்களைப் பற்றி எந்த மனப்புளுக்கமும் இல்லை.

ஆமாம். நீங்கள் அவை பற்றி எல்லாம் கவலைப் படவே கூடாது. அவ்வாறுதான் உங்களுக்கான அஜெண்டா தயாரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் காரியங்கள் சரியாக வேண்டுமென்றால் நீங்கள் தொட்டெழுத வேண்டிய விடயங்கள் ஏற்கனவே தொகுக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஒழுங்கில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும். வேறு வழியில்லை. ஏனெனில் யாரோ ஒரு நபர் கருத்திட்டதைப் போல் பல நேரங்களில் உங்கள் பெண்ணியல்வாத செயற்பாடுகள் 'முஸ்லிம் பெண்கள்' என்ற வட்டத்தை தாண்டிச் செல்லக் கூடாது என்பது மறைமுகமான ஆனாலும் அனைவரும் அறிந்த விதியாய் இருக்கிறது.

இதையும் தாண்டி,என் நாட்டு என் பிரதேச பெண்களின் ஆரம்பக் கல்வி, உயர் கல்வி, குடும்ப ஒழுங்கு, தொழில், வியாபாரம், அரச வேலை, பொழுது போக்கு, குடும்பப்பாரம், வெளி நாட்டு வேலை, காதி நீதிமன்ற செயற்பாடுகள், இள வயது திருமணம், விதவை மறுவாழ்வு, பிரயாணம், அரசியல், தலைமைத்துவம் போன்ற பல விடயங்களை தொட்டுக் காட்டி அவற்றின் முக்கியத்துவத்தையும் எந்த கிளுகிளுப்பும் இல்லாமையினால் உங்களைப் போன்றவர்களால் கண் நோக்கப்படாமல் கிடப்பிலேயே கிடக்கும் அவலத்தையும் விவரிக்க முடியும். விரிவஞ்சி தவிர்க்கிறேன்.
(இவ்விடத்தில் இவற்றையெல்லாம் ஆங்காங்கே பேசித்தானிருக்கிறோம் என்று கிளம்பி வந்து விட வேண்டாம். அப்படியாயின் உங்களுடைய அந்தப் பேச்சுக்கள் குறித்த அவ்விடயங்களில் ஏற்படுத்தியுள்ள பூச்சிய வீத மாற்றங்கள் பற்றியும் நாங்கள் மறுத்துப் பேச வேண்டி வரும்)

மிகச் சரியான உரிமைப் போராட்டமாய் அமைந்த அந்த பெண்ணியல்வாதம் , இன்று ஒரு வகையில் கடுமையாய் விமர்சிக்கப்படுவதற்கு உங்களைப் போன்றவர்களது இத்தகைய சின்னத்தனங்களும் சுய நலங்கள் பெருக்கெடுத்த பொது நலமுமே மிக முக்கியமாய் இருக்கிறது.

ஆக, முஸ்லிம் பெண்களின் நலவுகள் பற்றியே இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டும் துப்பறிந்து கொண்டும் இருக்கும் நல்லவர்களே.
நீங்கள் தொட்டுச் சென்றுள்ள அந்த 'கிளிட்டோரிஸ் சிதைப்பு' பற்றி நீங்கள் மேலும் பேசுங்கள். உங்கள் இலக்குகள் எய்யப் பெறும் வரை நீங்கள் பேசிக் கொண்டும், எம் இளைஞர்களை உசுப்பேத்திக் கொண்டும், அவர்களது உணர்ச்சிகளையும் கோபங்களையும் உங்கள் மூலதனமாக்கிக் கொண்டும் உங்கள் பாதையில் பயணித்துக் கொண்டே இருங்கள்.

ஆனால், அடையாளமிழக்கப்போகின்ற அந்த விடயத்தை 'நாங்கள்தானே பேசு பொருளாக்கினோம்' என்ற பெருமையைக்கூட நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாதளவு அதன் பின் விளைவுகள் இந்த சமூகத்தை வந்தடையச் செய்யும் ஒரு காலத்தில் நீங்கள் இதை பேசு பொருளாக்கி இருக்கிறீர்கள்.
சிறுபாண்மை சமூகமான எங்களை கருவறுக்க காத்திருக்கும், கருவறுத்துக் கொண்டிருக்கும் அந்த தீய சக்திகளுக்கு மீண்டுமொரு தீனியை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த ஏக்கத்தையும் பதை பதைப்பையும் அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளின் எதிர்வுகூறலையும் அந்த மிகப் பெரும் எழுத்தாளரின் பேராசிரியரின் பதிவில் காணக் கிடைத்தது. கவலைப்பட நேர்ந்தது.

ஈடு செய்ய முடியாத சமூகத் துரோகம் அது. அவர் அவரது சமூகத்திற்காக அஞ்சுவதாய் தெரிந்தாலும் இங்கே இந்த நாட்டிலும் நாங்கள் அதே ஒடுக்கலைத்தான் எதிர் நோக்கி இருக்கின்றோம். இன்னும் தீவிரமாக எதிர் நோக்குவோம் என்பதை அவரது கவலையோடு சேர்த்து எமக்கான கவலையாகவும் மாற்றிக் கொள்கின்றோம்.

கருத்துரிமை, கருத்துச் சுதந்திரம் என்பவற்றைக் கடந்து நீங்கள் எடுத்தியம்பிக் கொண்டிருக்கும் இத்தகைய விடயங்கள் யார் யாருக்கு உபயோகமாய் போய்ச் சேருகிறது என்பது காலப்போக்கில் ஆவணங்களாய் தெரிய வரும்.

அந்த வகையில், கிளிட்டோரிஸ் சிதைப்பு என்ற பரிதாபத்தை கடந்து, அது ஒட்டு மொத்த சமூகத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ள இன்னுமின்னும் கொண்டு வரப்போகின்ற 'அந்த' வன்முறைக்குத்தான் என் முதற்கட்ட பரிதாபங்கள். அவற்றை நாங்கள் அனுபவிக்கும் காலமெல்லாம்
'ஏதோ ஒரு பொதுப்பெயர்' கொண்டு உங்கள் அனைவரையும் நாம் நினைவுறுத்திக் கொள்வோம். அந்த நேரங்களில் நீங்கள் உல்லாசமாய் உங்கள் பொழுதுகளை களித்துக் கொண்டிருப்பீர்கள்.

Friday, May 12, 2017

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்


- லத்தீப் பாரூக் -

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி இருந்தேன். ஆனால் எதிர்ப்பார்த்தபடியே சமூகம் அதில் வித்தியாசமான கருத்துக்களையே கொண்டிருந்தது.

எவ்வாறாயினும் கொழும்பு டெலிகிராப்பில் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல என்ற ரீதியிலும் பருவம் அடைவதற்கு முன்பே திருமணத்தை அனுமதிக்கலாம் என்ற ரீதியிலும் கடந்த மாதம் உலமா சபையின் கூற்றுக்கள் வெளியாகியிருந்த நிலையில் உலமா சபையை உண்மையான கல்விமான்களைக் கொண்டு புருணப்படுத்தப்பட வேண்டும் என்ற பிரசாரம் தற்போது மேலோங்கத் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்;டத்துக்கான திருத்தங்கள் பற்றி உலமா சபை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் மரபு ரீதியான சில குழுக்களுக்கும் சமர்ப்பித்துள்ள யோசனைகளின் படி “ஒரு பெண் குவாஸி (நீதிபதி) நியமிக்கப்படுவதற்கு தகுதி அற்றவர்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதற்கு முஸ்லிம் புத்தி ஜீவிகளும் சிவில் சமூகத்தவர்களும் உடனடியாக பதில் அளித்துள்ளனர்.
அடிப்படை உரிமைகளை முடக்குவதற்கு பாரம்பரிய மரபுகளை காரணம் காட்டும் சமயத் தலைவர்களை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை திருத்தக் கூடியவர்களாக நம்ப முடியாது என்று மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு (றுயுN) தெரிவித்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல என்பதை அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என றுயுN வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறேனும் றுயுN இன் கரிசனையானது முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் அடிப்படை உரிமைகளோடு ஒத்துப் போகவில்லை என்பதே. இருந்தாலும் அவர்கள் அதில் உள்ள குறைகளைக் குறிப்பிடவில்லை. அது இஸ்லாத்துக்கு எதிரானதாகக் கூட இருக்கலாம்.
உலமா சபையின் கூற்று அது மறுசீராக்கம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமை என்பன ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நலன்களையும் பேணும் ஒரு அமைப்பாக உலமா சபை தன்னை உரிமை கோர முடியாது என்பதையே தெளிவாக்கியுள்ளது. சட்ட ரீதியான மறுசீரமைப்புக்களில் உலமா சபையின் மிகத் தீவிரமானதும் விடாப்பிடியானதுமான நிலைப்பாடானது அவர்கள் தமது நிலைப்பாடுகளில் எந்தளவு மந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. தமது சொந்த சமூகத்தின் நம்பிக்கைகளையும் அபிமானத்தையும் வெல்ல முடியாதவர்கள் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக பணியாற்றும் ஒரு குழுவில் இருந்து நீக்கப்படவேண்டியவர்கள் என்பதே றுயுN இன் நிலைப்பாடாகும்.

முஸ்லிம் தனியார் சட்ட மீளாய்வு பற்றி ஆராயும் குழுவின் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் இந்த விடயத்தில் உலமா சபையின் நிலைப்பாடு பற்றி குறிப்பிடுகையில் உலமா சபை மக்கள் அதன் மீது கொண்டிருந்த நல்ல நம்பிக்கைக்கு மாறாக செயற்பட்டு விட்டனர். இந்தக் குழுவின் செயற்பாடுகளை முடக்குவதற்கு அவர்கள் தமது எல்லா வளங்களையும் பயன்படுத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மீது உலமா சபை கடும் தாக்கத்தைக் கொண்டிருந்தது. 2009ல் நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் பற்றி மீளாய்வு செய்யும் குழுவில் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தியும் முபாரக் மௌலவியும் உறுப்பினர்களாக உள்ளனர்.

சில தகவல்களின் படி உலமா சபை பிரதிநிதிகள் குழுவொன்று சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துள்ளது. இது சம்பந்தமான குழுவின் இரகசியப் பார்வைக்கும் மீளாய்வுக்குமாக என்னால் தயாரிக்கப்பட்ட ஆவணம் உட்பட பல ஆவணங்களை அவர்கள் கையளித்துள்ளனர். இது பற்றி பேஸ்புக் வழியாகவும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதில் பிரதம நீதியரசராகக் கூட கடமையாற்றிய அனுபவம் உள்ள சட்ட மேதையான முன்னாள உச்ச நீதிமன்ற நீதியரசர் உலமா சபை தனது குழுவின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் எந்தவொரு திருத்தங்களும் கொண்டு வரப்படுவதை ஆட்சேபிக்கும் வகையில் ஜும்ஆ பிரசாரங்களும் கையெழுத்து பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது இறைவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற சட்டம் என்ற ரீதியில் தான் இந்த எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் எனது குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் ஒரு வகை அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லாஹ், பேராசிரியர் எம்.ஏ.எம்.சித்தீக், எம்.எம்.நியாஸ், பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனீஸ், ஜே.முபாரக், டொக்டர்.எம்.இஸட்.எம்.நபீல், டொக்டர். ஏ.எஸ்.எம். நவ்பல், டொக்டர்.ஏ.எல்.எம். மஹ்றூப், ஜே.எம்.நிவாஸ், யூ.எம்.பாஸில் ஆகியோர் இணைந்து இது தொடர்பான ஒரு அறிக்கையில் ஒப்பமிட்டுள்ளனர். முஸ்லிம் பெண்களின் சமூக அந்தஸ்த்தை மேம்படுத்தவும், முஸ்லிம் சமூகத்தின் அபிவிருத்திக்கும் இந்த விடயத்தில் முக்கியமான மாற்றங்கள் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல்கள் பற்றி சட்டத்தரணி. கலாநிதி றீஸா ஹமீட் குறிப்பிடுகையில் ‘தற்போதுள்ள முஸ்லிம் குடும்பச் சட்டத்தில் எந்தவித மாற்றங்களைச் செய்யவும் உலமா சபை எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. இந்தச் சட்டம் அதன் தற்போதைய வடிவிலே மிகவும் சரியாக இருக்கின்றது அதற்கு எந்த மாற்றங்களும் தேவையில்லை என்று றிஸ்வி முப்தி பிரகடனம் செய்துள்ளார். துரதிஷ்டவசமாக உலமா சபை தலைவரின் இந்தக் கூற்றுக்கள் வருந்தத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான சட்டங்கள் என்பன பிரத்தியேகமாக உலமா சபை மட்டுமே கரிசணை கொண்ட ஒரு விடயமாக இருக்கக் கூடாது. இந்தக் கட்டுரையில் இது தொடர்பான சில விடயங்களை நான் தொட்டுள்ளேன். திருமணத்துக்கான ஆகக் குறைந்த வயது. பலதார மணம், பால் சமத்துவம் என்பன அதில் சில. மறுசீரமைப்பின் தேவை குறித்த கலந்துரையாடல்களுக்கு இது பங்களிப்புச் செய்யும் என எண்ணுகிறேன்.
உலமா சபையை இஸ்லாமிய அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்ற ரீதியில் பர்வீஸ் இமாமுத்தீன் குறிப்பிடுகையில் உலமா சபையின் கூற்றானது அதன் முன்னைய நிலைப்பாட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர்கள் இன்னமும் தாங்கள் சரி என்றே நினைக்கின்றனர். ஆம் அவர்கள் தான் உலமா சபை. அவர்கள் தான் கல்வி மான்களின் கூட்டம். தங்களது தலைவரைக் காப்பாற்ற சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவே தவிர வேறு எதுவும் இல்லை.

முஸ்லிம் தனியார் சட்டத்தை உருவாக்கிய எமது முன்னோடிகள் அதை மிகவும் சரியான ஒன்றாக ஆக்குவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளனர் என்பதே அவர்களின் நிலைப்பாடாகும். அன்றைய காலப்பகுதியை பொருத்தமட்டில் அது மிகச் சரியானதாகவே இருக்கலாம். அவை இன்று மறுசீரமைக்கப்படக் கூடாது அல்லது அவ்வாறான தேவை அற்றது என்பதோ இதன் அர்த்தம் அல்ல. குறிப்பாக குவாஸி நீதிமன்ற நிர்வாக முறைகளில்.

உலமா சபையின் தற்போதைய தலைவர் றிஸ்வி முப்தி. இஸ்லாமிய அறிவைப் பொறுத்தமட்டில் நாட்டில் இவர்தான் மிகவும் உயர் தரத்தில் உள்ள அதிகாரம் மிக்கவராகக் கருதப்படுகின்றார். நாட்டில் உள்ள மிகச் சிறந்த புத்திஜீவிகள் சிலர் கூட அவரை சவால் விடுக்க முடியாத ஒருவராகத் தான் கருதுகின்றனர். ஆனால் முக்கியமான கேள்வி இப்போதுதான்; எழுப்பப்பட்டுள்ளது. உலமா சபையினதும் றிஸ்வி முப்தியினதும் நம்பகத் தன்மை என்ன? என்பதுதான் அந்த கேள்வி. அறிவுஜீவி என்பதற்கு இஸ்லாமிய வகைப்படுத்தல் என்ன? உலமா சபை உறுப்பினர்கள் அந்த வகைப்படுத்தலின் கீழ் வருகின்றனரா? அவர்கள் உண்மையிலேயே புத்தி ஜீவிகளா? ஒரு பிரிவின் சட்டம் இயற்றும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள அவர்களுக்கு சட்டம் தொடர்பாக இருக்கின்ற அறிவும் தெளிவும் என்ன? பெண் புத்தி ஜீவிகளை ஏற்றுக் கொள்ளவோ அவர்களுக்கு இடமளிக்கவோ மறுக்கின்ற ஒரு அறிவுசார் அமைப்பை சமத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாக எப்படி நம்ப முடியும்?

தவறான கரங்களில் அதிகாரம் இருப்பது ஆபத்தானதும் அழிவை ஏற்படுத்தக் கூடியதும் ஆகும். உலமா சபையின் கூற்றானது அவர்களின் விடாப்பிடித்தனத்தின் தெளிவான வெளிப்பாடன்றி வேறில்லை. அறிவும் விழுமியமும் குறைவாகக் காணப்படும் இவர்கள் ஒரு சமூகத்தின் பொறுப்பைச் சுமக்கத் தகுதி உடையவர்களா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

இஸ்லாமிய விஞ்ஞானத்தில் புலமை மிக்கவர்களாக தம்மை தாமே உரிமைக் கோரிக் கொள்ளும் ஒரு தனிநபர்கள் கூட்டத்தைக் கொண்டதே உலமா சபை. சட்டம் இயற்றுவதற்கு தேவையான அடிப்படைத் தகைமை இவர்களிடம் குறைவாக உள்ளதையே நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது. இஸ்லாமிய நீதித்துறையில் பொது நலன் என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த அடிப்படை தகைமை இல்லாமல் இருந்தால் அவர்கள் எப்படி சட்டங்கள் பற்றி ஆராய முடியும். ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உரிமையை எப்படி இத்தகையவர்களிடம் வழங்க முடியும்?.

எவ்வாறேனும் இந்த நிலைமைக்கு உலமா சபையை மட்டும் குறை கூறவும் முடியாது. இந்தப் பாரதூரமான நிலைமை ஏற்படுகின்ற வரைக்கும் முஸ்லிம் புத்திஜீவிகள் சமூகம் அதில் மிதவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்பவர்கள் கூட மிகவும் மௌனமாகவே இருந்துள்ளனர். இஸ்லாத்தை உலமா சபை எவ்வாறு தவறாக பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். அவர்களின் பிடிவாதம் அறிவீனம் என்பனவற்றை அறிந்திருந்தும் கூட அதை புத்திஜீவிகள் பொருட்படுத்தவில்லை. உலமா சபையை விமர்சிப்பதில் இருந்து அவர்கள் தவிர்ந்தே வந்துள்ளனர். உலமா சபையின் பொறுப்பற்ற போக்கை புத்திஜீவி சமூகம் கண்டு கொள்ளவில்லை. ஒரு மாற்றுக் குழு பற்றியோ ஏற்பாடுகள் பற்றியோ அவர்கள் யோசிக்கவில்லை.

உண்மையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா என்பது உண்மையான உலமா சபை அல்ல உண்மையான புத்திஜீவிகள் கூட்டம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. இஸ்லாமிய சட்டத்துறை பற்றி அடிப்படை அறிவில்லாத ஒரு கூட்டம் தான் இந்த நாட்டு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

மாற்றங்கள் தேவைப்படுகின்றவர்கள் அதற்காக குரல் கொடுக்கும் வரை மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. அறிவீனர்கள் அறிவீனர்களாகவே இருக்கலாம் அதற்கான காரணங்களும் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் புத்திஜீவிகள் அவ்வாறு இருக்க வேண்டும் என்றோ அல்லது மௌனம் காக்க வேண்டும் என்றோ தேவையில்லை.

றிஸ்வி முப்தி உலமா சபையின் தலைவராக கடந்த 17 வருடங்களாக பதவியில் உள்ளார். கேள்விக்குரிய சூழ்நிலைகளின் கீழ் தான் இவர் தெரிவு செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தப் பதவிக்காலப் பகுதியில் உலமா சபை ஒரு தனி மனித காட்சி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து கேள்வி கேட்க அங்கு எவரும் இல்லை.
உலமா சபையை அவர் அரசியலுக்குள் இழுத்துச் சென்றதாகக் கூட குற்றச்சாட்டுக்கள் உள்ளன. வர்த்தகர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள்இ தலைமை பதவியை பயன்படுத்தி சொத்துக்களை சம்பாதித்துள்ளமைஇ ஏனைய உலமாக்களுக்கு போதிய சுதந்திரம் இன்மைஇ அடிக்கடி வெளிநாட்டு பயணம்இ பொது மக்களுக்கு தொடர்பற்ற நிலைமைஇ கொழும்பில் உள்ள வெளிநாட்டு நிலையங்களுடனான தொடர்புஇ நபி முஹம்மத் (ஸல்) உலக முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற இஸ்லாத்துக்காக அன்றி பெற்றோல் டொலர் இஸ்லாத்துக்காகப் பணியாற்றல் என இன்னும் பல குற்றச்சாட்டக்கள் இவருக்கு எதிராக உள்ளன.

இந்த ஆரோக்கியமற்ற நிலை காரணமாக கௌரவத்துக்குரிய அங்கீகாரம் பெற்ற புத்திஜீவிகளைக் கொண்ட புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையை சிலர் முன்வைக்க வேண்டிய நிலை உருவாயிற்று. உதாரணத்துக்கு பிஸ்தான் பாச்சா என்ற பத்திரிகை எழுத்தாளர் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

'உலமா சபையில் களையெடுப்பு நடத்தப்பட வேண்டும். புரட்சிகர மாற்றங்கள் அங்கு அவசியமாகின்றன. புதிய சூழ்நிலைகளோடு பொருந்திப் போகக் கூடிய மார்க்கத் தீர்ப்புக்களை வழங்கக் கூடிய ஒரு பிரிவாக மக்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் மூன்றாம் மில்லேனியத்தில் அல்லது அடுத்த நூற்றாண்டில் மார்க்கத் தீர்ப்புக்களை வழங்கக் கூடிய மக்களை சரியாக வழிநடத்தக் கூடிய இஸ்லாமிய புத்திஜீவிகளைக் கொண்ட சமாந்திரமான ஒரு மாற்று அமைப்பை உருவாக்கவேண்டியதன் அவசியம் அதற்கான காலப்பகுதி என்பன பற்றியும் சமூகம் சிந்திக்க வேண்டும். உலமா சபையின் தற்போதைய கடப்பாடுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டும் என்ற தேவை முஸ்லிம் சமூகத்துக்கு கிடையாது.
முஸ்லிம் சமூகம் இன்று அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பா யூத சக்திகள் இந்திய புலனாய்வு பிரிவு என பல முஸ்லிம் விரோத சக்திகள் அவற்றின் பிரத்தியேகமான நிகழ்ச்சி நிரலுடன் நாட்டில் உள்ளன.

முஸ்லிம்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசு இவர்களுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களோடு கைகோர்த்து செயற்படுகின்றன. இந்த சக்திகள் சிங்கள இனவாத சக்திகளை தூண்டி விடுகின்றன. இந்த இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்குகின்றன. அரசாங்கமோ அவர்களை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டு இருக்கின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊழலுக்கு விலைபோனவர்களாக உள்ளனர். சிவில் சமூகம் அமைப்பு முறையில் இருந்து விலகிக் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலில் பண்டைய சிந்தனைகளோடு தமக்குத் தேவையானவர்களுக்கு சேவகம் புரியும் ஒரு உலமா சபை இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.

எனவே இன்றைய தேவை வெள்ளிக்கிழமை குத்பா பிரசாரங்களையும் ஏனைய போதனைகளையும் சிறந்த முறையில் மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்தை சரியான பாதையில் வழி நடத்தக்கூடிய புத்தி ஜீவிகளைக் கொண்ட ஒரு குழுவே ஆகும்.

Latheef Farook
Email: almfarook19@gmail.com

Tuesday, April 18, 2017

அனல் ஹக்!புதிய தலைமுறையில் அநேகருக்கு அறிமுகமற்ற, பழைய தலைமுறையில் பெரும்பகுதியினர் தெரிந்து வைத்திருந்த, ஆனால் பேச விரும்பாத விடயத்தோடு சம்பந்தப்பட்ட பெயர்தான் மன்ஸூர் அல் ஹல்லாஜ்.

இறைவிசுவாசம் உள்ள எந்த ஒரு முஸ்லிமும் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு வார்த்தையை அவர் மொழிந்தார் என்பதே அதற்கான காரணம். அவர் சொன்னார்...

 'அனல் ஹக்! - நானே இறைவன்!'

'அனல் ஹக்' என்ற தலைப்பில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய சிறுகதையை அண்மையில் படித்தேன். அதாவது மன்ஸூர் அல் ஹல்லாஜ் பற்றியும் அவர மொழிந்த வார்த்தையால் ஏற்பட்ட குழப்பங்களையும் அவருக்கு நேர்ந்த அவலத்தையும் கதையாக எழுதியிருக்கிறார் பஷீர்.

'ஹிஜ்ராவுக்குப் பிந்தைய நான்காம் நூற்றாண்டின் தொடக்கம். ஞானிகளும் கவிஞர்களும் கலைஞர்களும் சர்வாதிகாரிகளின் முன் தலைகுனிந்து நின்றிருந்தனர், வெறும் ஸ்துதிப் பாடகர்களாக! பாரசீக தேசம் திராட்சை மதுவின் இனிமையிலும் பன்னீர்ப் பூக்களின் அழகிலும் அழகிகளின் ஆலிங்கனத்திலும் மூழ்கிக் கிடந்தது. அப்போதுதான் மன்ஸூர் ஹல்லாஜ் வருகிறார். ................ அண்மை நகரமான துஷ்தாரின் பெரிய பாடசாலையில் சேர்ந்தார். ஆன்மீகம், சமூகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற புலமை பெற்றார். பண்டிதராக வெளிவந்த மன்ஸூருக்குள் போதாமைகள் இருந்தன. ...........அவர் இருளில் தவிப்பதாக உணர்ந்தார். .....ஃபக்கீராக அலைந்தார். இறுதியில் உமர் இப்னு உஸ்மானைச் சந்தித்தார். ...சற்கரு ஒரு புதிய பாதையைக் காட்டினார். சூபிஸம்!'

'ஆன்மீக அறிவின் ஒளி மிகுந்த மேன்மை. அதில் அவர் ஆழ்ந்து இறங்கினார். யுகங்களின் ஆர்வத்துடனும் கொடுங்காற்றின் வேகத்துடனும் பௌதீக எல்லையைக் கடந்தார். அழிவற்றதும் நிரந்தரமானதுமான பேரொளியில் சிறு மேகப்படலம் போல் மயக்கத்தில் ஆழ்ந்தார். தியான வயப்பட்ட நிலையில் மன்ஸூர் அறிவித்தார்... 'அனல் ஹக்!''

மன்ஸூரின் வார்த்தையில் அங்கிருந்த குருவும் சீடர்களும் அதிர்ந்து போயினர். குரு உபதேசித்தார்:- 'மன்ஸூர் சிருஷ்டித்தவனையும் சிருஷ்டியையும் ஒன்றாகப் பார்ப்பது மாபெரும் தவறு. இது சமூகச் சட்டங்களுக்கு எதிரான பார்வை. 'ஷரீஅத்'தை மீறினால் மரண தண்டனை கிடைக்கும் என்பதை அறிவீர்கள்தானே?'

ஆனால் மன்ஸூர் அடங்க மறுத்தார். அந்த நிலையத்தை விட்டு வெளியேறினார். மக்கள் அவரை ஒரு பைத்தியக்காரன் என்றனர். கல்லெடுத்து எறிந்தனர். மீண்டும் இருக்க இடம் தேடி அலைய ஆரம்பித்தார். எங்கும் இடம் கிடைக்காத நிலையில் பக்தாதை வந்தடைந்தார். புகழ்பெற்ற சூபி ஞானி ஹஸ்ரத் ஜூனைத் நிபந்தனையுடன் அவருக்கு அபயமளித்தார். எனினும் அது நீடிக்கவில்லை. அங்கிருந்த மாணவர்களுடன் மன்ஸூர் விவாதிக்கவும் ஆவேசப்படவும் செய்தார். முடியாத நிலையில் ஹஸ்ரத் ஜூனைத் அவருக்கு எச்சரிக்கை செய்தார்.

'மன்ஸூர், கவனம் தேவை. ஆபத்தான நாளொன்று உம்மை அண்மித்துக் கொண்டிருக்கிறது. சூடான உமது நிணநீர் யூப்ரதீஸ் நதிக்கரையின் வெண்மணலைச் சிவப்பாக்கும். அந்தத் தினத்தின் மீதும் உமது கவனம் பதியட்டும்!'

ஹஸ்ரத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்த மன்ஸூர் அங்கிருந்து வெளியேறினார். பொது இடங்களில் ஆவேசமாக முழங்கினார். அறிஞர் பெருமக்கள் அவரது உரைகளால் பதட்டமடைந்தனர். அரசின் வலை அவருக்கு நெருக்கமாகிக் கொண்டே வந்தது. அடுத்த ஐந்து வருட காலத்தில் அவர் 47 நூல்களை எழுதித் தள்ளினார். அரசு அவற்றைத் தடைசெய்து அவரது பெயரைப் பரவலாக்கிற்று. மன்ஸூரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டது. அறிஞர்கள் அவரோடு சமரசஞ்செய்து அவரை ஆற்றுப் படுத்த நாடினர். அவரோ விவாதத்துக்கு வருமாறு கொக்கரித்தார். அவ்வாறான ஒரு வாத சபையில், 'என்னுடைய சிந்தனைகள் யாருடைய கட்டளைக்கும் அடிபணியாது' என்று முழங்கினார்.

பத்வா தயாரானது. மரண தண்டனைக்குரிய குற்றவாளிக்கான தீர்ப்பு எழுதப்பட்டது. ஆயிரக் கணக்கான ஆலிம்கள் அதில் கையெழுத்திட்டனர். ஆனால் சுல்தான் முக்ததிர் பில்லா கையெழுத்து வைக்க மறுத்தார். ஹஸ்ரத் ஜூனைத்தின் கையெழுத்துக்காக அவரது இருப்பிடத்துக்கு அறிஞர் கூட்டம் ஆறுமுறை சென்று திரும்பியது. கடைசியில் சூபி ஞானியின் ஆடை அணிகலன்களைக் களைந்து விட்டு நீதிவான் ஆடையுடன் கையெழுத்திட்ட போதும் தனது முத்திரையைப் பதிக்க மறுத்தார்.

1946ம் ஆண்டு இந்தச் சரிதத்தை வைக்கம் முகம்மது பஷீர் கதையாக எழுதியிருந்தார். 'அனல் ஹக்' என்றும் 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' என்றும் இறைவனின் அநேக படைப்புக்களில் ஒன்றான மனிதன் சொல்வது தவறு என்பது எனது கருத்தாகும் என்று கதையின் பின் குறிப்பில் பஷீர் தெரிவித்திருக்கிறார். மன்ஸூரின் வரலாறாக ஒரு கதையை எழுதியிருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்த போதும் தகவல்களைக் கொண்டே இக்கதையைப் பின்னியிருக்கிறார்.

கதையின் இறுதிப் பகுதி பயங்கரமாகச் சித்தரிக்கப்படுகிறது.  அவர் தூக்கிலிடப்பட்டடபின் என்ன நடந்தது என்பதை ஐதீகம் சொல்கிறது என்று பின்வருமாறு பஷீர் எழுதிச் செல்கிறார்:-

'அவர்கள் ஆயிரமாயிரம் துண்டங்களாக மன்ஸூரை வெட்டினார்கள். ஒரு பெரிய சிதை மூட்டி, துண்டுகளைக் கூட்டி அதிலிட்டு தீ மூட்டினார்கள். தீயின் ஜூவாலையைப் பார்த்து அவர்கள் அட்டகாசமாகக் குரலெழுப்பினார்கள். இறுதியில் அந்தச் சாம்பலை நதியில் கரைத்தார்கள். இப்படியாக அவர்களது பெருங்கோபம் அடங்கியது.

ஆனால்..

அதுவரை அமைதியாகத் தவழ்ந்து கொண்டிருந்த யூப்பிரதீஸ் நதி திடீரெனக் கலங்கிப் புரண்டு இரத்த நிறமானது. இயற்கை நிச்சலனமானது. அப்போது ஹூங்காரத்துடன் மலைபோல் உயர்ந்த நதியலைகள் ஆர்ப்பரித்தன. கோபத்தில் கொந்தளித்த மகா சமுத்திரமாக, அண்ட சராசரங்களையும் நடுங்க வைப்பது போல்  உக்கிரத்துடன் கன கம்பீரமாக இரைந்தது யூப்பிதீஸ் நதி...

'அனல் ஹக்!............ அனல் ஹக்!!'

மன்ஸூர் அல் ஹல்லாஜ் தன்னை இறைவன் என்று பகிரங்கமாகச் சொல்லிச் சென்று விட்டார். அதற்குரிய தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டாயிற்று.

ஆனால் அல்லாஹ்வின் இடத்தில் நின்று 'அனல் ஹக்' என்ற எண்ணத்துடன் தீர்ப்பு வழங்கும் மன்ஸூர்களின் மறு பதிப்புக்கள் இன்னும் என் கண்கள் முன்னால் இருப்பதை நான் கண்டு கொண்டிருப்பதும் அவர்கள் பேசுவதை எனது காதுகளால் நான் கேட்டுக் கொண்டிருப்பதும் பிரமையா உண்மையா என்று பிரித்தறிய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

Sunday, April 2, 2017

“தீராநதி” சஞ்சிகையில் எனது நேர்காணல்!(மார்ச் 2017 - தீராநதி சஞ்சிகையில் வெளிவந்த  நேர்காணல். நேர்கண்டவர் பவுத்த ஐயனார்)

** எழுத்துலகிற்கு வரக் கூடிய சூழல் உங்களுக்கு எப்படி உருவானது? உங்களின் குடும்பப் பின்னணி பற்றியும் சொல்லுங்கள்.

என்னுடைய தாய்வழிப் பாட்டனார் ஒரு புலவர். அவரது பெயர் அப்துஸ்ஸமது ஆலிம். அவர் சில குறுங்காவியங்களைப் பாடியிருக்கிறார். தவிர புத்தக வியாபாரியாகவும் இருந்துள்ளார். பெரும்பாலும் அவை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள். சிறுவனாக இருந்த போதே இவற்றைச் சத்தமாக வாசிக்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையும் பாட்டனார் தரும் நூலைச் சத்தமாக வாசிப்பேன். அவர் இரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் எனக்கு 25 சதம் அன்பளிப்பாகத் தருவார். அன்றைய நிலையில் ஒரு இறாத்தல் சீனியின் விலை 18 சதங்கள். எனக்குத் தரப்பட்ட பணத்தை நான் ஓர் உண்டியலில் சேமித்து வந்தேன்.

அதேவேளை எனது தாய்மாமன்கள் இருவர் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களும் நல்ல வாசகர்கள்.  அவர்கள் வாசிக்கும் எல்லா நூல்களையும் நானும் வாசிக்கத் தொடங்கினேன். இப்படியே ஆரம்பித்து ஊர் நூலகத்துள் நுழைந்தேன். அங்கே சமது என்ற சகோதரர் நூலகராயிருந்தார். அவர் நல்ல நூல்களைத் தெரிந்து எனக்கு வாசிக்கத் தருவார். இப்படி வளர்ந்த வாசிப்புத் தாகம் என்னை முதலில் கவிதையின்பால் உந்தியது.

**  நீங்கள் வானொலி, தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோது அங்கு இலக்கிய ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட முடிந்ததா?

அரச வானொலிதான் அந்நாட்களில் தனித்துவ ஊடகமாக இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பகுதிநேர அறிவிப்பாளனாக 1986 இறுதிப் பிரிவில் நான் இணைந்தேன். 1986க்கு முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சேவை - 1 அறிவூட்டல், கலை, இலக்கியம், வாழ்வியல், தொழிலியல் பற்றிய விடயங்களை உள்ளடக்கியும் சேவை - 2 சினிமாப் பாடல்களை மையப்படுத்திய விளம்பர சேவையாகவும் செயற்பட்டன. ஆயினும் கூட வர்த்தக சேவையில் பல்வேறு தமிழ்க் கலை, இலக்கியம் சார் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகியே வந்திருக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு நேயர் படையே இருந்து வந்திருக்கிறது. இலங்கை வானொலி தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியிருந்த பணி மகத்தானது. இருந்த போதும் இது குறித்த ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.

இது தவிர தினமும் ஒரு மணி நேரம் முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இதற்கென தனிச் சேவை ஒன்று இயங்கி வருகிறது. தமிழ்ச் சேவையில் தெரிவாகும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள் இந்த ஒரு மணி நேரத்தையும் இன்று வரை அலைவரிசையில் வழங்கி வருகிறார்கள். அதே போல கல்விச் சேவை என்றும் ஒரு சேவை உண்டு. இதில் ஒரு வருடம் நான் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமையாற்றியிருக்கிறேன்.

எல்லா சேவைகளிலும் பல்வேறு வகையான இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்திருக்கின்றன, வருகின்றன. அந்த நிகழ்ச்சிகள் சிலவற்றை தொகுத்தும் தயாரித்தும் அவற்றில் அதிகம் பங்கு கொண்டும் வந்திருக்கிறேன்.

வானொலி, தொலைக் காட்சிச் செய்தி வாசிப்பாளராக மட்டுமன்றி வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தும் வந்திருக்கிறேன்.

ளு இலங்கையின் இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதில் மூத்த படைப்பாளிகளில் பேராசிரியர். நுஃமான், சோலைக்கிளி அளவிற்குப் பரவலாக யாரும் தமிழகத்தில் தெரியவில்லையே?

அதற்குக் காரணம் நாங்கள் இல்லை. பேராசிரியர் நுஃமான், நோலைக்கிளி ஆகியோரின் நூல்கள் தமிழகத்தில்தாம் முதலில் வெளியாகின. பேராசிரியர் நுஃமான் அறியப்படுவதற்கு மற்றொரு காரணம் அவர் இலங்கையின் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் என்பதும் கூட. உங்களுக்கு இவர்கள் இருவரையும் தெரிகிறது. இன்னும் சிலருக்கு இவர்களைத் தெரியாமல் வேறு இருவரைத் தெரிந்திருக்கிறது. இன்னும் சிலர் பேஸ் புக் வந்த பிறகு அதில் கவிதை எழுதும் தமது நட்பு வட்டத்துள் இருக்கும் இலங்கை நபர்களை மாத்திரம் தெரிந்திருக்கிறது. பெண்கள் வட்டத்தில் முகநூல், இணையத் தளங்கள், தொலைபேசி ஆகியவற்றினூடாகச் சிலரைத் தெரிகிறது. இதில் துயரம் என்னவெனில் தமக்குத் தெரிந்தவர்கள் மாத்திரம்தான் இலங்கைக் கவிஞர்கள், இலங்கைத் தமிழ்க் கவிதையை வளர்த்தவர்கள் என்று அவரவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதுதான்.

இந்த நிலை தமிழ் முஸ்லிம் கவிஞர்களுக்கு மாத்திரம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. பொதுவாகத் தமிழ் மொழியில் எழுதும் பல நூறு படைப்பாளிகளுக்கும் தமிழகத்தைப் பொறுத்த வரை இந்தக் கதிதான். அவரலர் அறிமுக வட்டத்துக்குள் மாத்திரம் அவரவர் அறியப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இலங்கைப் படைப்பாளிகளுக்குள் தமிழக, இந்தியப் படைப்பாளிகளின் அறிமுக விகிதம் அதிகம். நானறிந்த காலத்திலிருந்து இந்திய எழுத்தாளர்களைத்தான் நாங்கள் அதிகம் படித்து வருகிறோம். அவர்களது நூல்களை இறக்குமதி செய்கிறோம், வாங்கிப் படிக்கிறோம். ஆனால் எங்களது நூல்களை நாங்களே கொண்டு வந்து உங்களைப் படிக்கச் சொல்ல வேண்டும் அல்லது அங்குள்ள ஒரு வெளியீட்டாளரிடம் கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும். இறக்குமதி செய்வதற்கும் அனுமதி இல்லை என்று அறிகிறேன்.

** அரபு இலக்கியங்கள மொழிபெயர்க்கும் ஆர்வம் எப்படி வந்தது?

அறபு இலக்கியம் என்றைக்குமே உயர்ந்த இலக்கியமாக இருந்து வந்திருக்கிறது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. முதன் முதலில் ஆங்கிலத்தில் ஈராக்கிய எழுத்தாளரான மஹ்மூத் சயீத் எழுதிய 'புகையிரதம்' என்ற கதையைப் படிக்கக் கிடைத்தது. அந்தக் கதை என்னைப் படாத பாடு படுத்தி விட்டது. ஆர்வம் மிகுதியால் அதை மொழிபெயர்ப்புச் செய்து சென்னையிலிருந்து வெளிவந்த 'சமநிலைச் சமுதாயம்' இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் கதை பிரசுரமாகியதும் யாரோ ஒரு நண்பர் அதை ஒரு குறும்படமாக எடுக்க அனுமதி கேட்டதாக சஞ்சிகை ஆசிரியர் ஜாபர் சாதிக் என்னிடம் தெரிவித்தார்.

அந்தக் கதையின் வீரியமும், கலை நயமும் என்னை வெகுவாகக் கவரவே மஹ்மூத் சயீத் பற்றித் தேடத் தொடங்கினேன். மேலும் அவரது மூன்று கதைகள் கிடைத்தன. அவற்றையும் மொழிபெயர்த்தேன். தொடர்தேடலில் கஸ்ஸான் கனபானியின் 'காஸாவிலிருந்து ஒரு கடிதம்', சூடானிய எழுத்தாளர் தையிப் ஸாலிஹ் அவர்களின் 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' ஆகிய முத்தான கதைகள் கிடைத்தன. மேலும் ஒமர் அல்கித்தி எழுதிய - லிபியத் தலைவர் கேர்ணல் கடாபியின் மறுபக்கத்தைக் காட்டும் 'நெடுநாள் சிறைவாசி என்கிற கதை.. இப்படியே எனது மொழிபெயர்ப்புத் தொடர்ந்த போது இவற்றை ஒரு தொகுதியாகப் போட்டு விடலாமே என்கிற எண்ணம் வந்தது.  எனவே பத்துக் கதைகளைத் தொகுத்து 'ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்' எனும் தலைப்பில் 2011ம் ஆண்டு வெளிக் கொணர்ந்தேன்.

2011ல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுதிக்கான தேசிய சாஹித்திய விருது இந்த நூலுக்கு 2012ல் வழங்கப்பட்டது.

Tuesday, March 28, 2017

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு 2016 - ஒரு தலைமையுரை


(2016 டிசம்பர் 11,12,13 ஆகிய திகதிகளில் கொழும்பில் இலங்கை மன்ற அரங்கில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாட்டின் 3ம் நாள் நிகழ்வுகளுக்குத் தலைமை வகித்து ஆற்றிய உரை!)

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நின்று நிலவுவதாக!

வரலாற்றுப் பதிவான இந்த நிகழ்வின் நிறைவு விழாவில் - உங்கள் முன் உரையாற்றும் வாய்ப்பைத் தந்த - அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்!

அதிலும் சிறப்பாக - இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளை முன்னெடுத்துச் சென்ற - தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளரும் தொழிலதிபரும் பத்திரிகையாளரும் - எழுத்தாளருமான மர்ஹூம் அல்ஹாஜ் ஏவி. எம். ஜாபர்தீன் அரங்குக்குத் - தலைமை வகிக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் - மிகப் பெரும் ஆத்ம திருப்திக்கு ஆளாகியிருக்கிறேன்.

கண்டங்களாக, தேசங்களாக, மாநிலங்களாக, இனங்களாக, மதங்களாக மனிதகுலம் பிரிந்து கிடப்பதற்கு - ஆயிரங் காரணங்கள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால் சேர்ந்தே வாழ வேண்டும் என்று - இறைவன் சில விதிகளை வகுத்தளித்திருக்கிறான். அதில் ஒன்றுதான் கலையும், இலக்கியமும்.

நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளமலே - மனிதர்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாகக் கலையும் இலக்கியமும் - அவை தோன்றிய காலம் முழுவதும் இயங்கி வருகிறது. நவீன தொழில் நுட்பம் நம்மை - வெகு அண்மையில் கொண்டு வந்து வைத்து விட்டது.

அண்மையில் மறைந்த புரட்சிக் கவிஞர் இன்குலாப்,-  'அரசுகள் சண்டையிட்டுக்கொள்ளும், மனிதர்கள் கைகுலுக்கிக் கொள்ள விரும்புவார்கள்' என்று - ஒரு முறை சொன்னார். வித்துவக் காய்ச்சலால் பீடித்துக் கிடந்தாலும், காலங்காலமாக - விமர்சனங்களுடாகச் சச்சரவு கொண்டு விலகி இருந்தாலும் - கலைஞர்களும் இலக்கியப் படைப்பாளிகளும் மனித நேயத்தைப் பாடுவதிலும் - உலகில் நீதி நிலைநாட்டப்படுவதற்கான குரலை எழுப்புவதிலும் - எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று உரத்துச் சொல்லும் - ஒரு புள்ளியிலே இணைந்து கொள்வார்கள். அதைத்தான் இந்த மாநாடும் - உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறது.இந்த மாநாட்டினதும் - இந்த மாநாட்டை நடத்தும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும்; பொதுச் செயலாளராக மட்டுமன்றி - ஓர் இலக்கியப் படைப்பாளியாகவும் சேர்ந்தே நான் பேச வேண்டியிருக்கிறது.

அறபுத் தீபகர்ப்பத்தில் இஸ்லாம் தோன்றிய பிறகு - மனித வழிகாட்டலுக்காக தேசங்கள் கடந்து - நற்செய்தியை ஏந்தி வந்தவர்கள் - ஒரு தொடர் இணைப்பைக் கொண்டிருந்தார்கள். இது ஓர் அஞ்சலோட்டம் போல அமைந்திருந்தது. தமக்குக் கிடைத்த செய்தியை - இறுதியாக மக்களுக்கு எடுத்தியம்பியவர்கள் - அந்தந்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் மொழியில் எடுத்துச் சொன்னார்கள்.

அக்காலத்தில் தொடர்பூடக வசதிகள் என்று எதுவும் கிடையாது. தொலைபேசி கிடையாது, இணையம் கிடையாது. பேஸ்புக் கிடையாது, வட்ஸ் அப், வைபர் எதுவும் கிடையாது. செய்தியைப் பெற்றுக் கொண்டவர்கள் - தம்மோடு வாழும் மக்களிடம் செய்தியை எடுத்துச் சொல்ல ஓர் அற்புதமான வழியைக் கையாண்டார்கள். அதுதான் கவிதையும் பாடலும்.

கவிதையும் பாடலும் மனித ஆத்மாவுடன் பின்னிப் பிணைந்தது என்ற இரகசியத்தைக் கண்டு பிடித்தவர்கள் அவர்கள்தாம். எனவேதான் அவர்கள் தமது செய்தியை - மக்கள் மனதில் பதிய வைக்க செய்யுள் வடிவத்தை - பாடல் வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

இதுதான் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட்டது. முன்னோரின் இந்த இலக்கிய வகையானது  - எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களோ - அங்கெல்லாம் - பாடப்பட்ட இடம், சூழல், வாழ்வு முறை, வாழ்ந்த காலம் ஆகியவற்றை - உறுதிபட நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இன்றும் கூட இந்த வடிவங்களின் நவீனப் படுத்தப்பட்ட முறைகளை - அவைதாம்; சரியான முறை - என்று கண்டு கொண்டவர்கள் அவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அறபு உலக அரசியலோடும் - ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை - மார்க்கமாகப் பின்பற்றி வருவோரும் இந்த வழியை நிராகரித்து நிற்கிறார்கள்.நமது முன்னோரது இலக்கியத்தைப் பற்றி செய்யித் ஹஸன் மௌலானாவும் அவருடைய நண்பர்களும் 1966ம் ஆண்டு - மருதமுனையில் எடுத்துச் சொன்னார்கள். பிறகு 1945ம் ஆண்டு சுவாமி விபுலானந்தர் இதை அல்லாமா உவைஸ் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். உவைஸ் அவர்களின் அயராத பணி விசாலமாகி - பல உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடைபெறவும் - முஸ்லிம்களின் கடந்த கால இலக்கியப் பதிவுகளின் ஆய்வுகள் தொடரவும் வழி செய்தது.

காலம் செல்லச் செல்லப் - பழைய இலக்கியங்களில் பெருமளவில் - ஆய்வும் பதிவும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் - ஒவ்வொரு மாநாட்டிலும் இடம்பெற்ற ஆய்வரங்கங்கள்- முஸ்லிம்களின் பின்னரான இலக்கியப் பதிவுகள் பற்றிப் - பேச ஆரம்பித்தன. கடந்த கால மாநாட்டு மலர்களும் ஆய்வரங்கக் கோவைகளும் - இவற்றுக்குச் சான்றாக இருக்கின்றன.இம்முறை எமது மாநாட்டில் தற்கால இலக்கியம் - முஸ்லிம்களின் வாழ்வியல் இலக்கியம் பற்றி மிகவும் கரிசனை கொண்டோம். அதற்குரிய ஆய்வரங்குத் தலைப்புக்களைத் தந்தோம். இணையத் தளங்கள் முதற்கொண்டு சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் எழுதி வருவது குறித்தெல்லாம் - தலைப்புக்கள் வழங்கியிருந்தோம். ஆயினும் இரண்டே இரண்டு கட்டுரைகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றோம்.
இது கவலைக்கிடமான ஒரு நிலை என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கவிதை என்ற பெயரில் அவ்வப்போது வசனங்கள் சிலவற்றை எழுதிவிட்டு - பாரதிக்கு நிகராகத் தம்மைக் கட்டமைத்துக் கொள்ளுகிற - எல்லா கௌரவங்களுக்கும் பாராட்டுக்களுக்கும் பாத்தியதை கொண்டவர்கள் - என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலான இளம் முஸ்லிம் படைப்பாளிகள் இன்று வாழ்ந்து வருகிறார்கள் - என்பதைத்தான் இந்த அவல நிலை - நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இருந்தும் கூட - இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஏறக்குறைய 500 பக்கங்களிலான மாநாட்டு மலர்;, ஆய்வுக் கோவை ஆகியன - நம்பிக்கை தருவனவாக அமைந்திருக்கின்றன. 100 வீதமும் மிகக் காத்திரமான படைப்புக்களை நாம் பதிப்பித்தோம் என்று - சொல்ல வரவில்லை. கவிதைக்கு அப்பால், கவிதை பற்றி, வாழ்வியல் பற்றி, கதைகள் பற்றி, இன்றைய மார்க்கப் போக்கும் இலக்கியப் புரிதலும் பற்றி, மற்றவரின் ஆளுமை பற்றியெல்லாம் எழுதப்பட்டவற்றில் ஓரளவு திருப்தி இருந்தது என்று கண்டால் நாம் அதைப் பதிப்புக்கு எடுத்துக் கொண்டோம்.


கொடுக்கப்பட்ட தலைப்புக்களில் எழுதக் கூடிய தகை சார்ந்த - ஆனால்  அசிரத்தையாக இருக்கின்றவர்களை விட -  புதிதாக எழுதிப் பழகுபவர்கள், எழுத வேண்டும் என்று முனைப்போடு - இந்த நிகழ்வில் பங்களிக்க வேண்டும் என்று எழுதியவர்கள் - எமக்கு மிக முக்கியமானவர்களாத் தெரிகிறார்கள்.

இது ஒரு குழுச் செயற்பாடு. தனிமனித நிகழ்ச்சிநிரல் அல்ல என்பதை - நான் இங்கு அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

இந்த மாநாடு பற்றி அறிவித்தல் விடுக்கப்பட்டு நாள் நெருங்கும் நிலையில் பல்வேறு இடைஞ்சல்கள் - கண்களுக்குப் புலப்படாதவாறு ஒரு சிலரால் ஏற்படுத்தப்பட்டன. அந்ந இடைஞ்சல் கரங்கள் - இலங்கையில் மட்டுமன்றி, தமிழகம், மலேஷியா வரை நீண்டிருந்தது. ஆயினும் எந்தப் பிரதிபலனையும் லாபத்தையும் எதிர்பாராமல் - மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி - அவற்றையெல்லாம் தாண்டிப் பயணித்தது.

1999ம் ஆண்டு சென்னை பிரசிடன்ட் ஹோட்டலில் துவங்கப்பட்ட இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமானது 2002ல் ஒரு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்தியது. 1970களில் பிறந்த இலக்கியத் தலைமுறைக்கு தமது வாழ்நாளில் காணக்கிடைத்த முதலாவது மாநாடு அது ஒன்றுதான். ஆனால் அந்த மாநாடு பற்றிய விமர்சனங்கள் அடங்க 4 மாதங்கள் எடுத்தன.

அந்த விமர்சனங்களை எழுதிய பத்திரிகை நிருபர்கள், இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்களால் 14 வருடங்களில் - ஒரு தேசிய இலக்கிய விழாவைத் தானும் - ஏன் தமது பிராந்தியத்தை உள்ளடக்கிய ஓர் இலக்கிய விழாவைத்தானும் நடத்த முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

14 வருடங்கள் கழிந்து சென்ற பிறகும் கூட ஓர் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தால் மாத்திரமே  முடிந்தது என்பதை - இந்த மாநாடு முடிந்ததும் விமர்சனம் எழுத நினைத்திருப்பவர்களுக்கு நான் ஞாபமூட்ட ஆசைப்படுகிறேன்.

மனிதர்களாகிய நாம் பூரணத்துவம் பெற்றவர்கள் அல்லர். பூரணத்துவம் என்பது இறைவனின் பண்பு. முழு நிறைவாக எல்லோரையும் திருப்திப்படுத்த - குறிப்பாக எழுத்துத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களைத் திருப்திப்படுத்த - எந்தவொரு அமைப்பாலும், எந்தவொரு நிறுவனத்தாலும் ஒரு போதும் முடியாது என்பதை உறுதியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.என் அன்புக்குரிய தமிழக, மலேஷிய, சிங்கப்பூர் தொப்பூழ்க் கொடி உறவுகளே,

நீங்கள் இந்த மாநாட்டுக்கு வழங்கிய பங்களிப்பை - நாங்கள் என்றென்றும் மனதில் பசுமையாக வைத்திருப்போம். இந்த நிகழ்வுகளும் - எங்கள் நினைவுகளும் உங்கள் மனதில் - பசுமையாக இருக்கட்டும்.

எங்கள் தேசம்தான் சிறியது. எங்கள் இதயங்கள் விசாலமானவை.

இந்த மாநாடு வெற்றியடைய எங்களுக்குப் பெரும் பலமாக இருந்த மாண்புமிகு அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், எம்.எஸ்.எம். அமீர் அலி ஆகியோருக்கு இந்த இடத்தில் பெரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இலங்கை முஸ்லிம் படைப்பாளிகளான நாங்கள் - ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள். காலத்துக்குக் காலம் - எங்களது அமைச்சர்களது பங்களிப்பு இப்படியான பதிவுகளை மேற்கொள்ளப் - பெரும் பக்கபலமாக அமைந்து வந்திருக்கிறது.

1979ல் நடந்த மாநாட்டுக்கு - முன்னாள்; சபாநாயகர் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் அவர்கள் பக்க பலமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு அல்ஹாஜ் ஏ.எச். எம் அஸ்வர் அவர்கள் - நூற்றுக் கணக்கான படைப்பாளிகளுக்கு - விருதும் பணமுடிப்பும் வழங்கி சரித்திரம் படைத்தார். பின்னால் 2002ம் ஆண்டு மாநாட்டுக்குப் பின்னணியில் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இருந்தார். 14 வருடங்களுக்குபி பின்னர் - அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அமைச்சர் அமீர் அலியும் உந்து சக்தியாகியிருக்கிறார்கள்.

இந்த முயற்சியில் - என்னுடன் நிர்வாக ஏற்பாடுகளில் - அரசு தொடர்புகளில் - கண்ணுக்குத் தோன்றாத பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள். சகோதரர்கள் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ், சுஐப் எம். காஸிம், நளீம், எஸ்.எம். தௌபீக், முகம்மது ரிஸ்மின், முகம்மது ரிபான், ஷெய்க் ஹியாஸ் நளீமி, திருமதி துஷ்யந்தி உட்பட்ட அமைச்சர்களின் ஆளணிக்கு நாங்கள் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.சிங்கப்பூரில் எமக்குரிய ஏற்பாடுகளைச் செய்துதந்த அண்ணன் முஸ்தபா, ஷாநவாஸ், நஸீர் அகமட், மலேஷியாவில் எந்தக் குறைவும் இல்லாமல் கவனித்துக்கொண்ட ஹாஜி ஏவி.எம் ஜாபர்தீன் அவர்களின் புதல்வர்களான ராஸிக் பரீட், காஸிம் பரீட் ஆகியோருக்கும் அந்த ஏற்பாடுகளைச் செய்து தந்த எழுத்தாளர் சடையன் அமானுல்லாஹ்வுக்கும் எமது நன்றிகள்.

பொன்விழா ஆண்டைக் கண்டு பிடித்த டாக்டர் தாஸிம் அகமது - இதை ஒரு சர்வதேச மாநாடாக மாற்ற நகர்வுகளை மேற்கொண்ட நண்பர் நாச்சியாதீவு பர்வீன் - அழகிய மலரையும் ஆய்வரங்குக் கோவையையும் முழுமை பெற - இரவு பகல் பாராதுழைத்த கவிஞர் அல் அஸூமத் ஆகியோருக்கும் - ஒவ்வொருவரும் அவ்வப்போது எடுத்த தற்றுணிவு முடிவுகளை பொதுவான முடிவுகளாக அங்கீகரித்த இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத் தலைமை முதல் - இறுதி நிர்வாக உறுப்பினர் வரை நன்றிக்கு உரியவர்களாவர்.

அடுத்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இலங்கையில் எப்போது நடைபெறும் என்றோ எப்படி நடைபெறும் என்றோ யார் நடாத்துவார்கள் என்றோ என்னால் சொல்ல முடியாது. யார் நடத்துவதாக இருந்த போதும் அர்ப்பணிப்பும், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் வைத்திருப்போரால் அதைச் சாதிக்க முடியாது என்பதை மட்டும் இங்கு அழுத்திக் குறிப்பிட விரும்புகிறேன். அப்படியான ஒரு இளைஞர் படை முன்வரும் போது மட்டுமே அது சாத்தியப்படும். அவ்வாறு முன்வரும் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1999ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கிய - பேராசிரியர் சேமுமு. முகமதலி அவர்களின் கண்களில் நான் படித்த அசதியையும் ஆயாசத்தையும் - 2002 முதல் 2016 வரை உள்ள காலப்பகுதியில் - நான் மூன்று முறை அனுவித்த போதும் -

அந்த அசதியும் ஆயாசமும் - கிழக்குலக முஸ்லிம்களை நோக்கி - சேர் அல்லாமா இக்பால்;  எழுதிய - ஒர் அழகிய கவிதையைப் படிப்பது போல உணர்கிறேன்.