Tuesday, July 14, 2015

நோன்புக் குழந்தைகள்!


 - 23 -

எனது மகளின் பிறந்த தினம் இம்முறை ரமளானுக்குள் வந்தது.

ரமளானுக்குள் வந்திருக்கா விட்டாலும் கூட ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. வீட்டிலே சமைக்கப்படும் விசேட உணவோடு அல்லது அன்றைய இரவு ஒரு மத்திய தர உணவுச்சாலை உணவுடன் அது முடிந்து விடும். இம்முறை எனது மகள் இரண்டு நண்பிகளை அன்றைய தினம் இஃப்தாருக்கு அழைத்திருந்தாள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது உறவுகளான சிறு பெண் பிள்ளையுடன் வந்திருந்தார்கள்.

அப் பெண்பிள்ளைகளுள் ஒருத்திக்கு வயது பத்து. மற்றையவளுக்கு வயது ஐந்து. இருவரும் நோன்பு நோற்றிருந்தார்கள். இரண்டும் நடைபாதையில் காலுக்குள் அகப்பட்டு விட்டால் நசுங்கி விடும் ரகம். பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் முகங்கள், உலர்ந்து போயிருந்த போதும் கூட. கட்டைக் கவுண் உடுத்தி தலையில் அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஸ்கார்ஃப் அணிந்திருந்தார்கள்.

அழகான பூக்களைப் பார்க்கும் பரவசத்துடனும் நெகிழ்ந்து உருகியபடி பதைபதைக்கும் நெஞ்சுடனும் அவர்கள் இருவரையும் கொஞ்ச நேரம் உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

தென்னிலங்கையின் கால நிலை இம்முறை பரவாயில்லை. அடிக்கடி மழை பெய்கிறது. கர்ணகடூர வெய்யில் சென்று விட்டது. ஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெய்யில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கச்சான் வெப்பக் காற்று வேறு வீசி உடலில் உள்ள நீர்த்தன்மையை உறிஞ்சி இழுத்துச் செல்லும் நிலையில் அந்தப் பகுதிகளில் நோன்பு நோற்க வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுகளைப் பற்றி எனது சிந்தனை நகர்ந்தது.

பிஞ்சுக் குழந்தைகளுக்கு மதிய உணவும் தேநீரும் கொடுப்பது சிரமம் என்பதற்காக எந்தப் பெற்றோரும் அவர்களை நோன்பு நோற்க நிர்ப்பந்திப்பதில்லை. மார்க்கக் கடமை, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை வேண்டிச் செய்யப்படும் கடமை என்பதால் அதைப் பழக்கப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் நோன்பு நோர்க்க வைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 30 வீதமான முஸ்லிம் குடும்பங்களின் வறுமை பிள்ளைகள், குஞ்சு குருமான்களை நோன்பு நோர்க்கத் தள்ளி விடுகிறது என்பது பேச விரும்பாத விடயமாக இருந்த போதும் உண்மை என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

'ஓடி... எங்கட ரிஸானா நோம்பு புடிக்கோணுமென்டு சவருக்கெழும்பி சண்டையல்லியா.. இனிப் புடிக்க விட்டய்தான்...' என்று உம்மாமார் நண்பிகளுடன் பேசிக் கொள்ளவும் 'அவருக்கு நாலு வயசுதான் ஆஜி.. நோம்பு புடிக்கிறான்டு கேட்டன்.. ஓன்டாரு.. சரி பிடிங்கன்னு உட்டுட்டன்..' என்று தந்தைமார் நண்பர்களுடன் கலந்துரையாடவும் பிஞ்சுகளின் நோன்பு முக்கியத்துவம் பெற்றும் விடுகிறது.

எல்லாமே சிறப்பு, எல்லாமே பக்தி பூர்வமானவையாகி விட்ட நமது ரமளான் சிறப்புத்தான். அதில் என்ன சந்தேகம் இருக்கிறது!

குழந்தைகளின் உலகத்தில் நின்று பார்க்கப்படாத பல விடயங்கள் இருக்கின்றன. இன்றைய கல்வி அத்தகைய ஒன்றே. குறிப்பாக 5ம் தர ஸ்கொலர்ஷிப் பரீட்சை பிள்ளைகளுக்கானது அல்ல, தாய்மாரின் கௌரவத்துக்கானது என்ற கருத்துப் பரவலாக இருக்கிறது. பிஞ்சுகளின் நோன்பும் அப்படியான ஒரு கட்டத்துக்கு நகர்கிறதா என்பதைப் பற்றியும் அதிகமாக அல்லாமல் கொஞ்சமாகச் சிந்தித்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

ஒரே நோய் தாக்கிய இருவர். அந்த நோய்க்குரிய மருந்து ஒருவருக்குச் சுகப்படுத்தக் கூடியதாகவும் மற்றவருக்கு வேறொரு நோய்க்குத் திருப்பக் கூடியதாகவும் அமைந்து விடுவதுண்டு. இது ஒவ்வொருவரின் உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்தது. வைத்தியர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இது அல்லாஹ் ஏற்படுத்தியது.

நோன்பு என்பது பொதுவானதுதான். வறுமைக்கோட்டுக்கு மேலேயுள்ள குடும்பங்களின் குழந்தைகளின் உணவுக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பத்தின் உணவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நமது குழந்தைகள் வாழும் சூழல், அவர்களது உணவு, அவர்களது உடற்பலம் ஆகியன முழுநாளும் பசித்தும் தாகித்தும் இருப்பதற்கு சக்தி பெற்றவையா என்பதிலும் அவர்கள் நோன்பு நோற்று விட்டார்கள் எனின் அவர்களது நடத்தையை, போக்கை அவதானித்துக் கொள்வதிலும் நமது கவனம் இருந்தாக வேண்டும்.

நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ரமளான் மாதத்தில் ஸஹருக்கு எழும்பி நோன்பு நோற்க ஆர்ப்பாட்டம் பண்ணிய எனது மூத்த தங்கைக்கு அப்போது வயது பத்து. சாப்பிட்டு விட்டுப் படுத்த ஒரு மணி நேரத்தில் அனுங்கத் தொடங்கினாள். உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற தந்தையார் பெரிய வைத்தியசாலை மாறி அடுத்த நாட்காலை தங்கையின் உயிரிழந்த உடலோடு வந்து சேர்ந்தார். நாங்கள் உண்ட அதே உணவு தங்கைக்கு அவ்வேளை ஒத்துக் கொண்டிருக்கவில்லை.

கடந்த வருடம் நமது நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் நோன்பு நோற்ற ஒரு குழந்தை பிற்பகலில் நீர் அருந்தக் கேட்டதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நோன்பு துறந்து விடலாம் அது வரை தூங்கு எனப் பெற்றோரால் அறிவுறுத்தப்பட்டதாம். அக்குழந்தை நோன்பு நோற்க எழுந்திருக்கவில்லை என்ற ஒரு காது வழிச் செய்தி எனக்குக் கிடைத்திருக்கிறது.

குழந்தைகளை நோன்பு நோற்கப் பழக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நோன்பு நோற்க வைக்கப்பட்டால் அவர்களது உலகத்தில் நின்று அவர்களைக் கவனியுங்கள் என்றுதான் சொல்ல விழைகிறேன்.

நன்றி - மீள்பார்வை