Saturday, June 29, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர்..


 சுனந்த தேசப்பிரிய


ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லா­னது இலங்கை சமூக அர­சி­யலில் பாரி­ய­தொரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அன்று வெடித்த குண்­டு­களின் அதிர்ச்சி இலங்­கையில் ஓயாத அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

பாது­காப்பு தொடர்­பாக சோடிக்­கப்­பட்டு வரும் கதை­யா­டல்­களால் பொது­வாக நாடே பீதியில் உறைந்­து­போ­யுள்­ளது. இதில் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கமே வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மனி­தா­பி­மா­னமே வெட்கித் தலை­கு­னி­யு­ம­ள­வுக்கு முஸ்லிம் சமூ­கத்­திற்­கெ­தி­ரான வன்­முறை அர­சியல் கலா­சாரம் ஒன்று நாட்டில் தலை­தூக்கி யுள்­ளது.

ஜேர்மன் நாட்டை அத­ல­பா­தா­ளத்தில் தள்­ளிய பாஸி­ச­வா­தி­க­ளுக்­கெ­தி­ராக அந்­நாட்டில் தலை­யெ­டுத்த எதி­ரி­களை அடக்­கு­வ­தற்கு பாஸிஸ்­டு­க­ளாலும் இதே பாணி­யி­லான வெறித் தன­மான அடக்­கு­மு­றை­களே கையா­ளப்­பட்­டன. இலங்­கை­யிலும் இன்று இதே நிலையே உரு­வா­கி­யுள்­ளது. இந்த காட்­டு­மி­ராண்டிக் குழுவின் பின்னால் இட­து­சா­ரி­களும் ஜன­நா­ய­க­வா­தி­களும் துணை­போய்க்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இவர்கள் தேசத்­து­ரோ­கிகள் என்று இப்­போதே இனம்­கா­ணப்­பட்­டுள்­ளார்கள்.

எந்தக் குற்­றச் செயலும் புரியாத டாக்டர் ஷாபியை தூக்­கி­லி­டும்­ப­டி­யான போராட்­டங்கள் ஆங்­காங்கே முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. இரத்­தி­ன­பு­ரியில் எத்­த­கைய முறைப்­பா­டு­க­ளு­மின்றி இரண்டு முஸ்லிம் வாலி­பர்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட சிங்­கள வாலி­பரை ஐந்து நிமி­டங்­களில் விடு­விக்­கும்­படி பௌத்த பிக்கு ஒருவர் பொலி­ஸுக்கு சவால் விடுத்­துள்ளார். அவ்­வாறு வெளி­வி­டு­வ­தற்குக் கோரி­யி­ருப்­பது கொலை செய்­வ­தற்­கென்றே குறித்த வாலி­பரின் தந்தை கூறி­யி­ருக்­கின்றார். சாகும் வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டி­ருக்கும் ரதன தேர­ருக்­காக வீதியில் இறங்கி திரண்­டி­ருந்தோர் முஸ்லிம் வாலி­பர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

முஸ்லிம் சமூ­கத்தால் சிங்­கள சமூ­கத்­திற்கு பேரா­பத்து விளை­விக்­கப்­ப­டு­வ­தாக போலிப்­பி­ர­சா­ரமே இது­வ­ரையும் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­துள்­ளது. மல­டாக்கும் வில்லைஇ கருத்­தடை போன்ற பீதி­யூட்டும் பிர­சா­ரமே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. அதன் உச்ச கட்­ட­மாக சிங்­கள பௌத்த தாய்­மார்கள் 4000 பேர் மகப்­பேறு கிடைக்­காத வண்ணம் மல­டாகச் செய்­துள்­ள­தான பொய் முறைப்­பா­டுகள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இது மற்­று­மொரு கறுப்பு ஜுலைக்குத் தூப­மிடும் நாச­காரச் செய­லாகும். 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்­று­வ­ரையும் சமூக விரோத காடையர் கூட்ட பரம்­ப­ரை­யொன்று இருந்து வரு­வ­தையே இது உணர்த்­து­கி­றது. கறுப்பு ஜுலையின் விப­ரீத விளை­வுகள் குறித்து சிங்­கள சமூகம் இது வரையும் சுய­வி­சா­ரணை செய்யத் தவ­றி­யதன் விளைவே இதற்குக் கார­ண­மெ­னலாம். இலங்கை மக்கள் இதற்கு முன்னர் கண்­டி­ராத அள­வுக்கு இன மத வெறி தலைக்­கேறி மதம் சமூகம் என்று மக்கள் துரு­வங்­க­ளாக்கப் பட்­டுள்­ளனர்.

இதனால் நாட்டின் இன்­றைய சமூக அர­சியல் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தடுப்­ப­தற்கு எத்­த­கைய நட­வ­டிக்­கை­களும் எடுக்கத் தவ­றிய பொலிஸ்இ இப்­போது முஸ்லிம் விரோத நிறு­வ­ன­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்த பௌத்த வழி­பாட்­டி­டங்­க­ளுக்குத் தாக்­குதல் நடத்த இருப்­ப­தாக தகவல் கிடைத்­தி­ருந்தால் பொலி­ஸாரும் அரச உயர்­மட்­டத்­தி­னரும் வேறு வித­மாகச் செயற்­பட்­டி­ருப்­பார்­க­ளல்­லவா? பொலிஸார் சிறு­பான்­மை­யினர் விட­யத்தில் பார­பட்­ச­மா­கவே நடந்து வந்­துள்­ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் நீர்­கொ­ழும்பு குளி­யாப்­பிட்­டி­யி­லி­ருந்து வாரி­யப்­பொல வரையில் பர­விய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களை முன்­னரே தடுத்து நிறுத்­து­வ­தற்கு அரசு எத்­த­கைய நட­வ­டிக்­கை­களும் எடுக்கத் தவ­றி­யுள்­ளது. அது மட்­டு­மல்லஇ இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் சாட்­சிக்­க­மைய மனி­தா­பி­மா­ன­மற்ற வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு பொலி­ஸாரும் துணை போன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் குளி­யாப்­பிட்டி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட குழப்­பக்­கா­ரர்கள் நால்வர் பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் பணிப்பின் பேரில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­டோரும் இணைந்தே பொலிஸார் பார்த்­தி­ருக்­கையில் குளி­யாப்­பிட்டி பள்­ளி­வாசல் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

கப்பல் சுக்கான் சின்னம் பொறிக்­கப்­பட்ட ஆடை­யுடன் காணப்­பட்ட மகி­யங்­க­னையைச் சேர்ந்த பெண்இ சிங்­கள யுவ­தி­யென்றால் பொலிஸார் எவ்­வாறு செயற்­பட்­டி­ருப்­பார்கள்? சின்னம் தொடர்பில் தெளிவு ஏற்­பட்ட பின்னர் விடு­வித்­தி­ருப்­பார்கள் அல்­லவா? மினு­வாங்­கொ­டையில் காட்டு மிராண்­டி­களால் படு­கொலை செய்­யப்­பட்ட முஸ்லிம் நபர் மர­ணத்­துடன் போரா­டிக்­கொண்­டி­ருந்த நிலையில் காட்­டு­மி­ராண்­டி­க­ளுடன் பொலி­ஸாரும் கூடவே அவரின் உடலை தரை­வ­ழியே இழுத்துச் சென்­றார்­க­ளல்­லவா? அந்­நபர் ஒரு சிங்­க­ள­வ­ராக இருந்தால் பொலிஸார் இப்­படி நடந்து கொள்­வார்­களா?

இலங்­கையில் முஸ்­லி­மாகப் பிறப்­பது பெருந்­த­வறு என்று எண்ணுமளவுக்கு முஸ்லிம் என்­பதால் இம்­சைக்­குள்­ளாகும் சம்­ப­வங்கள் தொட­ரவே செய்­கின்­றன.

முஸ்லிம் பெண்­க­ளுக்கு புர்­கா­வையும் நிகா­பையும் தடை­செய்த அர­சாங்கம் அதனைத் தொடர்ந்து சகல அரச பெண் ஊழி­யர்­களும் சிங்­கள பெண்­ம­ணிகள் அணியும் சாரி உடுத்து வேலைக்கு வர வேண்டும் என்று பணிப்­புரை விடுத்­துள்­ளது. அரச நிறு­வ­னங்­க­ளுக்கு வரும் சகல பெண் ஊழி­யர்­களும் சாரி அணிந்தே வர வேண்டும் என்றும் சுற்­று­நி­ருபம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அதனால் எழுந்த எதிர்ப்­பினால் அந்த சுற்­று­நி­ரு­பமும் வாரிச்­சு­ருட்­டப்­பட்­டது? இதி­லி­ருந்து நாம் விளங்­கிக்­கொள்­வது முஸ்­லிம்­களை மட்டம் தட்­டு­வ­தற்­காக எல்லா வழி­க­ளிலும் எத்­தனம் நடக்­கி­றது என்­ப­துதான் தெளிவு.

தற்­போது இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு சட்ட ரீதி­யாக அநீதி இழைக்கும் முஸ்­தீ­புகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. டாக்டர் ஷாபி ஆளு­நர்­க­ளாக இருந்த ஹிஸ்­புல்லாஹ் அஸாத் சாலி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுத்தீன் ஆகி­யோருக் கெதி­ராக பொலிஸார் நடந்­து­கொள்ளும் முறை­மையை இதற்கு உதா­ர­ண­மாகச் சுட்டிக் காட்­டலாம். சாட்­சிகள் ஏதும் இல்­லாமல் அடிப்­ப­டை­வா­தி­களின் கோஷங்­க­ளுக்­காக வேதான் இவர்கள் விட­யத்தில் பொலிஸார் செயல்­ப­டு­கி­றார்கள். ஷாபி கைது செய்­யப்­பட்­டதன் பின்னர் தான் அவ­ருக்­கெ­தி­ரான முறைப்­பா­டுகள் குறித்து கோரிக்கை விடுக்­கின்­றனர். இதே போன்­றுதான் மேற்­படி அர­சி­யல்­வா­தி­களுக் கெதி­ரான முறைப்­பா­டு­க­ளையும் கேட்டு கால அவ­காசம் வழங்­கு­கி­றார்கள். உலகில் எந்­த­வொரு ஜன­நா­யக நாடு­க­ளிலும் காணப்­ப­டாத புது­மை­யான சட்ட முறை­மையே இங்கு கையா­ளப்­ப­டு­கி­றது.

பல்­வேறு முறைப்­பா­டு­களும் சுமத்­தப்­படும் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளர்­க­ளான ஹேம­சிரி பெர்­ணாந்து கோதா­பய ராஜபக் ஷ ஆகி­யோரை கைது செய்து முறைப்­பா­டு­களைத் தெரி­விக்­கும்­படி கோரிக்கை விடுக்­கா­தது அவர்கள் சிங்­கள பௌத்­தர்கள் என்­ப­த­னாலா?

முஸ்லிம் விரோத அர­சி­யலின் உச்­ச­பட்ச சட்டத்தை ரதன தேரரின் உண்­ணா­வி­ரதம் வெளிப்­ப­டுத்­தி­யது. ரத்ன மற்றும் ஞான­சாரர் போன்ற அடிப்­ப­டை­வாத பிக்­கு­களும் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்ஜித்தும் சிங்­கள பௌத்த அர­சியல் வாதி­யான சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்டோர் ஒன்­று­பட்டு முஸ்லிம் அர­சியல் வாதி­க­ளுக்­கெ­தி­ராக எழுப்­பிய கோஷத்­திற்கு ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் அடிமைப் படும் நிலை ஏற்­பட்டு விட்­டது. அர­சாங்­கத்தின் இத்­தோல்­வியை தனிப்­பட்ட ரீதியில் முஸ்லிம் அர­ச­ியல்­வா­தி­களால் வெற்­றி­கொள்ள முடிந்­துள்­ளது. கட்சி வேற்­றுமை பாராது அவர்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு அர­சாங்­கத்­தி­லி­ருந்து பத­வி­களைத் துறந்­ததன் மூலம் வெற்­றி­வாகை சூடி­யுள்­ளனர்.

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக தாக்­குதல் நடத்­தியோர் எத்­த­கைய தரா­த­ரமும் பாராது தண்­டனை வழங்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் அர­சி­யல்­வா­திகள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஒரு மாதத்­திற்குள் விசா­ரணை நடத்தி தீர்த்து வைக்­கும்­ப­டியும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­திற்கு தம் செய்­தியை எத்தி வைத்­துள்­ளனர். இவர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்கும் வகையில் பலம்­வாய்ந்த இஸ்­லா­மிய நாடு­களின் அமைப்பும் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்டு இவர்­க­ளது கோரிக்­கைக்கு உரம் சேர்த்­துள்­ளது.

பித்துப் பிடித்த சிங்­கள பௌத்த அர­சி­யல்­வா­தி­களால் தூண்­டப்­படும் முஸ்லிம் விரோதப் போக்­கினால் பெரு­ம­ளவில் முஸ்­லிம்கள் மீதான கல­வரம் வெடிக்­கு­மானால் சர்­வ­தேச ரீதியில் இலங்கை மிகவும் பாரிய நஷ்­ட­ஈட்டை செலுத்­த­வேண்டி வரும். சுமார் பத்து இலட்சம் இலங்­கையர் மத்­திய கிழக்கு நாடு­களில் பணி­பு­ரிந்து வரு­கின்­றனர். இந்­நாட்­டுக்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­த­ரு­வதில் இதுவே பிர­தான பங்கு வகிக்­கி­றது. அத்­துடன் ஜெனீவா மனித உரி­மைகள் கவுன்­ஸிலில் இலங்­கைக்கு ஏற்­க­னவே உள்ள அவப்­பெயர் மேலும் சீர் கெட்டுப் போவ­தற்கும் இது வழி­வ­குத்­து­விடும்.

தேசிய ரீதியில் இந்­நாட்டில் முஸ்­லிம்கள் மூன்­றா­வது சமூ­க­மாக இருந்து எத்­தனை இன்­னல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்? வன்­முறைக் கொடு­மைகள் மட்­டு­மல்லஇ முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களில் நுகர்­வுக்­கான தடை ஹலால் சான்­றிதழ் இல்­லா­ம­லாக்கல் பர்­தா­வுக்­கான தடை முஸ்லிம் சர்­வ­க­லா­சாலை மாணவ மாண­வி­க­ளுக்­கான விடு­திகள் வழங்­காமை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­படும் முஸ்­லிம்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­தத்­திற்கு உடந்­தை­யா­ன­வர்கள் என்று ஊட­கங்கள் ஊடாக புகைப்­ப­டத்­துடன் காட்­சிப்­ப­டுத்தல் முஸ்லிம் வைத்­தி­யர்­களை நாடாது சிங்­க­ள­வர்­களைத் தடுத்தல் – இத்­த­கைய நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்து வரும் சமூகம் தொடர்ந்தும் தலை­கு­னிந்து கொண்­டி­ருக்­குமா?

இந்­நாட்டு முஸ்லிம் மக்கள் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிக்­க­வில்லை. அத்­துடன் சஹ்ரான் ஹாஷிமின் தீவி­ர­வாதம் தொடர்­பாக முஸ்­லிம்­கள்தான் முறைப்­பாடு செய்­துள்­ளார்கள். ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்தை இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து பிடுங்­கி­யெ­றி­வ­தற்குஇ சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தி­களின் குரல்­க­ளுக்கு தலை­சாய்ப்­பதன் மூலம் சாதித்­து­விட முடி­யாது.

முஸ்­லிம்­க­ளுக்கு சமமான அந்தஸ்தை வழங்கிஇ அவர்களும் உரிமையோடு வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலமே சாதிக்கவேண்டும்.

விடயம் இவ்வாறிருக்கையில் முஸ்லிம்களுக்கு சமஉரிமைஇ பாதுகாப்பு வழங்குவதில் ஜனாதிபதி சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறவே தவறியுள்ளனர். ராஜபக் ஷ ரதன தேரர் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கி நிலைமையை மேலும் உக்கிரமடையவே வழிசெய்கின்றனர். முஸ்லிம் எதிர்ப்பு மேலும் பற்றியெரிவதற்கு ரதனஇ ஞானசாரஇ மெல்கம்இ சம்பிக்க ஆகிய நால்வரும் மேலும் எண்ணெய் வார்த்து ஜனாதிபதி தேர்தலிலே கண் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனங்களுக்கிடையேயான சமநிலை மற்றும் நேர்மைப் பண்புகளை நிலைநாட்ட வேண்டிய சவாலையே இன்று இலங்கை எதிர்கொண்டுள்ளது. இனவாதஇ வன்முறை அரசியல் தோற்கடிக்கப்படவேண்டும். இவற்றிலிருந்து நாம் வெற்றி கொள்ளத் தவறுவோமானால் நாடு என்ற வகையில் இலங்கையும் படுநாசத்தில் தள்ளப்படும்.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது எவரது அரசியல் களியாட்ட வண்டியிலோ அல்லது பென்ஸ் வண்டியிலோ ஏறுவதா? அல்லது எங்களுக்கென்ற சுயாதீன வண்டியொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதா?

(From Face book page of AL Thavam)

Thursday, May 16, 2019

அலையழிச்சாட்டியம் - சிறுகதை

    அலையழிச்சாட்டியம்


- அல் அஸூமத் -


  சுவர் மீது கடமை நோன்பு கிடக்கும் மணிக்கூடு, 'நான் ஏழாகி விட்டேன்' என்று என்னை அடித்தெழுப்பியது.

    குடல் மூச்சுடன் எழுந்து கட்டில்மீது இருந்த போது, மனைவி தேனீருடன் அண்மி நின்றாள்.

    'போய்க்  கொலைக்காட்சியை - அட, தொலைக் காட்சியைப்போடு' என்று பணித்தது காட்சியவா.

    ஓர் ஆங்கிலப் பாடலின் முன்னிசைக் களவில், சுடலைப் பேய்களின் அச்சுறுத்தும் குரலில், 'ஷேடம், ஷீடம், ஷாடம், ஷூடம், ஷேடம், ஷீடம், ஷாடம்,ஷூடம்' என்று வையத்தை உருட்டி 'விஷேடம் டீஈஈஈஈஈஈஈஈஈஈ வீஈஈஈஈஈஈஈ' என்ற இழுப்போடு தமிள் நிகழ்ச்சி தொடங்கியது.

    ஓர் ஓலை விரிய, 'இன்ரு நமதே' எனப் பெண் குரல் அறையப் பொழுதறிவித்தல் நடந்து முடிய, அதே பெண் குரல் ஓர் அரிய அறிவுரையையும் திணித்தது.

    இன்னொரு முறையும் 'ஷேடம், ஷீடம்'  உருண்ட பிறகு, 'நியூஸ்ஸெய்தி' இடம் பெற்றது.

    'வன்கம்! முத்லில் தலிப்பு செய்திகள்,' என்றவாறு வேறொரு பெண்மணி எழினியில் முறைக்க, 'சி.பி.ம.நரசிம்ம ராவி' எனப் பெயர் காட்டப்பட்டது.

    தலிப்பு செய்திகள் வேறொரு பெண் குரலில் காட்சிகளுடன் தோன்றின:-

    'தலிப்பு செய்திஹால். மென்னாரிலிருந்த கெல்முனைக்கு கெருவாடு கொண்டு செல்லும் எனுமதியை எரசாங்கம் தடி செய்திருப்பதாக ஸ்வாதாரமிச்சர் அரிவித்தார்.'

    தெலுங்குப் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இடை வெட்டி, 'அக்கிய தேஸ்ய கச்சிப் பிரைநிய்கல் வவனியா பணயம் - பயணம்!' என்றார்.

    'நிலையத்தை மாற்றித் தொலையடா!' என்று சீறியது எனது தமிழ்.

    'கட்டுப்பெட்டிச் சனல்' பிடிபட்டது.

    '.... மதர்லேண்டில் நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நெதர்லேண்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, நம்நாட்டு அரசாங்கக் கட்சியே பெரும் பான்மை பெற்றிருப்பதால், நெதர்லேண்டுக்கே வந்து ஆட்சி அமைக்கும் படி அந்நாட்டு அரசாங்கம் வேண்டியிருப்பதாக அறிய வருகிறது. உலகிலேயே அதிக மகிழ்ச்சி யுடன் சிறுபான்மையினர் வாழும் நாடு இலங்கைதான் என்று :பிரிட்டிஷமேரிக்க ஜனாதிபதி :புஷ்பிளேயர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்கிறார். இலங்கையில் மொழிப் பிரச்சினையோ இனப்பிரச்சினையோ பயங்கர வாதப் பிரச்சினையோ இல்லை என்றும், இங்கே உள்ள தெல்லாம் வட - கிழ - தென் பிரச்சினையே என்றும், இந்தத் திசைப் பிரச்சினையை ஊட்டி வளர்க்கும் 'நோவே'ப் பிரதி நிதிகளை உலகத்தை விட்டே துரத்த வேண்டும் என்றும், சகல உரிமைக் கட்சியும் கொள்கை விடுதலைக் கட்சியும் கூட்டறிக்கை விட்டிருக்கின்றன - மன்னிக்கவும், விட்டிருக்கிறது.
  
    'என்ன தலையிடியா?' என்று நகைத்தது உள்ளுணர்வு. 'வானொலியிடம் புகலடைந்து பார்!' என்றும் அறிவுறுத்தியது.
  
    காட்சிக் கருவியின் எரிச்சலால், 'விஷேடம் எஃபெம்' சிறிதே வன்மையோடு திறந்து கொண்டது. 'கெடுகுறிமணி'யின் கொலைக் குரல் வெடித்ததோடு, அடுத்த அறையில் உறங்கிக் கிடந்த எங்களின் குழந்தை மகள் அச்சத்தோடு வீறிட்டாள்!

    'ஐயோ புள்ள.....' என்று நிலைகுலைந்து ஓடிய மனைவியோடு நானும் ஓடினேன்.

    அழமுடியாது மூச்சடைக்க நடுங்கிக் கொண்டு கிடந்த செல்வத்தை வாரியெடுத்த அவள், ..தங்ங்ங்கம்... தங்ங்ங்கம்... இல்லடா... ராஜா... ம், ம், ம்ம்ம்...' என்றெல்லாம் தோளில் கிடத்தி முதுகில் தட்டி ஆறுதற் படுத்தினாள்.

    'அந்த எழவு சனியன் ரேடியோவ நிப்பாட்டித் தொலைங்களேன்பா!' என்று கெடுகுறி மணியை வெல்லும் பேய்க்குரலில் மனைவி என்மீது பாய்ந்தாள்!

    அந்தப் பாய்ச்சலை முன்னறியாதிருந்த நிலையில் நான் போய் அந்த இழவுமணியனைக் குறைத்த பிறகு இவளுடைய வசவு இன்னும்  நன்றாக என்னை எரித்தது:-

    'மனுசங்க மாதிரியாப் பேசுறானுங்க! வெசம் புடிச்சிப் போயில்லியா அலறிக்கிட்டுச் சாஹ்றானுங்க.... ...ச்சீ!...  .....அம்ம்ம்மா... அம்ம்ம்மா, இல்லடா தங்கம்| ஒங்கள ஒண்ணுமே சொல்லல ராஜாத்தி!... புள்ள பயந்து கியந்து நோய்கீய் புடிச்சிக்கிட்டா இவிய்ங்களா வந்து பாப்பாய்ங்க.. அஞ்சே அஞ்சி பாட்ட வச்சிப் போட்டுக் கிட்டு நாள் பூரா அஞ்சடிச்சிக்கிட்டுக் கிடக்கிறானுங்க| என்னத்தையோ அடச்சிக்கிட்டு அவனுங்க கத்துறத வீடான வீட்டில போட வேணாம்னா இந்தாளு கேக்கவா செய்யிறது? காலங் காத்தாலேயே கருமாதி வீடுமாதிரி!...'
        நாளேடுகளில் செய்திகளை மேலெழுந்தவாரியாகவாவது அறியலாம் என்றுதான் வானொலியை மூடாமல் இவளது வாயையும் மூடமுடியாமல் நிலத்தைப் போலிருந்தேன். கெடுகுறிக் கத்தல் நின்றதோடு வழவழத்தார் நாளேடுகளோடு வந்தார்:-

    'வணகம்!... மீண்டும் ஒரு ... அதாவது இன்றைய இனிய நாளுக்காக... உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!... ' என்று தொடங்கினார் உமிழ்நீர் வழவழத்தார். 'அதாவது இப்போது பத்திரிகைச் செய்திகள் இடம்பெறுகிறது. இன்ரு - அதாவது முப்பத்தி ஐந்து அதாவது முப்பது -ஐந்து - இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டாம் ஆகிய இன்ரு வெளிவந்த... பத்திரிகைகளில் ... அதாவது நாளேடுகளின் முக்கிய அதாவது பிரமாத அதாவது பிரதான செய்திகளை உங்களுக்கு... தர... தயாராகின்றோம். அதாவது நீங்கள்... வீட்டிலிருந்தபடியே இன்ரும் பத்திரிகை கேட்கலாம்! இன்ரைய பார்வைக்காக... ஏராளமான நாளேடுகள்... அதாவது பத்திரிகைகள் வந்திருக்கிறது. வீரகரணம், தினகரணம், கரணக்குரல், கரணச்சுடர் ஆகிய நான்கு பத்திரிகைகள் மட்டுமே இன்ரு எமக்கு... கிடைத்திருக்கிறது. முதலாவதாக வீரகரணம் பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்;. அந்த வகையில், இதன் முக்கிய - பிரதான - தலைப்பு.... செய்தியாக, ஒரு படைவீரர் ஒருவரின் ஒரு துப்பாக்கி ஒன்ரு.... தானாகவே வெடித்ததில் அதாவது தற்செயலாக வெடித்ததில், முப்பத்தி இரண்டு பேர் மரணம்.... நாப்பத்தி ஐந்து பேர் படு...காயம் என்ரு ஒரு முக்கிய தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. அதைப் போலவே அரிசி விலை... பன்னிரண்டு மடங்கு குறைந்திருப்பதாகவும் எரிபொருள் அதாவது பெட்ரோல், டீஸல், மண்ணெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றின் விலை பதினேழு மடங்கு கூடியிருப்பதாகவும் ஒரு முக்கிய செய்தி - பிரதான செய்தி பெட்டி கட்டி வந்திருப்பதாக தெரிகிறது.... இன்னும் அதைப் போலவே, ....ம்.... அதைப்போலவே, பிரபல மந்திரி அதாவது பிரதம் மந்திரி சவ்தி அரேபியா வுக்காக ஒரு... ஒரு உள்நாட்டுப் பயணத்தை...  அதாவது வெளிநாட்டு விஜயத்தை... கடைப்பிடித்திருப்பதாகவும் ஒரு முக்காத அதாவது முக்கியமல்லாத செய்தி இடம் பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. உபதலைப்பில் அதாவது தலைப்புக்கு... கீளே, சிறிய எளுத்தில், 'கைலஞ்சம் அதாவது கைலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பிடிப்பதற்காக.... கணனி வெடி அதாவது கன்னி வெடி வாங்குவதற்காக' என்றும் வந்திருக்கிறது. அதைப் போலவே, இம்முறை விசகம் அதாவது வீசாகம் பெருநாளை அதாவது பண்டிகையை முன்னிட்டு... நாட்டின் இலட்சக்கணக்கான பகுதிகளிலிருந்தும் அதாவது பல பகுதிகளிலிருந்தும் இலட்சக் கணக்கான மக்கள் - பொது மக்கள் படையெடுத்து அதாவது படைதிரண்டு வருவதாகவும் அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள்... பலப்படுத்தப் பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி ஒன்ரு பிரசவிக்கப்பட்டு அதாவது பிரசுரிக்கப்பட்டிருப்பதாக... தெரிகிறது. அதைப்போலவே, சிறப்பு 'ளூனா', கொளும்பு எனும் வாக்கியத்தில் அதாவது சொல்லில் இருப்பதால், கொளும்பு நகரமானது, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்தே தமிளர்களின் வதிவிடமாக இருந்ததென்ரும் ஒரு தமிளாராய்ச்சி தெரிவிப்பதாக ஒரு முக்கிய செய்தி ஒன்றும் கீளே வந்திருக்கிறது. ஒரு விளம்பரம் ஒன்ரின் பிறகு அடுத்த செய்தியை பார்ப்போம்.'

    வானொலியை மூவிட்டு கழிப்பறைக்குப் போய் வந்தேன். வந்த பிறகு, வானொலியைத் திறந்து வேறொரு நிலையத்தைத் தேர்ந்தேன்.

    'ஈஈஈது ஊங்ங்ங்கள் அடக்க்க்க முடியாத :டார்ளிங் தமிள் ஏஃபேஏஏஏம்!' என்று கழுதித்தது ஒரு வன்குரல். '.....வணக்க்கம்! அதாவதிபொதுங்கள்கொருபூதிய.... பூதிய  தமிள் -  பாடலை - தருவதன்... மூலம் - எங்கநியள்ச்சி யளை யாரபிக்கிறோம்... இனிமேலிதேபாடலைமணித்... யாலதுகைந்துமுறை... யாவதுநீங்ளேட்டுமகீஈஈஈலவும்!... இன்ருமாலைகுளிபாடல் வெறுகதகபாளைய்ய்யபாடலா கியிடும்! இதன் பிறகுவே - ரெவருமிதைபு - தீயபடலென்ரு  ...சொந்தங்கொண் - டாடமூ - டீயாது! அதபாடலெழுது களை கவிபேர்சர் வீரவாளியறியதாக சொலபடுகிறது - தாலியறுவெலும - ஹோதைமானதி - மரய்யோன்னிய திலிருந்து அதாவதிதை நேயர்களுகாக நாங்கதான்மு தன்..முதலாக தருஹ்றோம்! இதோந்தபாடல்பாடியிர் பவர்ர்ர் ஆஆஆகுடல்நாதனிசைய்ய்ய் தகர - டப்பன்! ஈஈஈதோ கேட்டாருங்கள்ள்ள்!'

    'சாரப்பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்! -         இந்த
    நாறத்தீனி வயித்துக்குள்ளே கொண்டாட்டம்!...'

    'என்னை ஏன் கடிக்கிறாய்?' என்று சினந்தன என்னால் கடிக்கப்பட்ட எனது பற்கள். 'வேண்டுமானால் வேறொரு நிலையத்தை நாடிப்பார்!'

    ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூதானே இனிப்பு என்று மறுபடியும் விஷேடம் எஃபெம்!

    ஒரு திறனாய்வு தொடங்கியது. ஒரு சொல்லில் மறுமொழி தரக் கூடாது. அம்மறுமொழியில் பிற மொழிச் சொல்லே வரக் கூடாது என்று, பிறமொழிச் சொற்களா லேயே திறனாய்வு நெறிகளை விளக்கியது பெண்குரல்.

    கொல்லைப்பட்டி அழகேசு தொலையுரையாடியில் முந்திக் கொண்டார்.

    'எங்கள் அளகேசு வந்து விட்டீர்களா?'

    'ஹீஹீ... ஹீ... ஆமாக்கா! வணக்கம்'

    'வணக்கம்! மாலைக்குள் எப்படியாவது ஏளெட்டு முறையாவது நீங்கள் எங்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு விடுவீர்கள், அப்படித்தானே?'

    'ஹி...ஹீ...ஹீ!'

    'ஞ்சரி! போட்டியை ஆரம்பிப்போமா, அளகேசு?'

    'சரிங்கக்கா!'

    'நீங்கள் என்ன தொளில் செய்கிறீர்கள், அளகேசு?'

    'வாகனம் ஓட்டுறேன்க்கா!'

    'ஞ்சரி. என்ன வாகனம் ஓட்டுகிறீர்கள்?'

    'வேன் ஒன்று வச்சிருக்கிறேன்க்கா!'

    'ஹோ... ஹோ.. ஹோ...! ...வேண் என்று பிறமொளிச் சொல்லைப் பாவித்து விட்டீர்கள்! நீங்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்!'

    'வேன், வான் - அப்புடீன்னுதானே தமில்ல சொல்றோம்,'

    'இல்லை! அது ஆங்கிலச் சொல்!'

    'அப்ப தமில்ல எப்புடீக்கா சொல்றது?'

    'ஏன் மோட்டார் ஊர்தி என்றிருக்கலாமே?'

    'பெண்டாட்டி உதைத்தாலும் உனக்கு நாணம், சூடு, உணர்ச்சி எதுவுமே கிடையாது, போ!' என்று இளித்தது எனது மூளை.

    மறுபடியும் :டார்லிங் தமிள் எஃபெம்மிடமே புகலடைந்தேன்.

    'எந்தவி - டயத்தையும் முந்தித்தருவதூங்கள் :டர்லிங் தமிள் எஃபேம் மட்டுமே. நாங்களே முதல் - வன்ன்ன்! இதோங்கள்கான அவசரசெய்தியறிகையிதன் தோப்பாசிரியர் நியூஸ்ஸ்ஸ் மாமா! சரிபார்- தவர் லூஸ்ஸ்ஸ் மாமா! வாசிபவர் முதலாவது பெணறிவிபாளினி ரேஸ்ஸ்ஸ் மாமீஈஈஈ!'

    'வணஹம்! டாடடடடடடட டுடுடுடுடுடுடு! டடடடடடடடடிடடி டிட்டிட்டி. கட கட கட குடு குடு குடு இடி யிடி யிடி யிடி யிடி. டொரலட்டு டொட்டு, டர்ர லர லர லர பர பர பர பர டமீக்கிடிம்மீடும்மீ டும்மு டும்மு டுமுக்கிடி!...'

    ஆண் அறிவிப்பாளரை வென்ற விரைவுப் பெருமையில் ரேஸ் மாமி வணஹத்தைக்கூட மறந்துபோய் ஓடிவிட்டார்.

    'ஓரு..... ஒரு.... ஒரு.... ' என்றவாறே ஓர் இழுபறிக் குரல் புதிதாக அறுக்கத் தொடங்கியது. '...அதி.. முக்கியமான... ஒரு... செய்தியை... உங்களுக்கு தர... இப்போது... நாங்கள்.... தய்யாராகிக்... கொண்டிருக்கிறோம்.... அதாவது.... இன்ரு... அதிகாலை.... அதாவது... குறிப்பாக ஏளு மணி.... அளவில்... கொளும்புவிலிருந்து... சற்று... தொலைவில்... அதாவது... கொளும்புக்கு அண்மையில்... ஒரு... அதாவது... ஒரு குண்டு வெடிப்பு.... வெடித்ததில்.... சுமார்... ஆறுபேர்... வரையில்.... கொல்லப்பட்ட தாக.... அதாவது மரணமடைந்ததாக.... தெரியவருகின்றது... இந்த வைபவத்தின்போது... அதாவது விபத்தின்போது... இன்னும் ஸ்தலத்திலேயே... எமது நிருபர்... இருக்கிறார்.... இப்போது அவர்... நேயர்களுக்காக... தேச... அதாவது... சேத... விபரம் பற்றி... நேயர்களுக்காக... தொலைபேசியில்... விபரங்களை... எடுத்துரைப்பார்... சிறிசேன?'

    செய்தியாளர் சிரிசேன அழகாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இனிய சிங்களத்தில் கூறி முடித்தார்.

    'அடடா, இவ்வளவு இனிமையான மொழியை பாரதி கேட்காமல் போய்விட்டானே!' என்று நொந்து கொண்டது எனது உள்ளுணர்வு.

    'ஸ்த்தூத்தி, சிறிசேன!... அதாவது... எமது... நிருபர்... சிறிசேன... கூறியதை... இப்போது... நேயர்களுக்காக... தமிளில்... தருகிறோம்... அதாவது... இன்ரு... காலை...'

    'மூஞ்சி கழுவல்லியாப்பா?' என்றாள் மனைவி.

    'இந்த நியூஸ் முடியட்டும்,' என்றேன்.

    'அதுதான் சிரிசேன அழகா சொல்லிட்டதேப்பா, வாங்க!'

    'இந்த... விபத்து... பற்றிய... ஒரு... ஒரு... கலந்துரையாடலை... இப்போது... நேயர்களுக்காக... நாம்... ஏற்பாடு... செய்துகொண்டு... இருக்கிறோம்... மேலதிக... தகவல்களுக்காக... அதாவது.... நேயர்கள்... ஏதாவது கேட்க... விரும்பினால்... கேட்பதற்காக.... எம்முடனேயே.... இருங்கள்... எமது தொலை பேசி.... இலக்கம்... ஆறாறாறி... ஏளேளெளி... அதுவரையில்... ஒரு... சுபர்பட.... பாடலை.... கேட்டு... மகிழுங்கள்...'

    'சாரப்பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்!....'
    புலன்கள் செத்துப்போன நிலையில் வானொலியை அடக்கிவிட்டுப் போய் முகம் கழுவி வந்து மேலுமொரு தேநீரோடு தொலைக் காட்சியை இயக்க, விஷேடம் டீவியில் நரசிம்மராவி இன்னுமே வன்கொலை செய்து கொண்டிருந்தார்.

    '...சுமர் அய்ந்தண்டுக் கலமாக நோய்வைப் பட்டிருந்த அவர், நேட்ரு முன்தினம் கொலிசெய்யப் பட்டதக புலிஸ்மாதிபர் கூர்னர். கொலியலிகள் கண்டிவிலும் மாத்தளைவிலும் ஒளிந்துள்ளதகவும் ஆரம்பகட்ட விசரணைகளும் பெச்சு வார்த்தைகளும் முடிவுட்ரதகவும், நீதி மன்ர நடிமுறிகள் பின்பட்ரப்படுவதகவும் அவர் மேலும் தெரிவித்தர்... இன்ரு நாடளுமன்ரத்தில் ஐக்கியேஸியக் கச்சி வெளிநடுப்பு செய்ததக எமது செய்தி நிருபர் தெரிவிக்கின்ரர். இதை அனித்து ஊடகங்களும் கண்டித்துள்ளது. நாடல் மன்ரம் எதிரரும் பதினௌhம் தீய்தி குடுமென்ரு சபைநகர் அறிவித்துள்ள பொதிலும், நாளை மர்தினம் பார்ளு மன்ரம் குடுமென்ரு சர்வச்சி மாநட்டில் அமிச்சர் குர்நார். மாஜனைக்கிய முண்ணி இதை சர்வேஸ்ஸமுகத்திற்கு அறிவித்துள்ளனர். ... கல்வி பொது தரதர சாதர்ணதர பரிச்சை நாளை அரம்பமாகின்ரது.... தென்னிந்திய ரமேஷ்வரத்தில் மெலூம் பல அஹ்திகள் முகமிட்டிருப்பதக தமிள்நட்டு செய்திகள் கூர்கின்ரது.'

    புதிதாக ஓர் ஆண் குரல் பின்னணியில் வந்தது:-

Monday, December 24, 2018

கையெழுத்து!

கைகளால் எழுதுவது குறைந்து விட்டது.

அந்நாட்களில் தமிழ் பாடம் கற்பதில் உறுப்பமைய எழுதுவது ஓர் அங்கமாக இருந்தது. அதற்கென பெரிய ரூல் அப்பிடியாசக் கொப்பிகள் இருந்தன. எழுத்துச் சீராக, அழகாக வரும் வரையில் ஆசிரியர்கள் விடமாட்டார்கள். மேல் வகுப்புக்கு வரும்போது அழகான, முத்து முத்தான எழுத்துக்கள் மாணவிகளுக்குக் கைவந்து விடும். காரணம், அவர்களுக்குப் பொறுமை அதிகம்.

கணினிக்கு முன்னர் நான் கையெழுத்தால் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எழுத்தாளர் சுஜாதா டைப் ரைட்டரிலேயே தனது கதைகளை உருவாக்குகிறார் என அறிந்து ஆச்சரியப்பட்டதுண்டு. எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத்தாளர் மானா மக்கீன் டைப் ரைட்டரில் உட்கார்ந்திருந்து ஒரு நாடகத்தை உருவாக்கி விடுவார் என்று முஸ்லிம் சேவையின் நாடகத் தயாரிப்பாளராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்த எம். அஷ்ரப் கான் அவர்கள் சொன்ன போது உண்டான ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

கடிதம் எழுதி அனுப்பும் வழக்கம் அருகிப்போய்விட்டது. அதனிடத்தை மின்னஞ்சல்களும், கைப்பேசியும், ஏன் சமூக ஊடகங்களும் கூடப் பங்கு போட்டுக் கொண்டன. கடிதம் தகவலாக மட்டுமன்றி நிகழ்வுகளைக் கோத்து, எண்ணங்களைச் சிந்தாமல், சிதறாமல் எழுதுவதற்கான பெரும் பயிற்சிக் களமாகவும் இருந்தது. கடிதத்தில் வெறும் எழுத்தை மட்டுமல்ல, உணர்வுகளையும் சேர்த்தே பதிந்திருக்கிறோம்.

அந்நாளைய இலக்கியகாரன் மிக உணர்வுபூர்வமாக தன்து படைப்பை எழுத்து மூலம் காகிதத்தில் உருவாக்கினான். அந்த எழுத்துக்களில் ஒரு நேர்த்தியும் அழகும் இருந்தது.

கணினி எழுத்தை இலகுபடுத்தித்தான் இருக்கிறது. யாராவது ஒருவர் கையால் எழுதிய பிரதியைத் தபாலிலோ, வட்ஸ்ஏபட, மெஸஞ்சர்களில் படமாகவோ அனுப்பும்போது கொஞ்சம் கோபம் வரவும் செய்கிறது. முதல் பிரதியைக் கணினியில் வைத்துக் கொண்டே நாட்கணக்கில் திருத்திக் கொண்டேயிருக்கலாம். படைப்பாளி தாளில் வெட்டிக்  குத்தித் திருப்பித் திருப்பி எழுதும் நோவினை இன்று இல்லாதாகி விட்டது. ஆனால் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்திக் கையால் மாய்ந்து மாய்ந்து எழுதும் அந்த ஆத்மார்த்த உணர்வு அற்றுப் போய்விட்டதோ என்று அவ்வப்போது எனக்குச் சந்தேகம் எழுகிறது.

நான் எனது எழுத்து முதல் மொழிபெயர்ப்பு வரை கணினித் தட்டச்சிலேயே மேற்கொள்கிறேன். என்னைப்போல்தான் இன்று பல இலக்கியப் படைப்பாளிகளும் கணினியே கதி என்று கிடக்கிறார்கள். எழுதவும் பகிரவும் வசதியாகத்தான் இருக்கிறது.

தொடர்ச்சியான கணினித் தட்டச்சு கழுத்து முதல், கைச்சந்து வரையான வலியை உடலில் உருவாக்கி விடுகிறது. மாதக்கணக்கில் அவதியுற்று, பெருந் தொகை வைத்தியர் பார்த்து, மருந்தெடுத்து, பயிற்சி செய்து வருகையில்தான் மூத்த இலக்கியவாதியான ஜவாத் மரைக்காரின் குறிப்பு பார்க்கக் கிடைத்தது. தொடர்ச்சியான கணினிப் பாவனை, இந்த வருத்தங்களைக் கொண்டு வரும் என்பது. அதிலும் குறிப்பாகத் தொடர்ச்சியான தட்டெழுத்துப் பாவனை இந்த வருத்தத்தைத் தந்து விட்டுப் போகிறது.

இப்போது இந்த வருத்தங்களைக் குறைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டே கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டால் நான்காவது நாள் கணினிப் பக்கமே நெருங்கி விடாமல் இருக்க வேண்டியிருக்கிறது.

கைகளால் எழுதும்போது இப்படியான வருத்தங்கள் யாருக்கும் ஏற்பட்டதாக நான் கேள்விப்பட்டதேயில்லை!

24.12.2018

Sunday, November 18, 2018

'தம்பியார்' - ஓங்கி எழும் எதிர்க் குரல்!


'தம்பியார்'  - ஓங்கி எழும் எதிர்க் குரல்!

எங்கே, எப்போது சந்தித்தேன் என்பது ஞாபமில்லாத போதும் முதல் சந்திப்பிலேயே மனதில் ஒட்டிக் கொண்டவர் டாக்டர் அஸாத். சந்தித்த அன்றே கவிதைக்காரனாகவே அவர் அறிமுகம் செய்யப்பட்டது ஞாபகம் இருக்கிறது.

அவரது முதலாவது கவிதைத் தொகுதி வெளியீடு, பெரும்பாலும் பின்னால் வந்த எனது எல்லா நூல்களினதும் வெளியீட்டு நிகழ்வுகள், ஏனைய நூல் வெளியீட்டு நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் என்று அவ்வப்போது அவரைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களூடே அவருடனான நட்பும் அழகிய கவிதைகளைப் படிப்பது போன்ற அனுபவங்களையே எனக்கு வழங்கியிருக்கின்றன.

ஆயிரமாயிரமாய்ச் சமூக வலைத்தளங்களில் கொட்டப்படும் தமிழ்க் கவிதைகளுள் வெகு சிலவே நமது கவனத்தைக் கவருகின்றன. அவ்வாறு கொட்டப்படும் கவிதைகளுள் - எனது கண்ணில் படும்போது நான் தவறாமல் வாசித்து விடும் கவிதைக்காரர்களுள் டாக்டர் அஸாத் அவர்களும் ஒருவர். அவருடனான அறிமுகமே அவரது கவிதைகளை நோக்கி என்னை இழுத்துச் சென்றாலும் அவருடைய கவிதைகளைத் தவறவிடாமல் வாசிக்கத் தூண்டுவது அவர் கவிதைகளில் அவர் பேசும் விடயதானங்கள்.

இலக்கியம் மக்களுக்கானது என்ற முடிவு எப்போதோ எடுக்கப்பட்டு விட்டது. எனவே இலக்கியப் படைப்புகள் யாவும் மக்களை, மக்களது பிரச்சனைகளை, அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களை பொது வெளியில் கொண்டு சேர்க்கும் கைங்கரியத்தைச் செய்யத் தொடங்கின. புதுக்கவிதை தோற்றம் பெற்ற பிறகு அவை பாரிய அளவில் மக்கள் பிரச்சனைகளையும் மனிதாபிமானத்தையும் தூக்கிப் பிடித்தன.

நவீன கவிதைகள் என்ற பெயரோடு பின்னால் வந்த ஒரு திருப்பம் இந்த நோக்கிலிருந்து பிறழ்ந்து எல்லாவற்றையும் பேசலாம் என்று நடைபோடத் தொடங்கின. சும்மா தேமே என்று அமர்ந்திருக்கும் போது ஓர் பழுத்த இலை விழுதல், ஆகாயத்தில் மேகம் நகர்தல், மழைபெய்தல், குளிரடித்தல் என்று உண்டாகும் உணர்வுகளைப் பெரிது படுத்தி - அவை பேச ஆரம்பித்தன. நவீன கவிதைகள் என்றால் சொற்களைப் புணர்த்தி எழுதுவது என்றொரு மயக்கமும் வந்து சேர்ந்தது.

அண்மையில் வெளியான எனது தேவதைகள் போகும் தெரு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறு குறிப்பில் தற்போதைய கவிதைப் போக்குக் குறித்து நாவலாசிரியரும் சிறந்த சிறுகதையாளரும் கவிஞருமான ஆர். எம். நௌஷாத் 'எனதான இரவு, உனதான மூக்கு என்றெல்லாம் கவிதைகள் படித்து நமதான முடிமயிர் கொட்டுண்ட இந்த வேளையில்...!' என்று சொல்கிறார். இதற்குமேல் அவை பற்றிப் பேசவேண்டியதில்லை.

இவை கவிதைகள் இல்;லை என்றோ குற்றம் என்றோ இங்கு நான் குறிக்க வரவில்லை. ஓர் உன்னதமான கவிஞன் இலக்கியம் மக்களுக்கானது என்ற நோக்கில் செயற்படும்போது அவனது கவிதைகளும் மக்களுக்கானவையாகவும் மகத்துவம் மிக்கவையாகவும் மாறிவிடுகின்றன. அந்த வகையில் புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குள் மக்களுக்கான கவிஞனாக அஸாத் ஹனிபா திகழ்கிறார் என்பதை அவரது கவிதைகள் மூலம் நாம் கண்டு வருகிறோம்.

இன்று வெளியிடப்படும் 'தம்பியார்' என்ற இந்தக் கவிதைத் தொகுதி ஆஸாத் ஹனிபாவின் 3ஆவது கவிதைத் தொகுதி. இதற்கு முன்னர் 'ஆத்மாவின் புண்', 'பிரேத பரிசோதனைகள்' என்ற தலைப்புகளில் இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

'தம்பியார்' கவிதைத் தொகுதியை நான் முழுமையாகப் படித்து விட்டேன் என்பதை அஸாத் ஹனிபாவுக்கும் சபைக்கும் மனச்சுத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். குறித்தளவு பக்கங்களைப் படித்து விட்டு நூல் நயம் செய்யாமல் முழுவதையும் படித்து விட்டு நூல் நயம் செய்வது அபூர்வமாக நடைபெற்றுவரும் சூழலில் நான் முழுவதையும் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன் என்பதையிட்டு அஸாத் ஹனிபா மகிழ்ச்சியடைய வேண்டும்.

197 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 180 பக்கங்களில் 77 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. நான் இதுவரை நூல்நயமோ, விமர்சனமோ, திறனாய்வோ செய்த நூல்களில் வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்ட முதலாவது நூல் இதுதான்.

இக்கவிதைகளை எனது வசதிக்கேற்ப முஸ்லிம் சமூகம் பற்றிய கவிதைகள் - தமிழ் சமூகம் பற்றிய கவிதைகள் - முஸ்லிம், தமிழ் சமூகம் பற்றிய கவிதைகள், பொதுவான கவிதைகள் என நான்கு வகைகளுக்குள் அடக்கியிருக்கிறேன். பெரும்பான்மை சமூகம் பற்றி ஏதுமில்லையா என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழுவது நியாயம். இவற்றுள் பெரும்பாலான கவிதைகள் அந்தச் சமூகத்தின் முன்னால் நின்றுதான் சுட்டுவிரல் நீட்டியபடி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையைச் சொன்னால் இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளையும் அவை பேசும் விடயங்களையும் குறித்துப் பேச எனக்குக் குறைந்தது ஒரு மணித்தியாலம் தேவைப்படும். அதற்கான வாய்ப்பு ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சாத்தியமற்றது என்பதால் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

இவரது கவிதைகள் மானுடம் என்ற அடித்தளத்தில் நின்றபடி கேள்விகளை எழுப்புகின்றன. அவை வில்பத்துக் குறித்துப் பேசும் அதே வேளை மியன்மார் அகதிகள் குறித்துப் பேசுகின்றன. அம்பாறைக் கலவரம் குறித்துப் பேசும் அதே வேளை சிரியா குறித்துப் பேசுகின்றன. புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர் நடந்த கொண்டாட்டம் பற்றிப் பேசும் அதே வேளை காஷ்மீர் கோவிலுக்குள் சிதைக்கப்பட்ட சிறுமி பற்றிப் பேசுகின்றன. தம்புள்ளைப் பள்ளி பற்றிப் பேசும் அதே வேளை ஜெரூசலம் பற்றிப் பேசுகின்றன. காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் பற்றிப் பேசுகின்றன, முள்ளிவாய்க்கால் பற்றிப் பேசுகின்றன. துரத்தப்பட்ட முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றிப் பேசுகின்றன. தேசிய அரசியல், சிறுபான்மை அரசியல் பற்றிப் பேசுகின்றன. ஹலால் பிரச்சனை பற்றியும் ஹபாயா பிரச்சனை பற்றியும் பேசுகின்றன.

77 கவிதைகளிலும் குறைந்தது 66 விடயங்கள் பற்றிப் பேசுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு செய்தி இருக்கிறது என்பதுதான் இங்கே ஈண்டு குறிப்பிடத் தக்கது. வெறும் அழகியலை வைத்துக் காலமோட்டும் கவிஞராக அல்லாமல் சமூக, தேசிய, சர்வதேசிய மனிதாபிமானப் பார்வையுடன் அவர் எழுந்து நிற்கிறார்.

அஸாத் ஹனிபாவுடன் பேசுபவர்கள், பழகுபவர்கள் அவரின் அப்பாவி முகத்தையும் குழந்தைச் சிரிப்பையும் கண்ணியமான பேச்சுப் போக்கையும் பார்த்து அவரைப் பற்றி அவர் ஒரு மென்மையான மனிதர்  என்ற ஒரு முடிவுக்கு வருவார்கள். ஆனால் அவரது கவிதைகள் அந்த முடிவுக்குரியவை அல்ல என்பதை இந்த நூலைப் படித்ததும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

ஏறக்குறைய சொல்வதானால் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தீக்குச்சியின் உரசல் இருப்பதை நான் உணர்கிறேன். சிறுமை கண்டு பொங்கும் கடும் கோபத்தைக் கவிதைகளினூடு அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். சிறுபான்மைகளுக்கெதிராக நடந்த கொடுமைகளை மிகத் துல்லியமாக வரலாற்றுப் பதிவாக்கி வைத்திருக்கிறார். எல்லாக் கொடுமைகளுக்கும் எதிராக கவிதை கொண்டு ஒரு கூரிய வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார். இதைவிடப் பொருத்தமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு கவிதையையும் ஒரு சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வெட்டலகாக (பிளேட்) ஆகப் பயன்படுத்துகிறார். இதனால் என்ன நடக்கிறது என்றால் அவர் கவிதைகளைச் சொல்லிச் செல்லும் அவரது மொழி மூலம் அவர் என்ன மனோ நிலையில் நின்று பேசுகிறாரோ அதே மனோ நிலைக்கு நம்மையும் ஆளாக்கி விடுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் அவர் தட்டி விடும் தீக்குச்சி நமது மனங்களுக்குள் ஒரு காட்டுத் தீயாய்ப் பரவ ஆரம்பிக்கிறது.

புன்மையை எதிர்த்து நிற்பதும் அநியாயத்துக்கும் அத்து மீறல்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புவதுதான் நேர்மையான ஒரு கவிஞனின் உன்னத பண்பு. அந்தப் பண்பை இந்நூலில் அடங்கியிருக்கும் பெரும்பாலான கவிதைகளில் நீங்கள் கண்டடைய முடியும்.

மானுட மேம்பாட்டுக்கான போராளியாக, அநீதிக்கெதிராக எழுந்து நிற்கும் உள்ளத்தவராக, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தக்காரனாகத் தனது மூன்றாவது கவிதைத் தொகுதியிலேயே பிரகாசிக்க ஆரம்பித்து விட்டார் அஸாத். இந்தக் கொடுப்பினை முப்பது கவிதைத் தொகுதிகளை வெளியிட்டாலும் சிலருக்குச் சித்திக்காமலேயே போய்விடுகிறது.

குறைந்த வார்த்தைகளில் பேசுவது கவிதை. ஒரு நல்ல கவிதை வாசகனுக்குள் இறங்கும் போது அவனின் சிந்தையில், உணர்வில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் அவனைது ஆவியையும் உடலையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. சிறந்த கவிதையொன்றின் சில வரிகள் ஒரு நூலில் எழுதப்பட வேண்டிய அகக் காட்சியை உண்டு பண்ணி விடுகிறன. சாப்பேறுகள் என்றொரு கவிதையின் இறுதி நான்கு வரிகள் இப்படி முடிகின்றன.

'இங்கு எல்லாமே
பிழையான இடத்தில்தான் உள்ளன
மனிதர்கள் மட்டுமல்ல -
கற்சிலைகளும்தான்!'

பெரும்பான்மையின் அடாத்தான செயற்பாடுகள் குறித்துப் பேசும் இந்தக் கவிதையில் ஒரு நீண்ட காட்சிப் படிமத்தை உருவாக்கி விட்டுச் செல்கிறார். இந்தத் தொகுதிக்குள் இருக்கும் அநேகமான கவிதைகளின் சாராம்சமாகவே நான் இந்த வரிகளைப் பார்க்கிறேன்.

இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த போது பெரும்பான்மையினருக்கு பீடித்த - இன்னும் குணப்படுத்த முடியாத நோய்களில் ஒன்று இந்தத் தேசம், இந்த நிலம் முழுவதும் தங்களுக்கானதே என்று நிறுவ முயன்றது. இதற்காகவே வரலாறு புரட்டிப் புரட்டி எழுதப்பட்டு, அது பாடப் புத்தகங்கள் வரை சென்று வரலாறு என்ற பாடம் கட்டாய பாடமாக ஆக்கப்பட்டது. அது மாணாக்கருக்கு கணித, விஞ்ஞான பாடங்களை விடப் பெரும் சவாலாக மாறிற்று. ஒவ்வொரு அரசனும் பிறந்தது முதற்கொண்டு அவனது அனைத்து செயற்பாடுகளும் வருடங்கள் ரீதியாக எழுதப்பட்டன. இந்த விபரங்களை ஒவ்வொரு மாணவனும் மனனமிடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. வரலாற்றுப் பாட நூல்களை நீங்கள் கையில் எடுத்துப் பார்த்தீர்களானால் அதன் விபரீதத்தை நீங்கள் உணரலாம்.

இந்த வழிமுறையை இவர்கள் இஸ்ரேலிலிருந்து கற்றிருக்க வேண்டும். அங்குதான் அறபிகளின் நிலத்தைப் பிடித்துக் கொண்ட யூதர்கள் தமது மாணாக்கரின் பாட நூல்களில் அது தங்களது பூமி என்ற வரலாற்றை எழுத ஆரம்பித்தனர்.

இது இப்படியே போய்க் கொண்டிருக்க 2009 நடுப்பகுதியிலிருந்து வேறொரு முன்னெடுப்பு ஆரம்பித்தது. எங்கெல்லாம் இராணுவ முகாம்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஓர் அரச மரத்தை நடுவதும் அதன் அருகே கௌதமரின் சிலையொன்றை வைத்து விடுவதும். இது விரிவடைந்து பொதுப் பணி இடங்களில், அரச நிறுவனங்களில், தரிசு நிலங்களிலெல்லாம் இதே செயற்பாட்டின் நீட்சி சென்று கொண்டேயிருக்கிறது.

இது குறித்துப் பேசும் ஒரு கவிதையை இங்கு தருகிறேன். அந்தச் செயற்பாட்டுக்காக மட்டுமன்றி இக்கவிதையை அவர் சொல்லிச் செல்கின்ற அழகுக்காகவும் தெரிவு செய்திருக்கிறேன்.

கௌதம புத்தரை முதன்முதலில்
பாடப் புத்தகத்தில் நான் பார்த்தேன்
மிகவும் சாந்தமாக இருந்தார்
எந்த சந்தேகமும் அவரில் இருக்கவில்லை

அவரின் சீடர்களோ
புத்தகத்தை மட்டுமல்ல -
வரலாற்றையும் கிழித்துக் கிழித்து
மீள எழுதிக் கொண்டிருக்கிறார்கள்

புத்த பெருமான்
வீதியின் இருமருங்கிலும்
புழுதிபடியும் சிலையாகவும்
முச்சக்கர வண்டிகளின்
தரிப்பிடச் சந்திகளில்
காட்சிப் பொருளாகவும் இருந்தார்

அவருக்காக
எமது பூர்வீக நிலமெங்கும்
படைமுகாம்களை அமைத்தனர்
பின்னர் அவற்றை
விகாரைகளாக மாற்றிக் கொண்டனர்

இராணுவச் சிப்பாய்கள்
அன்று காவல்நின்ற
அரச அலுவலகங்களில்
இன்று பாதுகாப்புக்காக
சிலைகள்தாம் உள்ளன

வைப்பதற்கும் இருப்பதற்கும் இடமின்றி
இறுதியில் அவரை
வைத்தியசாலையில் அனுமதித்தனர்

ஒவ்வொரு விடுதிகளுக்குள்ளும்
வெளியிலும்
புத்தர் பகவான்
நோயாளிகளுக்காக
இரவு பகலாகத் தியானத்தில் உள்ளார்

பிரசவ கட்டிலிலிருந்து
பிரேத அறைவரை
அவர்தான் மருத்துவம் செய்கிறார்.

இந்தக் கவிதையை எழுந்தமானமாகப் பார்த்து விட்டு கௌதம சித்தார்த்தரை கவிஞர் அவமதிக்கிறார் என்று கருதினால் அது முழு முட்டாள்தனம். கௌதமர் அவமானப்படுத்தப்படுவதற்கு எதிரான குரல்தான் இந்தக் கவிதை. புத்தரை முன்னிறுத்தி அவர் அவர்கள் ஏதோ நமக்குச் சொல்ல வருகின்றனர். அதைத்தான் அஸாத்தும் சொல்ல வருகிறார்.

இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள் அநேகமானவும் 95 வீதமான கவிதைகளும் எதிர்க் குரலாகவே ஒலிக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

இதே விதமாக முஸ்லிம்கள் தமது மார்க்கத்தைத் தவறாகப் புரிந்து நடக்கின்ற, அல்லது பேச்சில் மார்க்கத்தை சரியாகப் பேசிக் கொண்டு 'தொழுவது அல்லாஹ்வுக்காக.. வைக்கோல் திருடுவது மாட்டுக்காக' என்ற பாணியில் நடந்து கொள்வது பற்றி உள்ளார்ந்த கிண்டலும் கோபமுமாய் இந்தத் தொகுதிக்குள் சில கவிதைகள் இருக்கின்றன.

இந்த வகையில் ஏமாளி இந்த நோன்பாளி என்ற தலைப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று இருக்கிறது. ஒருவரைப் பற்றிப் புறம் பேசுவது இறந்த மனிதனின் தசையைப் புசிப்பதற்கு ஒப்பானது என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள். இங்கு இக்கவிதையில் அதைச் சொல்லும் விதத்தைப் பாருங்கள்..

கண்ணியமிக்க புனித நாட்களில்
நானும் பகலில் உண்ணவில்லை
இறந்து போன இனிய நண்பனின்
மாமிசத்தைத் தவிர
சத்தியமாய் எதையுமே புசிக்கவில்லை

எச்சில் துளியுமின்றி
தாகத்தைத் தாங்கிக் கொண்டேன்
பச்சைப் பள்ளிக்குள்
பிறர் நடத்தைகளைக் கழுவி
அதை மட்டுமே
ஐவேளை பருகிக் கொண்டேன் இவ்வாறு தொடரும் இந்தக் கவிதை சப்பென முகத்தில் அறைந்து விட்டுப் போகிறது.

மார்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் மூடத்தனங்களில் மூழ்கிக் கிடப்போரின் நடவடிக்கைகளையும் ஆஸாத் தொட்டுக் காட்டுகிறார். அசேதன மார்க்கம் என்ற கவிதையில் இப்படிச் சொல்கிறார்...

பிரசவத்துக்கு மருத்துவ மனை
இனித் தேவையில்லையாம்
முதலிரவுக் கட்டிலில்
வீட்டில் பிரசவம் பார்ப்பது
பிழையா என்கிறாள்
உடலில் ஒட்டிய நவீன அபாயாக் காரி..

உடலில் ஒட்டிய நவீன அபாயாக் காரி என்ற வார்த்தையில் ஒலிக்கும் குசும்பு அவதானிக்கத் தக்கது. கவிதையின் சாரம் அதற்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்தான் கவிதையின் குரலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் நஞ்சுக் கொடி என்ற கவிதை. அந்தக் கவிதையில் காட்சிச் சித்தரிப்பு மூலம் முஸ்லிம் சமூகத்தின் மூடத்தனத்தைச் சொல்லிச் செல்லும் அழகு பிரமாதமானது. கவிதை நூலின் 49ம் பக்கத்தில் உள்ள அந்தக் கவிதையை நீங்கள் கட்டாயம் படித்து விட வேண்டும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்து ரசித்த, என்னை ஆவேசத்துக்குள்ளாக்கிய ஒரு கவிதைத் தொகுதி இது. ஏறக்குறைய எனது சிந்தனைப் போக்கையொத்த சிந்தனைப் போக்கு டாக்டர் அஸாத்திடம் இருப்பது அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசமாக நான் உணர்வது என்னவெனில் எனது எழுத்துக்களில் அதிகம் கிண்டலைப் பயன்படுத்துகிறேன். அஸாத் அதை வேறொரு விதத்தில் கையாள்கிறார். அநேகமாகவும் நோகாமலே ஊசி போட்டு விடுகிறார். போட்ட பிறகுதான் வலிக்க ஆரம்பிக்கிறது.

இலக்கியத்தில் வைத்தியத் துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காப்பியக்கோ ஜின்னாஹ், தி. ஞானசேகரன், எம்.கே. முருகானந்தன், தாஸிம் அகமது, ச.முருகானந்தன் என்று நீளும் பட்டியலில் அஸாத் எம். ஹனிபாவும் இணைந்து கொள்கிறார். வைத்தியர்களின் இலக்கியப் பங்களிப்புக் குறித்து ஒரு தனி நூல் எழுதப்படலாம். இன்னும் புதுமைப்பித்தன் கதைகளில் சமூகப் பார்வை என்று தலைப்புக் கொடுத்துக் கொண்டிராமல் இப்படியொரு தலைப்பில் பல்கலைக்கழக மாணாக்கருக்கு ஓர் ஆய்வைச் செய்வதற்கும் பேராசிரியர்கள் வழிகாட்டலாம் - சாத்தியமும் மனமும் இருந்தால்!

அஸாத் ஹனிபாவின் கவிதைகளில் குறைகளே இல்லையா என்று ஒரு கேள்வி வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் கவிதை வெளிப்பாட்டுக்கென்று ஒரு மொழி உண்டு. கருத்தும் இல்லாமல், நோக்கமும் இல்லாமல், மொழியழகும் இல்லாமல், சொல்லிச் செல்லும் வழியும் அறியாமல் அஸாத் ஹனிபாவின் கவிதைகள் சிக்கல்படவில்லை. ஆனால் ஒரு சில கவிதைகளில் மேலதிகச் சொற்களும் வாக்கியங்களும் இருக்கவே செய்கின்றன. கவிதை குறித்து ஓர் ஆழ்ந்த தெளிவு அவரிடம் உண்டு. எதிர்காலப் படைப்புகளில் அவற்றை அவராகவே தவிர்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

அசேதன மார்க்கம் என்ற தலைப்பிலான ஒரு சில முஸ்லிம்களின் மூடத்தனத்தைப் பேசும் கவிதையை அவர் இப்படி முடித்திருப்பார். 'என்னையும் அவர்கள் - உற்றுப் பார்க்கிறார்கள் - அவர்களின் தீர்ப்பை நானறிவேன்.' மூட நம்பிக்கை அல்லது பகுத்தறிவுக்குப் பொருந்தாத விடயங்கள் குறித்து எதிர்க் கருத்து இருந்தால் உடனே 'மார்க்கத்துக்கு முரணானவன்' என்ற தீர்ப்பை எழுதுவார்கள் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.

அது உண்மைதான். கவிதைகளைப் படிப்பார்கள். அப்புறம் கவிதை நூலின் தலைப்பைப் பார்ப்பார்கள். ;தம்பியார்' என்றிருக்கும் தலைப்பு அவர்களுக்கு 'நம்பியார்' என்று தெரியும்!

(18.11.2018 அன்று கொழும்பு - தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட நயவுரை)
Sunday, September 2, 2018

நல்லா பிராண்ட் தரட்டுமா?


டாக்டர் ஹாலித் முகம்மத் புகாரி

உங்களுக்கு வைத்தியரிடம் இருந்து வெளியே பாமசிகளில் வாங்குமாறு எழுதித்தரப்படும் சிட்டையைக் காட்டியதும் பாமசிகளில் கேட்கப்படும் பிரதான கேள்வி இதுதான் !

அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா? அல்லது  அத்தோடு
இந்த மருந்து பழையது அதைவிட சிறந்த புதியமருந்து ஒன்று வந்திருக்கின்றது தரவா?

இவ்வாறான கேள்விகளுக்கிடையில் வைத்தியர்களை பரிகசிக்கவோ அல்லது வைத்தியர்களின் தரத்தை கீறிக்கிழிக்கவோ உள்ள சில வசனங்களும் கூட பொருத்தப்படலாம்.

அனேகமாக ஏன் இந்தக்கேள்வி உங்களிடம் கேட்கப்படுகின்றது?

அப்படியாயின் பாமசிக்காரருக்கு தெரிந்த அந்த நல்ல பிராண்ட் டொக்டருக்கு தெரியாதா?

ஒரு கதை சொல்லி விடுவோம்.

ஒரு கடுங்குளிர்காலம் காலையில் ஒரு வயதுக்குழந்தையுடன் ஒரு தாய் எனது வீட்டிற்கு வந்தார்.

சரியான இருமல், தடிமல் டொக்டர். இரவையில தூங்குறாரும் இல்ல. கடும் கஸ்ட்டமாயிருக்கு !

பரிசோதித்துவிட்டு மூன்று வகையான மருந்துகள் எழுதிக்கொடுத்தேன் அதில் ஒன்று பிரிட்டன் சிரப்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் அதே தாய் அக்குழந்தையுடன் எனது கிளினிக்கிள் வருகிறாள். இருமல் தடிமல் கொஞ்சம் குறைந்திருக்கின்றது. தூக்கம் தான் இல்லை என்றார். அவருக்கும் தூக்கம் இல்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

சரி நான் தந்த மருந்தை தாருங்கள் என்றேன் அவர் அதை தயங்கித்தயங்கி தந்தார். அதில் நான் எழுதிய பிரிட்டன் பாணி இருக்கவில்லை. ஏன் நான் எழுதிய அந்த பிரிட்டன் பாணி வாங்கப்படவில்லை என்று கேட்ட்டேன் .
அதற்கு அவர், இல்ல டொக்டர் அது நீங்க தந்த பிரிட்டன் பாணிய விட  புதுசா ஒரு மருந்து வந்திருக்குதாம் தடிமல் இருமலுக்கு. அந்தமாதிரி மருந்தாம், புது மருந்தாம். பிரிட்டனை விட கடும் நல்லமாம் என்று லொரட்டிடீன் என்ற சிரப்பை காட்டினார்.

இல்லம்மா தடுமல் இருமலுக்கு நல்லமருந்து என்றதோட சேர்த்து பிள்ளை பிரிட்டன் மருந்துக்கு நல்லா தூங்கட்டும் எண்டுதான் நான் பிரிட்டன் சிரப்பை தந்தேன். எனக்கு லொரட்டிடீன் சிரப் தர தெரியாமலா உம்மா நான் உங்களுக்கு பிரிட்டன் சிரப் தந்தேன் என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

இல்ல டொக்டர் ஹஸ்பண்ட்தான் வாங்கி வந்திட்டாரு. எனக்கு தெரியும் டொக்டர் மன்னிச்சிருங்க.

இல்லம்மா, அதெல்லாம் பராவல்ல இந்தாங்க பிரிட்டன் சிரப் இதையும் சேர்த்துகுடுங்க. புள்ள நல்லாதூங்கும். இருமலும் 4 அஞ்சி நாளைல சரியாகிடும் என்று அனுப்பிவைத்தேன் .

நான் கொடுத்த பிரிட்டன் சிறப் 48 ரூபாய். பாமசியில் கொடுக்கப்பட்ட லொரட்டிடீன் சிரப் மட்டும் 300 ரூபாவிற்கு மேல்!.

ஒரு டொக்டர் உங்களுக்கு மருந்து தரும் போது பல விடயங்களை கவனமெடுப்பார் .

உங்களது நோயின் தன்மை, உங்களுக்கு உள்ள மற்ற நோய்களின் தன்மை, உங்களது வயது, உங்களது கிட்னி, ஈரல் போன்றவற்றின் செயற்பாட்டின் அளவு, தரப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகளும் அதன் தேவைகளும் (உதாரணமாக நான் மேலே கூறியது போல் பிரிட்டனின் பக்கவிளைவு சிறிது தூக்கத்தை ஏற்படுத்தல்)  நீங்கள் கருவுற்றிருக்கிறீர்களா? குழந்தைக்கு பாலூட்டுகிறீர்களா? உங்களது அன்றாட செயற்பாடுகள் ( பிரயாணம், பரீட்சை,  நுணுக்கமான வேலைகள்) போன்ற மேலும் பல காரணங்களோடு உங்களது சமூக பொருளாதார நிலையை முக்கியமாக கவனத்தில் எடுத்தே ஒருவைத்தியரால் உங்களுக்கு மருந்து தரப்படும் .

ஆனால்இ அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா! எனக்கேட்கும் நபரோ மேலுள்ள எந்த விடயங்களிளும் பொருத்தமான அறிவைக் கொண்டிருப்பவராக இருக்கமாட்டார். ஏனெனில் தாம் செய்வது இலங்கையில் தடை செய்யப்பட்ட  தண்டனைக்குறிய குற்றமாகும் எனத்தெரிந்துகொண்டு அதன் பாரதூரங்களை அறியாமல் தன் சுயநலத்திற்காக ஒரு குற்றமிழைக்கும் குற்றவாளியே அவர். எமது நாட்டின் சட்டத்தின் ஓட்டைகள் மட்டும் இல்லாவிட்டால் அல்லது வெளிநாடு ஒன்றில் என்றால் கனகாலம் கம்பி எண்ணும் ஒருவராய் இருப்பார்.

இவர்களது அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா என்று கேட்பதற்கான காரணங்கள் பல..

1-விலைகூடுதலான மருந்துப்பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடுதல்

2-அவர்களுக்கு சிறப்பு கொமிசன், சலுகைகளை வழங்கும் மருந்துகளை உங்களுக்கு தள்ளி விடுதல்

3-இலாபம் கூடுதலான மருந்துவகைகளை உங்களுக்கு புகட்டி விடுதல்.

4-ஸ்டொக் அதிகமாக எடுக்கப்பட்ட மருந்துகளை குறைத்துக்கொள்ளல்.

5-திகதி காலாவதியாகும் மருந்துகளை முன்கூட்டி தீர்த்துவிடல்.

6-நீங்கள் கேட்ட அந்த மருந்து அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டியும் சில புனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் டொக்டரை விட தமக்கு நிறைய விடயங்கள்தெரியும் என்ற தனது மூளையின் மகுடிக்கு ஆடுபவர்கள்.

அத்தோடு சிலர் மெடிக்கல் ரெப் சொல்லுவதையெல்லாம் நம்பி, மக்களுக்கு நல்லதைக்கொடுக்க போராடும் தியாக செம்மல்கள்

கவனம்
அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா !

என்பது உங்களுக்கு, அல்லது உங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தாய் முடியலாம்.

அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா ! என்ற
இவ்வாறான குழப்பங்கள் தோன்றினால் உங்கள் வைத்தியரிடம் கலந்தாலோசித்து முடிவை எடுங்கள்!

02

எழுதப்பட்ட ஒரு குளிசையின் பிராண்ட் இல்லாதவிடத்து எந்த 
வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனப் பொருளைக்கொண்ட வேறு 
பிராண்ட் பாவிக்கலாமா?

பாமசிகளை குறைகானும் எந்த நோக்கமும் தேவையும் எனக்கில்லை.

எனது நோக்கம் அப்பாவி மக்களுக்கு அறிவூட்டுவதே ஒழிய குற்றம் இழைக்கும் பாமசிக்காரர்களை வம்புக்கிழுப்பதோ, அல்லது அவர்களுடன் யார் அறிவாளி என்று மோதுவதோ, அல்லது அவர்களை திருந்தச்சொல்வதோ, அல்லது அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோ நோக்கம் அல்ல அதை இறைவனும், சட்டமும் பார்த்துக்கொள்ளட்டும்

உங்களுக்கு யாராவது பாமசி நடத்தும் நன்பர்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள்.  அங்கே நடக்கும் அநியாயங்களை, கொள்ளையைப்பற்றி நான் சொல்பவை உண்மையா இல்லையா என விளங்கும். சிலர் பாமசிகளில் நடக்கும் இக்கொடுமைகளை அவர்களது வியாபார தந்திரம் என்று தற்புகழ்ச்சி அடைந்துகொள்வர்.

இலங்கை போன்ற சட்டம் காலுக்கு கீழ் போட்டு மிதிக்கப்பட்டாலும் எதுவும் நடந்துவிடாத நாட்டில், பெரும்பாலான பாமசிகள் ஆங்கில மருத்துவத்திற்கு ஒரு கேடு என்றே சொல்லமுடியும். ஆனால் மிகச்சிறந்த நம்பிக்கையான பாமசிக்களும் மிகச்சிறந்த விடய அறிவுடைய பாமசிஸ்ட்களும் டிஸ்பென்சர்களும் இல்லாமல் இல்லை.

பாமசிக்களில் நடக்கும் திருகுதாளங்கள் எல்லாவற்றையும் பற்றி நான் கதைக்க வரவில்லை அவ்வாறு கதைக்கபோனால் ஒரு பெரும் புத்தகம் எழுதும் அளவு திருகுதாளங்களால் நிரம்பி வழிகின்றது சில பாமசிக்கள் இவைத்தியரினால் எழுதப்படும் வெளிச்சிட்டைகளில் என்னவெல்லாம் நடக்கும் எனத்தான் சொல்லவருகின்றேன் இ எப்படியெல்லாம் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதே எனது இன்றைய தலைப்பு.

ஆங்கில மருந்துகள் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்ய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை(யேவழையெட (National Medicine Regulatory Authority) பல சட்டங்களை இயற்றி அதனை மீறினால் கடும் தண்டனைகளையும் பிரேரித்திருக்கின்றது. ஆனால் இச்சட்டங்கள் மீறப்படாத பாமசி ஒன்றை இலங்கையில் தேடிக்கண்டுபிடித்தல் மிகக்கடினமானது.

கதை ஒன்றைச்சொல்லிவிடுவோம்...

2016ஆம் ஆண்டில் கொழும்புக்கு வேலைமாற்றம் பெற்று வந்து விட்டேன். வந்ததன் பிற்பாடு எந்தவொரு பிரைவட் கிளினிக் செய்வதிலிருந்தும் பிரைவட் ஹொஸ்ப்பிட்டலில் வேலை செய்வதிலும் ஈடுபடவில்லை.(காரணங்கள் மிகப்பல பிறகு ஒரு பதிவில் சொல்கிறேன்) அதனால் தேவைப்படும் மருந்துகளை பாமசிக்களில் வாங்கிக்கொள்வேன்.

அன்று வீட்டில் ஒருவருக்கு கால்வலிக்கு பாவிப்பதற்காக டைக்குளொபெனக் எனும் வலிமாத்திரை தேவைப்பட தெமட்டகொட வீதியில் உள்ள ஒரு பாமசிக்கு சென்றேன் (அங்கே நான் டொக்டர் என்று தெரியாது) .
டைக்குளொபெனக் டெப்லட் ஒரு கார்ட் தாங்க என்றேன். அதிலும் நான் ஒரு பிராண்டைச்சொல்லிக்கேட்டேன் அது இல்லை என்று வேறு ஒரு பிராண்ட் இருப்பதாகவும், நல்லபிராண்ட் என்றும் ஏதோஒரு நாட்டின் பெயரையும் சொன்னார். எவ்வளவு என்று கேட்டேன் ஒரு டெப்லட்டின் விலை மாத்திரம் 80 ரூபாய். நான் கேட்ட பிராண்ட் ஒரு டெப்லட்டின் விலை ஒரு ரூபாய் கூட இல்லை. சரி விலைகுறைந்த பிராண்ட் ஒன்றும் இல்லையா என்றேன். இது தான் எங்களிடம் தற்போது உள்ள விலை குறைந்த பிராண்ட் என்றார்.
வேண்டாம் என்று விட்டு வேறு பாமசிக்கு சென்றுவிட்டேன்.

இந்த பாம்சிக்காரர் எவ்வாறு சட்டத்தை மீறுகிறார் என்று பாருங்கள்..

1- நான் கேட்ட உடனே டொக்டரின் சிட்டை இல்லாமல் எனக்கு மருந்தை தரமுற்படுகிறார் (மிகவும் ஒரு தண்டனைக்குரிய குற்றம். போதைமாத்திரைகளின் ஆதிக்கத்துக்கு வழிகோளியது இதுவே)

2- வேறு ஒரு பிராண்ட் இருக்கின்றது என்று அவரது விலைகூடிய மருந்தை என்னில் திணிக்கப்பார்க்கிறார் (உண்மையில் அவ்வாறு இல்லாவிடில் நான் கேட்ட அதே பிராண்டின் விலையை என்னிடம் சொல்லவேண்டும். அத்தோடு அவரிடம் உள்ள மற்ற அதே இரசாயன மருந்தின் பிராண்ட்களின் விலைப்பட்டியலை தரவேண்டும். அதில் ஒன்றை நான் தேர்வுசெய்ய இடமளிக்கவேண்டும்)

3- டைக்குளொபெனக் போன்ற ஓரு அவசியமான மருந்தின் பொதுமருந்து வகையை  (Generic medicine) தமது பாமசியில் வைத்திருக்காமல் விலைகூடியவகை மாத்திரை ஒன்றைமட்டும் வைத்திருத்தல்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் சட்டம் 2015-5 , சரத்து 56 இன் படி ஒரு வைத்தியர் ஒரே ஒரு இரசாயனப்பொருள் கொண்ட ஒரு மருந்தின் பொதுப்பெயரையே (Generic name) எழுதவேண்டும். இங்கே அவர் விரும்பினால் அந்த இரசாயனத்தைக்கொண்ட தான் விரும்பும் பிராண்ட் (Brand name)  ஒன்றை குறிப்பிட முடியும். அவ்வாறு பிராண்ட் எழுதப்பட்டிருந்தால் இங்கே பாமசிக்காரர் இதை விட சிறந்த பிராண்ட் இருக்கின்றது தரவா எனக்கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பிராண்ட் இருக்குமிடத்து அவர் அதை தரவேண்டியது கடமை. அந்த பிராண்ட் இல்லாவிடில், எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் அதே இரசாயன மருந்தை மாத்திரம் கொண்ட மற்ற ஏதாவது பிராண்டை உங்களின் விருப்பத்தோடு தரமுடியும். ஆனால் அவர் தன்னிடமுள்ள மற்றய ப்ராண்டுகளினதும்  இலங்கை அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினதும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனத்தைக்கொண்டுள்ள மற்றய பிராண்டுகளினதும் விலைகளை உங்களுக்கு தெரிவித்து அதில் உங்களை தெரிவு செய்யச்சொல்லலாமே ஒழிய பாமசிக்காரர்கள் இது நல்லது இதை எடுங்கள் என்று உங்களை கட்டாயப்படுத்தவோ அல்லது உங்களை மடக்கவோ முடியாது. அவ்வாறு செய்யமுற்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒன்றுக்குமேற்பட்ட இரசாயன மருந்துகளின் கலவையைக் கொண்டுள்ள மாத்திரைகளை அல்லது மருந்துகளை எழுதும் போது வைத்தியர்கள் இவ்விரசாயனப் பெயர்களைக்கொண்ட பொதுப்பெயர்களை (Generic name) எழுதவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிராண்ட் பெயரைமட்டும் எழுதினாலே போதுமானது. இவ்வாறான நிலைகளில் குறித்த பிராண்டைத்தவிர வேறு எதையும் பாமசிக்காரர் தருவது குற்றமாகும்.

இதே மருந்தில் வேறு பிராண்ட் தருகிறோம் என்று விட்டு அதையொத்த ஆனால் இரசாயன ரீதியில் வேறுபட்ட மருந்துகளை தந்து விடுவதில் தான் பாமசிக்காரர்கள் உங்களை ஏமாற்றிவிடுகிறார்கள்.

எழுதப்பட்ட ஒரு குளிசையின் பிராண்ட் இல்லாதவிடத்து எந்த வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனப்பொருளைக்கொண்ட வேறு பிராண்ட் பாவிக்கலாமா?

இப்போது நீங்கள் ஆம் என்ற விடையை தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள்

(வைத்தியரின் முகநூல் குறிப்புகள்)

Friday, May 25, 2018

தாயத்து கட்டு... தாகம் தீரும்!

எண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒரு காட்சி.

கொழும்பில் தோட்டம் - தோடம் என அழைக்கப்படும் நெருக்கடிப் பட்டு வாழும் பகுதிக்குல் பல வீடுகளை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கும் 'சொர்ணக்கா'வான தோட்டத்து ராணியின் மகன் அதே தோட்டத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டில் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடிவிடுவான். தாயாரான தோட்டத்து ராணி 'மை வெளிச்சம்' பார்க்கும் ஒரு நபரிடம் போய் மகனும் அந்த இளம் பெண்ணும் எங்கிருக்கிறார்கள் என்று அறியச் செல்கிறாள்.

மை வெளிச்சம் பார்ப்பவர் அவராகப் பார்த்துச் சொல்வதில்லை. பருவமடையாத சிறுவனை அல்லது சிறுமியொருத்தியைத்தான் பயன்படுத்துவார்கள். வாயகன்ற ஒரு போத்தலில் நீர் நிரப்பி அதற்குள் கண் இமைக்காமல் உறுத்திப் பார்க்கச் சொல்லியபடி தாம் வாயால் ஒரு காட்சியை உருவாக்கி பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனுக்கோ சிறுமிக்கோ சொல்லிக் கொண்டேயிருந்து விட்டு இப்போ எங்க இருக்கிறான், என்ன செய்கிறான் என்று கேட்பார்கள். பார்வைப் புலனை நீருக்குள்ளும் கேள்விப் புலனை மைவெளிச்சம் பார்க்கும் நபரின் குரலிலும் ஒன்றித்துக் கொண்டுள்ள அவர்களுக்கு அதுவே உலகமாய் மாற அவர்கள் கண்ணுக்குப் புலப்படும் மாயக் காட்சியைச் சொல்லத் தொடங்குவார்கள். இதை பெருமளவில் நம்பிப் பலர் அடிபிடிப்பட்டிருக்கிறார்கள். குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. நட்புக்கள் அறுந்து போயிருக்கின்றன.

ஆனால் நாடகத்தில் நீருக்குள் பார்த்துக் கொண்டிருந்த பையன், என்ன தெரிகிறது என்று கேட்ட போது 'வீவா' தெரிகிறது என்பான். சபை கொல்லெனச் சிரிக்கும். அந்த நாட்களில் பிரபல்யமாயிருந்த வீவா மாவு வந்த போத்தல் அது. அதன் அடிப்பகுதியில் 'Viva 'என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். அதைத்தான் அந்தப் பையன் சொன்னான். மை வெளிச்சம் பார்ப்பதே ஒரு டுபாக்கூர் வேலை என்பது வெளியானதைப் புரிந்து கொண்டுதான் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

20ம் நூற்றாண்டில்தான் இவ்வாறு ஏமாற்றுவதற்குக் கில்லாடிகளும்  ஏமாறுவதற்கு மக்களும் இருந்தார்கள் என்றால் 21ம் நூற்றாண்டிலும் போலி வைத்தியர்கள், போலிச் சாமியார்கள், போலி மந்திர வித்தைக்காரர்கள், ஜின் வைத்தியர்கள் நிறைந்து போயிருப்பதுவும் அதை ஒரு மக்கள் கூட்டம் நம்பியிருப்பதுவும்தான் வேடிக்கை.

மேலே நான் சொன்ன சம்பவம் போன்று என் வயதொத்த என் வயதுக்கு மூத்த நபர்களுடன் உரையாடினீர்கள் என்றால் பல நூறு கதைகளையும் டூப்பு விளையாட்டுக்களையும் சொல்லிச் சிரிப்பார்கள். பலர் மூளை என்ற ஒன்றைப் பயன்படுத்தாமலேயே மாட்டிச் சித்திரவதைப்பட்ட ஆயிரமாயிரம் கதைகள் சமூகத்துக்குள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

இதன் அடிப்படையைப் பற்றி மேலோட்டமாகச் சிந்தித்தாலே மனிதனின் பேராசை, வேகமான  வழியில் முன்னேறுதல், எதிராளிக்கு அடையாளம் தெரியாமல் துன்பம் இழைத்தல், வேண்டப்படாத ஒருத்தனைப் பழி வாங்குதல் போன்ற மனித மனத்தின் குரூரங்களை வெளிப்படுத்த பேராசை கொண்டலையும் மனதைத் திருப்திப்படுத்த என்றுதான் இந்த முயற்சிகள் யாவும் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது வடிகட்டிய சுயநலத்துக்காகவே இவ்வாறான நியாயத்துக்கு முரணான, இயற்கைக்கு முரணான, மனச்சாட்சிக்கு முரணான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை தௌ;ளத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இருபது வருடங்களுக்கு முன்னர் எனக்கும் ஒரு போது ஓர் அற்புதமான அனுபவம் கிடைத்திருக்கிறது!

பொருளாதார முடை பற்றி நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர்தான் என்னை பலவந்தமாக அந்த ஹஸரத்திடம் நேரம் குறித்து அனுப்பி வைத்தார். அங்கு சென்ற போது ஆண்களும் பெண்களும் ஏகப்பட்ட பொருட்களுடன் (தெம்பிலிக் குரும்பை, வெற்றிலை, தேசிக்காய்கள், மெழுகுச் சீலை, நாடாக்கள்.....) என்னைக் கண்டதும் உடனடியாக ஹஸரத்துக்குத் தகவல் சென்றது. பத்து நிமிடத்துள் அழைக்கப்பட்டேன். பொருளாதார முடையைச் சொன்னேன். 20 தேசிக்காய், 3 தெம்பிலி, ஒரு பகழி வெற்றிலை ஆதியவற்றுடன் மீண்டும் வரும்படி அடுத்த வாரத்தில் ஒரு திகதியைத் தந்து விட்டுத் தனது பதிவேட்டில் குறித்துக் கொண்டார். ஆயிரம் ருபாய்த் தாளை நீட்டினேன். முன்னால் வைக்கச் சொன்னார். வைத்து விட்டுத் திரும்பினேன்.

குறித்த திகதியில் சென்ற போது பொருட்களை அவரது உதவியாளர் பெற்றுக் கொண்டார். உள்ளே சென்றதும் ஹஸரத் வரவேற்றார். பதிய எழுதப்பட்ட ஒரு சிறிய செம்புத் தகட்டைத் தந்து, 'இது மட்டும் போதும். இதை பணப்பை (பேர்ஸ்)யில் ஒரு வெள்ளைக் கவரில் போட்டு வைத்திருங்கள் என்று தந்தார். மீண்டும் ஓர் ஆயிரம் ருபாவை வைத்து விட்டு வந்தேன். இனி எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விடும் அல்லவா?

இது நிகழ்ந்து மூன்றாவது வாரம் மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கொண்ட விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது எனது பேர்ஸ் தொலைந்து போயிருந்தது, இரண்டாயிரத்துச் சொச்சம் ருபாய்ப் பணத்துடன் அந்த செம்புத் தகடும் அதற்குள்தான் இருந்தது!

25.05.2018 

Wednesday, May 2, 2018

ஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'


ஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து படிப்பதற்கு ஷாமிலாவின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' என்னைத் தூண்டியிருக்கிறது.


ஷாமிலாவின் முதலாவது கவிதைத் தொகுதியான 'நிலவின் கீறல்க'ளுக்கும் இன்று அறிமுகப்படுத்தப்படும் மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'க்குமிடையில் ஷாமிலாவின் கவிதைப் பரப்பின் எல்லை விசாலித்திருப்பதை உணர்கிறேன். இந்த நூலில் உள்ள கவிதைகள் ஷாமிலாவிடம் பெற்றுக் கொண்டு வெளிவந்திருக்கும் வார்த்தைகள் மிகத் தெளிவானவை. ஷாமிலாவின் கல்வியியல், சமூகவியல், குடும்பவியல் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றுக் கொண்டு வந்திருப்பதைப் போலவே அவரது கவிதை வெளியும் விசாலித்துச் செழித்து வளர்ந்திருக்கிறது.

கவிதைகளை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு போகும் போது 28ம் பக்கத்தில் நான் தரிக்க நேர்ந்தது. 'என் இலக்கிய நிலம்' என்ற கவிதையின் முதற் பந்தி என்னைத் தரிக்க வைத்தது. அந்தக் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.

எழுத்தில் உடல் விதைத்து
அதைக் கொண்டாடியபடி
கவிதை அறுவடை நடக்கிறதெனில்
என்னுடைய இலக்கிய நிலம்
தரிசாய்க் கிடக்கட்டும்

இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு பாரிய எல்லை கொண்ட ஒரு சிந்தனை வெளி உருக்கொள்கிறது. உடலுக்குள்; இருக்கும் மனமும் அதன் எண்ணங்களும் அது தூண்டும் செயற்பாடுகளும் எழுதித் தீர்க்க முடியாத நிலையில் ஒரு பேரழியாய் பெருஞ் சமுத்திரமாகக் கிடக்கையில் எங்கோ ஓர் இடத்தில் ஆற்றின் நடுவே, அல்லது கடலின் நீர் குறைந்த நீர்ப்பரப்பின் மத்தியில் இருக்கும் ஒரு தீவு பற்றிப் பேசுவதே உடல் விதைக்கும் எழுத்து.

உடல் விதைக்கும் எழுத்து தப்பா என்றால் இல்லை. எப்போது இல்லை என்றால் சகதிக்கு அருகே சகதி படாமல் நடக்கும்போது அது தப்பாக இருக்காது.

இது அவசர உலகம். எல்லாமே அவசமாக நடக்க வேண்டும், எதுவுமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என்று தூண்டல் கொண்ட இடத்துக்கு வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு வந்து விட்டிருக்கிறது நவீன உலகம். உடனடியாகவே கவிதை எழுதி, உடனடியாகவே கட்டுரை எழுதி, உடனடியாகவே சிறுகதை எழுதி உடனடியாகவே உலகப் புகழ் பெறவேண்டுமானால் அதற்கு மிகவும் பொருத்தமானது உடல் விதைக்கும் எழுத்து.

இந்த எழுத்து ஒன்றும் புதியதல்ல. இப்போதும் உடல் விதைக்கும் எழுத்தை படைப்பாளிகள் 'சரோஜா தேவி' எழுத்து என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன்னர் இத்தகைய எழுத்துக்கள் அடங்கிய பிரசுரங்கள் பெட்டிக் கடைகளில் விற்பனைக்காகத் தொங்க விடப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இவற்றை எழுதுவதற்கென ஒரு எழுத்தாளர் குழு இருந்தது. அச்சிடவும் வெளியிடவும் ஒரு பட்டாளமே இயங்கியது.

அன்று அந்த எழுத்து பணத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்று நவீன இலக்கியம் என்ற பெயரால் உடனடிக் கவனம் பெறவும் உடனடிப் புகழ் பெறவும் இந்த எழுத்துப் பயன்படுத்தப்படுகிறது. நோக்கம் பன்முகமானது இல்லை என்பதாலும் எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதாலும் இந்த எழுத்து ஒரு சிறிய சுழல் காற்றுக்கு மேலெழும் சருகுபோல் எழுந்து சட்டெனக் கீழே வந்து விடுகிறது.

அதைத்தான் அதே கவிதையில் இப்படிச் சொல்கிறார்:-

எனது நிலம் ஒரு போதும் துண்டாடப்பட முடியாதது
பருவம் கடந்தாலும் பயிர் விளையும்
பக்குவத்தைக் கொண்டுள்ளது.

ஒரு சிறு காற்றில் விதை பரவி
செழித்து எழுந்து வீச்சு மிக்கதாய்
என் நிலம் வளங்கொழிக்கும்.

எழுத்து வல்லமையும் மொழி வாலாயமும் இருக்கும் எவரும் அவசரப் புகழுக்கு ஆசைப் பட்டு அசூசை கொண்ட இலக்கியம் படைக்கத் தேவையில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இந்நூலின் 35ம் பக்கத்தில் இதை இன்னும் உறுதியாகவும் தெளிவாகவும் பேசுகிறது மற்றொரு கவிதை. 'கவிதை எழுத்து' என்ற அந்தக் கவிதை.

மௌனத்தைக் கலைத்து
விரதத்தை உடைத்து
சமயத்தை அடகு வைத்து
சாக்கடைகளை
எழுத்தில் கொண்டுவரவேண்டிய தேவையை
ஒருக்காலும் உணரப் போவதில்லை
ஒழுக்கமற்ற எழுத்துக்களை
யார்தான் விரும்பப் போகின்றனர்
விரும்புவோர் குறித்தும் கவலையில்லை
மருந்து குடித்தால் குணமாகிவிடும்
வருத்தமல்லவே எழுத்து

நானும் மீன்காரனும் என்றொரு கவிதை நூலின் 63ம் பக்கத்தில் உள்ளது. ஷாமிலாவுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எனக்கும் 25 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. தன்னிடம் கற்ற மாணவன் கற்றலை விட்டதற்காக அவனிடம் கவலைப்பட்ட போது உங்களது மாதச் சம்பளத்தை நான் நான்கு நாளில் உழைக்கிறேன் என்கிறான். நான் கற்பித்த காலத்தில் துடுக்குத் தனம் மிகுந்த ஒரு மாணவனால் நான் பட்ட அவஸ்தை சொல்லுந்தரமன்று. எனது பாடசாலைக் கற்பித்தல் நேரத்தில் பாதி நேரம் அவன் சம்பந்தப்பட்;ட பஞ்சாயத்திலேயே கழிந்திருக்கிறது. பாடசாலையை விட்டு விலகிய அவன் மூன்று வருடங்களுக்குப் பிறகு பாடசாலை விளையாட்டுப் போட்டியைக் கேள்விப்பட்டு என்னை வந்து சந்தித்தான். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். விளையாட்டு விழா பற்றிய அழைப்பு அடங்கிய நிகழ்ச்சி நிரலை அச்சிட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டேன். எவ்வளவு வரும் என்று கேட்டான். 600 ருபாயளவில் வரும் என்றேன். பணப்பையைத் திறந்து ஆயிரம் ருபாய்த் தாளை உருவி என் முன் மேசையில் வைத்து விட்டுப் போனான். அப்போது எனக்கு மாதச் சம்பளமே 600 தான்.

ஷாமிலாவின் கவிதை பேசுவது கல்வியை விட அவசரமாகப் பணம் உழைப்பதற்கு ஆர்வப்படும் நிலைதான் பெரும்பாலும் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது என்ற கவலையை. இன்றைய அவசர பண உழைப்பு எப்போதும் நிலையாக இருக்காது. ஆனால் கற்றுத் தேர்ந்து ஒரு நிலைக்கானபின் அதன் மூலம் கிடைக்கும் ஒரு தொழில் போனால் மற்றொரு தொழிலை அக்கல்வி பெற்றுத் தரும் என்ற அறிவு அல்லது தெளிவு இன்றைய இளைஞர் தலைமுறையினரிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதைத்தான் ஷாமிலாவின் நானும் மீன்காரனும் கவிதை சொல்லுகிறது.

இந்த நூலில் அரசியல் என்று ஒரு சிறிய கவிதை உண்டு. இதைப் படித்ததும் மருதமுனை ஹரீஸாவின் பெண் பூச்சி என்ற கவிதை ஞாபகம் வந்தது. இரண்டு கவிதைகளும் பூச்சியைக் குறியீடாகக் கொண்டு பேசுகின்றன. இரண்டு கவிதைகளினதும் இறுதி வரிகள் ஒரு கஸல் கவிதையைன் ஈற்றடியை ஒத்தனவாக அமைந்திருக்கின்றன. ஹரீஸாவின் கவிதை இப்படிப் பேசுகிறது..

விறகுக் கட்டுகளிலும்
ஒத்தாப்புத் திண்ணையிலுமாய்
அடிபட்டு அடிபட்டு
தன் தலையை முட்டி மோதி
ராவெல்லாம் ஓங்கியடித்தது கதவை

ராவு ஒழிந்தபின்
தகட்டுக் கதவைத் திறந்து பார்த்தேன்
முதுகைத் தேய்த்தபடி
மல்லாக்கக் கிடந்தது பூச்சியொன்று

சிறகுண்டு
எட்டுக் கால்களுண்டு
ராவுண்டு பகலுண்டு
வானமுண்டு எல்லையில்லை
பின்
உனக்கென்ன பூச்சி?

பூச்சி சொன்னது
நான் பெண் பூச்சி என்று!

ஆனால் ஷாமிலாவின் பூச்சி அரசியலைக் குறியீடாகக் கொண்டது.

காற்றுவரத் திறந்துவைத்த கதவிடுக்கால்
கரப்பான் பூச்சி
பாதணி கொண்டும்
தும்புத்தடி கொண்டும் அடிக்க முயற்சித்து
புரட்டி விட்டேன்
ஓட முடியவில்லை மல்லாந்து கிடக்கிறது
நிமிர்ந்து விடத் துடிக்கிறது
தானாகப் புரண்டு கொள்ளவியலாது
வட்டமிட்டு நேரத்தைக் கடத்துகிறது
காலால் மிதித்துவிட
அருவருப்பால்
வெளியே எத்தி விடுகிறேன்
காகம் கொத்திச் செல்கிறது.

ஹரீஸாவின் கவிதை படித்தவுடன் புரிந்து கொள்ளக் கூடியதான இருக்கிறது. ஷாமிலாவின் கவிதை என்னை நிறையச் சிந்திக்க வைத்தது. அரசியல்வாதியைப் பேசுகிறதா, அரசியலில் புகுந்து கொள்ள இடுக்குகளுக்குள்ளால் நுழைந்து கொள்ள முனைவோரைப் பேசுகிறதா என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் வெளியே போட்டால் காகத்தால் கொத்திச் செல்லத் தக்கதான ஒருவரையோ பலரையோ இது குறிப்பதாகத்தான் நினைக்க முடிகிறது.

மறைக்கப்பட்ட சொற்களின் அழகு கவிதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாக அமைந்திருப்பது 'என்னாடை' என்ற கவிதை. அதில் பெரிதாகக் கவித்துவம் வழிந்தோடவில்லை. ஆனால் அக்கவிதை பேசுகின்ற விடயமும் பேசுகின்ற முறையும் உண்மையில் நயக்கத் தக்கதாகத்தான் இருக்கிறது. நயக்கத்தக்கதாக அமைந்து விட்டால் அது ஒரு நல்ல கவிதைதான்.

இக்காலத்தில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றி அந்தக் கவிதை பேசுகிறது.

என்னுடைய தனிப்பட்ட கருத்தில் இந்த ஆடையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்காக இன்னொருவரின் சுதந்திரத்தில் தலையிட்டு அதை நிராகரிக்கச் சொல்லும் உரிமையும் எனக்குக் கிடையாது.
பாதி மார்பகங்களும் அரைவாசி அடித்தொடைகளும் தெரிய அணிந்து செல்லும் ஆடைகள் பற்றி யாருக்கும் எந்த உறுத்தல்களும் இல்லை. முஸ்லிம் பெண்களை நோக்கி இலங்கையருக்குரிய ஆடைகளை அணியுங்கள் என்று சொல்லும் யாருக்கும் அரை குறை ஆடையணிவோரைப் பார்த்து அப்படிச் சொல்லத் துணிவு வருவதில்லை. இந்த விடயத்தைத்தான் ஷாமிலா மிக வினயத்துடன் மனிதனுக்குரியஆடைத் தெரிவுச் சுதந்திரத்துக்கான நியாயத்தை முன் வைத்துக் கேள்விகளாக எழுப்புகிறார். அந்தக் கேள்விகளுக்கூடே முஸ்லிம் பெண்களுக்குரிய ஆடையை விமர்சிப்பதானது குறிப்பாக முஸ்லிம் பெண்களது சுதந்திரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார்.

அந்தக் கவிதையில் இப்படி வருகிறது:-

என் சுதந்திரத்தில்
என் விருப்பத்தேர்வில்
எனக்குப் பிடித்தமானதில்
மற்றவர் விருப்பு வெறுப்புக்களை
ஏன் திணித்துவிட முயல்கின்றார்கள்

உங்கள் பிரச்சனைதான் என்ன
நானா
நான் அணிகின்ற ஆடையா
அல்லது பின்பற்றும் மதமா?

உங்கள் சுதந்திரத்தில்
நான் தலையிடாமல் இருப்பது போல்
என் சுதந்திரத்திலும் நீங்கள்
தலையிடாதிருங்கள்

இது என் வாழ்க்கை
எனக்குப் பிடித்தமான மாதிரித்தான்
வாழ முடியும்

என் ரசனைக்கேற்பவே நான்
ஆடையணிகிறேன்
உங்கள் ரசனைக்கேற்ப
நீங்கள் அணிந்து கொள்ளுங்கள்!

இந்தத் தொகுதியிலிருந்து பதச்சோறாகச் சில கவிதைகளை முன் வைத்துப் பேசியிருக்கிறேன். எல்லாக் கவிதைகளையும் ஒரே உரையில் கொண்டுவருவதும் சாத்தியம் அல்ல.

கவிதை என்பது மிகச் சுருக்க மொழியாலானது. சொல்ல வந்த விடயத்தைச் சொல்வதற்குத் தேவையான சொற்களை மாத்திரம் பயன்படுத்தும் போது அது அழகுபெறும். ஷாமிலாவின்  கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சொற்கள் இல்லை என்ற போதும் ஒரு சில கவிதைகளில் தவிர்த்திருக்க வேண்டிய சொற்;கள் இருக்கின்றன என்று காண்கிறேன். இன்னொருமுறை இக்கவிதைகளை ஷாமிலா வாசிக்கும் போது அவற்றை அடையாளம் காண முடியும்.

பொதுவாக ஷாமிலாவின் கவிதைகளின் அடிநாதமாக அறச்சீற்றத்தை நான் உணர்கிறேன். இது முழு மனித சமூகத்தையோ அல்லது தனது சமூகத்தையோ நோக்கிய அறச்சீற்றமாக அல்லாமல் ஒரு சில தனி நபர்கள், ஒரு சில குழுமங்களை நோக்கியதாகவே இருக்கக் காண்கிறேன். இது வழமையாக கவிதைத் தொகுதிகளில் காணக் கிடையாக்கத ஒரு பண்பு.

அறச்சீற்றமானது பொதுவாகப் படைப்பாளிகளுக்குள்ள ஒரு பொதுப் பண்பாயிருப்பினும் எல்லோரும் அதை வெளிக்காட்டுவதில்லை. தன் பெயர் கெட்டுவிடும், தனது பொன்னாடை தவிர்க்கப்பட்டுவிடும், எனது இடம் கீழே சென்று விடும், எனக்குக் கிடைக்கவிருக்கின்ற பட்டம் தவறிவிடும் அவர் என்ன நினைப்பார், இவர்கள் என்ன நினைப்பார்கள், என்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பன போன்ற அற்பத் தனங்களை மனதில் கொண்டோர் எந்த விதமான ஒரு குற்றத்தையும் பாவத்தையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். இது அந்தப் பாவத்துக்குக் குற்றத்துக்கு இணையான ஒரு செயலாகும்.

எதுவும் ஆகிறதோ இல்லையோ நூறு எதிர்க்குரல்களில் என்னுடைய குரலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அதற்காக இயங்குவதுமே உன்னதமான இலக்கியத்தின் அச்சாகவும் அசைவாகவும் இருக்கும். மனித குலத்துக்காகக் குரல் தரும் அதிசிறந்த மனத்தின் செயற்பாடாக இருக்கும். அந்த மனம் ஷாமிலாவிடம் இருக்கிறது என்பதை இந்தத் தொகுதியின் கவிதைகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

29.04.2018

Wednesday, September 27, 2017

யாரும் மற்றொருவர்போல் இல்லை!


எப். எச். ஏ. ஷிப்லி (கவிஞர் நிந்தவூர் ஷிப்லி)
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகம் 

பன்முக இலக்கியவாதி, சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர் என பல்துறை ஆளுமை கொண்ட  அஷ்ரப் சிஹாப்தீன் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இளமை நதி. வற்றாத அறிவியல் ஊற்று.பல்துறைகளிலும் ஆழமாக் காலூன்றி, வேரூன்றிய கலை ஜாம்பவான்..

அவரதுபத்தாவது நூலாகவும்,மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலாகவும் அண்மையில் வெளியாகியது“யாரும் மற்றொருவர்போல் இல்லை”எனும்மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி.யாத்ரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டஇந்த நூலில் முப்பது நாடுகளைச் சேர்ந்த 49 கவிஞர்களின் ஐம்பது கவிதைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. நூலினைநூலாசிரியர் அவரது தாய்வழிப் பாட்டனார் புலவர் மஹ்மூது அப்துஸ்ஸமது ஆலிம் அவர்கட்கு சமர்ப்பித்துள்ளார்.

இளைய இலக்கியவாதிகளை மனமாரப்பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தும் மூத்த இலக்கியவாதிகளில் அஷ்ரப் சிஹாப்தீன் முக்கியமானவர். அதற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நூற்றுக்கணக்கான இளைய எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை ஊக்கப்படுத்தியமைமுக்கிய சான்று.

இந்த நூலில் இடம்பெற்றுள்ளமொழிபெயர்ப்புக் கவிதைகளின் கவிதைத்தேர்வுகளை வாசிக்கின்றபோது தனிமனித உணர்வு சார் கவிதைகள், காதல் கவிதைகள், யுத்தமும், அதன் கோர நகங்கள் பதித்த வலிமிகுந்த கீறல்கள் தொடர்பான கவிதைகள், அரசியல் சார் கவிதைகள், வாழ்வியலையும், அழகியலையும் பேசக்கூடிய கவிதைகள், மனிதாபிமானம் தொடர்பான கவிதைகள், புரட்சி விதைகளை விதைக்கின்ற கவிதைகள் என்று பல கோணங்களிலும் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவாக்கம் பெற்றதை அவதானிக்கலாம். அதேபோலகானா, பங்களாதேஷ், பாரசீகம், நமீபியா, போஸ்னியா, பாலஸ்தீன், நேபாளம், பாகிஸ்தான், சிரியா, ஆப்கானிஸ்தான், குர்திஷ், அமெரிக்க, கென்யா, நைஜீரியா, தன்ஜானியா, அல்பேனியா, எகிப்து, கியுபா உள்ளடங்கலாகநாம் இதுவரை வாசிக்காத, நமது தமிழ் வாசிப்புச் சூழலுக்கு அதிகம் பரிச்சயமில்லாத பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்படுள்ளன.

Translation என்ற வார்த்தை "translatio" என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பிரதியின் அர்த்தத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பிரதிக்கு இணையான’ என்ற பிரயோகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும். ஏனென்றால் அதுவே ‘பிரதிக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது.

இந்த நூலில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பு உத்தியைப் பார்க்கின்ற போது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான பண்பு “எளிமை” அதாவது எளிய சொற்கள். நோபல் பரிசு பெற்ற காப்ரியல் கார்சியோ மார்க்கேஸ் என்ற ஸ்பானிஷ் எழுத்தாளரை ஆங்கில மொழிபெயர்ப்பில் இலகுவாகப் படித்துப் புரிந்து கொள்ளமுடிகிறது. அனால், அதே எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு வாக்கியத்தைக் கூட புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் ஒருவிதமான சிக்கலான மொழியில் எழுதினால்தான் இலக்கியம் என்ற கருத்து இங்கே நிலவுவது சற்று துரதிஸ்டவசமானது.

அப்படி அல்லாமல் மிக எளிமையான சொற்களின் மூலம், கவிதைகளின் மூலம் கெடாமல் தமிழுக்கு அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார் அஷ்ரப் சிஹாப்தீன். மொழிபெயர்ப்பு என்பது இலகுவான இலக்கிய வடிவம் அல்ல. மொழிபெயர்க்கின்ற நபருக்கு மொழியறிவும், கலையுணர்வும், கவிதைகள் தொடர்பான ஆழ்ந்த வாசிப்பனுபவமும் அவசியம். மிகப்பெரிய இலக்கிய மேதைகள் கூட தடுக்கி விழுகிற இடமே இந்த மொழிபெயர்ப்பு என்றுகூடச் சொல்லலாம்.

இன்றைய திகதியிலுள்ள வாசகர்களுக்கு எளிமையான இலக்கியங்களே அதிகம் புரிகிறது.அதிகம் பிடிக்கிறது.பின்நவீனம், அதிபின்நவீனம் என்று வலுக்கட்டாயமாகப் படைக்கப்படுகிற  இலக்கியங்கள் எடுபடாமல் போவதற்கு இதுவே காரணம்.

கவியரசர் கண்ணதாசனின் வெற்றிக்கு “எளிய” என்கிற உத்தியே மூலகாரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று கண்ணதாசன் எழுதுகிறபோது அது எல்லோரது இதயங்களை இலகுவாக சென்றடைகிறது.

இத்தகைய எளிய என்கிற உத்தி அஷ்ரப் சிஹாப்டீனுக்கும் கைவந்த கலையாகிப்போயிருக்கிறது. “பயமாயிருக்கிறது ஏனெனில்” என்கிற கானா நாட்டுக்கவிஞ்சரின் கவிதையை இப்படி மொழிபெயர்க்கிறார்..
உன்னை முதன்முதலாகப் பார்த்தபோது
உனது பெயரைக்கேட்கப் பயமாயிருந்தது
மனதைக்கவரும் பெண்களைக் காண்கிறபோது எல்லோருக்கும் இயல்பாகவே எழக்கூடிய உணர்வினை உயிருக்கு நெருக்கமான சொற்களால் உரசிச்செல்கிறார்.

அதுபோலவே லஜ்வா கோலூவி என்கிற நமீபிய நாட்டுக் கவிஞரின் அழுகுரல் என்கிற கவிதையில்..
அது ஓர் அழுகுரல்..
ஆம் அழுகுரல்
தெருவில் நிற்கும் பெண்ணின் அழுகுரல்
யாராவது அதைச் செவிமடுப்பார்களா?
யாராவது சென்று பார்ப்பார்களா??
என்று தொடங்கி
எனக்கருகே நிற்கும் பெண்ணின் அழுகுரல்
எனது நெருங்கிய நண்பியின் அழுகுரல்
எனது பெண் குழந்தையின் அழுகுரல்
எனது சொந்த அழுகுரல்
என்று கவிதை விரவி முடிகிறபோது நம் செவிட்டில் யாரோ அறையும் உணர்வு இயல்பாகவே நமக்குள் எழுகிறது.இதுமொழிபெயர்ப்பாளரின் வெற்றி.அவரது மொழிபெயர்ப்பு நுட்பத்தின் வெற்றியேயன்றிவேறில்லை.

இந்த நூலின் கவிதைத்தேர்வின்வகைகளாக நான் ஏலவே குறிப்பிட்ட பல பிரிவுகளில் தனி மனித உணர்வுகள், காதல், யுத்தம் குறித்த கவிதைகள் ஆகிய மூன்று பெரும்பகுதிகளை மட்டும் ஆய்வு செய்வதாகவே எனது விமர்சனம் அமைகிறது.நீங்கள் இந்த நூலை வாசிக்கிறபோதுஇதன் மற்றைய பரிமாணங்களை மிக இலகுவாக உங்களால் கண்டடைய முடியும்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் காணக்கூடிய மிகப்பெரிய அபாயம் மூலக்கவிதைகளின் உணர்வுகளை அவர்களது கலை, கலாசார வடிவங்கள் தாண்டி தமிழ் மொழிக்கு ஊடுகடத்துவது. மூலக்கவிதையின் உள்ளுணர்வை சிதைக்காமல் அப்படியே தமிழுக்கு மொழிபெயர்ப்பது சுலபமான விடயம் என்று யாரேனும் நினைத்தால் அவர்களது இலக்கிய அறிவுக்கு எனது இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.
இந்த நூலில் வெவ்வேறு நாடுகளின், வெவ்வேறு கவிஞர்களின், வெவ்வேறு பிரச்சினைகளை, வெவ்வேறு நுண்ணிய உணர்வுகளை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒளிந்திருக்கும் எனது உணர்வுகள் என்கிற நபீமிய நாட்டுக் கவிஞர்  எவலைன் ஹைஹம்போ வின் கவிதையின் சில வரிகள் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதைப்பாருங்கள்.
உண்மையாக நான் யார் என்று பாருங்கள்..
எனது வாயால் சொற்களை வெளிப்படுத்த முடியவில்லை
உண்மையை என் இதயம் அறியும்
ஆனால்,
என்னிடமிருந்து அதை வெளியே கொண்டு செல்வது
எப்படியென்று அதற்குத் தெரியாது
என்று விரியும் கவிதை
எனது காதுகளால் கேட்கமுடியவில்லை
எனக்காகக் கேளுங்கள்’
எனது தோலினால் உணர முடியவில்லை
எனக்காக உணருங்கள்
எனது கண்களால் பார்க்கமுடியவில்லை
எனக்காகப் பாருங்கள்
எனது வாயினால் பேச முடியவில்லை
எனக்காகச் சொற்களைப் பேசுங்கள்
எனது ஆத்மாவினால் அறியமுடியவில்லை
நான் அறியத் தவறிய உலகத்தை
நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
அல்லது நான் மறைந்து விடுவேன்..!!

அதேபோலமனிதர்களின்உள்ளுணர்வுகளைப்பேசும் இன்னொரு கவிதை“எனது தாயார் மரணித்த போது” என்கிற நைஜீரிய நாட்டுக் கவிஞர் லேம்பொன் சலிபு முகம்மத்எழுதியகவிதையின் மொழிபெயர்ப்பு. இந்தக்கவிதை கிட்டத்தட்ட எனது நிலையினைப்பேசும் ஒரு கவிதையாக என் உயிருக்குள் ஒட்டிக்கொண்டுவிட்டது.சில ஆண்டுகளுக்குமுதல் விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் எனது தகப்பன் எனக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து “உம்மா மௌத்து” என்று சடுதியாக் கூறியபோது எனக்குள்என்னவெல்லாம் ஊசலாடித்திரிந்தனவோ அதே உணர்வுகளை இக்கவிதையில் உணர்கிறேன்.

அதேபோல“முஹம்மத் றஊப் பஷீர்” எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய“நானும் ஓர் அகதி” என்கிற கவிதை ஒரு அகதியின் உள்ளுணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது.
ஓர் அகதியாக உங்களிடம்
உங்களிடம்வந்தமைக்காக
நீங்கள்என்னை மன்னிக்க வேண்டும் அய்யா..
ஓர் அடிமையாக அல்லாமல்
என்னை ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
என்று உயிரைப்பிழிந்து நம்மை உலுக்கி எடுக்கும் கவிதை இப்படித் தொடர்கிறது
உங்களில் ஒருவனாக
ஓர் அகதியாகத்தானும்
என்னை ஏற்றுக்கொள்வீர்களா?
நான் யார்? நான் என்ன>
என்று நீங்கள் கேட்கிறீர்கள்
நான் கடந்த காலமற்றவன்
நிகழ்காலமுமற்றவன்
முகமுமற்றவன்
நான் ஒரு மனிதனின் எச்சம்
உங்களில் ஒருவனாக
ஓர் அகதியாகத்தானும்
என்னை ஏற்றுக்கொள்வீர்களா?

இந்தக்கவிதைஎப்படி அழகாக மொழிபெயர்க்கப்பட்டு, ஒரு அகதியின் வாழ்க்கை வலிகளைஒரு ஊசிமுனை வழியாக நமக்குள் அஷ்ரப் சிஹாப்தீன் ஊடுகடத்துகிறார் என்று பாருங்கள்.
அதேபோல இந்த நூலில் காதல் கவிதைகள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்” என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகள் சொல்வது போல அந்தந்த நாடுகளின் காதல் பற்றிய பார்வையும் இந்தக்கவிதைகள் மூலம் நம்மால் உணரமுடிகிறது.
பயமாயிருக்கிறது ஏனெனில்என்கிற கானா நாட்டுக் காதல் கவிதை “காதலியை இழந்துவிடுவேனோ என்கிற” அச்சதைப்பேசுகிறது
அதேபோல அழகு என்கிற ஆப்கானிஸ்தான் நாட்டுக்காதல்
அவள் மலைகளில் உள்ள
பைன் மரங்களும், அறிந்த உயரமும்,
உடல்நேர்த்தியும் கொண்டவள்
அந்திக்கருக்கலில்நிலவின்
சிறு குடையின் கீழ் சுவர்க்கத்தில் குளித்த
பெண்ணைப் போன்றது உனது குரல்
அவள் அதிகாலையில்
வீட்டின் சுத்தமான
ஓர் ஒலிக்குடுவையை ஒத்தவள்
அவள் மழையின் கிசிகிசுப்பைக் கொண்டு
உருவாக்கப்பட்ட காதணி அணிந்தவள்
அதேபோல அமெரிக்க கவிஞர் சாம் ஹமூத் எழுதிய கவிதை “அவளும் அவனும்” என்கிற தலைப்பில் காதல் உணர்வுகளை மிக இயல்பாக பேசிச்செல்கிறது..

இந்த நூலின் முக்கிய கவிதைகள் என்று பார்க்கிறபோது  “யுத்தம், அதுபரிசளித்தவாழ்வியல் போராட்டங்கள், அரசியல், புரட்சி” என்பனசார்ந்தகவிதைகளுக்கே நூலாசிரியர் முக்கியத்துவம் அளித்துள்ளார்.ஒவ்வொரு கவிதையும்இதயத்தை கீறிக்கிழித்து நம்மை கண்ணீர் மழையில் நனைய வைக்கின்றன.இலங்கை கூட இத்தகைய யுத்த வடுக்களைச் சுமந்திருக்கும் பூமிதான். அதனால்தானோ என்னவோ இந்தக் கவிதைகள் பேசும் போர் குறித்த ரணங்கள் நம்மை மிகக்கடுமையாகப் பாதிக்கின்றன.

எல்லாவற்றுக்கும் பிறகு என்கிற பொஸ்னிய நாட்டுக்கவிஞர் கோரன் சிமிக் கின் கவிதை யுத்தம் முடிந்தபின்னரான வாழ்க்கை முறையை சாடிச்செல்கிறது..
அவ்வாறே நிசார்கப்பாணி எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய ஜெருசலமே என்கிற கவிதை ஜெருசலம் மண்ணின் வலிகளைப்பேசிவிட்டு..
நாளை
நமது எலுமிச்சைகள் பூக்கும்
நமது எல்லா ஒலிவ் செடிகளும்
கொண்டாட்டத்தில் திளைக்கும்
உனது விழிகள் நடனமிடும்
உனது குழந்தைகள் யாவும்
மீண்டும் விளையாட ஆரம்பிக்கும்
பிள்ளைகளும் பெற்றோரும்
மீண்டும் உனது அழகிய மலைகளில் சந்தித்துக்கொள்வார்கள்..
என்றுவலிகளைக்கடந்த நம்பிக்கையை பேசிச்செல்கிறது..

அவ்வாறே.. கேரி கோர்சன் எழுதிய“நாங்கள் பாலஸ்தீனியர்கள்” என்கிற கவிதை
உலக சபைக்கு
மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி,
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம்
முறையீடு செய்தோம்.
சிலபோது அவர்கள் அமைதியாகச்
செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோதுஎங்கள் காயங்களைப் பார்த்து கொட்டாவி விட்டார்கள்
என்று நீளும் கவிதை இப்படி முடிகிறது
நாங்கள் மக்கள்
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம் பெரிய மீனைக்கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப்புழு எத்தகையது?
நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப்பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்..
என்று முடியும்போது இதைவிட இந்த வலிகளை வேறெப்படி மொழிபெயர்ப்பது?

அதுபோலவே அந்தனி ஜே.மெர்சலா எழுதிய யுத்தம் என்கிற கவிதையில்..
எவ்வளவோ எழுதப்பட்டும்
எவ்வளவோ பேசப்பட்டும்
எவ்வளவோ செதுக்கப்பட்டும்
யுத்தத்தின் பாடங்கள்
தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும்
தொடர்ந்து மறுக்கப்படுவதும்
தொடர்ந்து திரிதுக்கூறப்படுவதும் ஏன்?
இதோ..இன்று சிரியா..
என்று முடிகிற கவிதை மிகப்பெரும் பாறாங்கல்லை எம் நெஞ்சின் மீது உருட்டிவிடுகிறது.

அதேபோன்றுதான்  நாசர் பர்கூதி எழுதிய சிரியாவின் சிறுவர்கள் என்ற கவிதை கரையோரத்தில் கவிழ்ந்து கிடந்த ஐலான் குர்தி என்கிற அழகிய சிறுவனதும், அதற்குப்பின்னர்நம்மைரத்த கண்ணீர் வடிக்க வைத்த யுத்தத்தால்சிதைந்துபோன சிறுவர்களின் புகைப்படங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இப்படிஎளிய சொற்கள் மூலம் அந்த அந்த நாட்டின் மொழியையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை நுணுக்கங்களையும், தமிழ் மொழிக்கு மிக நேர்த்தியாக மொழிபெயர்த்து இலங்கையில்மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதியதொரு ராஜபாட்டையை அஷ்ரப் சிஹாப்தீன் திறந்துவிட்டிருக்கிறார்.
ஒருவிதமான தேக்க நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கியத்துறைக்கு இவரது இந்த முயற்சி தாராளமாகவே நீர் பாய்ச்சுகிறது.
இந்த நூலை எதிர்விமர்சனம் செய்யக்காத்திருக்கும் சிலருக்கு சில வார்த்தைகள்.இப்போதெல்லாம் விமர்சனம் என்பது படைப்பை பார்க்காமலே, வாசிக்காமலே, அது என்னவென்றே தெரியாமலே விமர்சிக்கும் ஒரு நிலை நம் மத்தியில் தோன்றியிருக்கிறது.மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது தமிழுக்கு இன்று நேற்று, தோன்றிய ஒன்று அல்ல.
மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்து “தொல்காப்பியத்தில்”
“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே”
இங்கு“மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு” என்பது பொதுவான மொழிபெயர்ப்பையே சுட்டுகின்றது. கி. பி.14 ஆம் நூற்றாண்டு முதல்   19 ஆம் நூற்றாண்டு வரை, மொழிபெயர்ப்புத் துறையில் புராணங்களே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. கி.பி.19 ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர்தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்றலாயிற்று. இதன்விளைவாக மொழிபெயர்ப்பு இலக்கியம் முக்கிய ஒன்றாக விளங்கத் தொடங்கிற்று.

இலங்கையை பொறுத்தவரை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நூல் மேகதூதம் - மகாகவி காளிதாசர் வடமொழி மூலம் எழுதிய நூலை சோ.நடராசன் தமிழாக்கம் செய்தார். இது 1954ஆம் ஆண்டு வெளியானது. இதன்பின்னர்கிராமப் பிறழ்வு என்ற மொழிபெயர்ப்பு நாவல்  மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'கம்பரெலிய' சிங்கள நாவலின் அடிப்படையாக்கொண்டு 1964 இல் வெளியானது. அதன்பின்னர் தொண்ணூறுகளுக்குப்பின்னரே பல மொழிபெயர்ப்பு நூலுருவாக்க முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.அவ்வாறு மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் இலங்கையில் ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களாக எஸ். பொன்னுதுரை, சோ. பத்மநாதன்,வி.பி. ஜோசப், சி. சிவசேகரம்,ரூபராஜ் தேவதாசன், அருட்திரு நீ.மரியசேவியர், த.தர்மகுலசிங்கம், கெக்கிராவ சுலைஹா, எம்.எச். முஹம்மது யாக்கூத் என்கிற வரிசையில் நமது நூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர்களின் பெயர்களை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. இதில் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை இப்பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு மொழியில், குறிப்பிட்ட ஒரு வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.’ என்பதிலிருந்து ஒரு மொழி சார்ந்த பண்பாட்டு கலாச்சாரப் பின்புலங்களை அறிந்துவைத்திருத்தல் வரை மொழிபெயர்ப்பாளன் கடந்து வர வேண்டிய தடைகள் பல. பழமொழிகள், மரபுத் தொடர்களை மொழிபெயர்க்கையில் கவனம் தேவை. வாக்கிய அமைப்பு, இடம் சார்ந்த பொருள் இவற்றையும் கவனித்து மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. விடாமுயற்சி, கவனம், மொழியறிவு, மொழிசார் பண்பாடு குறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல், அடர்த்தி ஆகியவற்றை உள்வாங்கும் திறன் ஆகியவை ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளனின் அடையாளங்களாக அமையக்கூடும். ‘எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் ஒருவர் அகராதியைப் புரட்டத் தயங்கக் கூடாது’ என்கிற தியோடர் ஸேவரியின் கூற்றையும் நாம் மறந்துவிட முடியாது.
மொழிபெயர்ப்புகள் வழியே மொழிபெயர்ப்பாளர்கள் உலகை இணைக்கிறார்கள் என்கிற கூற்று உண்மையானதே.இந்த நூலின் மூலம் அஷ்ரப் சிஹாப்தீன் நமக்கு முப்பது நாடுகளின் இலக்கிய வாசனையை நுகரச்செய்கிறார், நாற்பது ஒன்பது கவிஞர்களோடு கைகுலுக்க வைக்கிறார்.ஐம்பது கவிதைகளோடு நம்மை பிணைத்துவிடுகிறார். இந்தமூலக்கவிஞர்கள் யார்? அவர்களது பிற  கவிதைகள் என்னென்ன? என்கிற ஆய்வையும், தேடலையும் இன்றைய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஏற்படுத்திவிடுவதில் நூலாசிரியர் வெற்றி காண்கிறார். அதேபோல மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதிய கதவொன்றையும் நூலாசிரியர் திறந்துவிட்டிருக்கிறார்.

அந்தவகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் மிக முக்கியமான நூலாக இது விளங்கும் என்பதோடு மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் நூலாசிரியர் இன்னும் பல சிகரங்களை அடையவும், அவரது இலக்கியப் பணிகள் மென்மேலும் சிறந்தோங்கவும் அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(22.09.2017ல் கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)