Saturday, January 31, 2015

விருந்தோம்பி வேளாண்மை செய்தல்!

தமிழகத்துக்குச் சென்றால் விருந்து வழங்கப்படாமல் திரும்பியதாகச் சரித்திரம் இல்லை.

சகோதர உறவுகளும் இலக்கிய நண்பர்களும் கடந்த காலங்களில் வழங்கிய விருந்துகளின் சுவை இன்னும் நாவில் மட்டுமல்ல, நெஞ்சிலும் இனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்துக்குள் நுழைந்த நிமிடம் முதல் நமது நலனில் அக்கறை கொண்டு நிழல் போலவே இணைந்திருக்கும் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அவர்கள் இம்முறை நம்மீது அக்கறை செலுத்த உயிருடன் இல்லை. அவருடைய ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்கள் வெளியிட்ட நினைவு மலர் வெளியீட்டுக்கு நாம் அழைக்கப்பட்டிருந்தோம்.

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்துடன் இணைந்து நடநத்தப்பட்ட இவ்விழாவில் நானும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீனும் கவிஞர் அல் அஸூமத் அவர்களும் இலங்கையிலிருந்து சென்று கலந்து கொண்டோம்.

இது வரை காலமும் நமது பயணத்தில் அதியுச்ச விருந்தளித்து நம்மைக் கவனித்துக் கொண்டவர் மர்ஹூம் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அவர்கள். அந்தப் பண்பு அவரது புதல்வர்களிடமும் இருந்தது. மலர் வெளியீட்டுக்கு முதல் தினம் இரவு - அதாவது நாங்கள் சென்றிறங்கிய அன்றே வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருந்த அனைவருக்கும் ஹோட்டல் சவேராவில் விருந்து வழங்கினார்கள்.

அடுத்த தினம் 250 பேர் அழைக்கப்பட்ட விழாவில் ஜாபர்தீன் ஹாஜியாரின் நினைவு மலர் வெளியீடு என்பதால் வருகை தந்திருந்த 300க்கும் மேற் பட்டவர்களுக்கும் கூட நிகழ்வு முடிந்து ஹோட்டல் தி அக்கார்ட் மெட்ரோபோலிட்டன் ஹோட்டலில் மதிய விருந்து வழங்கப்பட்டது.

அதற்கடுத்த தினம் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் “நாயனொடு வசனித்த நன்நபி” காப்பிய நூல் வெளியீடு மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு வருகை தந்திருந்த நண்பர் கிளியனூர் இஸ்மத் அன்றிரவே தன்னுடன் விருந்துண்ண வேண்டும் என அன்புக் கட்டளையிட்டார். நிறைவான விருந்து.

இந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மேலும் இரண்டு விருந்துகளுக்கான அழைப்பு வரத் திக்குமுக்காடிப்போனோம். 26.01.2015 அன்று மதிய விருந்தை முனைவர் பேராசிரியர் எம்.ஏ. தாவூத் பாஷா அவர்கள் தனது கோடம்பாக்கம் வீட்டில் வழங்கினார். மட்டுமன்றி, சென்னை வந்தால் இனிமேல் நீங்கள் வேறு எங்கும் தங்காமல் எனது வீட்டிலேயே வந்து தங்கி விட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அன்பு சொரிந்தார்.

விருந்துக்காக அவரது வீட்டுக்குள் நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு எம்முடன் விருந்துண்ண வந்திருந்தார் தம்பி ஆளுர் ஷாநவாஸ். தனக்கு அறிவிக்காமல் வந்தது குறித்துக் குறைபட்டுக் கொண்ட அவர் நாளை தனது வீட்டுக்கு வருகை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அன்றிரவு வேறு ஒரு விருந்து இருந்தது. அடுத்த நாள் மாலை நாடு திரும்ப வேண்டியிருந்தது. எப்படிச் சொல்லியும் அவர் இணங்கவேயில்லை. எனது வீட்டில் விருந்துண்ணாமல் நீங்கள் பொக முடியாது என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.

அன்றிரவு சகோதரர் ருமைஸ்தீன் ஹோட்டல் விருந்தளித்தார். பெரு வணிகராக இருந்தும் பக்தியும் இலக்கியமும் ஒன்று சேர்நத ஒரு மனிதர் அவர். மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் பழகிய அவரை நமக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. அவர் உமறுப் புலவரின் பரம்பரை வாரிசு என்று அறிய வந்ததும் பெரு மகிழ்ச்சி! நல்ல பேச்சாளர் என்றும் அறிய முடிந்தது. அவரைச் சுற்றி கவிஞர் பட்டாளம் ஒன்றே நின்றிருந்தது.

விடிந்தால் பயணத்துக்குரிய தினம். தம்பி ஷாநவாஸ் வீட்டில் மதிய விருந்து. எமது வேண்டுகோளுக்கேற்ப அவரது மனைவி உணவு தயாரித்திருந்தார். இலங்கையில் வீட்டில் விருந்த உண்பது போன்ற உணர்வு... அன்பு கலந்திருந்தால் எல்லாமே அமிர்தம்தான்!

தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் ஒரு நல்ல எழுத்தாளர். ஆவணப்படத் தயாரிப்பாளர். சமூக உணர்வுள்ள இளவல். அவருடைய 15 வயதிலிருந்து அவரை நான் அறிவேன். அவரது உறவினர்கள் இலங்கையில் இருக்கிறார்கள்.

பயணத்தில் புதிய பல நண்பர்களின் அறிமுகமும் பழைய நட்புகளுடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. வயிற்றை மட்டுமன்றி மனத்தையும் நிறைத்து அனுப்பி வைத்திருந்தார்கள்.

அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். கடலால் பிரிக்கப்பட்டிருந்த போதும் நமது கல்புகள் ஒட்டியே இருக்கின்றன.

அது அப்படித்தான் இருக்கும். இருக்கவும் வேண்டும்!




Thursday, January 29, 2015

மனத்தால் செழித்த மாண்பாளர்!


பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக நிறுவனரும் “சமநிலைச் சமுதாயம்” சஞ்சிகையின் நிறுவனரும் எழுத்தாளரும் கொடை வள்ளலும் வணிகருமான ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன் அவர்களது நினைவாக அவரது வாரிசுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட “மனத்தால் செழித்த மாண்பாளர்” என்ற நினைவு மலர் வெளியீட்டு விழா பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினால் நடத்தப்பட்டது. 24.01.2015 அன்று காலை 10.00 மணிக்கு தி.நகர், ஜி.என். செட்டித் தெருவில் அமைந்துள்ள தி அக்கார்ட் மெட்ரோபோலிட்டன் ஙோட்டல் மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு முனைவர் சே.மு.மு. முகமதலி (பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் செயலாரும்) தலைமை வகித்தார்.

அழைப்பிதழ் பக்கம் - 01

அழைப்பிதழ் பக்கம் - 02

அழைப்பிதழ் பக்கம் - 03

அழைப்பிதழ் பக்கம் - 04


மிக அழகிய முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த நினைவு மலர் ஏவி.எம். ஜாபர்தீன் ஹாஜியாரின் முழுமையான வாழ்வின் சிறப்பை எடுத்துக் கூறக் கூடியதாக அமைந்துள்ளது. அதியுச்ச சிறப்புப் பதிப்பாகவும் கையில் எடுத்ததும் படிக்கத் தூண்டும் விதத்திலும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மலரை முனைவர் சேமுமு. முகமதலி, முனைவர் ஹ.மு. நத்தர்ஷா, முனைவர் அகமது மரைக்காயர், கவிஞர் சடையன் அமானுல்லாஹ், சட்டத்தரணி ஷேக்தாவூத் ஆகியோர் தொகுத்துள்ளனர்.


மலரை வெளியிட்டு வைத்துச் சிறப்புரை நிகழ்த்தினார் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

ராஸிக் பரீத் ஜாபர்தீன், காஸிம் பரீத் ஜாபர்தீன், டாக்டர்  ஷபீக்கா பானு ஆகியோர் தமது தந்தையாரின் நினைவுகளை இம்மலரில் பகிர்ந்து கொண்டுள்ளனர் அன்னாரின் சகோதரர்களான ஏவி.எம். ஹாஜா மைதீன், அகமது கபீர் ஆகியோர் சகோதரர் பற்றிய நினைவுகளை மீட்டுள்ளனர்.

கவிஞர் தமிழன்பன்

திரு. வீரபாண்டியன்
எழுத்தாளர் ஜே.எம். சாலி, டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மத் இக்பால் ஆகியோர்  முறையே முன்னோடி ஏவி.எம்.ஜாபர்தீன், வர்த்தக ஆளுமைக்கு ஒரு முன்னோடி எனும் தலைப்பில் நினைவுகளை மீட்டியுள்ளனர்.

அப்துல் அஸீஸ் பாக்கவி

Thursday, January 22, 2015

மூக்குகளால் சிந்திப்பவர்கள்!


- 12 -

முழுநாளும் வீட்டில் உறைந்து கிடந்த ஒரு தினத்தின் மாலை மயங்கும் வேளை ஒரு சுற்று நடந்து விட்டு வரலாம் என்று வெளிக்கிட்டேன். வழமையான ஒரு சுற்று என்பது ஏறக்குறைய ஒன்றரை கி.மீற்றர் தூரம். இரண்டு முறை நடந்து வந்தால் சோம்பல் கலைந்து விடும்.

அப்படி நடந்து கொண்டிருந்த போது தெருவோரத்தில்  நின்றிருந்த நண்பரைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். அவர் அப்படி தெருவோரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் நபரல்லர். அரச நிதி நிறுவனமொன்றில் கடமை புரிபவர். பென்சன் வயதைத் தொட்டுக் கொண்டிருந்தார். தென்பகுதியில் பிறந்து வளர்ந்தவர். தானும் தன்பாடும் என அமைதியாக வாழ்ந்து வரும் நபர்.

கடைத் தெருவில் அவர் நின்றிருந்த பக்கத்தின் நேர் எதிர்ப் பக்கம் ஒரு பௌத்த விகாரை. வேலி  கிடையாது. மிக அழகாகப் பேணப்படும் அந்த பௌத்த விகாரையில் ஒரு விசேட உபந்நியாசம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழமை போல நிறைய வயசான ஆண்களும் வயசான பெண்களும் துணைக்கு வந்த குமரிகளும் வெள்ளுடையில் அமர்ந்து ஆர்வமாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

நண்பருடன் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொண்டு நான் கடந்த சென்று விட்டேன். ஆனால் நான் நடந்த தெரு நீளத்தக்கும் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் பௌத்த மத குருவின் மத உபந்நியாசம் ஒலித்துக் கொண்டிருந்ததாலும் அவரது பேச்சில் இழையோடிய அமைதியும் சொற்களைப் பயன்படுத்திய நிதானமும் அதில் வெளிப்பட்ட அழகும் நயமும் என்னைக் கவர்ந்ததாலும் வேறு சிந்தனை எனக்குள் எழவேயில்லை.

பிள்ளைகளை எப்படி பொறுப்புள்ளவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் வளர்ப்பது என்பதைப் பற்றியே அவரது உபந்நியாசம் அமைந்திருந்தது. சாதாரண சிங்களக் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லதாகவும் அல்லதாகவும் நடந்தவை, நடப்பவை பற்றி அவர் விளக்கிச் சென்ற விதமும் ஏற்ற இறக்கங்களோடு வார்த்தைகளைப் பயன்படுத்திய அழகும் ரசிக்கத் தகுந்ததாகவும் ஆகர்ஷிக்கத் தக்கதாகவும் இருந்தது. என்னுடைய காதில் விழுந்த வரை பாளி மொழியிலான வாக்குகள் எவற்றையும் அவர் பிரயோகிக்கவில்லை.

மார்க்க உபந்நியாசங்களை ஆகர்ஷிக்கக் கூடிய மொழியில் நிகழ்த்துவதில் கிறிஸ்தவப் பாதிரிமார்தான் முன்னிலை வகிக்கிறார்கள் என்பேன். அதனையடுத்து பௌத்த குருமார். நமது பிரசங்கிகளோ ஒலிபெருக்கியின் சப்தத்தை அதி உச்சஸ்தாயியில் வைத்துக் குதித்துக் குதித்து தன்னால் முடிந்தவரை குரல் கொடுத்து வருவதே வழக்கமாக இருக்கிறது. ஒலிவாங்கி முன்னால் இருப்பது அடுத்தவருக்குக் கேட்கும் அனவு சப்தத்தை அனைவருக்கும் கேட்கும் வண்ணம் பிரதிபலிக்கத்தான் என்ற உணர்வின்றி ஒலிவாங்கி முன்னால் இருக்குமானால் அதில் கர்ஜித்தே ஆக வேண்டும் என்ற உணர்வுடன் பிரசங்கிக்கிறார்கள். எடுத்துக் கொண்ட அம்சமும் அதை வெளிப்படுத்தத் தேரும் நளினமும் பயன்படுத்தப்படும் மொழியும் பொருத்தமாக அமைந்து விடுமானால் ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று உரக்கக் கத்தும் அவசியம் இருக்காது.

இரண்டாவது சுற்றை சான் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்த போது எனது நண்பர் அதே இடத்தில் தரித்து நின்றிருக்கக் கண்டேன். நிச்சயமாக அவர் அந்த உபந்நியாசத்தைத்தான் செவிமடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு உறுதியாயிற்று. மீண்டும் புன்னகை பரிமாறிக் கொண்ட நான் நடை தனர்த்திச் சிரித்துக் கொண்டே கேட்டேன்:- 'என்ன பிரசங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது?' அவர் பதில் சொன்னார்:- 'இது பாருங்கப்பா... நல்ல விசயம் கொஞ்சம் சொல்றான். எவ்வளவு அழகாச் சொல்றான்... உண்மையில் அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!'

இந்த வழியால் நமது முஸல்மான்கள் குறுக்கிடுகையில் இந்த மனிதரைக் கண்டால் இவரது ஈமான் குறித்து சந்தேகிக்கத் தொடங்கி விடுவார்களே என்று ஓர் எண்ணம் மனதில் ஓடிற்று. பக்குவமாகப் பதில் சொல்லும் படித்த மனிதர்தான் என்றாலும் ஃபத்வாக் காரர்களின் பாதங்களின் கீழ் மிதிபட்டேயாக வேண்டி வரும்.

'நானும் கேட்டுக் கொண்டேதான் நடந்துக்கிட்டிருந்தேன்... அவர் சொன்னது அவ்வளவும் இஸ்லாம்!' என்று நண்பருக்குப் பதில் சொல்லி விட்டுப் புன்னகைத்தேன். அவ்வளவுதான். திடுக்கிட்டு விழித்தவர் போல் திகைப்புடன் அவர் என்னைப் பார்த்தார். நான் புன்னகைத்து விட்டு நடையைத் தொடர்ந்தேன்.

ஆவரது ஆச்சரியமும் திகைப்பும் என்னை எதுவும் செய்யவில்லை. மாற்று இனத்தானோடு ஒன்றாகப் பேசுவது, பழகுவது, தொடர்பு வைப்பது, உறவாடுவது எல்லாம் மார்க்க விரோமதமாகக் கருதிய சமூகத்திலிருந்து வந்த நமக்கு ஒரு பௌத்த மதகுரு பேசிய நல்விடயங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயக்கமாகத்தான் இருக்கும்.

ஐம்பெரும் கடமைகளும் ஒதுங்கி வாழ்வதுமே நமது வழிமுறையும் புனிதமும் என்று கருதும் நிலையிலிருந்து  தலையாட்டுவது விரலாட்டுவது வரை சண்டை பிடித்துக் கொண்டு தனிப் பள்ளிவாசல் கட்டித் தொழும் நிலைக்கு இப்போதுதானே பரிணாமம் பெற்றிருக்கிறோம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு முறை சொன்னார்:-

'சிந்தித்துப் பார்க்கிறதில்ல... அல்லாஹ் குர்ஆன்ல பல இடங்களில் சிந்தி.. சிந்தி.. என்று மனிதனுக்குச் சொல்கிறான். என்னத்தச் சிந்திக்கிறாங்க.. மூக்கைச்  மட்டும்தான் சிந்திக்குறாங்க!'

(நன்றி - மீள்பார்வை)

Tuesday, January 6, 2015

நுணலும் தன் வாயால் கெடும்!


 - 10 -

குழப்பங்களும் பிரச்சளைகளும் இல்லாத குடும்பங்கள் உள்ளனவா என்று கேட்டால் 'இல்லை!' என்ற சொல்லே பதிலாக வரும்.

வெளியே சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் தெரியும் ஒரு குடும்பத்துக்குள் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்.  சகோதர, சகோதரிகளுக்கிடையில், தாய் - தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையில் (குறைந்தது ஒரு பிள்ளையுடனாயினும்) சண்டையும் சச்சரவும் இல்லாவிடினும் மனக் கசப்புகள் வருவது சகஜமானது. எவ்வளவு கசப்பான விடயங்களாக இருந்த போதும் அவற்றைச் சகித்துக் கொண்டுதான் ஒவ்வொரு குடும்பமும் வாழ்ந்து வருகிறது. குடும்ப மானம் கருதி அவை வெளியில் வருவதில்லை.

அக்குடும்பத்தில் எதையும் சகிக்கத் திராணியற்ற ஒருவர், கோபம் மிக்க ஒருவர், சுயநலம் மிக்க ஒருவர் அடங்கியிருப்பாராயின் அவர் மூலம் பிரச்சனை வெளியில் வருமே தவிர, வேறு வழிகளில் அவை வெளியாவதில்லை.

ஒரு தெருவில் அல்லது ஒரு மஹல்லாவுக்குள் அல்லது ஒரு வட்டாரத்துக்குள் ஆகக் குறைந்தது ஓர் ஊருக்குள் வாழும் யாராவது ஒருவருடன் மற்றொருவருக்கு மனக் கசப்போ, சண்டையோ, சச்சரவோ இல்லாமலிருப்பதில்லை.

இவ்வாறான பூசல்களும் சச்சரவுகளும் பெரும்பாலும் அடக்கியே வாசிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இவை பெரிது படுத்தப்பட்டால் அது முதலில் தெருவுக்கு வரும். பின்னர் பொலீஸ் நிலையத்துக்கும் பின்னர் நீதிமன்றுக்கும் செல்லும். அதன் பின்னர் வாழ் நாள் முழுவதும் இரண்டு திறத்தாரும் பரம்பரை பரம்பரையாக மனதில் வைரம் வளர்த்துச் சீரழிந்து போவார்கள்.

ஒரு விடயம் பெரிது படுத்தப்படுவது என்பது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளின் தன்மையிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கிறது. எப்போது அளவுக்கு மீறி வார்த்தைகள் வெளிவருகின்றனவோ அவை எந்தளவு தடிப்பத்துடன் வெளிவருகின்றனவோ அந்த அளவுக்குப் பிரச்சனை பெரிதாகி விடுகிறது. ஒருவர் மற்றவருக்குப் பயன்படுத்தும் சொற்கள் அல்லது வார்த்தைகள் அழுக்கானவையாகவும் அசூசையானவையாகவும் அகௌரவப்படுத்துவனவாகவும் அமையும் போது பிரச்சனையின் அடிப்படை தவிர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் முன்னிலை பெற்று விடுகின்றன. 'அவன் எனக்கு இப்படிச் சொன்னதற்காக நான் விடமாட்டேன்' என்று ஆளுக்கு ஆள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

ஒரு மனிதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுச் சரியாக இருந்த போதும் அதை முன்வைப்பதற்கான நல்ல வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும். பிழையான வார்த்தை பயன்படுத்தப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டின் பெறுமானம் குறைந்து விடுகிறது. அதே வேளை குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் சாட்டப்பட்டவரால் வெளிப்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளில் ஆத்திரப்பட்டு ஆத்திரத்தில் கன்னத்தில் அறையவும் கூடும். சிலவேளை இப்பிரச்சனை ஒரு கொலையிலே கூட முடிவடையலாம்.

எல்லாவற்றுக்கும் ஒரு தர்மம் உண்டு, எல்லையும் உண்டு. அது எப்போதேல்லாம் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் விரும்பத்தகாதவை நடந்து முடிந்து விடுகின்றன. குடும்பங்களில், சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளின் அடிவேரைத் தோண்டிச் சென்றால் அது ஒரு மோசாமான வார்த்தையாக இருக்கக் காண்போம்.

எந்த ஒரு நிலையிலும் ஒரு மனிதனுடைய வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அவனது தாய், தந்தையரை, குடும்பப் பாரம்பரியத்தை, அவனுடைய வளர்ப்பை, அவன் படித்த பாடசாலையை, கற்பித்த ஆசிரியர்களை, அவனுடைய சூழலை, பழக்க வழக்கங்களை, பண்பாடுகளை, புரிந்துணர்வையெல்லாம் பிரதிபலிக்கக் கூடியவை.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் ஒருகாலத்தில் அரசியல்வாதிகளே அரசியல்வாதிகளை விமர்சிப்பதும் கிண்டலடிப்பதும் மட்டுமே பத்திரிகைகளில் படிக்கக் கூடியதாக இருந்தது. ஏனையவர்களின் விமர்சனங்கள் முடிதிருத்தும் நிலையங்கள், கிராமத்துத் தேனீர்க்கடை பெஞ்சுகள் போன்றவற்றிலே இடம்பெற்று வந்தன. இவற்றின் இடத்தை இப்போது சமூக வலைத்தளங்கள் பிடித்துக் கொண்டன. எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் தமது எண்ணங்களையும் விமர்சனங்களையும் பகிரும் அற்புதமான வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

அரசியல் பற்றிய விமர்சனங்கள், கிண்டல்கள் ஏற்கக் கூடியவைதாம். ஆனால் அந்த எல்லைக்கு மேல் செல்லும் போது அது ஒரு கண்ணியம் பிறழ்ந்த நிலைக்குப் பலரை நகர்த்தி விடுகிறது. பேசத் தகாத, எழுத்தத் தகாத மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், கண்ணியமும் ஒழுக்கமும் அற்ற தூற்றல்கள், தூஷணங்கள் மலிந்து போன நிலையில் இன்றைய பொதுத் தளங்கள் நாற்றமெடுத்துக் கிடப்பதைக் காண்கிறோம்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்தத் தூஷணங்களும் தூற்றுதல்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்கி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலேயே செய்யப்படுவதுதான். 30 வருட காலப் போரில் சிதைந்து சின்னாபின்னமாகி இன்னும் வாழ்வும் இல்லாமல் சாவும் இல்லாமல் வாடும் தமிழ் சமூகத்தின் அரசியலில் ஆயிரம் பிரச்சனைகளும் ஆயிரம் சிக்கல்களும் பிக்கல் பிடுங்கல்களும் இருக்கின்றன. பலநூறு பிரிவுகள் அவர்களுக்குள் இருக்கின்றன். ஆனால் நொந்து போன நிலையிலும் அவர்கள் எந்தவொரு அரசியல்வாதி மீதும் எந்தவொரு எதிர் கருத்துக் கொண்டவர் மீதும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதை நான் கண்டதில்லை.

இன்று இஸ்லாமிய ஒழுக்கமும் பண்பாடும் நன்னடத்தையும் பேசாத இளைஞர்கள் அரிது. இஸ்லாம் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற வாழ்வு நெறி என்று தேரியாத இளைஞர்கள் கிடையாது. ஆனால் அரசியலிலும் மார்க்க விவகாரங்களிலும் மாற்றுக் கருத்தாளர்களைத் தாக்குவதில் ராஜ நாகங்களைப் போல் இவர்கள் விஷங்கக்குவதைப் பார்க்கையில் துன்பமாய் இருக்கிறது.

இஸ்லாம் என்ற ஜோதியை வைத்திருப்பவர்கள் தத்தமது வீடுகளைக் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

(நன்றி - மீள்பார்வை)