Monday, October 31, 2011

விருது விளையாட்டு!


நேற்று மாஹோவில் நடந்த தேசிய சாஹித்திய விழாவில் எனது “ஒரு குடம் கண்ணீர்“ நூலுக்கு ஒரு சான்றிதழைப் பரிசாக வழங்கியுள்ளனர். சான்றிதழை மட்டும் தேசிய விருதாகப் பெற்ற ஒரே நூல் இதுதானாம். ஏனெனில் நான் அங்கு சென்றிருக்கவில்லை. சில பிரிவுகளில் இவ்விரண்டு விருதுகளும் பணப்பரசும் வழங்கப்பட்டுள்ளன. பரிசுக்குரிய நூல்தான், ஆனால் சான்றிதழ் மட்டுமே எங்களால் வழங்க முடியும் என்பதே இதன் மூலம் உணர்த்தப்படும் செய்தி. எதுவாக இருந்தாலும் தேசிய சாஹித்தியப் பரிசுகளில் முதன் முதலாக சான்றிதழை மட்டும் பெற்று விட்டார் “சர்வதேச சகலருக்கும் சால்வை அமைப்பின் தேசியத் தலைவர்.” யாரங்கே.... எங்கேயடா தேசியத் தலைவருக்கான சால்வை? .............

மேற்படி குறிப்பு தேசிய சாஹித்திய விருது வழங்கப்பட்ட அடுதத தினம் முகப்புத்தகத்தின் எனது பக்கத்தில் 29ம் திகதி இடப்பட்டது. இதுகுறித்த கருத்துப் பரிமாறல் இன்று வரை தொடர்கிறது. முகப்புத்தக நட்பில் இல்லாத எனது வாசக அன்ப, அன்பிகளுக்காக அவற்றை இங்கே பதிவிடுகிறேன். மேலும் கருத்துக்கள் பகிரப்பட்டால் அவற்றை அவ்வப்போது இப்பதிவில் சேர்த்துக் கொள்ளுவேன். ஆகவே அவ்வப்போது எனது தளத்துக்கு வந்து விரு்பியவர்கள் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.!


Sameer Ahamed
வாழ்த்துக்கள்
Saturday at 8:51am

Kalanenjan Shajahan
வாழ்த்துக்கள்.தாழ்த்தப்படுபவர்கள் உயர்த்தப்படுவார்கள்
Saturday at 9:29am

Vj Yogesh
Namma thalakke intha nilaiyaa? Anyway congratulations sir! 
Saturday at 9:34am

Sihabdeen Najimudeen -
Congratulations, saalvai Canada vilirunthu pack panni parsalil varukirathu petruk kollungal.
Saturday at 9:49am

Shibly Poems
all the very best
Saturday at 10:15am

Amalraj Francis
வாழ்த்துக்கள்..

ஹி ஹி ஹி... என்ன கொடும சார் இது?? பெருமையா இருக்கு, ஆகக் குறைஞ்சது ஒரு சான்றிதழாவது கொடுக்கணும் எண்டு தோணிச்சே அவங்களுக்கு..
என்னங்கோ.. தலைவருக்கே.. தட்டுப்பாடா.. சால்வை???? கூட்டுங்கையா சங்கத்த உடனே..
Saturday at 10:23am

Thevarasa Mukunthan
சோகமான விடயத்தை நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் சிரிக்க முடியாமல் சோகம் மனத்தை அழுத்துகிறது.
Saturday at 11:30am

Ashroff Shihabdeen
 எழுத்தாளர்களின் நூல்களை ஆய்வு செய்ததான் நாங்கள் பட்டம் பெறுகிறோம் என்று பேரா. சோ.சந்திரசேகரன் அடிக்கடி சொல்வார். துரதிர்ஷ்டவசமாகப் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களே நுஸல்களை அநேகமாகவும் பரிசீலிப்பதாலும் அவர்களும் நூல்களை எழுதிப் பரிசுக்கு அனுப்புவதாலும் எழுத்தாளர்கள் இரண்டாவது படியிலேயே நின்று கொண்டிருக்கும் துரதிர்ஷ்டம் நீண்டகாலமாகவே நிலவி வருகிறது முகுந்தன்!
Saturday at 11:45am

Amalraj Francis
உண்மைதான்...
Saturday at 11:55am

Farveen Mohamed
எழுத்தாளர்களின் நூல்களை பேராசிரியர்கள் மதீப்பீடு செய்வதானது காலா காலமாக நடந்து வரும் ஒரு விடயம், இருந்தும் இலக்கிய ஆர்வமற்ற, அல்லது எழுத்துத் துறை சாராத பேராசிரிகள் நூலை மதிப்பிடும் போது அந்த நூலின் கனதி பற்றிய ஆழமான அறிவற்றவர்களாகவே அவர்கள் நோக்குவார்கள், இன்னொன்று தமக்கு பரிச்சயமான, அல்லது அடிக்கடி பத்திரிகைகளில் காண்கின்ற ஒரு பெயர் ஆக்கத்தின் தரத்தினைவிடவும் அவர்களை கவர்ந்து விடுவதும் உண்டு, தமது ஆசானின் முன்னுரையைக்கண்டவுடன் சிலர் நன்றிக்கடனுக்காக அந்த நூலுக்கு பரிசு வழங்குவதும் உண்டு, ஒரு நூலின் தரத்தை பரிசுகள் தீர்மானிக்கும் என்ற கருத்துடன் முற்றிலும் முரண்கருத்துடயவன் நான், ஒரு குடம் கண்ணீர் ஈழத்து இலக்கியப் பரப்புக்கு மிகவும் புதிய வரவு, அராபிய, ஆங்கிலேயே, ரஷ்ய இலக்கிய தாளங்களில் எல்லாம் இது வந்து விட்டது அராபிய கவிதை வடிவமான நாபாத்திய கவிதைகள் நானோடிகளாக ஆங்காங்கே வாழ்ந்த அரபியரின் வாழ்க்கையின் சோகங்களை சொல்லி நிற்கின்றது..அப்படித்தான் அவர்களின் கண்ணீரின் ஒரு துளியை இந்த ஒரு துளிக் கண்ணீர் அடையாளப் படுத்தியுள்ளது.
Saturday at 1:32pm

Sunday, October 23, 2011

ஒரு புறாக் கதை


ராஜசேகரனுக்கு ‘புறா’ என்றும் ஒரு செல்லப் பெயர் உண்டு.

செல்லப் பெயர் என்று நான் சொன்ன போதும் அது பட்டப் பெயர் என்று நீங்கள் சொல்லக் கூடும்.

சுமார் 200 மீற்றர் தூரத்தில் நிற்பவனை அழைக்கும் உச்சச் சத்தத்தில் “டேய் புறா...!” என்றோ “மச்சான் புறா...!” என்றோ கூப்பிட்டால் 50 அடிகளுக்கு அப்பால் நிற்கும் ராஜசேகரன் “என்ன மச்சான்” என்று பதிலுக்குக் கேட்பான். எனவே அது செல்லப் பெயராகவே ஆயிற்று அவனுக்கு என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

ஆயிரத்துச் சொச்சம் பேர் படிக்கின்ற, நூற்றுச் சொச்சம் பேர் வேலை செய்கின்ற கலாசாலையில் ஒரே நாளில் அனைவருக்கும் “புறா”வாகப் பிரபல்யம் பெறும் வாய்ப்புப் பெற்றவன் ராஜசேகரன். ஆனால் அது ஒன்றும் சுவையான கதை அல்ல.

விடுதியில் தங்கியிருந்த நூற்றுச் சொச்சம் பேரில் நான்கு பேருடன் ‘புறா’ பிடிப்பதற்காக உயரமான மோட்டு வளை ஏறிய ராஜசேகரன் பலன்ஸ் தவறிக் கீழே விழுந்தான். கால்களில் அஸ்பெஸ்டஸ் சீற் கிழித்த இரண்டு காயங்களும் மண்டையில் அடிபட்;ட இரத்தக் காயத்துடனும் அவனை அள்ளிக் கொண்டு இரவோடு இரவாக டாக்டரிடம் கொண்டு போகவேண்டி வந்தது. ஆனால் அடுத்த நாளே தலையில் பெரிய கட்டுடன் வகுப்புக்கு வந்து விட்டான்.

கூட்டமாய் நின்றிருந்தவர்களுள் ஒருவன் “டேய் .... புறா...!” என்று அவனைக் கூப்பிட அன்றிலிருந்து அவன் “புறா”வாகப் பதவியுயர்வு பெற்றான். இரண்டு வருடங்கள் பயிற்சி முடியும் வரை விரிவுரையாளர்களையும் கலாசாலை ஊழியர்களில் ஒரு சிலரையும் தவிர ஏனைய அனைவருக்கும் அவன் “புறா”வாகவே இருந்தான்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் அவனை விலாவாரியாகப் பேட்டி கண்டேன்.

Wednesday, October 19, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 4



இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம் - 4

பிற்பகல் நடைபெற்ற பட்டிமன்றத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் கிடைத்தது பெருத்த ஏமாற்றமேயாகும். தலைமை வகித்த பேராசிரியர் தி.மு அப்துல் காதர் அவர்களே தனது தலைமையுரையில் பெருமளவு நேரத்தை எடுத்துக் கொண்டார். அவரது பேச்சு கேட்கக் கேட்க இனிமையாகத்தான் இருந்தது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் திகட்டிப் போகும் அல்லவா? பிற்கல் துவங்கிய தனது தலைமைப் பேச்சை மஃரிப் வரை தொடர்ந்தார். அதற்குப் பிறகாவது பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பேச விடுவார் என்று பார்த்தால் அதற்குப் பிறகும் 20 நிமிடங்கள் அளவில் பேசினார்.


“இன்றை சூழலில் இஸ்லாமியரின் நிலை வாழ்த்தும்படியா? வருந்தும்படியா?” என்பது தலைப்பு. சும்மா பொறி பறக்கும் என்று எதிர் பார்த்தேன். ‘வாழ்த்தும்படியே’ என்று பேச வந்த முதல் பேச்சாளரே ஒரு நெடும் பாட்டை ஆரம்பித்தார். வெறுத்துப் போய் உட்கார்ந்து இருந்தபோது ‘வருத்தும் படியே’ என்ற அணியின் முதல் பேச்சாளர் பேராசிரியர் அப்துல் சமது ஓரளவு பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி நம்பிக்கை வரவழைத்தார். தமது எதிர்பார்ப்பை பட்டி மன்றம் நிறைவு செய்யவில்லை என்ற கருத்தை சில இந்திய நண்பர்களும் இலங்கை அன்பர்களும் நம்முடன் கலந்துரையாடும் போது தெரிவித்தார்கள்.


இந்த அரங்கில் பலந்து கொண்டு பேசிய புதுக்கல்லூரிப் பேராசிரியர் லிவிங்ஸ்டன் தனது பேச்சின் இறுதியில் தான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதாகப் பிரகடனப்படுத்தினார். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் பெரிதும் ஆர்வம் கொண்டவரும் கவியரங்கில் பங்கு கொண்டவருமான இணையான்குடி சண்முகம் என்பவரும் 17.07.2011ல் இஸ்லாத்தைத் தழுவியதாக அறிவித்திருக்கிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் தனது பெயரை ஹிதாயத்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்ட அவர் “ஒரு கரையோர நாணல் கலிமாச் சொல்கிறது” என்ற தலைப்பில் இலக்கிய அன்பர்கள் அனைவருக்கும் மூன்று பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

Friday, October 7, 2011

நீதியும் நெட்டாங்குகளும்!




குறுந்தூரப் பயணங்களுக்கு என்னிடம் ஒரு ஸ்கூட்டர் உண்டு.

முன்னைய காலத்தில் மோட்டார் சைக்கிள் வரிசையில் மேலதிகச் சில்லுடன் வரும் வாகனம் ஸ்கூட்டர் மட்டும்தான். வழியில் பஞ்சராகி விட்டால் ஸ்கூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் மேலதிகச் சில்லைப் பொருத்திக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இப்போது பல்வேறு கம்பனிகள் ஸ்கூட்டர் வகைகளைத் தயாரிக்கின்றன. அவற்றுக்கு ‘ஸ்கூட்டி’ என்று சுருக்கமாகச் செல்லப் பெயரைச் சூட்டி விட்டு மேலதிகச் சில்லை எடுத்து விட்டார்கள்.

மேலதிகச் சில்லு இல்லாத காரணத்தால் வழியில் பஞ்சராகி விட்டால் பயணம் செய்பவர் மூச்சுப் பிடித்துக் கொண்டு வாயில் நுரை தள்ள, ஸ்கூட்டியைத் தள்ளிக் கொண்டு டயர் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கும். டயர் கடை எல்லாத் தெருக்களிலும் இருப்பதில்லை. இதனால் தள்ளிச் செல்வதிலேயே அவரும் பஞ்சரான டயரின் நிலைக்கு வந்து விடுவார்.

எனக்கும் இந்த அவல நிலை பல முறை ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்கூட்டி கம்பனியில் ஒரு மேலதிகச் சில்லை நான் வாங்கிக் கொண்டேன். வாங்கிக் கொண்டேனே தவிர அதைப் பொருத்திக் கொள்வதற்கு ஸ்கூட்டியில் இடம் கிடையாது. அந்த மேலதிகச் சில்லு எப்போதும் தயாரான நிலையில் வீட்டில் இருக்கும். எந்த இடத்தில் ஸ்கூட்டி பஞ்சரானாலும் அதே இடத்தில் அதை நிறுத்தி விட்டு ஒன்றில் வீட்டிலிருந்து மேலதிகச் சில்லை அழைப்பித்து அல்லது நானே சென்று எடுத்து வந்து பொருத்திக் கொண்டு டயர் கடைக்குச் செல்வேன். ஸ்கூட்டியைத் தள்ளி மாய்வதை விட இது ஒரு வகையில் ஆறுதலான விடயம்.

எனக்குப் பழக்கப்பட்ட டயர் கடை இருவழிப் போக்குவரத்து நடைபெறும் பெருந்தெருவில் அமைந்திருக்கிறது. அதாவது நான் ஒரு பக்கத்தால் சென்று அடுத்த பக்கத்துக்குத் திரும்ப வேண்டும். பெருந்தெரு என்பதால் கண்ட கண்ட இடத்திலெல்லாம் வாகனத்தைத் திருப்ப முடியாது. பாதைக்கு நடுவில் உயரமான கொங்க்றீட் கற்களாலான தடுப்பு. அதன் மேலால் கம்பித் தடுப்பு. இந்தத் தடுப்பு ரயில்வே பாதை குறுக்கறுக்குமிடத்தில் முடிவடைகிறது. சட்டப்படி அந்த இடத்தில் வாகனத்தைத் திருப்ப முடியாது.

Monday, October 3, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 3


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 3

அதே போன்றுதான் இந்திய முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொஹிதீன் அவர்களது உரையைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடைசி நாளன்று ஏறக்குறைய 40 நிமிடங்கள் அவர் உரை நிகழ்த்தினார். இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்ற ஆவல்தான் என்னில் மேவி நின்றது. அவருடைய பேச்சில் ஆய்வுக்கான தலைப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி அதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எவற்றையெல்லாம் அது உள்ளடக்க வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார். அவரது பேச்சின் உச்சக் கட்டமாக வருடா வருடம் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அல்லாமா உவைஸ் அவர்களது ஞாபகார்த்த உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்று அழுத்திப் பேசினார்.



பேராசிரியர் காதர் மொஹிதீன்

இவர்களது உரைகளுடன் நமது அரசியல்வாதிகளின் உரைகளை அருகில் கூட வைக்க முடியாது. வெறுமனே பொம்மைகளாக இருந்து விட்டுப் போகும் நிலையிலும் பிரமுகராக வந்து ஊடக வெளிச்சத்தில் நனைந்து விட்டுப் போகவும் நினைக்கும் நமது அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டின் ஒளிப்பதிவு நாடாக்களை எடுத்து இந்திய அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கேட்க வேண்டும். அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் எத்துணை ஆழமான அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான அரங்குகளில் பங்கு கொள்ள நினைக்கும் நமது அரசியல்வாதிகள் ஆகக் குறைந்தது எழுத்து மூலமாகவாவது ஒரு உரையைத் தயார்படுத்திக் கொண்டு சென்று படிப்பார்களானால் அவர்களுக்கும் இலங்கையிலிருந்து கலந்து கொள்ளும் இலக்கியவாதிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் கௌரவமாக இருக்கும்.

முதல் நாள் நிகழ்வில் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது கவியரங்கம். தலைமைக் கவிஞர், வரவேற்புக் கவிஞர் உட்பட முப்பத்து ஐந்து கவிஞர்கள் கலந்து கொண்ட அதி பிரம்மாண்டக் கவியரங்கம். அன்றைய தினமே அத்தனை பேரும் கவிதை படித்திருந்தால் அது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கும். இவர்களுள் நமது கவிஞர்கள் நால்வர். மருதூர் ஏ.மஜீத், பாலமுனை பாரூக், மௌலவி காத்தான்குடி பௌஸ், கிண்ணியா ஏ.எம்.எம். அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்களில் காத்தான்குடி பௌஸ், பாலமுனை பாரூக் ஆகியோரின் கவிதைகள் நன்றாக இருந்ததாக சில நண்பர்கள் எனக்குச் சொன்னார்கள்.