Friday, February 23, 2024

ரஃபாவிலிருந்து



ஹஸன் அபூ சித்தா


இஸ்ரேலியரின் இடை விடாத தாக்குதல் காரணமாக தென் காஸாவின் கான்யூனிஸிலுள்ள எமது வீட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வேண்டியிருந்தது. 

நான் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் சட்டம் கற்பதற்குத் தயாராக இருந்தேன். ஒரு சட்டத்தரணியாகி சர்வதேச நீதிமன்றில் பலஸ்தீனுக்காகப் பேச வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியேறி கான் யூனிஸிலிருந்த பெண்கள் பாடசாலையில் தஞ்சமடைய வேண்டியிருந்ததால் எனது சட்டக் கல்விக் கனவு அப்படியே நி;ன்று விட்டது.

மெத்தைகள் இன்றி குளிர் மிகுந்த வெற்றுத் தரையிலேயே நாங்கள் உறங்க வேண்டியிருந்தது. இதனால் அங்கிருந்த முதியவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். டிசம்பரில் பாடசாலைக்கு அருகிலிருந்த ஹமாத் நகரத்தின் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதலின் உக்கிரம் காரணமாக பாடசாலைக் கட்டடங்கள் அதிர்ந்தன. நாங்கள் வகுப்பறை ஒன்றுக்குள் இருந்தோம். தாக்குதலில் உண்டான அடர்த்தியான புழுதியும் புகையும் நாமிருந்த இடத்தை அப்படியே மூடிப் பரவியது. இதன் காரணமாக எல்லாரும் மூச்சுத் திணறலுக்கு உள்ளானோம். குண்டுத் தாக்குதலில் ஜன்னல்கள் சேதமடைந்தமையால் நச்சுப் புகையைச் சுவாசிக்க வேண்டியதாயிற்று. அந்தப் புகையில் வெள்ளைப் பொஸ்பரஸ் கலந்திருந்தது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம்.

எனது குடும்பத்தவரில் இந்தப் புகையினால் அதிகம் பாதிக்கப்பட்டது எனது தங்கை மர்யம்தான். அவள் 2 வயதாக இருக்கும் போதே ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டவள். அவளுக்குப் புழுதி, புகை என்பன ஆகாது. இதனால் அவளைத் தாயார் மிக அவதானமாக வளர்த்து வந்தார். இப்போது மர்யத்துக்கு 23 வயது. இன்னும் அந்த நோய்ப் பாதிப்பு அவளுக்கு உண்டு. தடிமன் பீடித்தாலே நாங்கள் எச்சரிக்கை ஆகி விடுவோம். கோவிட் காலத்தில் அவளுக்குத் தொற்றி விடுமோ என்று நாங்கள் மிகவும் பயத்துடன் இருந்தோம். 

பாடசாலை வகுப்பறைககுள் புகுந்த நச்சுப் புகை காரணமாக மர்யம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். நாங்கள் அவளைச் சுற்றியிருந்து நீர் தெளித்து எழுப்புவதற்குப் பிரயத்தனப்பட்டோம். பாடசாலை நர்ஸ் வந்து மர்யத்தை எழுப்ப முயற்சிகள் செய்தாள். எதுவும் ஆக வில்லை. எனவே அவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். இதற்கிடையில் ஏனைய அனைவரும் முகக் கவசத்தை அணிந்தோம். வாய் வழியாகப் புகை புகுந்து விடாதிருக்க வாயைச் சுற்றிப் புடவைகளால் சுற்றிக் கொண்டோம். 

வைத்தியசாலையில் மர்யம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு ஒக்ஸிஜன் பொருத்தப்பட்டது. நிமோனியாவும் பீடித்திருந்ததால் ஆபத்தான நிலை உணரப்பட்டது. அவள் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை காத்திருந்தோம். 

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலைமையை விவரிப்பது மிகவும் துன்பமிக்கது. தியாகிகளின் மரணித்த உடல்களும் உடற்பாகங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இஸரேலிய தாக்குதலில் உயிர் பிழைத்தோர் நிலையும் சொல்லமளவுக்கு இருக்கவில்லை. அங்கிருந்த உடல்களின் ஒன்று எனது வாழ்நாள் நண்பன் பாரா மக்தியினுடையது என்பதையறிந்து அதிர்ந்து போய் விட்டேன். ஒரு நாள் முன்னர்தான் இருவரும் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம். மெதுவாகச் சென்று அவரது நெற்றியில் முத்தமிட்டு அவருக்காகப் பிரார்த்தித்தேன்.

மர்யத்தின் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதை தாதி வந்து சொன்னாள். அடுத்த நாட்காலை ஒக்ஸிஜன் சிலின்டருடன் தங்குமிடம் திரும்பினோம். வந்ததும் அவசரம் அவசரமாக ரஃபா நோக்கிக் கிளம்பினோம். இப்போது நாங்கள் ரஃபாவில் இருக்கிறோம். இங்கேயும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சொல்வதற்கில்லை. தெருவோரம் ஒரு கூடாரத்தில் தங்கியிருக்கிறோம். நாங்கள் உணவு சமைக்கும் புகை எங்கள் சுவாசக் காற்றை நிறைக்கிறது. ஈரலிப்பான, நீர் ஊறும் நிலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்போது கூடாரத்தில்தான் வாழ்கிறோம். அதுதான் இப்போதைக்கு என் தாய்நாடு, வீடு எல்லாமே.

ரஃபாவை இஸ்ரேல் தாக்குவதற்கு முன்னர் உலகம் எமது உதவிக்கு வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இல்லையெனில் நாங்களும் தியாகிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவோம்!