கலாநிதி சாலிஹ் ஹஸனைன்
இன, மத, தேச, பிரதேச மற்றும் இன்னோரன்ன காரணிகளைக் கொண்டு மனிதர்கள் பாகுபாட்டுக்குள்ளாவது அல்லது வேறுபடுத்தி நோக்கப்படுவது இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர்வது நம்பச் சிரமமாகத்தான் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அது இன்னும் தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
உலகம் முழுவதும் ஆங்காங்கே சில மூடர்கள் இனத்தை, மதத்தை, நிறத்தை முன்னிறுத்திப் பாகுபடுத்துவதன் மூலம் சிலர் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வாறான மூடர்கள் அல்லது வெறியர்கள் நாகரிகமடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளில் வாழ்ந்து வருவதுதான் பெரும் வேடிக்கை.
கடந்த வருடம் ரஷ்யாவிலுள்ள சில விளையாட்டுக் கழகங்கள் கமரூன் தேசத்திலிருந்து அதி திறமை வாய்ந்த சில உதைபந்தாட்ட வீரர்களைத் தமது அணிகளில் விளையாட ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் குறிப்பிட்ட வீரர்களுடன் களமிறங்கிய அணியுடன் விளையாடுவதற்கு எதிர் அணி மறுத்து விட்டது. மாத்திரமல்ல விளையாட்டரங்கில் கமரூன் வீரர்களை அவமானப்படுத்திக் கூக்குரலிட்டிருக்கிறார்கள். கமரூன் வீரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் விமானம் ஒன்றில் நடந்த கதை வித்தியாசமானது!
ஜொஹனார்ஸ்பேர்கிலிருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தென்னாபிரிக்க வெள்ளையினத்தைச் சேர்ந்த நடுவயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தார். அவரது பக்கத்து ஆசனத்தில் தென்னாபிரிக்கக் கறுப்பு இன மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. விமானப் பணிப் பெண்ணை அழைத்து முறைப்பட்டார்.

