Sunday, July 18, 2021

மெல்லிசைப் பாடல்கள் - கால் முறிந்த குதிரை!


நம் நாட்டு மெல்லிசைப் பாடல்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் பக்கம் பக்கமாக எழுதலாம். 

வேகமாக ஓடி வந்து கால்கள் முறிக்கப்பட்டுக் கிடக்கும் குதிரையைப் போன்ற நமது மெல்லிசைப் பாடல்களின் கதையில் எனக்குத் தெரிந்தவற்றை நினைவில் உள்ளவற்றை இங்கு சொல்கிறேன் . 

நம்நாட்டு மெல்லிசைப் பாடல்களின் வரலாற்றை இலங்கை வானொலியில் இருந்து தொடங்குவோம். அது ஆரம்பத்தில் 'ஈழத்துப்பாடல்கள்' என்ற பெயரிலேயே ஒலிபரப்பாகியது. காலையில் செய்தியறிக்கையைத் தொடர்ந்து 'ஈழத்துப்பாடல்கள்' சொற்ப நேரம் ஒலிபரப்பாகும். பிறகு 'பொங்கும்பூம்புனல்' வந்துவிடும். அப்போது முக்கியமான பாடகர்களாக வி.முத்தழகு, எஸ்.கே. பரராஜசிங்கம் போன்றவர்கள் பங்களிப்புச் செய்தார்கள். பாடகிகளாக கலாவதி சின்னச்சாமி , சுஜாதாஅத்தநாயக, முல்லைச் கோதரிகள் போன்றோர் பாடினர். வி.முத்தழகும், கலாவதி சின்னச்சாமியும் - ரி. எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் போன்று பிரபலமான ஒருசோடி அப்போது.

'பாடுபடு நண்பா பரிசு தரும் பூமி', 'கங்கையாளேகங்கையாளே 'போன்ற பாடல்கள் அப்போது அடிக்கடி ஒலிக்கும். ஈழத்து ரெத்தினம் என்பவர் பெரும்பாலும் பாடல்களை எழுதியிருப்பார். ஆர். முத்துசாமி, றொக்சாமி போன்றவர்கள் இசையமைத்திருப்பார்கள்.

இப்படிப்  போய்க்கொண்டிருந்த ஈழத்துப்பாடல்கள் சிறிது காலத்திற்குப் பிறகு 'மெல்லிசைப்பாடல்கள்' என்ற நாமத்துடன, கொஞ்சம் புதுமெருகுடன் புதுப்புதுக் குரல்களுடன் புதுப்புதுப்பாடல்களாக, புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டு ஒலிக்கத் தொடங்கின.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மெல்லிசைப் பாடல்களுக்காக அதிக சிரத்தையெடுத்த காலம்அது.

நாடு பூராவும் கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். பரந்த அளவில் பாடல்கள் பெறப்பட்டன. புதிய இசையமைப்பாளர்களைத் தேடியெடுத்தார்கள். மெல்லிசைப் பாடல்களுக்கென்று தனி வங்கி நிலையத்தில் இயங்கத் தொடங்கியது. நாட்டின் பலபாகங்களிலுமிருந்து கிடைக்கப் பெறும் பாடல்களில் சிறந்ததைத் தெரிவு செய்து அந்த வங்கியில் வைத்தார்கள். கழிக்கப்பட்டவற்றை திருப்பிஅனுப்பினார்கள். தெரிவுசெய்யப்பட்ட பாடல்கள் பாடி இசையமைக்கப்பட்டுப் பாட்டாகினால் ஒருபாடலுக்கு 15ரூபா சன்மானமும் அனுப்புவார்கள். நானும் 60ரூபா அளவில் சம்பாதித்திருக்கிறேன். அந்தப் பணத்தில் வாங்கிப்போட்ட வளவில்தான் நான் இப்போது குடியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது.

தேசிய சேவையில் 'மெல்லிசைப் பாடல்கள்' என்ற நிகழ்ச்சி ஒலிக்கும். அதில் புதிய பாடல்கள் அறிமுகமாகும். பிறகு பருவத்திற்குப் பருவம் ஒலிபரப்பான பாடல்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஒருகுழு அவற்றிலிருந்து அடிக்கடி ஒலிபரப்பவென சில பாடல்களைத் தெரிவு செய்யும். மெல்லிசைப் பாடல்களில் தங்களுக்குப் பிடித்தவற்றை நேயர்கள் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சியொன்றும் அப்போது இருந்ததாக ஞாபகம். 'பொப்' இசையை விரும்பிக்கேட்கும் நிகழ்ச்சியொன்றும் வர்த்தக ஒலிபரப்பில் இருந்தது. 

நமது பாடல்களின் மழைக்காலம் இதுதான்.

நீலாவணன் எழுதி சத்தியமூர்த்தி பாடும் 'ஓவண்டிக்காரா', எஸ்.கே. பரராஜசிங்கம் பாடும் பஸீல் காரியப்பரின் 'அழகான ஒரு சோடிக் கண்கள்' , செ. குணரெத்தினம் எழுதி கலாவதி சின்னச்சாமி பாடும் 'பாப்பா முகத்தில் பால் நிலவு பட்டுத் தெறிக்குது' ,அக்கரைப் பாக்கியன் எழுதி ரகுநாதன் பாடும் 'நதி கொண்ட காதல் கடல்மீது', மு. சடாட்சரனின் 'நித்திரையில் தோன்றும் நித்திலமே வாராய்' போன்ற பலபாடல்கள் ஜனரஞ்சகமாகி ஒலித்துக்கொண்டிருக்கும். பிறகு ரீ.கிருஷ்ணன்,  எம்.ஏ.எம். அன்சார், கே.எஸ். பாலச்சந்திரன், பாக்கியராஜா போன்றவர்களின் பாடல்களும் வந்துசேர்ந்தன.

சோலைக்கிளி எழுதி வயலட் மேரி பாடிய “கொச்சிப் பழமே“ சந்ரு பாடிய “மங்கையைத் தேடுது காற்று“ திலகா பாடிய “இருக்கிற தொல்லைக்குள் இன்னொரு தொல்லையா ஆகிய பாடல்களுக்கு இசை அமைத்தவர் சரஸடீன்.

இவர்களுடன் வனஜா ஸ்ரீனிவாசன், கோகிலாசுபத்திரா சகோதரிகள், யோசப்ராஜேந்திரன், புஷ்பாராசசூரியர், ஜெகதேவிவிக்னேஸ்வரன், 'தன்னந்தனிமூங்கில்' என்ற அருமையான பாடலைப்பாடிய சாரதாவாசுதேவன், 'அழகுநிலாவானத்திலே' என்று அமுதகானம் இசைத்த விவேகானந்தன், 'குயிலே' என்று தொடங்கிப் பாடிய மாணிக்கவேல், சந்திரிக்காடீஅல்விஸ், பார்வதிசிவபாதம், பௌசுல்அமீர், ஸ்ரான்லி சிவானந்தன் என்றெல்லாம் பெரியதொரு கானக் குயில்களின் பட்டாளமே உருவாகியிருந்தது. 

நமது மெல்லிசை கொழுத்துப் போயிருந்தது

என்.சண்முகலிங்கன், கோப்பாய் சிவம், சில்லையூர் செல்வராசன், எருவில்மூர்த்தி, செ. குணரெத்தினம், ஆர்.எஸ்.ஏ.கனகரெத்தினம், கமலினிமுத்துலிங்கம், அக்கரையூர் அப்துல் குத்தூஸ், எச்.ஏ.அஸீஸ், சபா. சபேசன் , ஒலுவில் அமுதன்,  மூதூர் ஜெயராஜ்,  கார்மேகம்நந்தா, அசனார் ஸக்காப்,  கோவிலூர் செல்வராசன்,  நிந்ததாசன் என்று இன்னுமின்னும் எத்தனையோ பேர் பாடல்எழுதினார்கள். 

எம்.எஸ். செல்வராஜா, திருமலை பத்மநாதன்,  கண்ணன் நேசம், மோகன்ராஜ் இன்னுமின்னும் பலர் இசை வழங்கினார்கள். 

இப்படி வளர்ந்த மெல்லிசையே நீ எங்கே? 

இப்போதும் வி.முத்தழகு தனது விடா முயற்சியினால் இந்தத் துறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றார். புன்னகைசெய்வாயா, பாடப் பாட புதுராகம், ஆடும் பாடும் மயிலும் குயிலும் ஆனந்தமாய் வாழுது ஆகிய  இவரது சில பாடல்கள் இன்றைக்கும் எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும் 'பிறை' பிராந்திய வானொலியில் சனி தோறும் ஒலிக்கும் 'சந்தனக்காற்று' சஞ்சிகை நிகழ்ச்சியில் அதை நடத்தும் அறிவிப்பாளர் ஜே. வகாப்தீன் அவர்களால் வி.முத்தழகு நேரடியாக குரல் தர அழைக்கப்பட்டு பல விடயங்கள் பேசப்பட்டு, அவரது சிலபாடல்களும் ஒலிபரப்பாகின. நமது மெல்லிசை நட்சத்திரம் இவர் என்றால் அது மிகையாகாது. நமது மெல்லிசைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் வி.முத்தழகு. மற்றவர் எஸ்.கே.பரராஜசிங்கம். இவர்களது அரும் பணியாலும் நமது மெல்லிசை துளிர் விட்டதென்றால் பிழையில்லை. 

தென்னை மரத்தின் பாளைக்குள்ளே ரெண்டு தேரை இருந்துமுழிக்குதுபார், மல்லிகை, அழகானஒருசோடிக்கண்கள், கங்கையாளே என்பன எஸ். கே. பரராஜசிங்கத்திற்கு நல்ல பெயர் கொடுத்த பாடல்கள். இவர் 'கங்கையாளே' என்றபெயரில் இறுவெட்டு ஒன்றையும் வெளியிட்டதாக ஞாபகம். வி. முத்தழகு தலைநகரில் அப்போது 'ஸப்தஸ்வரங்கள்' என்ற தனி நபர் கச்சேரி செய்திருப்பதாகவும் அறிகிறேன்.

அந்தக்காலமே நீ ஏன் திடீரெனக் காலக் கடலில் பாய்ந்து உன் உயிரை மாய்க்க நினைத்தாய்?

இந்த மெல்லிசைகளிலெல்லாம் காதல்பாடல்கள், தத்துவப்பாடல்கள், அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள், தேசாபிமானப் பாடல்கள், பிள்ளைகளுக்கான பாடல்கள் என்று சினிமாப் பாடல்களைப்போல பலவகையான பாடல்களும் இருக்கின்றன. 

செ. குணரெத்தினத்தின் 'உனக்காக நான் பாடும் ஓராயிரம் பாடல் உன்காதில் கேட்கல்லியோ 'காதல் உணர்வை வெளிப்படுத்தும் அருமையான பாடல்.மு. சடாட்சரனின் 'நித்திரையில் தோன்றும் நித்திலமே வாராய்' இதுவும் நல்ல காதல் மெல்லிசையே! 'அழகானஒருசோடிக்கண்கள்'என்பதும் அப்படியே . என். கே. ரகுநாதன் பாடும் 'பூச்சூடும் காலம் வந்தாச்சு' அண்ணன் தங்கைப் பாசம். எம்.ஏ.எம். அன்சாரின்'பூரணை நிலவில் 'இன்னுமொரு பெண் உணர்வுப் பாடல் . 'பெத்த மனம் பித்து என்பார்' தத்துவம். திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடும் 'மாமயில் ஆடக் கண்டேன் கதிர்காமத்தில்' அழகான பக்திப்பாடல். சி. மௌனகுரு எழுதி திலகநாயகம்போல் பாடிய 'சின்னச்சின்னக் குருவிகள் எங்கள் சிறுவர் சிறுமிக் குருவிகள்' பாடல் பிள்ளைகளுக்கானது. 'பச்ச வயல் காட்டிலே கொச்சி மஞ்சள் பூசியொரு' என்ற பாடல் வி .முத்தழகு பாடுவது கிராமியம். 

நமது மெல்லிசைப் பாடலே உனக்கு என்ன நடந்தது? 

லதா கண்ணன் போன்றவர்களும் பாடியிருக்கிறார்கள். கமலினி முத்துலிங்கம் எழுதி, இவர் பாடிய 'ஒரு பூங்காற்று' என்பது ஓர் இனிய கானம். 

அனிச்ச மலர் நோகும் அழகிய பாதம்.... ஆஹா... இப்படி எத்தனை!

எங்கள் மெல்லிசையே உனது வளர்ச்சிக்கு யார் தடை போட்டது? 

வானொலியைத் தவிர்த்து வெளியிலும் நமது பாடல்கள் வளர்ந்த ஒருகாலமும் நம்மிடம்இருக்கிறது. திருமலையில் இருந்து பரமேஸ்-கோணேஸ் என்பவர்களின் 'உனக்குத் தெரியுமா நான் உன்னையழைப்பது', 'போகாதே தூரப்போகாதே' , 'நீ வாழுமிடம் எங்கே' என்ற பாடல்களெல்லாம் வந்து கலக்கின. இவற்றையெல்லாம் மிஞ்சி கல்முனை மண்ணில் மிகப்பெரும் சாதனையொன்றும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

 ஓர் இசை நிகழ்ச்சியை சினிமாப் பாடல்களைக் கொண்டு நடத்தித்தான் வெற்றி பெற முடியுமென்ற ஒரு பொய்மையான கற்பிதத்தை உடைத்து, இல்லை, கொடுப்பதை கொடுப்பது மாதிரிக் கொடுத்தால், ரசிப்பவன் ரசிப்பான் என்று காட்டினான் கல்முனை கதிரவன், மட:டுநகர் ஆதவன் இசைக் குழுவைச் சேர்ந்த திரு. ஞானப்பிரகாசம் என்பவன். 'பள்ளி மாணவி புள்ளி மானைப் போல்' , 'தேர்த் திருவிழா பார்க்க வாறியா', 'மினியடிக்கும் மீனா', 'சோலையிலே ஒரு பொன் 'ஆலம் படைத்தவனே ஆதி றகுமானே', 'மாநகராம் மட்டு மாநகராம்' போன்ற எத்தனையோ சுயமான பாடல்களால் வெற்றிகரமாக கச்சேரி செய்து காட்டினான் அவன் .

 ஒன்றிரண்டு சினிமாப் பாடல்களை நடுவே பாடினால் ரசிகர்கள் வேண்டாம் வேண்டாம்எனக் கூக்குரலிடுவார்கள்.. கற்கள் எறிந்து பேசுவார்கள். 'கந்தசாமி ராமசாமி ஹிப்பிப் பாணிடா ரெண்டு பேரும் சேந்துக்கிட்டா சாம்பிராணிடா' என்பது இவர்களின் பொப் பாடல்.

இந்தக் காலத்தில்தான் நமது 'பொப்' பாடல் இசையும் சிறப்பாக வளர்ந்தது. அந்தக் காலம் 1970கள். நாடு முழுக்க 'பொப்' இசை நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணமிருக்கும் .பத்திரிகைகளில் இவை பற்றிய விளம்பரங்களாகவே இருக்கும். எங்கள் பூமியான கல்முனையிலும் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது 'பொப்' இசை பூப்பூத்த காலம். 

ஏ.ஈ.மனோகரன், நித்தி கனகரெத்தினம், எஸ். ராமச்சந்திரன், அமுதன்அண்ணமலை, ஸ்ரான்லி சிவானந்தன். சண், றொபேர்ட் ராகல், சுரேஸ் ராஜசிங்கம் போன்றவர்களெல்லாம் பெயர் பெற்றிருந்தார்கள். ஏ.ஈ.மனோகரனின் 'இலங்கையென்பது நம் தாய்த்திருநாடு', 'வாம்மா கண்ணே டிஸ்கோஆடலாம்' 'வடை வடையாய் விற்று வந்தாள்' வாயாடிக் கிழவி' நித்தி கனகரெத்தினத்தின் 'சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே' ,எஸ். ராமச்சந்திரனின் 'நத்தையென ஊர்ந்து', அமுதன் அண்ணாமலையின் 'ஓ...ஷீலா', 'முருகையா முருகையா முருகனைப் பார்க்கப் போறேனையா 'போன்ற பாடல் களெல்லாம் அப்போது மிக மிகப் பிரபலம். அமுதன் அண்ணாமலை பாடிய' ..ஷீலா' பாடலுக்கு இசையமைத்தவர் மிக அண்மையில் நம்மை விட்டுப்பிரிந்த கே. எம். சவாஹிர்அவர்கள். அவரை இவ்விடத்தில் நினைத்துக் கொள்வது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை .ஏ. ஈ. மனோகரன் நித்தி கனகரெத்தினமெல்லாம் 'பொப்' இசை நட்சத்திரங்களானார்கள். இப்படி;  மெல்லிசையும்  பொப்பிசையும் ததும்பி வழிந்த காலம் புரண்டு கவிழந்து எப்படி?

சிலர் 1983ல் இடம் பெற்ற அசம்பாவிதத்தை சொல்கிறார்கள். அப்படியென்றாலும் ஏனையவைகளில் நாம் மீண்டெழுந்ததைப் போன்று நமது மெல்லிசையிலும் மீண்டெழலாம் அல்லவா? ஏன் இந்தச் சோர்வு? தோல் இழுபடும் தொய்வு? கால் முறிந்த குதிரைக்கு இனியாவது மருந்து கட்டி நடக்கவாவது வைக்க முடியாதா?

(27.03.2021)


நன்றி - வியூகம்  6



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: