Tuesday, March 8, 2016

அஷ்ரஃப் சிஹாப்தீனின் அழகியல் மீள்நடுகை!


மன்ஸூர் ஏ. காதர்

ஈழத்துக்கான போராட்டத்தின் கடந்தகாலப் போக்கில் 1985இல் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் விளைந்த உள்ளகச் சச்சரவு நமது காலத்தின் ஒரு கறை படிந்த பயங்கரமாகும். அந்த அதிர்ச்சி உப தேசியவாதத்தின் தோற்றுவாயாக ஈழத்து முஸ்லிம் மக்களிடம் பிரதி பலித்தது. பிரதிபலித்த அந்த உப தேசிய வாதத்தின் அச்சொட்டான குறியீடே 'ஸெய்த்தூன்' என்ற கவிதையாகும். அன்றைய நிலைவரத்தில் அது ஒரு முதன்மையான படைப்பாகவும் அமைந்திருந்தது. இந்தக் கவிதையின் சொந்தக்காரன் யார் என்ற விசாரணையும் ஆச்சரியமும் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்ற ,இலக்கிய ஆளுமையைப் பற்றிய தேடலை தமிழ் இலக்கிய உலகிலே உண்டாக்கிற்று. அவரின் கவிதா ஆளுமையின் வீச்சு பிற்காலத்தில் ஒரு குடம் கண்ணீரையே கொண்டு வந்து தந்துள்ளது. இந்த ஆரம்பமானது ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளனின் ஆடம்பரங்களை விடவும் ஒரு படைப்பாளிக்கான கனதியையும் தன்னடக்கத்தையும் அவருக்கு வழங்கிற்று.

அஷ்ரப் சிஹாபுத்தீன் சமகாலங்களில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் செலுத்த முனைந்துள்ளார். பலஸ்தீனக் கவிதைகளை மொழி பெயர்க்க பேராசிரியர் நுஃமான் மற்றும் பண்ணாமத்துக் கவிராயர் முதலியோர் செலுத்திய அதே உத்வேகத்தை அஷ்ரப் சிஹாபுத்தீன் அரபு மொழி மூலம் ஆங்கிலத்துக்கு வந்த சிறுகதைகளில் செலுத்தியுள்ளார்.

இத்தொகுதியில் சிறியதும் பெரியதுமான எட்டுச் சிறுகதைகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தன்னுடைய தகைசான்ற ஆங்கிலப் புலமை மட்டுமன்றி இக்கதைகளின்  மூலமொழியான அரபியில் இவருக்கிருந்த பரிச்சயமும் நாட்டமுமே இம்முயற்சிக்கான முழுத் தைரியத்தையும் இவருக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.


மன்ஸூர் ஏ. காதர்

இலக்கியங்களை மொழி பெயர்ப்புச் செய்தல் என்பது பிரத்தியேக மான மண் வளத்தையும் கால நிலையையும் தன்னுள் பவித்திரப்படுத்தி உருவாகிய தாவரத்தின் ஓர் இளம் கன்றை வேறொரு மண் வளத்தையும் வேறொரு கால நிலையையும் கொண்ட இன்னொரு வித்தியாசமான சுற்றாடலுக்குக் கொண்டுபோய் மீள் நடுகை செய்வது போன்ற ஒரு முயற்சியாகும். இந்த ' மீள் நடுகை'யின் பின்னர் அத்தாவரத்தின் தப்பிப் பிழைத்தலை ஒத்ததுதான் மொழி பெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் நிலையுமாகும். அதுவும் கிழக்கத்தைய கலாசாரங்களுடன் பிசையப்படாத ஒரு மொழியின் இலக்கியங்களை கிழக்கத்தைய கலாசார மொழிகளுடன் ஊடுபாவச் செய்வது மிகுந்த சிரம சாத்தியமாகும்.

முதலில் இந்தச் சிரமத்தை பொறுப்புணாச்சியுடன் சிந்தைக்கு எடுத்தவர்களால் மாத்திரமே மொழிபெயாப்பு இலக்கியங்களின் ஆன்மா வைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல் சார் பலங்கள் அல்லது பலவீனங்கள் யாவை என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் இந்தத் தொகுதி பற்றிய எமது சிந்தனைப் போக்கிற்கு நாம் கடிவாளம் இட்டுக் கொள்ள முடியும். மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் மொழியியல்சார் பலமும் அதேவேளை அதன் பலவீனமும் பின்வரும் எல்லைக்குள் மட்டுப்படுத்தத் தக்கதாகும்.

இலக்கியங்களை மொழிபெயர்த்தல் தொடர்பான புலமைசார் அறிஞராகக் கருதப்படும் யங்ஃபாங் ஹூ இது பற்றிக் குறிப்பிடும்போது நடைமுறைப்படுத்தப்படும் நோக்கங்களுக்காக ' மூலமொழியைச் சார்ந்து செல்லும்' (source language oriented) மொழிபெயர்ப்புக்கள் என்றும், மொழிபெயர்க்கப்படும் ' இலக்கு மொழியைச் சார்ந்து செல்லும்' (target language oriented)  என்றும் மொழிபெயர்ப்புக்களின் அவசியமான அம்சங்களைக் கட்டுப்படுத்திக் கூறுகின்றார்;.

மொழிபெயர்ப்பாளன் இந்த இரண்டு நிலைகளையும்; முழு அவதானத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய தவிர்க்க முடியாமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். தவறும் பட்சத்தில் விளையும் ஆபத்து, வித்தைக் காரனுக்கு ஏற்படும் ஆபத்தைப் போன்றதே. இந்த சமநிலைத் தன்மையில் காட்டப்பட வேண்டிய அதீத கவனம் மூலமொழி ஆசிரியனின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு வாசகனைக் கொண்டுவந்து சேர்க்கும்.

மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்கான மேற்படி வரையறை களைக் கொண்ட இந்த பரிசோதனைக் குழாய்க்குள் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்பவரும் போடப்பட்டே ஆகவேண்டி உள்ளது.

அத்துடன் மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் மூலமொழிக்கும் மொழி பெயர்க்கப்படும் மொழிக்கும் இடையிலான முழுமையான மனவெழுச்சிசார் நெருக்கடிகள,; ஒருமைப்பாடுகள,; பழக்கங்கள், வழக்கங் கள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், பெறுமானங்கள், சம்பிரதாயங்கள் ஆகிய வற்றுக்கான ' வெளிப்பாட்டுத் திறனுடன்கூடிய வெளிப் படைத்தன்மை' பிரதான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த முயற்சி பற்றிக் கவனக் குறைவாக கருதுபவர்களுக்குத் தழிழ் வகுப்பொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி தந்த ஒரு பயிற்சியை வாசகர்களிடம் கொடுக்க விரும்பு கின்றேன். அதாவது ' அவள் பூவோடும் பொட்டோடும் வாழ்கின்றாள்' என்பதனை வெறுமனே மொழியியல் ரீதியான தொடர்ச்சியுடன் ஆங்கிலமாக்குவதும் அதனைத் தமிழர் வாழ்வியல்சார் அல்லது இந்திய கலாசாரம்சார் தெளிவான அறிவுடன் ஆங்கிலமாக்குவதும் ஒரே வகை யான மொழிக் கையாளுகையுடன் நடைபெறமாட்டாது. இரண்டும் இரண்டு வகையான ஆங்கில மொழித் தொடர்களைக் கையாள மொழி பெயர்ப்பாளனைத் தூண்டும்.

இந்த அடிப்படை நியமங்களை வைத்துக்கொண்டு அஷ்ரப் சிஹாபுத்தீன் அவர்களின் இந்த எட்டு சிறுகதைகளையும் எனது தராசில் போட்டு நிறுத்துப் பார்க்க நான் ஆசைப்படுகின்றேன்.மொழி பெயர்ப்பு ஆசிரியர் பின்வரும் தலைப்புக்களில் இத் தொகுப்பைத் தந்துள்ளார். ரோரி அலன் என்ற எழுத்தாளரின் மரியமுக்கான பாடல், டெய்ஸி அல் அமிர் என்ற எழுத்தாளரின் எதிர்காலம், சிமாமந்தா கோஸி அடிசீ என்ற எழுத்தாளரின் முதலாம் இலக்கச் சிறை, மஹ்மூத் ஷூகைர் என்ற எழுத்தாளரின் ஷாக்கிராவின் உருவப்படம், உவேன் அக்பான் என்பவரின் எனது பெற்றோரின் படுக்கையறை, மஹ்மூத் சயீத் (ஈராக்) என்பவரின் பச்சோந்திக் குடியிருப்பு, பீற்றீஷ் லம்வகா என்பவரின் பட்டாம்பூச்சிக் கனவுகள் என்பனவே அக்கதைகளாகும்.

ஒட்டுமொத்தமாக இந்த எட்டுக் கதைகளையும் அவதானிக் கின்றபோது  மொழிபெயர்ப்பு ஆசிரியர் தன்னுடைய கதைத் தேர்வில் பின்வரும் மூன்று அம்சங்களை முதன்மைப்படுத்தியுள்ளார் என்பதனை புரிந்து கொள்ளத்தக்கதாயுள்ளது.

01.செம்மை சான்றதும் அழகியல் நுட்பங்களைச் செவ்வனே உள்வாங்கியதுமான இலக்கியங்களுக்கு ஆதர்சமாக எடுத்துக் காட்டத்தக்க சர்வதேச கணிப்பைப் பெறக்கூடிய கதைகள்

02.போர்ச்சூழலுக்குள் வாழும் மக்கள் வாழ்வின் அவலங்களை நுட்பமாகச் சித்திரிக்கும் படைப்புக்கள்

03.போராளிகள் மீதான கதாநாயக வழிபாடு மட்டுமன்றி, அதே போராளிகளால் மக்களுக்கு விளைவிக்கப்படும் கொடுமைகள் தொடர் பான எதிர்மறைக் காட்சிகளையும் அம்பலப்படுத்தும் கதைகள்.

000

முன்னர் குறித்துரைக்கப்பட்ட மூன்று அம்சங்களையும் மேல் வரும் இந்த எட்டுச் சிறுகதைகளுக்கு உள்ளே ஒரு விமர்சகனால் இனங்காட்ட முடியுமாக இருப்பின் இத்தொகுப்பு பற்றியதான ஒரு மதிப்பீட்டு நிலைத் தகவல்களை இதனை வாசிப்பவர்களுக்கு வழங்க முடியும்.

அதன்படி அவதானிக்கையில், மேற்படி மூன்று அம்சங்களும் தனித்தனியே பிரித்துக் காட்டக் கூடியதாக அல்லாது பொதுவாக எல்லாக் கதைகளிலுமே உள்ளுறைந்து காணப்படுவதே இத்தொகுப்பின் சிறப்பம்சமாகும். எனினும் பகுப்பியல்சார் நுட்பத்தின் இலகுபடுத்துகைக்காக பின்வரும் கதைகளை நாம் குறிப்பிட முடியும்.

கதைத் தொழில் நுட்பமும் செம்மை சான்ற அழகியல் படிம வளர்ச்சியும் கொண்ட ஒரு கதையாக உவேம் அக்பான் என்னும் எழுத் தாளரின் 'எனது பெற்றோரின் படுக்கையறை' என்ற கதையை நான் காண்கின்றேன். இக்கதையின் வெற்றி அந்த ஆசிரியன் கதையினுள்ளே தன்னுடைய கவித்துவமான மொழிநடையை ஊடுபாவச் செய்துள்ளமை தான். இதற்கு உதாரணமாக பின்வரும் இரண்டு தொடர்களையும் எடுத்துக் காட்டலாம்.

'அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் கண்ணுக்குத் தெரியாத வர்களின் மூச்சு எங்கும் கேட்பதுபோன்ற பிரமை. குறைந்தது இருபது பேய்கள் எங்களைச் சுற்றிக் காற்றில் உலவுவதுபோல் இருந்தது. அம்மா பேசும்போது அந்தப் பேய்கள் புலம்பின. ஆனால் எனது பெற்றோருக்கு அது புரிவதாகத் தெரியவில்லை.'

'எனது அருகில் இருந்த வெள்ளைச் சுவரில் அழுக்கு நீர் வழிந்ததைப் பார்த்தேன். அறையின் உட்கூரையில் இருந்து அது வழி கின்றது. முதலில் இரண்டு கோடுகளாக அது வழிந்தது. பின்னர் அவையிரண்டும் பெரிதாகி இணைந்து ஒன்றாகின. மேலும் இரண்டு கோடுகள் இறங்க ஆரம்பித்தன. எங்களது வளவில் உள்ள மாமரத்தில் இருந்து நூலிழுத்து இறங்கும் சின்னச் சிலந்திபோல அவை நழுவி இறங்கின. எனது விரல் நுனியால் அதைத் தொட்டேன். ,இரத்தம்!'

இவ்விரண்டு காட்சிப்படுத்தல்களும் எழுத்தாளனில் தொழில் நுட்பத்துக்கும் படிமக் கையாளுகைக்கும் சிறந்த உதாரணங்களாகும். இது எழுத்தளனின் கவித்துவமான காட்சிப்படுத்துதலை மட்டுமன்றி மொழி பெயர்ப்பாளனின் 'கருவிக் கையாட்சிக்கும்' சிறந்த எடுத்துக்காட்டு களாகும். ஆக, இக்கதையின் அழகியல் வார்ப்புத் தன்மை மூல மொழியின் மேல் ஒரு சிலாகிப்பையும் இன்ப அதிர்ச்சியையும் உருவாக்குகின்றது. வெறுமனே ஓர் 'அழகியல் பார்வையாளன்' கூட இதில் துப்பரவான ஒரு திருப்தியை அடைகின்றான்.

இதனைப்போல மற்றொரு கதையில் இருந்தும் இந்த அம்சங்கள் காணப்படுவதை என்னால் சிலாகித்துக் கூற முடியும். அளவில் சிறிய தாகவும் அதேவேளை படைப்பின் கனதி பற்றி சிந்திக்கையில் ஆச்சரியம் தரத்தக்கதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு கதைதான் 'மரியமுக்கான பாடல்' என்பதாகும். ரோரி அலன் என்ற எழுத்தாளருக்குச் சொந்தமான இச்சிறுகதை 'படைத்தலின் அதிசிறந்த நுட்பமான' காட்சிப்படுத்தலில் முதன்மை வகிக்கும் மற்றொரு சிறு கதையாகும். காட்சிப்படுத்தல் நுட்பத்துக்காக ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பின்வரும் எழுத்தோவியத்தைக் காட்டலாம்.

' இப்போதெல்லாம் மரியம் வீட்டைவிட்டு வெளியே வருவதே யில்லை. வீட்டுக்குள்ளேயும் தாயாரைவிட்டுத் தூரமாகி இருப்பதும் இல்லை. இன்னும் சொல்வதானால் தனது தயாரின் ஆடையை அடிக்கடி பற்றிப்பிடித்தபடி கூடவே நடமாடினாள். அந்தப்பிடியை விட்டால் எல்லாம் இருள் மயமாகிவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது.'

இது செவிட்டு ஊமையான ஒரு குழந்தைப் பாத்திரத்தின் போர்க்காலத் தோற்றம் பற்றியதான ஒரு காட்சிப்படுத்துதலாகும். போர்ச் சூழலும் மரண அச்சுறுத்தலும் நமது தலைவாசல் வரை வந்ததைக் கண்ட நமக்கு இது இன்னும் இலகுவாக்கப்பட்ட உணர்ச்சிப் படிமமாகும். இது மட்டுமன்றி மொழிபெயர்ப்பாளனின் அவஸ்தையைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஒரு வாசகனிடம் ஏற்படுத்தலும் இந்தக் கதையின் மற்று மொரு பக்க விளைவாகும்.

போர்ச் சூழலுக்குள் வாழும் மக்களின் அவலங்களை மற்ற வர்களின் உள்ளங்களில் நெருடலை ஏற்படுத்தக் கூடியதாகப் படைக்கப் பட்ட வெற்றிகரமான படைப்புக்கள் இக்கதைகளின் இரண்டாவது முக்கிய பண்பாகும்.

இங்கு காணப்படுகின்ற படைப்புக்களிற் பெரும்பாலானவை இத்தகைய குணாம்சங்களைச் சித்திரிப்பதிலும் அதனால் வாசகர் களிடையே ஒரு வகையான  மன அமைதியின்மையை உருவாக்கத் தக்கதாகவுமே காணப்படுகின்றன.

அதற்கும் இன்னும் ஒருபடி மேலேபோய் டெய்ஸி அல் அமிர் என்ற எழுத்தளரின் ' எதிர்காலம' எனப் பெயரிடப்பட்டுள்ள கதையைக் குறிப்பிடலாம். அளவில் மிகச் சிறியதான ,க்கதையின் கனதியும் அது என்னிடம் தேற்றுவித்த மன நெருக்கடியையும் பகிர்ந்து கொள்ள பின்வரும் எடுத்துக் காட்டுகளை என்னால் அடிக்கோடிட முடியும்.

' லெபனான் இறந்துகொண்டிருக்கையில், உதவிக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கையில் முழு உலகும்.. ஆம் முழு உலகும் ஒரு புறமாக அல்லது மற்றொரு புறமாக அதன்மீது கத்தி சொருகிக் கொண்டிருக்கின்றது. விஷத்தைக் கொண்டு வந்து ஊட்டிக் கொண்டிருக் கின்றது. மேலும் மேலும் எரித்து ஆழப் புதைக்க முயல்கிறது. உலகத்தின் அரசியல் தலைவர்கள் தங்கள் காதுகளைப் புதிய மெழுகு கொண்டு அடைத்துக் கொண்டார்கள்..!' என்ற தொடரும்,

' ஆயுதங்களும் சண்டைக் காரர்களும் - கட்டளை அதிகாரி களும் தலைவர்களும் - தலைவர்களும் கட்சிகளும்- அல்லக்கைகளும் இயக்கங்களும்- அவர்களுக்குள் அவர்கள் சந்தித்தும் கொள்கின்றார்கள், சந்திக்க மறுத்து ஒதுங்கியும் கொள்கின்றார்கள்' என்ற தொடரும் நமது யதார்த்தத்தை நமது மனங்களிலேயே மீள்நடுகை செய்கின்றன. இந்த உதாரணம் நமது மூன்றாவது வகுத்துரைத்தலுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்து விடக் கூடியதாகும்.

மற்றும் ரோரி அலன் எழுதிய ' மரியமுக்கான பாடல்' என்ற கதையும் மஹ்மூத் ஷூகைர் படைத்த ' ஷாக்கிராவின் உருவப்படம'; என்ற கதையும் விதந்துரைக்கத்தக்க படைப்புக்களாகும்.

ஆனால் ' படைத்தலின் அழகியல்' என்ற எல்லைக்குள் மட்டும் நின்று வாசிக்கத் தெரிந்த ஒரு வாசகனுக்கு 'ஷாக்கிராவின் உருவப்படம'; ஒரு பொற்காலக் கனவாகத் தோற்றம் தரும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.

000

இறுதியாக, மீள் நடுகையில் ஈடுபடும் ஒரு கூலித் தொழிலாளி கடுமையான தண்டனைகள் வழங்கக் கூடிய தன் (விமர்சக) எஜமானனின் முன்னிலையில் கூனிக் குறுகி நிற்பது போன்ற தயக்கமும் அச்சமும் அஷ்ரப் சிஹாபுத்தீன் என்ற தோட்டக்காரனுக்கு இங்கு அவசிய மற்றனவாகவே எனக்குப்படுகின்றன. அவரின் தெளிந்த வாசிப்புடன் கூடிய கதைத் தெரிவும் அதனைச் செழித்து வளரத்தக்க சிரத்தையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் மீள் நடுகை செய்த ஆற்றலும் அவரின் குரலின் கம்பீரத்தைப்போல மீள் நடுகையிலும் ஒரு கம்பீரத்தை நிச்சயம் அவருக்கு ஏற்படுத்தும். அஷ்ரப் சிஹாபுத்தீன் என்ற ஈழத்து உப தேசிய வாதத்தின் அர்த்தம் சொட்டிய படைப்பாளி, ஆடம்பரமான ஓர் ஒளித்திரைக் கலைஞன், சிறந்த மீள் நடுகைக்காரனாகவும் தன்னை நிறுவிக் காட்டியமையை சிலாகித்துக்கூற எந்த விமர்சனக் கொம்பனும் கூச்சப்படத் தேவையில்லை.

அவரின் இந்த முயற்சி மேலும் தொடரவும் ,தன் மூலம் தமிழ் இலக்கியத்தின் மற்றொரு சாளரம் சீராகத் திறக்கப்படவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

மன்சூர் ஏ. காதிர்
01.09.2015

(பட்டாம்பூச்சிக் கனவுகள் நூலுக்கு வழங்கிய அணிந்துரை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: