கொழும்பு எம்.ஏ. ரஹீமாவின் சிறுகதைத் தொகுதிக்கு ஓர் அணிந்துரை அவசியமிவ்வை என்பது என் எண்ணம். அதுவும் அவரது இரண்டாவது தொகுதிக்கு!
ஆனால் அவர் வீடு தேடி எழுத்துப் படிகளோடு வந்து விட்டார். அவருக்குப் பின் எழுதத் தொடங்கிய எனக்கு அது ஒரு பெரிய கௌரவமாக அமைந்த போதும் பணி ஓய்வு பெற்று அமைதியாக ஒதுங்கியிருந்து வாழும் அவர் ஒரு பயணத்தை மேற்கொண்டு என்னைத் தேடி வந்ததில் எனக்கு மனசு வலித்தது. தபாலில் அனுப்பியிருக்கலாமே என்ற எனது ஆதங்கத்தைச் சொன்ன போது, 'வேறு சில சந்திப்புகளும் இருந்ததால் புறப்பட்டு வந்தேன்' என்றார்.
ரஹீமா டீச்சரை முதலில் எண்பதுகளின் முற்பகுதியில்தான் நேரில் சந்தித்தேன். மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களுடன் ஏதோ ஒரு விடயத்துக்காகச் சென்று கொண்டிருந்த போது 'ரஹீமாவுக்கு ஒரு தகவல் சொல்லணும் வா' என்று என்னையும் அழைத்துச் சென்றார். அது நின்ற நிலையில் பரிமாறப்பட்ட ஒரு தகவல். அதற்குப் பிறகு 2002, 2016 ஆகிய இலங்கையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் காலங்களில் அவரை நான் பலரிடமும் விசாரித்தேன். கண்டு கொள்ள முடியவில்லை. இலக்கிய ஈடுபாடு கொண்ட பலருக்கும் நிகழ்வது போல அவருக்கும் தொடர்பறுந்த ஒரு காலமாக அது இருந்திருக்க வேண்டும்
2023 இல் அவரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவரும் நற்செய்தியை அந்த அழைப்பு சொன்னது. தவறியவை போக தேடியடைய முடிந்த கதைகளும் புதிதாக எழுதியவையுமாக பதினான்கு சிறுகதைகயை உள்ளடக்கிய தொகுதி அது. 1979, 80 களில் எழுதப்பட்ட சிலகதைகளை உள்ளடக்கி பரணீதரனின் செய்நேர்த்தியுடன் வெளிவந்த அந்தத் தொகுதிக்கு 'சூல் சோறு' என்று பெயர். கொழும்பில் நிகழ்ந்த வெளியீட்டு நிகழ்வில் அதற்கான விமர்சன உரையை நிகழ்த்த அவர் என்னைத் தேர்ந்தெடுத்திருந்தார்.
'கவிதைப் புத்தகங்களை எனது பார்வைக்கு யாராவது தந்து விட்டால் அவற்றைத் திறப்பதற்கு நான் பயப்படுவேன். அவை என்னை என்ன செய்து விடுமோ என்ற அச்சமே அதற்கான காரணம்,' என்று ஒரு முறை கவிஞர் இன்குலாப் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அவ்வாறு சொன்னதில் அர்த்தம் இருந்தது. பிற்காலத்தில் எவராவது அணிந்துரைக்கென அல்லது விமர்சனத்துக்கென கவிதை நூல்களைத் தரும்போது மட்டுமன்றிச் சிறுகதை நூல்களைத் தரும்போதும் நான் பயப்பட ஆரம்பித்தேன்.
இந்தப் பயம் என்பது இரண்டு வகையானது. இரண்டும் கோபத்தை உண்டு பண்ணுபவை. இன்னும் செப்பனிடப்பட்டிருக்கலாம் என்று கருதக் கூடிய ஆரம்ப எழுத்துக்களை உள்ளடக்கியவை ஒரு வகை. சரியான முறையில் சரியான மொழியில் சரியான வடிவில் சரியான உணர்வுகளோடு; சமூகப் பிழ்வுகளைச் சுட்டிக் காட்டுபவை இரண்டாவது வகை. ஒரு நல்ல தொகுதியில் மனதைத் தொடும் விடயங்களுக்கு அப்பால் பாதிக்கு மேல் நியாய மீறல்கள், சுயநலம் போன்ற விடயங்களை எடுத்துக் காட்டும் படைப்புகள் இடம்பெறாதிருப்பதில்லை. எனவே நேர்மை, சகவாழ்வு, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை ஆகியவை மீறப்படுவது எழுதப்படும் போது அது ஒரு தார்மீகக் கோபத்தை நம்மில் ஏற்படுத்துகிறது. ஏனெனில் நம்மைச் சுற்றியிருக்கும் மனித சமூகத்தில் அவை நிகழ்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
எம்.ஏ. ரஹீமா போன்ற படைப்பாளிகள் இந்த இரண்டாவது வகைக்குள் அடங்குகின்றனர். இவ்வாறான படைப்பாளிகளின் படைப்புகள் பேசப்படும் இலக்கியங்களாக மட்டுமன்றி இலக்கியத்தை உயிர்ப்புடனும் வைத்திருக்கின்றன.
இத்தொகுதியில் பத்துக் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் ஒன்பது கதைகள் 2023 இல் வெளிவந்த 'சூல்சோறு' என்ற தொகுதி வெளிவந்த பின்னர் எழுதப்பட்டவை. இறுதியாக இடம்பெற்றிருக்கும் 'இதற்குத்தானா' என்ற கதை 1993 இல் சிறுகதைப் போட்டியொன்றில் இரண்டாவது இடத்தை வென்ற கதை.
இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் முதலாவது கதை 'அன்பளிப்பு.' மனதை மலர்த்தும் ஒரு கதை இது. மெல்லிதான பொறாமை, ஆழமான அன்பு, சமூக வாஞ்சை, வணக்கம், தவறுணர்தல் போன்ற உணர்வுகளை மிக அழகாகப் பேசுகிறது இக்கதை. இறை வணக்கம் என்ற அடிப்படையிலான நோன்பின் மாண்பை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட இக்கதையில் மூன்று பிரதான பாத்திரங்கள்.
ரமளான் என்ற மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் மகாத்மியங்கள் சொல்லிலடங்கா. அது ஏழைகளின் பசியுணர்த்துகிறது. அநாவசியங்களைத் தவிர்க்கவும் அடுத்தவரைக் கவனிக்கவும் தூண்டுகிறது. தன்னிடம் இருப்பது கொண்டு மற்றவர் தேவையை நிறைவேற்றப் பணிக்கிறது. சண்டை, சச்சரவுகளைத் தவிர்த்து அன்பையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பச் சொல்கிறது. இவை அனைத்தையும் இந்த ஒரு கதையில் மிக எளிய முறையில் அழகிய மொழியில் சொல்லி விடுகிறார் எம்.ஏ.ரஹீமா.
நோன்பில் மற்றவர்களுக்குப் பகிர நூறு பொதிகளைத் தயார் படுத்துகிறான். பத்தில் ஆரம்பித்து இன்று நூறு பொதிகளாக அது வளர்ந்திருக்கிறது என்பதிலிருந்து கொடுத்தல் வாழ்வை மேம்படுத்தும் என்ற தத்துவம் எடுத்துச் சொல்லப்படுகிறது. பட்டியலில் அவனது இரண்டு சகோதரிகள் பெயர்கள் இடம்பெற்றிருப்பதைக் கேள்விக்குட்படுத்துகிறாள் அவனது மனைவி. உனது சகோதரிகளின் பெயர்களும் இருக்கின்றவே தெரியவில்லையா என்று கேட்கிறான் அவன். தனது தங்கையிடம் பொதியை வழங்கிய பிறகு வேறொரு பொதியை அண்ணனிடம் கொடுக்கிறாள் அவள். 'இது தங்கை தந்த பொதி. அவர்கள் நோன்புப் பெருநாளுக்கு ஆடை வாங்கும் போது நமக்கும் வாங்கியிருக்கிறார்கள்' என்று சொல்லி மனைவியிடம் கொடுக்கிறான் அவன். அவள் தன் கனவனிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளும் போது ஊற்றெடுத்த தறுணர்ந்த கண்ணீர்த் துளிகள் அவன் கால்களில் விழுகின்றன. எவ்வளவு அற்புதமான மனிதம்! எவ்வளவு அற்புதமான கதை!!
கடைசிக் கதை நடுத்தர, நடுத்தரத்துக்குக் கீழ் வாழும் திருமணப் பதிவு நிகழ்வு. 'இதற்காகத்தானா' என்ற தலைப்பிலான இக்கதை 93 இல் எழுதப்பட்டாலும் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. இஸ்லாம் சீதனம் பெறுவதை நிராகரிக்கிறது. பெண்ணுக்குரிய 'மஹர்' கொடுப்பனவை விதந்துரைக்கிறது. ஆனால் சமூகத்தில் எல்லாமே தலைகீழாகத்தான் இருக்கிறது. இந்தக் கதை வழமையான சீதனக் கதை அல்ல. சிறிய மஹர் தொகையைப் பதிவேட்டில் எழுதும்போது சீதனத் தொகையை எழுத வேண்டாம் என்கிறார் மாப்பிள்ளையின் தகப்பனார்.
'நூறு வருடங்களுக்கு முன்பும் கொடுக்கப்பட்ட அத்தொகை (100 ருபா மஹர்) இன்னும் எத்தனை கெட்டித் தனமாகக் கட்டிக் காக்கப்படுகிறது. பணத்தின் பெறுமதி தேய்ந்து மாய்ந்து போய்க்கொண்டிருக்கும் போது சீதனத்தின் தொகை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் போது இது மட்டும் இன்னும் இன்னும் அப்படியே...1'
'தேதி குறித்து ஊரழைத்து விருந்து வைத்து நடு சபையில் நாலு பேரறிய (சீதனம்) எடுக்கும் போது குறையாத கௌரவம் லாச்சிக்குள் போட்டுப் பூட்டிப் பாதுகாகக்கப்படப் போகும் காவின் தாளில் (பதிவு) எழுதும் போது மட்டும் குறைந்து விடுமா என்ன?'
போன்ற ரஹீமாவின் வரிகள் சவுக்கு விளாசல்கள்!
பத்துக் கதைகளில் பதச் சோறுகளாக இரண்டு கதைகளைப் பற்றிய எனது அபிப்பிராயத்தைச் சொல்லியிருக்கிறேன். அணிந்துரை என்பது விமர்சனம் அல்ல. எனவே எல்லாக் கதைகளையும் பறற்p இங்கு குறிப்பிடவில்லை. அவற்றை வாசித்து அவரவர் ரசனைக்கும் கருத்துக்கும் ஏற்ப புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று நிறைய முஸ்லிம் பெண்கள் இலக்கியத் துறையில் பரவலாக ஈடுபாட்டுடன் எழுதி வருகிறார்கள். இவர்கள் முதலில் தம் முன்னோடிகளான எம்.ஏ. ரஹீமா போன்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை வாசிப்பதைக் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இத்தொகுதியைப் பார்த்தால் இரண்டு வருடங்களில் ஒன்பது கதைகளை எழுதியிருக்கிறார். அடுத்த இரண்டு வருடங்களில் மற்றொரு தொகுதியைத் தருமளவு இறைவன் அவரது உடல், உள ஆரோக்கியத்தை இறைவன் வளங்கியருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்| வாழ்த்துகிறேன்!
- அஷ்ரப் சிஹாப்தீன்
10.07.2025
No comments:
Post a Comment