Wednesday, July 16, 2014

பெத்லஹேம் லூஸியாவின் கதை!


முகம்மத் குத்ர்

எனது பெயர் லூஸியா. நான் பலஸ்தீனக் கிறிஸ்தவப் பெண். நான் ஐந்து குழந்தைகளின் தாய். மூத்ததின் வயது 17. இளையதின் வயது 5. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அமைதியின் நகர் எனவும் அமைதி அரசரின் நகரம் எனவும் புகழ் பெற்ற பெத்தலஹேம் நகரில் வசித்து வருகிறேன்.

எனது கணவரான மைக்கேல் ஒரு நல்ல மனிதர். நல்ல கணவர். மட்டுமன்றி ஒரு நல்ல தந்தையாகவும் இருந்தார்;. தச்சுத் தொழிலில் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மிகச் சிக்கலான காலப் பிரிவிலும் அமைதிக்காக உழைத்ததோடு மாத்திரமின்றி மனித குலத்தின் பாவங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த யேசு பிரான் ஒரு தச்சுத் தொழிலாளியாக இருந்தார் என்பதை அவர் அதிகம் விரும்புகிறவராக இருந்தார். இங்கு பிரச்சினைகள்; நிறைந்த போதிலும் எப்போதும் யேசு பிரான் புனிதராகவே எங்களது புனித பூமியில் மதிக்கப்பட்டார். ‘ஷெல்’களும் துப்பாக்கி ரவைகளும் கொண்டு இஸ்ரேலியப் படையினர் எமது பகுதியைத் தாக்க ஆரம்பித்து விட்டால், மைக்கேல் பைபிளைக் கையிலெடுத்துக் கொண்டு அவசர அவசரமாக எங்களை ஒன்று கூட்டி விடுவார். நாம் எல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம்.

இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதும் பலமாகச் சிரிப்பதும் வசைமொழிகளால் எங்களைத் தூஷிப்பதும் அடிக்கடி எங்களது காதில் விழும், யூதரல்லாதோரை அவர்கள் மிக்க இழிவானவர்கள் என்று கருதுகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எனது மைக்கேலை இழந்தேன். சுகவீனமுற்ற தனது தாயைப் பார்ப்பதற்காக ஜெரூஸலத்தினூடாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது அவரை ஒரு யூதக் குடியேற்றவாசி சுட்டுக் கொன்று விட்டான். அன்றிலிருந்து கடும் வேலை, பசி, நோய், பட்டினி இவற்றைத் தவிர வேறு எதையும் நான் அறியமாட்டேன். எனது பிள்ளைகளுக்கு உணவுக்காகவும், உடைகளுக்காகவும் மருத்துவத் தேவைகளுக்காகவும், பாடசாலைக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காகவும் என்னிடமிருந்த பெறுமதியுள்ள அனைத்தையும் விற்றுத் தீர்த்து விட்டேன். என்னிடம் தொழில் நுட்ப அறிவோ பயிற்சியோ கிடையாது. ஆனால் வீடுகளைச் சுத்தம் செய்யத் தெரியும். எனவே எமது அயலவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிப் பெண்ணாக மாறிவிட்டேன்.

எனது அயலவர்களும் என்னைப் போன்றே கஷ்டப்படுபவர்கள் தாம். ஆனாலும் இன்று வரை உணவு, உடை, பணம் என அவர்கள் தான் எனக்கு உதவுகிறார்கள். எனது வேலை கடுமையானதும் என்னை எனது பிள்ளைகளிடமிருந்து தூரப்படுத்துவதுமாக இருக்கிறது. கவலையுடன் அவர்களைப் பிரிந்து நான் உழைக்க வேண்டிருக்கிறது. மைக்கேல் சொல்வதை நான் இன்று வரை ஞாபகப் படுத்திக் கொள்கி றேன். அவர் சொல்வார், ‘பரவாயில்லை... கிறிஸ்து எம்முடன் இருக்கிறார்... அவர் எங்களைப் பார்த்துக் கொள்வார்...’ நான் எனது சகோத ரிக்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டும். அவள் எனக்காக தனது பாடசாலைப் படிப்பைக் கைவிட்டு எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கிறாள். அவளை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.

எனது உடற் பாரமும் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினமும் மிகவும் களைப்படைந்து கொண்டே வருகிறேன். எனது இளைய இரண்டு பிள்ளைகளும் நீண்ட நாட்களாக இருமல் மற்றும் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதனால் அடிக்கடி முழு இரவும் நான் விழித்திருக்க வேண்டியவளாயிருக்கிறேன். இது மிகவும் சிரமமான ஒரு வழக்கமாக மாறி விட்டது. ஆனால் எனக்குள்ள ஒரே ஒரு ஆறுதல் எனது முஸ்லிம் அயலவர்கள்தான். அவர்கள் எனது வீட்டைச் சுத்தம் செய்தும் கழுவி யும் தருகிறார்கள். அடிக்கடி உணவு சமைத்தும் தருவதுண்டு.

சேர்ச்சுக்குப் போகும் அளவுக்கு எனது உடலில் சக்தி கிடை யாது. ஆனால் போதகர் இப்பக்கம் வருவதுண்டு. ஓர் இரவு நான் வீடு ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சத்தமும் அதைத் தொடர்ந்து பாரியதொரு குண்டு வெடிச் சத்தமும் கேட்டது. எனது இதயமே ஒரு கணம் நின்று விட்டது. நான் கிட்டத்தட்ட மூர்ச்சையாகும் நிலையை அடைந்து விட்டேன். ‘ஆண்டவரே.... அது எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது.... எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது...’ என்று என்னையறியாமல் சொல்லிக் கொண்டேயிருந்தேன். நான் எப்படி ஓடினேன் என்று எனக்கே தெரியாது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் ஓடினேன். எப்படியோ எனது வீடுவரை வந்து சேரக் கூடிய பலத்தை வரவழைத்துக் கொண் டேன். ‘ஓ... யேசு பிரானே.... எல்லாம் வல்ல ஆண்டவரே.....’



எனது வீட்டின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்தது.... எல்லோரும் அந்தத் தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள். நான் எனது பிள்ளைகளின் பெயர்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கூவியழைத்தபடி கதறியழுதேன். யாருடையவோ கரங்களில் நான் விழுந்தேன். அவர்கள் எனது குழந்தைகள் பத்திரமாக இருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. எனது படுக்கையறை சாம்பராயிற்று. நான் மயங்கித் தரையில் வீழ்ந்தேன். கண்விழித்த போது எனது எல்லாப் பிள்ளைகளும் என்னைக் கட்டித் தழுவியபடி கதறிக் கொண்டிருந்தார்கள். என்னால் செய்ய முடிந்த தெல்லாம் ஆண்டவரைப் பிரார்த்திப்பதுதான். அன்று எல்லோரும் என்னைச் சூழ உறங்கினார்கள். அடுத்த நாள் எஞ்சியிருந்த ஒரே ஒரு அறையில் நாங்கள் வாழப் புகுந்தோம்.

பதினேழு வயதுடைய எனது மூத்த பையன் பெயர் ஜோன். கடந்த ஒரு மாதமாக இரவில் தாமதமாக வீட்டுக்கு வரத் தொடங்கினான். அவன் வரத் தாமதிக்கும் போதெல்லாம் அவன் கைது செய்யப் பட்டு விட்டானோ அல்லது சுட்டுக் கொல்லப்பட்டானோ என்று எனக்குக் கவலையாக இருந்தது. நீ எங்கேயிருந்தாய்? என்ன செய்து கொண்டிருந்தாய் என்று கேட்டால் தனது நண்பர்களுடன் படித்துக் கொண்டிருந்ததாக மாத்திரம் சொல்லிக் கொண்டான். சில வேளைகளில் கடும் கோபமுற்றவனாகக் காணப்படுவான். சில நாட்ளில் இரவில் நீண்ட நேரம் வரை பைபிள் வாசித்துக்கொண்டிருப்பான். இஸ்ரேலிய சோதனைச் சாவடிகளைத் தாண்டும் போதெல்லாம் அவன் மிகுந்த கோபத்துடன் இருப்பான். சோதனைச் சாவடியில் அவர்கள் கேள்விகள் கேட்பார்கள், சோதனை செய்வார்கள், சில வேளைகளில் முரட்டுத்தனமாக முன்னால் தள்ளி விடுவார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவனது கோபம் மேலும் மேலும் அதிகரிப்பதைக் கண்டேன். திடீரென அவன் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தி விட்டான். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவனை யாரிடமாவது அழைத்துச் சென்று அறிவுரை சொல்லும் படி போதகர் என்னைக் கேட்டுக் கொண்டார். என்னிடம் அதற்கான பணம் இல்லையென்றும் யாரிடம் அழைத்துச் செல்வது என்று தெரியாது என்றும் அவரிடம் நான் சொன்னேன். அவர் மறு நாள் வருவதாகச் சொல்லிச் சென்றார்.


அடுத்த நாட்காலை புதிதாகத் திறக்கப்பட்ட உளவியல் நலச் சிகிச்சை யகத்துக்கு என்னைப் போதகர் அழைத்துச் சென்றார்.அதன் முன் கதவில் ‘புனித பூமி மன்றம்’ என்று எழுதப்பட்டிருந்தது. அங்கு அன்பான ஒரு பலஸ்தீனப் பெண்ணைச் சந்தித்தேன். அப் பெண் என்னைப் பற்றி இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தார். அவரிடம் எனது கவலைகளையும் பிரச்சினைகளையும் மறைக்காமல் திறந்து கொட்டினேன். அந்தக் கனிவு நிறைந்த பெண் என்னை ஆறுதல் படுத்தினார். நான் இனிமேல் தனியாக உலகை எதிர்கொள்ளும் அவசியம் ஏற்படாது என்று சொன்ன அப்பெண், ஆக்கிரமிக்கப்ப்ட பிரதேசங்களில் வசிக்கும் என்னைப் போன்ற ஆதரவற்ற ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு உதவுவது போல எனக்கும் உதவுவதாகச் சொன்னார். அடுத்த அறைக்குச் சென்ற அந்தப் பெண் ஒரு பெட்டி நிறைய உணவுப் பொருட்களும் உடு புடவைகளும் கொண்டு வந்து தந்தார். அவர்களது வாகனத்தின் சாரதி அவற்றையும் போதகரையும் என்னையும் ஏற்றி கொண்டு வந்து எங்களது வீட்டிலே விட்டுச் சென்றார். நான் வீட்டுக்குச் சென்ற போது உணவுகளையும் உடு புடவைகளையும் கண்ட பிள்ளைகள் ஆனந்தக் கூத்தாடினார்கள். நான் வரும்போது ‘சாந்த குளோஸ்’ ஐ அழைத்துக் கொண்டு வந்து விட்டேன் என்று சந்தோஷப்பட்டார்கள். போதகருக்கு வேறு வேலைகள் இருப்பதால் நாளைக்கு என்னுடன் வந்து இன்னும் பொருட்களை எடுத்துவர உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜோனிடம் கேட்டுக் கொண்டேன்.

அடுத்த நாள் ஜோனும் நானும் உளவியல் நலச் சிகிச்சையகத் துக்குச் சென்றோம். நான் அங்குள்ள கனிவான இளம் பலஸ்தீனப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்க, ஜோன் வைத்தியர் இருந்த அறைக்குள் சென்றான்.

எனது குடும்பம் ‘புனித பூமி மன்றத்தின்’ உதவி பெறுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் இனி மேல் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என்றும் அப் பெண் எனக்குத் தெரிவித்தார். உணவு, உடைகள், பல் மருத்துவம், மற்றும் பொது மருத்துவ உதவிகள், வருடத்தில் பாடசாலை ஆரம்பிக்கும் காலத்தில் பிள்ளைகளுக்குரிய பாடசாலைப் பொருட்கள், மனநல மருத்துவம் போன்றவை தொடர்ச் சியாக எங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அப்பெண் விபரித்துக் கொண்டிருக்க மகிழ்ச்சியில் என்னாலும் ஜோனினாலும் அதனை நம்பமுடியவில்லை.

மைக்கேல் சொன்னது சரிதான். யேசு எங்களைக் கவனித்துக் கொள்கிறார். இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்று அப் பெண்ணைக் கேட்டேன். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் வழங்கும் உதவிப் பணத்தைக் கொண்டு இயங்கும் அமெரிக்க அமைப்புத்தான் இந்த ‘புனித பூமி மன்றம்’ என்று அவர் சொன்னார். இப்படிக் கிடைக்கப் பெறும் அன்பளிப்புகள் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் லெபனான், ஜோர்தான், சிரியா ஆகிய நாடுகளில் வாழும் பலஸ்தீன அகதி முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அநேக நன்கொடையாளிகள் ஒரு முழுக் குடும்பத்தையோ அல்லது அநாதைகளையோ மொத்தமாகப் பொறுப்பேற்றுக் கொள்வதுமுண்டு. அவ்வாறான ஒரு பொறுப்பேற் கப்பட்ட குடும்பமாகவே எம்மையும் பதிவு செய்துள்ளதாக அப் பெண் கூறினார். அமெரிக்கா அரசு இவ்விடயத்தில் மிகவும் உதவுவதாகத் தெரிவித்த அப்பெண் குறிப்பாக அமெரிக்க மக்களின் இரக்க சிந்தையைப் பாராட்டினார்.

ஒரு புறம் அமெரிக்கர்கள் எமது மண்ணை ஆக்கிரமிப்பதற்கு இஸ்ரேலியருக்கு ஒத்தாசை புரிந்து கொண்டு உணவையும் பணத்தை யும் எங்களுக்கு அனுப்பி எங்களை விற்பனை செய்து கொண்டிருக் கிறது என்று எண்ணி நான் ஒரு கணம் திகைத்தேன். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் உதவியும் அதன் மூலம் ஒரு நம்பிக்கையும் பிறந்திருப்பது குறித்து இறுதியில் மகிழ்ச்சியடையவே செய்தேன். இனி எனது பிள்ளைகளை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதில் நான் தனியாளாகச் சிரமப்படத் தேவையில்லை.

இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் ஜோன், டாக்ட ருடன் அவருடைய அறையிலிருந்து கண்ணீர் மல்கியவனாக வெளியே வந்தான். என்னை அவன் ஆதரவுடன் அணைத்து இதுவரை எனக்கு ஒத்தாசை புரிய முடியாமலிருந்தமைக்காக மன்னிப்புக் கோரி னான். மாதத்தில் ஒரு நாள் அவன்  டாக்டரை வந்து சந்திக்க வேண்டும் என்று டாக்டர் கேட்டுக்கொண்டார். இருமலும் ஆஸ்த்மாவுமாக வருத்தப்படும் எனது இரு பிள்ளைகளையும் நாளை அழைத்து வந்து சிறுவர்களுக்கான வைத்தியரைப் பார்ப்பதாகச் சொன்னேன். வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எனதும் ஜோனினதும் கண்ணீர்த் துளிகள் கைகளை நனைத்தன. ஆனால் முகங்களில் புன்னகை நிரம்பி யிருந்தது. எனது வாய் முணுமுணுத்தது...... ‘யேசுவே.... உங்களுக்கு நன்றி!’

அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் ஆண்டவனுக்கும் யேசுவுக்கும் மற்றும் தாராள மனப்பான்மையும் நல்லெண்ணமும் கொண்டு தங்களது நன்கொடைப் பணம் மூலம் எமக்கு உதவிய அமெரிக்க மக்களுக்கும்  நன்றி கூறிப் பிரார்த்தித்தேன். உலகின் கண்களுக்குத் தோன்றாமல் நீண்ட காலமாக மௌனித்த நிலையில் நாம் கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறோம். அது இப்போது ஒரு நம்பிக்கையைக் கொண்டு வந்திருக்கிறது. மிகத் தூரத்திலிருந்து தாராள சிந்தையும் நல்ல மனமும் கொண்ட அமெரிக் கரின் உதவியால் குறைந்தது பிள்ளைகளாவது கவனிக்கப் பெறுகிறார்கள்.  மைக்கேல் பயன்படுத்திய பைபிளைக் கையில் வைத்துக் கொண்டபடி முதல் முறையாக எவ்வித மனப் பாரமும் இன்றி அன்றிரவு உறங்கினேன்.

அடுத்த நாள்  அதிகாலையிலேயே நித்திரை விட்டெழுந்தேன். பள்ளிவாயிலிலிருந்து அதிகாலையில் தொழுகைக்கான அழைப்பு ஒலிக்கக் கேட்டேன். எனது முஸ்லிம் அயலவர்கள் அன்று நோன்பு நோற்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ரமளான் மாதத்தில் கடைப்பிடிக்கின்ற ஸக்காத் மற்றும் ஸதக்கா உதவியை எனக்குத் தந்து வந்திருக்கிறார்கள். அமெரிக்க மக்களைப் போலவே உதவும் அவர்களுக்கு நான் மிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

பின்னர் கையோடு ஜோனையும் அழைத்துக் கொண்டு ‘புனித ப+மி மன்றத்து’க்குச் சென்றேன். அவர்கள் எனது மகனுக்கும் எனக்கும் உதவி செய்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் மிகவும் நல்லவர்கள்.

‘ஓஹ்.... ஆண்டவரே....’  எனது  மகன் நம்ப முடியாமல் அலறி னான். சிகிச்சையகத்தின் கதவில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அறிவிப்பை அவன் வாசித்தான். ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கட்டளையின் பேரில் சிகிச்சையகம் மூடப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. மன்றத்தின் பணத்தை ரமழான் மாதம் முழுவதற்கும் அவர் முடக்கியதோடு மாத்திரமின்றி உதவி வழங்கும் செயற்பாடு களையும் நிறுத்தக் கட்டளையிட்டிருந்தார். நான் கதறி அழுதேன். ‘ஆண்டவரே ஏன் இப்படி எனக்கு நடக்கிறது.... எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் இப்படி ஏற்படுகிறது... எப்போதும் நாங்கள் கஷ்டத்தில் உழலும் நிலை ஏன்?... ஏன்?’ எனது வயிற்றில் யாரோ குத்தி விட்டதாக உணர்ந்தேன். எனது வாழ்வையும் சுவாசத்தையும் நம்பிக் கையையும் யாரோ தூர எடுத்துச் சென்று விட்டதாக உணர்ந்தேன். நான் பைத்தியம் பிடித்தாற் போல் அழுது கொண்டிருந்தேன். மன்றத் தைச் சேர்ந்த அந்தப் பெண் என்னிடம் வந்தார். தனது பையிலுள்ள பணத்தையெல்லாம் வாரித் துடைத்து என்னிடம் தந்து விட்டுச் சொன்னார், ‘என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள். அவன் விடாமுயற்சியுள்ளோரிலும் வருத்த முற்றோரிலும் அன்பு கொண்டுள்ளான்.’

அப்பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன். எனது கேள்வியைப் புரிந்து கொண்ட அவர் இறுதியாக இப்படிச் சொன்னார். ‘ஏரியல் ஷரோன், ஜோர்ஜ் புஷ்ஷை மிக அண்மையில் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் இரண்டா வது நாள் புஷ் எங்கள் செயற்பாடுகளை நிறுத்தி விட்டார். பல வருடங்களாக யூத, அமெரிக்க அமைப்புகளும் அமெரிக்க ஊடகங்களும் மற்றும் - அவரை உங்களுக்குத் தெரியாது - நியூயோர்க்கில் வசிக்கும் யூதரான செனற்றர் சார்ள்ஸ் ச்சூமரும் நாங்கள் பயங்கரவாதத்துக்கு உதவுவதாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஜனாதிபதியைக் கொண்டு சாதித்துக் கொண்டார்கள்.

நீண்ட நேரமாக நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஜோன் அங்கிருந்து போய் விட்டான் என்பதைப் பின்னர்தான் உணர்ந்தேன். அவனைக் கூப்பிட்டுப் பார்த்தேன். எந்தப் பதிலும் இல்லை. சில நிமிடங்களுக்குப் பின்னர் தூரத்தில் பாரியதொரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. திடீரென ஒரு பயம் என்னைப் பற்றிக் கொண்டது. திகைத்து நின்றேன். ‘இல்லை... அப்படி இருக்காது... அது அவனாக இருக்காது! ஆண்டவரே, அது அவனாக இருக்கக் கூடாது!

காத்திராப் பிரகாரமாக போதகர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.... என்னிடமிருந்து பெரியதொரு அலறல் வெளிப்பட்டது....ஏன்? எனது யேசுவே ஏன்?... ஏன்?

(ஒரு குடம் கண்ணீர் நூலிலிருந்து)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: