Tuesday, August 8, 2023


 அல் அஸூமத் - எழுதிய இஸ்லாமிய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் - எனது பார்வை  

- அஷ்ரஃப் சிஹாப்தீன் -

          

அல் - அஸூமத் அவர்களை முதன் முதலாக நான் சந்தித்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் என்பது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. முஸ்லிம் சேவைக்கான ஒரு கவியரங்க ஒலிப்பதிவு நிகழ்வு அது. அவரது தலைமையில்தான் அந்தக் கவியரங்கம் நடைபெற்று ஒலிபரப்பானது. கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். ஏனையவர்கள் இப்போது ஞாபகம் இல்லை. எனது கவிதையை நான் வாசித்து முடித்ததும் 'உங்களுக்கு மரபுக் கவிதை நன்றாக வருகிறது,' என்று பாராட்டினார். அவருக்கு அன்று என்னைப் பிடித்துப் போயிருக்க வேண்டும். 

அல் அஸூமத் கொழும்பு - நீர்கொழும்புப் பிரதான பாதையொட்டி அமைந்திருக்கும் மஹபாகே என்ற இடத்தில் குடியிருந்தார். திருமணத்தின் பின் நான் வத்தளை - மாபோளைக்கு வந்து சேர்ந்தேன். எனது வீட்டுக்கும் அவரது வீட்டுக்குமிடையிலான தூரம் மூன்று கிலோ மீற்றர் எனலாம். இதனால் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் நான் அவர் வீட்டுக்குச் சென்று அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன்.

அவரது மூத்த புதல்வரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான இப்னு அஸூமத் (பாரூக்) எனது வயதொத்தவர். வகவத்தில் அறிமுகமாகி எனது குறிப்பிடத்தக்க நண்பர்களில் ஒருவரானவர். இதற்கப்பால் அஸூமத் அவர்களின் மூத்த புதல்வியைத் திருமணம் செய்தவர் கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள். அமீர் அலி எனது தாய் வழிப் பாட்டனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வகையில் அல் - அஸூமத் அவர்கள் குடும்ப வழியிலும் ஒன்றித்தவர். இந்தக் காரணங்கள் பற்றியும் எமது உறவு நன்றாக நீடித்திருந்தது. இன்று வரை நீடித்து வருகிறது.

இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடத்துவது, வெளி நாடுகளில் கலந்து கொள்வது என்று அல் - அஸூமத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தாஸிம் அகமது, நான் ஆகியோர் ஒன்றாக இயங்கி வந்துள்ளோம். கடந்த 2016 ஆம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மலர், அரங்கக் கட்டுரைத் தொகுதி இரண்டையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் செம்மைப் படுத்தித் தந்தவர்.  ஒவ்வொரு புத்தகமும் 600 பக்கங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவற்றுக்கெல்லாம் அப்பால் அல் அஸூமத் நல்ல நகைச் சுவை சொல்லக் கூடியவர். எழுதவும் கூடியவர். நாங்கள் குழுவாகச் சேர்ந்திருக்கும் போதுதான் அவரது நகைச்சுவைகள் வெளி வரும்.அவற்றில் பெரும்பாலானவை இலக்கியமும் இலக்கியவாதிகளும் சார்ந்தவையாக இருக்கும்.

யாத்ரா (21 அல்லது 22 இல்) அவர் எழுதிய ஒரு சிறுகதை உண்டு. இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களையும் கிண்டலடித்திருப்பார். இக்கதையை அவர் எனக்குத் தந்த போது அவர் தலைப்பிட்டிருக்கவில்லை. அக்கதைக்கு 'அலையழிச்சாட்டியம்' என்ற தலைப்பை நான் இட்டேன். வாய்ப்புக் கிடைக்குமானால் அதனைத் தேடி வாசித்துப் பாருங்கள். சிரிப்பு நிச்சயம்!

2

'ஜீவநதி' அல் அஸூமத் அவர்கள் பற்றிய மலரொன்றை வெளியிடுவதற்காக அவரது இஸ்லாமிய இலக்கிய, இஸ்லாம் மார்க்கம் சார் எழுத்துகள் பற்றிய ஓர் முழு ஆக்கத்தைக் கோரி என்னிடம் வேண்டுகோள் வைத்தது. எனவே இந்த ஆக்கத்தில் அவை பற்றி மட்டும் பேச வேண்டியதே எனக்குரிய வேலை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நபி மொழிகளை குறட்பாக்களாக எழுதிக் கொண்டிருந்தது எனக்கு  ஞாபகம் உண்டு. ஆனால் பின்னாளில் அதை மொத்தமாக இழந்து விட்டிருந்தார். அத்தோடு அது பற்றிய ஆழந்த கவலை அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் இருந்தது. இதற்கப்பால் நபிக் குறள்கள் எழுதினார். அதன் தட்டச்சுப் பிரதியை நான் பார்த்திருக்கிறேன். அது இன்னும் வெளிவரவில்லை. அதில் 1800 குறட் பாக்கள் அடங்கியிருக்கின்றன என்று அவர் எனக்குச் சொன்னது ஞாபகத்தில் உண்டு. 

அல் அஸூமத் அவர்களின் முதல் மொழிபெயர்ப்பு நூல்களில்  'பிலால்' என்ற நூலைத்தான் முதலில் நான் வாசித்தேன். அது ஒரு பரவசம். அந்தப் பரவசத்துக்குக் காரணங்களில் ஒன்று அந்நூலின் எழுத்து நடை. இரண்டு அந்த நூல் யாரை வைத்து எழுதப்பட்டதோ அந்த நபர். வாசிக்கும் போது பல இடங்களில் என்னை அழவும் மெய் சிலிர்க்கவும் வைத்த நூல் அது. 

பிலால் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அபிசீனிய பரம்பரையில் வந்த ஓர் அடிமை. நபிகளார் வழி காட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சொல்லொணாத் துன்பங்களுக்கும் ஆக்கினைகளுக்கும் ஆளானவர். கருப்புத் தோல் கொண்ட இந்த பிலால்தான் தொழுகைக்காக முதன் முதலில் அதான்' சொல்ல (தொழுகைக்கு அழைப்பு விடுக்க) நபிகளாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டவர். நபிகளார் அவருக்கு வழங்கிய இந்த உயரிய மரியாதை, நபிகளாருடனேயே நிழல் போல் வாழ்ந்தது ஆகிய காரணங்களால் இன்று வரை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவராலும் கண்ணியத்துக்கும் மரியதைக்கும் உரியவராகக் கருதப்படுகிறார்.

இத்தகைய கண்ணியத்துக்குரிய பிலால் அவர்களைப் பற்றி அயர்லாந்து தேசத்தவரான எச்.ஏ.எல். க்ரேய்க் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது இந்நூல். இதன் முதல் பதிப்பு ஆங்கிலத்தில் 1977 இல் வெளிவந்திருக்கிறது. கவிஞர், நாடகத் துறையாளர், சினிமா வசன கர்த்தா என்று பல்வேறு திறமைகளைக் கொண்ட க்ரெய்க், நபித் தோழரான பிலால் இப்னு ரவாஹா பற்றி இந்த நூலை எழுதியிருப்பதே ஓர் ஆச்சர்யம்தான். அதை அதே கவித்துவ நடையில் அல் அஸூமத் அவர்கள் கொண்டு வந்திருப்பதும் மற்றோர் ஆச்சர்யம். இந்த நூல் பிரபல ஆங்கில இஸ்லாமிய நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த தர்ஹா நகரைச் சேர்ந்த அப்த் அல் ஜப்பார் முகம்மது ஸனீர் அவர்களது முயற்சியின் பலனாகத் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டது. தமிழில் இதன் இரண்டாவது பதிப்பு 1995ல் வெளியிடப்பட்டிருக்கிறது. முதற் பதிப்பு 1988 இல் வெளிவந்திருக்கலாம் என நினைக்கிறேன். இன்றளவில் இந்த நூல் ஐந்து பதிப்புகளைக் கண்டிருப்பதாக அறிய வருகிறேன்.

இந்த நூலை ஓர் இஸ்லாமிய இலக்கிய நூலாக நான் கருதிய காரணத்தால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவையில் நான் நடத்தி வந்த 'இலக்கிய மஞ்சரி' நிகழ்ச்சியில் போர்கள் பற்றிய ஓரிரு அத்தியாயங்கள் தவிர, ஏனையவற்றை வாசித்து ஒலிபரப்பி வந்தேன். (ஒலிபரப்பான காலத்தில் போர்கள் பற்றிப் பேசுவது தவிர்க்கப்பட்டிருந்தது,) இந்த அத்தியாயங்களை வாசிக்கக் கேட்ட பலர் இந்த நூலை எங்கே வாங்குவது என்று கேட்டு என்னிடம் விபரங் கோரியிருந்தார்கள். அதில் ஒருவர் தன்னை முச்சக்கர வண்டி ஓட்டுனர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது மனைவி இந்த நூலைப் பெற்றுத் தரக் கோரியதாக என்னிடம் சொல்லி வினவியது கொண்டு இந்த நூலின் அடைவு எழுத்தழகு மேலும் என்னைப் பிரமிக்கச் செய்தது.

இந்த நூலை க்ரெய்க் அவர்களின் மொழிக்கு அப்பால் அதாவது தனித் தமிழ்க் காப்பியமாக உருவாக்கவே முதலில் அல் அஸூமத் அவர்கள் ஆரம்பிதததாகவும் மொழி பெயர்க்கப் பொறுப்பளித்தவர் க்ரெய்க் அவர்களின் மொழிப் போக்கிலேயே அதை விரும்பியதனால் தமிழ்க் கவிதைப்படுத்தும் முயற்சியை ; நிறுத்த வேண்டி வந்ததாகவும் அல் அஸூமத் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஆயினும் பின்னர் 'பிலால்' தமிழ்க் காவிய நூலை எழுதி முடித்த அல் அஸூமத் அதனை 2020 ஆம் ஆண்டு 240 பக்க நூலாக வெளியிட்டார். க்ரெய்க் அவர்களின் நடைப்போக்குக்குக் குறையாமல் இந்தத் தமிழ்க் காப்பியம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் தனி அழகோடு இந்த நூலை வாசித்து இரசிக்க முடியும்.

க்ரெய்க் அவர்களின் நூலின் மொழிபெயர்ப்பில் பிலால் அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமான முதற் பந்தி இப்படி அமைந்திருக்கும்:-

'நான் ஓர் அடிமை. என் பெயர் பிலால். என் தாய், தந்தையரும் அடிமைகள். பிறப்பிலேயே அடிமையான நான் எனது எஜமான் உமையா என்னைக் கொன்று விட முடிவெடுத்த நாள் வரையும் அடிமையாகவே இருந்தேன்.'

பின்னால் வந்த பிலால் காவியத்தில் இந்த வரிகள் இப்படி இருக்கும்:-

அடிமையர் குழந்தை ஆய பிலால் யான்

அடிமைத் துவத்துள் அவதரித் தென்றன்

உடையான் வணிகள் உமையா எனைக்கொல

முடிவுகொள் நாள்வரை தொடர்ந்ததில் இருந்தேன்

3

மொழிபெயர்ப்புக்கு அப்பால் அல் அஸூமத் எழுதிய இஸ்லாமிய நூல்களில் உச்சமானதாக இருப்பது முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியதுதான். இந்த நூல் தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் அல் அஸூமத்தை நோக்கிக் கண்களை அகல விரிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

தமிழகத்தைச் சேர்ந்தவரும் சிங்கப்பூரில் வசித்து வருபவருமான அன்புச் சகோதரர் எம்.ஏ. முஸ்தபா அவர்கள் ரஹ்மத் அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவிப் பல்வேறு இஸ்லாமிய நூல்களை வெளியிட்டு வருகிறார். அவர் நல்ல வாசிப்பாளர் மட்டுமன்றி இலக்கிய இரசிகரும் கூட. சிங்கப்பூரிலும் 'சிரங்கூன் டைம்ஸ்' என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.

இந்த அறக்கட்டளையானது முகம்மது நபியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இலகுவில் படித்தறியும் வகையில் எழுதப்பட வேண்டும் என ஒரு சர்வதேசப் போட்டியை நடத்தியது. முதலாவதாகத் தெரிவு செய்யப்படும் பிரதிக்கு இந்திய நாணயத்தில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதை ரஹ்மத் அறக்கட்டளையே வெளியிடும் என்றும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொருத்தமாக அந்த நூலை எழுதி வெற்றி பெற்றவர் அல் அஸூமத் அவர்கள்.

'நூலாசிரியர் பிறப்பால் ஓர் இந்து. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். தமிழாசிரியர், தந்தை ஒரு மலையாளி. முஸ்லிம் நண்பர்களுடன் பழகியபோது, இஸ்லாமிய பழக்கவழங்கள் சிலவற்றைத் தெரிந்திருக்கிறார். இஸ்லாத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு மிகத் தாமதமாகவே கிடைத்திருக்கிறது. 

நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே பல இடங்களில் அழுதிருக்கிறார். திறந்த மனதோடு ஒன்றை வாசிக்கும்போது அதிலுள்ள யதார்த்தம் உலுக்கவே செய்யும். பின்னர் குர்ஆனைப் படித்தார். இஸ்லாத்தில் இணைந்தார்' என்று நூலை மேலாய்வு செய்தவர்கள் தமது உரையில் அல் அஸூமத் அவர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சற்றேறக்குறைய 750 பக்கங்களிலான இந்த தூல் 2018ம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் கிடைப்பது போல் இலங்கையில் இந்நூலைப் பெற முடியவில்லை. இந்ந நூலுக்கான பரிசளிப்பு ஒரு விழாவாக நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. சில வேளை தமிழக எழுத்தாளர் எழுதிப் பரிசு பெற்றிருந்தால் அப்படி ஒரு விழா நடந்திருக்கலாமோ என்று நான் சில வேளை எண்ணுவதுண்டு.


4

'இறைதூதர் முகம்மது (ஸல்) அவர்களது காலத்தில் பெண் விடுதலை' என்ற தலைப்பிலான பிரமாண்ட அளவு கொண்டு ஒரு மொழிபெயர்ப்பு நூல் 2015 ஆம் ஆண்டு வெளியானது. பிரபல இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளருமான அப்துல் ஹலீம் அபூ ஷக்கா அவர்கள் அறபியில் எழுதிய ஆறு பாகங்களைக் கொண்ட நூலின் அறபியில் அமைந்த சுருக்க வடிவமான இரண்டு பாகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ஏ4 அளவிலான வடிவத்தில் ஏறக்குறைய 800 பக்கங்களில் அமைந்த இந்நூல் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவர் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மட்டத்தில் அறியப்பட்ட நல்லவாசகரும் மொழிபயர்ப்புக்கான சிறந்த நூல்களை அடையாளம் காணக் கூடியவரும் மொழிபெயர்ப்பாளருமான தர்ஹா நகரைச் சேர்ந்த அப்த் அல் ஜப்பார் முகம்மத் ஸனீர் அவர்கள்.

நான் மேலே  குறிப்பிட்;ட  அறபில் சுருக்கப்பட்ட இரண்டு பாகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் பிரபல மொழிபெயர்ப்பாளர் நான்ஸி ரொபர்ட் அவர்கள். தமிழில் ஒரே நூலாக இது அமைந்த போதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நூலின் இரண்டாம் பகுதியை (ஏறக்குறைய நூலின் பாதி) மொழிபெயர்த்தவர் அல் அஸூமத் அவர்கள். முதற்பகுதியை அறபு வல்லுனரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி பி.எம்.எம். இர்பான் அவர்கள் அறபி மூலத்திலிருந்தே மொழிபெயர்த்திருந்தார். 

இந்த நூல் நபிகளார் காலத்து இஸ்லாம் மார்க்கம் சார்ந்த பெண்கள் பற்றிய புனை கதைகளைக் கொண்டவை அல்ல. நபிகளார் வந்த பின்னர் பெண்கள் வாழ்ந்த துயர வாழ்விலிருந்து பெற்ற விடுதலையை அவர்களது சமூகப் பங்களிப்பை ஆதாரங்களோடு முன்வைக்கிறது. நபிகளாரின் சொல், செயல், நடைமுறை அனைத்தும் பற்றிய தகவல்கள் பற்றி அறிவித்தவர்கள் யார், அதைக் கேட்டவர், கண்டவர் யார் என்பதற்கெல்லாம் ஒரு தொடர் இருந்தால் மாத்திரமே அது சரியான அறிவிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். அறிவிக்கும் முதல் நபர் முதல், கேட்டவர், கண்டவர் அனைவரும் நம்பிக்கைக்குரியவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறான தகவல்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

இஸ்லாமோபோபியாவை முன் கொண்டு செல்பவர்கள் முதலில் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம் என்பதையும் அங்குப் பெண்கள் அடக்கியொடுக்கப்படுகிறார்கள் என்பதையுமே முற்படுத்தி வருவதை நாம் காண்கிறோம். எழுதப்பட்டவற்றையே திருப்பித் திருப்பி வேறு வார்த்தைகளில் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு கருத்து உண்டு. அதே போல பதிலளிக்கப்பட்ட கேள்விகளையே இஸ்லாமோபோபியா மீண்டும் மீண்டும் தமது செல்வாக்கு, அதிகாரம், வருமானம் ஆகியவற்றை வைத்துத் தமது ஊடகங்கள் மூலம் கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. இந்த நூலைத் திறந்த மனதுடன் படித்தால் அக்கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் கண்டடைய முடியும்.

இந்த நூலுக்கான அல் அஸூமத் அவர்களின் பங்களிப்புப் பற்றி இந்த நூலின் வெளியீட்டாளர் இப்படிச் சொல்கிறார்:-

'மொழிச் செம்மை குறித்து மிகவும் அவதானமாக இருப்பவர் கவிஞர். அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால் 'கண்னில் விளக்கெண்ணெய் இட்டு'க் கண்காணிப்பவர்.அவரது மொழிபெயர்ப்பில் அழகழகான, பொருத்தத்தில் மிகுந்த சொற்பிரயோகங்களைக் கண்டு களிக்கலாம்.'

5

எம்.ஏ.முஸ்தபா அவர்கள் நிறுவிய ரஹ்மத் அறக்கட்டளைக்காக அல் அஸூமத் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க மற்றொரு பணி 'இஸ்லாமிய வரலாறு' என்ற மூன்று பாகங்கள் கொண்ட பெருநூலை மொழிபெயர்ப்புச் செய்ததாகும். மூன்று பாகங்களாக 2017 இல் வெளிவந்த இந்த நூல்கள முறையே; 629, 815, 573  பக்கங்கள் கொண்டவை. 

உண்மையில் இந்த வராற்றுத் தொடரை தமிழ்ப் பேசும் உலகம், தமிழ்ப் பேசும் முஸ்லிம் உலகம் அறிந்து கொள்வதெனில் ஒன்றில் அராபிய நூல்களை அல்லது ஆங்கில நூல்களையே படிக்கும் நிலை மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. இந்த மூன்று பாகங்களின் மூலம் அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கிறது.

எல்லா மனிதர்களாலும் வரலாற்றைப் படிக்க முடியாது போனாலும் கற்றவர்கள், புத்தி ஜீவிகள் கற்பதன் மூலம் சக இன, மதக் குழுமங்களின் பின்னணியைத் தெரிந்து பேச முடியும். தற்காலத்தில் உள்ள படிப்பாளிகளில் பலர் இவற்றையெல்லாம் படிக்காமலேயே அரை குறை அறிவுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். சச்சரவுக்குப் பின்னால் இருக்கிறார்கள். தமது முழங்கை அளவு கொண்டு வரலாறுகளைத் திரித்து விடுகிறார்கள். அவை வெறுப்புணர்வை வளர்க்கின்றன. மனிதர்களைக் கூறு போடுகின்றன.

6

அல் அஸூமத் அவர்களின் மொழிபெயர்ப்பிலான இன்னும் அச்சில் வெளிவராத இரண்டு அற்புதமான நூல்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இரண்டுமே அச்சுக்குத் தயாரான தயாரிப்பில் சகலதும் பூர்த்தியான நிiயில் உள்ளன. அவற்றில் ஒன்று, கலாநிதி ஆய்த் அப்துல்லாஹ் அல் கர்ணி அறபியில் எழுதிய 'லா தஹ்ஸன்' - 'கவலைப்படாதீர்கள்' என்று நூல். இந்த நூல் 625 பக்கங்களைக் கொண்டது.

இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டோன்ற் பீ ஸாட்' - இனை தர்ஹா நகரைச் சேர்ந்து அப்த் அல் ஜப்பார் முகம்மது ஸனீர் அவர்களே அல் அஸூமத் அவர்களுக்கு வாசிக்கக் கொடுத்திருக்கிறார். இதன் ஆத்மீகப் பெறுமதி கருதி அதனை அல் அஸூமத் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். 

மானிடரின் கவலை, ஆற்றாமை, நம்பிக்கையீனம், பலவீனங்கள் அனைத்தையும் இந்த நூல் துடைத்து எறிந்து விடுகிறது. மனதை ஆற்றுப்படுத்துகிறது. அதற்கெனக் கொடுக்கப்படும் விளக்கங்கள் மிகத் தெளிவானவை, இலகுவானவை. சிறிய சிறிய அத்தியாயங்களாக அமைந்திருக்கும் இந்த நூலை வாசிப்பவர்கள் பொறுமை மிக்கவர்களாகவும் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாகவும் மாறி விடுவார்கள் என்பதை என்னால் அழுத்திச் சொல்ல முடியும். இதே முறையில் எழுதப்பட்ட டேல் கார்ணகியின் ஒரு நூல் உலகப் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

'கவலைப்படாதீர்கள்' என்ற இந்த நூலின் ஆக்கத் திறன், முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.  திறந்த மனதோடு இந்நூலை வாசிக்கும் முஸ்லிம் அல்லாதோரும் ஆசிரியரின் ஆலோசனைகளையும் சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த ஆலோசனைகள் அருளப்பட்ட ஒழுக்காறுகளின் உறுதி மீதும் உண்மையை ஊடுருவிச் செல்லும் கற்றறியப்பட்ட சிந்தனைகளின் மீதும் கட்டமைக்கப்பட்டவையாகும்' என்கிறார்  இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பாசிரியரான முகம்மத் இப்ன் அப்துல் முஹ்ஸின்  அல் துவைஜ்ரி அவர்கள்.

ஆனால் அந்த ஆனந்தத்தை அடைய இந்த நூல் வெளிவர வேண்டாமா? எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் ஒரு சாதாரண அளவிலான நூலை வெளிக்கொணரப் படும்பாடு அறியதவரா நாம்? யாராவது ஒரு செல்வந்தரின் கண்களில் பட்டு, அவரது ஆத்மா இதை வெளிக் கொணரத் துடிக்குமாயின் அதை விட மகிழ்ச்சியான செய்தியொன்று இருக்காது. அந்தப் பாக்கியத்தைப் பெறும் மனிதர் யாராக இருப்பார் என்று இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியும்?

மற்றைய நூல் 'பாலைவனப் போராட்டம்.' டென்மார்க் ஊடகவியலாளரான நுத் ஹோம்போவின் பயண அனுபவ நூல் இது. டென்மார்க்கிலுள்ள ஹோர்ஸன்ஸ் நகரில் 1902 ஆம் ஆண்டு பிறந்த ஹோம்போ 1930 இல் போல்கனை ஊடறுத்துப் பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயண நூலே 'பாலைவனப் போராட்டம்.'

ஹோம்போ தனது இருபதுகளில் இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்டார். பலவீனமானவர்களதும்  ஒடுக்கப்பட்டவர்களினதும் பக்கமாக அவரை எப்போதும் இழுத்துச் சென்ற நேர்மையுணர்வு அவரிடம் மிகுதியாக இருந்ததால் அவர் கொல்லப்பட்டார்' என்கிறது நூலின் அறிமுகக் குறிப்பு.

''பாலை நிலப் போராட்டம்' என்ற இந்த நூல் தனித்துவமான ஒரு துணிகரச் செயல். இந்த நூலைப் படிக்கும் போது எனது கண்களில் பலமுறை கண்ணீர் வடிந்தது. அரேபியப் புரட்சியைப் பற்றிய அவருடைய சொற்களை நீங்கள் வாசிக்கும் போது இந்த டென்மார்க் ஊடகவியலாளரின் தூய இயற்பண்பை இலகுவாக நுகர முடியும்'' என்கிறார் ஃபேடல் சுலைமான் - இவரே இந்த நூலை வெளியிட்டவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

'அவர்கள் கிழிபட்டவர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால் உறங்கும் இப்போது கூட, அவர்களின் எல்லா முகங்களிலும் முன் பின் அறியப்படாத அமைதியான, தீர்க்கமாக அமைதிப் பார்வை இருந்தது. இமைகளின் ஓர் இமைப்புக் கூட இல்லாமல் இறப்பதற்கு இயலுமாயிருப்பது ஏன் என்று எனக்கு விளங்கத் தொடங்கியது.  ஒரு நாள் அவர்களுடன் கழித்த போது நான் கவனித்திருந்ததன்படிஅவர்கள் தமது சமய மனச்சாட்சிக்கு அச்சங்கொண்டு பின்பற்றினார்கள் என்பதைக் கண்டேன். எக் கொடிய விதி அவர்களைத் தாக்கியிருந்தாலும் அந்நடப்புக்காக இறைவனைக் குறை கூற அவர்களுக்குத் தோன்றவே இ;ல்லை.' 

மேலேயிருக்கும் பந்தி ஹோம்போவின் எழுத்து நடையின் அழகை எடுத்துக் காட்டுகிறது.

புத்தக வடிவில் 10 புள்ளி எழுத்துருவில் 360 பக்கங்களைக் கொண்ட நூல் இது. 

7

என்னுடைய கருத்துப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களில் முதல் இ;;டத்தை அல் அஸூமத் அவர்களே வகிக்கிறார் என்பேன். தமிழ் இலக்கணம், கவிதை, நாவல், சிறுகதை, சஞ்சிகை, பெறுமதியான மொழிபெயர்ப்புகள் என திரும்பும் பக்கமெல்லாம் அவரே தெரிகிறார். இவ்வளவையும் செய்து விட்டு அல்லது செய்து கொண்டு மிக அமைதியாக இருக்கும் ஒரு நபரும் இவரே.

நூலாக வெளிவராத அவரது எழுத்துகளை நான் இனிமேல்தான் வாசிக்க வேண்டும். இதுவரை படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது 'பிலால்' தான். அதற்குக் காரணம், க்ரெய்க் அவர்களின் மொழி நடையும் அதை அப்படியே தமிழில் தந்த அல் அஸூமத் அவர்களும் முகம்மது நபியவர்களுடன் நிழல் போல் 22 வருடங்கள் வாழ்ந்தவரும், தொழுகைக்கான முதல் அழைப்பை விடுத்தவரும் உலக முஸ்லிம்களால் நெகிழ்ச்சியுடன் மதிக்கப்படுபவருமான ஸெய்யிதினா பிலால் (ரலி) அவர்களுமாவர்.

எல்லாருக்கும் ஆயிரமாயிரம் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கின்றன. எனக்கும் உள்ள சின்னச் சின்ன ஆசைகளில் முதன்மைக்குரிய ஒன்று இருக்கிறது. கவிஞர் அல் அஸூமத்துடன் டமஸ்கஸ் சென்று; பிலால் (ரலி) அவர்களின் அடக்கஸ்தலத்தில் நின்று,  அவருக்கு ஸலாம் உரைத்து, 'ஸெய்யிதினா பிலால், இதோ உங்களைத் தொடர்ந்த இன்னொரு பிலாலுடன் உங்களைக் காண வந்திருக்கிறேன்' என்று உரக்கச் சொல்ல வேண்டும்!

(ஜீவநதி 202 வது இதழில் வெளிவந்த கட்டுரை)



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: