Monday, October 3, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 3


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 3

அதே போன்றுதான் இந்திய முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொஹிதீன் அவர்களது உரையைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடைசி நாளன்று ஏறக்குறைய 40 நிமிடங்கள் அவர் உரை நிகழ்த்தினார். இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்ற ஆவல்தான் என்னில் மேவி நின்றது. அவருடைய பேச்சில் ஆய்வுக்கான தலைப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி அதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எவற்றையெல்லாம் அது உள்ளடக்க வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார். அவரது பேச்சின் உச்சக் கட்டமாக வருடா வருடம் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அல்லாமா உவைஸ் அவர்களது ஞாபகார்த்த உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்று அழுத்திப் பேசினார்.பேராசிரியர் காதர் மொஹிதீன்

இவர்களது உரைகளுடன் நமது அரசியல்வாதிகளின் உரைகளை அருகில் கூட வைக்க முடியாது. வெறுமனே பொம்மைகளாக இருந்து விட்டுப் போகும் நிலையிலும் பிரமுகராக வந்து ஊடக வெளிச்சத்தில் நனைந்து விட்டுப் போகவும் நினைக்கும் நமது அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டின் ஒளிப்பதிவு நாடாக்களை எடுத்து இந்திய அரசியல்வாதிகளின் பேச்சுக்களைக் கேட்க வேண்டும். அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் எத்துணை ஆழமான அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான அரங்குகளில் பங்கு கொள்ள நினைக்கும் நமது அரசியல்வாதிகள் ஆகக் குறைந்தது எழுத்து மூலமாகவாவது ஒரு உரையைத் தயார்படுத்திக் கொண்டு சென்று படிப்பார்களானால் அவர்களுக்கும் இலங்கையிலிருந்து கலந்து கொள்ளும் இலக்கியவாதிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் கௌரவமாக இருக்கும்.

முதல் நாள் நிகழ்வில் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது கவியரங்கம். தலைமைக் கவிஞர், வரவேற்புக் கவிஞர் உட்பட முப்பத்து ஐந்து கவிஞர்கள் கலந்து கொண்ட அதி பிரம்மாண்டக் கவியரங்கம். அன்றைய தினமே அத்தனை பேரும் கவிதை படித்திருந்தால் அது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டிருக்கும். இவர்களுள் நமது கவிஞர்கள் நால்வர். மருதூர் ஏ.மஜீத், பாலமுனை பாரூக், மௌலவி காத்தான்குடி பௌஸ், கிண்ணியா ஏ.எம்.எம். அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்களில் காத்தான்குடி பௌஸ், பாலமுனை பாரூக் ஆகியோரின் கவிதைகள் நன்றாக இருந்ததாக சில நண்பர்கள் எனக்குச் சொன்னார்கள்.கவிதை படிக்கும் பாலமுனை பாரூக் - பேராசிரியர் அகமது மரைக்காயர் - மருதூர் ஏ. மஜீத்

மற்றவர்களின் கவிதைகள் வேறு யாருக்காவது நன்றாக இருந்திருக்கக் கூடும். துவக்க விழாவில் பேசியதை விட இந்தக் கவியரங்கில் நமது அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கு கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஓர் ஆதங்கம் என் மனதில் எழுந்தது.

கவியரங்கில் இலங்கை சார்பில் கலந்து கொள்ள கிண்ணியா ஏ.எம்.எம். அலி, காத்தான்குடி பௌஸ், எம்.எல்.எம். அன்சார், யாழ் அஸீம், ரீ.எல்.ஜவ்பர்கான் ஆகியோரது பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. நேரடியாக அங்கு கவிதை அனுப்பியிருந்த பாலமுனை பாரூக், மருதூர் மஜீத் ஆகியோருடன் இங்கிருந்து அனுப்பப்பட்ட பட்டியலிலிருந்த இருவருமாகச் சேர்த்து மாநாட்டுக் குழு நால்வரை இணைத்திருந்தது. அடுத்தடுத்து நடைபெறவுள்ள மாநாடுகளில் ஏற்கனவே கவிதை படித்தவர்களைத் தவிர்த்துக் கவியரங்கக் கவிதைகளில் சோபிக்கக் கூடிய ஏனைய கவிஞர்களுக்கு வழிவிட வேண்டும். இதற்குப் பிறகு வரக் கூடிய மாநாட்டு இணைப்பாளர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்ட வேண்டும்.

இரண்டாம் நாள் காலையில் சென்ரல் மேனிலைப் பள்ளியில் இஸ்லாமியக் கலாசார, தமிழ் இலக்கியக் கண்காட்சி இடம்பெற்றது. காட்சியை நண்பர் அகமது முனவ்வர் திறந்து வைத்தார். கண்காட்சியில் மொகலாய அரசர் அவுரங்கஸீப் கைப்பட எழுதிய அல்குர்ஆன் பிரதி மற்றும் பல அரிய தபால்தலைகள், படங்களும் இடம் பெற்றிருந்தன.

ஆய்வரங்குகள் எல்.கே. மேனிலைப் பாடசாலை வகுப்பறைகளில் காலை 10.30 முதல் 12.30 வரை நடைபெற்றன. இலங்கையரில் கலாநிதி துரைமனோகரன் கவிதை அரங்குக்கும் எஸ்.முத்துமீரான் சமயம் அரங்குக்கும் தலைமை வகித்தார்கள். காப்பிய அரங்கு, வரலாறு அரங்கு ஆகியவற்றுக்கு முறையே நெறியாளர்களாக கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுதீன், மானா மக்கீன் ஆகியோர் இயங்கினார்கள்.


தலைமையுரை நிகழ்த்தும் எஸ்.முத்துமீரான் மற்றும் கட்டுரை படிக்கும் கவிஞர் மௌலவி காத்தான்குடி பௌஸ்

காப்பிய அரங்கில் தாஸிம் அகமது ‘ஜின்னாஹ் ஷரிபுதீனின் மஹ்ஜபீன் காவியம்’ என்ற தலைப்பிலும் மெய்ஞானம் அரங்கில் கலாநிதி பி.எம்.ஜமாஹிர் ‘அறிஞர் சித்தி லெப்பையின் படைப்புகளில் மெய்ஞானம்’ என்ற தலைப்பிலும் வரலாறு அரங்கில் விரிவுரையாளர் எஸ்ஏ.சி. பெரோஸியா ‘இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமிடையிலான வர்த்தகத் தொடர்புகள் என்ற தலைப்பிலும் - பேராதனைப் பல்கலைக் கழகத் துணை நூலகர் ஆர்.மகேஸ்வரன் ‘இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் கண்டி’ என்ற தலைப்பிலும் மானா மக்கீன் ‘நூற்றாண்டு காலக் காயல் - கீழை இணையங்கள் என்ற தலைப்பிலும் கட்டுரை படித்தார்கள்.கட்டுரை படிக்கும் கவிஞர் தாஸிம் அகமது - தலைமை வகிக்கும் பேரா. திருமலர் மீரான்பிள்ளை - நெறியாளர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

வாழ்க்கை வரலாறு அரங்கில் காத்தான்குடி பௌஸ் ‘செய்கு முஸ்தபா நாயகம்’ எனும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். கலாநிதி துரை மனோகரன் ‘இலங்கையின் முதல் தமிழ் நாவல் - அசன்பே சரித்திரம் - ஓர் ஆய்வு எனும் தலைப்பில் தனது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.பேராசிரியர் செ.யோகராசா ‘இலங்கை முஸ்லிம் புலவர்களின் வாய்மொழிப் பாடல் பாரம்பரியம்’ எனும் தலைப்பிலும் பாவலர் சாந்தி முகைதீன் ‘அடிப்படைக் கூறுகளை ஆளப்படுத்தும் தன்னார்வப் பாடல்கள்’ எனும் தலைப்பிலும் மருதூர் ஏ.மஜீத் ‘தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாடடார் இயல்’ எனும் தலைப்பிலும் நாட்டுப்புறவியல் அரங்கில் கட்டுரை படித்தனர்.


கட்டுரை படிக்கும் பேரா. துரைமனோகரன் (இடதுபுறம் அமர்ந்திருப்பவர் பேரா. ஹ.மு. நத்தர்ஷா)

‘அஸ்ஸாஉ’ எனும் தலைப்பில் மௌலவி எம்.சி.எம். சுஹைல், ‘புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வியலும் பண்பாடும்’ எனும் தலைப்பில் ஏ.தாஹிரா தஸ்வீர், ‘இலங்கையில் தமிழ் முஸ்லிம் இன ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதில் தமிழ் மொழியின் பங்கு’ எனும் தலைப்பில் முபஸ்ஸல் அபூபக்கர், ‘மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும்’ எனும் தலைப்பில் ஏ.சி.எம். அஸ்ஹர், ‘இஸ்லாமியத் தமிழாக மாறுவதெப்போ’ எனும் தலைப்பில் எஸ்.ஐ.நாகூர்க் கனி, ‘புத்தளம் - மன்னார் பிரதேச கோலாட்டக் கலை’ எனும் தலைப்பில் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப், ‘கிண்ணியா நாட்டார் பாடல்களின் இலக்கியப் பங்களிப்பு’ எனும் தலைப்பில் ஐ.ஏ.ஹஸன்ஜி, ‘பொலன்னருவை மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் மட்டும் வழங்கி வரும் பழமொழிகள்’ எனும் தலைப்பில் எஸ்.வை. ஸ்ரீதர் ஆகியோரும் ஆய்வரங்குகளுக்குக் கட்டுரைகளை அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் வருகை தந்திருக்கவில்லை. என்ற போதும் இவர்களது கட்டுரைகள் ஆய்வுக் கோவையில் அடங்கியிருக்கின்றன.


கட்டுரை படிக்கும் விரிவுரையாளர் எஸ்.ஏ.சி. பெரோசியா மற்றும் நெறியாளர் மானா மக்கீன்

ஆய்வரங்கத் தலைமை, நெறியாள்கையைத் தவிர்த்துப் பார்த்தால் இலங்கையிலிருந்து 18 கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நான் இது குறித்துச் சுட்டிக்காட்டும் விடயம் என்னவெனில் ஏறக்குறைய நூற்றுப் பத்துப் பேரளவில் கலந்து கொண்ட மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து 18 கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் 260 பேர் கலந்து கொண்ட மலேசிய மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் இரண்டே இரண்டு.

இதற்கு அப்பால் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் திப்பு சுல்தான் காவியம் பற்றியும் அவரது சிறுகதைகள் பற்றியும் இந்தியர் இருவர் கட்டுரை சமர்ப்பித்தனர் என்பதும் குறித்துச் சொல்லப்பட வேண்டியுள்ளது.

மாநாட்டு நிகழ்ச்சிகளை கிழக்கின் பிறை எப்.எம். வானொலியூடாக அவ்வப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள் பிறை எப்.எம். கட்டுப்பாட்டார் பஷீர் அப்துல் கையூம், எஸ்.றபீக், பிரபாகரன் ஆகியோர். அநேகமாக அனைத்து அரங்குகளிலும் அவர்கள் சுற்றிச் சுழன்றதைக் காண முடிந்தது. ஆய்வரங்குகள் முடியுந் தறுவாயில் அந்த ஒலிபரப்பில் என்னையும் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கவிஞர் அல் அஸ_மத் ஆகியோரையும் இணைத்துக் கொண்டு தகவல்களை வழங்கக் கோரினர். இந்தத் தொகுப்பு நிகழ்ச்சி மூலம் கிழக்கிலும் பிறை எப்.எம். ஒலிபரப்பாகும் இடங்களிலும் உள்ள அனைத்து நேயர்களும் மாநாடு பற்றிய முழு விபரங்களையும் அறிய முடிந்திருக்கும். இவர்கள் மூவரதும் உண்மையான உழைப்புக்காக நன்றி சொல்ல வேண்டும்.இது தவிர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சர்வதேச ஒலிபரப்பிலும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக அறியக் கிடைத்தது. காத்தான்குடியிலிருந்து வருகை தந்திருந்த நண்பர் ஹஸன் தலைமையிலான குழுவினரும் ஒளிப்பதிவில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. எல்லா நிகழ்ச்சிகளையும் இணையத் தளத்தில் இலங்கையிலிருந்து நேரடியாகவே தான் பார்த்ததாக நண்பர் மாத்தளை பீர் முகம்மது எனக்குச் சொன்னார்.
..............................................................................................................................தொடரும்
------------------------------------------------------------------------------------------------------
நன்றி - எங்கள் தேசம் இதழ் 206 (01-14 - 10 - 2011)
(பத்திரிகையில் படங்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

புல்லாங்குழல் said...

யாராவது மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் எழுத மாட்டார்களா என்ற ஆசை இருந்தது. உங்கள் கட்டுரையை கண்டதும் மகிழ்ச்சி!.

இன்னும் விபரங்கள் எழுதுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கினன்றேன்.