Tuesday, March 17, 2026

இஃப்தார் அனுபவங்கள்

அமல்ராஜ் பிரான்ஸிஸ் < இஸ்லாமியர்களின் புனித நோன்பு காலத்தில், கூடவே பணியாற்றும் இஸ்லாமிய நண்பர்களுடன் கூட்டுணர்வையும், ஒருமைப்பாட்டையும் பகிரும் முகமாக நானும் முடிந்தளவு நோன்பிருப்பது வழக்கம். ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக ஒரு வாரம் முழு நோன்பைக் கடைப்பிடிக்க முடிந்தது. பின்னர், லெபனானில் intermittent fasting தான் முடிந்தது. இப்போது இங்கு யெமனில் இது எதுவும் கைகூடவில்லை. பல காரணங்கள், அதில் முதன்மையானது அவ்வப்போது வெளியே வந்து பயமுறுத்தும் அல்சர். அல்சரை இஸ்லாம் அனுமதித்த ஒரு ‘எக்ஸ்கியூஸாக’ நம்பி, நோன்பிருக்காமல் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறேன். ஆனால், குறைந்த பட்சம், அலுவலகத்தில் எவருக்கும் முன்னால் வாயைப் போட்டுச் சப்பாமல், மடக்கு மடக்கென்று தண்ணீரைக் குடிக்காமல் இருக்க வேண்டும் என்பது ஒரு இலக்கு. இவ்வருட ரமழான் காலத்தில் இரண்டு சுவாரஷ்யமான பாடங்களைக் படித்துக்கொண்டிருக்கிறேன். முதலாவது, நோன்பிருத்தலால் ஒரு இஸ்லாமியனை பலவீனமாக நினைத்துவிடக்கூடாது என்பது. அதாவது, fasting does not make a Muslim weak or vulnerable! ரமழான் ஆரம்பித்து இரண்டாம் நாள் என்னுடைய நண்பருடைய அறைக்குப் போனேன். ஒவ்வொரு நாள் காலையிலும் அவருடைய அறையில் போய் அமர்ந்து கோப்பி அருந்துவது வழக்கம். அந்த அறையில்தான் தரமான கோப்பி போடும் மெசின் உண்டு. வேலைப்பழுவின் நடுவில் கிடைக்கும் ஒரு இளைப்பாறுதலுக்கு அவருடைய காரியாலயம்தான் எங்களுக்கு ஹைடிங் ப்ளேஸ். ஆனால் நண்பர் முஸ்லிம். நோன்பிருக்கறார். அப்படியெனின் கோப்பி? அதே நேரத்திற்கு அன்றும் அவருடைய அறைக்குப் போய் அமைதியாக அமர்ந்திருந்தேன். அன்று கோப்பி அருந்தும் எண்ணம் இருக்கவில்லை. நண்பரும், காரியாலயத்தில் பெரும்பான்மையினரும் நோன்பிருக்கும் போது, நாம் நட்டு நடு வீட்டில் குந்தியிருந்து மடக்கு மடக்கு என்று எதையாவது உறிஞ்சிக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்!. நண்பர் எவ்வித மாற்றமுமில்லாமல் ‘கோப்பி ஊத்தித்தரவா?’ என்றார். அதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு கோப்பி ஊற்றிக் கொடுத்துவிட்டு, அவர் மட்டும் எச்சிலைக்கூட விழுங்காமல் தேவிடு காத்துக்கொண்டு இருப்பது சரியா? தவிர, அவருக்கு முன்னால் கோப்பி அருந்தினால் அது அவரை சபலப்படுத்துமில்லையா (temptation)?! வாட்… லூசா உனக்கு. எனக்கு கோப்பி வேண்டாம்?’ என்றேன். ‘ஏன்? இது வழமையாக நீ கோப்பி குடிக்கிற டைம்தானே?’ ‘யெஸ், நாம கோப்பி குடிக்கிற டைம். ஆனா நீ நோன்பு. உனக்கு முன்னால குடிக்கிறது சரியில்லை. அதைவிட உன்னை கோப்பி ஊற்ற வைப்பது பெரும் பாவம்!’ சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தினேனோ தெரியாது, ஆனால் உள்ளே நினைத்தை இப்படித்தான் சொல்லிவைத்தேன். அதற்கு நண்பர் சொன்னார். ‘நோன்பு பிடிப்பதால் நாங்கள் ஒருபோதும் வீக்கானவர்களாக ஆகிவிடுவதில்லை, அமல். இப்படித்தான் ரமழான் மாதத்தில் மற்றவர்கள் எங்களை நினைத்துக்கொள்கிறார்கள். நோன்பு எங்களை உடலளவிலும், மனதளவிலும் பலவீனர்களாக ஆக்கிவிடாது. We are not vulnerable. மாறாக, வழமையான நாட்களைவிட மிக உறுதியான உடல் மற்றும் மனநிலையோடு இருக்கிறோம். இருக்க வேண்டும்!’ முதல் நாள் இரவு இப்தார் தாண்டி இராவுணவிற்கு இதே நண்பரிடம் ‘நான் சமைக்கிறேன், நீ பாவம்!’ என்று சொன்னது ஞாபகம் வந்தது. எவ்வளவு பெரும் சின்னத்தனமாக நடந்துகொண்டிருக்கிறேன். இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் நோன்பாளன் பற்றிய புரிதல் இப்படித்தானிருக்கிறது. ‘நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். மன்னிக்கணும்!’ என்றுவிட்டு, நண்பர் போட்ட கோப்பியை, அவருக்கு முன்னாலேயே, எவ்வித குற்றவுணர்ச்சியுமில்லாமல் குடித்தேன். இந்த டெம்டேஷன் என்பது நோன்பாளர்களை எதுவும் செய்வதில்லை. டெம்டேஷன் ஒரு சாத்தான். சாத்தானோடு போராடி அவனைத் தோற்கடிப்பதுதானே புனித ரமழானின் நோக்கம்! ஏராளமான முஸ்லிம் நண்பர்கள் இருப்பதால், நோன்பு பிடிக்கும் அவர்களைப் போல இந்த நாட்களில் நானும் கடும் பிஸி. நோன்பு பிடிப்பதிலா? இல்லை. இப்தார் கூட்டங்களில். என்னுடைய நண்பர்கள் எனக்கு இப்தாரில் போதும் போதும் என்கிற அளவுக்கு உணவூட்டி தங்கள் புண்ணியத்தைப் பெருக்கிக்கொள்கிறார்கள். அதுவும், யெமன் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இருப்பதால், சொல்லி வேலையில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் இருக்கும் இடத்தில் ஒரு இப்தார் அழைப்பு. வழமைபோலவே நான் பிஸியாக இருந்த காரணத்தால்… அதுதான் இல்லை ‘நிச்சயம் வருவேன்’ என்றேன். அந்த இப்தார் ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சுமார் இருபது பேர் பங்கெடுத்தோம். இருபது பேருக்கு, சுமார் ஐம்பது பேர் வயிறு புடைக்க உண்பதற்கு தோதான அளவு உணவு நீண்ட மேசையில் தயாராக இருந்தது. அந்த மேசையில், அமர்ந்து, கைபேசியை வைப்பதற்கு இடம் இல்லை. அத்தனையும் சாப்பாடு. மேசை மறைந்து, சாப்பாடு மட்டுமே அந்தரத்தில் நின்று கொண்டிருப்பது போல காட்சி தந்தது. வெட்டுவதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நீங்கள் உணவுப் பிரியராக இருந்தால், நிச்சயம் யெமனுக்கோ அல்லது நீங்கள் இருக்குமிடத்தில் இருக்கும் (இருந்தால்) யெமன் உணவகத்திற்கோ நிச்சயம் போக வேண்டும். பிரமித்துப் போவீர்கள். பிரபலமிக்க லெபனீஸ் உணவுகளை கடாசிவிடும் அளவுக்கு இவர்களுடைய உணவு பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ஐட்டத்தோடு வருவார்கள். இந்த ‘ஒவ்வொரு’ உம் அவ்வளவு சீக்கிரம் நின்றுவிடாது. அந்தளவிற்கு அவர்கள் சாப்பாட்டில் வரைட்டீஸ் உண்டு. சரி இப்தாருக்கு வருவோம். வயிறு நிரம்பி, வாயால் வழிவதற்குள் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டேன். இப்தார் முடிந்து வெளியே வந்து ஒரு நடை போட ஆரம்பித்த போது, அருகில் வந்த முஸ்லிம் நண்பரிடம் சொன்னேன். ‘இப்தார் நிறைவாக இருந்தது. ஆனால் ஒரு கேள்வி. ஓடர் செய்த உணவு எல்லாவற்றையும் நாம் உண்டு முடிக்கவில்லை. பாதிக்கு மேல் மீதம் வைத்துவிட்டு வந்திருக்கிறோம். அதை என்ன செய்வார்கள்?’ தெரியவில்லை!’ என்றார் நண்பர். இதுபோன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டு மிஞ்சும் உணவை குப்பையில்தான் எறிவார்கள். வெளியில் எளிய மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்குக் கொடுப்போம் என்றெல்லாம் யோசிக்கமாட்டார்கள். ‘குப்பையில் எறிந்துவிடுவார்கள்’ என்றேன். நண்பர் அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. ‘இது புனித ரமழானின் முக்கிய நோக்கத்திற்கு எதிரானது இல்லையா?’ என்றேன். முதலில் நண்பருக்கு ஆச்சரியம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. உணவை வீணாக்குவது நோன்பின் நோக்கத்தைக் கெடுத்துவிடும். மாறாக, தானமும், எளியவர்களுக்கு உணவூட்டுவதும்தானே புனித ரமழான் மாத்தின் நோக்கமும் சிறப்பும். ‘நீ சொல்வது சரிதான்!’ அவ்வளவுதான் பதில். நான் ஏதோ ஓசியில் வயிறு புடைக்கத் தின்றுவிட்டு, வியாக்கியானம் பேசுவது சரியில்லைத்தான். ஆனாலும் நம்முடைய நடத்தை நம்முடைய இறை நம்பிக்கைக்கு நேர்மையானதாக இருக்க வேண்டும் இல்லையா? கண்டுகொள்ளாமல் நடந்தார் நண்பர். சும்மா இருந்தேனா என்ன, அடுத்த கேள்வி. என்னுடைய வாய்க்கு போடும் பூட்டை அன்று வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். ‘இன்னொரு கருத்தும் இருக்கு’ என்றேன். நண்பர் முழித்தார். இனி ஒருபோதும் என்னை இப்தாருக்கு அழைக்கமாட்டார் என்று புரிந்தது. ‘என்ன? (சொல்லித் தொலையும்!)’ ‘இல்ல, சொல்லுறன் எண்டு குறைநனைக்காத. சில முஸ்லிம்கள் - அல்லது பெரும்பான்மையான வசதி படைத்த முஸ்லிம்கள் - சாதாரண நாட்களைவிட, நோன்பு காலத்தில்தான் உணவுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதுவும் நியாயம் இல்லை இல்லையா?’ ஒரு நிமிட அமைதி. கேள்வி நியாயமற்றது என்றால் மனிதர்கள் திட்டி அனுப்பிவிடுவார்கள். இல்லை அமைதியாக இருந்தால் அந்தக் கேள்வி, அவர்கள் மனச்சாட்சியைக் குடைந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். பதில் வந்தது. ‘ஓமடா… நீ சொல்றது உண்மைதான்! எனக்கும் அது பொருந்தும்’ அப்பாடா! நல்ல வேளை அவன் திட்டவில்லை. அதுவரைக்கும் சந்தோஷம். “உண்மதான் நீ சொல்றது… ரமழான்காலத்தில உணவிற்கான செலவு பொதுவாக கூடத்தான். It doesn’t add up, does it?” இது என்னுடைய அவதானிப்புத்தான். ரமழானில் அதிகம் உண்கிறார்களா என்று தெரியவில்ல. அதிகமான நண்பர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள். அது அமலுக்குப் பயன்பட்டால் நல்லது. இல்லையென்றால், புனிதத்தில் சிக்கல் இருக்கிறதுதான். சரி, ஒன்று மட்டும் உறுதி. நாளை இந்த வில்லங்க வாயை இப்தாருக்கு அழைக்க மாட்டான். ப்ரிட்சிலிருக்கும் பழைய மீன் கறியை சூடாக்க வேண்டியதுதான்.