Sunday, August 16, 2009

டல் கோப்பி


கஞ்சாக் கோப்பிக்கு ‘டல் கோப்பி’ என்றும் ஒரு பெயர் உண்டு.
கஞ்சாக் கோப்பித் தூள் இடிப்பது ஒரு தனிக் கலை. அதைப் பானமாக தயாரிப்பது, கஞ்சாச் சுருட்டுச் சுற்றுவது, ஈரலுடன் கஞ்சா சேர்த்து ‘பங்கு’ அவிப்பது (இதற்குத் தென் பகுதியில் வேறு பெயர் உண்டு) ஆகியனவெல்லாம் கூட தனித் தனிக் கலைகளே. இப்படியெல்லாம் நான் எழுதுவது கொண்டு கஞ்சாவுக்கும் எனக்கும் எந்த விதத்திலாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று நீங்கள் கற்பனை பண்ணிக் கொள்ளக் கூடாது. எல்லாம் ஒரு கேள்வி ‘ஞானம்’ தான்.
1983ம் வருஷம் நான் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இருந்தேன். வாழும் போது துன்பம் மிக்கதாக இருந்த போதும் பிற்காலத்தில் நினைக்க நினைக்க இனித்துக் கொண்டே இருப்பது விடுதி வாழ்க்கை. அங்கு நடந்த ஒரு சம்பவத்தைத்தான் இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
கலாசாலையின் எங்களது விடுதி அறைக்குள் நான்கு பேர் மாத்திரம்தான் தங்க முடியும். ஆனால் அதற்குள் ஏழுபேர் தங்கியிருந்தோம். பெட்டிகள்தாம் அறைக்குள் இருந்தன. கட்டில்கள் யாவும் விறாந்தையில் கிடந்தன. சீட்டு விளையாடுதல், பீடி, சிகரட் புகைத்தல், கிண்டல் பண்ணுதல், தெருக் குறள் சொல்லுதல், கைவாறடித்தல், இரவில் மோட்டு வளை ஏறிப் புறாப் பிடித்தல், வீடியோ படக் காட்சிகளுக்குச் செல்லுதல் போன்ற இன்னோரன்ன விஷேட பண்புகளுடன் நாங்கள் வாழ்ந்து வந்தோம். மஸ்கெலியா, குருநாகல், மாத்தளை, மன்னார், சம்மாந்துறை ஆகிய ஊர்களைச் சேர்ந்த நண்பர்களுடன் நானும் எனது ஊரைச் சேர்ந்த எனது சினேகிதனும் அந்த விடுதியறைக்குள் குடியிருந்தோம். இந்த எழுவரில் எனது ஊர் நண்பர்; விவசாயத் துறையைச் சேர்ந்தவர். மன்னாரைச் சேர்ந்த நண்பர் விஞ்ஞானத் துறையைச் சேர்ந்தவர். நான் உட்பட மீதி அனைவரும் உடற்கல்வித் துறையில் பயிற்சி பெறுபவர்கள். தமிழ் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதங்கள் மும்முரமாகப் பேசத் தொடங்கிய காலம் அது. எங்களது விடுதி அறைக்கு ‘புதிய பலஸ்தீனம்’ என்று பெயர் சூட்டிக் கரித்துண்டால் எழுதியும் வைத்திருந்தேன்.
எங்களது உடற் கல்வி செய்முறைப் பாடத்துக்கான விரிவுரையாளர் திரு. யதுகுலசிங் மிகக் கறாரான பேர் வழி. ஆனால் அதே அளவுக்கு அன்பானவர். யதுகுல சிங்கம் என்ற பெயரில் உள்ள கடைசி இரண்டு எழுத்துக்களையும் அவர் பயன்படுத்துவதில்லை. நாங்கள் அவரது பெயரைச் சுருக்கமாக அவரில்லாத சமயத்தில் ‘யது’ என்று மட்டும் பயன்படுத்துவோம். ஆசிரிய மாணவர்களுடன் தேனீர் அருந்த வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கான பணத்தை அவரே செலுத்துவார். மிகவும் கட்டுப்பாடான மனிதர் அவர். மாணவர்களுக்கு உடற் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்; மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் வேளையில் நீண்ட காற்சட்டையுடன் இருப்பதை விளையாட்டுத் துறைக்கே அவமானம் என்று கருதுபவர். திரு. யது பற்றி நீங்கள் இந்தளவுக்கு மட்டும் தெரிந்திருத்தல் போதுமானது.
நான் மேற்சொன்ன ஒன்று அல்லது இரண்டு சிறப்புப் பண்புகளுடன் நாங்கள் அனைவரும் களித்திருந்த ஒரு இனிய பொழுதில் ‘கஞ்சாக் கோப்பி’ பற்றிய கதை வந்தது. ஒரு நண்பர் ‘நான் எத்தனை கோப்பி வேண்டுமானாலும் குடிப்பேன் எனக்கு எதுவும் ஆகாது’ என்று சவால் விட்டார். ஆனால் சவாலை நிறைவேற்றுவதற்குக் கஞ்சாக் கோப்பிதான் இல்லை. இருந்தாலும் மற்றொரு நண்பர் தான் ஊர் சென்று திரும்பும் போது கொண்டு வருவதாகவும் சவால் விட்டவர் குடித்தே ஆக வேண்டும் என்றும் கூற சபை முழுமனதாக ஏற்றுக் கொண்டது. இந்த விடயம் இத்தோடு கைவிடப்பட்டு விடும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் விதி வேறு விதமாக இருந்தது.
திருவாளர் எக்ஸ் அவர்கள் இன்றிரவு ‘டல் கோப்பி’ அருந்துவார்’ என்ற தகவலை நண்பர்கள் திடீரென ஒரு சந்தியா காலப் பொழுதில் வெளியிட்டார்கள். இரவுப் பொழுது கதன குதூகலமாக இருக்கப் போகிறது என்பதால் பெருநாள் புதினம் பார்க்க அழைத்துச் செல்ல வாக்களிக்கப்பட்ட ஒரு சிறுவனின் ஆர்வத்துடன் நான் இருந்தேன். இந்த இடத்தில் திருவாளர் எக்ஸைப் பற்றிச் சிறிது நான் சொல்லியாக வேண்டும்.
எம்மிடம் உள்ள கிண்டல் என்கிற சிறப்புப் பண்பை எங்களுக்குள்ளே ஒருவருக்கு அதிகம் பயன் படுத்தினோம் என்றால் அவர் திருவாளர் எக்ஸாகத்தான் இருக்கும். அவர் உயரத்திலும்; சற்றுக் குறைவானவராக வேறு இருந்தார். ஒரு நாள் உதைபந்தாட்டம் நடந்து கொண்டிருந்த போது பந்தைத் துரத்திச் சென்ற எக்ஸ் ஓடிப் போன வேகத்தில் பந்தை நிறுத்த முடியாமல் பந்துக்கு மேலே ஏறிச் சறுக்கி விழுந்த போது அடக்கிக் கொள்ள முடியாமல் வயிறு வலிக்கச் சிரித்தோம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை ஞாபகப்படுத்திக் கிண்டலடித்துச் சிரித்துக் கொண்டேயிருந்தோம். காலையில் அவனவன் பல்பொடிக்கும் பற் பசைக்கும் அலைந்து திரியும் போது முகத்துக்கு ஷேவிங் கிறீம் பயன்படுத்தி முகச் சவரம் செய்யும் அதிசய பிராணியாக அவர் விளங்கினார். அந்த வயிற்றெரிச்சலில் அவர் முகச் சவரம் பண்ணும் போதெல்லாம் மற்றொரு நண்பர் அவரைப் பார்த்து ‘கிறீம் போட்டு சிரைக்க மட்டுந் தெரிஞ்சாப் போதாது மாஸ்டர். கோர்ஸ் முடிஞ்சு போறத்துக்குள்ள பந்தை நிப்பாட்டப் பழகிக்கிங்க...’ என்று தொடர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டேயிருப்பார். ஆனால் அவரை இந்த வார்த்தைகள் எதுவும் சோதிப்பதில்லை. ‘உன்னை நான் கணக்கிலேயே கொள்ளவில்லை’ என்கிற தினுசில் தன் காரியத்தில் கண்ணாயிருப்பார். சில வேளைகளில் ஒற்றை வசனத்தில் பதில் சொல்லி வாளாதிருப்பார்.
இரவு உணவுக்குப் பிறகு ஒரு நண்பர் நீர் கொதிக்க வைத்துக் கொடுக்க, மற்றொருவர் கஞ்சாக் கோப்பிச் சரையைக் கொடுக்க தானே கலந்து கொள்ளப்போவதாகச் சொல்லி சரையைப் பிரித்து நீருக்குள் கொட்டி விட்டு மற்றொரு சரையையும் கேட்டு வாங்கி அதையும் பிரித்துக் கொட்டிக் கலக்கினார். சீனியை அதிகம் போட்டால் போதை அதிகரிக்கும் என்பதாலும்;; கஞ்சாக் கோப்பித் தூள் அதிகம் பயன்படுத்தப்படுவதாலும்; சீனியின் அளவைக் குறைக்குமாறு கஞ்சாக் கோப்பி பற்றி விஞ்ஞான விளக்கம் தெரிந்து வைத்திருந்த ஒரு நண்பர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு அவர் சொன்னதற்காக மேலதிகமாக ஒரு கரண்டிச் சீனியை இட்டுக் கலக்கினார் திருவாளர் எக்ஸ். ஒரு மிடறு குடித்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுமாறு கோப்பையை என்னிடம் அவர் நீட்டிய போது நான் பயத்தில் பின்வாங்கினேன். இருவர் அருந்தும் தேனீர் அளவு கோப்பியை ரசித்து உறிஞ்சிக் கொண்டிருக்க நாமோ இரவில் எக்ஸ் எவ்வாறெல்லாம் பேசப் போகிறார் என்று கற்பனை செய்து சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தோம். தாக்கம் உடனே ஏற்படுமா அல்லது தாமதித்து ஏற்படுமா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவின. ‘எனக்கு எதுவுமே ஆகாது’ என்று சொல்லியபடி கோப்பியை அவர் குடித்து முடித்தார். அவர் எந்த நிமிடத்திலும் அர்த்தமில்லாமல் சிரிக்க ஆரம்பிக்கலாம் என்பதால் அதை எதிர்பார்த்து அன்றிரவு நாங்கள் சீட்டாடாமல் காத்திருந்தோம். இரவு 9.00 மணி. எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. 10.00 மணி. எந்த வித சமிக்ஞைகளும் புலப்படவில்லை. 10.30க்கு திருவாளர் எக்ஸ் தனது கட்டில் விரிப்பை நாம் அமர்ந்திருந்த பக்கம் பார்த்து உதறி விட்டு தன் பாட்டில் போர்த்திக் கொண்டு படுத்து விட்டார்.
கோப்பியடித்தவருக்கு எதுவும் ஏற்படாத எரிச்சலும் அதை நம்பி சீட்டாடாமல் காலத்தை வீணடித்த கவலையும் ஒன்று சேர ஏமாற்றத்துடன் 11.00 மணிக்கு நாங்கள் படுக்கையில் விழுந்தோம்.
நள்ளிரவில் நித்திரையைக் கலைத்த அந்தச் சத்தம் கனவில் கேட்டது அல்ல என்பதை படுத்த கட்டிலில் எழுந்து நின்றிருந்த திருவாளர் எக்ஸைப் பார்த்த போதுதான் புரிந்தது. அதுவும் சில கணங்கள்; கழிந்த பிறகு. வசந்த மாளிகை சிவாஜி கணேசனைப் போல் படுக்கை விரிப்பைத் தோளில் போட்டபடி நின்றிருந்தார். “டேய்.. எல்லாரும் எழும்புங்கடா...” அவரிடமிருந்து ஆணை பிறந்தது. “மருமவனுக்கு கஞ்சாக் கோப்பி வேலை செய்யுதுடா...” என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்தார் எங்களால் ‘மாமா’ என்று அழைக்கப்படும் நண்பர். “என்னடா இன்னம் படுக்கிறீங்க... ஐஸே... நான்தான் யதுகுல சிங். பிரக்டிகலுக்கு ரெடியாகுங்க...கெதியா..” சத்தம் உயர்ந்தது.
எல்லோரும் சிரிக்கத் தொடங்கினார்கள். நான் பேயறைந்தவனைப் போல் நின்றிருந்தேன். கஞ்சாக் கோப்பியை அதிகம் குடித்ததால் திருவாளர் எக்ஸ_க்குப் புத்தி பேதலித்து விட்டது என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தேன்.
“எல்லாரும் உடுப்பு மாத்துங்க...” - எக்ஸ் கட்டளையிட்டார். நண்பர்கள் சிரித்துக் கொண்டேயிருந்தார்கள். எக்ஸ_க்கு போதை அல்லது பைத்தியம் காலைக்குள் தெளியாவிட்டால் நம் கதி என்னவாகும் என்று சிந்தித்தேன். கஞ்சாக் கோப்பி கொண்டு வந்தது யார்? குடிக்கக் கொடுத்தது யார்? என்ற வினாக்களுக்குப் பதிலளிக்க நிர்வாகம் வரை மட்டுமல்ல, சில வேளை பொலீஸ் வரை போக வேண்டியிருக்கும். எக்ஸ் சொல்வதைச் செய்யாவிட்டால் சத்தம் உயரும். ரகளை பண்ணக் கூடும். விடுதியிலிருக்கும் அத்தனை பயிற்சி ஆசிரியர்களும் விழித்தெழுந்து விடுவார்கள். நாளை விடிந்தால் நாறிப் போய் விடுவோம். சத்தம் இன்னும் கொஞ்சம் உயருமாக இருந்தால் லேடீஸ் ஹொஸ்டலிலிருந்து ஒரு பெண்கள் படை புறப்பட்டு வந்து விடும். அப்படி வந்தால் எக்ஸை மட்டுமல்ல நம்மையும் சேர்த்தல்லவா கஞ்சாக் காரனாக நினைப்பார்கள். என் மீது அன்பு வைத்திருக்கும் அதிபருக்கு முன்னால் இவ்வாறான ஒரு நிலையில் நிற்பதைக் கற்பனை பண்ணிப் பார்க்கக் கூட முடியாதவனாக இருந்தேன். ஒரே ஒரு தெரிவுதான் என் முன்னாலிருந்தது. அது - எக்ஸ் என்ன சொன்னாலும் செய்து விடுவது!
சிரித்துக் கொண்டேயிருந்த நண்பர்கள் மீது சீறிப்பாய்ந்தேன். எக்ஸ_க்குப் போதை தெளியவில்லை என்றால் என்னாகும் என்பதை எடுத்துச்; சொன்னேன். எக்ஸ் சொல்வதையெல்லாம் செய்து விட்டால் சற்று நேரத்தில் அடங்கி விடுவான் என்று அவர்களின் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினேன். உடன் பட்டார்கள். எக்ஸ் அசல் யதுகுல சிங்காக மாறியிருந்தார். மைதானத்தில் பயிற்சிக்குச் செல்வதற்கான உடையை அணியச் சொல்லிப் பணித்தார். எல்லோரையும் அரைக் காற்சட்டை அணிய வற்புறுத்தினார். அவர் சொல்லி முடிப்பதற்குள் நான் அரைக் காற்சட்டையும் ரீ ஷேர்ட்டும் அணிந்து தயாராகி விட்டேன். தான் உடற் கல்விப் பயிற்சிக்குரியவன் அல்லன் என்பதால் அரைக் காற்சட்டை அணிய மாட்டேன் என்று எனது ஊர் நண்பர் பிடிவாதம் செய்ததால் அவர் உடுத்திருந்த சாறினை தார்பாச்சி கட்ட அனுமதித்தார். “இவங் கொள்ளையில போவான் ராத்திரில போட்டு இப்பிடிக் கரச்ச படுத்துறான்... நான் சயினஸ்; கோர்ஸ்.. இவஞ் சொல்ற மாதிரியெல்லாஞ் செய்ய மாட்டேன்...” என்று இடக்குப் பண்ணிய மாமாவைச் சமாளிக்க நான் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எப்போதும் கிண்டல் அரங்குக்குத் தலைமை வகிக்கும் மாமா ஆடை மாற்றியே ஆக வேண்டும் என்று விடாப் பிடியாக நின்றார் புதிய யதுகுல சிங். மறந்தும் கூட நாங்கள் வழமையாகப் பயன்படுத்தும் கலைச் சொற்கள் எதுவும் அவரது வாயிலிருந்து வெளிவரவில்லை. யதுகுல சிங் எப்படிப் பேசுவாரோ அப்படியே அவர் பேச்சு அமைந்திருந்தது.
ஒருவாறு உடைகளை மாற்றிய பின் உயர வரிசையில் (ஒரு வரிசையில் மூவர்) எம்மை நிறுத்தினார். பினனர்; ‘லெப்ட் - ரைட்” போடச் சொன்னார். வேறு வழி தெரியவில்லைபோடத் தொடங்கினோம். இடையிடையே கிளம்பும் வெடிச் சிரிப்பையும் தாண்டி வியர்வை வழிந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல ஏறக்குறைய 30 நிமிடங்கள்! எங்கள் நல்ல காலம் - அவர் அருகிலிருந்த மைதானத்துக்கு எம்மைக் கொண்டு செல்லாமல் அறைக்குள்ளேயே இதனை நடத்தியது.
அடுத்த நாள் காலை கஞ்சாக் கோப்பி அவரை எப்படி மாற்றியது என்பதைச் சொன்ன போது எதுவுமே அறியாதது போல் ‘தன்னை அது ஒன்றும் பண்ணவில்லை’ என்று சாதித்துக் கொண்டிருந்தார். நாங்கள் பழைய படி எங்கள் இன்னோரன்ன பண்புகளோடு வளைய வந்தோம்.
இச்சம்பவம் நடந்து இன்று 25 வருடங்கள் கழிந்து விட்டன. நாங்கள் வௌ;வேறு திசைகளில் பிரிந்து விட்டோம். கஞ்சாவின் போதையால்தான் அன்றிரவு அவஸ்தைப்பட நேர்ந்தது என்று நண்பர்கள் இன்று வரை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஞாபகம் வரும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை யாரிடமாவது சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கவும் கூடும்.
கலாசாலை பயிற்சி முடிந்து ஊருக்கு வரும் போதுதான் பஸ்ஸில் வைத்து ஊர்ச் சினேகிதர் சொன்னார்: ‘கோப்பி கொண்டு வந்ததே நான்தான். எக்ஸ் குடித்தது கஞ்சாக் கோப்பியல்ல. சாதாரண கோப்பிதான்!’
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: