Wednesday, January 25, 2012

பனங்கொட்டை + பிலாக்கொட்டை


நீண்ட நாட்களாக வலைப் பூவில் புதிய பதிவுகளை இடவில்லை.


எழுதுவதற்கும் ஒரு மூட் வரவேண்டாமா? ஓர் உற்சாகம் இல்லையென்றால் எழுதுவது வீண் வேலை. அப்படி எழுதப்படுவதில் எந்த ரசனையும் இருக்காது.

“நீங்கள் எழுதுகிறீர்களோ இல்லையோ தினமும் உங்களது வலைப்பூவைப் பார்வையிடுகிறேன்” என்று ஒரு சகோதரி என்னை நேரில் கண்டபோது சொன்னாள்.

பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் புதிய பதிவுகளை எதிர்பார்த்து வந்து செல்கிறார்கள் என்பதையும் அறியக் கூடியாதக இருக்கிறது.

இன்றைக்கு ஏதாவது ஒரு புதிய பதிவை இடுவோம் என்று நினைத்துக் கொண்டு அவித்த பிலாக் கொட்டைகளை உரித்துச் சாப்பிட்ட படி கணினிக்கு முன்னால் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

எதுவும் தோன்றிவில்லை.

கை பிலாக் கொட்டைகளை உரித்து வாய்க்குள் செலுத்திக் கொண்டிருந்தது.

அட... பிலாக் கொட்டை பற்றி ஒரு பதிவை இடுவோமே... என்ற யோசனை வந்தது. இணையத்தை லேசாகக் குடைந்தேன்.

பலாக் கொட்டைதான் பேச்சு வழக்கில் ‘பிலாக் கொட்டை’யாகியிருக்கிறது.

வட பகுதியில் கற்பகதருவாகப் பனை மரம் கொண்டாடப்படுவதைப் போல தென்னிலங்கையின் கற்பகதரு பிலாதான். உங்களது காணிக்குள்ளேயே பிலாமரம் இருந்தாலும் அதை வெட்டுவதாக இருந்தால் பிரதேச செயலகத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது.

தென்னிலங்கை ஏழை மக்களின் பிரதான கறி பிலாக்காய். பிலாக்காயின் வகைகளுக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. கொழும்பிலும் அண்டிய பிரதேசங்களிலும் உள்ள எல்லா சந்தைகளிலும் ஓர் ஆச்சியோ கிழவரோ பிலாக்காய் பிளந்து சுண்டலுக்கு வேறாகவும் கறி சமைப்பதற்கு வேறாகவும் பிரித்து வைத்து விற்பனை செய்வதைக் காணலாம். பிலாக்காய்க் கறி எனக்கும் மிகவும் பிடித்தமானது. சாப்பிட அமர்ந்து பிலாக்காய்க் கறிக்குள் பிலாக் கொட்டை தேடுவதில் கவனம் செலுத்துவேன்.

இதோ நாளை பழுத்து விடும் என்ற நினையிலுள்ள பலாச் சுளைகளை எடுத்துச் சீனி போட்டு உம்மா சமைத்துத் தந்த கூழ் இன்னும் நாவில் இனிக்கிறது. பாஸ்ட் புட் காலத்தில் இது ஒரு கேவலமான விடயமாகத்தான் தோன்றும். அந்தக் கூழுக்கு இன்னும் நாக்குத் துடிக்கிறது. ஆனால் தாய்வீட்டிலும் சரி, மனைவியும் சரி செய்து தரமாட்டார்கள். ஏனென்றால் அது குடிக்கும் வயது போய்விட்டது. அதாவது சீனி வியாதி வந்தவர்களுக்கு அது “ஹராம்.”

இணையத்தில் தேடிய போது குருவியொன்றை மையமாக வைத்துச் சிறுகதை படைத்திருந்தார். அவரது தாயார் அந்தக் குருவியைப் பிலாக் கொட்டைக் குருவி என்று சொன்னாராம். பிலாக்கொட்டை அளவு சிறியதாக இருப்பதால்தான் அக்குருவிக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது.


பிலாக்கொட்டைக் குருவி

நான் நளீமியாவில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காரியாலய உதவியாளராக இருந்தவர் கௌஸ் நானா. மாணவர்களான எங்களை விட பன்னிரண்டு முதல் பதினைந்து வயது மூத்தவராக இருந்தவர். மிகவும் நட்பாகப் பழகுவார். எங்களோடு உதைபந்தாடுவார். “கஜூக் கொட்டை பிலாக்கொட்டை சைஸ_க்கு ஈந்துக்கிட்டு என்னா துள்ளு துள்ளுறீங்கடா...!” என்று எம்மைப் பார்த்துக் கிண்டலாகச் சொல்லுவார்.

பிலாக் கொட்டை சைஸ் என்பது மிகவும் சிறியது... அற்பமானது என்று அர்த்தப்படும்!

சிங்கள சமூகத்திடம் கேட்டால் பிலாக்காய் கொண்டு செய்யப்படும் பல சுவையான தின்பண்டங்களைப் பற்றியும் அதை விதம் விதமாகச் சமைப்பது பற்றியும் தகவல் தரக் கூடும்.

இணையத்தில் பிலாக்கொட்டை பற்றிக் கிடைத்த ஒரு குறிப்பு முக்கியமானது.

“தென்னிலங்கையில் உள்ளவர்கள் வடபுலத்தாரை “பனங்கொட்டைகள்” என்று கிண்டலாகச் சொல்வார்கள். வடபுலத்தார் தென்னிலங்கையரை “பிலாக் கொட்டைகள் என்பார்கள்.” இதில் இரண்டாவது வசனம் சொல்லும் தகவலை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

நண்பர்கள்.கொம் என்ற இணையத் தளத்தில் தமிழ் ஈழ சமையல் என்ற தலைப்பின் தர்ஷி என்ற நபர் தந்திருந்த ஒடியற் கூழ் தயாரிப்பது பற்றிய சமையல் குறிப்பு என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கி விட்டது. ஒடியல் பனங்கிழங்கிலிருந்து பெறப்படுவது. இனி நீங்கள் சமையல் குறிப்பைப் படியுங்கள்.

தேவையான பொருட்கள்:-

ஒடியல்மா 250 கி

செத்தல் மிளகாய் 100கி

பயிற்றங்காய்

பிலாக்கொட்டை

செய்முறை:-

ஒடியல்மாவை தண்ணீரில் குறைந்தது 6 மணி நேரம் ஊறவிடவும்;

மிளகாய் செத்தலை நன்றாக அரைத்து கூட்டுபோல் எடுக்கவும்

பின்னர் பயிற்றங்காய் பலாக்கொட்டை எல்லாத்தையும் சிறிது தண்ணீரில் உப்பு அளவாய் போட்டு அவிக்கவும், சிறிது நேரத்தின்பின் அரைத்த மிளகாயை போட்டு கலக்கிவிட்டு எல்லாம் அவிந்து இறக்க 5 நிமிடத்திற்கு முதல் ஒடியல் மாவின் தண்ணீரை வடித்து விட்டு ஒடியல்மாவை போட்டு கலக்கவும்.

குடிப்பதைக்கு பிலா இலையை பயன்படுத்தினால் மிகவும் சுவையாய் இருக்கும்.

000

பார்த்தீர்களா பனங்கொட்டையும் பிலாக்கொட்டையும் இணைந்தால் சுவையான கூழ் கிடைக்கும்! அதைப் பலா இலையில் ஊற்றிக் குடிக்கச் சொல்லியிருப்பது உச்ச ரசனை!

எச்சரிக்கை -

01. பிலாக் கொட்டையில் தோல் கடினமானது. அவித்த இருபத்தைந்து பலாக்கொட்டைகளுக்கு மேல் உரித்துச் சாப்பிடும்போது விரல் நகங்கள் பத்திரம்!

02. பிலாக்காய் மற்றும் பிலாக் கொட்டை பற்றி மேலும் தகவல்களை பின்னூட்டமாக இட்டீர்களானால் எல்லாவற்றையும் சேர்த்து எதிர்காலத்தில் ஓர் ஆய்வுக் கட்டுரை மாதிரிச் சரிப்பண்ணி வாசித்துக் காட்டினால் ஒரு பொன்னாடை போர்த்திக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். (யாரே எழுதப் படிக்கத் தெரியாத நாட்டார் பாடல்களைத் திருப்பித் திருப்பி எழுதி புத்தகங்களாகவும் கட்டுரைகளைகவும் வெளியிட்டுச் சிலர் வியாபாரம் செய்யும் போது நான் பிலாக் கொட்டைக் கட்டுரை எழுதினால் தப்பு என்று சொல்லமாட்டீர்கள்தானே!)

03. இந்தப் பதிவின் பின்னணியில் எந்த அரசியலும் கிடையாது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

9 comments:

dsdgsdg said...

ummatte solli parpom.. Pilak kotta kari kidaikuthandu...

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய சமையல் குறிப்பு! செய்து பார்க்க சொல்லுவோம் ! பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !

Lareena said...

வாய்விட்டுச் சிரிக்க வைத்த பதிவு. நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு சுவையான பதிவைத் தந்தமைக்கு நன்றி.

சிங்கள அன்பர்கள் "களுபொல் மாலு என்று(பெயருக்கும் பிலாக்கொட்டைக்கும் இடையில் சம்பந்தம் இல்லாவிட்டாலும்) பிலாக்கொட்டைக் கறி ஒன்று சமைப்பார்கள். அடடா! என்ன ஒரு ருசி தெரியுமா? ரெஸிப்பி மட்டும் இன்னும் கிடைக்கவே இல்லை. :(

பி.அமல்ராஜ் said...

//02. பிலாக்காய் மற்றும் பிலாக் கொட்டை பற்றி மேலும் தகவல்களை பின்னூட்டமாக இட்டீர்களானால் எல்லாவற்றையும் சேர்த்து எதிர்காலத்தில் ஓர் ஆய்வுக் கட்டுரை மாதிரிச் சரிப்பண்ணி வாசித்துக் காட்டினால் ஒரு பொன்னாடை போர்த்திக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். (யாரே எழுதப் படிக்கத் தெரியாத நாட்டார் பாடல்களைத் திருப்பித் திருப்பி எழுதி புத்தகங்களாகவும் கட்டுரைகளைகவும் வெளியிட்டுச் சிலர் வியாபாரம் செய்யும் போது நான் பிலாக் கொட்டைக் கட்டுரை எழுதினால் தப்பு என்று ///

என்ன கொடும சார் இது... என்கையா இருந்து இந்த குசும்புகள் எல்லாம் உங்களுக்கு வருகுது... புரியல.. ஆமா, அதில என்ன பிழை இருக்கு.. நாங்க எல்லாம் சேர்ந்து உங்களுக்கு ஒன்னு என்ன ரெண்டு மூணு சால்வ போடுவோமில்ல... நாங்க யாரு...

sutharmamaharajan said...

paza enbathai neengazum enn piza enru ezuthugreergaz?ungazai thodarnthu ezzorum piza enre ezuthi iruppathai kavanikkavum.

AH said...

நீண்ட நாளா என் Google Reader உங்களது பதிவ எதிர்பாத்து இருந்தன். ஆனாலும் இப்பதான் “ஆபிதீன் பக்கங்கள்’ எழுத்தாளர்கள் (Links) வழியா வந்து படிந்தேன். பிலாக்கா பந்தி அருமையான ஆய்வு... படிக்க ஆரம்பிக்கு போது நினைவில் வந்தது.. உரிக்கும் போது நகத்தின் இடையில் மாட்டிய கோதேடு அவஸ்த்தபடுவதுதான்.

Anonymous said...

through facebook இதை வாசித்தேன் கொஸ்அட்டை பற்றி எழுதியிருந்தீர்கள் இன்ரறெஸ்ரிங்.Horana- இருந்தோம் 17 வருடம் ரிப்பிக்கல் சிங்கள ஊர் நிறைய வித்தியாசமாக சமைத்துள்ளோம். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

பிஞ்சு பிலாக்காய் சிறிதாகக் கொத்தி, வாழைப்பூ வறை செய்வது போல செய்வது - பொலேஸ் என்பது . பலாக்கொட்டை தோலுரித்து அவித்து உரலில் துவைத்து தேங்காய்பூ- சீனிபோட்டு துவைத்து உண்பது மிக மிக உருசி.
Vetha. Elangathilakam.

தளவாடி said...

பிலாக்காய் ட வெளி தோல் கரடுமுரடா இருக்கும் .ஆனால் உள்ளுக்க சுவையான சுளை இருக்கும்..எதையும் வெளிய பாத்து எடை போடா கூட என்டதுக்கும் பிலாக்காய் ஒரு நல்ல எடுத்து காட்டு..