Sunday, February 5, 2012

மீலாதுன்னபி தினம்



நெருப்பெடுக்கும் பாலை நிலம் படுத்திருக்கும்
நீசர்களும் பூசல்களும் நிறைந்திருக்கும்
இருட்கிடங்காய் வரலாறு சித்தரிக்கும்
இதயத்து நிலப்பரப்பு மதுவெறிக்கும்
உருவத்து வழிபாடும் உயிர்க் கொலையுமாக
உன்மத்தங் கொண்டோர்கள் உலவுங்காலை
அருட்பிழம்பாய் அவதரித்தார் முஹம்மத் இந்த
அகிலமெலாம் அருள் ஒளியாய் ஆனதன்றே

குலப்பெருமை கொண்டிருந்தார் - கோஷ்டியாகி
குருதியிலே குளித்தெழுந்தார் பிறந்ததோ பெண்
குலக்கொழுந்தே யானாலும் குழியிலிட்டார்
கொடுமைகளே கொள்கையென் றார்த்தாரிடையே
வலம் வந்தார் வள்ளல் நபி வாஞ்சை சொன்னார்
வல்லவனில் தக்வாவைக் கொண்டார் மட்டும்
நலங்கண்டார் என்றுரைத்தார் நங்கையர்தம்
நலங்காத்தார் விதவைக்கும் வாழ்வு தந்தார்

கல்லெறிந்தார் கஸ்தூரிமேனி ரத்தக்
காடாக - ஆனாலும் கருணை செய்தார்
பொல்லாத மூதாட்டி குப்பை போட்டாள்
பூமேனி அழுக்காகப் பொறுமை காத்தார்
கல்லாத காட்டரபி கைகள் தொட்டுக்
கடுமுழைப்புக் காகநல் வாழ்த்துச் சொன்னார்
வல்லாரால் வறியவரின் வாழ்வு ஓங்க
வாழ்வியலின் தத்துவங்கள் விதந்துரைத்தார்

பெற்றெடுத்த அன்னையிடம் பாலருந்தும்
பாக்கியத்தை இழந்திருந்தார் - அநாதையாகி
மற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்
மந்தைகளை மேய்த்திருந்தார் - நடத்தையாலே
சுற்றத்தார் சுமந்திருந்தார் - சுகம் வெறுத்தார்
சோதனைகள் சந்தித்தார் - சளையா இந்த
கற்றறியா நபியின் முன் காலம் தோற்றது
கையசைவில் உலகசையக் காத்துக் கிடந்தது

பொன்மலையைத் தனதாக்கி வாழ்ந்திருக்கலாம் - நபி
பார்முழுக்க சுல்தானாய் ஆண்டிருக்கலாம்
தன்வயிற்றில் கல்வைத்துப் பசி விரட்டினார்
தேடிவந்த சுகபோகம் தூரவிரட்டினார்
சின்னஞசிறு பாய்த்துண்டில் அமர்ந்த மனிதரால்
சிந்து நதிக்கப்பாலும் இஸ்லாம் துளிர்த்தது
மன்னாதி மன்னரெல்லாம் தோன்றக் கூடும்
மாநபிபோல் உலகு வெல்ல யாரால் கூடும்?

(மிகநீண்ட காலத்துக்கு முன் முகம்மது (ஸல்) அவர்களைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கவிதையைப் படித்திருந்தேன். அக்கவிதையின் உந்துதலால் பிற்காலத்தில் நான் எழுதிய கவிதை இது)


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Lareena said...

மிகுந்த நெகிழ்ச்சியூட்டிய கவிதை. மாநபியின் மகத்துவத்தை மிக அழகாய் வடித்துள்ளீர்கள், பகிர்வுக்கு நன்றி Sir.

AH said...

சிறப்புமிக்க தினத்தில் சிறப்பான கவிதை.. நன்றிகள் ...
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
ஸல்லல்லாஹ_ அலைஹிவஸல்லம்
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹ_ அலா முஹம்மது
யாரப்பீ ஸல்லி அலைஹி வஸல்லிம்!!

புல்லாங்குழல் said...

/சின்னஞசிறு பாய்த்துண்டில் அமர்ந்த மனிதரால்
சிந்து நதிக்கப்பாலும் இஸ்லாம் துளிர்த்தது
மன்னாதி மன்னரெல்லாம் தோன்றக் கூடும்
மாநபிபோல் உலகு வெல்ல யாரால் கூடும்?/ நெஞ்சை அள்ளிய அழகு வரிகள். அல்ஹம்துலில்லாஹ்.