Monday, March 5, 2012

இலங்கைக் கிரிக்கற் - தேவை புதிய இரத்தம்!


நேற்று அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கோண கிரிக்கட் முதலாம் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிற்று. இத்தொடரில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து ஏற்கனவே மூன்று ஆட்டங்களில் வென்றதால் இலங்கை அணி இப்போட்டியிலும் வெற்றி வாகை சூடும் என்ற இலங்கை இரசிகர்களின் பெரும் நம்பிக்கை வெறும் பதினைந்து ஓட்டங்களில் சரிந்து விழுந்தது பெரும் துரதிர்ஷ்டமாகும்.


‘கிரிக்கட் பை சான்ட்ஸ்’ என்று ஒரு வார்த்தை வழக்கில் உண்டு. உண்மையும்தான்!

ஆனால், இலங்கைக்கு எதிராக ஆடும் ஏனைய நாட்டு அணி வீரர்கள் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசித் தள்ளும் ஒரே ஆட்டத்தில் அதே மைதானத்தில் நம்மவர் எவ்வளதான் பலம் சேர்த்து அடிக்க முயன்றாலும் பல வேளைகளில் பந்து பவுண்டரிக் கோட்டைத் தாண்டுவதில்லை. சில வேளை ஒரு சிக்ஸர் இல்லாமல் வெற்றி பெற்று விடுவது வேறு விசயம்.

கிரிக்கற் ஆடும் பல முன்னணி நாடுகளின் அணிகளில் ஒவ்வொரு ஆட்டத்திலும் புதிய முகங்கள் வந்து கொண்டேயிருப்பதைக் காண்கிறோம். நமது நாட்டு அணியில் இடம்பெற்று ஒரு வீரர் ஒரு சதத்தைப் பெற்று விட்டால் முழு நம்பிக்கையையும் அவரிலேயே வைக்கத் தொடங்கி விடுகிறோம். அவர் பின்னால் வரும் ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவரது அரசியல் பின்னணி அவரை அவரது பென்சன் வயது வரை அணியில் வைத்திருக்க உதவும். அவர் மிகச் சிறந்த வீரராக வளர்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் ஒரு வீரரோ அல்லது அவரது குடும்பமோ மாற்று அரசில் காரணத்தால் விரைவில் காணாமல் போய்விடுவதும் உண்டு.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு வந்த நமது அணி இரண்டு மூன்று முறை சொதப்பி விட்டு வந்ததை நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் ஆட்டக்காரராக வரும் ஒரு வேற்று நாட்டுக் கிரிக்கட் வீரர் கடைசி வரை நின்று துடுப்பாடும் வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் கடைசிப் பந்து வரை உடற்பலம் இழக்காமல் ஆடுவார். நமது அணி வீரர் அவ்வாறு நின்று ஆட நேரும் போது இறுதியில் அவரைக் கைத்தாங்கலாக இருவர் பிடித்தத் தூக்கி வர வேண்டியிருக்கும்.

நமது நாட்டின் அதிசிறந்த பந்து வீச்சாளரை எதிர் கொள்ளும் எதிரணியின் கடைசி ஆட்டக்காரரின் முகக் குறிப்பு, ‘சரிதான் போடய்யா... இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன்!’ என்பது போல் இருக்கும். நமது அணியின் கடைசித் துடுப்பாட்ட வீரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். நாமாகவே நமக்குத் தெரிந்த எல்லாப் பிரார்த்தனைகளையும் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

இவ்வாறெல்லாம் நான் சொல்தால் நமது அணி ஒன்றும் சோதா அணியும் அல்ல! இந்தக் குறைபாடுகக்கு முழுக்கவும் அவர்களே காரணகர்த்தாக்களும் அல்லர்!

நீண்ட காலமாக நமது கிரிக்கற் அணித் தேர்விலும் பயிற்சியிலும் மாற்றங்கள் ஏதும் நிகழாமல் இருப்பது வெறும் பத்துப் பதினைந்து பந்துகளுக்குத் தோற்றுத் திரும்பும் அவலத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த மாதம் பங்களாதேஷில் பிரிமியர் லீக் 20:20 ஆட்டங்கள் நடந்ததைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன். அதில் எல்லா அணிகளிலும் ஏனைய நாட்டு வீரர்களுடன் இணைந்தாடிய பங்களாதேஷ் வீரர்கள் தமது அதி உச்சத் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். பங்களாதேஷ் ஒரு சிறந்த கிரிக்கற் அணியை இதிலிருந்து தேர்ந்து எடுக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.

பங்களாதேஷ் போன்ற ஒரு நாடு தனது தேசத்துள் எல்லா மாகாணங்களின் கிரிக்கற் வீரர்களில் இருந்து ஒரு சிறந்த அணியைத் தேர்ந்தெடுக்க முடியுமானால் இலங்கை என்ற எதிர்கால ‘ஆசியாவின் அதிசய’த்தினால் ஏன் முடியாது என்ற ஒரு கேள்வி என்னுள் எழுந்தது.

கிரிக்கற் ஆடும் திறனும் ஆர்வமும் ஆசையும் சக்தியும் படைத்த பல நூறு திறமைசாலிகள் வாய்ப்பு இல்லாமல் நாட்டின் மூலை முடுக்குகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு வழங்க பிரிமியர் லீக் போட்டிகளை நடத்தியாக வேண்டும்.

ஒன்பது மாகாணங்களிருந்தும் தலா ஆறு அல்லது ஏழு வீரர்களைத் தெரிவு செய்து அந்த அணிகளில் வெளிநாட்டு வீரர்களையும் இணைத்து ஆட விடுவோமானால் ஓர் அற்புதமான கிரிக்கற் அணி நிச்சயமாக நமக்குக் கிடைக்கும்.


அதில் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வீரர்கள் தெரிவாவார்கள். அதில் தமிழர்களும் முஸ்லிம்களும் இடம்பெறுவார்கள். (தெமள மினிஸ்ஸூ இந்தியாவட்ட சப்போர்ட் கரணவா.. முஸ்லிம் மினிஸ்ஸூ பாக்கிஸ்தான்ட சப்போர்ட் கரணவா...) தமிழர்கள் இந்தியாவுக்குத் தமது ஆதரவை வழங்குகிறார்கள். முஸ்லிம்கள் பாக்கிஸ்தானுக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்ற பெரும்பான்மையின் குத்தல் வார்த்தைகக்கு அப்போது இடமிருக்காது.

அதே வேளை நாட்டின் ஏனைய பிராந்தியங்களிலிருந்தும் அரசாங்கப் பெரும் பதவிகளில், அரசியல் காக்காய்களின் பிள்ளைகள், உறவினர்கள், வேண்டப்பட்டவர்கள் என்றில்லாமல் சாதாரண வெற்றிலை பாக்குக் கடை நடத்தும் ஒருவரின் திறமை மிக்க ஒரு பையனும் கூட அணியில் இடம் பெறுவான்.

ஒரு பிரிமியர் லீக் போட்டியை நடத்துவது சுலபம். அதற்குள் ஆடுவதற்குத் தெரிவாகும் நபர்களும் பகிரங்கமாக - எவ்வித முறைகேடுகளுமில்லாமல் தெரிவாக வேண்டும். அப்படித் தெரிவாகும் நபர்களுக்கு தேசிய அணியில் இடம் கிடைப்பதில் எவ்வித இன, மத, வர்க்க, அரசியல் பாகுபாடும் இல்லாமல் இருக்க வேண்டும்.

பிரியமியர் லீக் மூலம் தெரிவாகும் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் கிரிக்கற் பயிற்சி போலவே - இராணுவத்துக்கு வழங்கப்படும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். தொடர்ந்தும் அதி திறமையை வெளிப்படுத்துவோரைத் தவிர ஏனையோருக்குத் தேசிய அணியில் ஆட ஐந்து வருடங்களுக்கு மேல் அனுமதிக்காமல் திறமை காட்டும் புதியவர்களால் அவ்விடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

அப்படி இல்லையென்றால், ‘தெமள மினிஸ்ஸூ இந்தியாவட்ட சப்போர்ட் கரணவா.. முஸ்லிம் மினிஸ்ஸூ பாக்கிஸ்தான்ட சப்போர்ட் கரணவா...’ என்று பெரும்பான்மையினர் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டேயிருக்க, வெறும் பத்து அல்லது பதினைந்து ஓட்டங்களுக்கு இலங்கை அணி தோற்று வருவதைத் தவிர்க்க முடியாது போகும்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Shaifa Begum said...

”நமது அணி வீரர் அவ்வாறு நின்று ஆட நேரும் போது இறுதியில் அவரைக் கைத்தாங்கலாக இருவர் பிடித்தத் தூக்கி வர வேண்டியிருக்கும்.” ஹா.....ஹா... சரியாகச் சொன்னீங்க சேர்..

என்னால் சிரிக்கவும் முடியவில்லை.. சிந்திக்கவும் முடியவில்லை...
திறமையின் அடிப்படையில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று
போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படும் இடத்து இந்த நிலமை வராது..

”அப்படி இல்லையென்றால், ‘தெமள மினிஸ்ஸூ இந்தியாவட்ட சப்போர்ட் கரணவா.. முஸ்லிம் மினிஸ்ஸூ பாக்கிஸ்தான்ட சப்போர்ட் கரணவா...’ என்று பெரும்பான்மையினர் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டேயிருக்க, வெறும் பத்து அல்லது பதினைந்து ஓட்டங்களுக்கு இலங்கை அணி தோற்று வருவதைத் தவிர்க்க முடியாது போகும்!”

sinnathambi raveendran said...

கிரிக்கட்டையும் நீங்க விட்டுவிடவில்லை.ஆனால் நல்ல கருத்தை சொல்லிவைத்தீங்க


வதிரி.சி.ரவீந்திரன்

Lareena said...

மிக அருமையான பதிவு. இந்தப் பதிவு ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ மொழிபெயர்க்கப்பட்டு, தேசிய நாளிதழ்களில் பிரசுரமாகணும். அப்பவாச்சும் சனம் திருந்துதான்னு பார்ப்போம், ஹ்ம்! :(