தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த பன்னூலாசிரியரும் பத்திரிகையாளரும் நாடகத் துறை விற்பன்னருமான மானா என அழைக்கப்படும் மானா எம். மக்கீன் அவர்களுக்கு கடந்த 29.05.2012ல் 75 வயது நிறைவடைகிறது.
என்னை முதன் முதலில் மேடை நாடக நடிகனாக்கியவர்.
மானாவின் 75வயது நிறைவு குறித்து பத்திகைகளில் தகவல்களும் செய்திகளும் வாழ்த்துக் கவிதைகளுமாகத் தூள் கிளம்புகிறது. தொலைக் காட்சிகள் அவரை அழைத்துப் பேட்டி எடுத்து கௌரவித்திருக்கின்றன.
சொல்லப்போனால் ஓர் அரசியல்வாதியின் பிறந்த நாளுக்கும் மேலான கௌரவம் மானாவுக்குக் கிடைத்திருப்பதானது படைப்பாளிகளுக்குக் கிடைத்த கௌரவம் அல்லவா?
மூத்த எழுத்தாளர்களைச் சந்தித்துக் கதைத்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. அப்படி அடிக்கடி சந்தித்துக் கதைத்துக் கொண்டிருப்பவர்களில் மானாவும் ஒருவர்.
வாழ்த்துத் தெரிவிப்பதற்காக நேற்று அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தேன். இன்னும் ஒரு 18 வயது இளைஞனின் உற்சாகத்தோடு பேசினார்.
இம்முறை அவர் பிறந்த நாளைக் கொண்டாடிய விதம் நெஞ்சைத் தொடுவது.
மாக்கொளை முதியோர; இல்லத்துக்குச் சென்று அங்கிருந்த முதியோருக்கு ‘நாலடி சீர்’ உணவு வழங்கித் தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார;. ‘நாலடி சீர்’ உணவு என்பது இலங்கை முஸ்லிம்களின் பாரம்பிய விசேட உணவு.
கடந்த வருடம் காயல் பட்டின உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் “சேவைச் செம்மல்” விருது பெற்ற மானாவுடன் கவிஞர் அல் அஸூமத், நான், என்.எம். அமீன், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன்
இந்த ஐடியாவை மானாவுக்குக் கொடுத்தவர் அவரது நிழல் என்று அவர் அடிக்கடி குறிப்பிடும் அவரது மனைவி. மலேசியாவில் வைத்திய மேற்படிப்பில் ஈடுபட்டிருக்கும் அவரது புதல்வி டாக்டர் அஞ்சானா மக்கீன் பிரதீம், சிங்கப்பூரில் இருக்கும் அவரது புதல்வன் அஸீம் அகமது ஆகிய இருவரும் தந்தையாரின் முதியோர் இல்லப் பிறந்த நாள் மகிழ்வுப் பகிர்வில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
“முடியுமானவர்கள் தமது பிறந்த நாளைப் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லங்களில் வாழும் முதியோருடன் இணைந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுவும் தமது பிள்ளைகளையும் அவ்வேளை கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று உணர்ச்சி வசப்பட்டார் மானா.
மானா ஒரு நல்ல முன்னுதாரணம்.
அவர் நூறாண்டு வாழ்ந்து தமிழ்ப் பணி செய்ய எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
பெருமதிப்புக்குரிய மானா மக்கீன் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
தகவலுக்கு நன்றி Sir.
Post a Comment