Sunday, February 23, 2014

குண்டுச் சட்டிக்குள் குதிரைகள் ஓடும் கும்பகோண மாநாடு!


பகுதி - 01

இம்மாநாடு பற்றிய எனது முகநூல் குறிப்பைக் கடந்த வார தினகரன் வார மஞ்சரி பிரசுரித்திருந்ததையடுத்துச் சில நண்பர்கள் இதுபற்றிய உங்கள் கருத்தை எழுத  வேண்டும் என்று வைத்த வேண்டுகோளுக்கமைய இதனை எழுதுகிறேன்.

இஸ்லாமிய இலக்கியக் கழகமே உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தி வந்தது. 1999 வரை செய்யிது முகம்மது ஹஸன் போன்ற பெருந்தகைகள் உயிருடன் இருந்தவரை எல்லாம் சுபமாகவே இருந்தது. அம்மாநாடுகளில் ஓர் ஆலோசகர் வட்டத்தில்தான் கவிக்கோ வைக்கப்பட்டிருந்தார்.

2007 மாநாடு முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திலேயே நடத்தப்பட்டது. சரியாக இயங்கி வந்த இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அதிகாரத்தைக் கவிக்கோவும், இதாயத்துல்லா என்கிற காங்கிரஸ் அரசியல்வாதியும் தனிப்பட்ட கனவுகளோடு நுழைந்து கைப்பற்றினர். திமுகவும் காங்கிரஸூம் கூட்டணியில் இருந்த காலம் அது. இதாயத்துல்லாவுக்கு ஒரு நாடாளுமன்றக் கதிரைக் கனவு இருந்தது. கவிக்கோவுக்கு ஒரு சட்டசபை அங்கத்தவர் கனவு. இப்படித்தான் தமிழகத்தில் சந்தித்த நண்பர்களது கருத்தையும் மாநாடு சென்ற போக்கையும் அவதானித்து என்னால் முடிவுக்கு வரமுடிந்தது.

இதாயத்துல்லாவின் கனவில் மண் விழுந்தது. கவிக்கோவின் பாதிக் கனவு நிறைவேறிற்று. அம்மாநாட்டின் பின் வக்ஃ;ப் சபைக்குத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். உள்ளே கச்சேரி குழம்பியது. 'இனிமேல் மாநில மாநாடுதான், உலக மாநாடு இல்லை' என்று அறிவிப்பு வந்தது. ஒன்றோ இரண்டு மாநில மாநாடுகள் நடைபெற்றன. மீண்டும் இஸ்லாமிய இலக்கியக் கழகம் கூடியது. இதாயத்துல்லா வெளியேற்றப்பட்டார். கும்பகோண மாநில மாநாடு அறிவிக்கப்பட்டது.

என்னுடைய அறிவுக்கும் கணிப்புக்கும் எட்டியவரை இஸ்லாமிய இலக்கியம் சார் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களான இலங்கையராக டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன், மானா மக்கீன், எஸ்.முத்துமீரான் ஆகிய மூவரைத்தான் குறிப்பிட முடியும்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அதிகாரத்தைக் கையில் எடுத்தக் கொண்டதும் கடந்த காலங்களில் தமது சொந்தப் பணம், நேரம் என்று பாராது செலவழித்து அர்ப்பணிப்புடன் இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தத் துணை நின்ற தமிழகத்தவர்களையே கூடக் கவிக்கோ கழட்டித்தான் விட்டிருந்தார். 2007ல் கழகத்தின் முன்னாள் பொருளாளர்; ஹாஜி. ஏ.வி.எம். ஜாபர்தீன் அவர்களைத் தூரப்படுத்தி வெற்றுக் காசோலையில் கையெழுத்துக் கேட்ட கதைகள் எல்லாம் உள்ளன.

எனவே, அனுபவசாலிகளைத் தூரப்படுத்தி விட்டுத் தம்முன்னால் நான்காக, ஐந்தாக மடிந்து, பணிந்து நிற்பவர்களை கவிக்கோ இணைத்துக் கொள்ள நினைத்திருக்கலாம்.

2007ல் வெளிநாட்டுப் பேராளர்களுக்கு ஏற்பட்ட அவமரியைதை காரணமாகத் தனக்கு வழங்கப்படவிருந்த கௌரவத்தையும் விருதையும் பெற்றுக் கொள்ளாமல் வெளியேறியவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன். இதைக் கவிக்கோ மனதில் கொண்டு அவரை அழைக்காமலும் இணைப்பாளராக்காமலும் தவிர்த்திருக்கலாம் என்றே கருதுகிறறேன்.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று உணர்கிறேன். இலக்கிய உலகில் காப்பியங்களுக்கென்று எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. இன்றைய தலைமுறைக்கு அது ஒவ்வாது போனாலும் கூட காப்பியங்களே மொழியில் செல்வங்களாக மொழி அறிஞர்கள் மத்தியில் கருதப்படுகின்றன. இன்றைய நிலையில் தமிழில் பத்துக் காப்பியங்களை எழுதிய உயிர்வாழும் ஒரேயொரு ஜீவன் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மட்டுமே. கவிக்கோ 'பாலை நிலா' என்று ஒரு காப்பியத்தைத் துவங்கி 15 வருடங்களாக இன்னும்தான் எழுதுகிறார். 2002ம் ஆண்டு எமது மாநாட்டு மலரில் அக்காப்பியத்தின் முகவுரைப் பகுதி இடம்பெற்றிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு புத்தகச் சந்தை விழாவில் அதன் ஓர் அத்தியாயம் வெளியானது. இந்த மாநாட்டிலும் அதே 'ட்ரெயிலர்' ஓட்டப்பட இருப்பதாகத்தான் அறிய வருகிறேன். எனவே ஜின்னாஹ்வின் காப்பியத் தகுதி அவருக்கு உள்ளார்ந்த ஒரு உறுத்தலாக இருக்கலாம் என்றும் எண்ண இடமுண்டு.

கவிக்கோவையே குறை சொல்வதா என்று சிலருக்கு வியப்பு வரக்கூடும். சிலர் என்னையே ஒரு கிண்டல் பார்வை பார்க்கக் கூடும். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், கண்ணியமான பதவியில் இருப்பவன் சுயநலவாதியாக இருக்கமாட்டான், ஓர் ஆலிம் அல்லது வசதிபடைத்தவன் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பழக்கப்பட்டுப் போன சமூகத்திலிருந்து இந்தச் சிந்தனைகள் எழுவது வெகு சாதாரண விடயமே. விமர்சிப்பது என்றால் பேசக் கூசும் வார்த்தையில் அரசியலவாதிகளை மட்டுமே திட்டிப் பழகிப்போனவர்கள் நாம். அரசியல்வாதிகளைத் தவிர ஏனைய 'முக்கியத்துவம் பெற்றவர்கள்' அனைவரும் புனிதர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களும் தம்மை சமூகத்தின் மத்தியில் அவ்வாறுதான் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் பிராந்தியங்களில் நடக்கும் மாநாடுகள் இரண்டு நிர்வாகங்களின் கீழ் இயங்குகின்றன. ஒன்று இலக்கியக் கழகங்கள். மற்றது, மாநாடு நடத்தும் பிரதேச முக்கியஸ்ர்களும் பிரதேசத்தவரும். பிரதேசத்தவரே பணத்தை வழங்குகிறார்கள்.  இலக்கியக் கழகங்கள் ஏனைய செயற்பாட்டில் ஈடுபடுகின்றன.

கும்பகோணத்தில் நடக்கும் பிராந்திய மாநாட்டுக்கு இங்கே ஓர் இணைப்பாளரை நியமித்து 15 பேரை அழைத்து வாருங்கள் என்று கூறுவதைத் தப்பாகக் கொள்ள முடியாது. ஆனால் அது உலக மாநாடாக மாற்றிய பிறகு இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்களைக் கட்டுப்படுத்த முயல்வது மிகவும் தவறானது. பெருந்தொகையினரைச் சமாளிக்க வக்கற்றவர்கள் எதற்காக உலக மாநாடு நடத்த ஆசைப்பட வேண்டும்?

இதை இலங்கை இணைப்பாளர் கும்பகோணத்தாரிடம் கேட்டிருக்க வேண்டும். உலக மாநாடாக மாற்றிய பிறகு குறைந்தது 50 பேராவது பங்குபற்றக் கோரியிருக்க வேண்டும். மறுத்திருந்தால் 'நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள்' என்று சொல்லி விட்டிருக்க வேண்டும். 'உமக்கும் நீர் சிபார்சு செய்யும் நால்வருக்கும் பொன்னாடை, விருது' என்ற வார்த்தைகளுக்கு மயங்கிப் போவதால்தான் இவ்வாறான இலக்கியச் சீரழிவும் கேவலமும் ஏற்படுகின்றன. ஒரு பொன்னாடையையும் விருதையும் காட்டினால் எப்படி வேண்டுமானாலும் இவர்களை மேய்க்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள்.

இலங்கையர் புறப்பட்டுச் செல்ல ஒரு மாதத்தின் முன்னரே இது உலக மாநாடு என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. எந்த மாநாடாக இருந்தாலும் இணைப்பாளர் இதுபற்றிய அறிவித்தலை பொது ஊடகங்களுக்குத் தந்திருக்க வேண்டும். யாருக்கும் தெரியாமல் தானும் தனக்குப் பிடித்தவர்களும் சென்று இலங்கையின் இஸ்லாமிய இலக்கியத்தைப் பிரதிநிதிப்படுத்துவது தர்மமானதா?

இது வரை இலங்கைக்கு வெளியில் நடந்த மூன்று மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரேயொரு மாநாட்டில் மட்டுமே கவிதை வாசித்திருக்கிறேன். இலங்கையில் நடந்த மாநாட்டின் செயலாளராகச் செயற்பட்ட போதும் கவிதை படிக்கவோ ஓர் அரங்குத் தலைமை வகிக்கவோ ஆசைப்பட்டதில்லை. ஒரு முறை நமக்குக் கிடைத்த வாய்ப்பு மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். மலேசிய மாநாடு பற்றி நான் விமர்சிக்காமல் இருந்திருந்தால்  நஜ்முல் ஹூஸைனுக்கும் பொத்துவில் அஸ்மினுக்கும் கவிதை படிக்கும் வாய்ப்புக் கிட்டியிராது. காயல்பட்டின மாநாட்டின் இணைப்பாளர்களான ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் மானா மக்கீனும், பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஏ.இக்பால் அவர்களைச் சிபார்சு செய்து அவருடைய 'தமிழ்மாமணி' விருதைப் பெற்று வந்த இங்கே கையளித்தார்கள்.

இரண்டு தினங்களாக கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் புகைப்படமொன்றை இணையத்தில் தேடினேன். கவிஞர் திலகம், ஆசிரியர் திலகம் என்றெல்லாம் பெயர் பெற்ற அதிசிறந்த ஒரு கவிஞனின் ஒரு முன்னோடியின், ஓர் உண்மையான அறிஞனின்,பல நூல்களை எழுதிய ஒரு பெருந்தகையின் இணையத்தில் இல்லை என்றதும் பெரும் கவலை மனதில் குடிகொண்டது.

ஆனால் யாரோ எழுதிய பாட்டுக்களைத் தொகுப்புப் போட்டவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்ற ஹோதாவில் எல்லா மாநாடுகளிலும் தம்மை முற்படுத்திக் கொண்டு பாராட்டுப் பெறவும் அரங்கத் தலைமை வகிக்கவும் பொன்னாடை போர்த்திக் கொள்ளவும் யாருக்கும் தெரியாமல் பின் கதவுகளுக்குள்ளால் ஓடிப் புகுந்து கொள்கிறார்கள். மற்றொருவருக்கு வாய்ப்புக் கிடைக்க விடாமல்  தாமே ஆய்வரங்குகளில்  தலைமை வகிக்க விரும்புகிறார்கள். வெளியிலே பெரும் கண்ணியவான்களாகத் தெரியும் சிலரின் உள்ளார்ந்த ஆசைகள் எத்தனை கேவலமானதாக இருக்கிறது என்பதற்கு ஆகக் குறைந்தது இவ்வாறான விழாச் செய்திகளையாவது வெளியில் விடாமல் அடக்கி வைக்கிறார்கள், அதற்குத் துணை செல்கிறார்கள் என்பதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ஒரு சிலரின் 'பொன்னாடை, விருது' என்றே மாறிப்போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தக் கேவலங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இளைய தலைமுறை வெறுத்துப் போயிருக்கிறது. அவர்கள் மாற்றங்களை விரும்புகிறார்கள். தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் பத்து அல்லது பதினைந்து வீதமளவே மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் பொது இலக்கியப் போக்குகளுடன் ஓரளவாவது இணைந்து போகாமலும் அவற்றில் ஐம்பது வீதமாவது புதிய தலைமுறையைச் சேர்த்துக் கொள்ளாமலும் தொடர்ந்து இருட்டுக்குள் கூடி குருட்டுக் கோழி பிடித்துக் கொண்டிருப்பின் ஒரு கட்டத்தில் வேடிக்கையும் விநோதமும் மிகுந்த கற்காலக் கூட்டமாகவே எதிர்கால வரலாறு நம்மைப் பதிவு செய்யும்.

கடந்த 16, மற்றும் இன்று 23 - 02 - 2014 ஆகிய தினங்களில் வெளியான தினகரன் பத்திரிகையில் இடம் பெற்ற எனது கருத்துப் பதிவு.

குறிப்பு - இது முழுமையான கட்டுரை. ஆனால் இம்மாநாடு பற்றிய மற்றொரு தொகுப்பு எனது வலைத் தளத்தில் விரைவில் பதிவேற்றப்படும். அதற்காகவே பகுதி - 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: