Wednesday, March 4, 2015

நீ சொன்னால் காவியம்!


- 14 -

ஒருவர் கருத்து ஒன்றை வெளியிடுகிறார். அது சரியானதாக, பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது எனில் சகலதும் சுபமே!

ஒருவர் கருத்து ஒன்றை வெளியிடுகிறார். அது சரி என ஒருசிலரும் பிழை என மற்றும் சிலரும் சொல்லுகிறார்கள். சரி அல்லது பிழைக்கான காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. காரணங்களைப் படித்து முடிக்கையில் அது உண்மையில் சரியான கருத்தா இல்லையா என்பது தெளிவாகும். அந்தத் தெளிவின் அடிப்படையில் சரியைச் 'சரி' என்றும் பிழையைப் 'பிழை' என்றும் ஏற்றுக் கொண்டால் சகலதும் சுபமே! பிழையைச் 'சரி' என்றும் சரியைப் 'பிழை' என்றும் வாதிட ஆரம்பித்தால் அதன் முடிவு வினையாகும்.

இயல்பாகவே சரியைச் 'சரி' என்றும் பிழையைப் 'பிழை'யென்றும் உணர்த்தும் மனச் சாட்சி மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஒரு விடயத்தின் ஆழ, அகலங்கள் அல்லது அதன் பின்னணி தெரியாமல் பேசப்படும் வார்த்தைகளுக்கு அப்பால் - இந்த மனச்சாட்சி சரியாகவே இயங்கும்.

ஒரு பண்பட்ட மனம், ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பட்ட மனம், அனுபவத்தில் பழுத்த மனம் சரியைச் 'சரி' எனவும் பிழையைப் 'பிழை' எனவும் ஏற்றுக் கொள்ளும். இந்த மனப்பாங்கு கொண்டவர்கள் சரியைச் 'சரி' என்று சொல்வதோடு தமது ஈடுபாட்டை நிறுத்திக் கொள்ளலாம். 'மிக அருமையான கருத்து' என்ற ஒரு பாராட்டு வார்த்தையுடனும் முடித்துக் கொள்ளலாம். பிழையைப் 'பிழை' என்று சொல்லியோ அதற்கான காரணங்களை முன் வைத்து விட்டோ நிறுத்திக் கொள்ளலாம்.

ஒரு சிலர் இதை அணுகும் முறை வித்தியாசமானதாக இருக்கும். பலரால் 'சரி' எனக் காணப்பட்ட கருத்தைப் 'பிழை' என்று சாதிக்க முயல்வார்கள். பிழை எனப் பலர்  சுட்டும் கருத்தைப் 'பிழை' என்பதோடு மட்டுமோ அதற்கான காரணங்களை முன் வைப்பதோடு மட்டுமோ அவர்கள் நின்று கொள்வதில்லை. பிழை என்பதைக் குறிக்க அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் ஆபத்தானவை. 'இந்தக் கருத்துத் தவறானது' என்று சொல்வதற்கும் 'இது ஒரு அடிமுட்டாள்தனமான கருத்து' என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதன் தொனி 'நீ ஒரு முட்டாள்' என்றும் 'மடையன் மாதிரிப் பேசுகிறாய்' என்றும் 'நீ ஓர் அறிவு கெட்ட மனிதன்' என்றும் ஒலிக்கும்.

ஒரு பண்பட்ட மனிதன் இந்தத் தாக்குதலை மீண்டும் தனது பண்பட்ட வார்த்தைகள் கொண்டே எதிர் கொள்வான். ஆனால் அது ஒரு கட்டம் வரைதான். சற்று உணர்ச்சி வசப்படும் மனிதன் திருப்பிடிக்க ஆரம்பித்து விடுவான். எனவே இந்த இடத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டு விடுகிறது. கலவரம் ஆரம்பித்தால் அது சம்பந்தப்பட்ட கருத்தை விட்டு விட்டுக் கருத்துச் சொன்னவரின் மற்றும் அதை மூர்க்கமாகத் தாக்கியவரின் பிறப்பு, வளர்ப்பு, தாய், தந்தை, குடும்பத்தினர், தொழில் என்று ஆளுக்காள் இழிவு படுத்த ஆரம்பித்து அவர்கள் சார்ந்த நட்பு வட்டாரத்தின் முக்கிய பேசு பொருளாக மாறிவிடுகிறது.

சிலர் இந்த அடிப்படையில் 'சரி' களைப் பிழைகளாகவும் 'பிழை'களைச் சரிகளாகவும் மாற்றி மாற்றிப் பேசுவதில் வல்லவர்கள். அநேகர் தமது பிடிமானத்தை விட்டுக் கொடுப்பதில்லை. தமது கௌரவம், தமது பேரறிவு, தமது சிந்தனையில் ஆழம், தமது அந்தஸ்து எல்லாமே இதில் தங்கியிருப்பதாக நினைத்துக் கொள்வதுவும் இவை யாவும் அதி உச்ச அளவில் தம்மிடம் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்பதும்தான் சோகமானது. எந்த வழியிலேனும் பணத்தை மட்டும் உழைத்துச் செல்வந்தானான ஓர் மனிதன் காட்டும் அற்பப் பெருமைக்கும் மேற்படி மனோ நிலைக்குமிடையில் பெயரிய அளவில் வேறுபாடுகள் கிடையாது.

ஒரு மனிதன் படித்த நூல்களும் அதன் மூலம் அவன் பெற்ற அறிவும் அவனது அனுபவங்களும் அவனிடத்தில் சரியைச் சரி என்றும் பிழையைப் பிழை என்றும் உணரவும் அதனை ஏற்றுக் கொள்ளவும் பிழையை யாருக்கும் வலிக்காத வகையில் யாரையும் அவமதிக்காத வகையில் சுட்டிக் காட்டவும் வழி செய்யவில்லை என்றால் அந்த நூல்களும் அவற்றின் மூலம் அவன் பெற்ற அறிவும் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை வேறு வார்த்தைகளில் எழுதி விளக்கும் அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்றவெனில் இஸ்லாம் குறித்த கருத்துப் பரிமாறல்களில் இவ்வாறான ஓர் அவல நிலை ஏற்படுவதுதான். இஸ்லாம் எத்தகைய பண்பாட்டை, சகோதரத்துவத்தை, விட்டுக் கொடுப்பை, சமாதானத்தை வாழ்க்கை வழியாகப் போதித்து நிற்கிறது என்பது தெரிந்தும் அதே இஸ்லாமிய, சமூக, பொருளாதார, அறிவியல், மார்க்கக் கருத்தாடல்களில் இவ்வாறான வாத விவாதங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் ஆழ்ந்து கவனிக்கவும் சிந்திக்கவும் வேண்டியது.

நாம் எதை எப்படி அணுகுகிறோம், எதை எப்படிப் பேசுகிறோம், எதை எப்படி எழுதுகிறோம் - இவற்றை யாருக்காகச் செய்கிறோம் - இவை யாரைச் சென்றடையப் போகிறது - இதனால் யாருக்கு என்ன லாபம் - இது மற்றொருவரை நோவிக்குமா - அல்லது மகிழ்வூட்டுமா - அல்லது சிந்திக்கத் தூண்டுமா - இதனால் யாருக்காவது பிரயோசனம் கிடைக்குமா - இதைச் சொல்லும் தகுதி எனக்குண்டா - நான் சரியாக இருக்கிறேனா - என்னிலிருந்து யாருக்காவது பிரயோசனமான ஏதாவது சக மனிதனுக்குக் கிடைக்கிறதா - என்பன போன்ற வினாக்களில் அரைவாசியையாவது நம்மை நாமே கேட்டுக் கொண்டால் பெருமளவில் மேற்படி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

எனக்கு மேல் யாரும் இல்லை, எனது கருத்தே சரியானது, இன்னொருவனுக்கு எனது கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்லத் தகுதியில்லை, எனது கருத்தைச் சரி என்று ஏற்காதவனை நான் கீலம் கீலமாகத்தான் கிழித்துத் தோரணங்கட்டித் தொங்க விடுவேன் என்று எண்ணம் வருகிறது என்றால் -

அது மனநோயின் பாற்பட்டது!

நன்றி - மீள்பார்வை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

rajamelaiyur said...

//எனக்கு மேல் யாரும் இல்லை, எனது கருத்தே சரியானது, இன்னொருவனுக்கு எனது கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்லத் தகுதியில்லை, எனது கருத்தைச் சரி என்று ஏற்காதவனை நான் கீலம் கீலமாகத்தான் கிழித்துத் தோரணங்கட்டித் தொங்க விடுவேன் என்று எண்ணம் வருகிறது என்றால் -

அது மனநோயின் பாற்பட்டது!
//100000% உண்மை