Showing posts with label மீள்பார்வை. Show all posts
Showing posts with label மீள்பார்வை. Show all posts

Wednesday, November 4, 2015

பிறைப் பாட்டு

 - 30 -

சில காலங்களுக்கு முன்னர் தூரத்தில் வசிக்கும் எனது நண்பர் ஒருவர் 'பிறைப்பாடல்' என்றால் என்ன என்று தொலைபேசி மூலம் வினவினார். எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

கல்வியமைச்சு வருடாவருடம் நடத்தும் கலாசாரப் போட்டிகளுக்குள் முஸ்லிம் பாடசாலைகளுக் கிடையிலான கலாசாரப் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக அது குறிப்பிடப்பட்டிருந்தது. உரிய அமைச்சில் உரிய பிரிவைத் தொடர்பு கொண்டும் நண்பருக்குச் சரியான தகவலைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை. மீண்டும் அவர் என்னைத் தொடர்பு கொண்ட போது கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்குமாறு நண்பரைக் கேட்டுக் கொண்டேன். கல்வி, கலாசார அமைச்சின் நுண்கலைப் பிரிவில் அவர் ஒரு குறிப்பிட்ட காலம் இருந்ததை நான் அறிவேன்.

வில்லிசைப் பாடலின் முஸ்லிம்களுக்கான வடிவமே பிறைப்பாடல் என்பது பின்னால் தெரியவந்தது.

களுத்துறை மாவட்ட அஹதியா பாடசாலைகளுக்கிடையிலான மார்க்க மற்றும் கலாசாரப் போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகிக்கச் சென்ற போது அவர்கள் 'பிறைப்பாடல்' நிகழ்ச்சியையும் போட்டிக்காக அறிவித்து நடத்தியிருந்தார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இப்போட்டியில் கலந்து கொண்ட போதும் சமகால மத்திய கிழக்கு அரசியலை வைத்து, முழுக்கவும் மாணவிகளை வைத்து நடத்தப்பட்ட பிறைப்பாடலை நாங்கள் தெரிவு செய்தோம். மிகச் சரியான மாணவியைத் தலைவியாகக் கொண்டதோடு மட்டுமன்றி பாடுவதற்குப் பொருத்தமான மாணவிகளையும் கொண்டு அந்நிகழ்ச்சி தயார் செய்யப்பட்டிருந்தவும் நிகழ்ச்சியின் கருப் பொருளும் மத்தியஸ்தர்களைக் கவர்ந்திருந்தன.

கடந்தகால வில்லிசைப் பாடலின் போக்கு ஒரு மனச் சந்தோஷத்தை ஏற்படுத்தக் கூடியதான நகைச்சுவைப் பாங்கிலேயே பெரும்பாலும் அமைந்திருந்தன என்று அறிவேன். மேற்படி பாடசாலை மாணவிகளின் நிகழ்ச்சியின் மூலம் பிசிறடிக்காத, அபஸ்வரம் இல்லாத பாடல் திறமை கொண்டு எவ்வகையான ஒரு கருப் பொருளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்பது புரிய வந்தது.

கவிஞர் அப்துல்காதர் லெப்பை அவர்களின் 'செய்னம்பு நாச்சியார் மான்மியம்' ஒரு மனமகிழ்வுக் காவியம்.  இது உண்மையில் ஒரு நெடுங் கவிதை. அதிகாரத்தைக் கையில் கொண்ட பெண் செய்னம்பு நாச்சி. இந்தக் கவிதை 1969ம் ஆண்டு வில்லிசைப் பாடலாகக் கொழும்பிலும் பின்னர் காத்தான்குடியிலும் மேடையேற்றப்பட்டதாக கலாநிதி அனஸ் குறிப்பிடுகிறார்.

70களின் நடுப்பகுதியில் காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் வில்லிசைப் பாடல்கள் களைகட்டியிருந்தன. காத்தான்குடியில் சாந்தி முகைதீன் குழுவினரும் ஏறாவூரில் அஜ்வாத் ஆசிரியர் குழுவினரும் பல வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வந்துள்ளார்கள். வில்லுப் பாட்டு நிகழ்ச்சிகளை நேரில் காணும் வாய்ப்புக் கிடைக்காத போதும் அஜ்வாத் ஆசிரியரின் 'மொட் பொடியன் மோறு லெவ்வை', 'ஃபைல் புத்தகம் பறந்து போகுது தலைக்கு மேலாலே..!' ஆகியவற்றை ஒலி நாடாக்களில் கேட்டு ரசித்து மகிழ்ந்ததுண்டு. இந்த ஞாபகம் உந்தித் தள்ள சில மாதங்களுக்கு முன்னர் ஏறாவூர் சென்றிருந்த நான் அஜ்வாத் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து அவரை இலக்கிய மஞ்சரிக்காக நேர்காணல் செய்து வந்தேன்.

ஒரு விடயத்தை, ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நாடகத்தைப் போலவே சிறந்த கலை வடிவம் பிறைப் பாட்டு. ஆனால் இந்த அம்சம் வருடாந்த பாடசாலைப் போட்டிகளில் மட்டுமே உயிர்வாழ்வது கவலைக்குரியது.

கிராமங்கள் நகரங்களாக உருமாறி வருகையில் மனிதர்களும் தங்களை மாற்றிக் கொண்டே வருகிறார்கள். அன்றைய கால அயல் மனிதனுடனான உரையாடலும் அந்நியோன்னிய உறவும் அற்றுப் போய் எல்லோரும் தனித் தனித் தீவுகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருக்கும் உறவுகள் கூடக் கணினியோடும் ஆளுக்கொரு ஸ்மார்ட் கைப் பேசியுடனும் தனித் தனியே அமர்ந்திருந்து தமது உலகத்தைச் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதம் சார்ந்த உறவுகள் மரித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு கிராமத்து மனிதனின் விகடப் பேச்சு, நடத்தை, உலகில் நடக்கும் வழமைக்கு மாறான நிகழ்வுகள், சினிமா, பாடல் ஆகியவற்றைத் தமது நவீன கருவிகள் மூலம் பார்த்துத் தனியே அமர்ந்து ரசிப்பதில்தான் தமது பொழுதைப் பலர் கழிக்கிறார்கள். சிலவேளை அவற்றை மற்றவர்களோடு அனுப்பிப் பகிர்ந்தும் மகிழ்கிறார்கள்.

ஒரு சமூதாயத்தின் கலாசாரம், பண்பாடுகள் ஆகியன அவர்தம் கலை வடிவங்களில்தான் வாழுகின்றன. ஆனால் நமக்கான கலை வடிவங்கள் குறித்து நாம் எவ்வித அக்கறையும் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகிறோம். உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் கலை வடிவங்களை நமக்குரிய முறையில் மாற்றியமைத்து சமூகமாற்றத்துக்கும் வழிகாட்டலுக்கும் பயன்படுத்துவதை விடுத்து அவற்றை மார்க்க முரணான அம்சங்களாகச் சித்தரித்துக் கொண்டு மார்க்க முரணான அம்சங்களைக் கணினியிலும் கைத் தொலைபேசியிலும் பார்த்தும் கேட்டும் இரசித்து மகிழ்கிந்து கொண்டிருக்கிறோம்.

இந்தக் கேலிக் கூத்தையும் கூட ஒரு சிறந்த பிறைப்பாட்டாகக் கொண்டு வர முடியும். கலாசாரம், பண்பாடு என்பது ஆடைகளிலும் கோலங்களிலும் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதையும் முரணான எதையும் முரணற்றதாக மாற்றிக் கொள்வதற்கு முடியும் என்பதையும் முதலில் பிறைப்பாட்டிலேயே சொல்லி விடலாம்.

வில்லிசையயானது பிறைப்பாடலாக மாற்றம் பெற்றிருப்பதும் இதையே சுட்டிக்காட்டுகிறது!

நன்றி - மீள்பார்வை

Saturday, October 17, 2015

காய்தலும் நனைதலுமாய்க் கழியும் வாழ்க்கை!

- 29 -

'என்னிடம் ஓரழகான குடையிருந்தது - அதை நீ அபகரித்தாய் - நான் குடைக்கீழிருந்து வெளியேகினேன். வெயிலெனக்கு அவஸ்தையாயிற்று - சூரியன் உச்சந் தலையிற் குறியிட்டான் - அக தீ எனலாய்! ஆகாயம் இடித்து முழங்கி இறங்கிற்று - நானதில் நனையவேண்டியாயிற்று - காயம்பட்டு! நனைதலும் காய்தலும் - இன்று என் இருப்பென்றாயிற்று!'

துயரொழுகும் இக்கவிதை பிறப்பதற்குக் காரணமான நிகழ்வு நடந்து இன்று கால் நூற்றாண்டு கடந்து விட்டது. வடபுலத்திலிருந்து துரத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான முல்லை முஸ்ரிபா என்ற கவிஞனின் பேனாவின் - ஆத்மாவின் கண்ணீர் இது!

1990ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினர் மூன்று கட்டங்களாக வடபுலத்திலிருந்து முஸ்லிம்களைத் துரத்தியடித்தனர். யாழ்ப்பாண முஸ்லிம்களை 3 மணி நேரத்தில் முதலிலும் முல்லைத் தீவு மாவட்ட மற்றும் மன்னார் - வவுனியா மாவட்ட முஸ்லிம்களை 3 தினங்களிலும் வெளியேற்றினர். மறுத்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதால் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவர்கள் அடம்பெயர்ந்து வந்தார்கள். 'எமது பெண்களின் பின் புறங்களில் பிரம்புகளினால் தட்டிப் பரிசோதித்தார்கள்' என்று ஒரு கவிதையில் றஷ்மி எழுதியிருந்ததைப் படித்தது ஞாகபமிருக்கிறது.

'தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது!' - வே. பிரபாகரன்

வடபுலத்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் யாழ். உஸ்மானியாக் கல்லூரியில்  கட்டப்பட்டிருந்த பெனரிலே காணப்பட்ட வாசகம்தான் இது. அதாவது தமது இனத்துக்கு விடுதலை கோரியப் போராடிய பிரதானப் போராட்டக் குழு, இந்தத் தேசத்தின் மற்றொரு சிறுபான்மையை வேரோடு கல்லி வீசிவிட்டுப் பேசிய பெருமை மிக்க வார்த்தை இதுதான். ஆனால் வெளியுலகுக்கு தங்களது தலைமைத்துவத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயமே தெரியாது என்றுதான் பலர் ஒரு பெரும் பூசனிக்காயை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைத்துக் கொள்ள முன்றார்கள் என்பதையும் நாம் கண்டோம்.

90,000 புத்தகங்களை எரியூட்டப்பட்ட போது பதறியடித்தவர்கள், நியாயம் பேசியவர்கள், ஒரு லட்சம் மக்கள் உடுத்திருந்த உடையோடு வெளியேற்றப்பட்ட போது மௌனித்திருந்தார்கள் என்று நண்பர் கலைவாதி கலீல் ஒரு முறை எழுதியிருந்தார். அவரும் துரத்தப்பட்ட மக்களின் ஒரு பிரதிநிதிதான்!

ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 25 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.

25 வருடங்கள் கழிந்த நிலையிலும் 30 வீதமான முஸ்லிம்களே மீள்குடியேறியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. மீதியாயுள்ளோரது வாழ்க்கை, காய்தலும் நனைவதுமாகவே கழிந்து கொண்டிருக்கிறது.

'தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவர்கள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,' என்கிறார் டி.எஸ்.பி.ஜெயராஜ்.

கவிஞர் யாழ் அஸீம் 'மண்ணில் வேரோடிய மனசோடு' என்று ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுள்ளார். தனது மண்ணின் மீதான பிரிவும் பரிவும் ஏக்கமும் கொண்ட கவிதைகளைக் கொண்டது அத் தொகுதி. அதில் உள்ள ஒரு கவிதையின் பகுதி இது. துரத்தியோரைப் பார்த்து அவர் கேட்கிறார்:-

'வல்லவன் அவன் எழுதும் வரலாற்றுக்கு
முற்றுப் புள்ளி நீ வைப்பதா?
நீயே அவனிட்ட காற்புள்ளி.
எனக்கென்ன முற்றுப் புள்ளி நீ வைப்பது?
உனக்கும் அவனன்றோ முற்றுப் புள்ளி வைப்பது?'

இக்கவிதை எழுதப்பட்டு 3 வருடங்கள் நிறைவுறுவதற்குள் ஒரு புள்ளி விழத்தான் செய்தது.

துரத்தப்பட்ட முஸ்லிம்களின் அகதிக் கோலம் அகற்றும் முற்றுப் புள்ளி என்று விழும் என்றுதான் காத்திருக்கிறோம்!

நன்றி - மீள்பார்வை

Sunday, October 4, 2015

வெள்ளிக்கிழமை விளக்கம்!


 - 28 -

வெள்ளிக் கிழமைகளின் ஜூம்ஆ பிரசங்கங்களை அந்நாட்களில் லெப்பைகளே நிகழ்த்துவார்கள். “எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ_த்தஆலாவுக்காயிருக்கும். அவன் எப்படிக்கொத்தவன் என்றால்......” இப்படித்தான் உபந்நியாசம் ஆரம்பிக்கும்.

ஓதலுக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ஒரு தாள லயத்தில் லெப்பை தனது 
குத்பாவை நிகழ்த்துவார். அவரது ராகத்தில் அநேகர் தூங்கிப் போவார்கள்.

அநேகமாகவும் குத்பாவுக்கு என்றொரு கிதாபு (நூல்) அவர்களிடம் இருக்கும். அது தென்னிந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அரபுத் தமிழில் அமைந்த பிரசங்கங்கள் அதில் அடங்கியிருக்கும். அப்போது சிறுவனாயிருந்த எனது நினைவுகளின் எச்சங்களிலிருந்துதான் இதைச் சொல்லுகிறேன்.

70 களின் நடுப்பகுதியில் எனது நண்பர் காத்தான்குடி பௌஸ் ‘தூக்கம் தரும் குத்பா ஊக்கம் தரல் வேண்டும்’ என்ற தலைப்பில் தொடராகப் பத்திரிகை ஒன்றில் கவிதை எழுதியது ஞாபகம் இருக்கிறது. அவர் அப்போது அரபு மத்ரஸா ஒன்றில் ஓதிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

கல்விக்கூடங்களை விட அரபு மத்ரஸாக்களே முக்கியம் எனக் கருதிய சமூகம் தத்தமது பிரதேசங்களில் அவற்றை உருவாக்க ஆரம்பித்தது, ஆலிம்கள் வெளிவர ஆரம்பித்தார்கள். ஆயினும் ஒவ்வொரு பிரதேசத்திலும் மரியாதைக்குரியோராகக் கருதப்பட்ட லெப்பைகள் தாமாக ஓய்வு பெற்ற பிறகே ஆலிம்கள் மிம்பர்களில் ஏற ஆரம்பித்தார்கள். ஒரு சில இடங்களில் இதற்கு மாற்றமாகவும் நிகழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் கூட அவர்களில் பெரும்பான்மையோரது மொழிப் பயன்பாடு சிலாகிக்கத்தக்கதாக இருக்கவில்லை. உயர்திணை, அஃறிணை தெரியாதவர்களாகவும் வார்த்தைகளைச் சரிவர முடித்துக் கொள்ள முடியாதோராகவும் அவர்கள் இருந்தனர். அதே நேரம் மிகவும் அற்புதமாக மொழியைப் பயன்படுத்தவும் எடுத்த தலைப்பில் சரியாகவும் அனைவரையும் கொள்ளை கொண்டு கட்டிப் போடக் கூடியோராகவும் ஒரு சிலர் இருக்கவே செய்தனர். இதற்கு உதாரணமாக மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்களைக் குறிப்பிட முடியும். அவரது பேச்சின் கவர்ச்சிக்கும் விசால அறிவுக்கும் சிறந்த மொழி நடைக்கும் காரணம் அவரது இடையறாத வாசிப்பு. அவரது வீட்டில் ஒரு நூலகமே இருந்தது.

பழைய நிலை இன்று மாற்றம் பெற்ற போதும் காலப் போக்குக்கேற்ப
ஆலிம்களில் ஒரு தொகுதியினர் தமது பாணிகளை மாற்றிக் கொள்ளாமலே
இருந்து வருகின்றனர். இது குறித்துச் சமூக ஊடகங்களில் மிகக் கடுமையான
விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் கூட தாம் நபிமார்களின்
வாரிசுகள் என்ற மிடுக்குக் கலையாமல் தாம் செய்வது சரி என்ற போக்கில்
அவர்கள் நடந்து கொள்வது கவலைக்குரியது.

உண்மையில் ஆலிம்களுக்கு இன்றும் - இன்னும் சமூகம் மரியாதை செலுத்தியே வருகிறது. அந்த கண்ணியத்தைச் செலுத்திய படியேதான் அவர்களது குத்பாக்கள் பற்றிய கருத்துக்களும் முன்வைக்கப் படுகின்றன. உண்மையில் பொதுமகன் நல்ல உபந்நியாசத்தைச் செவிமடுக்கும் ஆர்வத்தில் பள்ளிவாசல் வருகிறான். தொடர்ந்தும் அவன் ஏமாற்றமடையும் போது அது விமர்சனமாக மாறுவது தவிர்க்க முடியாதது.

இன்று மார்க்க விளக்கங்களைப் பொது மகன் ஒருவன் பெற்றுக் கொள்ளப் பல புதிய வழிகள் உருவாகி விட்டன. அறிவினைப் பெறுகின்ற புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஒரு கடமை நிமித்தம், வணக்கம் நிமித்தம் பள்ளிவாசல் வரும் ஒரு பொதுமகன் நல்லதொரு பிரசங்கத்தைச் செவிமடுக்க விரும்பும் போது அவனது எதிர்பார்ப்பு பற்றிய எவ்வித அக்கறையும் அற்றவையாக ஆங்காங்கே குத்பாக்கள் அமைந்து விடுவது பெரும் சோகம்.

;”ஒரு வயோதிபர் இருந்தாராம். அவர் அவருடைய வாலிப வயதிலிருந்தே ஹஜ் செய்து கொண்டு வந்தாராம். அவர் ஒவ்வொருமுறை ஹஜ் செய்த பின்பும் அவருடைய ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் வருமாம். இவ்வாறு 50வது முறை ஹஜ் செய்த பிறகுதான் அவரது ஹஜ்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வானத்திலிருந்து சப்தம் வந்ததாம்.” இப்படி ஓர் ஆலிம் குத்பா பிரசங்கம் செய்ததாக மிக அண்மையில் கிபாரி முகம்மத் என்ற சகோதரர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைக் குறிப்பிட்டு விட்டு அவர் செய்திருந்த விமர்சனத்தை இங்கே நான் தவிர்த்திருக்கிறேன். இது ஒரு சாதாரணப் பதிவுதான். இதைவிடக் கடும் கோபத்துடன் பலர் பதிவுகளை இட்டிருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் இங்கே எடுத்தாள்வது பொருத்தமானதாக இருக்காது.

கடந்த ஜூலைமாதம் எனது முகநூல் பக்கத்தில் குத்பாக்கள் பற்றி நான் எழுதிய குறிப்பு இது:-

“ஜம்இய்யத்துல் உலமா சபை குத்பாப்பிரசங்கம் நிகழ்த்தும் ஆலிம்களுக்குப் பின்வரும் முக்கிய விடயங்களைத் தெரிவிப்பது நல்லது. 1. ஒரே தலைப்பில் ஒரே விடயத்தை மாத்திரம் பேசுவது. 2. மொழியைச் சரியாகப் பயன்படுத்துவது. 3. 20 முதல் 30 நிமிடங்களில் பிரசங்கத்தை நிறைவு செய்வது. 4. ஒலிபெருக்கி என்பது நமது சாதாரண குரல் ஒலியை பெரிய அளவில் வெளிப்படுத்தக் கூடியது என்பதை அறிவுறுத்துவது. 5. ஜத்பு ஏறாமல் பார்த்துக் கொள்வது.

உண்மையில் குத்பா உரை நிகழ்த்தும் ஆலிம்களுக்கு மொழிசார், உரைசார் தகையாளர்களைக் கொண்டு பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். ‘நாங்கள் சரியாகவே சொல்லுகிறோம். மார்க்கம் சொல்லும் உரிமையும் அதிகாரமும் எங்களுக்கேயுரியது. எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என்று அவர்கள் கருதினால் பொது வெளிகள் விமர்சனங்களால் நிறைவதைத் தவிர்க்க முடியாது போகும். அது அழகும் அல்ல.

எனது முகநூல் பதிவுக்குச் சிலர் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை இட்டிருந்தனர். அதில் ஒரு சகோதரி இட்டிருந்த பின்னூட்டம் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது!

எனது குறிப்பில் அடுத்ததான நான் சொல்லியிருக்க வேண்டியது என்ற வகையில் ‘கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே நரகவாதிகள் என்ற அடிப்படையில் துள்ளாமலிருப்பது!” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Sunday, September 20, 2015

உன்புகழ் கூறாத சொல்லறியேன்!


 - 27 -

ஹஜ் காலங்களில் சுபஹூத் தொழுகைக்குப் பின்னர் மதீனா முனவ்வராவைச் சுற்றியுள்ள ஒலிநாடா மற்றும் இறுவெட்டுக் கடைகளிலிருந்து குளிர் காற்றில் எழுந்து வரும் 'தலஅல் பத்ரு அலைனா' மற்றும் அதையொத்த பரவசப்படுத்தும் பாடல் குரல்கள் மற்றெல்லாப் புலன்களையும் தாண்டிக் காதில் விழுவது ஒரு சுகானுபவமாக இருக்கும்.

அழகுணர்வும் கலா ரசனையும் மனிதனது உள்ளத்துடன் சம்பந்தப்பட்டது. மனித மனதைக் கவர்வதில் பாடல்களுக்குப் பெரும் பங்கு உண்டு. மொழிகள் தோன்றிய பிறகு மனித குலம் இயல்பாகவே உருவாக்கிக் கொண்ட கலை அம்சம் பாடலாகத்தான் இருக்க வேண்டும்.

ஏடும் எழுத்தும் அறியாத மக்களினால் வாய்மொழியாகப் பாடப்பட்ட நாட்டார் பாடல்கள் எனப்படும் பாமரப்பாக்கள் மனித குலம் பயன்படுத்திய, பயன்படுத்துகிற எல்லா மொழிகளிலும் உள்ளன. தாலாட்டு முதற்கொண்டு ஒப்பாரிப் பாடல்கள் வரை மனித வாழ்வின் ஒவ்வொரு கால கட்டங்களிலும் செயற்பாடுகளிலும் பின்னிப் பிணைந்திருப்பதை நாம் அறிந்தேயிருக்கிறோம். பொதுவான பாடல்களைப் போலவே மத ரீதியான பாடல்களும் நிலவி வந்திருக்கின்றன.

தமிழிலும் அறபுத் தமிழிலும் பல பாடல் இலக்கியங்கள் வெளிவந்திருக்கின்றன. பெண்புத்திமாலை, றசூல்மாலை போன்றவை குழுக்களாகப் பாடப்பட்டும் வந்திருக்கின்றன. நோன்பு காலங்களில் பெண்களுக்கான தொழுகை நடைபெறும் இடங்களில் ஸலவாத்து மாலையை ஒருவர் படிக்க மற்றவர்கள் கோரஸாக ஸலவாத்துச் சொல்லுவார்கள். தொழுகைக்கு வருவோர் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழுகை ஆரம்பமாகும் வரை இந்நிகழ்வு நடந்து கொண்டிருக்கும். வேறு அநாவசியப் பேச்சுக்களையும் ஊர்வம்பையும் தவிர்ப்பது மட்டுமன்றி சன்மார்க்க விழுமியங்களைப் பாடல்களூடாக மீட்டுவதும் இந்நிகழ்வின் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.

பின்னால் இஸ்லாமிய கீதங்கள் உருவாகின. மிகப் பெரும் ஆலிம்களும் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பாடல்கள் எழுத மிகச் சிறந்த பாடகர்கள் அவற்றைப் பாடினர். அவை மக்களை வெகுவிரைவில் சென்றடைந்தன. முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய கீதங்கனைப் பாடிய பாடகர்களின் நீண்ட பட்டியல் உண்டு. காரைக்கால் தாவூத், நாகூர் ஈ.எம். ஹனிபா, காயல் ஷேக் முகம்மத் ஆகியோரை மேலோட்டமான உதாரணத்துக்குத் தொட்டுக் காட்ட முடியும். இலங்கையிலும் பலர் தோன்றினர். ஏறக்குறைய 50கள் தொடங்கி 90 களின் நடுப்பகுதி வரை இவர்களது பாடல்களின் ஆதிக்கம் முஸ்லிம் சமூகத்தில் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

ஆயினும் 80களின் நடுப்பகுதியில் குறித்த சில பாடல்கள் இறைவனுக்குச் சமமாக சில மார்க்கப் பெரியார்களைக் கொண்டாடுகின்றன என்ற அவதானிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவைதான் இந்த இஸ்லாமிய கீதங்களையும் பாடகர்களையும் மக்கள் சமூகத்திடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தது. எனவே மார்க்கத்துக்கு முரண் எனக் கருதப்பட்ட பாடல்களை முஸ்லிம் சேவை ஒலிபரப்புவதைத் தவிர்த்துக் கொண்டது.

இஸ்லாமிய கீதங்கள் இசையுடனேயே பாடப்பட்ட போதும் கூட அவற்றின் இசையை விட வார்த்தைகளின் கவிநயமே மக்கள் மனதில் தங்கி நின்றன. இன்றும் கூட யாரும் அப்பாடல்களை எழுந்தமானமாகப் பாடக்கூடிய நிலையில் இருப்பதைக் கொண்டு இதனைப் புரிந்துகொள்ளலாம். 'இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வது இல்லை!', 'வாழ்நாளெல்லாம் போதாதே.. வள்ளல் நபிகளின் புகழ்பாட...', 'பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?', 'உனையன்றி வேறெதுவும் நினைத்தறியேன்.. உன் புகழ் சொல்லாத சொல்லறியேன்.. இணைவைத்து உனைப்பாட நாடவில்லை, தமிழ் இசைக்காக உன்புகழ் பாடவில்லை!' போன்ற பாடல்கள் மொழியழகும் கவிநயமும் கொண்டவை.

இயல்பாகவே மனிதனின் கலையுணர்வை மோசமான, ஆபாச பாடல்கள் மற்றும் இசையிலிருந்து தவிர்ப்பதில் இப்பாடல்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் சன்மார்க்கத்தை மக்களிடம் சேர்ப்பதிலும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. பிரச்சாரகர்கள் நுழையாத கிராமங்களில் கூட இவை காற்றில் கலந்து ஒலித்திருக்கின்றன.

இன்று இந்த சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக உணர முடிகிறது. பழம் பெரும் பாடகர்கள், பாடலாசிரியர்களின் மறைவு, இசைக்கு எதிரான மார்க்கப் போர், அதைத் தாண்டி பாடல்கள் மூலம் மக்களிடம் நல்லவற்றைக் கொண்டு செல்வதில் திறமையின்மை, கலைகளை மறுப்பதன் மூலம் மனித இயல்பான கலைகளுடனான உணர்வை மிதித்தல் ஆகியவற்றால் இத்துறை பாழ்பட்டு நிற்கிறது. நமது தஃவாப் பணி பேச்சு, பேச்சு, எழுத்து, எழுத்து என்ற எல்லைக்குள் சுருங்கிப் போய்க் கிடக்க, மனித மனத்தின் இயல்பான கலையார்வம் வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

பாடல்கள் சக்தி மிக்கவை. உற்சாகமான பொழுதுகளில் இயல்பாகவே ஒரு பாடல் வரியை நாம் முணுமுணுக்கவே செய்கிறோம். அப்போது வாத்தியக் கோஷ்டியை வரவழைத்து வைத்துப் பாடுவதில்லை.  அல்லது வீட்டில் இருப்போரைத் தாளமிடவோ ஆட்டம் போடவோ அழைப்பதில்லை.

ஒவ்வொரு பாடசாலையிலும் ஆகக்குறைந்தது ஒரு மாணவி, ஒரு மாணவன் மிக இனிமையாகப் பாடக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. மோசமான இசை, பாடல் என்று குறை சொல்பவர்கள் நல்ல பாடல்களை எழுதிக் கொடுக்கவோ தட்டிக் கொடுக்கவோ முன்வருவதுமில்லை.

மனிதக் கலையுணர்வை மார்க்கத்தின் பெயரால் மறுத்து அதற்கு மாற்றீடு வழங்காமல் மிம்பர்களிலும் பொது உபந்நியாச மேடைகளிலும் மூலம் வெளிவரச் சத்தம் போடுவதால் மனிதக் கலையுணர்வு அற்றுப் போவதில்லை. அது வேறு வடிவங்களையும் வழிகளையும் தேர்ந்து கொள்ளும்!

அந்த வழியும் வடிவமும் மோசமானதாகவும் மார்க்க முரணானதாகவும் இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

Tuesday, September 1, 2015

ஹஜ் - காசாகி நிற்கும் கடமை!


 - 26 -

எனது ஹஜ் பயணம் அவ்வளவு சந்தோஷமானதாக இருக்கவில்லை!

கடமைகள் யாவற்றையும் திருப்திகரமாகச் செய்து கொள்ள முடிந்த போதும் அழைத்துச் சென்ற அணியினர் சரியாக நடந்து கொள்ளவில்லை.

'ஷீதேவிகளே... விமான நிலையம் ஏசி (குளிரூடட்டப்படது.) அதிலிருந்து விமானம் வரை ஏற்றிச் செல்லும் பஸ் ஏசி. விமானம் ஏசி. சவூதியில் விமான நிலையம் ஏசி. அங்கிருந்து அழைத்துச் செல்லும் பஸ் ஏசி. ஹரம் ஷரீப், மதீனா முனவ்வரா ஏசி. நமக்கு எந்தவிதச் சிரமங்களும் இல்லை. நாளை உயிருடன் இருப்போமோ இல்லையோ தெரியவில்லை. பயணத்துக்கு நிய்யத் வையுங்கள், முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான்!' - இது நீண்ட காலத்துக்கு முன்னர் ஹஜ் முகவரான ஒரு ஆலிம் நிகழ்த்திய குத்பாப் பிரசங்கத்தின் சிறு பகுதி. கேட்டுக் கொண்டிருக்க மகிழ்ச்சியும் ஆர்வமும் வரத்தான் செய்யும். பெயரையும் கொடுத்து அட்வான்ஸையும் கொடுத்த பிறகுதான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பதட்டத்திலும் சந்தேகத்திலும் நாட்கள் நகர ஆரம்பிக்கின்றன.

சரியாக பணத்துக்குப் பத்துத் தினங்கள் இருக்கையில் திடீரென விமானக் கட்டணம் அதிகரித்து விட்டதாக மேலும் ஒரு தொகையை என்னிடம் கோரினார் நிறுவனத்தவர். அதுவும் பிரச்சனை இல்லை.

அழைத்துச் செல்லப்படுபவர்களில் பொருளாராத மற்றும் கல்வி ரீதியாக வித்தியாசமானவர்கள். கிராமத்து மனிதர்களை அழைத்துச் செல்வதில் நிறுவனங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. கொஞ்சம் விளக்கம் உள்ளவர்களைச் சமாளிப்பதில்தான் பிரச்சனை அவர்களுக்கு.

இலங்கையில் ஆள்சேர்க்கும் ஆலிம்ஷா முதற்கொண்டு சவூதியில் குர்பான் கொடுப்பதற்கு பிராணிகளைக் கொள்வளவு செய்வது வரை புறோக்கர்கள் இருக்கிறார்கள். ஹஜ் காலம் என்பது அவர்களுக்கு கொமிஷன் குவியும்; காலம். அறபாவில் தரிப்பதும் மினாவில் தரிப்பதும் சற்றுச் சிரமமானதுதான். ஆனால் அதற்குள்ளும் நடக்கும் விளையாட்டுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்குள் தவிர்க்க முடியாத சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். அவற்றைப் பொறுத்தேயாக வேண்டும்.

25 முதல் 27 பேர் வரை தங்கவேண்டிய கொட்டிலுக்குள் 50 பேருக்கு மேல் செருகியதைக் கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை. அனைவரும் பெண்கள். அப்படி நெருக்கடிப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நிறுவனத்துக்குரிய கொட்டில்கள் சவூதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு விற்கப்படுகின்றன. அதன் பலனை நிறுவனம் அனுபவிக்க ஹாஜிகள் துன்பத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறு நான்கு கொட்டில்கள் (டென்ட்) விற்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்து நடை வழியில் தர்ணா செய்தேன்.  இறுதியில் பெண்களுக்காக கொட்டிலின் மறுபகுதியை பலாத்காரமாகத் திறந்து விட்டோம்.

வழிகாட்டிகளாக வரும் ஒரு சில ஆலிம்கள் நடந்து கொள்ளும் முறை வருந்தத் தக்கது. நிறுவன உரிமையாளருக்குச் சார்பாக நடந்து கொள்வதற்காக ஹஜ்ஜாஜிகளை 'அச்சமூட்டி எச்சரிக்கும்' பணியை இவர்கள் மிக அழகாக முன்னெடுக்கின்றனர். இடைக்கிடை நடக்கும் உபந்நியாசங்களில் இந்த அம்சமே மிக முக்கியமானதாக இருக்கும். குழுவில் வரும் 'பசை' கொண்ட நபர்களை மையப்படுத்தியே சில முன்னேற்பாடுகள் நடப்பதும் உண்டு. ஹஜ் கடமை முடிந்து நாடு திரும்புவதற்காக இருந்த ஒரு பகல் பொழுதில் எனது இருமருங்கிலும் அமர்ந்திருந்த இரண்டு ஆலிம்கள் எனக்குப் புரியாது என்று எண்ணிக்கொண்ட அறபியில் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததை நான் வெகுவாக ரசித்தேன். இவர்களில் ஒருவர் மினாவின் கூடாரத்துக்குள் தனக்கு இடமில்லை என்று ஒரு ஹாஜி சொன்ன போது எல்லோரையும் கத்திப் பாட்டில் (ஒருக்களித்து) படுக்கும்படி உபதேசம் செய்தவர்.

30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சமாளிக்கும் விதமாக சவூதி அரசு ஏற்பாடுகளைச் செய்திருப்பதைக் காணும் போது, அரபிகள் எவ்வளவு நேர்த்தியாக இவற்றை மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு பிரம்மிப்பு வரும். எவ்வளவு கல்வியறிவு படைத்தவராக இருந்த போதும் வழி தவறினால் உரிய இடத்தை அடைவது சிரமம். ஆனாலும் உரியவரை உரிய இடத்தில் சேர்ப்பிக்கும் ஏற்பாடுகள் பாராட்டத் தக்கவை.

ஹஜ் என்பது மனித குலத்துக்கான ஒற்றுமை மாநாடு. ஓர் அற்புதத் திருவிழா. மனிதர்களுக்கிடையில் எந்த வேற்றுமையும் கிடையாது என்பதை வருடா வருடம் நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்தக் கடமை போல ஒரு கடமை வேறு எந்த மதத்திலும் கிடையாது. நாமெல்லாம் ஒரே உறவு என்ற உணர்வைப் பெற்றுக் கொண்டு இறைவனின் வீட்டையும் தரிசித்தபடி நபிகளாரும் அவர்களின் தோழர் தோழியரும் நடந்து திரிந்த மண்ணில் குறைந்தது 25 நாட்கள் வாழக் கிடைப்பது பெரும் பாக்கியம்தான்.

ஹஜ்ஜூக்கு அழைத்துச் சென்று வழிகாட்டுவதும் ஹாஜிமாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் உதவுவதும் ஒரு மகத்தான பணி. இந்தப் பணியில் ஹாஜிகளை வருத்தாமல் சிறந்த முறையில் உதவும் நிறுவனங்களும் ஆலிம்களும் இருக்கவே செய்கின்றனர். ஒரு சிலர் மார்க்கத்தின் மீதான பொது மகனின் பற்றையும் பக்தியையும் தேவைக்கு மேல் உழைப்பதற்கான ஒரு வழியாக ஆக்கியிருப்பது பெரும் கவலை தருவதாகும்.

எனக்கு ஹஜ் அனுபவம் கிடைத்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இந்த நிலைமைகளில் தற்போது முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற போதும் ஒரு வியாபாரப் போட்டியாகவே அது இன்னும் இருக்கிறது என்பதற்கு ஒரு சிலர் பொது பலசேனாவை உதவிக்கு அழைத்ததிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹஜ் முடிந்து வந்த பிறகு எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே விமானத்தில் வௌ;வேறு நிறுவனங்களினூடாக நானும் மற்றொரு ஒலிபரப்பாளரும் சொந்தப் பணத்திலேயே துணைவியர் சகிதம் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தோம். அவ்வப்போது பத்திரிகை வெளியிடும் ஒரு சிறு பத்திரிகையாளர் அன்றைய நிலையில் அவர் வெளியிட்ட ஒரு பத்திரிகையில் நானும் நண்பரும் அரச செலவில் ஹஜ் செய்ததாகசும் அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவிப்பதாகவும் கட்டம் கட்டி ஒரு செய்தி போட்டிருந்தார்.

Sunday, August 23, 2015

கௌரவத்துக்குள் பதுங்கிக் கிடக்கும் பொறாமை!


 - 25 -

'சில வாரங்களாக குத்பா பிரசங்கம் எதுவும் நிகழ்த்தவில்லை. குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் பேராவலை நோக்கி எனது நபுஸூ உந்திக் கொண்டேயிருக்கிறது' என்பது மாதிரி ஒரு பதிவொன்றை இட்டிருந்தார் எனது முகநூல் நண்பர்களில் ஒருவர். அவரது பதிவின் சாராம்சம் என்னவெனில் நீ குத்பா கேட்டுக் கொண்டிருப்பவன் அல்லன், பிரசங்கம் நிகழ்த்த வேண்டிய ஒரு முக்கியஸ்தன் என்ற ஆசை கொண்ட உணர்வு.

அவர் ஓர் இளம் ஆலிம். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்தப் பதிவைக் கண்ட உடனே எனக்கு அவர் மீது பெரும் மரியாதை உண்டானது.

பெரும்பாலும் புத்திஜீவிகளையும், பெரும் ஆலீம்களையும், பிரசாரகர்களையும், துறை சார் விற்பன்னர்னையும் ஆட்டி வைக்கும் ஆசை இது.  உள்ள மனதின் கள்ள மடிப்புக்குள் அமர்ந்து கொண்டு அவ்வப்போது எட்டிப் பார்க்கும் இழிவார்ந்த பண்பு. சாதாரணமானவர்களை இந்த நோய் பாதிப்பதில்லை.

அதே வேளை ஒரு நட்சத்திர அந்தஸ்தஸ்துக்கு எனது ஆன்மா ஆசைப்படுகிறது என்பது இந்த நோய் பிடித்தோரில் அநேகருக்குப் புரிவது இல்லை. புரிந்தாலும் கூட அதைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெரிதும் முயற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. விதிவிலக்குகளும் இல்லை என்று இல்லை.

பத்திரிகை ஒன்றில் ஒருவரது படைப்பாக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் பார்க்கும் சிலர் படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் மறந்து விடுகிறார்கள். ஒரு சிலருக்கோ அந்த எழுத்தாக்கத்தை எழுதியவர் மீது ஒரு பொறாமை ஏற்படுகிறது. பொறாமையின் விகிதாசாரத்துக்கேற்ப அந்த எழுத்தாக்கத்துக்கான விமர்சனம் விஷமாகக் கக்கப்பட ஆரம்பிக்கிறது. அதி உச்ச பொறாமையில் அதை எழுதியவரின் பாட்டன் காலம் தொடங்கி இன்று அவரது இறுதிக் குழந்தை வரை பிய்த்து உதறி எறிகிறார்.

இது எழுத்துத் துறையோடு மட்டும் சார்ந்தது அல்ல. எல்லாத் துறைகளிலும் இந்தப் பிரச்சளை உண்டு. குறிப்பாக இஸ்லாமிய பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் இத்தகைய நோயைக் கண்ணுறவும் கேள்விப்படவும் நேரும் போது ஒரு புறம் கோபமும் மறுபுறம் வேதனையும் ஏற்படுகிறது.

ஓர் அமைப்பு பொது அம்சம் சார் விடயமொன்று குறித்து ஒரு பயிற்சி நெறி நடத்தியது. அமைப்பு சார் ஒருவர் இதை ஏற்பாடு செய்து எனது தலைமையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு இரண்டு தினங்கள் நடந்தது. முதல் நாள் காலை அமைப்பு சார் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் அடுத்த தினம் மாலை மீண்டும் வந்து சான்றிதழ்கள் கையளிக்கும் வரை நிகழ்வில் அவர்கள் குறுக்கிட மாட்டார்கள். இப்படித்தான் நிகழ்ச்சி நிரல் அமைந்திருந்தது.

ஆனால் முழு நாளும் அமைப்பு சார் மற்றொருவர் பின்னால் அமர்ந்திருப்பதை அவதானித்தேன். என்னதான் நடக்கிறது என்று மேலதிகமாக ஒருவரை நியமித்திருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சியின் மறு கட்டம் ஆரம்பமாகியது. வளவாளர்கள் தமது கடமையைச் செவ்வனே நடத்திக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை என்னோடு இணைந்திருந்த அமைப்பின் அங்கத்தவர் காலை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னர் காதுக்குள் ஒரு தகவல் சொன்னார்.

காலை நிகழ்ச்சி தொடங்கு முன் 'பின்னால் அமர்ந்திருந்த நபரு'க்கு 15 நிமிடம் பேசக் கொடுக்க வேண்டும் என்றார் அவர். அது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றேன் நான். இல்லை, அவர் ஆசைப்படுகிறார் என்றார் நண்பர். இந்த சபஜக்டுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றேன் நான். ஆம். அது தெரியும். ஆனால் அவரையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்றார் நண்பர். மன ஆசையை அடக்க முடியாதவர் எப்படி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று கேட்டேன் நான். நண்பர் மிகவும் புரிந்துணர்வு கொண்டவர். அவரது வேண்டுகோளையேற்று பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என்ற ஒப்பந்தத்துடன் அழைத்து வரப்பட்டார் அவர். ஆனால் நாற்பது நிமிடங்கள் பேருரை ஆற்றி விட்டுத்தான் ஓய்ந்தார்.

இந்த மாதிரி ஆசைகளைச் சின்னச் சின்ன ஆசைகள் என்று சொல்லி விட முடியாது. ஆன்மாவோடும் மனப் பக்குவத்தோடும் சம்மந்தப்பட்ட விடயம் இது. ஆசைகளை அறுத்துத் திருப்தியுற்ற ஆத்மாக்களிடம் இந்தப் பண்பு குடிகொள்வது இல்லை. அந்த ஆத்மா இதை வளர விடுவதும் இல்லை. எங்கு நசித்து நாற்றமெடுக்கும் குப்பை இருக்கிறதோ அங்கேதான் புழுக்களும் பூரான்களும், தேள்களும் பிறப்பெடுக்கின்றன.

தன்னளவில் பக்குவமாக இருத்தல், தன்னையே உசாவுதல், சகலரையும் சமமாக மதித்தல், பிழையானதை அழகிய முறையில் சுட்டிக் காட்டுதல், நிறைகளைப் பாராட்டுதல் போன்ற நற்குணங்கள் வாய்க்கப் பெறின் இந்த நோய் நம்மை அண்டுவதற்கு நியாயம் இல்லை. பொறாமை; என்ற குப்பையிலிருந்தே இந்த இழிய புழுக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதைத் தெளியப் புரிந்து கொண்டால் யாவும் நலம்.

முகநூலின் இளம் வயது ஆலிம் நண்பரைப் பிற்காலங்களில் காணக் கிடைக்கவில்லை.  'திறந்து பேசும் மனதை அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கிறான், பாராட்டுக்கள் என்று அவருக்கு ஒரு பின்னூட்டம் இட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது!

Sunday, August 9, 2015

அஸ்ஸலாமு அலைக்கும்

- 24 -

அரபு நாடுகளுக்குத் தொழிலுக்குச் சென்றவர்கள் சுவாரஸ்யமாகச் சொல்லும் பிரதான கதைகளில் ஒன்று வாகன விபத்துக்கள்!

இரண்டு அறபிகள் தங்களது வாகனங்களை உரசிக் கொண்டால் நடக்கும் காட்சி. இருவரும் வாகனங்களிலிருந்து வெளியேறி முதலில் ஸலாம் சொல்லிக் கொள்வார்களாம். அதன் பிறகு ஆளை ஆள் கடும் வார்த்தைகளில் திட்டுவார்களாம். இது வெளிநாட்டார் கண்களுக்கு விருந்து. வேறு எங்கு இப்படி விபத்து நடந்தாலும் இறங்கியதும் தடித்த வார்த்தைப் பிரயோகமும் சில வேளை கைகலப்பும் நடக்கும். இங்கு வித்தியாசமான காட்சி!

மற்றொரு அரசியல் திருவிழா ஆரம்பித்து விட்டது. சமூகத்தில் சகலராலும் கவனிக்கத்தக்க அம்சங்களை அரசியல்வாதிகள் மேல் விட்டு விட்டு விமர்சிக்கும் கோலாகலம் ஆரம்பமாகி விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தான் இருக்கும் நிலையிலிருந்து மேலே செல்ல விரும்புவானே தவிர, தனது நிலையைக் கீழிறக்கிக் கொள்வதற்கு விரும்புவதில்லை. அரசியல்வாதியை மட்டும் இந்த நியதிக்கு அப்பால் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. புகழும் செல்வாக்கும் ஒரு போதை. அவற்றிற்குள் அகப்பட்டோர் அவை இல்லாமல் வாழ்வதைப் பெரும் துன்பமாகவே காண்பார்கள்.

எனவே தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு அரசியல்வாதியும் முயற்சியெடுக்கிறான். அவனுக்குத் தேவைப்படுபவை வாக்குகளும் அதற்குரிய மனிதர்களும். அரசியல்வாதியின் வாழ்க்கை வாக்குகளிலேயே தங்கியிருப்பதால் அவன் எல்லா வகையான மனிதர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அரசியல்வாதியோடு இணைந்து இருப்பதிலும் அதைப் பயன்படுத்திச் செல்வாக்குத் தேடவும் பணம் உழைக்கவும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. இவர்களே பெரும்பாலும் ஓர் அரசியல்வாதியின் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

ஏற்கனவே தன்னோடு இருப்பவர்களையும் புதிதாகத் தன்னுடன் இணைவோரையும் சமாளிப்பதில் அரசியல்வாதியின் காலத்தில் பெரும் பகுதி வீணடிக்கப்படுகிறது. எதிராளியான இருந்த போதும் புதிதாக வந்து இணையும் ஒருவரை அரசியல்வாதி ஏற்றுக் கொள்ளத் தயாராகும் போதே ஏற்கனவே அவருடன் இருக்கும் பழைய ஆதரவாளர்கள் ஆட்சேபனை தெரிவிக்கத் தொடங்குகிறார்கள். அல்லது மக்கள் செல்வாக்குள்ள ஒரு நபர் அரசியல்வாதியோடு இணைவதாக இருந்தால் அரசியல்வாதியின் பழைய ஆதரவாளர் அல்லது ஆதரவாளர்கள் சிலர் கழிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை வைப்பதும் உண்டு. இவ்வாறான சிக்கல்கள் பொது வெளியில் வாய்த் தர்க்கத்தில் தொடங்கி கைகலப்பில் முடிகின்றன.

இது போக, இன்றைய முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரை ஓரளவு மக்களுக்கு அறிமுகமானவர், ஓர் அரச ஊழியர், ஒரு வர்த்தகர், ஒரு ஹாஜியார் - எல்லோருமே தம்மை ஒரு முக்கியமான சமூகப் பிரஜையாகக் கருதி அரசியல்வாதி தமது காலடிக்கு வரவேண்டும், தன்னுடன் தனியே உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அநேகமானோர் தத்தமது சொந்த லாபங்கள் கருதிய கோரிக்கைகளை முன் வைத்துப் பேரம் பேசுகின்றனர். அரசியல்வாதி 'ஆம்' என்று ஏற்றுக் கொண்டால் அடுத்த தினம் சமூகத்தின் நன்மைக்காகக் குறித்த அரசியல்வாதியுடன் இணைந்து விட்டேன் என்று கதை விடுகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு ஒரு குறித்த அரசியல்வாதியுடன் இணைபவர் தனது கோரிக்கை நிறைவேறாதவிடத்து அதே கோரிக்கையுடன் வேறு ஓர் அரசியல்வாதியுடன் சேர்ந்து கொள்கிறார். தான் ஏற்கனவே இணைந்திருந்த அரசியல்வாதி சமூகத்துக்குச் சேவையாற்றாமல் சொந்த லாபங்கருதியே செயற்படுகிறார் என்றும் குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்.

கற்ற சமூகம் என்று ஒரு பிரிவினர் இந்த சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் பக்கம் தலை வைத்துப் படுப்பது கூடக் கிடையாது. அரசியல்வாதியைக் கண்டால் பிடிக்காது. சிலவேளை தனது கல்வித் தராதரமோ, அதற்குக் கீழோ அல்லது அதற்கு மேலோ கொண்டிருக்கும் ஓர் அரசியல்வாதியை அவருக்குப் பிடிக்காமல் இருப்பதற்குக் காரணம் பொறாமை. இவர்கள் அரசியல்வாதியின் மேல் குற்றப் பத்திரிகை வாசிப்பதையே வாழ் நான் பூராகவும் செய்து கொண்டிருப்பார். சமூக அக்கறையுடன் ஒரு விடயத்தை நேரடியாகச் சுட்டிக் காட்டவோ தமமைப்போன்ற ஓர் அணியுடன் சென்று சமூகக் குறைகளை அரசியல்வாதியிடம் எடுத்துச் சொல்லவோ இவர்கள் ஒரு போதும் முனைந்தது கிடையாது.

தேர்தல் வந்து விட்டால் புதிய இணைப்புகள் நிகழும் அதேயளவு புதிய பிணக்குகளும் ஏற்படுகின்றன. ஒரே குடும்பம் இரண்டாக சில வேளை மூன்றாகப் பிரிந்து நின்று சண்டை பிடிக்கிறது. சகோதரர்கள் கூடப் பிரிந்து நிற்கிறார்கள், சண்டையிடுகிறார்கள். அந்தச் சண்டை பொலிஸ் நிலையம், நீதி மன்றம் என்று நீண்டு செல்கிறது. வாழும் காலத்தில் பாதியை பிணக்குகளிலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு சிலர்; வருடக் கணக்காக மற்றவரின் முகத்தைக் கூடப் பார்ப்பதுமில்லை. ஸலாம் சொல்லிக் கொள்வது கூட இல்லை.

எந்த அரசியல்வாதிகளுக்காக இவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்களோ அவர்கள் தேர்தல் முடிந்ததும் ஒரே வட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள், நட்புப் பாராட்டுகிறார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் ஒரே அணியில் ஒன்று பட்டு விடுவதும் உண்டு.

எந்த ஒரு வாகன விபத்து நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் சண்டையிட்டாலும் முடிவு அடுத்த கட்டம் என்ன செய்வது என்று யோசிப்பதுதான். நடந்து முடிந்து விட்ட பிறகு சண்டையை நீட்டுவதால் பிரயோசனம் எதுவுமில்லை.

வாகனங்களைப் பழுது பார்த்தெடுத்து மீண்டும் வழமைக்குத் திரும்பி விடுவதுபோல தேர்தல் முடிந்த கையோடு பழைய நிலைக்குத் திரும்பும் பக்குவம் நமக்குள் வரவேண்டும்.

ஸலாத்தைப் பகிர்ந்து கொள்வதால் எப்போதும் நஷ்டம் வருவதில்லை!

(மீள்பார்வைக்கு எழுதியது)

Tuesday, July 14, 2015

நோன்புக் குழந்தைகள்!


 - 23 -

எனது மகளின் பிறந்த தினம் இம்முறை ரமளானுக்குள் வந்தது.

ரமளானுக்குள் வந்திருக்கா விட்டாலும் கூட ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. வீட்டிலே சமைக்கப்படும் விசேட உணவோடு அல்லது அன்றைய இரவு ஒரு மத்திய தர உணவுச்சாலை உணவுடன் அது முடிந்து விடும். இம்முறை எனது மகள் இரண்டு நண்பிகளை அன்றைய தினம் இஃப்தாருக்கு அழைத்திருந்தாள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது உறவுகளான சிறு பெண் பிள்ளையுடன் வந்திருந்தார்கள்.

அப் பெண்பிள்ளைகளுள் ஒருத்திக்கு வயது பத்து. மற்றையவளுக்கு வயது ஐந்து. இருவரும் நோன்பு நோற்றிருந்தார்கள். இரண்டும் நடைபாதையில் காலுக்குள் அகப்பட்டு விட்டால் நசுங்கி விடும் ரகம். பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் முகங்கள், உலர்ந்து போயிருந்த போதும் கூட. கட்டைக் கவுண் உடுத்தி தலையில் அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஸ்கார்ஃப் அணிந்திருந்தார்கள்.

அழகான பூக்களைப் பார்க்கும் பரவசத்துடனும் நெகிழ்ந்து உருகியபடி பதைபதைக்கும் நெஞ்சுடனும் அவர்கள் இருவரையும் கொஞ்ச நேரம் உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

தென்னிலங்கையின் கால நிலை இம்முறை பரவாயில்லை. அடிக்கடி மழை பெய்கிறது. கர்ணகடூர வெய்யில் சென்று விட்டது. ஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெய்யில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கச்சான் வெப்பக் காற்று வேறு வீசி உடலில் உள்ள நீர்த்தன்மையை உறிஞ்சி இழுத்துச் செல்லும் நிலையில் அந்தப் பகுதிகளில் நோன்பு நோற்க வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுகளைப் பற்றி எனது சிந்தனை நகர்ந்தது.

பிஞ்சுக் குழந்தைகளுக்கு மதிய உணவும் தேநீரும் கொடுப்பது சிரமம் என்பதற்காக எந்தப் பெற்றோரும் அவர்களை நோன்பு நோற்க நிர்ப்பந்திப்பதில்லை. மார்க்கக் கடமை, அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை வேண்டிச் செய்யப்படும் கடமை என்பதால் அதைப் பழக்கப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் நோன்பு நோர்க்க வைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 30 வீதமான முஸ்லிம் குடும்பங்களின் வறுமை பிள்ளைகள், குஞ்சு குருமான்களை நோன்பு நோர்க்கத் தள்ளி விடுகிறது என்பது பேச விரும்பாத விடயமாக இருந்த போதும் உண்மை என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

'ஓடி... எங்கட ரிஸானா நோம்பு புடிக்கோணுமென்டு சவருக்கெழும்பி சண்டையல்லியா.. இனிப் புடிக்க விட்டய்தான்...' என்று உம்மாமார் நண்பிகளுடன் பேசிக் கொள்ளவும் 'அவருக்கு நாலு வயசுதான் ஆஜி.. நோம்பு புடிக்கிறான்டு கேட்டன்.. ஓன்டாரு.. சரி பிடிங்கன்னு உட்டுட்டன்..' என்று தந்தைமார் நண்பர்களுடன் கலந்துரையாடவும் பிஞ்சுகளின் நோன்பு முக்கியத்துவம் பெற்றும் விடுகிறது.

எல்லாமே சிறப்பு, எல்லாமே பக்தி பூர்வமானவையாகி விட்ட நமது ரமளான் சிறப்புத்தான். அதில் என்ன சந்தேகம் இருக்கிறது!

குழந்தைகளின் உலகத்தில் நின்று பார்க்கப்படாத பல விடயங்கள் இருக்கின்றன. இன்றைய கல்வி அத்தகைய ஒன்றே. குறிப்பாக 5ம் தர ஸ்கொலர்ஷிப் பரீட்சை பிள்ளைகளுக்கானது அல்ல, தாய்மாரின் கௌரவத்துக்கானது என்ற கருத்துப் பரவலாக இருக்கிறது. பிஞ்சுகளின் நோன்பும் அப்படியான ஒரு கட்டத்துக்கு நகர்கிறதா என்பதைப் பற்றியும் அதிகமாக அல்லாமல் கொஞ்சமாகச் சிந்தித்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

ஒரே நோய் தாக்கிய இருவர். அந்த நோய்க்குரிய மருந்து ஒருவருக்குச் சுகப்படுத்தக் கூடியதாகவும் மற்றவருக்கு வேறொரு நோய்க்குத் திருப்பக் கூடியதாகவும் அமைந்து விடுவதுண்டு. இது ஒவ்வொருவரின் உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்தது. வைத்தியர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். இது அல்லாஹ் ஏற்படுத்தியது.

நோன்பு என்பது பொதுவானதுதான். வறுமைக்கோட்டுக்கு மேலேயுள்ள குடும்பங்களின் குழந்தைகளின் உணவுக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பத்தின் உணவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நமது குழந்தைகள் வாழும் சூழல், அவர்களது உணவு, அவர்களது உடற்பலம் ஆகியன முழுநாளும் பசித்தும் தாகித்தும் இருப்பதற்கு சக்தி பெற்றவையா என்பதிலும் அவர்கள் நோன்பு நோற்று விட்டார்கள் எனின் அவர்களது நடத்தையை, போக்கை அவதானித்துக் கொள்வதிலும் நமது கவனம் இருந்தாக வேண்டும்.

நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ரமளான் மாதத்தில் ஸஹருக்கு எழும்பி நோன்பு நோற்க ஆர்ப்பாட்டம் பண்ணிய எனது மூத்த தங்கைக்கு அப்போது வயது பத்து. சாப்பிட்டு விட்டுப் படுத்த ஒரு மணி நேரத்தில் அனுங்கத் தொடங்கினாள். உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற தந்தையார் பெரிய வைத்தியசாலை மாறி அடுத்த நாட்காலை தங்கையின் உயிரிழந்த உடலோடு வந்து சேர்ந்தார். நாங்கள் உண்ட அதே உணவு தங்கைக்கு அவ்வேளை ஒத்துக் கொண்டிருக்கவில்லை.

கடந்த வருடம் நமது நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் நோன்பு நோற்ற ஒரு குழந்தை பிற்பகலில் நீர் அருந்தக் கேட்டதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நோன்பு துறந்து விடலாம் அது வரை தூங்கு எனப் பெற்றோரால் அறிவுறுத்தப்பட்டதாம். அக்குழந்தை நோன்பு நோற்க எழுந்திருக்கவில்லை என்ற ஒரு காது வழிச் செய்தி எனக்குக் கிடைத்திருக்கிறது.

குழந்தைகளை நோன்பு நோற்கப் பழக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நோன்பு நோற்க வைக்கப்பட்டால் அவர்களது உலகத்தில் நின்று அவர்களைக் கவனியுங்கள் என்றுதான் சொல்ல விழைகிறேன்.

நன்றி - மீள்பார்வை

Tuesday, June 23, 2015

நாட்டார் கதைக்குள் நடக்கும் அரசியல்!

 - 22 -


பத்திரிகை ஆசிரியர்:- 'உங்கள் கதையில் பல இடங்களில் சாலை வளைவுகள் வருகின்றனவே?'
எழுத்தாளர்:- 'நீங்கதானே சார் கதையில் நிறையத் திருப்பம் இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்?'

இது ஒரு பழைய நகைச்சுவை. ஆனால் கதை என்ற அம்சத்துக்குத் திருப்பங்கள் வாசகனுக்கு சுவாரஸ்யத்தை வழங்குவன. கதை என்ற அம்சத்தை உள்ளீடாகக் கொண்டிருக்கும் நாடகம், சினிமா இரண்டுக்குமே அதி முக்கியமான அம்சம் இது.

அண்மையில் இணையத்தில்  வாய்வழிப் பழங்கதையொன்றைப் படித்த போது அதன் இறுதித் திருப்பம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இன்று பல்வேறு பெயர்களில் இந்தத் திருப்பங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டார் கதைகளில் நிலவி வந்திருக்கின்றன என்பதும் இன்று சிறுகதையும் கதை சார் கலை, இலக்கியமும் எந்த உயரத்துக்குப் போயிருந்தாலும் அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவை இவ்வாறான நாட்டார் கதைகள்தாம் என்பதை மறுக்க முடியாது.

அரேபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த ஓர் அரசன் தன் அழகிய மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான். அருகேயுள்ள சிற்றரசுகளிலிருந்து மூன்று இளவரசர்கள் அவளைத் திருமணம் செய்யும் நோக்குடன் வந்திருந்தனர். முதலாமவன் அதிகார தோரணை கொண்டவனாகவும் இரண்டாமவன் பழக்கவழங்கங்களில் சுத்தமற்றவனாகவும் மூன்றாமவன் கிறுக்கு மாதிரியும் இளவரசியின் பார்வைக்குத் தோற்றினார்கள். 'இவர்களில் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை' என்று தந்தையிடம் முறையிட்டாள் அவள். அரசர் சாமார்த்தியமாக மூவரையும் அடுத்த தினம் வரும்படி கூறியனுப்பினார்.

அடுத்த தினம் மூவரும் வந்து சேர்ந்ததும் அரசன் சொன்னான்:- 'நீங்கள் மூவரும் எனது மகளுக்குப் பொருத்தமானவர்கள்தாம். ஆனால் ஒருவரைத்தான் திருமணம் செய்து வைக்க முடியும். எனவே நீங்கள் மூவரும் உலகத்தில் எந்த மூலைக்காவது செல்லுங்கள். ஓர் அதிசயமான பொருளுடன் யார் திரும்பி வருகிறீர்களோ அவருக்கு மகளைத் திருமணம் செய்து தருவேன். ஒரு வருடமும் ஒரு நாளும் உங்களுக்கு அவகாசம் உள்ளது!'

மூவரும் கிளம்பி ஒரு பாழ் கிணற்றருகே வந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவகாச நாள் முடிவதற்கு ஒரு வாரம் இருப்பதற்குள் இதே மூவரும் சந்தித்துத் தாம் தேடியடைந்த பொருளை ஒருவருக்கொருவர் பார்த்து விட்டு அரசனைச் சந்திப்பது அந்த ஒப்பந்தம். அதே இடத்தில் மூன்று பாதைகளில் மூவரும் பிரிந்து சென்றார்கள்.

குறித்த தினத்தில் மூவரும் வந்து சேர்ந்தார்கள். முதலாமவன் கையில் ஒரு பளிங்கு உருண்டை இருந்தது. 'உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இதில் பார்க்க முடியும்' என்றான் அவன். இரண்டாமவனிடம் ஒரு பறக்கும் விரிப்பு இருந்தது. 'இதில் அமர்ந்தால் உலகத்தின் எந்த மூலைக்கும் போய்ச் சேரலாம்' என்றான் அவன். மூன்றாமவனிடம் ஒரு டப்பாவில் களிம்பு வகையொன்றிருந்தது. அவன் சொன்னான்:- 'நோயுள்ளவர்களுக்கு இதைத் தேய்த்தால் உடனே குணமாகும். விரும்பியவர்களுக்கு உண்மையான அன்புடன் இதைத் தேய்த்தால் அவர்கள் இளமைக்குத் திரும்புவார்கள்!'

மூவரும் இரண்டாமவனின் விரிப்பில் ஏறியமர்ந்து அரசலைக்குள் சென்றிறங்கித் தமது பொருட்பளை அரசனிடம் காட்டி விபரம் சொன்னார்கள். அரசனுக்குப் பெருங்குழப்பம். அவர்களை அடுத்த தினம் வருமாறு கேட்டுக் கொண்டான். அன்றிரவு இப்பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்று பிரதம மந்திரியுடன் ஆலோவனை செய்தான். 'நமது நாட்டில் ரஷ்யா என்று சொல்லப்படுகின்ற தேசத்தில் இருந்து வந்து நீண்ட காலமா வாழும் ஞானி ஒருவர் இருக்கிறார். அவரை அழைத்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்' என்று அவர் ஆலோசனை சொன்னார்.

அடுத்த நாள் மன்று கூடிற்று. இளவரசர்கள், ரஷ்ய மூதறிஞர், மந்திரிப் பிரதானிகள், தோழியர் புடை சூழ இளவரசி, நாட்டு முக்கியஸ்ர்கள் குழுமியிருக்க பிரச்சனை மூதறிஞரிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு அவர் சொன்னார்:- 'மூவரும் சரிசமமான பாத்தியதையுடையவர்கள். இந்த விடயத்தில் இளவரசிதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே சரியானது, நியாயமானது.

அமைதி குலைத்து இளவரசி தன் அரசணையிலிருந்து கீழே இறங்கினாள். நேரே மூதறிஞர் அருகே சென்று 'நான் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்றாள். அவை மௌனத்தில் உறைந்திருக்க தோழியர்கள் மயங்கி விழும் சப்தம் மட்மே மண்டபத்தில் எதிரொலித்தது.

'இளவரசி... நீ என்ன சொல்கிறாய்?' - அதிர்ந்தார் அரசர்.

இளவரசி எதையும் சட்டை செய்யாது மூன்றாவது இளவரசன் கையில் இருந்த களிம்பு டப்பாவை எடுத்து கிழவனான அறிஞனின் கையில் தேய்த்தாள். ஒரு நிமிடத்தில் கிழவன் அழகான இளைஞனாக மாறினான். இளவரசியை நோக்கி ஒரு காதல் புன்னகை சிந்தினான்.

இது ஒரு நாட்டார் கதைதான். ஆயினும் ஒரு சிறுகதை போன்று வர்ணனை, உரையாடல் என்று எழுதப்பட்டிருந்த கதையின் சுருக்கதையே இங்கு தந்திருக்கிறேன்.

இக்கதை அக்காலத்தின் அறபுத் தீபகற்ப அரசியலைப் பேசுகிறது என்று நான் நம்புகிறேன்.

நன்றி - மீள்பார்வை

Tuesday, June 9, 2015

அவளுக்கும் அழுகை என்று பெயர்!


 - 21 -

ராபியா வழமையைப் போல உரிய நேரத்துக்கு ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அவளது முகம் வியர்த்திருந்ததை ஆசிரியை அவதானித்தார். ஆசிரியையின் வீட்டுக்கும் அவளது வீட்டுக்கும் வெறும் இருபது யார் தூரம்தான். இப்படி வியர்க்க விருவிருக்க அவள் வரவேண்டிய அவசியம் கிடையாது. இதற்கு முன்னர் அப்படி நிகழ்ந்ததும் இல்லை.

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறாள் ராபியா. குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளை. படிப்பில் 70 வீதத்துக்கு மேல். பொது அறிவு - சமூக அறிவு 90 வீதத்துக்கும் மேல். தேசத்தின் பெருந்தலைநகருக்கு வெளியே புறநகரொன்றின் 'ஏனோதானோ' முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மாணவி.

இன்று அவளுக்கும் ஆசிரியையிடம் 'எலொகேஷன்' கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பரீட்சை தினம். பரீட்சை 9.30க்கு ஆரம்பமாகி விடும். ஆசிரியையின் வீட்டிலிருந்து கணக்கிட்டால் ஏறக்குறைய 25 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பிரபல அரச பாடசாலையில்தான் பரீட்சை நடக்கிறது.

பல பெற்றோர் தமது பிள்ளைகளைத் தாமே பரீட்சைக்கு அழைத்துச் செல்லப் பொறுப்பேற்றுக் கொள்ள எஞ்சியது ராபியாவும் ஆசிரியையின் சகோதரியும் மாத்திரமே. அன்றைய வேறு தவிர்க்கவே முடியாத குடும்பச் சிக்கல் காரணமான ஆசிரியைக்குப் பரீட்சை நிலையம் வரை செல்ல முடியவில்லை. எனவே ஒரு முச்சக்கர வண்டியொன்றைப் பேசி இருவரையும் அனுப்பிப் பரீட்சை முடிவடைந்ததும் மீளக் கொண்டு வர ஆசிரியை தீர்மானித்தார்.

முதல் நாளிரவு ஆசிரியையினால் முச்சக்கர வண்டி பேசித் தீர்மானிக்கப்பட்டது. அந்த முச்சக்கர வண்டிக்குரியவர் ராபியாவின் தந்தை. காலை மகள் பரீட்சைக்குப் புறப்படும் மகளைக் கண்ட பிறகுதான் ஆசிரியையால் பேசப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணம் செய்ய இருக்கும் மாணவிகளில் ஒருத்தி தனது மகள் என்பது தெரிய வந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை, காலை ஏழு மணிக்கெல்லாம் முச்சக்கர வண்டி வராது என்று ஆசிரியைக்குத் தகவல் தரப்பட்டது.

முச்சக்கர வண்டிக்காரரின் முடிவு ஆசிரியைச் சிக்கலில் மாட்டி விட்டது. பரீட்சை மண்டபத்துக்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது எடுக்கும். இன்னும் அரை மணி நேரத்தில் வேறு ஒரு முச்சக்கர வண்டி ஒன்றைத் தேடும் அவசரத்தில் பலருக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் நின்றிருந்த வேளையில்தான் ராபியா வியர்த்து விருவிருக்க ஆசிரியை வீட்டுக்குள் நுழைந்திருந்தான். அவள் எந்த வழியிலாவது பரீட்சைக்குச் சென்று விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்திருந்ததை அந்த இக்கட்டான நிலைமைக்குள்ளும் ஆசிரியையால் உணர முடிந்திருந்தது.

ஆசிரியையைப் பொறுத்த வரை ஒரு நல்ல சிநேகிதியைப் போல் பழகுபவள் ராபியா. கற்க வேண்டும் என்ந பேரவா கொண்டவள். பாடசாலையின் புறக்கிருத்தியச் செயற்பாடுகளில் பெரும் அர்ப்பணம் கொண்டவள். எந்த ஒரு விடயத்தையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் சின்னப் பெண்.

ராபியா ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்து விருட்டென காரியாலய அறைக்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே வேறு ஒரு நம்பிக்கையான நபரின் முச்சக்கர வண்டி தேடும் முயற்சியில் ஆசிரியை ஈடுபட்டுக் கொண்டிருந்து தோல்வியடைந்து மனம் சலித்த நிலையில் காரியாலய அறைக்குள் நுழைந்த போது 'திக்' என்றது. ஆம் ராபியா பிழியப் பிழிய அழுது கொண்டிருந்தாள். தனது தந்தையார் செல்ல மறுத்த காரணத்தால் இவ்வளவு அழ வேண்டியதில்லை என்று நினைத்த ஆசிரியை அவளைச் சமாதானப்படுத்த முயன்றார்.

ஆனால் அழுகை நிற்கவில்லை. ராபியா அழுது ஆசிரியை பார்த்ததில்லை. புன்னகையும் சிரிப்புமாக ஒரு பட்டாம்பூச்சி போல் வளைய வரும் சின்னப் பெண் அவள். பரபரப்பும் உற்சாகமுமாகவே கண்டு பழகிய ராபியா தேம்பித் தேம்பி அழுவதைக் காணச் சகிக்கவில்லை ஆசிரியைக்கு. மிகுந்த போராட்டத்துக்குப் பின்  அவளது அழுகை தணிந்ததே தவிர முடிவடையவில்லை. எதுக்காக இப்படி அழுகிறாய்? என்று ஆசிரியை கேட்ட போது அவள் தேம்பிய படியே சொன்னாள்:-

'வாப்பா... வாப்பா... சோதினையும் தேவல்ல.. படிப்பும் தேவல்ல என்டு சொல்லுறாரு... பொம்புளைகள் படிச்சி என்னத்த செய்யப் போறீங்க என்டு சத்தம் போட்டாரு... என்னத்தப் படிச்சாலும் குசினிக்குள்ளதானே இருக்கப் போறாயென்டு சொன்னாரு...' என்றவள் மீண்டும் உரக்க அழ ஆரம்பித்தாள்.

அதைக் கேட்ட ஆசிரியைக்குக் கோபம் வந்தது. பஸ்ஸின் இலக்கங்களைச் சொல்லிக் கொடுத்து 'போங்க.. இரண்டு பேரும் பஸ்ஸில் போய் நல்லா சோதினைய எழுதிட்டுத் தைரியாமாத் திரும்பி வாங்க..' என்று அனுப்பி வைத்தார்.

இறுகிய உறுதியான முகத்துடன் ராபியாவும் மற்றைய மாணவியும் படியிறங்கினார்கள்.

'கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் இருவருக்கும் கட்டாயக் கடமையாகும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்' - என்று மௌலவியான ராபியாவின் தந்தை எங்கோ ஒரு பள்ளிவாசலில் உபந்நியாசம் செய்யும் காட்சி ஒரு நிமிடம் ஆசிரியையின் மனக்கண்ணில் விஸ்தாரமாக விரிந்து மறைந்தது.

நன்றி - மீள்பார்வை

Tuesday, May 26, 2015

வேர்கள் இறக்கும் விதம்!

எனக்குள் நகரும் நதி - 20 

'தாம் செய்வது தப்பு என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்!'

அண்மையில் என்னை நட்புக் கருதிச் சந்திக்க வந்த சகோதரர் தொடர்ந்தார்.

'பாவமான காரியத்தைச் செய்கிறோம் என்பதையும் உணர்ந்தேயிருக்கிறார்கள். தாம் செய்வற்றை மிகவும் அவதானமானவும் நுணுக்கமாகவும் மேற்கொள்கிறார்கள். ஹலால் ஹராம் விடயத்தில் அவர்கள் எல்லோருமே மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் என்று தெரிந்தும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறீர்களே? என்று கேட்டால் 'எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் சோறு போடுவீர்களா?' என்று ஒற்றைக் கேள்வியை நம்முன்னால் வீசுகிறார்கள்!'

சகோதரர் அரச ஊழியர். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்த அவதானங்களை மேற்கொள்ளும் அரச ஊழியர். ஒரு பிராந்தியத்தின் மூன்று குக்கிராமப் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத, மார்க்க விரேத விடயங்களைப் பற்றிய தகவல்களை என்னுடன் கவலை தோய்ந்த முகத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

கஞ்சா, போதை லேகியம் மற்றும் விபசாரம் ஆகியன வியாபார மயமாகி அமோகமாக நடந்து கொண்டிருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். போதைதரும் வஸ்துக்களின் வியாபாரத்தில் பெண்களும் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமான விசயம். ஆபத்தான வியாபாரமாக இருந்தாலும் அவர்கள் தைரியத்துடனும் கெட்டித் தனத்துடன் ஈடுபடுவதையும் அது குறுகிய ஈடுபாட்டில் நிறையப் பணத்தை ஈட்டிக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது என்பதையும் அந்தச் சகோதரர் குறிப்பிட்டார்.

குற்றம் உறுத்தாத மனோநிலை வளர்ந்த பிறகு அதிலிருந்தும் கிடைக்கும் மேலதிக பணத்திலிருந்தும் மேலும் மேலும் தீங்குகள் பரவ ஆரம்பிக்கின்றன. பின்னர் பணம் என்ற ஒன்றுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்குரிய தயார் நிலைக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். குறிப்பாக அவர்களது பிள்ளைகள் இவற்றைப் பார்த்தும் கேட்டும்தான் வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவோ சமூகத்துக்கு உரமானவர்கவோ எப்படி வளர முடியும்? இவ்வாறான சூழலுக்குள் வளரும் ஒரு நல்ல பிள்ளையும் கூட சந்தேகத்துக்குரிய பிள்ளையாகவே நோக்கப்படும் அபாயம் உண்டு.

சமூகத்தின் வறிய நிலை பற்றிய தொட்டுக் காட்டல்கள் மேற்கொள்ளப்படும்ம் போதெல்லாம் 'முற்றாக வறுமையை ஒழித்து விட முடியாது' என்றும் 'எல்லாக் காலங்களிலும் எல்லாத் தேசங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் ஒரு சாராரிடம் வறுமை நிலவிக் கொண்டேயிருந்திருக்கிறது' என்றும் படிப்பாளிகள் சிலர் கணக்குக் காட்டி விட்டு நழுவி விடுகின்றனர். அது சரியாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

அப்படியானால் வாழ்வின் சகல துறைகளிலும் தெளிவும் வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கும் சூழலில் சக மனிதன் வாழ்வு குறித்த அக்கறை வளர்ச்சியடையவில்லை என்றல்லவா அர்த்தமாகி விடுகிறது. வாழ்வின் நவீன முன்னேற்றங்களால் மனிதாபிமானம் மட்டும் பின் தங்கி இருக்கிறது என்றால் அது பூரணத்துவமான வளர்ச்சி அல்ல என்றல்லவா அர்த்தப்படும்?

சிறப்புற்ற நடுநிலமைச் சமுதாயம் என்று பெயர் பெற்ற இஸ்லாம் என்ற வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தில் இவ்வாறான இழிநிலை அடியோடு அழிந்து விடாதிருந்தாலும் பெரிய அளவில் நிலவுவதற்கு இடமில்லை அல்லவா?  அப்படியாயின் தவறு எங்கேயிருக்கிறது? அதைக் கண்டு பிடிப்பவர்கள் யார்? அதற்கான மாற்றுத் திட்டங்களை வகுப்பது யார்? செயல்படுத்துவது யார்? நான் என்னளவில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமாக இருக்கிறேன் என்ற நமது அளவுகோல் முடிவுடன் வாழும்  நாம் அனைவரும் இந்த நிலைக்கு ஜவாப்தாரிகள் இல்லையா?

லட்சக் கணக்கான புத்தகங்கள் வருகின்றன, பத்திரிகைகள் வருகின்றன, நடந்தும், எழுதியும், பேசியும் தஃவா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்க்கப்பணி, அடிப்படை மனிதப் பணி என்ற பெயரால் கோடிக் கணக்கான அறபுப் பணம் பல பகுதிகளிலும் இறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய நிலையில் மேம்பட்டிருக்கும் தஃவாப் பணி இடம் பெறாத, அடிப்படை மனித உதவி என்ற பெயரால் பணம் இறைக்கப்படாத ஒரு கால கட்டத்தில் இத்தகைய பெருமளவிலான இழி நிலை முஸ்லிம் சமூகத்தில் இருந்தது கிடையாது.

அரசியல் விவகாரமாகட்டும், மார்க்க விவகாரமாகட்டும்... ஒவ்வொருவரும் தம்மை முற்படுத்திக் கொள்ளவும் தமது அணியை நியாயப்படுத்திக் கொள்ளவும் தமது குழுவுக்கு வெள்ளையடிக்கவும் விவாதம் நடத்தவுமே நமக்குக் காலம் சரியாக இருக்கிறது. அற்பமான ஒற்றை வசனத்துக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரம் பேர் கூடி ஆளுக்கொரு அர்த்தம் கொடுத்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எதுமுக்கியம், எது முக்கியமல்ல என்ற தெளிநிலைக்கு அப்பால் நின்று 'நீ சொல்வது பிழை - நான் சொல்வது சரி' என்பதில் தொங்கிக் கொண்டு அடிபிடிப்படுகிறோம்.

இவற்றையெல்லாம் கடந்து சமூக ரீதியான விடயங்களை முற்படுத்தி ஒன்று படுவதன் மூலமே இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்க முடியும்.

முஸ்லிம் சமூகம், இஸ்லாம் என்று வந்து விட்டாலே உனது இஸ்லாம், எனது இஸ்லாம் என்று பாகுபாடு துவங்கி விடும் சூழலில் இதுவெல்லாம் என்று சாத்தியப்படும் என்றுதான் தெரியவில்லை.  

நன்றி - மீள்பார்வை

Tuesday, May 12, 2015

மூன்று காட்சிகள்!

 - 19 -

காட்சி - 1

ரமளான் மாதம்! ஒரு நாள் மாலை 6.00 மணி. ஆமர் வீதி போலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சிக்னலைத் தாண்டி விடவேண்டும் என்று வந்த வண்டியால் கடக்க முடியவில்லை. சிவப்பு விளக்குச் சமிக்ஞை விழுந்து விட்டது. வேகமாக வந்த அந்தக் கார், நிறுத்தியாக வேண்டிய கோட்டுக்குள் நிறுத்த முடியாமல் ஓர் அடி தூரம் தாண்டி நின்றது. வாகனம் நிறுத்த வேண்டிய கோட்டுக்கு அப்பால் பாதசாரிகள் கடவை!

வீதியின் மத்தியில் நின்று சிவப்பு விளக்குச் சமிக்ஞை விழுந்ததும் பாதசாரிகள் கடவையில் இறங்கிய அந்த இரண்டு இளைஞர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டிக் கார் முன்னால் வருவதைக் கண்டு அதிர்ந்து பின் வாங்கினார்கள். இருவருக்கும் 16 அல்லது 17 வயது இருக்கும். அதற்குக் குறைவாக இருக்கலாமே தவிர கூடுதலாக இருக்க முடியாது. இருவர் தலைகளிலும் தொப்பி. அவர்கள் கிராண்பாஸ் வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு நோன்பு துறக்கச் செல்வதற்காகப் பாதை கடக்க முற்பட்டவர்கள்.

பின்வாங்கிய இருவரும் காரின் அருகே வெகு இயல்பாக நெருங்கிக் காரின் சாரதியின் பக்கக் கண்ணாடியைக் கீழிறக்கச் சைகை செய்தார்கள். சாரதி கண்ணாடியைக் கீழிறக்கிறதும் அவர்களில் ஒருவன் சாரதியின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். கோடு தாண்டியது குற்றம் என்று சைகையால் சொல்லித் திட்டினான். சாரதி உறைந்து போயிருக்க அவர்கள் தெருவைக் கடந்து போனார்கள் வெகு சாதாரணமாக!

அந்த வாகனத்தைப் பினனால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த எனக்கு வாகனத்தின் ஏஸியையும் தாண்டி வியர்த்தது!

காட்சி - 2

தெமடகொட - பேஸலைன் வீதியில் ஆரம்பமாகி உள்ளே செல்லும் பாதைகளில் ஒன்று. நான் அந்தப் பாதைக்குள் காரைத் திருப்பிய போது இரவு 7.30 அளவில் இருக்கலாம். அந்தத் தெருவில் இரண்டு வாகனங்கள் செல்லவும் வரவுமான இடம் உண்டு. அதாவது ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால் மற்றொரு வாகனம் செல்லுமளவு மாத்திரம் செல்ல முடியும்.

தெருவுக்குள் நுழைந்து 25 யார் கூடச் சென்றிருக்க மாட்டேன். ஒரு வீட்டின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. ஒரு புறம் நான்கு வாகனங்கள். அடுத்த பக்கம் இரண்டு வாகனங்கள். நடந்து செல்பவர்கள் நெளிந்து புகுந்து சென்று கொண்டிருந்தார்கள். என்னால் தாண்டிச் செல்ல முடியவில்லை.

அது ஒரு முஸ்லிம் திருமண வீடு. உள்ளே பெருந்தொனியில் கஸீதா ஒலித்துக் கொண்டிருந்தது. நான் 'ஹோர்ன்' அடித்தேன். கொத்துக் கொத்தான நகைகளுடன் மினுக்கப்பட்ட முகங்களுடன் அவ்வீட்டுக்குள் பெண்கள் நுழைந்து கொண்டிருந்தனர். அவ்வப்போது கோட் ஷூட் போட்ட நபர்கள் தெருவுக்கு வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தனர். ஆனால் யாருக்கும் வாகனம் ஒன்று தாண்டுவதற்குக் காத்து நிற்பது குறித்து எந்தக் கவனமும் இருக்கவில்லை.

நான் அமைதியாக, பொறுமையாகக் காத்திருந்தேன். பின்னால் ஒரு முச்சக்கர வண்டி வந்து நின்றது. மேலும் பத்து நிமிடங்கள் கழிந்ததும் முச்சக்கர வண்டிக்காரர் கோபத்துடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து வெளியில் வந்தார். அதற்குப் பிறகும் ஐந்து நிமிடங்கள் கழிந்து ஒருவர் வெளியே வந்து ஆர்வமில்லாத போக்கில் ஒரு புற வாகனங்களை ஒதுக்கித் தந்தார்.

காட்சி - 3

கிராண்பாஸ் வீதி முழு மொத்தமாக அந்த மதிய வேளை வாகனங்களால் நிரம்பி வழிந்தது. நான் சந்தி கடந்தால் அடுத்த தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அந்தத் தெருவிலேயே அரை மணி நேரம் கழிந்திருந்தது. சந்தியை நோக்கி மெது மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்து நின்ற ஒரு முச்சக்கர வண்டி தொடர்ந்து 'ஹோர்ன்' சத்தம் எழுப்பிக் கொண்டேயிருந்தது.

எனது வாகனத்துக்கு இடது பக்கத்தால் புகுந்து செல்ல அவர் எத்தனிக்கிறார் என்று புரிந்தது. ஆனால் ஒதுங்கி இடம் கொடுக்க வசதியிருக்கவில்லை. அப்படி நகர்த்தினால் காரின் ஒரு பக்கத்தைத் தேய்த்துக் கொண்டு செல்ல ஒரு டிப்பர் வாகனம் தயாராக இருந்தது.

அந்த இடத்திலேயே பதினைந்து நிமிடம் கழிய வாகனங்கள் நகர நானும் நகர்த்தினேன். அந்த இடைவெளிக்குள் என்னை முந்திய முச்சக்கர வண்டிக்காரர் தமிழில் என் வம்சத்தை இழுத்துக் கொழும்புத் தமிழில் தூஷணத்தால் திட்டியது மொத்தமாக மூடியிருந்த வாகனத்துக்குள்ளும் தெளிவாகக் கேட்டது. நான் எதுவும் காதில் விழாதது போல் வாகனத்தை நகர்த்தினேன்.

முச்சக்கர வண்டியில் அமர்ந்திருந்த முஸ்லிம் பெண்மணி அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல் வெட்கத்தில் முகத்தை இரு கைகளாலும் மூடியபடி குனிந்து அமர்ந்திருந்தார். முச்சக்கர வண்டி எனது வண்டியைத் தாண்டியதும் பார்த்தேன்.

பின் கண்ணாடியில் 'லாஇலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர்ரஸூலுல்லாஹ்;' என்ற கலிமா ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது!

Tuesday, April 28, 2015

வினாக்களை விதைக்கும் நூல்


 - 18 -

ஆறுவயது அல்லது ஒன்பது வயதுச் சிறுமியை ரஸூலுல்லாஹ் திருமணம் செய்தார்கள் என்ற விடயத்தை மறுக்கும் ஒரு நூல் தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கிறது.

'அறபுகளின் நாயகி' என்ற தலைப்பில் அமைந்த இந்த 76 பக்க நூலை ஐரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது திருமணம் பற்றிய புனைவுகளும் உண்மைகளும் - என்ற உப தலைப்போடு அழகிய வடிவில் வெளிவந்திருக்கும் இந்நூலை எழுதியிருப்பவர் பயாஸ் அப்துர் ரஸ்ஸாக்.

மிகவும் தெளிந்த தமிழில் யாரால் வேண்டுமானாலும் படித்து உடனே புரிந்து கொள்ளும் விதத்தில் அண்மைக் காலத்தில் வெளிவந்த நூல்கள் இரண்டினைப் படித்திருக்கிறேன். ஒன்று நூருத்தீன் எழுதிய ஸஹாபாப் பெண்மணிகள் பற்றிய 'தோழியர்' என்ற நூல். மற்றையது 'அறபுகளின் நாயகி.

'அபூதாலிப் அவர்களைப் பற்றிய ஒரு நூல 2009; ல் பயாஸ் அப்துல் ரஸ்ஸாக் எழுதினார். அதன் பிறகு ஆமினா - அப்துல்லாஹ் என்ற தலைப்பில் 2012ல் மற்றொரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். தெளிவான மொழி நடை கைவரப் பெற்ற இவரது நூல்கள் ஆரம்பித்தது முதல் அலுப்பு வராமல் படிக்கத் தூண்டுபவை. 'அறபுகளின் நாயகி' என்ற இந்த நூலும் இலக்கியச் சாமார்த்தியம் கொண்;ட ஒரு கலந்துரையாடல் கதை போலக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்வது படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

ஆயிஷா நாயகி - றஸூலுல்லாஹ்வின் திருமணம் அன்னையின் ஆறு வயதில் நடந்தது என்பதைக் குறிக்கும் ஒற்றை ஆதாரத்தை நூலாசிரியர் கேள்விக்குட்படுத்துகிறார். அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் மற்றும் அன்னை அஸ்மா (ரலி) ஆகியோரின்  வயதுக் கணக்குகள் மற்றும் நபித்துவம் அருளப்பட்ட காலப் பிரிவையும் அன்னை ஆயிஷா அவர்களது பிறப்புப் பற்றிய தகவல்களையும்  மேலும் பல அம்சங்களையும் முன் வைத்து இத்திருமணம் அன்னையின் 12 முதல் 21 வயது வரையான காலப் பகுதியில் நடந்திருக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

இந்த நூலை வாசித்து முடித்த போது எனது மனதில் ஏகப்பட்ட வினாக்கள் எழுந்து நின்றன. அறபுத் தேசங்களின் பல்கலைக் கழகங்கள் ஒவ்வொரு துறையிலும் ஆய்வுகளை நடத்திக் கொண்டேயிருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படியெனின் முகம்மது (ஸல்) - அன்னை ஆயிஷா (ரலி) ஆகியோர் திருமணம் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? ஓர் அஜமியான அப்துல் ரஸ்ஸாக் முன் வைக்கும் கேள்விகள் அறபிகளுக்கும் அறபு ஆய்வாளர்களுக்கும் இஸ்லாமிய சிந்தனையாளர்களுக்கும் எழாதது ஏன்? அவர் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்களை அவர்கள் எழுப்பி அது குறித்து ஆய்வு செய்துள்ளனரா? இல்லையாயின் ஏன்?

ஆட்சியாளர்களுக்கு ஏற்றவாறு மார்க்கத்தை மாற்றிக் கொள்ளத் தலையசைக்க மறுத்த பல இமாம்கள் சிறைகளில் இருந்திருக்கிறார்கள், சித்திரவதை அனுபவித்திருக்கிறார்கள், நாடுகளை விட்டே தப்பி ஓடியும் இருக்கிறார்கள். இந்த விடயம் ஆய்வுக்குட்படாததின் பின்னணி அங்கிருந்து தொடர்கிறதா? இளவயதுப் பெண்களைத் திருமணம் செய்யவும் அடிமைச் சேவகம் செய்யவும் அரசு கட்டில் முதல் அறிஞர் பெருமக்கள் வரை இதை வசதியாகக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா?  இவ்வாறு பல கேள்விகள் ஒரு சாதாரணனான எனக்கு இதைப் படிக்கும் போது எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆலிம்கள் அல்லாத சிந்தனையாளர்களால் புத்திஜீவிகளால் ஆதாரங்களோடு முன்வைக்கப்படும் மார்க்கம் மற்றும் வரலாறு பற்றிய விடயங்களைச் சிந்தனைக்கு எடுத்து அது பற்றிய சரியான தெளிவை வழங்குவதற்கு நமது மார்க்க அறிஞர் பெருமக்கள் முன்வர வேண்டும். இது குறித்த ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதை சமூகத்தின் முன் வைக்கப்பட வேண்டும்.

இந்த நூல் இலங்கையில் இஸ்லாமிய சிந்தனை குறித்து ஆழப் Nபுசும் பலருடைய கரங்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்று அறியக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இது குறித்து பொது வெளியில் முன்வைத்த எந்தக் கருத்தும் இதுவரை எனது கண்களில் படவில்லை.

யாரும் வினாக்களை முன்வைக்கும் போதெல்லாம் பத்வாக்களைக் கொடுப்பதிலும் பயங்காட்டுவதிலும் உனக்கு அறபு தெரியாது, மார்க்கம் தெரியாது என்று எள்ளி நகையாடுவதிலும் ஆர்வம் காட்டுவோர் இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கொடுத்துவிட்டும் தொடர்வது நல்லது என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
---------------------------------------------------------------------------

குறிப்பு - இந்தப் பத்தி எழுதி அனுப்பப்பட்ட பின்னர் ஒரு சிலர் இந்நூல் குறித்துத் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்ததை முகநூல் மூலம் அறியக் கிடைத்தது.


Tuesday, April 21, 2015

எல்லைக்குள்ளும் ஏராளம் இடமுண்டு!


 - 17 -

வார்த்தைகளால்தான் ஆனது கவிதை என்ற போதும் அதனை ரசிக்கின்ற ஆன்மா அனுபவிக்கும் இன்பத்தை வார்த்தைகள் கொண்டு சரியாக விபரிக்க முடியாது என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு!

இஸ்லாம் என்பது விரிவாகப் பேசவும் எழுதவும் தெளியவும் என்று ஆன நிலை ஏற்பட்ட பிறகு கவிதையின் எல்லை பற்றிய புரிந்துணர்வு ஓரளவுக்குத் திருப்தி தரக் கூடியதாக மாறியிருக்கிறது. ஆயினும் நீண்ட காலமாக கவிதை என்பது ஒழிக்கப்பட வேண்டிய அம்சமாகவும் அப்படியே பயில வேண்டும் என்ற அவசியம் இருக்குமாயின் அல்லாஹ், நபிகளார், ஸஹாபாக்களைப் போற்றிப் பாடுப்படுவதாகவும் இஸ்லாத்தின் கடமைகளை விவரிப்பதாகவுமே இருக்க வேண்டும் என்ற ஒரு நிலையிலிருந்து வேறு ஒரு தளத்துக்குச் ; செல்வதில் இன்னும் மனத் தடை மற்றும் புரிதல் தடைகள் இருககத்தான் செய்கின்றன.

யார் யார் இஸ்லாத்தை எப்படி விளங்கி வைத்திருக்கிறோமோ அந்த அளவிலேயே நமது கவிதையும், கலைகளும் தரித்து நிற்கின்றன. சற்று அதிகமாகப் போவது என்றால் பலஸ்தீனப் போராளிகளுக்கான ஆதரவு, முஸ்லிம் சமூகத்தின் அவலங்கள் வரை அது நீள்கிறது.

விலக்கப்பட்ட அம்சங்களைப் புகழ்ந்தோ வேண்டியோ சிலாகித்தோ பாடுவதைத் தவிர்த்தால் ஏனையவை அனைத்தும் இஸ்லாம் என்ற வரையறைக்குள் வந்து விடும். ஆனால் 'எல்லை' மற்றும் 'வரையறை' ஆகியவற்றை ஒரு பூதம் போல நினைத்து மறுகிக் கொண்டிருப்பதால் நமது சிந்தனைகள் மேற்கொண்டு நகர்வதாயில்லை. கடந்த காலத்தில் இஸ்லாமியக் கவிதை என்று நினைத்துக் கொண்டு வெறும் அறபுச் சொற்களையும் வரலாற்றுச் சம்பவங்களையும் எந்த ரசனையும் இல்லாமலே எழுதி வருவது போலவே இன்றும் எழுதி வருகிறோம். சோடிக்கப்பட்ட, வலிந்த சம்பவங்களும் வார்த்தைகளும் எல்லைக்குட்பட்ட கவிதை இலக்கியத்தைச் சிதைத்தே வந்திருக்கின்றன, வருகின்றன.

இங்கே பிரபல பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூது தர்வேஷ் அவர்களது கவிதை ஒன்றைத் தருகிறேன். யூஸூப் (அலை) அவர்களைப் பலஸதீனர்களாகவும் யூதர்களை, யூஸூப் நபியைக் கிணற்றில் தள்ளிய சகோதரர்களாகவும் அவர் இந்தக் கவிதையில் சித்தரிக்கும் அழகைப் பாருங்கள். இறுதியில் அல்ஆன் வசனம் ஒன்றுடன் கவிதையைப் பொருத்தமாக நிறைவு செய்கிறார். இந்தக் கவிதை பலஸ்தீனத்துக்கு மட்டுமன்றி எந்த ஒரு நாட்டிலும் ஓர் இனம் இன்னொரு இனத்தைக் கருவறுப்பதை எடுத்துச் சொல்லப் பொருத்தமான கவிதையாக இது அமைந்திருக்கிறது.

எனது தந்தையே..
நான் தான் யூஸூப்!

எனது தந்தையே..
எனது சகோதரர்கள் 
என்னை விரும்புகிறார்களில்லை!

அவர்களுக்கிடையில்
நானும் ஒருவனாயிருப்பதை
அவர்கள் விரும்புகிறார்களில்லை!

அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்,
கற்களையும் சொற்களையும்
என்னை நோக்கி வீசுகிறார்கள்!

நான் மரணிக்க வேண்டும்
என்பது அவர்களது விருப்பம்,
அப்படி நடந்தால்
அவர்கள் என்னைப் புகழுவார்கள்!

உங்களது வீட்டுக் கதவை
இறுகப் பூட்டுகிறார்கள்,
என்னை வெளியில் விட்டு விட்டு!

வெளிகளிலிருந்து
என்னைத் துரத்தியடிக்கிறார்கள்!

எனது திராட்சைப் பழங்களில்
அவர்கள் நஞ்சு கலக்கிறார்கள்!

என் தந்தையே
எனது விளையாட்டுப் பொருட்களையெல்லாம்
அவர்கள் உடைத்து விட்டார்கள்
எனது தந்தையே...

எனது தலை மயிர்களில்
தென்றல் விளையாடுவதைக் கண்டு
அவர்கள் பொறாமைப்படுகிறார்கள்!

உங்கள் மீதும் என் மீதும்
அவர்கள்
வெறித்தனமாகத் தீ மூட்டுகிறார்கள்!

அவர்களிடமிருந்து
நான் எவற்றைக் களவாடினேன் தந்தையே?

எனது தோளில் 
பட்டாம்பூச்சிகள் வந்தமர்ந்தன
கோதுமை என்பக்கம் தலை சாய்ந்தது
எனது உள்ளங் கைகளில்
பறவைகள் உறங்கின..

நான் என்னதான் செய்து விட்டேன்
என் தந்தையே?
ஏன் எனக்கு இது?

நீங்கள்தான் யூஸூப் என்று
எனக்குப் பெயரிட்டீர்கள்!

அவர்கள் என்னைக்
கிணற்றில் வீசிவிட்டு
ஓநாயைக் குற்றம் சாட்டினார்கள்

ஓநாய்கள்
என் சகோதரர்களை விடவும்
கருணை மிக்கவை!

தந்தையே
பதினொரு நட்சத்திரங்களும்
சூரியனும் சந்திரனும்
என்னைச் சிரம்பணியக் கனவு கண்டேன்
என்று நான் சொன்னதில்
ஏதாவது தவறு செய்து விட்டேனா?

Tuesday, March 31, 2015

அடைந்து கொள்ளப்படாத ஆயுதம்!

 - 16 -

'சிட்டுக் குருவி.. சிட்டுக் குருவி சேதி தெரியுமா?', 'பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே..!', 'பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்..', 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..!', 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?', 'பூவா மரமும் பூத்ததே..!', 'வானில் முழுமதியைக் கண்டேன்..!', 'ஏரிக்கரையின் மேலே போறவளே..!' - போன்ற பழைய பாடல்களை அறியாதோரும் ரசியாதோரும் இல்லை என்று தைரியமாகச் சொல்லி விடலாம்.

அக்கால சினிமாப் படங்களைத் தூக்கி நிறுத்திய இந்தப் பாடல்கள் இந்த நிமிடம் வரை இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அவற்றின் கவிதை அழகும் மொழியின் லயமும் இசையின் கோலமும் இணைந்து மனித மனங்களின் அழகியல் நாட்டத் தாகத்தைத் தீர்த்து வைத்தமையே காரணம். அசிங்கமான இரட்டை அர்த்தங்களும் மனதைச் சுளிக்கச் செய்யும் காட்சிகளும் இல்லாமல் அருமையான, யதார்த்தமான கதைகளோடு பிணைந்து வெளிவந்த அன்றையத் தமிழ் சினிமாவில் அதே கௌரவத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்துத்தான் பாடல்களும் எழுதப்பட்டன.

இன்றும் இறவாமல் சுகமான ஞாபகத்தில் நிலை கொண்டிருக்கும் இந்தப் பாடல்களை எழுதியவர் ஒரு முஸ்லிம் கவிஞர் என்பது இன்றைய தலைமுறையில் பலருக்குத் தெரிந்திருக்காது. கவி கா.மு. ஷரீப் என்ற அந்த அற்புதமான கவிஞன் பிறந்து கடந்த வருடத்துடன் 100 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.

சினிமா என்றதுமே அந்தச் சத்தம் வந்த திக்கில் காறித் துப்பி விடவோ, கம்பெடுத்துச் சுழற்றவோ எழுந்தமானமாக முனைப்புக் கொள்கிறார்கள். சினிமா என்பது நடிகைகளில் நிர்வாணமும், வெறும் ஆடலும் கூத்தும் கும்மாளமும் சிற்றின்பமுமே என்ற மனப் பதிவே பலருக்கு இருக்கிறது. இவற்றுக்கு மேல் அதில் எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு அதில் எதுவும் இருக்கப் போவதுமில்லைத்தான்.

1948ல் அறிஞர் அண்ணா எழுதிய 'சந்திரமோகன்' என்று நாடகத்தில் கா.மு. ஷரீப் அவர்கள் எழுதிய 'திருநாடே' என்ற பாடலை முணுமுணுக்காதவர்கள் இல்லை என்கிறார் கலைமாமணி விக்ரமன். அந்தாளில் புகழ் பெற்ற 'கொலம்பியா' இசைத் தட்டுக்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். 1857ல் வெளிவந்த 'முதலாளி' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய புகழ் பெற்ற பாடல் 'ஏரிக்கரையின் மேல் போறவளே!' கலைஞர் கருணாநிதியைத் தமிழ் சினிமாவுக்குள் சேர்த்து விட்டவர் கா.மு. ஷரீப் அவர்கள்.

அப்படியானால் முஸ்லிம்களுக்கான சினிமா குறைந்தது 70 களிலாவது கருக் கொண்டிருக்க வேண்டும். குடி, கூத்து, கும்மாளம், அரை குறை ஆடை ஆட்டங்களற்ற, மக்களின் வாழ்வியலைப் பேசும் சினிமாக்கள் அனைத்தும் இஸ்லாமிய வரைமுறைக்குள் வருபவைதான். ஆயினும் மற்றொரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் சினிமா என்பது 'நடிகை', 'நிர்வாணம்' என்ற எண்ணத்தால் நிறைந்து போயிருக்கும் போது அன்றும் காதல் பேசுவது கதையின் அம்சங்களில் ஒன்றாக இருந்த காரணங்களால் மூளை காய்ந்த முல்லாக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும்.

கவி கா.மு.ஷரீப் வெறும் சினிமாக்காரர் மட்டுமல்ல என்பதை அவரது நூற்றாண்டு நினைவாக வெளியிடப்பட்டிருக்கும் மலரில் உள்ள கட்டுரைகள் மூலம் தெரிந்து கொள்ளக் கூடிதாக இருக்கிறது. பணத்துக்குப் பின்னால் அவர் அலைந்தவரில்லை. சிறுகதை நூல்கள் - 3, நவீனம் -1, நாடக நூல்கள் - 4, பயண நூல் - 1, இலக்கியக் கட்டுரை நூல் - 1 என எழுதிக் குவித்தவர். அக்கால சினிமாக்காரர்கள் கூட அவரிடம் ஒதுங்கி நின்று பேசியிருக்கிறார்கள். 'மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் என்ற சான்றிதழ் இஸ்லாத்துக்கு உண்டு. இந்தியாவில் இஸ்லாம் இந்து மதத்துக்கு எதிரானது என்ற கருத்தும் நிலவி வருகிறது. இக்கருத்துத் தவறானது என்பதை விளக்க, கவி கா.மு. ஷரீப் 'இஸ்லாம் இந்து மதத்துக்கு எதிரானதா?' என்று நூலை எழுதினார்' என்கிறார்  கவிக்கோ அப்துல் ரகுமான்.

எந்த நிலையிலும் தலையிலிருந்து அகற்றப்படாத தொப்பி, முகம் நிறைந்த, அழகாகக் கத்திரிக்கப்பட்ட தாடி, எதையும் நிதானமாக உள்வாங்கும் பார்வை, எளிமையான தோற்றம் - இவைதான் கா.மு.ஷரீப். அன்னாரது ஆளுமையும் திறமையும் இருட்டடிக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவி வருவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆளுர் ஷாநவாஸ், கவிஞர் ஜலாலுத்தீன், கவிஞர் உஸ்மான் ஆகிய மூவரின் பங்களிப்புடன் கா.மு.ஷரீப் அவர்களது நூற்றாண்டு மலரை முஸ்தபா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது.

கா.மு.ஷரீப் ஒரு மகா கவிஞன். இஸ்லாமிய சினிமா அல்லது முஸ்லிம்களுக்கான சினிமா அவரிலிருந்த ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் பிறந்து நூறு ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர் எப்படிப்பட்ட ஒரு பக்குவமான வாழ்க்கையை வாழ்ந்தார், கவிதைகளும் பாடல்களும் எழுதினார் என்பதிலிருந்து கற்றுக் கொள்ள முஸ்லிம் சினிமா அல்லது இஸ்லாமிய சினிமாவுக்கு நிறைய இருக்கிறது.

இஸ்லாமிய சினிமா ஓர் ஆயுதம் என்பதை இந்த நூற்றாண்டு கடந்த பின்னராவது சமூகம் புரிந்து கொள்ளும் சாத்தியம் இருப்பதால் அது குறித்து நம்பிக்கையுடன் இருந்து விடலாம். ஆனால் 'பார்த்தீர்களா.. கா.மு. ஷரீப் தாடியை வளரவிடாமல் கத்திரித்து வந்திருக்கிறார்?' என்று நமது 'அறிவுக் கொழுந்துகள்' விமர்சித்து விடுவார்களோ என்ற பயம் என்னை வாட்டி வதைக்கிறது!

நன்றி - மீள்பார்வை

Tuesday, March 17, 2015

அவனன்றி அணுவும் அசையாது!


 - 15 -

மஞ்சமாமாவின் கதையை இன்று நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தக் கதை முழுக்கவும் உண்மைகளால் ஆனது. சம்பவங்களுக்குக் கற்பனை சேர்த்தும் எழுதலாம். தப்பில்லை! கற்பனை சேர்க்காமல் எழுதும் போது சுவை குன்றி விடுவதாக பலரும் நினைப்பதுண்டு. எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

மஞ்சமாமாவின் கதை எழுத்து வடிவில் வருவதற்கு முன்னே கதையை எழுதியவர் எனக்குச் சொல்லி விட்டார். எழுத்தில் வந்த பிறகு அது தரும் தாக்கத்தை விட அவர் அக்கதையைச் சொன்ன விதமும் அதில் உறைந்திருந்து எழுந்து எனது கன்னத்தில் அறைந்தது போன்ற முடிவும் இன்று வரை மறக்க முடியாதது. ஓர் இலக்கியக்காரனான என் மனதிலேயே அது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தியிருக்குமானால் நாதாரண வாசகர்களுக்கு எத்தகைய தாக்கத்தை உண்டு பண்ணும் என்ற எண்ணம்தான் இது பற்றி எழுதத் தூண்டியது என்று சொல்வேன்.

எல்லோராலும் பேசப்படுகின்ற, நல்லதும் அல்லதும் பற்றிப் பேசப்படுகின்ற, தீர்ப்புகள் வழங்குவதற்கு வாய்ப்பான ஓர் அம்சமாக இஸ்லாம் இன்று மாறிவிட்டது. தான் எப்படி இருக்கிறேன்? என்ன செய்கிறேன்? எனது பண்புகளில் எவை சரியானவை? நான் யாருடன் எதைப் பேசுகிறேன்? எதற்காகப் பேசுகிறேன்? போன்ற வினாக்களை நாம் அதிகம் நம்மை நோக்கிக் கேட்டுக் கொள்வதில்லை!

நம்மளவில் நாம் புனிதராக இருப்பதை விட்டு விட்டு யாருடையவாவது முதுகைச் சுரண்டிப் பார்ப்பதில்தான் பெரும்பாலும் பொழுதைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். தெரிந்ததை வைத்துக் கொண்டு தெரிந்து கோள்ள வேண்டி அம்சங்களை முழம் போட்டு அளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மஞ்சமாமாவின் ஒரேயொரு கேள்வி என்னை அதிர வைத்து விட்டது. ஆழச் சிந்திக்கத் தூண்டியது. நாம் நமக்குள் வழங்கிக் கொண்டிருக்கும் தீர்ப்புக்களைப் பார்த்து எள்ளி நகையாட வைத்து விட்டது. எனது அறிவைப் புடம் போட்டது. சிந்தனையைத் தெளிவு படுத்தியது.

கிராமப்புறங்களில் மாட்டுப் பட்டி வைத்திருக்கும் நபர்கள் - இதன் காரணமாகவே செல்வந்தர் என்று கருதப்படுபவர்களும் இருக்கிறார்கள் - தங்கள் மாடுகளைப் பராமரிக்க ஒரு 'மாட்டுக் காரன்' அல்லது 'காலைக்காரன்' இடம் பொறுப்புக் கொடுப்பார்கள். இந்த மாட்டுக்காரர்கள் அல்லது காலைக்காரர்கள் கிராமங்களிலிருந்து பல மைல்கள் தூரத்தில் பசுமையான மேய்ச்சல் நிலம் உள்ள காட்டுப் பகுதியில் மாட்டுக் காலைகளை வைத்திருப்பார்கள். காலைக்காரர்களிடம் பலருடைய மாடுகள் பொறுப்பில் இருக்கும்.

அவர்கள் அநேகமாகவும் படிப்பறிவு உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். இத்தனை கன்றுகள் பிறந்தால் அதில் ஒன்று அவர்களுக்குக் கிடைக்கும். மற்றப்படி தினமும் அவர்கள் பசுக்களில் கறக்கும் பாலை வியாபாரிகள் நேரடியாக வந்து பெற்றுச் செல்வார்கள். அந்த வருமானமும் அவர்களுக்கு உண்டு. இதைக் கொண்டுதான் அவரது குடும்பம் நகரும். பசுக்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்கள், கன்றுகளுக்கு இட்டிருக்கும் பெயர்கள், அவற்றைச் சொல்லி மாடுகளை அழைக்கும் அழகு எல்லாம் எழுதி மாளாதவை.

மஞ்சமாமா ஓர் உம்மி! பகலில் காடு இரவில் வீடு. இதுதான் அவரது வாழ்க்கை. சில வேளைகளில் இரவிலும் கூட காலையோடு அமர்ந்திருக்கும் பரணில் தங்கி விடுவார். வெள்ளிக் கிழமை, பள்ளிவாசல் என்று எந்தத் தொடர்பும் அவருக்குக் கிடையாது. தானும் தன் ஏழ்மை மிக்க குடும்பமுமாக ஊரில் ஓர் இடத்தில் அவர் வாழ்ந்து வந்தார். வீடும் காடும் மாடும்தான் அவரது வாழ்க்கை. தன்னளவில் நேர்மையாக, யாருடனும் எந்தச் சிக்கலும் இன்றித் தன்பாட்டில் வாழ்ந்து வந்தவர். பெண் பிள்ளைகள் நிறைந்த குடும்பம்.

ஊர் உலகத்தில் என்ன கோலாகலம் நடந்தாலும் அவருக்கு அது பற்றிய அக்கறை கிடையாது. யார் யாருடன் கோபம், யார் தேர்தலில் நிற்கிறான் - தோற்கிறான், வெல்கிறான், பாடசாலையில் யார் அதிபராக இருக்கிறார்,  யார் ட்ரஸ்டியாக இருந்து பள்ளிவாசலை நிர்வகிக்கிறார் என்பதெல்லாம் அவரைப் பொறுத்த வரை அவசியமற்ற சமாச்சாரங்கள்.

ஒரு நாள் ஜூம்ஆவுக்குப் பள்ளிக்குள் நுழைந்த கதாசிரியர் அங்கே மஞ்சமாமா அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போகிறார். இப்போது எழுத்தாளரின் மனசில் ஒரு கேள்வி பிறக்கிறது. 'மஞ்சமாமாவுக்குத்தான் ஒரு இழவும் தெரியாதே.. என்ன ஓதித் தொழப் போகிறார்?' என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்வி எழுத்தாளரை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. எப்படியாவது இதை மஞ்சமாமாவிடம் கேட்க வேண்டும்.. ஆனால் எப்படிக் கேட்பது?

இரண்டு வாரங்களுக்குப் பிறகு கதாசிரியர் மருதூர் ஏ மஜீத் மஞ்சமாமாவை அகஸமாத்தாகத் தெருவில் யாருமற்ற இடத்தில் சந்திக்கிறார். கேள்வி மனதுக்குள் இருந்து துள்ளத் துள்ள அடக்கிக் கொண்டு மஞ்சமாமாவிடம் சுகம் விசாரித்துக் கொண்டு வந்து 'அன்றைக்குப் பள்ளிக்குள் கண்டேனே...?' என்கிறார். மஞ்சமாமா சிரிக்கிறார். 'அதுசரி... ஓதல் கீதல் ஒன்டும் தெரியாம எப்பிடித் தொழுதீங்க?' அஸ்திரத்தை எடுத்து விட்டார்.

அதற்கு மஞ்சமாமா சொன்னார் பாருங்கள் ஒரு பதில்... அதுதான் முக்கியமானது!

'எனக்கு ஓதத்தெரியாதென்டு அல்லாஹ்க்குத் தெரியாதா?'

எழுத்தாளர் வாயடைத்து நிற்க மஞ்சமாமா நடையைக் கட்டினார்.

அடுத்த வாரம் மஞ்ச மாமா மௌத்தாகிப் போனார்!

Wednesday, March 4, 2015

நீ சொன்னால் காவியம்!


- 14 -

ஒருவர் கருத்து ஒன்றை வெளியிடுகிறார். அது சரியானதாக, பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது எனில் சகலதும் சுபமே!

ஒருவர் கருத்து ஒன்றை வெளியிடுகிறார். அது சரி என ஒருசிலரும் பிழை என மற்றும் சிலரும் சொல்லுகிறார்கள். சரி அல்லது பிழைக்கான காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. காரணங்களைப் படித்து முடிக்கையில் அது உண்மையில் சரியான கருத்தா இல்லையா என்பது தெளிவாகும். அந்தத் தெளிவின் அடிப்படையில் சரியைச் 'சரி' என்றும் பிழையைப் 'பிழை' என்றும் ஏற்றுக் கொண்டால் சகலதும் சுபமே! பிழையைச் 'சரி' என்றும் சரியைப் 'பிழை' என்றும் வாதிட ஆரம்பித்தால் அதன் முடிவு வினையாகும்.

இயல்பாகவே சரியைச் 'சரி' என்றும் பிழையைப் 'பிழை'யென்றும் உணர்த்தும் மனச் சாட்சி மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஒரு விடயத்தின் ஆழ, அகலங்கள் அல்லது அதன் பின்னணி தெரியாமல் பேசப்படும் வார்த்தைகளுக்கு அப்பால் - இந்த மனச்சாட்சி சரியாகவே இயங்கும்.

ஒரு பண்பட்ட மனம், ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பட்ட மனம், அனுபவத்தில் பழுத்த மனம் சரியைச் 'சரி' எனவும் பிழையைப் 'பிழை' எனவும் ஏற்றுக் கொள்ளும். இந்த மனப்பாங்கு கொண்டவர்கள் சரியைச் 'சரி' என்று சொல்வதோடு தமது ஈடுபாட்டை நிறுத்திக் கொள்ளலாம். 'மிக அருமையான கருத்து' என்ற ஒரு பாராட்டு வார்த்தையுடனும் முடித்துக் கொள்ளலாம். பிழையைப் 'பிழை' என்று சொல்லியோ அதற்கான காரணங்களை முன் வைத்து விட்டோ நிறுத்திக் கொள்ளலாம்.

ஒரு சிலர் இதை அணுகும் முறை வித்தியாசமானதாக இருக்கும். பலரால் 'சரி' எனக் காணப்பட்ட கருத்தைப் 'பிழை' என்று சாதிக்க முயல்வார்கள். பிழை எனப் பலர்  சுட்டும் கருத்தைப் 'பிழை' என்பதோடு மட்டுமோ அதற்கான காரணங்களை முன் வைப்பதோடு மட்டுமோ அவர்கள் நின்று கொள்வதில்லை. பிழை என்பதைக் குறிக்க அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் ஆபத்தானவை. 'இந்தக் கருத்துத் தவறானது' என்று சொல்வதற்கும் 'இது ஒரு அடிமுட்டாள்தனமான கருத்து' என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதன் தொனி 'நீ ஒரு முட்டாள்' என்றும் 'மடையன் மாதிரிப் பேசுகிறாய்' என்றும் 'நீ ஓர் அறிவு கெட்ட மனிதன்' என்றும் ஒலிக்கும்.

ஒரு பண்பட்ட மனிதன் இந்தத் தாக்குதலை மீண்டும் தனது பண்பட்ட வார்த்தைகள் கொண்டே எதிர் கொள்வான். ஆனால் அது ஒரு கட்டம் வரைதான். சற்று உணர்ச்சி வசப்படும் மனிதன் திருப்பிடிக்க ஆரம்பித்து விடுவான். எனவே இந்த இடத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டு விடுகிறது. கலவரம் ஆரம்பித்தால் அது சம்பந்தப்பட்ட கருத்தை விட்டு விட்டுக் கருத்துச் சொன்னவரின் மற்றும் அதை மூர்க்கமாகத் தாக்கியவரின் பிறப்பு, வளர்ப்பு, தாய், தந்தை, குடும்பத்தினர், தொழில் என்று ஆளுக்காள் இழிவு படுத்த ஆரம்பித்து அவர்கள் சார்ந்த நட்பு வட்டாரத்தின் முக்கிய பேசு பொருளாக மாறிவிடுகிறது.

சிலர் இந்த அடிப்படையில் 'சரி' களைப் பிழைகளாகவும் 'பிழை'களைச் சரிகளாகவும் மாற்றி மாற்றிப் பேசுவதில் வல்லவர்கள். அநேகர் தமது பிடிமானத்தை விட்டுக் கொடுப்பதில்லை. தமது கௌரவம், தமது பேரறிவு, தமது சிந்தனையில் ஆழம், தமது அந்தஸ்து எல்லாமே இதில் தங்கியிருப்பதாக நினைத்துக் கொள்வதுவும் இவை யாவும் அதி உச்ச அளவில் தம்மிடம் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்பதும்தான் சோகமானது. எந்த வழியிலேனும் பணத்தை மட்டும் உழைத்துச் செல்வந்தானான ஓர் மனிதன் காட்டும் அற்பப் பெருமைக்கும் மேற்படி மனோ நிலைக்குமிடையில் பெயரிய அளவில் வேறுபாடுகள் கிடையாது.

ஒரு மனிதன் படித்த நூல்களும் அதன் மூலம் அவன் பெற்ற அறிவும் அவனது அனுபவங்களும் அவனிடத்தில் சரியைச் சரி என்றும் பிழையைப் பிழை என்றும் உணரவும் அதனை ஏற்றுக் கொள்ளவும் பிழையை யாருக்கும் வலிக்காத வகையில் யாரையும் அவமதிக்காத வகையில் சுட்டிக் காட்டவும் வழி செய்யவில்லை என்றால் அந்த நூல்களும் அவற்றின் மூலம் அவன் பெற்ற அறிவும் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை வேறு வார்த்தைகளில் எழுதி விளக்கும் அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்றவெனில் இஸ்லாம் குறித்த கருத்துப் பரிமாறல்களில் இவ்வாறான ஓர் அவல நிலை ஏற்படுவதுதான். இஸ்லாம் எத்தகைய பண்பாட்டை, சகோதரத்துவத்தை, விட்டுக் கொடுப்பை, சமாதானத்தை வாழ்க்கை வழியாகப் போதித்து நிற்கிறது என்பது தெரிந்தும் அதே இஸ்லாமிய, சமூக, பொருளாதார, அறிவியல், மார்க்கக் கருத்தாடல்களில் இவ்வாறான வாத விவாதங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் ஆழ்ந்து கவனிக்கவும் சிந்திக்கவும் வேண்டியது.

நாம் எதை எப்படி அணுகுகிறோம், எதை எப்படிப் பேசுகிறோம், எதை எப்படி எழுதுகிறோம் - இவற்றை யாருக்காகச் செய்கிறோம் - இவை யாரைச் சென்றடையப் போகிறது - இதனால் யாருக்கு என்ன லாபம் - இது மற்றொருவரை நோவிக்குமா - அல்லது மகிழ்வூட்டுமா - அல்லது சிந்திக்கத் தூண்டுமா - இதனால் யாருக்காவது பிரயோசனம் கிடைக்குமா - இதைச் சொல்லும் தகுதி எனக்குண்டா - நான் சரியாக இருக்கிறேனா - என்னிலிருந்து யாருக்காவது பிரயோசனமான ஏதாவது சக மனிதனுக்குக் கிடைக்கிறதா - என்பன போன்ற வினாக்களில் அரைவாசியையாவது நம்மை நாமே கேட்டுக் கொண்டால் பெருமளவில் மேற்படி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

எனக்கு மேல் யாரும் இல்லை, எனது கருத்தே சரியானது, இன்னொருவனுக்கு எனது கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்லத் தகுதியில்லை, எனது கருத்தைச் சரி என்று ஏற்காதவனை நான் கீலம் கீலமாகத்தான் கிழித்துத் தோரணங்கட்டித் தொங்க விடுவேன் என்று எண்ணம் வருகிறது என்றால் -

அது மனநோயின் பாற்பட்டது!

நன்றி - மீள்பார்வை

Friday, February 6, 2015

குகை வாசிகள்!

 - 12 -

சூரா பகரா 201 வது வசனம் சொல்கிறது...

'றப்பனா ஆத்தினா பித்துன்யா ஹஸனத்தன் வபில் ஆகிறத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.'

'எங்கள் இறைவனே இவ்வுலகில் நல்லதையும் மறு உலகில் நல்லதையும் தந்தருள்வாயாக. இன்னும் நரக செருப்பின் வேதனையிலிருந்தும் எம்மைக் காத்தருள்வாயாக!'

நாம் அன்றாடம் கேட்கும் முக்கியமான பிரார்த்னைகளில் ஒன்று இது. இந்தப் பிரார்த்தனை மறு உலகைப் போலவே இந்த உலகத்திலும் நல்லவற்றைத் தந்தருளக் கோருகிறது. இவ்வுலக வாழ்வு சரியாக இருக்குமானால் மறுமை வாழ்க்கையும் சரியாக இருக்கும். இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லப்பட்ட இம்மை வாழ்க்கை பிறழுமாக இருந்தால் மறுஉலக வாழ்வும் அபாயத்துக்குள்ளாகும்.

இவ்வுலக வாழ்க்கையை வாழ்வதற்காக நமக்கு வழங்கப்பட்டிருப்பது ஒரு சம்பூரணமான வாழ்க்கைத் திட்டம். இது பற்றி இஸ்லாமியப் பிரசாரகர்கள் முழங்குகிறார்கள். நூலாசிரியர்கள் விரிவுரைகளை எழுதுகிறார்கள். குழுமங்குழுமங்களாகப் பிரிந்து நின்றாலும் இந்த அடிப்படையைக் கொண்டே தூதை எத்தி வைக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் குத்பா மேடைகளில் குறிப்பிட்ட அம்சங்களை மட்டுமே பேசும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஸஹாபாக்களின் வாழ்நாள் சம்பவங்களையும் எடுத்துரைக்கிறார்கள். இறையச்சம், அண்ணலார் அகிலத்துக்கோர் அருட்கொடை, ஸஹாபாக்களின் தியாகம், உம்மஹாத்துல் முமினீன், தொழுகை, நோன்பு, ஹஜ், ஈமான், ஸதகா. சுவர்க்கம், நரகம்  என்பன போன்ற அம்சங்களையே தொடர்ந்தும் பேசி வருகிறார்கள்.

சுருங்கிப் போன இன்றைய உலகில் பல்வேறு துறைகளிலும் விசாலமாகிவிட்ட இன்றைய நிலையில் முழுமையாக எல்லா வாழ்வியல் அம்சங்களையும் ஏன் மிம்பர் மேடைகள் பேசுவதில்லை என்பது ஒரு கேள்வியாகவே நின்று கொண்டிருக்கிறது. இஸ்லாம் என்பது ஆலிம்களுக்கு மட்டுமே பொறுப்பானது என்கிற சமூகத்தின் முடிவு எங்கு எப்படி ஏற்பட்டது என்பது எனக்குப் புரியவில்லை.

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு பிரதேசத்திலும் பலநூறு பிரச்சனைகள் உள்ளன. இப்பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு செல்வதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஆராய்வதும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும் இஸ்லாம் ஆகாதா? இந்தப் பிரச்சனைகளை மிம்பரில் பேசுவதால் இஸ்லாத்துக்குத் துரோகம் இழைத்ததாக ஆகிவிடுமா?

ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலையிலும் ஒரு கொப்பி வாங்க முடியாத, சப்பாத்துக்கு வழியற்ற பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள். ஓவ்வொரு ஊரிலும் பொதுவான பிரச்சனைகள் உள்ளன. பல இளைஞர்கள் சரியான பொழுது போக்கின்பால் வழி காட்டப்படாமல் தெருக்களில் நின்று இளம்பெண்களை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். திருமணம் செய்ய முடியாமல் பல இளம் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். படித்து விட்டுத் தொழிலின்றிப் பலர் தெரு மேய்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் இவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இஸ்லாம் ஆகாதா? இவற்றை மக்கள் முன் வைக்க மிம்பர் மேடைகளைப் பயன்படுத்த முடியாதா?

ஊரின் பொதுப் பிரச்சனைகளை வகைப்படுத்தி, அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டியவை எவை, ஊராரே முன்னின்று செய்ய வேண்டியவை எவை என்று அடையாளம் காண முடியாத நிலையில் ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல் நிர்வாக சபையும் இருக்குமானால் இந்த நூற்றாண்டில் இதைவிடப் பெரிய வெட்கக் கேடு எதுவுமே கிடையாது. லெப்பைக்கும் முஅத்தினாருக்கும் சம்பளம் கொடுப்பதற்கு ஒரு நிர்வாக சபை அவசியமா என்று சிந்தித்துப் பாருங்கள்.

சில இடங்களில் ஒரு ஆலிம் ஜூம் ஆ பிரசங்கம் நிகழ்த்த மற்றொருவர் தொழுகை நடத்துவதை நான் கண்டிருக்கிறேன். துறைசார்ந்த நபர்களைக் கொண்டு இவ்வாறான நல்ல விடயங்களை ஜூம்ஆ பிரசங்கமாக நிகழ்த்தி விட்டு ஆலிம்களைக் கொண்டு அரபி குத்துபாவையும் தொழுகையையும் நடத்தினால் தீட்டாகி விடுமா?

சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் எல்லாவற்றையும் இஸ்லாமிய நெறிமுறைகளூடாக அணுகவும் இலகுவானதும் தெளிவானதுமான ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆனால் நாம் அது பற்றிச் சிந்திக்காமல் மற்றவரில் என்ன குறை காணலாம் என்பதைப் பற்றியே சதாவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

மஸ்ஜிதுகள் சமூகத்தின் மத்திய ஸ்தலமாக மாறும் வரை மூஸ்லிம் சமூகத்தில் ஒரு சாராருக்கு இஸ்லாம் தொழிலாகவும் இன்னொரு சாராருக்கு வியாபாரமாகவுமே இருக்கும்!

நன்றி - மீள்பார்வை

Thursday, January 22, 2015

மூக்குகளால் சிந்திப்பவர்கள்!


- 12 -

முழுநாளும் வீட்டில் உறைந்து கிடந்த ஒரு தினத்தின் மாலை மயங்கும் வேளை ஒரு சுற்று நடந்து விட்டு வரலாம் என்று வெளிக்கிட்டேன். வழமையான ஒரு சுற்று என்பது ஏறக்குறைய ஒன்றரை கி.மீற்றர் தூரம். இரண்டு முறை நடந்து வந்தால் சோம்பல் கலைந்து விடும்.

அப்படி நடந்து கொண்டிருந்த போது தெருவோரத்தில்  நின்றிருந்த நண்பரைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். அவர் அப்படி தெருவோரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் நபரல்லர். அரச நிதி நிறுவனமொன்றில் கடமை புரிபவர். பென்சன் வயதைத் தொட்டுக் கொண்டிருந்தார். தென்பகுதியில் பிறந்து வளர்ந்தவர். தானும் தன்பாடும் என அமைதியாக வாழ்ந்து வரும் நபர்.

கடைத் தெருவில் அவர் நின்றிருந்த பக்கத்தின் நேர் எதிர்ப் பக்கம் ஒரு பௌத்த விகாரை. வேலி  கிடையாது. மிக அழகாகப் பேணப்படும் அந்த பௌத்த விகாரையில் ஒரு விசேட உபந்நியாசம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழமை போல நிறைய வயசான ஆண்களும் வயசான பெண்களும் துணைக்கு வந்த குமரிகளும் வெள்ளுடையில் அமர்ந்து ஆர்வமாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

நண்பருடன் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொண்டு நான் கடந்த சென்று விட்டேன். ஆனால் நான் நடந்த தெரு நீளத்தக்கும் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் பௌத்த மத குருவின் மத உபந்நியாசம் ஒலித்துக் கொண்டிருந்ததாலும் அவரது பேச்சில் இழையோடிய அமைதியும் சொற்களைப் பயன்படுத்திய நிதானமும் அதில் வெளிப்பட்ட அழகும் நயமும் என்னைக் கவர்ந்ததாலும் வேறு சிந்தனை எனக்குள் எழவேயில்லை.

பிள்ளைகளை எப்படி பொறுப்புள்ளவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் வளர்ப்பது என்பதைப் பற்றியே அவரது உபந்நியாசம் அமைந்திருந்தது. சாதாரண சிங்களக் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லதாகவும் அல்லதாகவும் நடந்தவை, நடப்பவை பற்றி அவர் விளக்கிச் சென்ற விதமும் ஏற்ற இறக்கங்களோடு வார்த்தைகளைப் பயன்படுத்திய அழகும் ரசிக்கத் தகுந்ததாகவும் ஆகர்ஷிக்கத் தக்கதாகவும் இருந்தது. என்னுடைய காதில் விழுந்த வரை பாளி மொழியிலான வாக்குகள் எவற்றையும் அவர் பிரயோகிக்கவில்லை.

மார்க்க உபந்நியாசங்களை ஆகர்ஷிக்கக் கூடிய மொழியில் நிகழ்த்துவதில் கிறிஸ்தவப் பாதிரிமார்தான் முன்னிலை வகிக்கிறார்கள் என்பேன். அதனையடுத்து பௌத்த குருமார். நமது பிரசங்கிகளோ ஒலிபெருக்கியின் சப்தத்தை அதி உச்சஸ்தாயியில் வைத்துக் குதித்துக் குதித்து தன்னால் முடிந்தவரை குரல் கொடுத்து வருவதே வழக்கமாக இருக்கிறது. ஒலிவாங்கி முன்னால் இருப்பது அடுத்தவருக்குக் கேட்கும் அனவு சப்தத்தை அனைவருக்கும் கேட்கும் வண்ணம் பிரதிபலிக்கத்தான் என்ற உணர்வின்றி ஒலிவாங்கி முன்னால் இருக்குமானால் அதில் கர்ஜித்தே ஆக வேண்டும் என்ற உணர்வுடன் பிரசங்கிக்கிறார்கள். எடுத்துக் கொண்ட அம்சமும் அதை வெளிப்படுத்தத் தேரும் நளினமும் பயன்படுத்தப்படும் மொழியும் பொருத்தமாக அமைந்து விடுமானால் ஒலிவாங்கிக்கு முன்னால் நின்று உரக்கக் கத்தும் அவசியம் இருக்காது.

இரண்டாவது சுற்றை சான் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்த போது எனது நண்பர் அதே இடத்தில் தரித்து நின்றிருக்கக் கண்டேன். நிச்சயமாக அவர் அந்த உபந்நியாசத்தைத்தான் செவிமடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு உறுதியாயிற்று. மீண்டும் புன்னகை பரிமாறிக் கொண்ட நான் நடை தனர்த்திச் சிரித்துக் கொண்டே கேட்டேன்:- 'என்ன பிரசங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது?' அவர் பதில் சொன்னார்:- 'இது பாருங்கப்பா... நல்ல விசயம் கொஞ்சம் சொல்றான். எவ்வளவு அழகாச் சொல்றான்... உண்மையில் அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!'

இந்த வழியால் நமது முஸல்மான்கள் குறுக்கிடுகையில் இந்த மனிதரைக் கண்டால் இவரது ஈமான் குறித்து சந்தேகிக்கத் தொடங்கி விடுவார்களே என்று ஓர் எண்ணம் மனதில் ஓடிற்று. பக்குவமாகப் பதில் சொல்லும் படித்த மனிதர்தான் என்றாலும் ஃபத்வாக் காரர்களின் பாதங்களின் கீழ் மிதிபட்டேயாக வேண்டி வரும்.

'நானும் கேட்டுக் கொண்டேதான் நடந்துக்கிட்டிருந்தேன்... அவர் சொன்னது அவ்வளவும் இஸ்லாம்!' என்று நண்பருக்குப் பதில் சொல்லி விட்டுப் புன்னகைத்தேன். அவ்வளவுதான். திடுக்கிட்டு விழித்தவர் போல் திகைப்புடன் அவர் என்னைப் பார்த்தார். நான் புன்னகைத்து விட்டு நடையைத் தொடர்ந்தேன்.

ஆவரது ஆச்சரியமும் திகைப்பும் என்னை எதுவும் செய்யவில்லை. மாற்று இனத்தானோடு ஒன்றாகப் பேசுவது, பழகுவது, தொடர்பு வைப்பது, உறவாடுவது எல்லாம் மார்க்க விரோமதமாகக் கருதிய சமூகத்திலிருந்து வந்த நமக்கு ஒரு பௌத்த மதகுரு பேசிய நல்விடயங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பதை ஏற்றுக் கொள்வதற்குத் தயக்கமாகத்தான் இருக்கும்.

ஐம்பெரும் கடமைகளும் ஒதுங்கி வாழ்வதுமே நமது வழிமுறையும் புனிதமும் என்று கருதும் நிலையிலிருந்து  தலையாட்டுவது விரலாட்டுவது வரை சண்டை பிடித்துக் கொண்டு தனிப் பள்ளிவாசல் கட்டித் தொழும் நிலைக்கு இப்போதுதானே பரிணாமம் பெற்றிருக்கிறோம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு முறை சொன்னார்:-

'சிந்தித்துப் பார்க்கிறதில்ல... அல்லாஹ் குர்ஆன்ல பல இடங்களில் சிந்தி.. சிந்தி.. என்று மனிதனுக்குச் சொல்கிறான். என்னத்தச் சிந்திக்கிறாங்க.. மூக்கைச்  மட்டும்தான் சிந்திக்குறாங்க!'

(நன்றி - மீள்பார்வை)

Tuesday, January 6, 2015

நுணலும் தன் வாயால் கெடும்!


 - 10 -

குழப்பங்களும் பிரச்சளைகளும் இல்லாத குடும்பங்கள் உள்ளனவா என்று கேட்டால் 'இல்லை!' என்ற சொல்லே பதிலாக வரும்.

வெளியே சுமுகமாகவும் மகிழ்ச்சியாகவும் தெரியும் ஒரு குடும்பத்துக்குள் ஆயிரம் சிக்கல்கள் இருக்கும்.  சகோதர, சகோதரிகளுக்கிடையில், தாய் - தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையில் (குறைந்தது ஒரு பிள்ளையுடனாயினும்) சண்டையும் சச்சரவும் இல்லாவிடினும் மனக் கசப்புகள் வருவது சகஜமானது. எவ்வளவு கசப்பான விடயங்களாக இருந்த போதும் அவற்றைச் சகித்துக் கொண்டுதான் ஒவ்வொரு குடும்பமும் வாழ்ந்து வருகிறது. குடும்ப மானம் கருதி அவை வெளியில் வருவதில்லை.

அக்குடும்பத்தில் எதையும் சகிக்கத் திராணியற்ற ஒருவர், கோபம் மிக்க ஒருவர், சுயநலம் மிக்க ஒருவர் அடங்கியிருப்பாராயின் அவர் மூலம் பிரச்சனை வெளியில் வருமே தவிர, வேறு வழிகளில் அவை வெளியாவதில்லை.

ஒரு தெருவில் அல்லது ஒரு மஹல்லாவுக்குள் அல்லது ஒரு வட்டாரத்துக்குள் ஆகக் குறைந்தது ஓர் ஊருக்குள் வாழும் யாராவது ஒருவருடன் மற்றொருவருக்கு மனக் கசப்போ, சண்டையோ, சச்சரவோ இல்லாமலிருப்பதில்லை.

இவ்வாறான பூசல்களும் சச்சரவுகளும் பெரும்பாலும் அடக்கியே வாசிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இவை பெரிது படுத்தப்பட்டால் அது முதலில் தெருவுக்கு வரும். பின்னர் பொலீஸ் நிலையத்துக்கும் பின்னர் நீதிமன்றுக்கும் செல்லும். அதன் பின்னர் வாழ் நாள் முழுவதும் இரண்டு திறத்தாரும் பரம்பரை பரம்பரையாக மனதில் வைரம் வளர்த்துச் சீரழிந்து போவார்கள்.

ஒரு விடயம் பெரிது படுத்தப்படுவது என்பது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளின் தன்மையிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கிறது. எப்போது அளவுக்கு மீறி வார்த்தைகள் வெளிவருகின்றனவோ அவை எந்தளவு தடிப்பத்துடன் வெளிவருகின்றனவோ அந்த அளவுக்குப் பிரச்சனை பெரிதாகி விடுகிறது. ஒருவர் மற்றவருக்குப் பயன்படுத்தும் சொற்கள் அல்லது வார்த்தைகள் அழுக்கானவையாகவும் அசூசையானவையாகவும் அகௌரவப்படுத்துவனவாகவும் அமையும் போது பிரச்சனையின் அடிப்படை தவிர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் முன்னிலை பெற்று விடுகின்றன. 'அவன் எனக்கு இப்படிச் சொன்னதற்காக நான் விடமாட்டேன்' என்று ஆளுக்கு ஆள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

ஒரு மனிதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுச் சரியாக இருந்த போதும் அதை முன்வைப்பதற்கான நல்ல வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும். பிழையான வார்த்தை பயன்படுத்தப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டின் பெறுமானம் குறைந்து விடுகிறது. அதே வேளை குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் சாட்டப்பட்டவரால் வெளிப்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளில் ஆத்திரப்பட்டு ஆத்திரத்தில் கன்னத்தில் அறையவும் கூடும். சிலவேளை இப்பிரச்சனை ஒரு கொலையிலே கூட முடிவடையலாம்.

எல்லாவற்றுக்கும் ஒரு தர்மம் உண்டு, எல்லையும் உண்டு. அது எப்போதேல்லாம் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் விரும்பத்தகாதவை நடந்து முடிந்து விடுகின்றன. குடும்பங்களில், சமூகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளின் அடிவேரைத் தோண்டிச் சென்றால் அது ஒரு மோசாமான வார்த்தையாக இருக்கக் காண்போம்.

எந்த ஒரு நிலையிலும் ஒரு மனிதனுடைய வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அவனது தாய், தந்தையரை, குடும்பப் பாரம்பரியத்தை, அவனுடைய வளர்ப்பை, அவன் படித்த பாடசாலையை, கற்பித்த ஆசிரியர்களை, அவனுடைய சூழலை, பழக்க வழக்கங்களை, பண்பாடுகளை, புரிந்துணர்வையெல்லாம் பிரதிபலிக்கக் கூடியவை.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் ஒருகாலத்தில் அரசியல்வாதிகளே அரசியல்வாதிகளை விமர்சிப்பதும் கிண்டலடிப்பதும் மட்டுமே பத்திரிகைகளில் படிக்கக் கூடியதாக இருந்தது. ஏனையவர்களின் விமர்சனங்கள் முடிதிருத்தும் நிலையங்கள், கிராமத்துத் தேனீர்க்கடை பெஞ்சுகள் போன்றவற்றிலே இடம்பெற்று வந்தன. இவற்றின் இடத்தை இப்போது சமூக வலைத்தளங்கள் பிடித்துக் கொண்டன. எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் தமது எண்ணங்களையும் விமர்சனங்களையும் பகிரும் அற்புதமான வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

அரசியல் பற்றிய விமர்சனங்கள், கிண்டல்கள் ஏற்கக் கூடியவைதாம். ஆனால் அந்த எல்லைக்கு மேல் செல்லும் போது அது ஒரு கண்ணியம் பிறழ்ந்த நிலைக்குப் பலரை நகர்த்தி விடுகிறது. பேசத் தகாத, எழுத்தத் தகாத மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், கண்ணியமும் ஒழுக்கமும் அற்ற தூற்றல்கள், தூஷணங்கள் மலிந்து போன நிலையில் இன்றைய பொதுத் தளங்கள் நாற்றமெடுத்துக் கிடப்பதைக் காண்கிறோம்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்தத் தூஷணங்களும் தூற்றுதல்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்கி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலேயே செய்யப்படுவதுதான். 30 வருட காலப் போரில் சிதைந்து சின்னாபின்னமாகி இன்னும் வாழ்வும் இல்லாமல் சாவும் இல்லாமல் வாடும் தமிழ் சமூகத்தின் அரசியலில் ஆயிரம் பிரச்சனைகளும் ஆயிரம் சிக்கல்களும் பிக்கல் பிடுங்கல்களும் இருக்கின்றன. பலநூறு பிரிவுகள் அவர்களுக்குள் இருக்கின்றன். ஆனால் நொந்து போன நிலையிலும் அவர்கள் எந்தவொரு அரசியல்வாதி மீதும் எந்தவொரு எதிர் கருத்துக் கொண்டவர் மீதும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதை நான் கண்டதில்லை.

இன்று இஸ்லாமிய ஒழுக்கமும் பண்பாடும் நன்னடத்தையும் பேசாத இளைஞர்கள் அரிது. இஸ்லாம் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற வாழ்வு நெறி என்று தேரியாத இளைஞர்கள் கிடையாது. ஆனால் அரசியலிலும் மார்க்க விவகாரங்களிலும் மாற்றுக் கருத்தாளர்களைத் தாக்குவதில் ராஜ நாகங்களைப் போல் இவர்கள் விஷங்கக்குவதைப் பார்க்கையில் துன்பமாய் இருக்கிறது.

இஸ்லாம் என்ற ஜோதியை வைத்திருப்பவர்கள் தத்தமது வீடுகளைக் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

(நன்றி - மீள்பார்வை)