Friday, August 26, 2016

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2016 - கொழும்பு


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இவ்வருடம் டிஸம்பர் மாதம் 10,11,12 ஆகிய தினங்களில் நடைபெறும் என மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.


இந்தத் தகவல்களை பொது வெளிக்குத் தெரிவிக்கும் நோக்கில் அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றும் போது,

இலங்கையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற விடயம் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒரு பொன் விழா நிகழ்வாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் தெரிவித்தனர்.

இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால் இந்நிகழ்வை உள்நாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஓர் எல்லைக்குட்பட்ட வகையில் சர்வதேச மாநாடாக நடத்தும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு என்னாலான பங்களிப்பை வழங்குவது என்றும் அவர்களுக்குச் சொன்னேன்.

இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இந்த மாநாட்டுக்கு என்னைத் தலைமை தாங்கும்படி வேண்டு கோள் விடுத்தது. இலங்கை முஸ்லிம்களது மட்டுமல்ல உலகெங்கிலும் தமிழ் பேசும் முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒரு முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டேன்.

இந்த வகையில் இந்த மாநாட்டுக்கு நான் தலைவராகவும் கௌரவ. பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் பிரதித் தலைவராகவும் இருப்போம்.

மாநாட்டை வழி நடத்திச் செல்லும் குழுவுக்கு
.இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும்  பொதுச் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீனும் அவர்களது குழுவினரும் மாநாட்டை நடத்தும் பணியை முன்னெடுப்பார்கள்.

இந்த நிகழ்வில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளிலிருந்து ஆய்வாளர்களும் விசேட அழைப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.குறிப்பாக இளைய தலைமுறை எழுத்தாளர்களை இம்மாநாட்டில் பாராட்டவும் ஏற்கனவே கௌரவம் பெறாத மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் எண்ணியுள்ளோம்.

 இந்த மாநாட்டை இவ்வருடம் டிஸம்பர் 10,11,12 ஆகிய தினங்களில் றபீஉல் அவ்வல் - றசூலுல்லாஹ் பிறந்த திகதி உள்ளடங்கலாக - வருகிறது. இந்தத் திகதிகளில் கொழும்பில் நடத்தவுள்ளோம்.

அத்துடன் இவ்வாறான நிகழ்வுகளை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளேன் என்று தெரிவித்தார்.


கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் உரையாற்றுகையில்,

2002ல் கொழும்பில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஒரு தொண்டனாகவும் 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஓர் அதிதியாகவும் கலந்து கொண்டவன் நான்.

முதலில் என்னைச் சந்தித்த இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரிடம், இந்த விடயத்தை கௌரவ. ரிஷாட் பதியுதீன் அவர்களோடு கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று  சொன்னேன். அதன் படி இன்று இந்த வெற்றிகரமான சந்திப்பு நிகழ்கிறது.

இந்த வரலாற்றுப் புகழ் மிக்க நிகழ்வுக்கு அவருடன் இணைந்து செயல்படுவதை மிகவும் மகிழ்ச்சியான விடயமாகக் கருதுகிறேன்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு 1966ல் ஏற்பட்டது உண்மை என்ற போதும் இது உலகளாவிய கவனத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் அல்லாமா உவைஸ் அவர்களாவர்.  அல்லாமா உவைஸ் அவர்களுக்கு ஆய்வுக்காக இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னவர் சுவாமி விபுலானந்தர் அவர்களாவர். இந்த விடயத்தில் அல்லாமா உவைஸ் அவர்களுக்கு வழி காட்டியவர் அவர்தான்.

எனவே இம்முறை ஏதாவது ஓர் அரங்கு சுவாமி விபுலானந்தர் அரங்காக இடம்பெற வேண்டும் என்று இம்மாநாட்டை முன்னெடுத்துச் செல்லும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இம்மாநாட்டை நடத்தும் முழுப் பொறுப்பும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தைச் சார்ந்திருக்கும். நாங்கள் அவர்களுக்கு ஒத்தாசையாகவும் பக்கபலமாகவும் இருப்போம் என்று தெரிவித்தார்.


பத்திரிகையாளர் சந்திப்பின் முதற் கட்டமாக இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் இலக்கிய விழாவாக ஆரம்பித்து உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடாக நகர்ந்த விதத்தை விளக்கிக் கூறினார்.


அதனைத் தொடர்ந்து ஆய்வகத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஃப் சிஹாப்தீன், இஸ்லாமிய இலக்கியத்தின் ஆரம்பம் பற்றியும் இவ்வாறான மாநாடுகள் ஏன் நடத்தப்படுகின்றன, நடத்தப்பட வேண்டும் என்பது பற்றிக் கருத்துத் தெரிவித்தார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் பற்றியும் அதில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பங்களிப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.


இறுதியில் ஆய்வகத்தின் உப தலைவர்களில் ஒருவரான மர்ஸூம் மௌலானா அமைச்சர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் நன்றி தெரிவித்தார்.


நிகழ்வில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான நாச்சியாதீவு பர்வீன், கவிஞர் அல் அஸூமத், முஸ்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர் சுகைப் எம். காஸிம் இப்பத்திரிகையாளர் சந்திப்பை அமைச்சர் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Seyan Hameed said...

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2016 க்கான ஆலோசனைக் கூட்டத்தில் (09/10/16) ல் கலந்து கொண்டேன்!
மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்!
இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்!
சேயன் ஹமீது