Wednesday, September 27, 2017

யாரும் மற்றொருவர்போல் இல்லை!


எப். எச். ஏ. ஷிப்லி (கவிஞர் நிந்தவூர் ஷிப்லி)
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகம் 

பன்முக இலக்கியவாதி, சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர் என பல்துறை ஆளுமை கொண்ட  அஷ்ரப் சிஹாப்தீன் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இளமை நதி. வற்றாத அறிவியல் ஊற்று.பல்துறைகளிலும் ஆழமாக் காலூன்றி, வேரூன்றிய கலை ஜாம்பவான்..

அவரதுபத்தாவது நூலாகவும்,மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலாகவும் அண்மையில் வெளியாகியது“யாரும் மற்றொருவர்போல் இல்லை”எனும்மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி.யாத்ரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டஇந்த நூலில் முப்பது நாடுகளைச் சேர்ந்த 49 கவிஞர்களின் ஐம்பது கவிதைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. நூலினைநூலாசிரியர் அவரது தாய்வழிப் பாட்டனார் புலவர் மஹ்மூது அப்துஸ்ஸமது ஆலிம் அவர்கட்கு சமர்ப்பித்துள்ளார்.

இளைய இலக்கியவாதிகளை மனமாரப்பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தும் மூத்த இலக்கியவாதிகளில் அஷ்ரப் சிஹாப்தீன் முக்கியமானவர். அதற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நூற்றுக்கணக்கான இளைய எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை ஊக்கப்படுத்தியமைமுக்கிய சான்று.

இந்த நூலில் இடம்பெற்றுள்ளமொழிபெயர்ப்புக் கவிதைகளின் கவிதைத்தேர்வுகளை வாசிக்கின்றபோது தனிமனித உணர்வு சார் கவிதைகள், காதல் கவிதைகள், யுத்தமும், அதன் கோர நகங்கள் பதித்த வலிமிகுந்த கீறல்கள் தொடர்பான கவிதைகள், அரசியல் சார் கவிதைகள், வாழ்வியலையும், அழகியலையும் பேசக்கூடிய கவிதைகள், மனிதாபிமானம் தொடர்பான கவிதைகள், புரட்சி விதைகளை விதைக்கின்ற கவிதைகள் என்று பல கோணங்களிலும் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவாக்கம் பெற்றதை அவதானிக்கலாம். அதேபோலகானா, பங்களாதேஷ், பாரசீகம், நமீபியா, போஸ்னியா, பாலஸ்தீன், நேபாளம், பாகிஸ்தான், சிரியா, ஆப்கானிஸ்தான், குர்திஷ், அமெரிக்க, கென்யா, நைஜீரியா, தன்ஜானியா, அல்பேனியா, எகிப்து, கியுபா உள்ளடங்கலாகநாம் இதுவரை வாசிக்காத, நமது தமிழ் வாசிப்புச் சூழலுக்கு அதிகம் பரிச்சயமில்லாத பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்படுள்ளன.

Translation என்ற வார்த்தை "translatio" என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பிரதியின் அர்த்தத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பிரதிக்கு இணையான’ என்ற பிரயோகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும். ஏனென்றால் அதுவே ‘பிரதிக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது.

இந்த நூலில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பு உத்தியைப் பார்க்கின்ற போது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான பண்பு “எளிமை” அதாவது எளிய சொற்கள். நோபல் பரிசு பெற்ற காப்ரியல் கார்சியோ மார்க்கேஸ் என்ற ஸ்பானிஷ் எழுத்தாளரை ஆங்கில மொழிபெயர்ப்பில் இலகுவாகப் படித்துப் புரிந்து கொள்ளமுடிகிறது. அனால், அதே எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு வாக்கியத்தைக் கூட புரிந்து கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் ஒருவிதமான சிக்கலான மொழியில் எழுதினால்தான் இலக்கியம் என்ற கருத்து இங்கே நிலவுவது சற்று துரதிஸ்டவசமானது.

அப்படி அல்லாமல் மிக எளிமையான சொற்களின் மூலம், கவிதைகளின் மூலம் கெடாமல் தமிழுக்கு அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார் அஷ்ரப் சிஹாப்தீன். மொழிபெயர்ப்பு என்பது இலகுவான இலக்கிய வடிவம் அல்ல. மொழிபெயர்க்கின்ற நபருக்கு மொழியறிவும், கலையுணர்வும், கவிதைகள் தொடர்பான ஆழ்ந்த வாசிப்பனுபவமும் அவசியம். மிகப்பெரிய இலக்கிய மேதைகள் கூட தடுக்கி விழுகிற இடமே இந்த மொழிபெயர்ப்பு என்றுகூடச் சொல்லலாம்.

இன்றைய திகதியிலுள்ள வாசகர்களுக்கு எளிமையான இலக்கியங்களே அதிகம் புரிகிறது.அதிகம் பிடிக்கிறது.பின்நவீனம், அதிபின்நவீனம் என்று வலுக்கட்டாயமாகப் படைக்கப்படுகிற  இலக்கியங்கள் எடுபடாமல் போவதற்கு இதுவே காரணம்.

கவியரசர் கண்ணதாசனின் வெற்றிக்கு “எளிய” என்கிற உத்தியே மூலகாரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று கண்ணதாசன் எழுதுகிறபோது அது எல்லோரது இதயங்களை இலகுவாக சென்றடைகிறது.

இத்தகைய எளிய என்கிற உத்தி அஷ்ரப் சிஹாப்டீனுக்கும் கைவந்த கலையாகிப்போயிருக்கிறது. “பயமாயிருக்கிறது ஏனெனில்” என்கிற கானா நாட்டுக்கவிஞ்சரின் கவிதையை இப்படி மொழிபெயர்க்கிறார்..
உன்னை முதன்முதலாகப் பார்த்தபோது
உனது பெயரைக்கேட்கப் பயமாயிருந்தது
மனதைக்கவரும் பெண்களைக் காண்கிறபோது எல்லோருக்கும் இயல்பாகவே எழக்கூடிய உணர்வினை உயிருக்கு நெருக்கமான சொற்களால் உரசிச்செல்கிறார்.

அதுபோலவே லஜ்வா கோலூவி என்கிற நமீபிய நாட்டுக் கவிஞரின் அழுகுரல் என்கிற கவிதையில்..
அது ஓர் அழுகுரல்..
ஆம் அழுகுரல்
தெருவில் நிற்கும் பெண்ணின் அழுகுரல்
யாராவது அதைச் செவிமடுப்பார்களா?
யாராவது சென்று பார்ப்பார்களா??
என்று தொடங்கி
எனக்கருகே நிற்கும் பெண்ணின் அழுகுரல்
எனது நெருங்கிய நண்பியின் அழுகுரல்
எனது பெண் குழந்தையின் அழுகுரல்
எனது சொந்த அழுகுரல்
என்று கவிதை விரவி முடிகிறபோது நம் செவிட்டில் யாரோ அறையும் உணர்வு இயல்பாகவே நமக்குள் எழுகிறது.இதுமொழிபெயர்ப்பாளரின் வெற்றி.அவரது மொழிபெயர்ப்பு நுட்பத்தின் வெற்றியேயன்றிவேறில்லை.

இந்த நூலின் கவிதைத்தேர்வின்வகைகளாக நான் ஏலவே குறிப்பிட்ட பல பிரிவுகளில் தனி மனித உணர்வுகள், காதல், யுத்தம் குறித்த கவிதைகள் ஆகிய மூன்று பெரும்பகுதிகளை மட்டும் ஆய்வு செய்வதாகவே எனது விமர்சனம் அமைகிறது.நீங்கள் இந்த நூலை வாசிக்கிறபோதுஇதன் மற்றைய பரிமாணங்களை மிக இலகுவாக உங்களால் கண்டடைய முடியும்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் காணக்கூடிய மிகப்பெரிய அபாயம் மூலக்கவிதைகளின் உணர்வுகளை அவர்களது கலை, கலாசார வடிவங்கள் தாண்டி தமிழ் மொழிக்கு ஊடுகடத்துவது. மூலக்கவிதையின் உள்ளுணர்வை சிதைக்காமல் அப்படியே தமிழுக்கு மொழிபெயர்ப்பது சுலபமான விடயம் என்று யாரேனும் நினைத்தால் அவர்களது இலக்கிய அறிவுக்கு எனது இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.
இந்த நூலில் வெவ்வேறு நாடுகளின், வெவ்வேறு கவிஞர்களின், வெவ்வேறு பிரச்சினைகளை, வெவ்வேறு நுண்ணிய உணர்வுகளை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.

ஒளிந்திருக்கும் எனது உணர்வுகள் என்கிற நபீமிய நாட்டுக் கவிஞர்  எவலைன் ஹைஹம்போ வின் கவிதையின் சில வரிகள் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதைப்பாருங்கள்.
உண்மையாக நான் யார் என்று பாருங்கள்..
எனது வாயால் சொற்களை வெளிப்படுத்த முடியவில்லை
உண்மையை என் இதயம் அறியும்
ஆனால்,
என்னிடமிருந்து அதை வெளியே கொண்டு செல்வது
எப்படியென்று அதற்குத் தெரியாது
என்று விரியும் கவிதை
எனது காதுகளால் கேட்கமுடியவில்லை
எனக்காகக் கேளுங்கள்’
எனது தோலினால் உணர முடியவில்லை
எனக்காக உணருங்கள்
எனது கண்களால் பார்க்கமுடியவில்லை
எனக்காகப் பாருங்கள்
எனது வாயினால் பேச முடியவில்லை
எனக்காகச் சொற்களைப் பேசுங்கள்
எனது ஆத்மாவினால் அறியமுடியவில்லை
நான் அறியத் தவறிய உலகத்தை
நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்
அல்லது நான் மறைந்து விடுவேன்..!!

அதேபோலமனிதர்களின்உள்ளுணர்வுகளைப்பேசும் இன்னொரு கவிதை“எனது தாயார் மரணித்த போது” என்கிற நைஜீரிய நாட்டுக் கவிஞர் லேம்பொன் சலிபு முகம்மத்எழுதியகவிதையின் மொழிபெயர்ப்பு. இந்தக்கவிதை கிட்டத்தட்ட எனது நிலையினைப்பேசும் ஒரு கவிதையாக என் உயிருக்குள் ஒட்டிக்கொண்டுவிட்டது.சில ஆண்டுகளுக்குமுதல் விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் எனது தகப்பன் எனக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து “உம்மா மௌத்து” என்று சடுதியாக் கூறியபோது எனக்குள்என்னவெல்லாம் ஊசலாடித்திரிந்தனவோ அதே உணர்வுகளை இக்கவிதையில் உணர்கிறேன்.

அதேபோல“முஹம்மத் றஊப் பஷீர்” எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய“நானும் ஓர் அகதி” என்கிற கவிதை ஒரு அகதியின் உள்ளுணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது.
ஓர் அகதியாக உங்களிடம்
உங்களிடம்வந்தமைக்காக
நீங்கள்என்னை மன்னிக்க வேண்டும் அய்யா..
ஓர் அடிமையாக அல்லாமல்
என்னை ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
என்று உயிரைப்பிழிந்து நம்மை உலுக்கி எடுக்கும் கவிதை இப்படித் தொடர்கிறது
உங்களில் ஒருவனாக
ஓர் அகதியாகத்தானும்
என்னை ஏற்றுக்கொள்வீர்களா?
நான் யார்? நான் என்ன>
என்று நீங்கள் கேட்கிறீர்கள்
நான் கடந்த காலமற்றவன்
நிகழ்காலமுமற்றவன்
முகமுமற்றவன்
நான் ஒரு மனிதனின் எச்சம்
உங்களில் ஒருவனாக
ஓர் அகதியாகத்தானும்
என்னை ஏற்றுக்கொள்வீர்களா?

இந்தக்கவிதைஎப்படி அழகாக மொழிபெயர்க்கப்பட்டு, ஒரு அகதியின் வாழ்க்கை வலிகளைஒரு ஊசிமுனை வழியாக நமக்குள் அஷ்ரப் சிஹாப்தீன் ஊடுகடத்துகிறார் என்று பாருங்கள்.
அதேபோல இந்த நூலில் காதல் கவிதைகள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்” என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகள் சொல்வது போல அந்தந்த நாடுகளின் காதல் பற்றிய பார்வையும் இந்தக்கவிதைகள் மூலம் நம்மால் உணரமுடிகிறது.
பயமாயிருக்கிறது ஏனெனில்என்கிற கானா நாட்டுக் காதல் கவிதை “காதலியை இழந்துவிடுவேனோ என்கிற” அச்சதைப்பேசுகிறது
அதேபோல அழகு என்கிற ஆப்கானிஸ்தான் நாட்டுக்காதல்
அவள் மலைகளில் உள்ள
பைன் மரங்களும், அறிந்த உயரமும்,
உடல்நேர்த்தியும் கொண்டவள்
அந்திக்கருக்கலில்நிலவின்
சிறு குடையின் கீழ் சுவர்க்கத்தில் குளித்த
பெண்ணைப் போன்றது உனது குரல்
அவள் அதிகாலையில்
வீட்டின் சுத்தமான
ஓர் ஒலிக்குடுவையை ஒத்தவள்
அவள் மழையின் கிசிகிசுப்பைக் கொண்டு
உருவாக்கப்பட்ட காதணி அணிந்தவள்
அதேபோல அமெரிக்க கவிஞர் சாம் ஹமூத் எழுதிய கவிதை “அவளும் அவனும்” என்கிற தலைப்பில் காதல் உணர்வுகளை மிக இயல்பாக பேசிச்செல்கிறது..

இந்த நூலின் முக்கிய கவிதைகள் என்று பார்க்கிறபோது  “யுத்தம், அதுபரிசளித்தவாழ்வியல் போராட்டங்கள், அரசியல், புரட்சி” என்பனசார்ந்தகவிதைகளுக்கே நூலாசிரியர் முக்கியத்துவம் அளித்துள்ளார்.ஒவ்வொரு கவிதையும்இதயத்தை கீறிக்கிழித்து நம்மை கண்ணீர் மழையில் நனைய வைக்கின்றன.இலங்கை கூட இத்தகைய யுத்த வடுக்களைச் சுமந்திருக்கும் பூமிதான். அதனால்தானோ என்னவோ இந்தக் கவிதைகள் பேசும் போர் குறித்த ரணங்கள் நம்மை மிகக்கடுமையாகப் பாதிக்கின்றன.

எல்லாவற்றுக்கும் பிறகு என்கிற பொஸ்னிய நாட்டுக்கவிஞர் கோரன் சிமிக் கின் கவிதை யுத்தம் முடிந்தபின்னரான வாழ்க்கை முறையை சாடிச்செல்கிறது..
அவ்வாறே நிசார்கப்பாணி எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய ஜெருசலமே என்கிற கவிதை ஜெருசலம் மண்ணின் வலிகளைப்பேசிவிட்டு..
நாளை
நமது எலுமிச்சைகள் பூக்கும்
நமது எல்லா ஒலிவ் செடிகளும்
கொண்டாட்டத்தில் திளைக்கும்
உனது விழிகள் நடனமிடும்
உனது குழந்தைகள் யாவும்
மீண்டும் விளையாட ஆரம்பிக்கும்
பிள்ளைகளும் பெற்றோரும்
மீண்டும் உனது அழகிய மலைகளில் சந்தித்துக்கொள்வார்கள்..
என்றுவலிகளைக்கடந்த நம்பிக்கையை பேசிச்செல்கிறது..

அவ்வாறே.. கேரி கோர்சன் எழுதிய“நாங்கள் பாலஸ்தீனியர்கள்” என்கிற கவிதை
உலக சபைக்கு
மனுக்கள் எழுதினோம்
சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது
கருணை, புரிதல், அமைதி, நீதி,
இவையெல்லாம் வேண்டி
சர்வ வல்லமைகளிடம்
முறையீடு செய்தோம்.
சிலபோது அவர்கள் அமைதியாகச்
செவிமடுத்தார்கள்
(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென அடகு வைக்கப்பட்டவர்கள்)
பலபோதுஎங்கள் காயங்களைப் பார்த்து கொட்டாவி விட்டார்கள்
என்று நீளும் கவிதை இப்படி முடிகிறது
நாங்கள் மக்கள்
இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்
அதனால்தான் உங்களிடம் பெரிய மீனைக்கோருகிறோம்
உங்களை உள்ளாரக் குடையும்
நாடாப்புழு எத்தகையது?
நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள்
ஆனால் குழந்தைப்பலி கேட்கும்
தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்..
என்று முடியும்போது இதைவிட இந்த வலிகளை வேறெப்படி மொழிபெயர்ப்பது?

அதுபோலவே அந்தனி ஜே.மெர்சலா எழுதிய யுத்தம் என்கிற கவிதையில்..
எவ்வளவோ எழுதப்பட்டும்
எவ்வளவோ பேசப்பட்டும்
எவ்வளவோ செதுக்கப்பட்டும்
யுத்தத்தின் பாடங்கள்
தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும்
தொடர்ந்து மறுக்கப்படுவதும்
தொடர்ந்து திரிதுக்கூறப்படுவதும் ஏன்?
இதோ..இன்று சிரியா..
என்று முடிகிற கவிதை மிகப்பெரும் பாறாங்கல்லை எம் நெஞ்சின் மீது உருட்டிவிடுகிறது.

அதேபோன்றுதான்  நாசர் பர்கூதி எழுதிய சிரியாவின் சிறுவர்கள் என்ற கவிதை கரையோரத்தில் கவிழ்ந்து கிடந்த ஐலான் குர்தி என்கிற அழகிய சிறுவனதும், அதற்குப்பின்னர்நம்மைரத்த கண்ணீர் வடிக்க வைத்த யுத்தத்தால்சிதைந்துபோன சிறுவர்களின் புகைப்படங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இப்படிஎளிய சொற்கள் மூலம் அந்த அந்த நாட்டின் மொழியையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை நுணுக்கங்களையும், தமிழ் மொழிக்கு மிக நேர்த்தியாக மொழிபெயர்த்து இலங்கையில்மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதியதொரு ராஜபாட்டையை அஷ்ரப் சிஹாப்தீன் திறந்துவிட்டிருக்கிறார்.
ஒருவிதமான தேக்க நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கியத்துறைக்கு இவரது இந்த முயற்சி தாராளமாகவே நீர் பாய்ச்சுகிறது.
இந்த நூலை எதிர்விமர்சனம் செய்யக்காத்திருக்கும் சிலருக்கு சில வார்த்தைகள்.இப்போதெல்லாம் விமர்சனம் என்பது படைப்பை பார்க்காமலே, வாசிக்காமலே, அது என்னவென்றே தெரியாமலே விமர்சிக்கும் ஒரு நிலை நம் மத்தியில் தோன்றியிருக்கிறது.மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது தமிழுக்கு இன்று நேற்று, தோன்றிய ஒன்று அல்ல.
மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்து “தொல்காப்பியத்தில்”
“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே”
இங்கு“மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு” என்பது பொதுவான மொழிபெயர்ப்பையே சுட்டுகின்றது. கி. பி.14 ஆம் நூற்றாண்டு முதல்   19 ஆம் நூற்றாண்டு வரை, மொழிபெயர்ப்புத் துறையில் புராணங்களே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. கி.பி.19 ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர்தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்றலாயிற்று. இதன்விளைவாக மொழிபெயர்ப்பு இலக்கியம் முக்கிய ஒன்றாக விளங்கத் தொடங்கிற்று.

இலங்கையை பொறுத்தவரை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நூல் மேகதூதம் - மகாகவி காளிதாசர் வடமொழி மூலம் எழுதிய நூலை சோ.நடராசன் தமிழாக்கம் செய்தார். இது 1954ஆம் ஆண்டு வெளியானது. இதன்பின்னர்கிராமப் பிறழ்வு என்ற மொழிபெயர்ப்பு நாவல்  மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'கம்பரெலிய' சிங்கள நாவலின் அடிப்படையாக்கொண்டு 1964 இல் வெளியானது. அதன்பின்னர் தொண்ணூறுகளுக்குப்பின்னரே பல மொழிபெயர்ப்பு நூலுருவாக்க முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.அவ்வாறு மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் இலங்கையில் ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களாக எஸ். பொன்னுதுரை, சோ. பத்மநாதன்,வி.பி. ஜோசப், சி. சிவசேகரம்,ரூபராஜ் தேவதாசன், அருட்திரு நீ.மரியசேவியர், த.தர்மகுலசிங்கம், கெக்கிராவ சுலைஹா, எம்.எச். முஹம்மது யாக்கூத் என்கிற வரிசையில் நமது நூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர்களின் பெயர்களை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. இதில் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை இப்பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு மொழியில், குறிப்பிட்ட ஒரு வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.’ என்பதிலிருந்து ஒரு மொழி சார்ந்த பண்பாட்டு கலாச்சாரப் பின்புலங்களை அறிந்துவைத்திருத்தல் வரை மொழிபெயர்ப்பாளன் கடந்து வர வேண்டிய தடைகள் பல. பழமொழிகள், மரபுத் தொடர்களை மொழிபெயர்க்கையில் கவனம் தேவை. வாக்கிய அமைப்பு, இடம் சார்ந்த பொருள் இவற்றையும் கவனித்து மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. விடாமுயற்சி, கவனம், மொழியறிவு, மொழிசார் பண்பாடு குறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல், அடர்த்தி ஆகியவற்றை உள்வாங்கும் திறன் ஆகியவை ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளனின் அடையாளங்களாக அமையக்கூடும். ‘எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் ஒருவர் அகராதியைப் புரட்டத் தயங்கக் கூடாது’ என்கிற தியோடர் ஸேவரியின் கூற்றையும் நாம் மறந்துவிட முடியாது.
மொழிபெயர்ப்புகள் வழியே மொழிபெயர்ப்பாளர்கள் உலகை இணைக்கிறார்கள் என்கிற கூற்று உண்மையானதே.இந்த நூலின் மூலம் அஷ்ரப் சிஹாப்தீன் நமக்கு முப்பது நாடுகளின் இலக்கிய வாசனையை நுகரச்செய்கிறார், நாற்பது ஒன்பது கவிஞர்களோடு கைகுலுக்க வைக்கிறார்.ஐம்பது கவிதைகளோடு நம்மை பிணைத்துவிடுகிறார். இந்தமூலக்கவிஞர்கள் யார்? அவர்களது பிற  கவிதைகள் என்னென்ன? என்கிற ஆய்வையும், தேடலையும் இன்றைய வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஏற்படுத்திவிடுவதில் நூலாசிரியர் வெற்றி காண்கிறார். அதேபோல மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதிய கதவொன்றையும் நூலாசிரியர் திறந்துவிட்டிருக்கிறார்.

அந்தவகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் மிக முக்கியமான நூலாக இது விளங்கும் என்பதோடு மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் நூலாசிரியர் இன்னும் பல சிகரங்களை அடையவும், அவரது இலக்கியப் பணிகள் மென்மேலும் சிறந்தோங்கவும் அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(22.09.2017ல் கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: