Friday, November 4, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 5


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 5

சேவைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்ட பதினைந்து பேரில் இருவர் இலங்கையர், ஒருவர் மலேசியர். இந்தியர்களில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் சீர்காழி இறையன்பனார் ஆகியோரும் அடங்குவர். பன்னூலாசிரியர் மானா மக்கீன், என். எம். அமீன் ஆகியோர் இலங்கைசார்பிலும் டத்தோ இக்பால் மலேசியா சார்பிலும் இவ்விருது வழங்கப் பெற்றார்கள்.விருது பெறும் என்.எம். அமீன்

அதே போல் பதிறைந்து பேருக்குத் தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்பட்டன. மலேசியா சார்பில் புலவர் ப.மு. அன்வர், இலங்கை சார்பில் கவிஞர் ஏ. இக்பால், கவிஞர் அல் அஸ_மத், அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் இவ்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். ஏனைய பதினொருவரில் திருமல் மீரான் பிள்ளை, திருவை அப்துல் ரகுமான், பர்வீன் சுல்தானா ஆகியோர் அடங்குவர்.விருது பெறும் கவிஞர் அல் அஸூமத்

மலேசிய சார்பில் விருது வழங்கப்பட்ட இருவரும் வருகை தந்திருக்கவில்லை. அவற்றை அவர்கள் சார்பில் இக்பாலிடம் பணிபுரியும் பிதாவுல்லாஹ் பெற்றுக் கொண்டார்.விருது பெறும் அஷ்ரஃப் சிஹாப்தீன்

கவிஞர் ஏ. இக்பால் வருகை தந்திருக்காத காரணத்தால் அவருக்குரிய விருதை அவர் சார்பில் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பெற்றுக் கொண்டார்.கவிஞர் ஏ.இக்பாலின் விருதைப் பெறும் ஜின்னாஹ் ஷிபுத்தீன்

மாநாட்டை நடத்திய காயல்பட்டணப் பிரமுகர்களில் சிலர் சேவைச் செம்மல் விருதுக@டாகவும் பொள்ளாடை போர்த்தியும் கௌரவிக்கப் பட்டனர். மாநாடு முடிவடையும் போது இரவு 11.30 ஐத் தாண்டி விட்டது.

மாநாட்டின் மறக்க முடியாத விடயங்களில் முதன்மையானது எதுவெனக் கேட்டால் காயல்பட்டின மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டுப் பேராளர்களை வழி நடாத்துவதற்கும் அவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்வதற்கும் நியமிக்கப்பட்டிருந்த கல்லூரி மற்றும் பாடசாலை மாணவர்களின் உறுதுணை. இரண்டாம் தினத்திலிருந்து இந்த மாணவர்கள் நம் மனங்களில் இடம்பிடித்துக் கொண்டார்கள். சகல இடங்களிலும் நம்முடனேயே இருப்பார்கள். மாநாட்டுப் பந்தலில் நாம் எந்த எந்த இடங்களில் அமர்ந்திருக்கிறோம் என்பதைச் சரியாகக் கவனித்து வைத்துக் கொள்வார்கள். குடிநீர் கொண்டு தருவதாகட்டும், உணவுக்கு அழைத்துச் செல்வதாகட்டும், தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகட்டும் - உடனுக்குடன் இயங்குவார்கள். கிட்டத்தட்ட ஒரு விஐபி யை காவல் படையினர் அழைத்துச் செல்வது போல் இருக்கும்.


எங்கள் அறுவர் குழுவின் நலன்களைக் கவனித்துக் கொண்ட காயல்பட்டின மாணவர்கள் இருவருடன் நாம்

தங்கியிருக்கும் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுக் காலை எத்தனை மணிக்கு வரட்டும் என்றுகேட்பார்கள். ஒன்பது மணி என்று நாம் பதில் சொன்னால் 8.45க்கு அங்கு வந்து நிற்பார்கள். மாநாடு முடிந்த இறுதி நாள் உணவு விநியோகம் நடந்த பாடசாலையிலிருந்து நாம் தங்கியிருந்த வீட்டுக்கு வரும் போது நள்ளிராவைத் தாண்டி விட்டது. அப்போதும் கூட அந்தக் கடைசி வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்தவரும் இந்தக் குழுவில் இருந்த ஒரு மாணவர்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வௌ;வேறு வீடுகளில் தங்கியிருந்த பல அன்பர்கள் இவர்களது உறுதுணை பற்றிச் சிலாகித்து என்னிடம் சொன்னார்கள்.

இந்த மாணவர்களது கட்டுப்பாடும் பணிவும் இயக்கமும் போல் நான் வேறு எங்குமே கண்டதில்லை. எந்தவொரு நபரினதும் அர்ப்பணிப்பு மிக்க, தன்னலமற்ற, எதிர்பார்பப்பற்ற பணி தனித்துத் தெரியும். அந்தப் பணிக@டாக அடையாளப்படுத்தப்படுவோர் மிகச் சிறந்த மனிதர். காயல்பட்டினத்தின் வளரும் பரம்பரை மீது சமூகம் நம்பிக்கை வைக்கலாம்.

இம்மாநாட்டில் மற்றொரு சிறப்பம் என்னவெனில் ஒரு நிகழ்வோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் மேடையில் அமர்த்தியிருந்ததைச் சொல்ல வேண்டும். இறுதி நிகழ்வின் போது அரசியல் பிரமுகர்கள், பேச்சாளர்களுடன் கௌரவம் பெறும் ஏறக்குறைய நாற்பது பேரளவில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

மாநாட்டு மலர், ஆய்வுமாலை (கட்டுரைக் கோவை), இலக்கிய இணையம் (இலக்கியவாதிகள் பற்றிய தகவல்கள்) ஆகியன சிக்கல்கள் எவையுமின்றி விநியோகிக்கப்பட்டன. மாநாட்டு மலர் காயல்பட்டினம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நமக்கு வழங்குகிறது. ஆய்வரங்குகளில் படிக்கப்பட்ட, படிப்பதற்கென அனுப்பப்பட்ட 101 கட்டுரைகளை ஆய்வுமாலை உள்ளடக்கியிருக்கிறது. இவற்றுள் ஆய்வு அல்லாத கட்டுரைகளும் உள்ளன. ஆய்வரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே படிக்கப்பட வேண்டும் என்று சிலர் கருதுவதுண்டு. ஒரு நூலை, ஓர் இலக்கியவாதியை, ஓர் அறிஞனை, ஓர் பிரதேசத்தைப் பற்றியெல்லாம் கூட கட்டுரைகள் படிக்கப்படவும் அவை கட்டுரை நூலில் சேர்க்கப்படவும் வேண்டும் என்பது எனது கருத்தாகும். பின்னால் வரும் யாராவது ஒருவருக்கு ஓர் ஆய்வுக்காக இந்தத் தகவல்கள் தேவைப்படலாம். இந்த மாநாட்டின் ஆய்வு மாலையை பேராசிரியர்களான சாய்பு மரைக்காயர், ஹ. மு. நத்தர் ஷா, அகமது மரைக்காயர் ஆகியோர் அழகாகத் தொகுத்திருக்கிறார்கள்.


கௌரவிக்கப்படம் மாநாட்டுக் குழுவின் செயலாளர்

இலக்கியவாதிகளைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தரப்பட்ட இலக்கிய இணையம் நூல் இந்தியாவில் எப்படியோ இலங்கையில் இரண்டொருவருக்கு மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநாட்டுப் பந்தலிலேயே சகோதரர் ஜவ்பர்கான் தனது பெயர் பிழையாகப் பதிவாகியிருப்பதாக ஜின்னாஹ் ஷரிபுத்தீனிடம் குறைபட்டார். ஜவ்பர்கான் சாஹித்திய விருது பெற்ற கவிஞர் அதுவும் கூடக் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. அதேபோல் எங்கள் தேசம் பத்திரிகையில் நண்பர் கலைவாதி கலீலின் பெயரின் முன்னெழுத்துக்களில் ஒரு ‘எம்’ விடுபட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது.

உண்மையில் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்தவர் மானா மக்கீன் அவர்கள். இந்தப் பட்டியலை ஒழுங்கு படுத்த அவருக்கு முழுக்கவும் உதவியவர் நண்பர் யாழ். அஸீம். கையெழுத்தில் அங்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல் பட்டியலில் கணினி எழுத்துக் கோர்வையின் போது பிழை ஏற்பட்டிருக்கலாம். சில பக்கங்கள் திருத்தம் மேற்கொள்ளப்படா திருந்திருக்கவும் சாத்திய முண்டு. இதன் தொகுப்பாசிரியர் பேரா. சாய்பு மரைக்காயர் அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலாளர். ஒரு சர்வதேச மாநாட்டின் வேலைப் பளுவுக்கு மத்தியில் இவ்விடயத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார். எந்தவொரு நிகழ்வின் போதும் இவ்வாறான சில தவறுகள் நேர்ந்து விடுகின்றன.

“அந்த மாநாட்டில் நேரமுகாமைத்துவமே இருக்காது. நீங்கள் அசௌகரியப்படுவீர்கள்” என்று எனது பண்பறிந்த ஒரு நண்பர் சென்னையிலிருந்து காயல்பட்டினம் செல்வதற்கு முன்னரே எனக்குச் சொல்லியிருந்தார். அது உண்மையாக இருந்தது. சர்வதேச நிகழ்வொன்றின் போது சில தவிர்க்க முடியாத இடைஞ்சல்கள் எழுவது இயல்புதான். ஆனால் மாநாட்டில் முக்கியத்தவம் வழங்கப்படுகிற பெரும் பேராசிரியர்களே கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விடவும் பத்துப் பதினைந்து மடங்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதும் அதனால் நிகழ்வுகளைக் குறித்த நேரத்துக்கு முடித்துக் கொள்ள முடியாது போவதும் எரிச்சலை ஏற்படுத்தும். ஜனக் கூட்டத்தைக் கண்டால் எல்லோரும்தான் பேசிக் கொண்டேயிருக்க விரும்புகிறார்கள். தான் சொல்ல வந்ததைத் தனக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் கச்சிதமாகப் பேசி முடிப்பவர்தான் சிறந்த பேச்சாளராக இருக்க முடியும். நேர முகாமைத்துவம் இல்லாமல் போனால் நடைபெறும் நிகழ்ச்சி முற்றாகச் சிதைந்து விடும் என்பது படித்தவர்களுக்கே புரியாதிருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.


இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகமானது அது நடத்தும் இலக்கியப் பெரு விழாக்களை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடத்தி வருகிறது என்று இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தேன். அப்பிரதேசம் அல்லது ஊரைச் சேர்ந்த வசதி படைத்தோரும் முக்கியஸ்தர்களும் இணைந்து பொருளுதவியை வழங்குகிறார்கள். இலக்கியச் செயற்பாடுகளை இலக்கியக் கழகம் மேற்கொள்கிறது. இதனால் மாநாட்டின் ஆணி வேரான இலக்கியக் கழகத்தாரை விட ஊர்ப் பிரமுகர்கள் சற்றுத் தூக்கலாகத் தெரிகிறார்கள். மாநாட்டு மேடை ஒரு சர்வதேச நிகழ்வுகளுக்குரிய பண்புகளுடன் இல்லாமல் சில வேளைகளில் ஒரு மீலாத் விழா மேடை போல் தோற்றம் தருவதைத் தவிர்க்க முடியவில்லை. எனவே இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தார் தமது பங்கு ஐம்பது வீதமாகவும் பிரதேசத்தாரின் பங்கு ஐம்பது வீதமாகவும் அமைத்துக் கொள்வது நல்லது.

தாம் சற்றுப் பின் தள்ளப்படுவதைக் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதையே தமது பிரதான நோக்காகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் பலருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ்கிறது. பொருளிருக்கும் சாராரையும் படைப்பாளிகளையும் படிப்பாளிகளையும் ஒன்றிணைத்து வருடந் தவறாமல் இலக்கியப் பெருவிழாவை நடாத்தி விடுவதில் ஊக்கமுடன் செயற்பட்டு வரும் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சாதனை புரிந்திருக்கிறது.
பேராசியர் சாய்பு மரைக்காயர்

மாநாடு முடிவடைந்ததும் இந்தச் சாதனைக்காகப் பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்களைக் கட்டித் தழுவிக் கொள்ள ஆசையாக இருந்தது. அவரது பருமன் கருதிக் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தேன்.

முற்றும்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Lareena said...

ஒரு நிகழ்வுக்கு எத்தனையோ பேர் போகிறார்கள்; பங்கேற்கிறார்கள்; காலப்போக்கில் அதனை அப்படியே மறந்து போகின்றார்கள். ஆனால், அதன் நினைவுகளை சுவை குன்றாமல் எழுத்தில் வடித்து, காலவெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் பதிவுசெய்து வைப்பவர்கள் வெகு சிலரே. அத்தகையவர்கள் வரலாற்றையே வடிக்கிறார்கள். அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களே என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. நடந்ததை அறியவும், நாளை நடப்பதைச் செப்பனிடவும் இந்தப் பணி முன்னோடியாய் நின்று உதவுதலால், எதிர்கால சந்ததி அவர்களுக்கு நிச்சயம் நன்றிக்கடன் பட்டிருக்கும். அந்த வகையில், அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களின் இந்தப் பதிவு வரலாற்றில் ஓர் ஏடுதான் என்பேன், வாழ்க அவர் பணி!

புல்லாங்குழல் said...

அருமையான விவரங்கள். அந்த மாநாட்டில் தாங்கள் ரசித்த எங்களுக்கும் பயன்படும் இலக்கிய விமரிசனங்கள்,தகவல்களும் தருவீர்கள் என நம்புகின்றேன்.