Saturday, May 14, 2011

நூர்ஜஹான் மர்சூக் - ஓர் இசைப் புள்ளி

இலங்கையில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகங்களுக்கு உள்ளது போலவே பாடல் மற்றும் இசைத்துறையுடனான ஒரு தொடர்பு முஸ்லிம் சமூகக் குழுமத்துக்கும் இருந்து வந்திருக்கிறது. தான் சம்பந்தப்பட்ட எந்த விடயங்களிலுமே அச்சமூகம் அக்கறை காட்டாது வாழ்ந்து வருகின்ற காரணத்தால் இத்துறையிலான அதன் வரலாறு முன் பக்கங்களும் நடுப்பக்கங்களும் கிழிக்கப்பட்ட ஒரு சுவையான நாவலைப் போல ஒரு மூலையில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

ஏடறியாத, எழுத்தறியாத நமது பாட்டன்மாரும் பாட்டிகளும் வாய் திறந்தால் தமிழை அமுதமாகக் கொட்டியதை கதை கதையாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தென் கிழக்கின் பார்வைப் புலனற்ற மீரா உம்மாவின் பாடல்களை நான் சிறுவனாக இருந்த போது பார்த்தும் கேட்டும் ரசித்திருக்கிறேன். றபான் இசை எழுப்பியபடி இஸ்லாமிய கீதங்களையும் நமது பழந்தமிழ் இலக்கியங்களையும் இசைக்கும் பாவாமாரை இன்றும் நாம் நாட்டின் தலைநகரிலும் கூடக் காண்கிறோம். ரஸ_லே கரீம் (ஸல்) அவர்களையும் நம்பிக்கை மிகுந்த இறையடியார்களையும் போற்றிப் பாடிய அறபுப் பாடல்களை தெவிட்டாத ராங்களில் இசைக்கும் விற்பன்னர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். நம்முன்னோர் அளித்த இலக்கியச் செல்வங்களான தலைப் பாத்திஹாவும் பெண் புத்தி மாலையும் இன்னும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பெண்களின் குரவை ஒலி கேட்கும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்த போதும் அவசியமாயின் ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது போல் சிரமம் எடுத்து அதனைக் கேட்டு ரசிக்கிறோம். களிக்கம்பு எனப்படும் குறும் பொல்லடியின் போது அவர்கள் உடம்பை வளைத்து சுழன்று நகர்வதையும் அவர்களது கைகளில் இருக்கும் பொல்லுகள் பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு இணையும் லாவகமும் திறந்த வாயை மூடாதபடி பார்த்துக் கொண்டிருக்க நம்மைக் கட்டுப்படுத்தி விடுவதை நாம் அனைவரும் கண்டு வந்திருக்கிறோம். இக்கலையைப் பழக்குவதற்காக நூற்றுக் கணக்கான இலக்கியப் பாடல்களை மனனம் செய்திருந்த அண்ணாவிமாரைப் பற்றியும் நாம் அறிவோம்.

இவ்வாறான பாரம்பரியங்களின் பின்னணியில் பல நூறு பாடகர்களும் பாடகிகளும் தோன்றி மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியிருக்கிறார்கள். சிலர் வாய்ப்பும் வசதியும் முயற்சியும் கவனிப்பும் சித்திக்காமல் சுவடே இல்லாது மறைந்து போயிருக்கிறார்கள். சிலர் இத்துறையில் வெற்றி பெற்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய கீதங்களுக்கு நமக்கு ஆதர்சமாக விளங்கியவை தென்னிந்திய இஸ்லாமிய கீதங்கள். எஸ்.ஹ{ஸைன்தீன், காரைக்கால் தாவூத், எஸ்.எம். அபுல்பறகாத், நாகூர் ஈ.எம்.ஹனீபா, காயல் ஷேக் முகம்மத், கே.ராணி , எஸ். சரளா போன்றவர்களின் பாடல்கள் இன்றும் நமது செவிக்கும் இதயத்துக்கும் இன்பமளிக்கின்றன. இஸ்லாமிய கீதங்களுக்கான பாடகர் வரிசை ஒன்றும் முஸ்லிம் பாடகர் வரிசை ஒன்றும் நமது தேசத்துக்கும் உண்டு. இந்த இரண்டு வகையிலும் அடங்குவோரும் உண்டு. அதை எவ்வாறு பகுப்பது என்பதை எதிர்காலத்தில்; ஆராயவிருக்கும் ஒருவர் தீர்மானிக்கட்டும் என விட்டுவிடுகிறேன்.


நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நமது இசை வரலாறு இதுவரை எழுதப்படவில்லை. எனது அறிவுக்கு எட்டியவரை 2002ல் கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு மலரில் இசைக்கோ நூர்தீன் எழுதிய ஒரே ஒரு கட்டுரைதான் இப்போதைக்கு நம் வசம் உள்ளது. அது ஒரு பூரணமான கட்டுரை அல்ல என்ற போதும் கூட இத்துறை குறித்து எதிர்கால ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் ஒருவருக்கு ஒரு திறவு கோலாக இருக்கும் என்பதால் அக்கட்டுரைக்காக ஹாஜி நூர்தீனுக்கு இவ்விடத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

எம்.ஏ. ஹஸன் அலியார், எஸ்.எம். ஹ{ஸைன், என்.எம். முகம்மது அலி, ஏ.எம். ஷாஹ{ல் ஹமீது, ஹாஜா அப்துல் றஹீம், ஷேக் ஜலால், பாத்திபாய், எஸ்.ஏ. லத்தீப், இப்றாஹீம் ஸாலிஹ், எஸ். அப்துல் காதர், ஜே.பாஷா, எச்.எம். புகாரி, ஏ.எல்.எம். யூஸ{ப், எம்.ஸ{ஹார், ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். புகாரி, பி.எம். நியாஸ்தீன், பாத்திமா பரீத், ஹமீதா பரீத், சஹர்வான் பரீத், ஷாபின்லை, - எம்.எச். குத்தூஸ், ஏ.எச்.எம். மொஹிதீன், புத்தளம் செல்ல மரைக்கார், முஹம்மது மிஸ்பாஹ், விஸ்வா ஏ. காதர், நஜீமா ஏ காதர், ஏ.எம். நூர்தீன், எம். இக்பால், ஐ.எம்.கௌது, ஹாரூன் லந்ரா, ஜுவிதா லந்த்ரா, பரிமினா லந்த்ரா, மஸாஹிரா இல்யாஸ், எம்.எச். முஹம்மது ஸாலிஹ், மஹ்தூம் ஏ. காதர், எம்.எம். பீர் முஹம்மது, ரீ.எப்.லத்தீப், ஓ. ஷரீப், முகம்மது ஜலீல், எம்.ஐ.எம். அமீன், எம்.எச்.எம். ஷம்ஸ், நிஸாம் கரீம், ஏ.ஜே.கரீம், எம்.எஸ். முஹம்மது, ராஸிக் ஸனூன், பஸீல் மாஸ்டர், சாய்ந்தமருதூர் அக்பர், - டொனி ஹஸன், எம்.எப். பௌஸ{ல் அமீர், எம்.ஏ,ஸெய்னுல் ஆபிதீன், முயீன் சபூர்தீன், என்.எம்.நூர்தீன், கே.எம். நிஸார், கே.ஏ.ஸவாஹிர், முகம்மது பளீல், நூர்ஜஹான் மர்ஸ{க், குமாலா சௌஜா, டி.எம்.வங்ஸா, எம்.ஜே.எம்.எம். அன்ஸார், ஆகியோர் அடங்கிய பட்டியலைத் தந்துள்ள இசைக்கோ நூர்தீன் உருதுப் பாடல்கள் பாடுவதற்காகவே முதலில் முஹிதீன் பேக், குர்ஷித் கௌஸ் ஆகியோர் தெரிவானதாகக் குறிப்பிடுகிறார்.

இவர்களுடன் இஸ்லாமிய கீதங்கள் பலவற்றைத் தமிழில் பாடிய சுஜாதா அத்தநாயக்காவும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் ஏதாவது ஒரு உயரிய கலை நிகழ்வில் அவர் கௌரவிக்கப்படவும் வேண்டும் என நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

நான் மேலே குறிப்பிட்டவர்களில் பலரைப் பலருக்குத் தெரியாது. தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைக்குத் தெரிந்த சிலரைப் பற்றிய தகவல்கள் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இல்லாத பட்சத்தில் அல்லது தமது பாடல்களை வெளியிடாத பட்சத்தில் அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளப் போவதில்லை. சகோதரி நூர்ஜஹான் கூட ஏறக்குறைய இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஓர் ஒலி நாடாவை வெளியிட்டிருக்க வேண்டும். கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒரு காலப் படைப்புகளை அக்காலப் பிரிவுக்குள் வெளியிடாத பட்சத்தில் பின்னாளில் அதன் வீரியம் குறைந்து போகும். காலம் தாழ்த்தி வெளியிடப்படும்; போது படைப்புலகில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களால் அவை வெளி வந்த போது அவற்றிற்கிருந்த மௌசு குறைந்து சப்பென ஆகிவிடும் கால வழு நிகழ்ந்து விடுகிறது. ஆனால் பாடல்களுக்கு இந்தத் துயரம் நிகழ்வதில்லை. அவை கேட்க ரசனையாக இருப்பதால் என்றும் மௌசுடனேயே விளங்குகின்றன. இது பாடகர்களுக்கு மட்டும் இறைவன் கொடுத்த வரம்.

ஒரு சிற்பத்தை அல்லது ஓர் ஓவியத்தை ரசிப்பதற்கு அந்த சிற்பம் அல்லது ஓவியம் இருக்கும் இடத்துக்;கு நாம் சென்றாக வேண்டும். ஒரு கவிதையை அல்லது ஒரு சிறு கதையை அல்லது ஒரு கட்டுரையைப் படிப்பதற்கு அது பதியப்பட்டிருக்கும் நூலைக் கையிலெடுக்க வேண்டும். ஒரு நாடகத்தை அல்லது ஒரு நாட்டியத்தை அல்லது ஒரு சினிமாப் படத்தைப் பார்ப்பதற்கு அது எந்த இடத்தில் நிகழ்கிறதோ அந்த இடத்துக்கு நாம் சென்றாக வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு பாடகனுக்கும் அப்பாட்டை எழுதியவருக்கும் கிடைத்திருக்கின்ற பாக்கியத்தைப் பாருங்கள் - நாம் கழிவறைக்குள் இருந்தாலும் கூட காற்றோடு கலந்து வந்து நமது காதுகளில் தேன் வார்க்கும் வரம் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதனால்தான் கவிஞர் கண்ணதாசன் சொன்னார் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை. பாட்டை எழுதியவருக்கும் மரணம் இல்லை. பாடியவருக்கும் மரணம் இல்லை.

நமது பாடகர்கள் அனைவரும் சினிமாவுக்குப் பாடியவர்கள் அல்லர். அவ்வாறாயின் மரணத்தை வென்று வாழ வேண்டுமாக இருந்தால் தங்களது பாடல்களை அவர்கள் ஒலி நாடாவாகவோ குறுந்தகடாகவோ வெளியிட்டாக வேண்டும்.

இஸ்லாமிய கீதங்களை எழுதியோர் பட்டியல் ஒன்றும் உண்டு. தென்னிந்தியப் பாடகர்களுக்கு நிகராகப் பாடக் கூடியவர்கள் நமக்குள் இருக்கிறார்கள் என்றாலும் கூட இஸ்லாமிய கீதங்களை எழுதுவதில் அதாவது சிறந்த நயம் மிக்க பாடல்களைத் தருவதில் நாம் சற்றுப் பின்னிற்கிறோம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். தென்னிந்திந்தியப் பாடகர்களின் பாடல்கள் பெற்ற வெற்றிக்கு இறையருட் கவிமணி அப்துல் கபூர், சமுதாயக் கவிஞர் காஸிம் போன்றோரின் இலக்கிய நயம் மிக்க வரிகளும் துணை நின்றன என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை என்றே நான் நம்புகிறேன்.

இஸ்லாமிய கீதங்களை உலகறியப் பரப்பியதில் பெரும் பங்கு இலங்கை வானொலிக்கு உண்டு. தென்னிந்திய இஸ்லாமிய கீதப் பாடகர்களது பாடல்களைக் கூட ஒலிபரப்பி அவர்களை புகழின் உச்சிக்குக் கொண்டு வந்ததும் இலங்கை வானொலி என்பதை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய கீதங்கள் மூலமாக பல நூறு பாடகர்களையும் பாடகிகளையும் நமக்குத் தெரியப்படுத்தியது இலங்கை வானொலியே.

நூர்ஜஹானின் பாடல்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் நாம் பேச வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன.

பள்ளிவாசலுக்குள் தமிழைத் தவிர வேற்று மொழி பேசுவதை விலக்கப்பட்ட விடயமாக ஒரு காலத்தில் கருதிய ஒரு மக்கள் சமூகத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண் பாடகி 40 வருடங்களாக இத்துறையில் எப்படி நின்று நிலைத்தார்? இந்த நியாயமான கேள்வியின் பின்னணியில் உள்ள பாரமும் வலியும் எத்தகையது என்பதை சற்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தக் கேள்வியை இன்றையத் தினத்தில் நூர்ஜஹானிடம் கேட்டால் அவர் ஒரு வேளை உணர்ச்சி மேலீட்டால் உடைந்து அழக் கூடும். இன்று நூர்ஜஹான் நமது மத்தியில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதன் பின்னணியில் உள்ள அவரது தியாகங்களும் அவர் சந்தித்த சோதனைகளும் அதனால் அடைந்த வேதனைகளும் வார்த்தைகளில் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடக் கூடியவை அல்ல.

அவரது பாடல்களுக்காக அவரைப் பாராட்டுவதற்கு முன்னர் அவர் தன்னை எதிர் கொண்ட எல்லாத் தடைகளையும் தாண்டி வெற்றி பெற்றதற்காக அவரைப் பாராட்ட விரும்புகிறேன்.


அன்பொழுகும் கனிவான பேச்சு, சகலரையும் மதிக்கும் குணம், ஒரு பெயர் பெற்ற பாடகி என்ற பந்தாவோ பகட்டோ இல்லாத பண்பு, கலையகத்துக்குள் ஒலிவாங்கிக்கு முன்னாலும் கூடக் கலையாத முக்காடு, பாடும் போதும் நாடகம் நடிக்கும் போதும் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் உச்சஸ்தாயிக்குப் போகாத குரல் - இதுதான் நான் அறிந்த நூர்ஜஹான். எதிர் கொண்ட தடைகளை அவர் எப்படி வெற்றி கொண்டு வந்துள்ளார் என்பதை விளக்குவதற்கு அவரது பண்புகளே ஆதாரமானவை என்று நான் நினைக்கிறேன்.

தலைநகரில் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் விழாக்களில் பிரதம அதிதியே நூர்ஜஹான்தான். அவ்வாறான ஒரு வீட்டு விருந்துக்குச் சென்று நூர்ஜஹான் வரும் வரை பசியோடு காத்திருந்த அனுபவம் எனக்கு உண்டு. பெயர் சூட்டும் விழாவில் நூர்ஜஹானின் பாடல் ஒலிக்கவில்லை என்றால் அதை ஒரு விழாவாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் பல தாய்மார்; இருக்கிறார்கள். இதுவெல்லாம் கூட ஒரு வகையில் நூர்ஜஹானின் வெற்றி என்றுதான் குறிப்பிடுவேன்.


;இலங்கை வானொலியோடு பிணைப்புடண் நான் வாழ்ந்த ஏறக்குறைய 17 வருடங்களிலும் தொலைக்காட்சியுடன் தொடர்புற்றிருந்த 14 வருடங்களிலும் நூர்ஜஹான் பற்றிய தரக் குறைவான விமர்சனங்கள் எதுவும் என் காதுகளில் விழுந்தது கிடையாது. ஆனால் அவருடன் இது தொடர்பாக மிக அண்மையில் கதைத்த போது அவரை நோகடித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நான் உணர வந்தேன். நூர்ஜஹானை விமர்சனங்களால் யாராவது அவமதித்திருந்தால் அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். ஒன்று- நூர்ஜஹானுக்கு இனிமையாகப் பாட முடிகிறது. இரண்டு - அவரை அவமதித்தவர்களுக்கு அவரைப் போல பாட முடியவில்லை.

அமல் விளக்கேற்றி என்ற இன்று வெளியிடப்படும் குறுந்தகட்டில் நூர்ஜஹான் பாடியுள்ள பத்துப் பாடல்கள் அடங்கியுள்ளன. இரண்டு தினங்களாக எனது வாகனத்தில் இந்தப் பாடல்களே ஒலிக்கின்றன. குறிப்பாக பேரருளே பெருங்கொடையே என்ற பாடல் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உடலில் பலமும் உறுதியும் இருக்கின்ற காலத்தில் நூர்ஜஹான் பாடிய பாடல்களுக்கும் இந்தக் குறுந்தகட்டுக்காக மூன்று பேரப்பிள்ளைகளைக் கண்ட பிறகு பாடியுள்ள பாடல்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. இன்னும் பாடக் கூடிய நம்பிக்கை மிகுந்த சாரீரம் அவருக்கு இருப்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.

இக்குறுந்தகட்டில் உள்ள பாடல்களுக்கு இசை வழங்கிச் சிறப்பித்திருக்கும் ஸவாஹிர் மாஸ்டருக்கும் அவரது புதல்வர்களுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். ரி.எஃப்.லத்தீப் மாஸ்டருடனும் ஸவாஹிர் மாஸ்டருடனும் இசை நிகழ்ச்சி ஒன்றை இலங்கை வானொலியின் கல்விச் சேவைக்காக தயாரித்து வழங்கிய நாட்கள் இன்னும் என் ஞாபகத்திலிருக்கின்றன.

நூர்ஜஹானின் வெற்றிக்கு மற்றொரு காரணம் அவருக்கு வாய்த்த கணவர். நூர் ஜஹானின் பாடலையும் குரலையும் முழு மக்கள் சமுதாயமும் ரசிப்பதற்கு உந்து சக்தியாக இருந்த மர்ஸ{க் அவர்களுக்கு இந்த வேளை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூர்ஜஹான் மனித குலத்தை மகிழ்விப்பதற்காக தனது இனிய குரலால் 40 வருடங்கள் பாடி வந்திருக்கிறார். நானும் நீங்களும் அவற்றைக் கேட்டு ரசித்து வந்திருக்கிறோம். நூர்ஜஹானுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்பதைத்தான் நாம் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். ஆகக் குறைந்தது அவர் இன்று வெளியிடும் குறுந் தகட்டை மனமுவந்து பணம் கொடுத்து நாம் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடனும் தாழ்மையுடனும் இந்தச் சபைக்கு விண்ணப்பம் செய்கிறேன். வாங்கிச் சென்று ஒரு மூலையில் போட்டு வைக்காமல் அவ்வப்போது ஒலிக்க விடுங்கள்.

மார்க்கமும் வழிமுறைகளும் மறந்து தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து அகல்யா, ஆனந்தம், கஸ்தூரி, கோலங்கள், முகூர்த்தம், அஞ்சலி, செல்வி, லக்ஷ்மி, மலர்கள், நிம்மதி போன்ற தொடர்களிளல் பிழியப் பிழிய அழும் பெண்களின் அழுகைச் சத்தத்தின் அபஸ்வரத்தில் இழக்கும் நிம்மதியை நூர்ஜஹானின் பாடல்கள் உங்களுக்குத் தரும்.

நூர்{ஹான் - இந்தப் பெயர் மொகலாயர் காலத்தை நமக்கு நினைவுறுத்தும் பெயர். நமது நூர்ஜஹான் மொகலாயர் காலத்தில் பிறந்திருந்தால் அவரது இனிய சாரீரத்துக்காகவும் பாடல்களுக்காகவும் ஒரு சமஸ்தானத்தையே பரிசாகப் பெற்றிருக்க முடிந்திருக்கும். என்னால் வழங்க முடிந்ததெல்லாம் இந்தப் பாராட்டு வார்த்தைகள் மாத்திரமே.

ஆனாலும் சகோதரி, சமஸ்தானங்கள் எவையும் நிலைத்ததில்லை என்பதை நீ அறிவாய். காலத்தின் பக்கங்களில் நிரந்தரமாகத் தங்கி விடும் வரத்தைப் பெற்றுத் தரும் உந்துதலைத் தரத்தக்கவை மனம் நிறைந்து தரும் பாராட்டு வார்த்தைகள்தாம் என்பதை நீ நம்பியாக வேண்டும். நன்றி. வஸ்ஸலாம்.

(பாடகியின் அமல் விளக்கேற்றி என்ற ஒலித்தகட்டு வெளியீடு கொழும்பு டவர் மண்டபத்தில் நடைபெற்ற போது ஆற்றப்பட்ட உரை)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Shaifa Begum said...

நூர்ஜஹான் மர்சூக் ஒரு இசைப்புள்ளி... படித்தோம் .. சுவைத்தோம்.. மிக
அருமை.. நிறைய விடயங்களை அறிந்ததில் மிக மகிழ்ச்சி .சேர்,அருமையான ஒரு முன்னுரை.
இது உங்களால் மட்டுமே கொடுக்கக்கூடிய அருமையான அலசல். வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்துக்கள்..நான் மிக மிக ரசித்து படித்தேன்.
ஒரு பெண் சாதிக்கனும் என்று நினைத்தால் தடைகள் ஒன்றும் பெரிதல்லவே.. பாடகி நூர்ஜஹான் மர்சூக் கூட தடைகள் சோதனைகளைத் தாண்டி தன்னை நிரூபித்துக்காட்டியவர்..மட்டுமல்லாமல் அவர் ஒரு எடுத்துக்காட்டு என்று கூட சொல்லலாம்.
மார்க்க வழிமுறைகளைப் பேணி ஒழுக்கமாண்புகளுடன் செயற்படுமிடத்து,தரக்குறைவான எண்ணங்கள் அபிப்பிராயங்கள், தோன்ற வாய்ப்பில்லை என்பதனையும்,குறைவான கண்ணோட்டத்தில் சமுதாயம் நம்மை ஓரக்கண்ணால் பார்க்கவும் சந்தர்ப்பம்
.இல்லை என்பதனையும் நிருபி்த்தவர்.
புகழின் உச்சிக்குப் போகும் போது தம்மேல் அழியாத கரையை பூசிக் கொள்பவர்களைத் தான் நம்சமுகத்தில் அதிகம் காணக்கூடிய நிலையில், திருமதி நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் ஒரு செந்தாமரையாகவே என் கண்களுக்கு தெரிகிறார்.

சேர், என்னைக்கேட்டால், திருமதி நூர்ஜஹான் மர்சூக் அவர்களுக்கு நீங்கள் கொடுத்த முன்னுரை Oscar Award ஐ விடவும் பெறுமதி வாய்ந்தது என்று சொல்வேன். இதைவிடவும் என்ன வேண்டும்..?
மனது நிறைவாக இருக்கிறது. நம்சமூகத்திலிருந்தும் இலைமறைகாய்கள் வெளியே வரணும்..மார்க்க விழுமியங்களுடன் இணைந்து தங்களை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவாவுடன்.

உங்கள் எழுத்துக்களுக்கு நீண்ட ஆயளையும், திடமான ஆரோக்கியத்தையும் இறைவன் கொடுக்கவேண்டும். இன்னும் பலனுாறு பேரின் சரித்திரங்கள் நாமும் அறியனும்...
நன்றிகள் கோடி!!!!

Rasmin said...

Thank you for the useful archive despite bundle of dust. Excellent piece of collection. Rasmin