- மன்னூரான் ஷிஹார்
ஈழத்தின் இன்றைய பெயர்சொல்லத்தக்க தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் பெரும் பிரயத்தனத்தினால் நூலுருப் பெற்றிருக்கும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” எனும் சிறுகதைத் தொகுப்பானது அரபுலகின் நாம் அறிந்திராத பல சங்கதிகளை ஏந்தியதாக வெளிவந்திருக்கின்றது.
‘ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது தமிழ்ப் பழமொழி. தமிழர்தம் வாழ்வியலோடும் பாரம்பரியத்தோடும் தொடர்புடைய ஒரு தானியமாக அரிசிச்சோறு இருப்பதால்தான் போலும் இந்தப் பழமொழியில் அது உதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதையே நான் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இந்தச் சிறுகதைத் தொகுப்போடு பிரதியிட்டுப் பார்க்கின்றேன்.
அரபுலகைப் பொறுத்தமட்டில் அதனுடைய அன்றாட வாழ்வியல், வரலாறு, பாரம்பரியம் என்பவற்றோடு ஐக்கியமான ஒரு உணவாகக் கருதப்படுவதும், அரபுதேசம் என்றதுமே நம் எல்லோருக்குமே சட்டென நினைவுக்கு வருவதும் அங்குள்ள பேரீச்சம்பழங்களே. அதில் பலவகையுண்டு. அந்தவகையில் ஈராக், எகிப்து, சூடான், சிரியா, பலஸ்தீன், யெமன், மொரோக்கோ, ஓமான், லிபியா போன்ற வேறுபட்ட குணாதிசயங்களைக்கொண்ட அரபுநாடுகளையும் வெவ்வேறுபட்ட காலகட்டங்களில் அந்நாட்டு மக்களின் வாழ்வியலின் வேறுபட்ட கோணங்களையும் கருவாகக் கொண்டிருக்கும் இந்தக் கதைகளை விதம்விதமான பேரீச்சம்பழங்களாய் நான் காண்கின்றேன். இப்பல்வகைப் பேரீச்சம்பழங்களையும் ஒன்றாகச் சேகரித்து ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்களாய் நமக்கு விருந்தாக்கியிருக்கின்றார் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.
பேரீச்சம்பழங்களில் எத்தனை வகையறாக்கள் இருந்தபோதிலும் அவை எல்லாவற்றுக்கிடையிலும் ‘தித்திப்பு’ என்னும் பிரதான ஒற்றுமை உண்டு. அதுபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும்கூட கதை பின்னப்பட்டிருக்கும் தேசம், காலகட்டம், சூழல், பிரதான பாத்திரங்கள் என்பவற்றுக்கிடையில் ஏராளமான வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலுங்கூட இந்தக் கதைகள் எல்லாவற்றுக்குள்ளும் தென்படும் ஒற்றுமையாய் ஒரு இனம்புரியாத சோகம் இழையோடியிருப்பதை வாசகர்கள் உணரலாம். “Unity in diversity” வேற்றுமையில் ஒற்றுமை என்பார்களே, அதைத் தனதிந்தத் தொகுப்பிலே வெளிக்காட்டியிருக்கின்றார் எழுத்தாளரர். வானவில்லின் ஏழுநிறங்களும் ஒன்றுக்கொன்று தனித்துவமானதாக இருந்தபோதிலுங்கூட அவை ஏழும் சேர்ந்தால்தான் அது வானவில்லாய் அங்கீகாரம் பெறுகின்றது. அதுபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுங்கூட ஒவ்வொரு கதையிலும் ஒரு தனித்துவம் தெரிகிறது;
அதேவேளை அவற்றுள் ஒரு ஒத்த தன்மையும் தென்படுகின்றது.

