Friday, April 27, 2012

ராஜ ராஜேஸ்வரி!


ஜீரணமாகாத உணவு வயிற்றில் அவஸ்தையை ஏற்படுத்துவது போல சிந்தையின் நிம்மதியை அவ்வப்போது கலைத்துப் போட்டுக் கொண்டேயிருக்கிறது ராஜேஸ்வரி அக்காவின் இழப்பு.

ராஜேஸ்வரி அக்காவுடன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றியது மட்டுமல்ல, புத்தி தெரிந்த காலம் முதல் அவரது குரலையும் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்ததும் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

அக்காவிடம் பல விசேட தன்மைகள் இருந்தன. நல்ல முன்மாதிரியான பண்புகள் இருந்தன. இவையும் அக்காவை உறவுகளில் ஒன்றாக மனது வரித்துக் கொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம்.

அக்காவிடம் எப்போதும் ஒரு Perfection ஐப் பார்த்து வந்திருக்கிறேன். அவரது அறிவிப்பு, நடிப்பு, உடை, உணவு, மற்றோருடனான உறவு - இவையெல்லாவற்றிலுமே அந்த முழு நிறைவு இருந்து வந்திருக்கிறது. இதை இன்னும் சொல்லப் போனால் அவரது எல்லா நடவடிக்கைகளிலுமே ஒரு நறுவிசுத் தன்மையும் அழகும் இருந்திருக்கிறது.
 


நல்லதை மனந்திறந்து பாராட்டுவது அவரது நற்பண்புகளில் ஒன்று. சிறப்பான ஒரு செயலை ஒரு சிறியவர், இளையவர் செய்தால் பெரியவர்கள் பெரும்பாலும் அதைக் கண்டு கொள்வதில்லை. அவ்வாறு பாராட்டுவதற்கு மிகப் பரந்த மனம் வேண்டும். அது அக்காவிடம் இருந்தது. பாராட்டுவதோடு மட்டும் அவர் நின்று விடுவதில்லை. அதை மற்றவர்களிடமும் எடுத்துச் சொல்வது அந்நற்பண்பின் உச்சம்.

ஓர் இரவுச் செய்திக்குப் பிறகு நான் வாசித்த மரண அறிவித்தலில் ‘அழகு மீனாள்’ என்றொரு பெயர் வந்தது. அடுத்த நாள் என்னைக் கண்ட வேளை, “அழகு மீனாள் எப்படியிருப்போளோ தெரியவில்லை... ஆனால் நீ அதை உச்சரித்த விதத்தில் அவள் பேரழகியாக என் மனதில் பதிந்து விட்டாள்” என்று சொன்னார். இதை ஒரு முறை சொன்னதோடு அவர் நிறுத்தி விடவில்லை. அவ்வப்போது சொல்லி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார். இதுதான் எங்கள் அன்பான ராஜேஸ்வரி அக்கா!

பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் பாடல்களுக்கு அவர் சொல்லும் இரண்டடிக் கவிதைகள் விசேடமானவை. அதற்கு என்னைப் போன்ற பல்லாயிரம் இரசிகர்கள் அவருக்கிருந்தார்கள்.

2008ல் எனது கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் அக்காவை வாழ்த்துரை வழங்க வேண்டும் என்று அழைத்திருந்தேன். அவர் மட்டுமல்ல, அவரது வாழ்த்துரையும் அலங்காரமாகவே அமைந்திருந்தது. தனது அவசரங்களுக்குள் மவுன்ட்லவினியாவிலிருந்து முச்சக்கர வண்டியில் வந்து சேர்ந்ததாகப் பின்னர் அறிய வந்து மனம் நெகிழ்ந்து போனேன்.

அறிவிப்பாளர் அறைக்குள் அவர் கடமைக்காக நுழையும் போது போர் முனைக்குச் செல்லும் ஒரு வீராங்கனையின் துணிவும் இறை சந்நிதிக்குச் செல்லும் ஒரு பக்தையின் பக்தியும் அவரிடம் இருக்கும். ஒலிபரப்பின் மீது மரணம் வரை அவருக்குத் தீராத காதல் இருந்தது. அந்தக் காதல்தான் உலகம் பூராவும் லட்சோப லட்ச இதயங்களில் வாழும் பாக்கியத்தை அவருக்கு வழங்கியது.

ஒலிபரப்பு விடயத்தில் அவரிடம் நான் உணர்ந்த முக்கியமான அம்சம் ஒன்று உண்டு. செய்தியாகட்டும், அறிப்பாகட்டும் - அவரது குரலில்
Athority இருக்கும். ‘இதைத்தான் சொல்கிறேன், நான்தான் சொல்கிறேன், இது சர்வ நிச்சயம்’ என்ற தொனி எப்போதும் இழையோடும். இதுதான் ஓர் அறிவிப்பாளன் பயிற்றுவிக்கப்படும்போது சொல்லிக் கொடுக்கப்படும் முக்கியமான விடயமுங்கூட.


எனக்கு ஒலிபரப்பில் கொஞ்சம் அனுபவம் வந்துவிட்டது என்று அவர் தீர்மானித்த பிறகு, தனது நிகழ்ச்சிகள் முதற் கொண்டு செய்திகள் வரை என்னிடம் அபிப்பிராயம் கேட்பதுண்டு. அவ்வாறு அவர் கேட்கும் போதெல்லாம் நான் சொல்லும் ஒரே வார்த்தை - ‘ராஜ ராஜேஸ்வரி!’ என்பதுதான்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை ஒரு இராஜ மாளிகையாகவும் தமிழ் ஒலிபரப்பை அரசாகவும் கொண்டால் அக்கா ராஜ ராஜேஸ்வரிதான்! மகாராணிதான்!!

ஒருவரது மரணத்தில் மூலம் மற்றவர்கள் வருந்துகிறார்கள் என்றால் அந்த மனிதரது வாழ்க்கை அன்பும் அர்த்தமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, பொருந்திக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து செல்ல ராஜேஸ்வரி அக்காவுக்கு வாய்த்திருக்கிறது என்பதைக் கொண்டுதான் அவரது மரணத்தால் வருந்துவோர் திருப்திப்பட வேண்டியிருக்கிறது.


ஒரே கதிரையிலிருந்து அக்கா எழ, நான் அமர அல்லது நான் எழ, அக்கா அமர - அவர் அறிவிப்புச் செய்த அதே ஒலிவாங்கியில் அறிவிப்புச் செய்யக் கிடைத்ததும் அவரது அன்புக்குரிய தம்பிமாரில் ஒருவனாக இருந்ததும் எனக்குக் கிடைத்த பாக்கியங்களில் ஒன்று என்று சொல்வேன்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Lareena said...

அவர் என்னுடைய அபிமான அறிவிப்பாளர். கம்பீரமான அந்தக் குரல் இப்போதும் என் காதுக்குள் ஒலிப்பதான பிரமை தோன்றுகிறது.

பல்கலைக்கழக "ரேகிங்" முடிவதற்கு முதல்நாள். "ரேகிங்" கொஞ்சம் கூடவே இருக்கும்.

சீனியர் அண்ணன் ஒருவர் கேட்ட கேள்வி, "உனக்குப் பிடித்த அறிவிப்பாளர் யார்?"

சற்றும் தாமதிக்காமல், "பி.எச். அப்துல் ஹமீத், ராஜேஷ்வரி ஷண்முகம்!" என்று பட்டென்று பதில் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.

மரணம் என்பது மாற்ற முடியாத விதிதான். எனினும், அவரது மரணச் செய்தி மனசுக்கு மிகுந்த வலி தருகிறது... :(

நீங்கள் சொன்னது 100% சரி Sir. அவர் ராஜ ராஜேஷ்வரியேதான்!

சிரிப்புசிங்காரம் said...

திருமதி ராஜேஸ்வரி அவர்களின் குரலை நான் கேட்டதில்லை.ஆனால் உங்கள் பதிவின் மூலம் அவரது தன்மைகளும்,அவர்மீது தாங்கள் கொண்டுள்ள மரியாதையும் ப்ரிகிறது..வழ்த்துக்கள்...

Anonymous said...

புத்தி தெரிந்த காலம் முதல் அவரது குரலையும் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கேட்டு மகிழ்ந்ததும் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
.......
உண்மைதான்.
முதலில் சகோதரி கலைமகள் கிதாயாதான் தொலைப்பேசியில் இச்சோகச் செய்தியைக் கூறினார். நாங்கள் அடைந்த வேதனைக்கு அளவேது?
மறக்கவே முடியாத ஆளுமை திருமதி ராஜேஸ்வரி அம்மா அவர்கள்.
அவரிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் இப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டேன்.
எஸ்.பாயிஸா அலி.