Monday, September 17, 2012

கைகளில் கசியும் பேரீச்சம் பழங்கள்


கைகளில் கசியும் ஒரு “சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்”

- மன்னூரான் ஷிஹார்ஈழத்தின் இன்றைய பெயர்சொல்லத்தக்க தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் பெரும் பிரயத்தனத்தினால் நூலுருப் பெற்றிருக்கும் “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” எனும் சிறுகதைத் தொகுப்பானது அரபுலகின் நாம் அறிந்திராத பல சங்கதிகளை ஏந்தியதாக வெளிவந்திருக்கின்றது.

‘ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது தமிழ்ப் பழமொழி. தமிழர்தம் வாழ்வியலோடும் பாரம்பரியத்தோடும் தொடர்புடைய ஒரு தானியமாக அரிசிச்சோறு இருப்பதால்தான் போலும் இந்தப் பழமொழியில் அது உதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதையே நான் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இந்தச் சிறுகதைத் தொகுப்போடு பிரதியிட்டுப் பார்க்கின்றேன்.

அரபுலகைப் பொறுத்தமட்டில் அதனுடைய அன்றாட வாழ்வியல், வரலாறு, பாரம்பரியம் என்பவற்றோடு ஐக்கியமான ஒரு உணவாகக் கருதப்படுவதும், அரபுதேசம் என்றதுமே நம் எல்லோருக்குமே சட்டென நினைவுக்கு வருவதும் அங்குள்ள பேரீச்சம்பழங்களே. அதில் பலவகையுண்டு. அந்தவகையில் ஈராக், எகிப்து, சூடான், சிரியா, பலஸ்தீன், யெமன், மொரோக்கோ, ஓமான், லிபியா போன்ற வேறுபட்ட குணாதிசயங்களைக்கொண்ட அரபுநாடுகளையும் வெவ்வேறுபட்ட காலகட்டங்களில் அந்நாட்டு மக்களின் வாழ்வியலின் வேறுபட்ட கோணங்களையும் கருவாகக் கொண்டிருக்கும் இந்தக் கதைகளை விதம்விதமான பேரீச்சம்பழங்களாய் நான் காண்கின்றேன். இப்பல்வகைப் பேரீச்சம்பழங்களையும் ஒன்றாகச் சேகரித்து ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்களாய் நமக்கு விருந்தாக்கியிருக்கின்றார் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

பேரீச்சம்பழங்களில் எத்தனை வகையறாக்கள் இருந்தபோதிலும் அவை எல்லாவற்றுக்கிடையிலும் ‘தித்திப்பு’ என்னும் பிரதான ஒற்றுமை உண்டு. அதுபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும்கூட கதை பின்னப்பட்டிருக்கும் தேசம், காலகட்டம், சூழல், பிரதான பாத்திரங்கள் என்பவற்றுக்கிடையில் ஏராளமான வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலுங்கூட இந்தக் கதைகள் எல்லாவற்றுக்குள்ளும் தென்படும் ஒற்றுமையாய் ஒரு இனம்புரியாத சோகம் இழையோடியிருப்பதை வாசகர்கள் உணரலாம். “Unity in diversity”  வேற்றுமையில் ஒற்றுமை என்பார்களே, அதைத் தனதிந்தத் தொகுப்பிலே வெளிக்காட்டியிருக்கின்றார் எழுத்தாளரர். வானவில்லின் ஏழுநிறங்களும் ஒன்றுக்கொன்று தனித்துவமானதாக இருந்தபோதிலுங்கூட அவை ஏழும் சேர்ந்தால்தான் அது வானவில்லாய் அங்கீகாரம் பெறுகின்றது. அதுபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுங்கூட ஒவ்வொரு கதையிலும் ஒரு தனித்துவம் தெரிகிறது;
அதேவேளை அவற்றுள் ஒரு ஒத்த தன்மையும் தென்படுகின்றது.இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கும், ஈழத்தின் மற்றுமொரு புகழ்பூத்த எழுத்தாளரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைகளுக்கான முன்னாள் விரிவுரையாளருமான  லறீனா அப்துல் ஹக் அவர்கள் குறிப்பிடுகின்றபோது, “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” என்னும் இந்நூலானது தமிழில் வெளிவரும் முதலாவது அரபுச் சிறுகதைகளின் தொகுப்பாகும் எனத் தான் எண்ணுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அது அநேகமாய்ச் சரியான தகவலாகவே இருக்கும். அந்தவகையில் அரபுச் சிறுகதைகளின் தமிழ்மொழியாக்கம் எனும் அளப்பரிய பணியில் ஈடுபட்டு வெற்றிகண்டவர்களுள் முதன்மையானவர் என்ற பெருமை அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களையே சாரும்.

இலக்கியங்களை மொழிபெயர்த்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல் ஒரு பயிரை அதன் ஆணிவேர்முதலிய பிரதான பாகங்கள் அறுபடாமல் அது இருக்கின்ற பாத்தியிலிருந்து பெயர்த்து வேறொரு பாத்தியில் நடுவது போன்றது. மூலமொழி இலக்கியத்திலுள்ள சூடு, சுவை, சுவாரசியம் என்பவை சற்றேனும் குன்றிவிடாமலும் அதற்குள் பாய்ச்சப்பட்டிருக்கும் எழுத்தாளனின் இதயத்துடிப்பு எக்காரணம்கொண்டும் அடங்கிவிடாமலும் இலக்குமொழி இலக்கியத்திற்குக் கடத்தப்பட்டிருக்கவேண்டும். அப்போதுதான் அந்த மொழிபெயர்ப்பு முயற்சியானது வெற்றிபெற்றதாக அமையும்.

அந்தவகையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பானது தமிழ்தான் இதன் மூலமொழியோ என்று யோசிக்கத்தக்க வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இதில் சொல்லியே ஆகவேண்டிய இன்னொரு உண்மை என்னவெனில், இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் யாவும் நேரடியாக அவற்றின் மூலமொழியாகிய அரபுமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படவில்லை என்பதே. ஆம், அவை யாவும் அரபுமொழியிலிருந்து பல்வேறு எழுத்தாளர்களால் ஆங்கிலமொழிக்குப் பெயர்க்கப்பட்டவை. அவற்றைத்தான் நமது எழுத்தாளர்அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.

ஓர் இலக்கியத்தை மூலமொழியிலிருந்து பிறிதொரு மொழிக்குப் பெயர்த்தெடுப்பதென்பதே மிக நுண்ணியதும் நூதனமானதுமான வித்தை. அப்படியிருக்கையில் அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டதைப் பிறிதொரு மொழிக்கு மாற்றுவதென்பது சாதாரணமான ஒன்றல்ல. அப்படித்தான் மாற்றினாலும் மூலமொழி இலக்கியத்தில் காணப்படுகின்ற உயிரோட்டம் தடைப்படாதவாறு மூன்றாவது மொழிக்கு மாற்றப்படுவதென்பது அதனிலும் மிகமிக நுண்ணியதும் நூதனமானதுமான வித்தை என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த அரபுமொழிச் சிறுகதைகளை தங்களது மொழிபெயர்ப்புக்களினூடாக உயிரோட்டத்தோடு மூன்றாம் மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்யக்கூடிய விதத்தில் மிகுந்த அவதானத்தோடு ஆங்கிலமொழிக்குப் பெயர்த்தவர்களை இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவ்வாறு பெயர்க்கப்பட்டதைத்  துல்லியமான அவதானத்துடன்  மீண்டும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் அதைவிடவும் பாராட்டுதற்குரியவர்.

“ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் அரபு மண்ணின் வாசனை வந்து வாசகர் நாசிகளைத் துளைக்கவே செய்கிறது. ‘புகையிரதம்’ என்னும் கதையில் வருகின்ற அந்தக் குழந்தைகளை நாம் தத்தெடுத்து வளர்த்திருக்கலாமே என்று அர்த்தமில்லாமல் மனது அங்கலாய்க்கும் அதேவேளை, கதை தொடங்கியது முதல் இறுதிவரை அவர்களுக்காய் எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தபடியே இருக்கும் கதை விளம்பியை (narrator)  கடிந்துகொள்கிறது மனது. ‘விற்பனைக்கான அற்புதங்கள்’ என்னும் கதையில் வரும் பாதிரியார்மீது பரிதாபப்படத் தோன்றுகிறது; அநியாயத்துக்கு அப்பாவியாய் இருந்துவிட்டாரே என்று அனுதாபங்கொள்ளவைக்கின்றது.

 ‘ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்’ என்ற கதையில் வருகின்ற பாத்திரமாகிய மஸூதின்மீது மனம் இரங்கத்தான் செய்கிறது. ‘சின்னச் சூரியன்’ என்கின்ற கதையில் அபூ ஃபஹத்தின் ஏழ்மைதானே அவனது பரிதாபகரமான இறப்புக்கு ஏக காரணமாய் இருந்திருக்கின்றது என்பதை உணர்கையில் துக்கம் நெஞ்சை அடைக்கிறது. ‘காஸாவிலிருந்து ஒரு கடிதம்’ பலஸ்தீனர்களின் விடுதலை வேட்கையின் பின்னணியிலுள்ள நியாயங்களை நமக்குப் புரியவைக்கின்றது. ‘கறுப்புப் பூனை’ என்னும் சிறுகதை ராஜேஷ்குமார், சுபா போன்ற தமிழக நாவலாசிரியர்களின் திகில் கதைகளை நினைவுபடுத்தினாலுங்கூட இதில் ஏதோவொரு தனித்துவம் இருப்பதை உணரமுடிகின்றது. ‘சிவப்புப் புள்ளி’ மற்றும் ‘திருமணம்’ ஆகிய கதைகள் அரபுலகின் இருவேறுபட்ட பெண்களின் நிலைகளைக் காட்டிநிற்பதோடு அவர்கள் புறத்தில் அவர்களது நடவடிக்கைகள் நியாயமானவைதான் என்றவொரு மாயையை நமக்குள் தோற்றுவிக்கின்றன.

இச்சிறுகதைத் தொகுப்பின் இறுதிக்கதையாகிய ‘நெடுநாள் சிறைவாசி’யில் முக்கிய பாத்திரமாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கும் சாலிஹ் மீது கதையின் தொடக்கத்தில் நமக்குத் தோன்றுகின்ற எரிச்சலும் ஆத்திரமும் படிப்படியாகக் குறைந்து ஈற்றில் அவன்மீது நமக்கொரு மரியாதையும் அனுதாபமும் தோன்றுகின்றது; தன் மானசீகக் காதலி ஸைனப்பை தான் அடையவேண்டுமென்பதில் அவனுக்குள்ள ஆதங்கத்தைவிடவும் நமக்கு அதிக ஆதங்கம் ஏற்படுகின்றது.

இப்படியாக, இந்தத் தொகுப்பின் அத்தனை கதைகளுக்குள்ளும் நம்மை ஆழ அமிழ்த்துத்தான் வெளியே விடுகின்றார் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன். அத்தோடு அவற்றின் கதாபாத்திரங்களோடு நம்மை வாழச்செய்கின்றார்.. எனவே, ‘ஒரு தோப்புப் பேரீச்சம் பழங்களுக்கு ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள் பதம்’ என்று சொல்லும்வகையில் அரபு மண்ணிலிருந்து ஆங்காங்கே பொறுக்கியெடுக்கப்பட்ட அரிய பத்துச் சிறுகதைகளை அழகுத்தமிழில் பெயர்த்து வாசகர்களின் உணர்வுக்கும் இரசனைக்கும் விருந்தாக்கியிருக்கும் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தனது எழுத்தின் வீரியத்தை இந்தச் சிறுகதைத் தொகுப்பினூடாக மீண்டும் ஒருமுறை தமிழுலகுக்குப் பறைசாற்றியிருக்கின்றார் என்றால் அதுவே உண்மை.

(16.09.2012 அன்று தினக்குரல் பத்திரிகையில் வெளியாகியிருந்த ரசனைக் கட்டுரை இது. நன்றி - மன்னூரான் ஷிஹார் மற்றும் தினக்குரல்)


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

நூலை மிக ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பதும், தான் ஒரு சிறந்த இலக்கிய ரசிகர் என்பதும் மன்னூரான் ஷிஹாரின் இந்த நயவுரை மூலம் தெரிகின்றது. வாழ்த்துக்கள்!