Showing posts with label பிக்குகள். Show all posts
Showing posts with label பிக்குகள். Show all posts

Monday, April 1, 2013

பிக்குகள் : கவனம்!




அனுராதபுர ஸியாரத்தில் ஆரம்பித்து தம்புள்ளை பள்ளிவாசல், ஹலால் விவகாரம், முஸ்லிம் பெண்களின் ஆடை, பகிரங்க மேடைகளில் இன விரோதத்தை விதைக்கும் பேச்சுக்கள் என்று பெப்பிலியான பெஷன்பக் கடை உடைப்பு வரை நடைபெற்ற மக்கள் விரோதச் செயற்பாடுகளில் பௌத்த பிக்குகள் பகிரங்கமாகச் செயற்படுவதை தௌ்ளத் தெளிவாக இலங்கை மாத்திரமன்றி முழு உலகமுமே பார்த்து வருகிறது.

சமூக விரோதச் செயற்பாடுகளில் நாட்டில் இனக்குரோதத்தைப் பரப்பி ஒரு கலவரத்தை உருவாக்க முயலும் காரியங்களில் ஈடுபடும் இந்தப் பிக்குகளுக்கு எதிராக குற்றங்களுக்காக சான்றுகள் இருந்தும் எந்த வகையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப் பிரிவில் 'தெயட்ட கிருள' வுக்கு எதிராக தெருவில் டயர் எரித்தார்கள் என்று இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.

பௌத்த பிக்குகளுக்கு இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களிடம் மாத்திரமன்றி சிறுபான்மை மக்களிடத்தும் ஒரு மரியாதை இருந்து வருகிறது. பிக்குகளில் ஒரு சாரார் நடந்து கொள்ளும் விதம் காரணமாக கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளும் பிக்குகளும் கூட எதிர்காலத்தில் நாகரிக சமூகத்தில் அவமதிக்கப்படவும் அலட்சியப்படுத்தப்படவுமான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் கடைகளில் கொள்வனவு செய்யாதீர்கள் என்ற கோஷத்தை அவ்வப்போது பிக்குகள் முன்னெடுத்து வந்ததை மாணவப் பருவத்திலிருந்து நான் கண்டு வந்திருக்கிறேன். இருந்து விட்டு அவ்வப்போது முஸ்லிம் கடைகளில் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவ்வப்போது மாட்டிறைச்சி மாடு அறுக்க வேண்டாம் என்றும் பிக்குகளே முன்நின்று துண்டுப் பிரசுரம் விநியோகிப்பார்கள். சில நாட்களில் அக்காட்சிகள் மறைந்து விடும்.

சிஹல உறுமய அமைப்பு கட்சியாகி அரசியலில் ஈடுபட்ட போது பொதுமக்களின் விருப்பமின்மை வெளிப்படுத்தப்பட்டது. சுகபோகமும் அரசியல் வாழ்வையும் துறந்த கௌதம சித்தார்த்தரைப் பின்பற்றுவோர் கௌதம சித்தார்த்தர் எதைத் துறந்தாரோ அதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்ற கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் பல பிக்குகளைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பலர் சிறைகளில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அரசியல் முதற்கொண்டு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதெல்லாம் கௌதம சித்தார்த்தர் துறக்கச் சொன்ன பேராசையின் பாற்பட்டதென்பதை யாரால் மறுக்க முடியும்?