Thursday, August 18, 2011

கண்ணீராகும் தண்ணீர்!


ஒரு நல்ல கவிதையைப் படிக்கும் அனுபவம் பரவசமிக்கது.

பல நூறு கவிதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுள் கவிதையைப் போன்றவை, பரவாயில்லை ரகம், நல்லாயிருக்கு ரகம், அருமையாயிருக்கிறது ரகம், சிறப்பான கவிதையென்று பல வகைகள் உள்ளன.

படித்து முடித்த பிறகும் நம்முடன் கூடவே நடந்து வருவதும் நம்மை விட்டு அகன்று போகாமல் அடம் பிடிப்பதும், நம் சிந்தையிலே சுழன்று கொண்டிருப்பதும் நல்ல கவிதைக்கான பண்புகள்.

இன்றைய தமிழ்ச் சூழலில் புரணமானதும், ரசனை மிக்கதும், நம்மைப் பாடாய்ப்படுத்துவதுமான கவிதைகளைக் காணக்கிடைக்கவில்லை.

கவிதையொன்றைப் படிக்க வேண்டுமே என்ற ஆவல் மேவ ஒரு கவிதைப் புத்தகத்தைத் திறந்தேன். ஒன்று கிடைத்தது. இந்தக் கவிதை எனக்குப் பிடித்து.

கவிஞர் க.து.மு. இக்பால் அவர்களின் கவிதை இது. 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவியரங்கில் என்னுடன் அவரும் கவிதை படித்தார். கவியரங்கு முடிந்ததும் அன்பொழுக என்னை இறுகக் கட்டித் தழுவினார். அவருடன் நின்று ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளக் கிடைக்கவில்லை என்பது எனககுக் கவலை.

கடையநல்லூர் பெற்றெடுத்த மற்றொரு கவிஞர். இதய மலர்கள், அன்னை, முகவரிகள், வைரக் கற்கள், கனவுகள் வேண்டும் - ஆகியன இவரது கவிதை நூல்கள் என்ற குறிப்புக் கிடைத்துள்ளது. ஆசியான் விருது, தமிழவேள் விருது ஆகியன இவருக்குக் கொடுக்கப்பட்டதன் மூலம் அவ்விருதுகள் பெருமையடைந்துள்ளன.

தண்ணீர் என்ற ஒரே ஒரு விடயத்தை வைத்து கவிஞரின் கற்பனை எவ்வளவு அழகாக விரிகிறது என்பது கவனித்தக்கது. அநாவசிய சொற்களோ வார்த்தைப் பிரயோகமோ கவிதையில் கிடையாது. எந்தளவு சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல முடியுமோ அந்தளவுடன் கவிஞர் நிறுத்திக் கொண்டுள்ளார் என்பதை இப்போது கவிதைகளுடன் மாரடித்துக் கொண்டிருக்கும் இளவல்கள் கவனிக்க வேண்டும்.

ஜெர்மனியின் ஹனோவர் நகரில் 1.6.2000 முதல் 31.10.2000 வரை நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சியில் வைப்பதற்காக ஜெர்மனிய அரசின் கீழ் இயங்கும் குதே இன்ஸ்டிடியுட் இந்தக் கவிதையைத் தெரிவு செய்திருக்கிறது.  “மனித குலம் - இயற்கை - தொழில்நுட்பம்” என்ற தொனிப் பொருளில் நடந்த அக்கண்காட்சியில் 200 நாடுகளிலிருந்து நான்கு கோடிப் பேரளவில் கலந்து கொண்டார்களாம்.

இனி கவிதைக்கு வருவோம்.

தண்ணீர்

வெய்யிலின் வாய் உன்னை
விழுங்கி விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்தேன்
மழையாக நீ
மண்ணுக்குத் திரும்பும் வரை!

கடலுக்குள் ஆறாய்க் கலந்து நீ
களங்கப்பட்டு விட்டதாகக்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்
ஓரக் கரையில் நீ
ஊற்றாகச் சுரக்கும் வரை!

இறங்கிவர மட்டுமே
உனக்குத் தெரியும் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன்
ஆவியாக நீ
ஆகாயத்தில் ஏறும் வரை!

உயிர்களை உண்டாக்கும்
உன்னதப் பொரளாகவே
உன்னைப் பாடிக் கொண்டிருந்தேன் -
மூழ்கிச் செத்தவர்களை நீ
முதுகில் சுமந்து காட்டும் வரை!

தண்ணீரே..
புற அழுக்கை மட்டுமே உன்னால்
போக்க முடியும் என்றிருந்தேன் -
என் சோக அழுக்கை
நீ கண்ணீராக வந்து
சுத்தம் செய்யும் வரை!

(நன்றி - இஸ்லாமியக் கவிதைகள்)


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

rajamelaiyur said...

Writing style super

Junaid M Haris - SLBC said...

தண்ணீரே..
புற அழுக்கை மட்டுமே உன்னால்
போக்க முடியும் என்றிருந்தேன் -
என் சோக அழுக்கை
நீ கண்ணீராக வந்து
சுத்தம் செய்யும் வரை!

Superb thinking..This indicates that One word might talk several meanings...

Shaifa Begum said...

கவிதை மிக அழகு ! அசாத்தியக் கற்பனைத்திறன்.. இது நமக்கு சுட்டுப்போட்டும் வராத, கவிஞர்களுக்கு மட்டுமே வருகின்ற ஒன்று...

இறங்கிவர மட்டுமே
உனக்குத் தெரியும் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன்
ஆவியாக நீ
ஆகாயத்தில் ஏறும் வரை!

எவ்வளவு அழகான கற்பனை.......! சேர் இணைத்தததிற்கு உங்களுக்கு நன்றிகள்!