Showing posts with label ஷவ்வால் பிறை. Show all posts
Showing posts with label ஷவ்வால் பிறை. Show all posts

Thursday, August 15, 2013

பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்


சுமார் 2 முழு நாட்களை செலவு செய்து ஏ4  தாளில் 20 பக்கங்கள் எழுதி சமூகத்திற்கு அவசியம் சொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்த விடயங்களை மட்டும் பொறுக்கித் தயார் செய்ததே இந்த ஆக்கம். இதற்கு முன் எழுதிய 'வியாழன் நோன்பா..? பெருநாளா..?' என்ற ஆக்கம் சமூகத்தில் பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டாலும் அது நான் எழுதிய நோக்கத்தை நிறைவேற்றப் போதியதாக இல்லை என்பதே மீண்டும் இவ்வாக்கத்தை எழுதத் தூண்டியது.

எனது முதல் ஆக்கத்தில் மிகவும் அடக்கமாக இரண்டு தவறுகளை மாத்திரம் சுட்டிக்காட்டினேன். சமூகம் சிந்திக்க வேண்டும், படிப்பினை பெறவேண்டும். எமது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய காலத்தில் எமது உள்வீட்டு விஷயங்களையே தீர்த்துக்கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

இந்நிலை தொடரக்கூடாது என்பதை சமூகம் சாடையால் விளங்கிக் கொள்ளட்டும் என்ற நோக்கிலேயே முதல் கட்டுரையை எழுதினேன். எனினும் தற்போது களத்தில் காணுகின்ற கேட்கின்ற செய்திகள் 'எழுதுவதைத் தெளிவாக எழுது! நாசூக்காக சொல்வதை விளங்கும் நிலையில் இன்றையவர்கள் இல்லை' என்ற உண்மையை உணர்த்துவதாக இருந்தன. எனவே வெளிப்படையாக சில விடயங்களை சொல்லும் நோக்கில் இதனை எழுதுகின்றேன்.

ஒரு பிரச்சினைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கங்களையும் எடுத்து ஆராய்கின்ற போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனினும் ஒரு சிலரால் பிரச்சினையின் ஒரு பக்கம் வலுக்கட்டாயமாக மூடிமறைக்கப்படுகின்றது. அதன்மூலம் நடைபெற்ற தவறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது சமூகத்தை பிழையான திசை நோக்கி அழைத்துச்செல்லும் ஒரு முயற்சியாகும்.

உமர் (ரழி) அவர்களிடம் கண்பிதுங்கி இரத்தம் வடிந்த நிலையில் ஒரு மனிதன் வந்தான். தனக்கு இந்த அநியாயத்தைச் செய்தவன் பற்றி முறையிட்டான். அப்போது உமர் (ரழி) அவர்கள், 'உனது காயத்துக்கு மருந்திட்டுக்கொள், நடந்ததை விசாரிப்போம்' என்றார்கள். இதனைக்கேட்ட அந்த மனிதன் கொதிப்படைந்தான். 'விசாரணை செய்ய என்ன இருக்கிறது? என்னைப் பார்த்தால் நடந்தது விளங்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உமர் (ரழி) அவர்கள், 'நீ அவனது இரு கண்களையும் பழுதுபடுத்தி விட்டு வந்திருக்கலாமல்லவா. விசாரணையின்றி எப்படி அதனைத் தெரிந்து கொள்வது?' என்றார்கள்.

பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு தலைவர் ஒரு பக்கத்தை மூடிமறைக்காமல் எப்போதும் இரண்டு பக்கங்களையும் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால் பிறை விடயத்தில் இரண்டு பக்கங்கள் பார்க்கப்படவில்லை. ஒரு பக்கம் தான் பார்க்கப்பட்டது. பார்க்கப்பட்ட ஒரு பக்கம்: 18 வானியல் நிபுணர்களின் கணிப்பு.. இந்தக் கணிப்பின் படி பிறை வெற்றுக் கண்ணுக்கு தென்படாது.

மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அல்லது அலட்சியம் செய்யப்பட்ட பக்கம்: 25இற்கும் அதிகமானவர்கள் பிறையைப் பார்த்தார்கள் என்பதாகும். இவ்வாறு பிறையைப்பார்த்தவர்களுள் ஆலிம்களும் உள்ளடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு முரண்பட்ட விடயங்கள் தானே மொத்த சமூகத்தையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. சாதாரண குழப்பமா? ஓன்றில் நோன்பு நோற்பது ஹராம் அல்லது பெருநாள் எடுப்பது ஹராம். இந்த இரண்டு ஹராம்களுக்கு மத்தியில் சமூகத்தை சிக்கித் தவிக்க வைத்த பிரச்சினையொன்றையே நாம் எதிர்கொண்டோம்.

ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் ஏன் தேவைப்படுகின்றது?இ நெருக்கடி மிக்க அல்லது குழப்பம் நிறைந்த இவ்வாறானதொரு சூழலில் ஷரீஆ நோக்கிலும் அறிவு ரீதியாகவும் பிரச்சினையைத் தீர்த்து சமூகத்தை அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்குத்தானே!

29 நோன்புகள் பூர்த்தியாகிவிட்டன. இனி முப்பதாகலாம் அல்லது பெருநாள் வரலாம். பிறை தென்பட்டிருக்கிறது. உலமாக்கள் உட்பட 25 பேரளவில் பிறை கண்டிருக்கிறார்கள். வானவியல் நிபுணர்கள் பிறை காண முடியாது என்று சொல்கிறார்கள். வானவியல் கூறுவது ஓரு கருதுகோள். முஸ்லிம்கள் பிறை கண்டது ஒரு சாட்சி.

சாட்சியை முற்படுத்துவதா கருதுகோளை முற்படுத்துவதா?

சாட்சி கிடைத்துவிட்டால் கருதுகோள் பலவீனமாகிவிடும். சமூகம் கருதுகோளை சரிகாண மாட்டாது. சாட்சியைத்தான் வலுவானதாகக் கருதும். வானவியல் நிபுணர்கள் பிறை கண்ணுக்குத் தெரிய மாட்டாது என்கிறார்கள். முஸ்லிம்கள் பிறை கண்ணுக்குத் தெரிந்தது என்கிறார்கள்.

விஞ்ஞானத்துக்கு மாற்றமாக உலகில் ஒன்றுமே நடப்பதில்லையா? அல்லாஹ்வின் வல்லமை (குத்ரத்) என்று எடுத்ததற்கெல்லாம் பேசுபவர்கள் இந்த நிகழ்வில் அல்லாஹ்வின் குத்ரத் செயற்பட்டிருக்கலாம் என்பதை உணர மறந்துவிட்டார்களா? அல்லது வானவியல் நிபுணர்கள் பிறை வெற்றுக்கண்ணுக்குத் தென்படாது என்று கூறிய ஜப்பான், மலேஷியா, கேரளா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் பலவற்றில் பெருநாள் கொண்டாடப்பட்டது ஹராமா? அங்கு சிலவேளை பிறை காணாமலேயே பெருநாள் கொண்டாடியிருக்கலாம். இங்கு கண்ட பிறையை நிராகரித்திருப்பது ஒரு பாவமில்லையா? பெருநாள் கொண்டாட வேண்டிய தினத்தில் எண்ணற்றவர்களை நோன்பு நோற்க வைத்து ஹராமைச் செய்வதற்கு முடிவெடுத்தவர்கள் ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்.

சப்தமிட்டுக் கேட்க வேண்டிய கேள்வி இது. பிரச்சினையின் இரண்டு பக்கங்களையும் பார்க்கத் தெரியாததால் வந்த விளைவு, சமூகத்தைத் தீராத குழப்பத்தில் ஆழ்த்திய தீர்மானம் இல்லை சமூகத்தைக் குழப்புவதற்கென்றே எடுத்த சாணக்கியமில்லாத தீர்மானம். சமூகம் ஒன்றாக இருப்பதை விரும்பாத தீய சக்திகளின் சதி இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும் என நினைக்கத் தூண்டும் வகையிலான ஒரு முடிவு இது.

இது பிறை தீர்மானிப்பதில் நடந்த முதல் தவறு. இரண்டாவது தவறு பிறை பார்த்தவர்களையும் பெருநாளை எதிர்பார்த்திருந்தவர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது மட்டுமல்ல, குறிப்பாக பிறை பார்த்தவர்களின் சாட்சியை நிராகரித்ததன் மூலம் சாட்சி அந்தஸ்து மறுக்கப்பட்ட 'ஃபாஸிக்' கள் போன்று அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஒரு முஸ்லிமின் சாட்சி எத்துனை கண்ணியமானது, அந்தஸ்து நிறைந்தது என்பதை இந்தத் தலைவர்கள் அறியவில்லை. ஆலிம்கள் உட்பட சுமார் 25 முஸ்லிம்களது சாட்சி முஸ்லிம்களின் விவகாரமொன்றில் மறுக்கப்படுவதானது என்னைப் பொறுத்தவரை ஒரு பயங்கரமான தீர்மானமாகும்.

இஸ்லாமிய நீதிமன்றம் இருந்தால் இந்தத் தீர்மானத்திற்கெதிராக வழக்குத் தொடரலாம். நட்டஈடும் கோரலாம். தீர்மானம் எடுத்தவர்கள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளிலிருந்து முற்றாக நீக்கப்படவும் கூடும்.

சாட்சி அந்தஸ்த்தை மறுக்குமாறு அல்லாஹ் ஒருசில 'பாஸிக்'கள் விடயத்தில் சட்டம் வகுத்துள்ளான். அவர்கள் தான் கற்புள்ளவர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள், விபசாரம் செய்தார்கள் என்று அவதூறு கூறும் பாவிகள். பிறை கண்டவர்கள் அப்படிப்பட்டவர்களா? பிறை கண்டவர்கள் ஓரிருவராக இருந்தால் சாட்சி இரண்டு பெயருக்கிடையில் முரண்பாடாக இருந்தது என்றொரு காரணத்தைக் கூறலாம். சுமார் 25 பேர் கண்ட பிறையை எந்தக்காரணம் கூறி நிராகரிக்க முடியும். 25 பேரையும் இவர்கள் விசாரித் துத்தான் முடிவுக்கு வந்தார்களா? அல்லது அத்தனை பேரும் சாட்சி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட பாவிகளா?

கிண்ணியாவின் பிறைக்குழுத் தலைவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள் தெளிவான முறையில் பெரிய பள்ளவாசலுக்கு அறிவித்தல் கொடுத்த பின்னரும் அறிவிப்பு ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற போலிக்காரணம் காட்டப்பட்டு பிறைச்செய்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

பிறை விவகாரம் முன் அனுபவமே இல்லாத ஒரு புதிய விவகாரம் போன்று சாணக்கியம் இல்லாமல் அணுகப்பட்டிருப்பதனையே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிறை நிராகரிக்கப்பட்ட பின் பல முஸ்லிம் ஊர்கள் குறிப்பாகக் கிண்ணியா பெருநாள் கொண்டாடும் தீர்மானத்துக்கு வந்தது. இந்தத்தீர்மானத்தை எடுக்க வைத்த காரணம் எது? கட்டுப்பாடின்மையா அல்லது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்இ புறக்கணிக்கப்படுகிறோம், முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாக நாம் கருதப்படவில்லை என்ற ஆதங்கமா?

அஸாத் சாலி அவர்களது விவகாரத்திலும் பொது பல சேனா விவகாரத்திலும் பக்குவமாக, பவ்வியமாக, கட்டுப்பாடாக நடந்து கொண்ட சமூகம் தான் பிறை விவகாரத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. யார் இதற்கு வகைகூறவேண்டும். இந்தப் பிளவுக்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும். சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபடுகின்றோம் என்று பேசிவிட்டால் மாத்திரம் போதாது. ஒரு தாய்க்கோழி கறுப்பாயினும் வெள்ளையாயினும் தனது இறக்கையினுள் தனது குஞ்சுகள் அனைத்தையும் அரவணைப்பது போல தலைவர்கள் இந்த சமூகத்தை அன்போடு அரவணைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனது முன் அனுபவங்கள் படி சொல்கிறேன். அவ்வாறு கறுப்பு, வெள்ளை பார்க்காது அரவணைக்கும் பரந்த மனம், சகோதரத்துவம், அன்பு தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு அரவணைக்கத் தெரியாதவர்கள் சமூகத்தை ஒற்றுமைக் கயிற்றினால் பிணைத்து வழிநடாத்துவது சாத்தியமில்லை.

பிறை விவகாரத்தின் பின்னர் எனது காதில் பட்ட ஒரு செய்தி தான் கிழக்கு மாகாணத்துக்கென ஒரு தனியான பிறைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி. அவ்வாறு அமைக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

Wednesday, August 14, 2013

ஷவ்வால் பிறையில் சறுக்கிய கதை!

இவ்வருட ஷவ்வால் பிறை தொடர்பாக எனதும் ஏனைய சிலரது குறிப்புகளும் சில முக்கிய பின்னூட்டங்களு்ம்



கிண்ணியா காக்காமுனைப் பள்ளிவாசல் மற்றும் ஜாவாப் பள்ளிவாசல் பகுதிகளில் மாலை 6.37க்கு ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டதாக அங்கிருந்து ஒரு சகோதரர் எனக்குத் தெரிவித்தார். ஜம்இய்யதுல் உலமா சபை சார்ந்தோர் பிறை கண்டவர்களைத் துருவித் துருவி விசாரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.






நாளை நோன்பு நோற்பது என்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணியாவில் பிறை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை என்றும் இன்று பிறையைக் காணும் சாத்தியம் இல்லை என்று வானியல் துறை முஸ்லிம் அறிஞர்கள் சொல்வதாகவும் பிறை கண்டதாகச் சொன்ன முறை சாட்சியத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது!





அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு இனிமேல் யாரையும் பிறை பார்க்குமாறு ஊடகங்களில் அறிவித்தல் கொடுக்காமல் தாங்களாகவே பார்த்து முடிவை அறிவித்தால் இப்படியான குழப்பங்கள் ஏற்படாது. இதற்கெனச் சிலரை விசேடமாக நியமித்து உரிய இடங்களையும் தீர்மானித்து முடிவுககு வருவது நல்லது. பிறை பாரு... பிறை பாரு என்று ஊடகங்களில் அறிவித்தல் கொடுத்து விட்டு இன்றைக்கு பிறை தென்பட சான்சே இல்லை என்பதும் தென்னை மர உயரத்தில் பார்த்தாயா, அதற்குக் கீழ் பார்த்தாயா, மேகத்துக்குள் பார்த்தாயா, எந்த சைசில் பிறை இருந்தது என்றெல்லாம் கேட்டு பிறை கண்ட முஸ்லிமைப் பிறாண்டி எடுப்பதும் அதை மறுதலிப்பதும் புத்திக்கு ஒவ்வுகிற செயலாக எனக்குத் தெரியவில்லை! எனவே பிறைக்குழு ஒரு தனி ஆய்வுக் குழுவை இதற்கென நியமித்து எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளைத் தவிர்க்க முடிவு செய்ய வேண்டும்!





தமது சங்க அங்கத்தவர்களான உலமாக்களையே நம்பாத மத்திய குழுவின் முடிவுகளுக்கு ஏற்ப நடக்கும் அவசியம் இல்லை என்பதை கிண்ணியா ஜம்இய்யாவின் முடிவு உணர்த்தியுள்ளது. இன்னும் சில வருடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல காங்கிரஸ்களாகப் பிரிந்தது போல் ஜம்இய்யத்துல் உலமா பிரியும் ஆபத்து உண்டு. அந்த அந்தப் பிரதேச ஜம்இய்யாவின் வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளும் கட்டாயத்தை மத்திய குழு ஏற்படுத்திச் செல்கிறது!



நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்லன். கிண்ணியாவில் கண்ட பிறை விடயத்தைச் சில புத்தி ஜீவிகள் கூட தௌஹீத் அமைப்புடன் இணைத்து வெறுப்பை உமிழ்ந்திருந்தார்கள். ஹஸன் மௌலவி போன்றவர்கள் அ.இ.ஜ.உலமாவினரோடு நீண்ட நேரம் விவாதித்ததாக அறியக் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் ஆலிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கண்ணியமும் மரியாதையும் இருக்கிறதுதானே! கொழும்பில் குந்தியிருக்கும் ஆலிம்களுக்கு மட்டும் எப்படி அந்த உலமாக்களை அவமதிக்கும் தைரியம் வந்தது என்று சிந்தித்தால் பல கதைகள் வெளிவரக் கூடும். கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியலும் அவர்களின் தலைவிதியும் கொழும்புத் தலைமைகளால்தான் தீர்மானிக்கப்பட்டு வந்தது. அதைத் தீர்மானித்தவர்கள் சுகபோகங்களில் செழித்துச் செல்வந்தர்களாகவும் பிரமுகர்களாகவும் படாடோபமாகப் பவனி வந்தார்கள். அதே வேளை ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்ந்தார்கள். அரசியல் ரீதியாக எம்.எச்.எம். அஷ்ரஃப் இந்த நிலைமையை மாற்றியமைத்தார். 'உலமாக்கள்இ பேசாதே!' என்று பயங்காட்டும் இந்த அடுத்த முஸ்லிமை அவமானப்படுத்தும் கோஷ்டிகளிலிருந்து முஸ்லிம்களுக்கு எப்போது விமோசனம் ஏற்படும் என்று தெரியவில்லை!

Friday, August 9, 2013

அழகு பிறையும் ஆலிம்ஷாவும்!


ஹஸ்ரத்:- டேய்... இங்க வா!

இளைஞன்: - என்ன ஹஸ்ரத்

ஹஸ்ரத்:- நீ இன்டர் நெற் பாக்குறியா?

இளைஞன்:- ஆமா... இப்ப அதெல்லாம் பார்க்காம யாருதான் இருக்காங்க...!

ஹஸ்ரத்:- நாசமாப் போச்சி! ஷைத்தான்... ஷைத்தான்... அது ஷைத்தான்டா! இரு.. இரு.. ஒங்க வாப்பாக்கிட்டத்தான் செல்லோணும்...

இளைஞன்:- வாப்பாதான் கிழமைக்கு நூறு ரூபாத் தருவாரு... ரீசார்ஜ்ஜூக்கு..

ஹஸரத்:- ஏன்ட அல்லாஹ்வே... சமூகமே ஹறபாய்ப் போய்க்கிட்டிருக்கு... பேஸ் புக்கும் போவியா?

இளைஞன்:- பேஸ் புக் போகாம இப்ப எவனாவது இருக்கானா? எவ்வளவு கெதியான, சுருக்கமான ஊடகம் அது... ஊர் ஒலகத்துல நடக்கிறத்தை ஒரு சிற்றிடிங்லயே பாத்துரலாம்...

ஹஸ்ரத்:- அப்போ இன்னைக்கு என்ன பார்த்தாய்?

இளைஞன்:- பிறைக் குழப்பம் சம்பந்தமா கிண்ணியா நெற்ல அ.இ.ஜ.உக்கு இரண்டு பக்கம் பதில் கொடுத்திருக்காங்க...

ஹஸ்ரத்:- லெட்டர் ஹெட் கலர்ல இல்ல பார்த்தியா?

இளைஞன்:- பார்த்தன். லெட்டர் ஹெட்டை கலர்லதான் அடிக்கோணுமெண்டு சட்டமில்லையே ஹஸரத்!

ஹஸ்ரத்:- ஆனா இரண்டாம் பக்கம் சீல் கலர்ல இருக்கு! பார்த்தியா... அறிக்கை முடியிற இடத்துல யாரும் கையெழுத்துக் கூட வைக்கல்ல... அப்ப இது சத்துராதி வேலதானே.. பொய்தானே.. ஏமாத்துத்தானே!

இளைஞன்:- அது எனக்குத் தெரியாது. கிண்ணியா ஜம்இய்யா தலைவர் பேசுற வீடியோவ வேற போட்டிருக்காங்க....

ஹஸ்ரத்:- அதுவும் ஸ்மூத்தா ஓடுதில்லை பார்த்தியா... என்னமோ ஒரு கேம் உட்டிருக்கானுங்க... இப்பிடி எத்தினை கேமை எத்தினை பேச் செய்திருக்காங்க.. உனக்குத் தெரியாதா?

இளைஞன்:- மொத்தமா எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா நல்லா விளங்குது... துண்டு துண்டாப் பார்த்தாலும் தெளிவா விளங்குது...

ஹஸ்ரத்:- என்னன்னு?

இளைஞன்:- கேம் அடிக்கிறது கிண்ணியாக்காரனுங்க இல்லைன்னு..

ஹஸ்ரத்:- அடேய் எதிர்த்தா பேசுறாய்... பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத ராஸ்கல்ஸ்!

இளைஞன்:- சும்மா போங்க ஹஸ்ரத்... ஒளிவு மறைவா பண்ணினா இப்பிடி நோண்டியாகத்தான் முடியும்!சுத்துமாத்துச் செய்யாதவன் எதையும் மறைச்சுச் செய்ய மாட்டான்.. வார்த்தைக்கு வார்த்தை முரண்பட மாட்டான்... வாய் நிறையப் பொய்யும் புரட்டும். மத்தவங்களுக்கு மட்டும் இஸ்லாமும் சட்டமும் பேசுவீங்க.. பெரிசா சொல்ல வந்துட்டீங்க...!