Thursday, September 22, 2011

இரத்தத்தால் பதியப்பட்ட கதைகள்


ஒரு குடம் கண்ணீர்
அஷ்ரப் சிஹாப்தீன் எழுதிய உண்மைக் கதைகள்

பஸ்லி ஹமீட்

இந்த வினாடியில் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு அகப்பட்டுக் கொண்டிருக்கலாம், ஒரு சிறுவன் அநியாயமாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் கொண்டிருக்கலாம், ஒரு அப்பாவி இளைஞன் எந்தக் காரணமுமின்றி கைது செய்யப்பட்டு கொண்டிருக்கலாம், ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அச்சத்துடன் ஏதோ ஒரு படுகுழிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கலாம், துப்பாக்கி ரவைகளும் வெடிகுண்டுகளும் ஒரு தேசத்தையே அழித்துக் கொண்டிருக்கலாம்.

கொலை, கற்பழிப்பு, சித்திரவதை என்பன இந்த யுகத்தில் சர்வ சாதாரணமாகிப் போய்விட்டதனால் இது போன்ற ஒரு செய்தி எமது செவிகளுக்கு எட்டுகின்ற போது உள்ளம் உருகாமல் இறுகி இருப்பது வேதைனைக்குரிய விடயமாகும். கரும்பாறைகளே கசியும் போது உணர்வுகளினால் பிசையப்பட்ட உள்ளம் ஈரத்தை இழந்து உலர்ந்து போயிருப்பதுதான் ஆச்சரியம். இரக்கம் அல்லது கருணையை மனிதன் தனது இதயத்திலிருந்து அப்புறப்படுத்தி வைத்திருப்பதையே அனேகமான சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சன நெரிசல்மிக்க ஒரு பஸ் வண்டியில் வயதான பெண்ணொருத்தி தள்ளாடியபடி பயணிக்கும் போது அதனைக் கண்டு கொள்ளாது இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் திடகாத்திரமான தேகமுள்ளோரை சமகாலத்தில் சர்வ சாதாரணமாகக் காணலாம். இந்த மிகக் குறைந்த மனிதாபிமானத் தன்மையையே சமூகத்தில் காணமுடியாத நிலைமை இன்று தோன்றியுள்ளது. இப்படிப்பட்டி இரும்பு உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் வாழக்கூடிய இன்றைய யுகத்தில் காலத்தின் தேவையை உணர்ந்தாற்போல் வெளிவந்துள்ளது 'ஒரு குடம் கண்ணீர்' உண்மைக் கதைகள் அடங்கிய நூல்.


எமது நாட்டின் மூத்த கலைஞரும், கவிஞருமாகிய அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் உலகின் பல பகுதிகளிலும் அநியாயமாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட அப்பாவி மக்கள் வடித்த கண்ணீர் வெள்ளத்திலிருந்து ஒரு குடத்தை அள்ளி எம் கரங்களில் தந்துள்ளார். குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ அல்ல உலர்ந்து போயிருக்கும் எமது உள்ளங்களை சற்று ஈரப்படுத்திக் கொள்வதற்கு.

அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் எழுத்துலகில் தனக்கிருக்கும் முதிர்ந்த அனுபவத்தை சரியான முறையில் பயன்படுத்தி இலங்கை இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய முத்திரையை பதித்துள்ளார் என்று இந்நூலைப் படித்த பலரும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். சித்திரவதைகளோடு சம்பந்தப்பட்ட மனதைத் துளைத்து எடுக்கும் 25 சம்பவங்கள் மிகவும் நேர்த்தியான நடையில் மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய சுவையுடன் கதைகளாக இந்நூலில் தரப்பட்டுள்ளது.

அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் மொழி ஆளுமை நூல் முழுவதிலும் சற்றும் பிசகாமல் படர்ந்து காணப்படுகின்றது. அவர் கதை சொல்லியிருக்கும் விதம் அந்தக் கொடுரங்களை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. அவர் தேர்ந்தெடுத்திருக்கும் சம்பவங்களில் அனேகமானவை நாம் வாழுகின்ற காலப்பகுதியில் நடந்தேறியவை என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இச்சம்பவங்களின் உண்மைகளை எங்கெங்கெல்லாம் தேடியிருக்கிறார் என்பது அவர் ஒவ்வொரு கதையின் முடிவிலும் தந்திருக்கும் ஆதாரங்களைப் பார்க்கும் போது உணரக்கூடியதாய் உள்ளது. எமது சாதாரண கண்களுக்கு மறைக்கப்பட்ட பல நரகங்களை இந்நூலில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் நூலாசிரியர் பாராட்டுக்குரியவராவார்.

அவன் ஒரு நட்சத்திரம் என்னும் பலஸ்தீனச் சிறுவன் முஹம்மதின் துயரச் சம்பவத்துடன் ஆரம்பிக்கும் கதைகள் ஹிரோஷிமாவின் வேண்டுகோள் என்ற மிகக் கொடுரமான துயர்ச் சம்பவத்தின் 'யுத்தங்கள், அணுவாயுதங்கள், பயங்கரவாதம், பூகோளம் வெப்பமடைதல், பஞ்ம், அகதிகள், வன்முறை, மனித உரிமைகள் மீறல் ஆதியன உள்ளடங்கலான 20ம் நூற்றாண்டின் எதிர்மறைப் பண்புகளால் மனிதக் குடும்பம் போராடிக் கொண்டிருக்கிறது.

21ம் நூற்றாண்டில் வாழும் மக்கள் இந்த எதிர்மறைப் பண்பைச் சரியாகக் கையாளத் தவறினால் இந்த நூற்றாண்டுதான் பூமியில் மனிதர்கள் வாழ்ந்த கடைசிக் காலப்பகுதியாக இருக்கும்.' என்ற எச்சரிக்கை வாசகங்களுடன் நிறைவுறுகின்றது.

மனித நேயம் தோற்றுப்போன அல்லது தோற்றடிக்கப்பட்ட இடங்களிலிருந்து சிறியவர் முதியவர் என்ற வயது பேதமின்றி, கறுப்பர் வெள்ளையர் என்ற நிற பேதமின்றி, ஆண் பெண் என்ற வர்க்க பேதமின்றி, இஸ்லாம், கிரிஸ்தவம் பௌத்தம் என்ற மத பேதமின்றி சாதாரண மனிதர் முதல் மதப் போதகர்கள் வரையில் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களின் வாக்கு மூலங்கள் ஒவ்வொரு கதைகளிலும் இரத்தத் துளிகளாக பதியப்பட்டுள்ளன.

இந்த நூலை முழுமையாகப் படித்து முடிக்கும் போது மனித நேயம் பற்றிய பல கேள்விகள் எமக்குள் எழுகின்றன. நாம் இதுவரை சிந்திக்காத பல விடயங்களை சிந்திக்கத் தூண்டுவது இந்நூலின் மிகப் பெரிய வெற்றியாகும். சர்வதேச தரத்திலிருக்கும் இந்நூலின் அச்சுப்பதிப்பு மற்றும் கட்டமைப்பு இதன் மதிப்பை மேலும் உயர்த்துகின்றது. இந்த தசாப்தத்தில் மிகப்பெருமளவில் பேசப்படும் நூல்களில் இந்நூலும் ஒன்றாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இன்றைய சமுதாயத்தில் எல்லோருமே கட்டாயமாக வாசிக்க வேண்டிய ஒரு நூலாக இது திகழ்வதால் காலத்தின் தேவை கருதி கட்டாயம் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதனை திரு அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதுடன் எதிர் காலங்களிலும் அவர் பல புதிய முயற்சிகளை வெளியீடுகளாக இலக்கிய உலகுக்குத் தர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

5 comments:

பி.அமல்ராஜ் said...

//அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் எழுத்துலகில் தனக்கிருக்கும் முதிர்ந்த அனுபவத்தை சரியான முறையில் பயன்படுத்தி இலங்கை இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய முத்திரையை பதித்துள்ளார் என்று இந்நூலைப் படித்த பலரும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.//

//நாம் இதுவரை சிந்திக்காத பல விடயங்களை சிந்திக்கத் தூண்டுவது இந்நூலின் மிகப் பெரிய வெற்றியாகும்//


//இன்றைய சமுதாயத்தில் எல்லோருமே கட்டாயமாக வாசிக்க வேண்டிய ஒரு நூலாக இது திகழ்வதால் காலத்தின் தேவை கருதி கட்டாயம் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதனை திரு அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதுடன்//

பஸ்லி, உங்கள் மேற்கண்ட சில கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன் என்கின்ற வகையிலேயே அவற்றை மீண்டும் கூறியிருக்கிறேன். உங்கள் இந்த குறிப்பு நிச்சயமாக இதுவரை இந்த நூலை வாசிக்காத பலரிற்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் பஸ்லி.வாழ்த்துக்கள் அஷ்ரப் அண்ணா.

நாச்சியாதீவு பர்வீன். said...

ஒரு குடம் கண்ணீர்...ஓராயிரம் கண்ணீர் கதைகளின் அடையாளப்பதிப்பு, ஈழத்து இலக்கியப்பரப்பில் இப்படி ஒரு படைப்பு இதுவரை வரவில்லை என்றே நான் நினைக்கின்றேன்..ஒரு மனிதாபிமானம் நிறைந்த எழுத்தாளனுக்கே சமூக அவலங்களும் பாதிப்பும் விளங்கும், கண்ணீரின் வழியும், இயலாமையும் அவனுக்கு மட்டுமே உணர முடியும் அஸ்ரப் சிஹாப்தீன் அதையே செய்துள்ளார் மனித உரிமைகள் மீறப்பட்டு, மனிதம் தோற்றுப்போன ஒவ்வொரு உண்மைச் சம்பவத்தையும் அவர் அடையாளப் படுத்தியிருப்பது அலாதியானது..இந்த ஒரு குடம் கண்ணீர் பற்றிய அவதானம்களை, இதன் கனதி பற்றிய தேடல்களையும் குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் நுணுக்கமாக ஆராய்கின்றனர் என்பதை..இது பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் சொல்லி நிற்கின்றது..தமிழ் இலக்கியத்தின் புதிய வரவான இவ்வாறான படைப்புகளை மூத்த எழுத்தாளர்கள் இன்னும் கண்டு கொள்ளவில்லை என்பது புரிகிறது..ஒரு வட்டத்திற்குள் மட்டுமே நின்று யோசிக்கின்ற அல்லது நடக்கின்ற நமது..மூத்த எழுத்தாளர்கள் அதை விட்டு கொஞ்சம் வேளே வந்தால் இந்த ஒரு குடம் கண்ணீர் இன் புதிய அணுகுமுறை..அல்லது தமிழ் இலக்கியத்தின் புதிய தளம் பற்றிய சிந்தனை விரிவாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது..

shenbagam said...

நண்பர் பஸ்லி ஹமீட் அவர்களின் கருத்துக்களை நூற்றுக்கு நூறு விழுக்காடு நான் வழிமொழிய வேண்டுமென்றால் எழுத்தாளர் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களின் நூல்கள் யாவற்றையும் அல்லது பெரும்பாலானவற்றையும் நான் படித்திருக்க வேண்டும். நான் இப்போது தான் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களின் வலைத்தளம் வழியாக ஒரு சிலவற்றைத் தெரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறேன். சுருங்கச்சொன்னால் முதல் படியில் நிற்கிறேன். எனினும் இது வரை நான் வாசித்தவற்றில்; அறிந்தவற்றில் உண்மை நிகழ்வுகள் பலவற்றை அவரது எழுத்துக்கள் எடுத்து வந்து தந்த வண்ணமிருக்கின்றன. அவை பல வகையிலும் படிப்போருக்குப் படிப்பினையாக இருக்கின்றன என்பதை நிச்சயமாக அறுதியிட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன். தொடரட்டும் அவரது நற்பணி.

கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.

ASHROFF SHIHABDEEN said...

முகப்புத்தகப் பின்னூட்டம் -

Lareena Abdul Haq

மனம் திறந்து சொல்வதானால், இந்த நூலைப் படித்துச் செல்கையில் பலதடவைகள் நான் அழுதுவிட்டேன்... கையில் எடுத்ததில் இருந்து படித்து முடிக்கும் வரை ஓயவில்லை. என் மாமிக்கு வயது 60க்கும் மேல். அவர்கூட 2 நாளாய் இடையறாது படித்து முடித்தார் என்றால் பாருங்கள்! இது போன்ற உயிரோட்டமான எழுத்துக்கள் வெகு அபூர்வமாகவே கிடைக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாஷா அல்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும் Sir!
11 hours ago ·

Shaifa Begum said...

உண்மையில் அஹ்ரப் சேரின் ஒரு குடம் கண்ணீர் பற்றிய வாசகர்களின் கருத்துக்களைப் படிக்கும்
போதே அது அவர்களின் மனதில் எவ்வளவு தூரத்திற்கு ஆழ்ந்து போயுள்ளது... எப்படியான ஒரு பாதிப்பை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது எனபதும் தெளிவாகத் தெரிகிறது..““
........ ..
சேர் எழுத்துக்கள் மட்டுமல்ல.. அவர் ஆரோக்கியமும் நிலைக்கனும் என்ற பிரார்த்தனை யோடு...
இதனை இதனை இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் நிறையவே இருந்தாலும்..அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்....

மற்றும்.. சகோதரர் பஸ்விஹமீட் அவர்களின் அழகான அலசல் மிகச் சிறப்பாக இருந்தது..இடையிடையே அவர் சொன்ன விடயங்களில் சில என்னை மிக ஆச்சரியத்துக்குள்ளாக்கியது..ஆற்றல் படைத்த கவிஞர்கள் கட்டுரை , விமர்சனம் என்று எழுத வரும்போது தான் அவர்களுடைய திறமையில் மற்றுமொரு பரிமாணம் அங்கே தெரிய வருகிறது.( சகோதர்கள் அமல்ராஜ் ...பர்வீன் உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்..)
..இப்படி எல்லா இலக்கியதாரர்களும் மூத்தோர் . இளையோர் என்று பாராமல் அடுத்தவர் பக்கமாகவும் தங்கள் பார்வையை திருப்பி அலசினார்ளென்றால் ஏன் தலைமுறை இடைவெளி வரப்போகிறது....???ஆரோக்கியமான ஒரு இலக்கிய உலகைக் காணலாமே........என் என்னோட அபிப்பிராயம்..

எல்லோருக்கும் மீண்டுமாய் வாழ்ததக்கள்.... !!!!!