ஒசாமா பின் லேடனுக்கு குங்பூ கற்பித்ததாக தாய்வானைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ள செய்தி பரவலாகப் பேசப்படுகிறது. அச் செய்தி உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கக் கூடும்.
யாராவது ஒரு பிரபலம் மறைந்து விட்டால் அப்பிரபலத்தின் பெயரால் சில பரபரப்புத் தகவல்களை எடுத்து விட்டுப் பிரபலம் பெறுவது அவ்வப்போது உலகம் முழுக்க நடந்து வருகிறது.
இதற்கென்று சிலர் பாயைப் போட்டு உட்கார்ந்து வெற்றிலை சப்பிக் கொண்டு காத்திருப்பது போல் எனக்குப் பிரமை தட்டுகிறது. எதிர் காலத்தில் எத்தனையோ விதமாகக் கதைகளை விடுவதற்கு இப்போதே ரூம் போட்டு சிலர் யோசிக்கக் கூடும்.
ஒசாமாவை வைத்தே சும்மா ஒரு கற்பனை செய்து பார்த்தால் என்ன என்று நமக்கும் ஒரு யோசனை வந்தது.
ஒசாமாவுக்குக் கடலை விற்றாராம்
- நாச்சிமுத்து பரபரப்புத் தகவல்
ஒசாமா பின்லேடன் தன்னிடம் கடனுக்குக் கடலை வாங்கிச் சாப்பிட்டதாக சென்னை மண்ணடித் தெருவைச் சேர்ந்த கடலை வியாபாரி நாச்சி முத்து தெரிவித்துள்ளார்.
ஒசாமா சிறுவனாக இருந்த போது அவர் தன் தகப்பனாருடன் சென்னைக்கு வந்து தங்கியிருந்ததாவும் அப்போது தங்கியிருந்த லாட்ஜிலிருந்து தகப்பனாருக்குத் தெரியாமல் ஓடி வந்து தன்னிடம் அடிக்கடி கடலை வாங்கிச் சாப்பிட்டதாகவும் நாச்சி முத்து நமது ‘குடலுருவி’ க்குத் தெரிவித்தார்.
மண்ணடித் தெருவில் கடலை விற்கும் நாச்சி முத்து இது பற்றி மேலும் தெரிவித்ததாவது:
ஒசாமாவின் தகப்பனார் தமது பிள்ளைகளுடன் ஓய்வூக்காக வருடா வருடம் சென்னை வந்து மண்ணடியிலுள்ள லாட்ஜில் தங்குவது வழக்கம். அவர்கள் சென்னை வந்தால் ஒசாமா மட்டும் என்னிடம் தினமும் வந்து கடலை வாங்குவது உண்டு. சில வேளைகளில் அவர் கடனுக்கும் கடலை வாங்கியுள்ளார். அவருக்குத் தமிழ் தெரியாது. எனவே சைகையில்தான் என்னுடன் பேசுவார்.
சின்னப் பையன் என்பதாலும் வசதியயுள்ள நாட்டில் இருந்து வருபவர்கள் என்பதாலும் அவர் கேட்கும் போது பணத்தை எதிர்பாராமலே கடலை கொடுத்து வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் ஒசாமாதான் என்று உங்களுக்கு எப்படித் தெரியயும் என்று நமது நிருபர் நாச்சி முத்துவிடம் கேட்டார். அதற்கு நாச்சி முத்த, ஒரு முறை அவர் தனது தந்தையாருடன் கடலை வண்டிக்கருகில் செல்லும் போது அவரது தந்தை அவரைப் பார்த்து ‘ஒசாமா’ என்று அழைத்ததாகக் குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------
ஒசாமாவுக்குச் சுடப் பழக்கியவர் கைது!

