இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 10
வெளிநாடு ஒன்றில் நடக்கும் நடக்கும் பெரு விழா ஒன்றில் கலந்து கொள்ள நீங்கள் மிக ஆர்வத்துடன் விமானப் பயணம் செய்ய முடிவெடுக்கிறீர்கள். உங்களது அனைத்து வேலைகளையும் பின் போட்டு, உரிய பணம் செலுத்தி விமானச் சீட்டுப் பெற்றுக் கொள்கிறீர்கள். குடும்பத்தார், நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லி விட்டு விமான நிலையம் செல்கிறீர்கள். ஆர்வமிகுதியால் உங்களுடன் ஒரு நண்பரையும் உங்களது செலவிலேயே உங்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள். விமான நிலையத்தில் உள்ள அலுவல்கள் யாவும் முடிவடைந்த பின்னர் கடைசிக் கட்டம் வரும் போது ஒரு நிம்மதி வரும்.
அந்த நிம்மதியை நீங்கள் உணரும் போது அந்த விமான நிறுவன ஊழியர் உங்களிடம் வந்து “நீங்கள் வைத்திருப்பது போலி விமானச் சீட்டு. எனவே நீங்கள் பயணம் செய்ய முடியாது” என்று சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? உங்களுக்கு எவ்வளவு அவமானமாயிருக்கும்?
மலேசிய இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்று இவை அத்தனையையும் பட்டிருக்கிறார் ஒருவர். அவர்தான் சென். ஜோன்ஸ் அம்பிலன்ஸ் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் பிரபல வர்த்தகருமான சகோதரர் ஏ.எல்.மீராசாகிபு.
அவர் அழைத்துச் சென்ற சகோதரர் துவான் பாரூக் ஜாயா அவர்களைச் சந்தித்த போது அவர் விலாவாரியாக நடந்தவற்றை நமக்குச் சொன்னார்.
ஜனாப். துவான் பாரூக் ஜாயா
இனி துவான் பாரூக் ஜாயா பேசட்டும்....
“மலேசியாவுல நடக்கிற மாநாட்டுக்கு என்னையும் ஸ்பொன்ஸர் பண்ணினது மீராசாஹிப்தான். அவருதான் எனக்கும் சேர்த்து பணம் கட்டினாரு. முதல்ல ஹமாட் நிறுவனத்துக்கு 20,000 ரூபா கட்டினோம். பிறகு இன்னும் 35,000 ரூபா கட்டச் சொன்னாங்க. அதையும் கட்டினோம். வீசாவுக்கு தலைக்கு 1030 ரூபா. அதையும் கட்டினோம். பிறகு 19ம் திகதி அதிகாலை பயணம் செய்கிற மாதிரி விமானச் சீட்டுகளைத் தந்தாங்க..
நாங்க 18ம் திகதி இரவு விமான நிலையத்துக்குப் போனோம். எங்கட லக்கேஜ்ல பாரம் கொஞ்சம் அதிகமா இருந்திச்சு. எங்களோட இன்னொரு காத்தானகுடி நண்பரும் இருந்தாரு. மூன்று பேரும் 2000 வீதம் கட்டுறதை விட இரண்டு பேர்ட லக்கேஜ்களில் சரியான அளவும் ஒரு லக்கேஜில் மீதியையும் போட்டு சமாளித்து ஒருவரே 2000 கட்டி முடிச்சிக்கிட்டம்.
போடிங் பாஸ் எடுத்து எல்லாம் கிளியர் பண்ணி உள்ளே போய்க் காத்திருந்தம். போடிங் பண்ணும் போது கடைசிச் செக்கிங்கில் நான் தாண்டிய பிறகு, மீராசாஹிபு போக முடியாது என்று தடுத்து விட்டார்கள். அந்தச் செக்கிங் நடக்கும் இடம் விமானத்திலிருந்து சில அடிகள் தூரம்தான். மீராசாஹிப் என்று ஒரு ஆள் லிஸ்டில் இருக்காரு. அவரு உள்ளே போய்ட்டாரு. உங்க பெயர் லிஸ்டில் இல்லை. நீங்கள் போக முடியாது என்று சொன்னார்கள். இதே நேரம் எங்களது லக்கேஜ் எல்லாம் விமானத்தில ஏற்றியாகி விட்டது. அந்த இடத்தில் பிரச்சினையாகி விட்டது.
விமானத்துக்கு சில எட்டுக்களே இருந்த படியால் மீராசாஹிபு விமானத்துக்குள் நுழைந்தார். அங்கே இந்த மாநாட்டுக் கொமிற்றி மெம்பர் அமீன் இருந்தாரு. அவரை அழைத்து வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் சொன்னார். அவரும் வந்து பேசினார். ஆனால் விமான சேவை ஊழியர்கள் இது வந்து போர்ஜ்ட் (போலி) டிக்கற் என்டு சொன்னாங்க.. விசயம் என்னன்னா.. ஒரு ரிக்கட்டை ரெண்டு பேருக்குக் கொடுத்திருக்காங்க... ரெண்டு மீராசாஹிப்கள். ஒருத்தர் போய்ட்டார். அடுத்தது இவரு. வாக்குவாதம் நடந்திச்சி. விடவே இயலாது என்று சொல்லிட்டாங்க... பிறகு விமானத்தக்குள்ள இருக்கிற அவருடைய லக்கேஜை வெளியே எடுக்கும் நடவடிக்கை நடந்திச்சி.
அவரு போகல்லன்டா நானும் போக மாட்டேன் என்டு சொன்னேன்.ஏனென்டா நான் இதுதான் ஃபெஸ்ட் டைம் மலேசியா போறன். எனக்கு அங்கே யாரையும் தெரியாது. மிஸ்டர் அமீன், நீங்க வாங்க என்டு எனக்குச் சொன்னாரு. நீங்க ஏதாவது செஞ்சி வாங்க என்டு மீராசாஹிபுக்குச் சொன்னாரு. நீங்க போகல்லன்டா நானும் போகல்ல என்டு மீராசாஹிபுக்கு நான் சொன்னேன். இல்லை நீங்க போங்க என்டு என்னைத் தள்ளிக் கொண்டு போய் பிளைட்டுக்குள்ள விட்டாரு மீராசாஹிபு. நீங்க போங்க... நான் எப்படியாவது வருவேன் என்டு சொன்னாரு. பிளைட் கதவை மூடினாங்க... பிளைட் கிளம்பிடிச்சி...
அங்கே போய் இறங்கினா.. எனக்கு மண்டையே வேலை செய்யல்ல... ஏனென்டா நாங்க உடுப்புகளை மாத்தி மாத்தி லக்கேஜ்ல போட்டிருந்தம். அங்கே போய் லக்கேஜைத் திறந்தா... ஒருசாறமும் ஒரு சேட்டும் டவலும் மட்டுதான் இருந்திச்சி... அடுத்த நாள் வீட்டிலயிருந்து என் மனைவி பேசினா... அவவிடம் மீராசாஹிபைத் தொடர்பு கொண்டு என்னிடம் பேசச் சொல்லிச் சொன்னேன். அவரு எனக்குக் கோல் எடுத்தார். என்ன செய்தி என்டு கேட்டேன். சேர் நீங்க பயப்பிட வாணாம்.. நான் எப்படியாவது வருவேன் என்று ஒரு வார்த்தை சொன்னாரு. அதுல கொஞ்சம் நிம்மதி. வருவாருதானே..!
இவரு கொழும்புக்குத் திரும்பாம அங்கே ஹோட்டல்ல தங்கியிருந்திருக்காரு. விமான நிலையத்திலேயே விமான நிறுவனத்திடம் 48,000 ரூபாவுக்கு வேறு ஒரு டிக்கற் எடுத்து அடுத்த நாள் வந்து சேர்ந்தாரு. எங்கட பிரச்சினை என்னவென்றால் பணத்தை எடுத்துக் கொண்டு ஏன் போஜரி டிக்கற் இஷ்யூ பண்ணினது என்கிறதுதான்!
இந்தக் குழுவில இருக்கிற சேர்மன் மிஸ்டர் ஜமீல்... அமீன் எல்லாருக்கும் அங்கே போன எல்லாருக்கும் இந்த விசயம் தெரியும். மீராசாஹிபின் மகன் மீராசாகிபிடம் 60,000 பணம் கொடுத்தாராம்... தனக்கு ஒரு லப்டொப் வாங்கி வரச் சொல்லி. அந்தப் பணத்தில்தான் விமான டிக்கற் எடுத்து வந்தேன் என்று மீராசாஹிப் சொன்னாரு. இதனால லப்டொப் வாங்கவும் பணமில்ல அவருக்கிட்ட. இத நாங்க... மிஸ்டர் ஜமீலிடம் சொன்னோம். பிறகு அவங்கல்லாம் பேசிக் கொண்டு ஒரு கணக்குத் தாறம்.. பயப்பிட வாணாம் என்டு சொன்னாங்க. பிறகு முப்பதாயிரம் குடுத்தாங்க... குடுத்திட்டு மீதியை இங்கே வந்திட்டு எடுக்கலாமென்டாங்க... ஹமாட் நிறுவனம் ரிக்கட்டுக்குரிய பணத்தை எடுத்துக் கொண்டது.. ஏன் சரியான ரிக்கட்டைக் கொடுக்கவில்லை என்கிறதுதான் கேள்வி.
இதுல கொமிற்றியும் பிழை. அவங்க அவங்கட விசயத்தைப் பார்த்தாங்க... அங்கே போயும் கணக்கெடுக்காம இருந்தாங்க... நாங்க அவங்க பின்னாலேயே திரிஞ்சிதான் இந்த முப்பதாயிரம் கிடச்சசுது. மலேசிய வெள்ளியிலதான் கொடுத்தாங்க. மற்றப் பணத்தை சிலோனுக்கு வந்த பொறகு எடுக்கலாம்னு அவங்க சொன்னாங்க....
அதே நேரம் இந்த விமானம் இந்தப் பிரச்சிiயால 12 நிமிசம் பிந்திய காரணத்தால எயார் ஏஷியா இலங்கை விமானநிலையத்துக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டிவந்ததாக நாங்க அறிய வந்தோம். எஞ்சின் கோளாறு அப்பிடியெண்டா பரவாயில்ல... வேறு காரணத்தால எண்டால் பணம் கட்ட வேணுமாம்.
இந்த விசயத்தை நேற்று நான் ஹமாட் நிறுவனத்துக்குப் போய்ச் சொன்னேன்... இத யாரும் சொல்லல்லியே என்று அவங்க சொன்னாங்க... இதப்பத்தி எதுவம் தெரியாது என்டு சொன்னாங்க... நாங்க பணம் கட்டினோம்தானே.. நீங்க எப்படி இப்படியொரு டிக்கட் கொடுப்பீங்கன்னு கேட்டேன்.. அதற்கு அவங்க, இல்ல.. நாங்க ஏஜன்சி மூலமாத்தான் எடுத்தோம்.. நாங்க செக் பண்ணோணும் என்டு சொல்றாங்க... நீங்க.. எழுத்து மூலம் தாங்கன்னு கேட்டாங்க...
மலேசியாவுல மிஸ்டர் ஜமீல் மிஸ்டர் அமீன் ஆக்களிட்ட போய்ச் சொன்ன போது அவங்க கணக்கெடுக்கல்ல... சரி.. சரி.. பாப்பம் என்டாங்க...
துவான் பாரூக் ஜாயா இறுதியாகத் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக அகமட் லெப்பை முகம்மட் மீராசாஹிப் அவர்களைத் தொடர்பு கொண்டோம். தனக்கு வழங்கப்பட்ட போலி விமானச் சீட்டு தனது பயணம் அனுமதிக்கப்பட்டு ரத்துச் செய்யப்பட்ட முத்திரை பதிக்கப்பட்ட கடவுச் சீட்டுப் பக்கங்கள் ஆகியவற்றை நமக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
விமானச் சீட்டு ஜப்பானில் புக் செய்யப்பட்டு முகம்திரம்கே சுனிமல் றொட்ரிகோ என்ற பெயரில் பெறப்பட்டே வழங்கப்பட்டுள்ளது. அப்படியொரு நபர் ஜப்பானில் இல்லையென்று அறியவந்ததாகவும் சகோதரர் மீராசாஹிபு தெரிவித்தார்.
விமான நிலையத்தில் விமான சேவை நிறுவன ஊழியர்களால் போலி என்று சொல்லப்பட்ட விமானச் சீட்டு
பயணம் அனுமதிக்கப்ட்டு மீண்டும் ரத்துச் செய்யப்பட்டதை் தெரிவிக்கும் கடவுச் சீட்டுப் பக்கம்
மீண்டும் புதிய பயணச் சீட்டுடன் 20ம் திகதி பயணம் செய்ததைக் குறிக்கும் கடவுச் சீட்டுப் பக்கம்
இந்த விடயங்களை உறுதி செய்த சகோதரர் மீராசாகிபு, மலேசியாவில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்து இதுபற்றி மூன்று முறை கதைத்ததாகத் தெரிவித்தார். பணம் மீளக் கிடைக்க கௌரவ அமைச்சர் ஆவன செய்வதாகச் சொன்னதையடுத்தே தனக்கு ஆயிரம் ரிங்கிட் பணம் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
நாடு திரும்புவதற்கு முன்னர் முழுத் தொகையும் மீளளிக்கப்படும் என்று தனக்கு உறுதியளிக்கப்பட்ட போதும் ஆயிரம் ரிங்கிட்கள் மாத்திரம் வழங்கப்பட்டதாகவும் ஜனாப் ஜெமீல், ஜனாப் தாஸிம் அகமது, ஜனாப் அமீன் ஆகியோர் தனது விசிட்டிங் கார்ட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் இது பற்றிப் பேசுவதாக உறுதியளித்ததாகவும் சகோதரர் மீராசாகிபு சொன்னார்.
இனியென்ன -
இந்த தகவல்களை வலையேற்றம் செய்தமைக்காக எனக்கு வரவுள்ள தூஷணம் நிரம்பிய மின்னஞ்சலை ட்ரேஷ் கேனில் தட்டிவிடுவதற்காகக் காத்திருக்கிறேன். என்னோடு மின்னஞ்சல் தொடர்பு வைத்துள்ள நண்பர்களும் அதற்காகக் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
5 comments:
Two in one ticket????????? Mudiyala
ஹா..ஹா...ஹா.. தில்லு முள்ளு உலகம்.. இலக்கிய தர்பார் நாறிப் போகுது..
திருட்டு தனமாக முகம் மாற்றி வெளிநாடு போதல் , திருட்டு வீசா எடுப்பது, கேள்விப்பட்டிருக்கிறேன்..
ஆனால் ,இன்று தான் திருட்டு டிக்கட் பற்றி அறிந்து கொண்டேன்....Matter கொஞ்சம் Serious தான்.பலபக்கமாக நாறும் என்று எதிர்பார்க்கிறேன்
”இந்த தகவல்களை வலையேற்றம் செய்தமைக்காக எனக்கு வரவுள்ள தூஷணம் நிரம்பிய மின்னஞ்சலை ட்ரேஷ் கேனில் தட்டிவிடுவதற்காகக் காத்திருக்கிறேன்.”
சேர் நாட்ல நடக்கிற அசிங்கங்களை பார்த்துக் கொண்டு கண்மூடிகளாக இருந்தோம் என்றால்
பிறந்த பிறப்பிற்கே புண்ணியம் இல்லை.நாளு பேர் இதைத் தெரிந்து கொள்ளனும்.. கேள்வி கேக்கனும். Atleast தில்லு முல்லு பண்ண நெனச்சாலும் தப்பு பண்றோமே மாட்டிக்கிட்டா சங்கு தான் என்கிற பயமாவது வரனும். அததான் நீங்க பண்றீங்க..நல்லது பண்றீங்க . ஒரு சேவை பண்றீங்க..
தூற்றுபவர்கள் தூற்றட்டும்... தூஷணம் பாடுபவர்கள் பாடட்டும்..உங்கள் சேவை தொடரட்டும்..!!
ட்ரேஷ் கேன் மிகப் பொருத்தமான இடம்.. சும்மா தட்டி விடுங்கள்..
எவ்வளவு வெட்க கேடான விஷயங்கள் நடந்திருக்கு ஸார்.. ஏன் இவ்வளவு ஏமாற்றுதல்கள், மூடி மறைத்தல்கள், நம்பிக்கை துரோகங்கள்...
எல்லாம் இஸ்லாத்தின் பெயரால்....
அன்பின் அஸ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கு!
தங்களின் நாட்டவிழி நெய்தலை நான் தொடர்ந்தும் வாசித்து வருகிறேன் உண்மைகளை தேடி
ஆதாரத்துடன் எழுதி வருவது பாராட்டத்தக்கது, மலேசிய மாநாட்டில் கலந்து கொண்ட ஒருசில நபர்களுடன்
உரையாடிய போது நீங்கள் சொன்ன, சொல்லுகிற பாணியிலான அசம்பாவிதங்கள் நடைபெற்றதையும்
இலங்கைக் குழு பார முகமாக செயட்பட்டதையும் அவர்கள் தெரிவித்தார்கள் , 2002 ஆண்டு விழாவை மிகக் கச்சிதமாக
செய்வதற்கு அனுசரணையாக இருந்த கவுரவ அமைச்சர் அவர்கள் இந்த மாநாட்டை ஏன் ஆளுமை அற்ற ஒரு குழுவிடம்
ஒப்படைத்தார் என்று தெரியவில்லை, குழுவில் உள்ளவர்களின் பெயர்களைப் பார்த்தால் பெரிய ஜாம்பா வான்களாக
உள்ளார்களே ஏன் இந்தத்தவருகளை விட்டார்கள் என்பது புரியவில்லை, அத்தோடு சிறந்த திட்டமிடல் (wel plan )
இல்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம் எது எப்படியோ நடந்து முடிந்து விட்ட ஒன்றை பாடமாக வைத்து
எதிர்கால திட்டங்களை வகுக்க வேண்டும், தூசன மெயில்களை பற்றி நீங்கள் அலட்டத்தேவை இல்லை அது ஒரு மனநோயாளியின் ஆதங்கமாக கூட இருக்காலாம், பாவம் அவருக்கு என்ன பிரச்சினையோ?
நாச்சியாதீவு பர்வீன்.
இதனை தவறுகள் என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை.தெரியாமல்
செய்தால் தானே தவறு. அதனை தெரிந்தே செய்தால............?????
போலி டிக்கட்டில் எங்கேயும் போக விடமாட்டாங்க என்று சின்னபுள்ளையும் சொல்லுமே..ஆனால் போனால் நமக்கு காசு தானே என்ற எண்ணத்தில் வேண்டுமென்றுதான் இதனைச் செய்திருக்கிறார்கள்..யோசித்துப்பார்த்தால் , நாணித் தலைகுனிய வேண்டிய ஒரு செயல்.
மூடி மறைக்கலாம் இருட்டடிக்கப்பட்ட செய்தியாக போய்விடும் என்று தான் நினைத்திருப்பார்கள்.. விசயம் இவ்வளவு தூரத்திற்கு ஆதாரங்களுடன் அம்பலம் ஆகும் என்று கனவிலும் அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.ஒன்று ம்டடும் சொல்லலாம்..திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.இதை நான் சொல்லவில்லை.யாரோ சொல்லி வைச்சிருக்காங்க.
நடந்தது நடந்து முடிந்து விட்டது..
உலக இலக்கிய மாநாட்டின்..எதிரொலிகளை ஜீரணிக்க முடியாமல் இருந்தால் கூட
இனி நல்லது நடக்க பிரார்திப்போம்..
Post a Comment