Friday, June 19, 2009

சிறீலங்காவிலிருந்து சிறீரங்கப்பட்டணம் வரை - 1

“கேரளாவில் படகுச் சவாரி செய்யும் இடமொன்றுக்குப் போக வேண்டும். எப்படிப் போகலாம்?” என்று தமிழ் நாட்டில் வாழும் கேரள நண்பரைக் கேட்டேன்.
“எர்ணாகுளம் போயி... அங்கேயிருந்து ஆலப்பிக்குப் போகணும்” என்றார்.
இவ்வருடச் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கும் எனது புத்தகங்களின் அறிமுக விழாவுக்கு மிடையில் இருந்த ஐந்தாறு நாட்களில் இந்தியாவின் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன்தான் நாங்கள் இந்தியாவுக்குச் சென்றிருந்தோம். கேரளா படகுச் சவாரி, மைசூர் மகாராஜாவின் மாளிகை, தீரர் திப்பு சுல்தானின் நினைவாலயமும் அவரது ஆட்சிப் பிரதேசமும் மற்றும் கோழிக்கோட்டில் ஒரு பத்திரிகைக் காரியாலயம் ஆகியன எங்களது பட்டியலில் இருந்தன.
எங்களது நால்வர் அணியின் ஆட்சித் தலைவராக ஜின்னாஹ்வும் எதிர்க்கட்சித் தலைவராக நானும் கணக்கு வழக்கு மற்றும் நலன்புரி இயக்குனராக அல் அஸ_மத்தும் பிரதம நீதியரசராக தாஸிம் அகமதுவும் மானசீகமாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாரானோம்.
சென்ரல் ரயில்வே நிலையத்தில் 15.01.2009 அன்று பி.ப. 3.00 மணியளவில் புகையிரதத்தில் ஏறியமர்ந்தோம். ஒரு ரயில் பெட்டியின் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட ஒரு பகுதியில் அறுவர் பயணம் செய்யும் பிரிவில் எங்களது இலக்கங்கள் இருந்தன. அருகே இருவர் பயணம் செய்யும் பகுதியில் ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது ஓர் ஒல்லியான பையனும் ஓர் அழகான இளம் பெண்ணும் வந்து அமர்ந்தார்கள். இந்திய ரயில்கள் இரவு பகலாகப் பயணம் செய்வதால் பல ரயில் பெட்டிகள் அமர்வதற்கும் உறங்குவதற்கும் ஏற்றாற் போல் அமைந்துள்ளன. எமக்கு ஒதுக்கப்பட்ட அறுவர் பிரிவில் ஏனைய இருவர் பயணம் செய்யவில்லை என்பதால் எமக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஆனால் எமக்கு அருகில் நடைவழிக்கு அப்பால் இருவர் பிரிவில் அமர்ந்த இளம் பெண் அப்பையனுடன் மலையாளத்தில் மூச்சு விடாமல் கதைக்க ஆரம்பித்தாள். ரயில் நகர ஆரம்பித்தது.
இப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் தனிப்பட்ட வாகனம் ஒன்றில் பயணம் மேற்கொள்வது அல்லது சொகுசு பஸ் வண்டியில் பயணம் செய்வது என்று முடிவு செய்திருந்தோம். எனது கருத்தை நண்பர் ஏவி.எம். ஜாபர்தீன் நேராக மறுத்தார். பஸ்காரன் கன்னாபின்னா என்று ஓட்டுவான், வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். 15.01.2009 அன்று பயணஞ் செய்யக் கூடியதாக எர்ணாகுளத்துக்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி. பயணச் சீட்டுக்கள் நான்கை பதிவு செய்ய ரயில்வேயைத் தொடர்பு கொண்டால் ஆசனங்கள் இல்லையென்றார்கள். நண்பர் ஜாபர்தீன் விமானத்தில் பயணத்துக்கு விசாரணைகளை மேற்கொண்டார். விமானத்தில் போகலாம் என்றால் பெங்க@ருக்கு அல்லது திருவனந்தபுரத்துக்கும் கோழிக்கோட்டுக்குமான விமான சேவைகள் நமது தேதி, நேரங்களுக்கு ஒத்து வருவதாக இல்லை. தவிரவும் ரயில் பயணம் போல விமானப் பயணம் அமையவும் மாட்டாது.
வேறு வழி தெரியாததால் எழும்பூருக்குச் சென்று அங்குள்ள பிரபல சொகுசு பஸ் நிறுவனத்தில் விசாரித்தோம். சொகுசு பஸ் நாங்கள் போக நினைக்காத திசைகளில் பயணப் பாதை கொண்டிருந்தது. அதில் பயணம் செய்தால் நடுச்சாமத்தில் நடுத்தெருவில் இறங்கி அடுத்த பஸ் தேடும் நிலை உருவாகும் என்று புரிந்தது. பொடி நடையாகத் தெருவுக்கு வந்த போது ஒரு தனியார் ட்ரவல்ஸ் விளம்பரப் பலகை தெரிந்தது. ஒரு இளைஞன் ஒரு சிறிய கடையின்; முன் பகுதியில் ஒரு மேசை முன் உட்கார்ந்திருந்தான். உள்ளே இரண்டு கணினிகள் தெரிந்தன. எர்ணாகுளம் போக நான்கு ரயில் பயணச் சீட்டு புக் பண்ணித் தருவீர்களா என்று கேட்டோம். சற்று நேரத்தில் “நாளை ஒரு விஷேட ரயில் போகிறது. பண்ணிடலாம் சார்” என்றான். தலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டான். நாளைக் காலை நீங்கள் இருக்குமிடத்துக்கு ரயில் பயணச் சீட்டுக்கள் வந்து சேரும் என்று சொன்னான். சொன்னபடி அடுத்த நாள் பயணச் சீட்டுக்கள் கிடைத்தன. அந்தப் பயணத்தைத்தான் இப்போது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே டெல்லியிலிருந்து சென்னைக்கு ஒரு முறை ரயிலில் பிரயாணம் செய்திருக்கிறேன். குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஒரு விமானத்தில் கிடைப்பதை விடச் சிறந்த கவனிப்பு இருக்கும். வேளைக்குத் தேனீர், உணவு எல்லாம் பரிமாறுவார்கள். தலையணை, வெள்ளைப்போர்வை, குளிருக்கான போர்வையென்று வெகு அமர்க்களமாக இருக்கும். இப்போது நாங்கள் பயணம் செய்து கொண்டிருப்பது குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பில். உணவு, தேனீர் தவிர அனைத்து வசதிகளும் இருந்தன. ஒரே அலைவரிசை கொண்டவர்களது நீண்ட தூர இரயில் பிரயாணம் ரசித்து அனுபவிக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது. அவ்வப்போது கதைப்பது, விவாதிப்பது என்று பொழுது கழிந்தது. பேச்சு நின்றால் கையில் தயாராக வைத்திருந்த சஞ்சிகைகளை வாசித்தோம். ரயில் எர்ணாகுளத்தையும் தாண்டி நீண்ட தூரம் பயணம் செய்கிறது என்பதாலும் எர்ணாகுளத்தை அதிகாலை 2.30க்கு அடையும் என்று சொல்லியிருந்ததாலும் உறங்குவதற்குப் பயமாக இருந்தது, ஆனால் டாக்டர்கள் இருவரும் எந்தக் கவலையும் இல்லாமல் நீட்டி நிமிர்ந்து உறங்க ஆரம்பித்தார்கள்.
இரட்டை இருக்கைகளில் அமர்ந்த ஜோடி ரயிலில் ஏறியது முதல் விடாமல் கதைத்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பெண்தான் அதிகம் பேசினாள். எனது வாழ்நாளில் அவ்வாறு மணிக்கணக்கில் தொடர்ச்சியாகப் பேசிய ஒரு பெண்ணை நான் கண்டதில்லை. விடாமல் பேசினாள். அந்தப் பையன் இருக்கையை ஒன்றாக்கிய பிறகு இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து கால்களை நீட்டி போர்வையால் மறைத்தபடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். இரவு பத்து மணியளவில் நானும் அஸ_மத்தும் இருபக்க மேல் தட்டில் ஏறிச் சாய்ந்திருந்தோம். சஞ்சிகையைக் கையில் பிடித்தபடி நீண்ட நேரம் வாசித்ததால் கை நோவெடுக்க சஞ்சிகையால் முகத்தை மூடி சற்றுச் சாய்ந்தேன்.
அடுத்த சில நிமிடங்களில் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சட்டென்று பிரதான மின் விளக்கு அணைந்தது. எனது படுக்கையருகே அதன் சுவிட்ச் இருந்தது. சஞ்சிகையை எடுத்து விட்டுத் தலைலயைத் தூக்கிப் பார்த்த போது அப்பெண் நாங்கள் இருந்த இடத்துக்குள் நுழைந்து மின் விளக்கை அணைத்துச் செல்வது தெரிந்தது. அவள் இருக்கையில் அமர்வதற்கு முன்னர் நான் சுவிட்சைப் போட்டு விளக்கை எரிய விட்டேன். அவள் வெட்கத்தில் திரும்பிப் பார்க்காமல் சுருண்டு படுத்தாள். அவ்வளவுதான் அதன் பிறகு அந்த ரயில் பெட்டி மிகவும் அமைதியாக இருந்தது.
சொன்னபடி அதிகாலை 2.30க்கு எர்ணாகுளத்தையடைந்தது ரயில். எர்ணாகுளம் இந்தியாவின் தென்மேற்கே அமைந்துள்ள கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களில் ஒன்று. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பதனம்திட்ட, கோட்டயம், இடுக்கி, திருசூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், கசரகாட் ஆகியன ஏனையவை. மாநிலத்தின் தலை நகர் திருவனந்தபுரம்.
கேரளத்துக்குக் ‘கடவுளின் பூமி’ என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமன் கடலிடமிருந்து காப்பாற்றிய நிலப்பரப்பே கேரளம் என்று பழங்காலத்தில் கருதப்பட்டு வந்தது. வரலாற்றைப் படிக்கின்ற போது சீனர், ரோமர், கிரேக்கர், அசீரியர் மற்றும் எகிப்தியர் வியாபாரத்துக்குப் பொருத்தமான ஓர் இடமாக கேரளாவை அடையாளங் கண்டார்கள். கேரளர்களின் கொல்லம் எனும் ஆண்டுக் கணக்கு கி.பி. 9ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொடங்குகிறது. சேரமான் பெருமாள் நிறுவிய சேர ராஜ்யப் பிரதேசமாக இது இருந்தவேளை இங்கு தமிழ் மொழி பேசப்பட்டது என்பது வரலாறு.
இன்று கோழிக் கோடு என்று அழைக்கப்படும் கள்ளிக் கோட்டைக்கு வஸ்கொ டகாமா வந்தது 1498ல். அவ்வேளை மிளகு வியாபாரம் சூடுபிடித்திருந்தது. ஒரு காலப் பிரிவில் மௌரியர்களும் மொகலாயர்களும் தங்களது ராஜ்யங்களை இங்கு நிறுவினார்கள். இக்காலப் பிரிவில்தான் போர்த்துக்கேயர்களை கள்ளிக் கோட்டையிலிருந்து டச்சுக்காரர்கள் துரத்தியடித்தார் கள். 1766ல் மைசூர் மகாராஜாவான ஹைதர் அலி வடகேரளப் பிரதேசத்துக்கும் கள்ளிக் கோட்டைக்கும் படையெடுத்தார். 1792ல் அவரது புத்திரரான திப்பு சுல்தான் பிரிட்டிஷாருடன் மேற்கொண்ட ஒப்பந்தமொன்றின்படி கேரளத்தை விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது. திருவாங்கூர், மலபார், கொச்சி என மூன்று பெரும் பிரிவுகளாயிருந்த கேரளா 1949ல் ஒன்றாக இணைக்கப்பட்டது. 1956ல் கேரளா என்ற பெயரில் அது இந்திய அரசின் ஒரு பிரிவாக மாறியது. கேரளாவின் வரலாறு பிரிவு பிரிவாக வௌ;வேறு சரித்திரத் தடங்களைக் கொண்டுள்ளது. நான் மேலே சொல்லியிருப்பது கேரளாவின் இதற்கு மேல் சுருக்க முடியாத வரலாறு. விரிவாக ஆய்பவர்களுக்குச் சுவையான ஒரு வரலாற்றைக் கேரளம் கொண்டிருக்கிறது.
எர்ணாகுளத்தில் அதிகாலையில் இறங்கியதும் ஆலப்பி செல்வது எப்படியென விசாரித்த போது எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் மூலம் செல்லமுடியும் என்ற தகவல் கிடைத்தது. வெளியேறி ஆட்டாவில் ஏறிப் பதினைந்து நிமிடத்தில் அந்த ரயில் நிலையத்தை அடைந்தோம். காலை 5.30 க்கு ரயில் புறப்படும் என்று தெரிந்தது. அதுவரை காப்பி அருந்துவதும் அங்குமிங்கும் அலைவதுமாக இருந்தோம். நீளமாக வெட்டப்பட்டுப் பொரிக்கப்பட்ட வாழைப்பழச் சிப்ஸ் அடங்கிய பொதியைத் தாஸிம் அகமது கண்டு பிடித்து வாங்கி வந்தார். அவற்றைக் கொறித்தபடி நேரங்கடத்திக் கொண்டிருந்து விட்டு, நிறுத்தப்படிருந்த ரயிலில் 4.00 மணிக்கு ஏறினோம். எங்களைத் தவிர வேறு யாருமே ரயிலில் இருக்கவில்லை. சாதாரண தூர ரயிலாக இருந்தபடியால் விசேட பெட்டிகள் இதில் இல்லை. 3ம் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்த பிறகு ஏராளமான பயணிகள் வந்து சேர்ந்தனர்.
ரயில் நகரத் துவங்கியதும் இருந்தபடியே தூங்கி வழிந்தோம். அல் அஸ_மத்தான் எங்களை அவசரமாகத் தட்டி எழுப்பினார். அவரும் தூங்கியிருந்தால் அதோ கதியாக முடிந்திருக்கும். ரயில் நிலையத்தில் இறங்கிய போதுதான் தெரிந்தது ஆலப்பி (Alleppey) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது ஆலப்புழைதான் என்பது. அதை உறுதி செய்தது ரயில் நிலையத்தின் ஊர்ப்பலகை. இந்த விடயத்தை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது எனக்கு வெட்கமாக இருந்தது. கேரளக் குடும்பப் பின்னணி கொண்ட அஸ_மத்திடம் இதைச் சொன்ன போது, “நீங்கள் இதுபற்றி என்னிடம் கேட்கவில்லையே” என்று சாதாரணமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார். ஆனால் பயணம் முழுவதும் எங்களுடன் ஆலப்பி என்றே அவரும் உச்சரித்துக் கொண்டு வந்ததை அடிப்படையாக வைத்து இவர் எனக்குக் கணக்கு விடுகிறாரோ என்று கூட ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.
ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியதும் தனித்து நின்றிருந்த ஒரு ஆட்டாவை நோக்கிச் சென்றோம். நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் நடுநிலையாகப் புன்னகைத்தார். ‘படகு வீட்டில் பயணம் செய்ய வேண்டும், ஒரு நல்ல ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும்’ என்று அவருடன் பேசிக் கொண்டிருக்க ஆட்டா ஸ்டாண்டிலிருந்து ராஜ்கிரனைப் போல சாறினை உயர்த்தி, மடித்துக் கட்டியபடி கழுத்தில் துண்டுடன் சினிமா வில்லன் நடிகர் பொன்னம்பலத்தைப் போல ஒருவன் எம்மை நோக்கி வந்தான். வந்தவன் ஆட்டா ஸ்டாண்டைச் சுட்டிக் காட்டி “ஆட்டா அங்கிருக்கிறது. அங்குதான் எடுக்க வேண்டும்” என்றான். வில்லங்கம் ஆரம்பித்து விட்டது என்று நினைத்;தேன்.
இந்த மாதிரி வேளைகளில் தலைவர் சண்டைக் கோழியாகிவிடுவது வழக்கம். இந்தியாவில் பலமுறை இவ்வாறான வில்லங்கங்களில் அவர் பணிய மறுத்த சம்பவங்களை நான் ஏலவே அறிந்திருந்தேன். எனவே அவர்தான் முதலில் அவனை எதிர்த்துப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். இன்று தலைவருக்கு முகத்தில் முதல் குத்து விழப்போகிறது என்று எதிர்பார்த்து அதைத் தடுத்து விட வேண்டும் என்று அவர் அருகே போக, முதலில் வாய் திறந்தது... நமது நலன்புரி இயக்குனர் தான். அவருக்குத் தெரிந்த மலையாளத்தில் நாங்கள் ஸ்ரீலங்காவிலிருந்து வருகிறோம்... எங்களுக்கு உங்கள் பிரச்சினை தேவையில்லை... என்று சற்று எரிச்சலோடு சொன்னார். குத்து அவர் முகத்தில் விழும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் பேசாமல் திரும்பிப் போய் விட்டான்.
இந்த விபத்திலிருந்து நாங்கள் தப்பியதற்கான காரணங்களைப் பின்னர் யோசித்துப் பார்த்தேன். 1. நாங்கள் பயணம் செய்ய இருப்பது ஒரு மூன்று கிலோ மீற்றர்கள் மாத்திரமே. (கூலி பெரிய தொகை இல்லை) 2. ஆசாமிகள் கச்சிதமாக உடையணிந்து இருக்கிறார்கள். நால்வரும் கண்ணாடி அணிந்தவர்கள். (எனவே பாவம் பிழைத்துப் போகட்டும்) 3. காலங்காத்தாலே அப்பாவிகளை ஏன் அடிப்பான்? இம்மூன்று காரணங்களாலும் தலைவர் மற்றும் நலன்புரி இயக்குனர் ஆகியோரின் முகங்கள் தப்பின என்று நினைத்தேன். தலைவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற படியால் வெளியே சொல்லவில்லை.
கட்டுரையின் ஆரம்பத்தில் எமது நால்வர் அணி பற்றி அறிமுகஞ் செய்திருந்தேன். உண்மையில் இந்தப் பயணத்துக்காக அல் அஸ_மத்தை மட்டுமே நலன்புரி இயக்குனராக ஏகமனதாக நியமித்தோம். அதற்குக் காரணம் அவருக்கு மலையாளம் புரியும் என்பதுதான். மற்றப்படி பொதுவாகவே இவ்வாறான ஒரு மனப்பதிவுடன்தான் நாங்கள் நடந்து கொள்வோம். அப்போது அஸ_மத்தும் கூட எதிர்க் கட்சியில்தான் இருப்பார். அவ்வப்போது எங்களுக்குள் தர்க்கங்கள் இடம் பெறும். சில வேளைகளில் இடம், பொருள் பாராமல் விவாதங்கள் நடக்கும் போது எழும் சத்தத்தில் பலர் எங்கள் பக்கம் திரும்பி வினோதமாகப் பார்த்ததுண்டு. விவாதங்கள் விவாதங்களாகவே முடிந்து விடும். அவை என்றுமே எமது நட்பைப் பாதித்ததில்லை.
எங்களைத் தனது ஆட்டாவில் அழைத்துச் சென்ற அந்த மனிதர் பெயர் தாஜூதீன். மிக நேர்மையான மனிதர். எம்மை ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சினிமாக்காரர்கள் வந்திருப்பதால் இடமில்லை என்று கையை விரித்து விட, தனது உறவினர்களை அழைத்துச் செல்வது போல் வேறு ஒரு ஹோட்டலில் பேசித் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அன்று வெள்ளிக் கிழமையென்றபடியால் பள்ளிவாசலையும் செல்லும் வழிகளையும் காட்டித் தந்தார். நம்பமாட்டீர்கள், ரயில் நிலையத்திலிருந்து தங்குமிடம் தேடித் தரும் வரை அவர் ஆட்டாவுக்கு எம்மிடம் கோரிய பணம் வெறும் பன்னிரண்டு ரூபாய்கள் மாத்திரமே. இதுவே தமிழ் நாடாக இருந்தால் குறைந்தது நூறு ரூபாய் பறித்துக் கொள்ளாமல் விட்டிருக்கமாட்டார்கள். பதினைந்து ரூபாயைக் கொடுத்த போது சங்கோஜத்தில் நெளிந்தார் மனிதர்.
காலை உணவுக்காக ஒரு கடைக்குள் நுழைந்ததும் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. கிழக்கு மாகாணத்தில் சுடப்படும் அப்பம் அங்கு சாப்பிடக் கிடைத்ததுதான் அம்மகிழ்ச்சிக்குக் காரணம். கடலைக் கறியுடன் அப்பங்களை ருசித்துச் சாப்பிட்டோம். இரவு இரண்டு ரயில்களில் மாறி மாறிப் பயணம் செய்த களைப்பில் காலையுணவுக்குப் பின் மூவர் உறங்க அல் அஸ_மத் மட்டும் மலையாள இலக்கிய நூல்களைத் தேடிப் புறப்பட்டார். வெள்ளிக் கிழமையாதலால் தொழுகைக்காகப் புறப்பட்டு ஆலப்புழை நகர மஸ்ஜிதுக்குச் சென்றோம். கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்தில் அப்பள்ளிவாயிலின் அடித்தளம் வெளிப்புறமாகச் சரிவாக உயர்த்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணும் ஒரு தனி மரத்தால் ஆனது. அவற்றில் அழகிய கடைச்சல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நமது நாட்டின் கிழக்குப் பகுதியில் கடந்த காலங்களில் இருந்த பள்ளிவாசல்களை ஞாபகப்படுத்தியது இப்பள்ளி வாசல். பள்ளிவாசலோடு இணைந்ததாக ஒரு இறைநேசச் செல்வரின் அடக்கஸ்தலமும் உள்ளது. தொழுகை முடிந்ததும் ஓர் இளைஞரிடம் விபரம் கேட்டோம். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்று சொன்னார். இது ஒரு வரலாற்றுச் சின்னமாக இருப்பதால் விசாலிப்பதாக இருந்தால் இக்கட்டடத்தை நீங்கள் தகர்த்து விடக் கூடாது என்று ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டுத் திரும்பினோம்.
பிற்பகல் 3.00 மணியளவில் துறையடிக்குச் சென்றோம். எங்களுக்கான படகு தயாராக இருந்தது. நான்கு கதிரைகள் இடப்பட்டு அவற்றில் தேரோக்களுக்கு ஆசனங்களில் வெள்ளைத் துண்டு போட்டது போல் பெரிய வெள்ளைப் பூந்துவாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. இரண்டு முகடுகள் கொண்ட படகின் முன்முகட்டில் பூச்சரம் கோக்கப்பட்டிருந்தது. இரண்டு நீர்ப் போத்தல்கள் மற்றும் சில பிஸ்கற் பொட்டலங்களுடன் தயாராக நின்றோம். மனதுக்குள் ஓர் அற்பப் பெருமை எட்டிப் பார்த்தது. பெரும் உல்லாசப் பயணிகளாக நினைத்துக் கொண்டு படகுக்குள் காலடி வைக்கும் போது படகுக்காரப் பையனைக் கேட்டேன், “தம்பி, உனக்கு நீந்தத் தெரியுமா?”
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: