Friday, June 19, 2009

சிறீலங்காவிலிருந்து சிறீரங்கப்பட்டணம் வரை - 2


காலை வைத்ததும் அச்சிறிய படகு ஆட்டம் எடுத்தது. இந்த வேளையில் நான் படகு செலுத்தும் இளைஞனைப் பார்த்து “உனக்கு நீந்தத் தெரியுமா?” என்று கேட்டது தலைவருக்குப் பிடிக்கவில்லை. என்னை முறைத்துப் பார்த்தார்.


எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அபசகுனமான வார்த்தைகள் பேசுவதை வலுக் கட்டாயமாகக் கண்டிப்பவர் ஜின்னாஹ். இந்த விடயத்தில் என்னை விட அல் அஸ_மத்துடன் அடிக்கடி தர்க்கப்படுவார். அஸ_மத் எல்லா விடயங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் மறு பக்கத்தை நுணுக்கமான அவதானத்துடன் கவனிப்பவர். தலைவரின் முறைப்பை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. “எனக்கு நீச்சல் தெரியாது” என்று படகோட்டிக்குச் சொன்னேன். அது படகோட்டிக்குச் சொன்ன பதில் அல்ல. உடம்பில் நீர் கட்டினால் டாக்டரால் மருந்து தரமுடியும். நீருக்குள் விழுந்தால் அதனுள் விழுந்துதான் காப்பாற்ற முடியும். மாத்திரையோ மருந்தோ ஆளைக் காப்பாற்றிய பிறகுதானே சாத்தியப்படும். படகோட்டி தனது சேவை அனுபவத்தை மிகச் சாதாரணமாகச் சொல்லி விட்டு இயந்திரத்தை முடுக்கினான். படகோட்டியின் விபரத்தின் படி 12 மீற்றர் ஆழமான அந்நீர்ப் பரப்பில் படகு மெதுவாக நகர ஆரம்பித்தது.


அந்த இயந்திரப் படகுப் பயணம் ஒரு சுகமான அனுபவம். ஆலப்பி மாவட்டம் 1957 ஆகஸ்ட் 17ம் திகதி உருவாக்கப்பட்டது. 1990ல்தான் அதற்கு ஆலப்புழா என்ற பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கேரளத்தின் எர்ணாகுளம், கோட்டயம், பதனம்திட்ட, கொல்லம் ஆகிய மாவட்டங்களால் நிலப்பரப்பாலும் அரபுக்கடலால் மறுபுறத்திலும் எல்லையைக் கொண்டது ஆலப்புழை மாவட்டம். சிறிய, மிக நேர்த்தியான, இயற்கை அழகு மிகுந்த நகரமான ஆலப்புழையின் தெருவெங்கும் பெருமரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஒரு முறை சுற்றி வந்தால் புதிய ஒருவரால் இரண்டாம் முறை எவ்விதச் சிரமங்களுமில்லாமல் தனியாக வலம் வரலாம். “ஆலப்புழா என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையாகும்” என்று ஜேர்மனியைச் சேர்ந்த அகராதித் தொகுப்பாளரான கலாநிதி குண்டர்ட், சொல்கிறார். புழா என்பது ஆறு என்று அர்த்தப்படும் என்று குறிப்பிடும் அவர் “ஆலப்புழையானது விசாலம் பொருந்திய அரபுக் கடலில் ஆறுகள் ஊடறுக்கும் நிலத்தின் சிறப்படையாளம்” என்று சொல்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டு காலத்துள் ஆலப்புழைக்கு வந்த ஆங்கிலேயரான கேர்ஸன் பிரபு இப்பிரதேசத்தின் அழகில் மயங்கி “இயற்கையானது அதன் உச்ச வள்ளற்றன்மையை இந்த நிலத்துக்கு வாரி வழங்கியுள்ளது” என்றும் “ஆலப்புழை கிழக்கின் வெனிஸ் ஆகும்” என்றும் வர்ணித்துள்ளார்.


ஆலப்புழையூடாக மூன்று முக்கிய நதிகள் ஓடுகின்றன. மணிமாலா ஆறு, பம்பா ஆறு, அச்சன் கோவில் ஆறு என்பவே அவை. இவை தவிர வெம்பநாத், காயாம்குளம் ஏரி ஆகிய ஏரிகளும் உள்ளன. திரும்பும் இடமெல்லாம் வாய்க்கால்களைக் காணலாம். தோணிகளில் மக்கள் அவற்றில் பயணம் செய்கிறார்கள். நகரத்துக்குச் சென்று வர அவர்களது பிரதான போக்குவரத்து வாகனமாக தோணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஆலப்புழை தும்புப் பொருட்களுக்குப் பிரசித்தி பெற்றது. கேரளாவின் அநேகத் தும்புத் தொழிற்சாலைகள் ஆலப்புழையை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. அதற்குக் காரணம் அங்கு பெருமளவில் காணப்படும் தென்னை மரங்கள். வருடமொருமுறை நேரு கிண்ண படகுப் போட்டி இங்கு நடைபெறுகிறது. அதை ரசிக்க ஏராளமான உள்@ர்வாசிகளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளும் கூடுகிறார்கள். தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செய்கிறார்கள். குளிரூட்டப்பட்ட ஓர் அறை, இரு அறைகள் கொண்ட பிரம்மாண்டப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. நீர்ப்பரப்பில் படகிலேயே இராத்தங்கலும் செய்ய முடியும். மீன்களை அங்கேயே பிடித்துச் சமைத்துத் தருகிறார்கள். ஆனால் அவ்வாறான ஒரு படகு எங்களுக்குக் கிடைக்காதது பெரும் துரதிர்ஷ்டம்தான். ஏனெனில் அவ்வாறான படகுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தன. சில படகுகள் திருத்தங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தன. பன்னிரண்டாயிரம் ரூபாய் வரை தருவதாகக் கேட்டுப் பாரத்தும் பதிவை மாற்ற முடியாது என்று மறுத்து விட்டனர். எனவே ஆட்டா ஓட்டுனர் தாஜூதீன் சிறிய இயந்திரப் படகு ஒன்றை ஏற்பாடு செய்து தந்தார்.


கிட்டத்தட்ட நான்கு மணி நேரப் பயணம் அது. பல களப்புப் பிரதேசங்க@டாக படகு தனது பயணத்தைத் தொடர்ந்தது. முன்னும் பின்னுமாக பல அற்புதமான காட்சிகள். பல படகுகள் எம்மை எதிர்கொண்டும் எமது போக்குடன் இணைந்தும் பயணம் செய்தன. பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சொந்தமான குளிரூட்டப்பட்ட படகுகளில் மேலைத் தேசத்தவர் பயணம் மேற்கொள்வதைக் காணக் கூடியதாக இருந்தது. படகு ஒரேயிடத்தை மீண்டும் மீண்டும் சுற்றி வரவில்லை என்பதை அந்த நான்கு மணி நேரத்திலும் நான் அவதானித்தேன்.


இடைக்கிடையே இலக்கியம் பேசினோம். குறிப்பாக மலையாள இலக்கியவாதிகள் எமது கலந்துரையாடலில் இடம்பெற்றனர். சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை, குமரன் ஆசான், அடூர் கோபால கிருஷ்ணன், சச்சிதானந்தன், மாதவிக்குட்டி, எம்.ரி. வாசுதேவன் நாயர், எஸ்.கே. பொற்றேகாட், வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை என்று இலக்கியவாதிகளும் மம்முட்டி, மோகன்லால், கோபால் மேனன், நெடுமுடி வேணு, ரேவதியாக அறிமுகமான ஆஷா கேளுண்ணி என்று சினிமாத்துறை சார்ந்தவர்களும் கே.ஜே.யேசுதாஸ், சித்ரா என்று பாடகர்களும் எமது பேச்சினிடையே வந்து சென்றனர். எர்ணாகுளம், ஆலப்புழைப் பகுதிகளில் எங்கும் கே.ஜே.யேசுதாஸ் ஒலித்துக் கொண்டிக்கிறார். நமக்கு மிகவும் அறிமுகமானவர்களான பஷீரையும் தகழியையும் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினோம். சிவசங்கரன்பிள்ளை, தகழி என்ற இடத்தைச் சேர்ந்தவர். அந்த இடம் ஆலப்புழையின் குட்டநாடு தாலுகா பிரிவில்தான் இருக்கிறது. 1947ல் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’,1956ல் வெளிவந்த ‘செம்மீன்’, 1978ல் வெளிவந்த ‘கயிறு’ ஆகிய நாவல்கள் அவரை இலக்கியப் பெருவெளியின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றன. ‘செம்மீன்’ நாவல் பத்தொன்பது மொழிகளில் பெயர்க்கப்பட்டது. சினிமாவாக எடுக்கப்பட்டு பதினைந்து மொழிகளில் தழுவப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் நடித்த ஷீலா என்ற நடிகை கடைசிவரை செம்மீன் புகழ் ஷீலா என்றே அழைக்கப்பட்டார். கயிறு நாவல் அவரது அதிசிறந்த படைப்பாகப் பேசப்பட்டது. 1984ல் இந்திய அரசின் உயர் இலக்கிய விருதையும் 1985ல் பத்மபூஷண் பட்டத்தையும் பெற்றவர். 1999ல் ஆலப்புழையிலேயே அவர் காலமானார். தகழி சிவசங்கரன் பிள்ளையைக் கௌரவிக்கு முகமாக இந்திய அரசு 2003ம் ஆண்டு முத்திரையொன்றை வெளியிட்டது. ஆலப்புழையில் நாம் அறியாத கவிஞர் ஒருவரும் வாழ்ந்துள்ளார். ஏறக்குறைய 500 சினிமாப் படங்களுக்கு 2000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் அவர். பெயர் வயலார் ராமவர்மா. மலையாள சினிமாப் பாடல்களின் முன்னோடி எனக் கருதப்படும் இவருக்கு 1974ம் ஆண்டு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 1961ல் கேரள சாகித்திய அகதமி விருது பெற்ற அவர் 1975ல் காலமானார். பிரபல்யம் பெற்ற குடும்பத்தில் அவர் பிறந்த போதும் கம்யூனிஸ இயக்கத்தில் இறங்கி மத, இன வேறுபாடுகளுக்கெதிராகச் செயற்பட்டவர்.


படகுச் சவாரி செய்யும் ஆசைக்குள் மீன் சாப்பிட வேண்டும் என்று ஒரு உப பிரிவு எனக்குள் இருந்தது. ஏறும் போதே படகோட்டியிடம் சொல்லி வைத்திருந்தேன். இடையில் நிலப்பரப்பொன்றில் நிறுத்தி ஒரு கடைக்கு அழைத்தான் படகோட்டி. இரண்டு பெரிய மீன்களைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தான் கடைக்காரன். ஐஸ் பெட்டியில் வைத்த மீன் சாப்பிடவா இவ்வளவு தூரம் வந்தது? என்று நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தனர். எனவே அதைத் தவிர்த்து விட்டு அருகில் இருந்த மலையாள மூலிகை வைத்திய நிலையத்துக்குச் சென்றோம். அந்த இடம் நீர்ப்பிரதேசத்துக்குள் அமைந்திருந்த ஒரு சிறு தீவுப்பகுதியாகும். அங்கே பலவகையான நாட்டு மருந்துகள் இருந்தன. அங்கிருந்தோர் நன்றாகத் தமிழில் உரையாடினார்கள். வெளிநாட்டவர்கள் அங்கு வந்து மூலிகை எண்ணெய் மஸாஜ் செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு விதமான மஸாஜ்; செய்வதற்கு எடுக்கும் நேரமும் தொகையும் விபர அட்டையில் அச்சிடப்பட்டிருந்தன.


பயணத்தின் இடையில் மற்றொரு கரையில் தேனீர் அருந்த நிறுத்தினோம். ஒரு முஸ்லிம் பெண்மணியின் தேனீர்க்கடை அது. இந்தியாவில் எந்தக் கடையில் தேனீர் அருந்தினாலும் சுவைக்கவில்லை. காரணம் நமது நாட்டுத் தேயிலை அத்தனை சுவையானது. அந்த ருசி இந்தியத் தேயிலையில் இல்லை என்பதே எங்களது அபிப்பிராயமாக இருந்தது. இந்தப் படகுப் பயணம் முடியும் வரை நாங்கள் கிட்டத்தட்ட அந்தரத்தில் மிதப்பது போன்ற சந்தோஷம் நிறைந்திருந்தது.


நீர்ப்பயணம் வாழ்வின் நெருக்குதல்களில் இருந்து நமது சிந்தையைத் திசை திருப்பி ஒரு இலேசானதும் திருப்தியுற்றதுமான வாழ்வின் பக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆறுகளும் கடலும் தமக்குள் வைத்திருக்கின்ற அதிசயங்களில் ஒரு சிறு வீதத்தையே அதன் மேற்பரப்புகளில் நமக்குக் காட்டுகின்றன என்று நான் நினைக்கிறேன். தொடுவான் வளைவையும் நீர்ப்பரப்பின் எல்லையில் அஸ்தமிக்கும் சூரியனையும் கண்டு தன்னை மறந்து நிற்காதவர் யார்தான் உள்ளனர்? அடுத்த நாள் மைசூருக்குச் சென்று விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம்.


அன்றிரவு உணவுக்குப் பின்னர்தான் அதற்கான பயண வழிகள் பற்றித் தேட ஆரம்பித்தோம். சொகுசு பஸ்கள் கூட எர்ணாகுளத்திலிருந்துதான் புறப்படுகின்றன என்று அறிந்தோம். வேறு வழியின்றி அடுத்த நாட்காலை எர்ணாகுளத்துக்குச் சென்று அங்கிருந்து தோதுப்பட்ட வழி எதுவோ அதன்படி முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்தோம். நாங்கள் வேகமாக நடந்து போகும் போது நம்முடன் வருகின்ற ஒருவர் குறைந்திருப்பது எமக்குப் புரியவரும். அவர் - தாஸிம் அகமதுதான். சிலவேளை ஆளைக் காணாமல் அப்படியே பாதையோரத்தில் காத்திருப்போம். வரும்போது ஏதாவது ஒரு பொருளுடன் அல்லது வித்தியாசமான ஒரு தகவலுடன் திரும்பி வருவார். அன்றிரவு அவர் திரும்பி வந்தது ஒரு சீப்பு நேத்திரம் பழங்களுடன். நான் கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டேன். ஆனால் பழங்களைச் சாப்பிடும் போது சிரித்துக் கொண்டே சாப்பிட்டேன். இலங்கையில் ஒரு நேத்திரம் பழம் 160.00 ரூபாய் முதல் 225.00 ரூபாய் வரை விற்கிறது என்று சொன்ன அவர் ஒரு கிலோவுக்கும் இந்தியப் பணத்தில் 20.00 தான் கொடுத்து வாங்கியதாகச் சொன்னார். அதாவது இலங்கைக் கணக்கில் 50.00 ரூபாய்தான்.


காலை 8.00 மணிக்கு ஆலப்புழை பஸ் நிலையத்துக்கு வந்து 30 நிமிட நேரம் காத்திருந்து கூட்டமில்லாத பஸ் ஒன்றில் ஏறி எர்ணாகுளம் வந்தடைந்தோம். காலைச் சாப்பாட்டுக்காக ஒரு கடையில் நுழைந்தால் அங்கும் அப்பம்தான் தெரிவுக்குரிய எங்களது உணவாக இருந்தது. சாப்பிட்டு விட்டு மைசூர் செல்வதற்கான வழிகளை அந்தக் கடையிலேயே விசாரித்தோம். கோழிக்கோட்டுக்கு ரயில் மூலம் சென்று அங்கிருந்து பஸ் பிடிக்கலாம் என்று சொன்னார்கள். எர்ணாகுளம் ரயில் நிலையத்தை அடைந்த போது 11.00 மணிக்கு கோழிக்கோடு செல்லும் ரயில் இருந்தது. முதலாம் வகுப்புப் பயணச் சீட்டுப் பெற்றுக் கொண்டு ரயில் புறப்படும் வரை வழமை போல ரயில் நிலையப் புத்தகக் கடை, சிற்றுண்டிக் கடையென்று உலாவினோம். ரயிலில் எங்களுக்கு என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை. இந்த ரயிலிலும் எமது அறுவர் பகுதிக்குள் எவரும் பயணச் சீட்டுடன் நுழையவில்லை. நாம் அமர்ந்த பிரிவு கதவுடன் கூடியது. அவசியமானால் மூடிவிட்டு உறங்கிக் கொள்ளக் கூடியது. இரண்டு முறை பயணச் சீட்டுப் பரிசோதகர்கள் வந்து சென்றனர்.


மதிய உணவு வேண்டுமா என்று கேட்டு வந்த இளைஞனிடம் மரக்கறி புரியாணிக்கு ஆர்டர் கொடுத்தோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு ஐந்து நிமிட நேரத்துக்கு முன் மற்றொரு இளைஞன் வந்து “நாலு வெஜிடபிள் புறியாணிங்களா சார் ஆர்டர் பண்ணீங்க?” என்று கேட்டான். ஆம் என்ற போது, புறியாணி முடிந்து விட்டதாகச் சொல்லி இரண்டு புறியாணிகளையும் இரண்டு சோற்றுப் பார்சல்களையும் தந்து பணம் பெற்றுச் சென்றான். உணவைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எம்மிடம் ஆர்டர் எடுத்த இளைஞன் எமக்கான புறியாணிப் பார்சல்களுடன் வந்து நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து அதிர்ந்து நின்றான். நாங்கள் நடந்ததைச் சொன்னோம். அவர்களுக்குள் நடக்கும் வியாபாரப் போட்டி இது. தந்திரமான வியாபாரம்! பிற்பகல் 3.00 மணியளவில் கோழிக்கோட்டை அடைந்தது ரயில்.


இறங்கினால் வாகன மயமாக இருந்தது. ரயில் நிலையத்தி மோட்டார் சைக்கிள்கள் ஆயிரக் கணக்களில் நிறுத்தப்பட்டிருந்தன. தூர இடங்களில் வேலைக்குச் செல்பவர்களது மோட்டார் சைக்கிள்களாக அவை இருக்க வேண்டும். நெருக்கமான பாதையைக் குறுக்கறுக்கவே சிரமமாக இருந்தது. பதினைந்து நிமிடம் தாமதித்து நின்று ஒருவாறு கைகளைக் காட்டிப் பாதையைக் கடந்து ஓர் ஓரத்துக்குச் சென்று நின்று பஸ் நிலையம் செல்ல ஆட்டாவொன்றை நிறுத்தினோம். கோழிக்கோட்டில் நால்வர் ஒரு ஆட்டாவில் பயணம் செய்ய முடியாது. எனவே இரண்டு ஆட்டாக்களை நிறுத்தி ஏறிப் புறப்படுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆட்டாப் பயணங்களில் மிக நிதானமான ஓட்டத்தைக் காணக் கூடியதாக இருந்தது. முண்டியடிப்பது, பொதுமக்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் அசௌகரியம் ஏற்படும் விதத்தில் ஓட்டுவது போன்றவற்றை அங்கு எம்மால் காணமுடியவில்லை.


கோழிக்கோட்டுக்கும் மைசூருக்குமிடையில் ரயில் பாதை கிடையாது. அப்படிப் போவதானால் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுத்தான் போக வேண்டும். இந்த விபரங்களை ரயிலிலேயே பெற்றுக் கொண்ட நாம் பஸ் நிலையத்தை அடைந்தோம். நான்கு மணிக்கு மைசூர் செல்லும் பஸ் புறப்படும் என்ற தகவல் கிடைத்தது. சொகுசு பஸ் சேவை உண்டா என்று முன்பதிவு மேற்கொள்ளும் நபரிடம் கேட்டேன். நடிகர் விஜயைப் போல வாயைத் திறக்காமல் பஸன்ஜர்... என்று ஏதோ சொன்னார். மீண்டும் கேட்ட போது மீண்டும் அந்தச் சொல் மட்டுமே ஆம் என்ற தலையாட்டத்துடன் வெளிவந்தது. பஸ் வந்து நின்ற பிறகுதான் அதில் ‘ஃபாஸ்ட் பெசஞ்ஜர்’ என்று எழுதப்பட்டிருப்பது தெரிந்தது. அதாவது நமது கடுகதி அல்லது ‘லிமிட்டட் ஸ்டொப்’ என்று அர்த்தம். ஏறினால் அதில் சொகுசும் இல்லை, சுண்ணாம்பும் இல்லை. ஏனைய பஸ்களை விட ஆசனங்கள் சற்று உயரத்தில் இருந்தன. அவ்வளவுதான்! கோழிக்கோட்டில் மாத்யமம் பத்திரிகைக் காரியாலயத்துக்குச் சென்று பி.கே.பாறக்கடவு என்ற எழுத்தாளரைச் சந்திப்பதும் எமது பயணத்தில் ஓர் அங்கமாக இருந்தது. ஏனெனில் அவரது சிறுகதைத் தொகுதியை அல் அஸ_மத் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.


ஆனால் அவரைச் சந்திக்கச் சென்றால் கோழிக் கோட்டிலேயே அன்றைக்குத் தங்க நேரும் என்பதாலும் ஏற்கனவே அவருடன் தொடர்பு கொள்ள முடியாது போனதாலும் முயற்சியைக் கைகழுவ வேண்டி வந்தது. இந்த பஸ் பயணத்தில் நான் கண்ட இயற்கைக் காட்சிகள் மறக்கக் கூடிதாக இல்லை. பாதைகளும் பகுதிகளும் ஊடறுத்த கிராமங்களும் நகரங்களும் அழகு கொழிப்பவை. கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்களாக அதாவது இருட்டும் வரை நான் பஸ் யன்னலூடாகப் பார்த்து ரசித்துக் கொண்டே வந்தேன். கண்டியிலிருந்து மஹியங்கனை வழியாகச் செல்லும் போது வரும் ஊசி வளைவுகள் இங்கும் இருந்தன. ஆனால் மலையில் முக்கி முக்கி ஏறிய பஸ் இறக்கத்தில் பயணிக்காதது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தப் பாதை தமிழ் நாட்டுக் கூடாகச் சென்றே கர்னாடகா செல்கிறது என்று அஸ_மத் சொன்னார். இம்முறை அவர் கணக்கு விடுவதாக எனக்குத் தோன்றவில்லை. வரை படத்தைப் பார்த்த போது அது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. நான்கு பதினைந்தளவில் புறப்பட்ட பஸ் இரவு 11.00 மணிக்கு மைசூரை அடைந்தது.


ஜின்னாஹ் ஏற்கனவே ஒரு முறை மைசூர் வந்த போது தங்கியிருந்த ஹோட்டலுக்கு எம்மை அழைத்துச் சென்றார். அறைக்குச் செல்வதற்கு முன் தெருவோரத்துக்குச் சென்று ஒரு காப்பி அருந்தலாம் என்ற வேண்டு கோளை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். தெருவோரத் தேனீர்க்கடைக்கார வயோதிபருக்குத் தமிழ் புரியுமோ என்ற சந்தேகத்தில் காபி என்று சொல்லி நான்கு விரல்களைக் காட்டினோம். “நாலு பேரா?” என்று அவர் தமிழில் கேட்டார். தமிழில் கதைக்கத் தொடங்கியதும் புதுப் பால் பொதியுடைத்து புதுக் கோப்பி இட்டு அவர் தயார் செய்து தந்த காப்பி அந்நள்ளிரவில் அமுதமாய் இனித்தது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: