பாவலர் பஸீல் காரியப்பர்
கவிதைகளும் நினைவுகளும்
இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. மிகத் தெளிவாக ஒலித்த அந்தக் குரல் சொன்னது.... “நான் பஸீல் காரியப்பரின் மகள் பேசுகிறேன். வாப்பா மௌத்தாகிப் போயிட்டாங்க... ‘நான் மௌத்தாகினால் இன்னாரிடம் சொல்லி மரண அறிவித்தலைக் கொடுக்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லி உங்களது தொலை பேசி இலக்கத்தைத் தந்திருந்தாங்க வாப்பா...”
அந்தச் செய்தி தந்த அதிர்வில் அதற்கு மேல் பேச வார்த்தையற்று கையில் ரிசீவரைப் பிடித்தபடி உறைந்து போயிருந்தேன். உணர்வு வந்த போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் பல்வேறு உணர்வுகளாலும் சிந்தனைகளாலும் அலைக்களிக்கப்பட்டேன். மிகப் பிடித்தமானதும் மிகத் தேவையானதும் மிக முக்கியமானதுமான எதையோ இழந்து விட்டதாக மனது அவஸ்தைப் பட்டது. ஐந்து நிமிடங்களின் பின்னர் மீண்டும் அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மரண அறிவித்தலில் இடம் பெற வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். தொடர்பு கொள்ளச் சாத்தியப்பட்ட அனைத்து இலக்கிய நண்பர்களுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்து விட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் செல்லப் படியிறங்கினேன்.
‘அழகான ஒரு சோடிக் கண்கள்’ என்ற அற்புதமான மெல்லிசைப் பாடல் அல்லது ஈழத்துப் பாடல் பாவலர் மீது எனது கவனத்தை ஈர்த்த முக்கியமான முதல் அம்சம்.
எழுபதுகளின் பிற்பகுதியும் எண்பதுகளின் முற்பகுதியும் செழுமை மிக்கதும் அறிவு பூர்வமானதும் இலக்கிய நயம் கொண்டதுமான நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை வாரி வழங்கி வந்தது. முத்தமிழும் பொங்க வானலையில் முழுச் சுவையையும் அள்ளி அள்ளி வழங்கியது.
அறிவுக்கும் சிந்தைக்கும் இனிய மெல்லிசைப் பாடல்களை நமது கவிஞர்கள் எழுதினார்கள். இன்றும் நினைத்து ஏங்க வைக்கும் அந்தப் பாடல்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையும் வர்த்தக சேவையும் தனித் தனியே நிகழ்ச்சிகளாக ஒலி பரப்பி வந்தது. ஒரு அறிவிப்பாளனாக ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குள் நுழைவதற்கு முதல் சினிமாப் பாடல்களையும் மீறி அந்தப் பாடல்கள் என்னைப் போன்ற பல இளைஞர்களது மனங்களில் இடம் பிடித்தன. நீலாவணனின் ‘ஓ... வண்டிக்காரா.... ஓட்டு வண்டியை ஓட்டு’, மகாகவியின் ‘சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் - சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்’, உலகப் புகழ் பெற்ற பாக்கிஸ்தானின் இசை மேதை சொகைல் ராணாவின் இசையைச் சுழல விட்டு ஸ்ருதி பிசகாமல் எஸ்.கே. பரராஜ சிங்கம் பாடிய ‘மணிக்குரல் ஒலித்தது’ஆகிய பாடல்கள் நினைவுகளாக எனது நெஞ்சில் இன்னும் இனித்துக் கொண்டேயிருக்கின்றன.
ஒரு நல்ல இசையறிவாளரும் பாடகரும்; சிறந்த அறிவிப்பாளருமாக விளங்கிய எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்கள்தான் ‘அழகான ஒரு சோடிக் கண்கள்’ என்ற பாடலைப் பாடியவர். எழுதியவரின் பெயரற்ற ஒரு பத்திரிகைத் துண்டாக இந்தப் பாடல் கிடைத்ததாகவும் பாடலின் சிறப்புக் கண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப் பட்டதாகவும் பின்னர்தான் பாவலர் பஸீல் காரியப்பரின் பாடல் என்பது தெரிய வந்ததாகவும் ஒரு கதை நிலவி வந்தது. எவ்வாறாயினும் இது ஒரு அதி சிறந்த பாடல்.
இது தவிர, சுஜாதா அத்தநாயக்க பாடிய ‘கயிற்றோசை கேள் மகளே... தொட்டில் கயிற்றோசை கேள் மகளே... என்ற பாடலும் ‘பொன்னரிவாள் என்றே கவிஞர் புரட்சிக் கமால் சொன்னார் என்ற பாடலும் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வரும் பாவலர் எழுதிய பாடல்களாகும்.
எண்பதுகளின் பிற்பகுதியில் ‘பொங்கும் பூம்புனல்’ நிகழ்ச்சியில் முதல் பாடலாக ஒரு மெல்லிசைப் பாடல் சேர்த்துக் கொள்ளப்படுவது விதியாக இருந்தது. ‘உங்கள் பெயர்களில் எங்கள் தெரிவாக’ இடம் பெற்று வந்த இந்த நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ‘அழகான ஒரு சோடிக் கண்கள்’ பாடலை நான் கேட்டு இரசிக்க வேண்டும் என்ற எனது சுயநலத்துக்காகவே ஒலிபரப்பி வந்தேன். பாடல் ஒலிபரப்பாகும் வேளை அறிவிப்பாளர் அறையின் ஒலிபரப்பி அதியுச்சச் சத்தத்தில் இருக்கும்.
அழகான ஒரு சோடிக் கண்கள் - அவை
அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம் புண்கள்!
புவியியல் கற்றிடும் வேளை - அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங்காலை
தவித்துத் துடிப்பதென் வேலை - கல்வி
தங்குவதெங்கே மனமொரு பாலை
ஆட்சியியல் மறு பாடம் - நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்
ஆட்சி செய்யுமுனைச் சாடும் - நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்!
தாய்மொழிப் பாடம் நடக்கும் - நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்
‘ஏய்’ என்று என்னைப் பிடிக்கும் - மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்...?
தத்துவப் பாடம் நடக்கும் - அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்
வித்தையில் பித்து பிடிக்கும் - நம்
வீட்டாரறிந்தால் கன்னந் தடிக்கும்!
பாவலர் பஸீல் காரியப்பரின் ‘தங்கம்மா’ என்ற கவிதை, அவர் மீது என்னைப் பேரபிமானம் கொள்ள வைத்தது. அந்தக் கவிதை வெளியான போது நான் பேருவளை ஜாமிஆ நளீமியாவில் மாணவனாக இருந்தேன். கொழும்புப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் 1978ல் நடத்திய அகில இலங்கை ரீதியிலான கவிதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றது இந்த நெடுங்கவிதை. தற்போது கலாசார அலுவல்கள் அமைச்சில் பணிப்பாளராக இருக்கும் எனது வகுப்புத் தோழரான சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர், விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பியதும் ‘தங்கம்மா’ கவிதை கொண்ட சிறு பிரசுரங்கள் இரண்டைக் கொண்டு வந்தார். அகில இலங்கை ரீதியில் பாவலர் பெற்ற பரிசுக்காகவும் இவ்வாறான ஓர் சிறந்த கவிஞன் தங்களுடன் வாழ்வதையும் கௌரவித்தும் ஊரே திரண்டு பாவலரை வாழ்த்திப் பெருவிழா வொன்றை நடத்தியது. அங்கு விநியோகிக்கப்பட்ட கவிதைப் பிரசுரமே இது என்று சொன்ன நண்பர் கவிதையோடு எனக்கிருக்கும் உறவுக்காக ஒரு பிரதியை எனக்குத் தந்தார்.
தங்கம்மா ஒரு நெடுங் கவிதை மாத்திரமல்ல, அது ஒரு காவியம். காவியத்துக்குரிய இயல்புகள் தேவைகளை அது நிறைவேற்றவில்லை என்கிற போதும் என்னளவில் அது ஒரு காவியம்தான். அது அவ்வாறுதான் பேசுகிறது. ஓர் ஏழைப் பெண்ணின் வாழ்வை அதி உச்சத் துயருடன் அது பேசுகிறது. அவளது வாழ்வை அவள் எப்படி இழந்தாள் என்பதையும் சமூகம் எப்படி அவளைக் கைவிட்டது என்பதையும் அதனால் அவள் பிழைக்கத் தேர்ந்த வழியைக் கொண்டு அவளைத் தூற்றித் தெருவில் விட்டது என்பதையும் மனதைப் பிழியுமாறு எடுத்துச் சொல்கிறது. ஒரு ஏழைப் பெண்ணின் துயர வரலாற்றை எடுத்தோதும் இந்நெடுங்கவிதை மூலம் தனது சீற்றம் கொண்ட மறைமுகக் கரங்களால் வெட்கம் கெட்ட சமூகத்தை நோக்கிக் கற்களை வீசும் பாவலரையும் நான் காண்கிறேன்.
பாவலர் பஸீல் காரியப்பரைச் சந்திக்காமலேயே அவரது விசிறியாக என்னை மாற்றியவை அவரது கவிதைகள்தாம். நான் ஏற்கனவே குறிப்பிட்ட பாடலும் கவிதைக்கும் அப்பால் மற்றொரு கவிதையை அகஸ்மாத்தாக எங்கோ படிக்கக் கிடைத்தது. அந்தக் கவிதையின் பெயர் ‘வருத்துவது’. மிக மிக எளிமையான சொற்களைக் கொண்டு அந்தக் கவிதை பேசுகிறது. வெறும் இருபது வரிகளில் முதல் வாசிப்பில் என்னில் ஒட்டிக் கொண்டது அந்தக் கவிதை. எதுகைக்கும் மோனைக்கும் சொற்கள் தேடித் தேடித் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த வயது அது. வயதும் அனுபவமும் இல்லாத காரணத்தாலும் வாசிப்பின் போதாமையாலும் எதுகையும் மோனையும் எங்கே அழைத்துச் செல்கிறதோ அந்த இடத்துக்குக் கவிதையை முடித்து நிறுத்திக் கொள்கின்ற நிலையிலிருந்த எனக்கு இந்தக் கவிதை ஒரு புதுமையாகக் கூடத் தெரிந்தது. வெறும் சாதாரணச் சொற்களாலும் அற்புதமான விடயங்களைத் தாக்கமுடன் பேச முடியும் என்ற பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது இந்தக் கவிதைதான். இந்தக் கவிதையின் பின்னணி வயற் பிரதேசம். கதாநாயகி புல்லுப் பிடுங்குபவள். அவளது வாழ்வின் வலியை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்.
நெல் வயலுக்குள்ளே
நெருங்கி வளர்ந்திருந்த
புல் பிடுங்கி விட்டுப்
போகின்ற பெண்ணாளின்
கன்னத்தில் வெள்ளிக்
காசுகள் போல் தேமல்
என்னுள் ஒரு வேதனையை
ஏன் எழுக என்றதுவோ
மருந்தொன்று அறிவேன் அம்
மறு நீங்கச் செய்திடலாம்
அறிந்ததனைச் சொல்லிவிட
ஆவல் மிகக் கொள்ளுகிறேன்
மெல்ல வழியில் இறங்கி
மெதுவாகச் சொல்லுகையில்
கொல்லென்று சிரித்தாள் பின்
குளுமையுடன் தலை நிமிர்ந்து
‘வருத்துவது எங்கள்
வயிறே முகத்தேமல்
உறுத்தவில்லை காக்கா’ என
ஒரு பதிலைச் சொல்லி விட்டாள்.
பாவலர் பஸீல் காரியப்பர் எப்படியிருப்பார் என்று பல முறை நான் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அவருடைய முகவரியைத் தேடிப் பலரைத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரை அறிந்தவர்களிடம் அவரது கவிதைகளைச் சொல்லிச் சொல்லி மாய்ந்திருக்கிறேன். ஆனால் பாவலர் மட்டும் எனக்கு எந்த விதத்திலும் அகப்படாமல் இருந்து வந்தார்.
என்னுடைய ஒலிபரப்பு வாழ்வில் பிரிக்க முடியாத நபராக இருந்தவர் முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளராக இருந்த எம்.எம். இர்பான். அவர் தென் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவராக இருந்த போதும் தமிழ் இலக்கியத்திலும் ரசனை கொண்ட ஒருவராக விளங்கினார். ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் யாரைக் கொண்டு எதைச் சிறப்புறச் செய்யலாம் என்று நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். அந்த ஆற்றலும் அனுபவமும் இர்பானிடம் இருந்தது. இர்பான் மிக நீண்ட காலமாக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அவர் தயாரித்த நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கிறேன். கொழும்பில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்திக்கும் நட்பாக அவரது நட்பு மலர்ந்திருந்தது. எம் இருவருக்குள்ளும் நல்லதொரு புரிந்துணர்வு இருந்தது. கவிதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் இர்பானுக்கும் பாவலர் பஸீல் காரியப்பருக்குமிடையிலான நட்பு குறித்து அறிந்து கொண்டேன். எனக்கும் இர்பானுக்கும் இடையே இருந்த நட்பை விட பாவலருக்கும் இர்பானுக்குமிடையில் நெருக்கமான நட்பு இருந்ததைக் கண்டு கொண்டேன்.
பாவலர் கடந்த காலங்களில் அடிக்கடி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் என்பதும் கவியரங்குகளில் பங்கு கொண்டவர் என்பதும் இர்பான் மூலம் நான் தெரிந்து கொண்ட செய்திகள். இர்பானிடம் என் மனக்குறையை எடுத்துச் சொன்னேன். எனக்கு அவரது கவிதைகள் யாவற்றையும் படிக்க வேண்டும் என்ற வேணவாவைப் புரியவைத்தேன். அவருடன் ஏதாவதொரு வகையில் தொடர்பு கொண்டு மீண்டும் அவரை நிகழ்ச்சிகளுக்குக் கொண்டு வர விரும்புவதாக இர்பான் எனக்குச் சொன்னார்.
நானும் இர்பானும் நீண்ட காலமாக ‘அறிவுக் களஞ்சியம்’ என்ற நிகழ்ச்சியை முஸ்லிம் சேவையில் நடத்தி வந்தோம். ஒரு முறை ஏதாவதொரு மாவட்டத்துக்குச் சென்றால் ஐந்து நிகழ்ச்சிகளுக்குக் குறையாமல் ஒலிப்பதிவு செய்து வருவது வழக்கம். முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான பொது அறிவுப் போட்டி இது. இந்த ஒலிப்பதிவை வாரமொரு முறை வெள்ளிக் கிழமை பிற்பகல் 25 நிமிடங்களில் ஒலிபரப்பாகக் கூடியவாறு எடிட் செய்வோம். அது இர்பானுடைய பணி என்ற போதும் அந்த வேளையில் நானும் இர்பானுடன் இருப்பது வழக்கம். ஒரு நாள் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தாழ்வாரத்தில் எடிட்டிங் வேலைகளுக்காக கலையகத்தை நோக்கிச் சென்ற போது வெள்ளைச் சாறன், வெள்ளை நெஷனல் ஷேர்ட், வெள்ளைத் தொப்பி, கண்ணாடி அணிந்த ஒல்லியான ஒருவர் கையில் புகையும் சிகரட்டுடன் எம்மை எதிர் கொண்டார்.
“இவர்தான் நீங்கள் தேடிக் கொண்டிருந்த பாவலர்” என்று இர்பான் எனக்கு அவரை அறிமுகம் செய்த போது நான் வியப்பும் ஆச்சரியமுமாய் மலர்ந்தேன். சிகரட்டைக் கைமாற்றிக் கொண்டு எனது கையொன்றைப் பிடித்தார் பாவலர். பின்னர் முஸ்லிம் சேவையிலும் இர்பானின் வீட்டிலும் அமர்ந்து நீளம் நீளமாகப் பேசினோம்.
என்னைக் ‘கிளி’ என்றுதான் பாவலர் அழைத்து வந்தார். என்னை மட்டுமல்ல, அவருக்குப் பிடித்தவர்களை அவ்வாறுதான் அழைத்தார் என்று நினைக்கிறேன். ‘ஒங்கட கவிதைகளப் படிச்சிருக்கண்டா கிளி’ என்று சொன்னார். ‘எனக்கு உங்கள் கவிதைகள் முழுவதையும் படிக்க வேண்டுமே’ என்று சொன்னேன். ‘அதெல்லாம் எங்க கெடக்கோ...’ என்று ஆர்வமில்லாமல் பதில் சொன்னார். ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
1992ல் என்று நினைக்கிறேன். அறிவுக் களஞ்சியம் ஒலிப்பதிவுக்காக கல்முனை சென்றிருந்தோம். கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் ஒலிப்பதிவு. வட்டாரரக் கல்வியதிகாரியாகவிருந்த மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களது வீட்டில் அபாரமான ஒரு காலை விருந்து. ஒலிப்பதிவை முடித்துக் கொண்டு பாவலரின் வீட்டுக்குச் சென்றோம். ஊஞ்சலில் அமர்ந்திருந்தபடி பலதும் பத்தும் பேசினோம். நான் கவிதைகள் எங்;கேயிருக்கின்றன? என்று கேட்டேன். ‘அதையெல்லாந் தேடனுமிண்டா எல்லாத்தையும் இழுக்கணும்டா கிளி..’ என்று முடித்துக் கொண்டார். இஞ்சி உறைக்கப் பிளேன்ரீ கிடைத்தது. இரவு நின்று சாப்பிட்டு விட்டுக் காலை செல்லுமாறு கேட்டார். நாங்கள் மறுத்தோம். அவருடன் கதைத்துக் கொண்டே பஸ் நிலையம் வந்து கொழும்பு பஸ் ஏறினோம்.
பஸ் கிளம்பும் வரை பஸ் அருகிலேயே நின்று யன்னலோரத்தில் இருந்த என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். ‘ஒரு கவிதை சொல்லயாடா கிளி?’ என்று கேட்டார். சொல்லுங்கள் என்றேன். விவசாயிகள் கதிரடிக்கும் ‘இரணக் கோல்’ பற்றிய கவிதை.
காக்கா! அக்கம்புதன்னைக்
காலால் மிதிக்காதே
ஏக்கம் மிகுந்த எங்கள்
இரணக் கோல்! கதிரடிக்கும்
கம்புதான் எங்களினைக்
காக்கும் படை: அதுவே
நம்பிக்கை தரும் ஒரு கோல்
நாளை சில பேர்க்குச்
சூட்டுக் கோல் ஆகிடலாம்
சுரணை வருமட்டும் எங்கள்
பாட்டைச் சுரண்டுபவர்
பழிவாங்கப் படுவர் இந்
நீட்டுக் கோல் அவர்களது
நெஞ்சைத் திருத்திடலாம்
காட்டாதே பல்லைச் சே...
காக்கா உன் காலை எடு!
கடைசி இரண்டு வரியையும் அவர் ஒரு நடிப்புடனும் ஆவேசத்துடனும் உச்சரித்ததைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். ‘காட்டாதே பல்லைச் சே...” என்ற வசனத்தின் போது விருட்டெனத் திரும்பி ஒரு கோபப் பார்வை பார்த்தார். பஸ் நகரத் தொடங்கியது.
இந்தக் கவிதையைப் படித்துப் பார்த்தால் ஒரு கம்யூனிசக் கவிஞனின் வார்த்தைகளைச் சுமந்திருப்பது புரியும். ஆனால் பாவலர் ஒரு நல்ல இறை பக்தராக இருந்தார். ஒரு நல்ல முஸ்லிமாக ஒருவன் இருப்பானேயாகில் அவன் ஒரு கம்யூனிஸ்டாக மாத்திரம் இருக்க வேண்டியதில்லை. செல்வமும் பதவிகளும் வரும்வரை பொது உடமையும் நோயும் மூப்பும் வரும்வரை கம்யூனிஸமும் பேசித் திரிந்த பலரை நான் பார்த்திருக்கிறேன்.
அதன் பிறகு பிறகு பாவலர் அடிக்கடி கொழும்பு வந்து சென்றார். அவரது வீட்டுக்குத் தொலைபேசி வந்தது. நாங்கள் அவ்வப்போது பேசிக் கொண்டோம். அவரது கவிதைகளைப் பற்றிப் பேசினால் ஆர்வம் காட்டவேமாட்டார் மனிதர். நான் விடாக் கண்டனாக இருந்தேன். அவர் கொடாக் கண்டனாக இருந்தார். அவருடைய கவிதையின் மீதான எனது ஆவலும் ஈர்ப்பும் எப்படியிருந்ததென்றால் அவருடைய கவிதை நூலை வெளியிடுவதற்கான முழுச் செலவையும் நானே பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன். இந்தத் தகவலை அவரிடம் என்னால் நேரடியாகச் சொல்ல முடியவில்லை. நண்பர் இர்பான் மூலம் தெரிவித்தேன். 1997ம் ஆண்டு எனது முதலாவது கவிதைத் தொகுதியான ‘காணாமல் போனவர்கள்’ நூலை வெளியிட நான் ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தேன். முதலாவதாகப் பாவலரின் கவிதைத் தொகுதியை வெளியிட்டு விட்டு அடுத்ததாக எனது தொகுதியை வெளிக் கொணரலாம் என்று முடிவுக்கு வந்தேன். எனது தொகுதியையும் வெளியிட வேண்டியிருப்பதால் அவரது தொகுதியை அவசரமாகத் தயார்படுத்துமாறு இர்பான் மூலமே தகவல் அனுப்பினேன்.
1998ம் ஆண்டு மே மாதம் அளவில் ஒரு நாள் பாவலர் வாய் திறந்தார். தொலை பேசியில் என்னை அழைத்து ‘விசயங் கேள்விப்பட்டன்டா கிளி... நான் அங்க வந்து மூணு பேருமா இருந்துதான் அதச் செய்ய வேணும். செய்வோம்டா கிளி. ஐவ ளை ய உசநயஅ ழக றழசம. கொஞ்சம் பொறுத்துக்கங்க.’
நான் ஆறு மாதங்கள் பொறுத்திருந்தேன். கிணற்றில் போட்ட கல்லாக இருந்தார் பாவலர். இயலாத மட்டில் ‘எனது கவிதைத் தொகுதியை அனுப்புகிறேன். அதற்காவது ஒரு மதிப்புரை தருவீர்களா?’ என்று கேட்டேன். அனுப்புமாறு சொல்ல அழகாக எழுதிய கைப்பிரதியைக் கொடுத்துப் புகைப்படப் பிரதியெடுத்து பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தேன். அது இன்று வரும் நாளை வரும் என்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் இலவு காத்த கிளியானேன். எனக்குக் கடும் கோபம் வந்தது. என்னதான் மேதாவியாக இருந்தாலும் ‘ஆம்’ என்று ஏற்றுக் கொண்டதைச் செய்து முடிக்கவில்லையென்றால் அவர் மேதாவியாக இருந்தாலென்ன இல்லா விட்டால் என்ன என்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டேன். பாலவலரிடம் தெரிவிக்கும் படி இர்பானிடம் எனது கடுமையான கோபத்தைத் தெரிவித்தேன்.
நான்கு மாதங்கள் கழிந்த பிறகு நடந்ததைச் சொல்லி, ஏ.இக்பால் அவர்களிடம் பிரதியைக் கொடுத்தேன். அவர் இரண்டு வாரத்தில் எழுதித் தந்தார். 1999 ஆகஸ்ட் மாதம் எனது நூலை வெளியிட்டு முடித்தேன். பாவலரின் மீது எந்த அளவு கோபம் இருந்ததோ அதே அளவு உள்ளத்தில் அன்பும் இருந்தது என்பதை நான் மறுத்துச் சொல்வது பொய்யுரைப்பதாகும். அந்த அன்பை நான் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அவருடன் பேசவில்லை. எந்தத் தொடர்பையும் பேணவில்லை. அவரது கவிதைகள் முழுவதையும் படிப்பதைச் சாத்தியமில்லாத ஒரு விடயமாக உணர்ந்தேன்.
சம்மாந்துறையில் 09.05.1940ல் முகம்மது சுபைர் காரியப்பர் - பாத்திமா தம்பதியின் மகனாகப் பிறந்தவர் பாவலர் பஸீல் காரியப்பர். பதுளை கார்மல் கொன்வன்ட்டில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின் சம்மாந்துறையிலும் கல்முனையிலும் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1958ல் தொட்டவத்தை, பாணந்துறையில் ஆசிரியர் நியமனம் பெற்றுச் சேவையாற்றினார். ஆசிரிய சேவையில் மன்னார், பேருவளை, சம்மாந்துறை, கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களில் சேவையாற்றி ஓய்வு பெற்றார்.
உங்களது முதல் கவிதை எது என்ற கேட்ட போது, அவர் சொன்ன பதில் சற்று வித்தியாசமானது. ‘சிறு வயதில் ஒரு முறை நான் கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தேன். இரண்டு தினங்கள் உணர்வில்லாமல் கூட இருந்தேன். இரவில் திடீரெனக் கண் விழித்த நான் சுவரில் எறும்புகள் செல்லும் நிரையொன்றைப் பார்த்தேன். அவை எதிரும் புதிருமாக ஒன்றையொன்று சந்தித்துச் சொல்வதை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். இதனைக் கண்ட எனது தாயார் அதிர்ச்சியடைந்து “மகனே உனக்கு என்ன நடந்தது?” என்று பதறிப் Nபுhய்க் கேட்டார். “உம்மா நான் எறும்புகளைப் பார்க்கிறேன். அவை ஒவ்வொன்றும் சந்தித்து ஸலாம் சொல்லிப் போகின்றன” என்று சொன்னேன். தாயாருக்கு மகிழ்ச்சி.
அதுதான், அந்தச் சிந்தனைதான் எனது முதலாவது கவிதை என்று எண்ணுகிறேன்’ என்று சொன்னார் பாவலர்.
ஆனால் தனது முதல் ஆக்க இலக்கியம் ‘உயிர்’ என்கிற கவிதை என்று சொன்ன பாவலர் அதை மன்னார் பெரியமடு என்ற இடத்தில் வைத்து எழுதினேன் என்கிறார். தனக்கு முழு மன நிறைவைத் தந்த கவிதை இது என்று சொன்ன பாவலர் இக்கவிதையை எழுதிக் கூடவே ஒரு கடிதமும் எழுதி முத்திரையும் வைத்து தினகரன் பத்திரிகைக்கு அனுப்பினாராம். ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை. இந்த விடயம் தனக்கு மிகவும் மனச் சங்கடத்தைத் தந்தது என்றார்.
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ?
குச்சி, அதன் பெட்டியுடன் கூடி உரசியதால்
விச்செனவே சுடரொன்று வீறிட்டெழுந்து
இங்கு நின்று
சுழன்று
சில நொடியில் மறைந்தது காண்
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ
வீணை நரம்புகளில் விரல்கள் விளையாட
தேனாம் இசையுண்டோம் சேர்ந்ததுவும் எங்கேயோ
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ
சுழன்ற சுடராமோ சுவைத்த இசையாமோ
தளர்ந்த உயிர் உடலைத் தவிர்த்த நிலை எதுவோ
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ
இதுதான் அந்தக் கவிதை. பின்னாளில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் இக்கவிதை பரிசு பெற்றதாக அறிய முடிகிறது.
பாவலர் அவர்களின் கவிதைகள் சாதாரண ஒரு விவசாயக் கிராமத்தின் வாசனை கொண்டவை. அந்தக் கிராமத்து எளிய சனங்களின், தன்னோடு உலவும் மாந்தரின் வியர்வையையும் வறுமையையும் வலிகளையும் படம் பிடித்துக் காட்டுபவையாக இருக்கின்றன. தான் வாழும் பூமியின் ஸ்பரிசங்களின் உணர்வுகளால் ஆனவை. பகட்டு வசனங்களும் பாசாங்குத் தனமும் இல்லாதவை. அமைதியாக வழிந்தோடும் நீரூற்றைப் போல இதமாக அவை வழிந்து செல்கின்றன. எனவே அதற்கேற்றவாறு சாதாரண எளிமையான மொழிச்சட்டையை அவரது கவிதைகள் அணிந்திருக்கின்றன. அவரது பார்வை எப்போதும் உழைக்கும் வர்க்கம் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. அந்த உழைக்கும் வர்க்கமும் பூமியை நம்பி வாழும் விவசாயப் படையாக இருப்பது மிகத் தெளிவானது.
‘சட்டை’ என்று ஒரு கவிதை. தமிழ் கொஞ்சி விளையாடுகிறது இந்தக் கவிதையில். அப்போதும் கூட அந்தக் கவிதை சொல்லும் உரத்த செய்தி என்ன என்பதை அவதானியுங்கள்.
பட்டுத் துணி எடுத்துப் பல
வெட்டுக் கிறுக்குகளால் துளை
இட்டுத் தளிர் மேனி வெளிக்
கிட்டுத் தெரியவரும் சிறு
சட்டை அணிந்த பெண்கள்
சஞ்சரிக்கும் பூமியிலே
அட்டைக் கடி அழுத்தப் பன்
கட்டைத் தலை சுமக்கக் கை
எட்டி அதைப் பிடிக்க ஓ!
எரி வெயிலிற் செல்லுமிவள்
சட்டை இடுவலிடை அந்த
மொட்டுத் தெரிந்து விழி
பட்டுத் தெறித்ததனால் என்ன
பெட்டை இவள் என்றே
பிழையாக நினைக்காதீர்
உண்மையிலே இவளிடத்தில்
ஒழுங்கான சட்டை இல்லை
பன்பிடுங்கும் தொழிலால் இப்
பாவைபெறும் ஊதியத்தால்
இன்னும் ஒரு சட்டை தைக்க
இயலவில்லை
புத்தாயிரத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழ் என்ற கோஷத்துடன் 2000மாம் ஆண்டு நான் ‘யாத்ரா’ என்ற கவிதை இதழைத் தொடங்கினேன். முதலாவது இதழில் அனுராதபுரக் கவிஞர் அன்பு ஜவஹர்ஷாவின் பேட்டி இடம் பெற்றது. பத்து வருட இலக்கியச் சந்நியாசத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்த இதழ் எனக்கு மிகவும் துணையாக இருந்தது. இரண்டாவது இதழில் பாவலர் பஸீல் காரியப்பரின் பேட்டியைப் பிரசுரிக்கத் தீர்மானித்தேன்.
இம்முறை பாவலரை வென்றே ஆவது என்று முடிவு செய்து அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்தேன். எனது தொல்லைக்கு மேல் இர்பானின் தொல்லையும் இருந்தது. தாங்க முடியாமல் கடைசியில் ஒரு தினம் குறித்தார் பாவலர். கொழும்புக்கு வந்தால் இர்பானின் வீட்டிலேயே தங்குவது அவரது வழக்கம். பேட்டியை இர்பானின் வீட்டில் வைத்தே எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் பாவலர். எனக்கு ஏதோ ஒரு வழியில் பேட்டி கிடைத்தால் சரி என்று ஒத்துக் கொண்டேன். தங்களிடமுள்ள புகைப்படங்களைக் கொண்டு வாருங்கள் என்று ஏற்கனவே அவரைக் கேட்டிருந்தேன். அவர் கொண்டு வரமாட்டார் என்ற நிச்சயத்தில் ஒரு கமராவையும் ஒலிப்பதிவுக் கருவியையும் கொண்டு சென்றேன்.
எனக்கு அவர் வழங்கிய நேரம் மாலை 6.30. இர்பானின் வீட்டில் குறித்த நேரத்தில் நான் சென்றடைந்திருந்தேன். ஆனால் பாவலர்தான் அங்கே இல்லை. ‘அவர் வருவார். இருங்கள்’ என்றார் இர்பான். அவர் எங்கு சென்றார் என்பது இர்பானுக்கும் தெரியாது. சரியாக ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார். நான் நினைத்தது போலவே புகைப்படங்கள் எவற்றையும் அவர் கொண்டு வந்திருக்கவில்லை. இந்தப் பேட்டிக்கு அவரது சம்மதம் 50 மாத்திரமே என்பது எனக்குப் புரிந்தது.
“நான் எப்படி வரவேண்டும் என்று எனக்குள்ளே ஒரு படத்தை வரைந்து கொண்டு அந்த மனிதனை ஆக்குவதிலே நான் ஈடுபட்டிருக்கிறேன். மனித உறவை மலர்வித்தல், மனித உறவைச் செப்பனிடுதல், மனித உறவுக்கு நம்பிக்கையூட்டுதல், நலிந்த மனிதனுக்கு இரங்குதல், அதற்காகப் போராடுதல் - ஒரு போர்க்குணம் கொண்டவனாக, சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகிறேன்” என்று தனது பேட்டியை அவர் ஆரம்பித்தார்.
முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் ஏற்பாடு செய்து நடத்திய ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ தொடரில் உங்களைக் கௌரவிக்க அழைத்த போது நீங்கள் ஏன் மறுத்தீர்கள்?” என்று கேட்டேன். “வாழ்வோரை வாழ்த்துவோம் ஒரு நல்ல முன்மாதிரியான திட்டம். என்னை அமைச்சர் அஸ்வர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “என்னை விட்டு விடுங்கள்” என்று நான் மறுத்தேன். பட்டங்கள் பெறுவதும் ‘ஸ்பொட் லைட்டில்’ நிற்பதும் இந்த அவலச் சூழலில் எனக்குக் கஷ்டமாக இருந்தது. பாவலர் பட்டம் ஒன்றே போதும் என்று திருப்தியுடன் இருக்கிறேன். பத்தாயிரம் ரூபாவுக்கு எனது திருப்தியை இழக்க நான் விரும்பவில்லை. இன்றைய நிலையில் பாவலர் பட்டம் கிடைக்குமாக இருந்தால் அதையும் மறுத்திருப்பேன். பஸீல் காரியப்பர் போதும். பெயர் நன்றாக இருக்கிறதுதானே?” என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.
‘பாவலர்’ பட்டம் பஸீல் காரியப்பருக்கு புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது. ‘தங்கம்மா’ கவிதைக்குப் பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து ஊர் திரண்டு நடத்திய விழாவில் புலவர்மணி அவர்கள்,
“நமது செல்வமம்மா
நாட்டின் செல்வமம்மா
நமது பஸீல் காரியப்பர் என்றும்
“பாவலன் தோன்றி விட்டான்
பஸீல் காரியப்பர் கண்டீர்” என்றும் வாழ்த்தி ‘பாவலர் பட்டத்தை வழங்கியிருந்தார்.
புகைப்படம் எடுப்பதற்காக கதிரையில் அமரச் சொன்ன போது ஒரு காரியம் செய்தார் பாவலர். “நான் மேசையில எழுதுறமாதிரி எடுறா கிளி” என்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்தார். இர்பானின் படுக்கையறைக்குள் இருந்த மேசை சுவருடன் ‘ட’ கோணத்தில் போடப்பட்டிருந்தது. அதாவது ஒரு நீள் பகுதியும் ஒரு அகலப் பகுதியும் சுவருடன் இணைந்திருந்தது. சிறிய அகலப் பகுதியில் அமர்ந்து குனிந்து எழுத கட்டில் ஒன்றால் மறிக்கப்பட்ட மேசையின் நீளப் பகுதியின் எஞ்சிய பகுதியூடாக நான் புகைப்படம் எடுக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் புகைப்படத்தில் முகத்தைக் காட்டாமல் ஒரு புறக் கன்னம் மட்டும் தெரிய அமர்ந்திருந்தார். எவ்வளவோ கெஞ்சியும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. ‘இதுதான்டா கிளி நல்லாயிருக்கும்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்கும் வேறு வழி எதுவும் இருக்கவில்லை.
பேட்டியின் போது தனது மரியாதைக்குரிய நபர்களாக புலவர்மணி அல்ஹாஜ் ஆமு.ஷரிபுத்தீன், ஈழமேகம் பக்கீர் தம்பி, ஏயாரெம் சலீம் (இவரை சலீம் காக்கா என்று சொன்னார்) ஜே.எம். அப்துல் காதர் ஆகியோரைக் குறிப்பிட்டார். ஆசிரிய கலாசாலையில் தன்னுடன் இருந்த ஏ. இக்பாலை அவர் குறிப்பிடத் தவறவில்லை. அவர் முக்கியமான நபர்களாகக் குறிப்பிட்ட இருவர் சில்லையூர் செல்வராசனும் தினகரன் ஆசிரியராகவிருந்த எஸ்.சிவகுருநாதனுமாவர். சில்லையூராருக்கும் தனக்குமிடையில் மிகுந்த அன்பும் பிணைப்பும் இருந்ததை என்னிடம் பலமுறை குறிப்பிட்டுள்ளார். சிவகுருநாதன் தன்னை எந்த இடத்தில் சந்தித்தாலும் ஒரு தாளை நீட்டிக் கவிதை எழுதச் சொல்லுவார் என்று தெரிவித்தார்.
உலகம் சுருங்கி விட்டது. எல்லாமே நவீனமாகி வருகின்றன. எதிர்கால இலக்கியம் எப்படியிருக்கும்? என்று ஒரு கேள்வியைக் கேட்டேன்.
“இலக்கியம் இருக்கும். சுருக்கமாக வீரியமாக இருக்கும். வடிவங்கள் வேறுபட்டாலும் கூட” என்று சொன்ன பாவலர் அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார். “உலகம் முழுவதும் எத்தனையோ அற்புதமான வடிவங்களில் வானளாவக் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. இன்னுமின்னும் எழுப்பப்பட்டும் வருகின்றன. இவைகளால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, மிகப் பழைய கட்டடமான தாஜ்மஹாலை எதுவுஞ் செய்ய முடியவில்லையே. அப்படித்தான் இலக்கியமும்” என்று கூறினார்.
2001 ம் ஆண்டின் முற்பகுதியில் பாவலரின் கவிதை நூல் தொகுப்பு தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்கத்தினால் வெளிடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக வேறொரு புறத் தகவல் எனக்குக் கிடைத்தது. தனது அபிமானியாக இருந்த போதும் ஒரு தனிமனிதனான என்னால் அது வெளியிடப்படுவதை விடப் பல்கலைக் கழக சமூகத்தால் வெளியிடப்படுவதை பாவலர் விரும்பியிருக்கக் கூடும் என்று எண்ணினேன். அது வரவேற்கத் தக்கது என்பதும் எனது எண்ணமாக இருந்தது. எவ்வாறாக இருப்பினும் அவரது கவிதைத் தொகுதி வெளிவருவதன் மூலம் அவரது கவிதைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்ற அடிப்படையில் நான் மிகவும் திருப்தியடைந்தேன்.
அவ்வாண்டின் பிற்பகுதியில் ஒரு முன்னிராவில் பாவலரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “என்னடா கிளி செய்றீங்க...” என்று கேட்டார். “எப்போதும் போல் இருக்கிறேன் சேர்” என்றேன். “விசயங்கேள்விப் பட்டீங்கதானே?” என்று கொக்கி போட்டார். “என்ன விசயம்?” என்று கேட்டேன். “இர்பான் சொல்லவில்லையா... என்ட கவிதைப் பொத்தகம் சம்பந்தமா?” இந்தக் கேள்வியை ஒரு சிரிப்புக் கலந்த பாவத்தில் கேட்பது எனக்குப் புரிந்தது. கவிதைகளைத் தொகுத்து வெளியிட உனக்கு நான் தரவில்லை என்பதாகட்டும் எனது கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்கவில்லை என்பதாகட்டும் - இவை எவையுமே நடைபெற்றதாகக் காட்டிக் கொள்ளாத தொனி அது. அந்தச் சிரிப்பில் எனக்குப் புரிந்ததெல்லாம் ‘உனது கோபமெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது’ என்பதுதான்.
நூல் வெளியிடப்பட்டதாகவும் எனக்குரிய பிரதி அனுப்பப்பட்டிருப்பதாகவும் சொன்னார் பாவலர். ஒரு வாரத்தில் வௌ;வேறு நபர்கள் மூலம் இரண்டு பிரதிகள் கிடைக்கப் பெற்றன. அவற்றைத் தந்த இருவரும் எப்படியாவது உங்களின் கரங்களில் இதனைச் சேர்ப்பிக்கச் சொன்னார் பாவலர் என்று சொன்னார்கள். ‘ஆத்மாவின் அலைகள்’ என்ற 116 பக்கக் கவிதை நூலில் பாவலரின் 65 கவிதைகள் இடம் பெற்றிருந்தன. அவற்றை ஆசை தீரப் படித்து மகிழ்ந்தேன்.
பாவலரின் கவிதைகள் அவரைப் போன்றே எளிமையானவை. பல கவிதைகள் தொடை, தளை, சீர்களுக்கு அப்பால் நிற்பவை. புதுக் கவிதையின் போக்குகளுக்குள் அடைபடாதவை. ஆக கவிதை என்கிற வரை முறைகளுக்குள் நெருக்கடிப் படாத ஆனால் கவிதையாக மேலோங்கி நிற்கும் பண்புகள் உடையவை. அதற்காக முழுக்கவும் அவற்றை விட்டும் நீங்கியிருக்கிறார் என்றும் சொல்ல முடியவில்லை.
இந்தப் பண்பை இலங்கையில் பாவலரிடம் மட்டுமே என்னால் காண முடிந்திருக்கிறது.
“இவரது செய்யுள் கட்டிறுக்கமான மரபுவழிச் செய்யுள் அல்ல. தமிழின் யாப்பு வடிவங்களில் பஸீலுக்கு நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு என்று சொல்ல முடியவில்லை. இவரது செய்யுள் ஓரளவு நொய்மையானது. இசைப் பாடல்களில் அவர் ஒரு தொடர்ச்சியான சந்த லயத்தைப் பேண முயன்றிருக்கிறார். ஏனைய செய்யுள்களில் அத்தகைய முயற்சி காணப்படவில்லை. சந்த முறிவுகளை ஆங்காங்கே காண முடிகிறது” என்று கலாநிதி நுஃமான் நூலுக்கு வழங்கிய மதிப்புரையில் தெரிவித்துள்ளார்.
இதைப் பாவலரே ஆமோதிக்கிறார். “இலக்கண அறிவோ தகவல் அறிவோ நிறைந்த மனிதனாக நான் இல்லை. எனது மனதில் அந்தந்த வேளையில் எழுந்த சிந்தனைகளை எனக்குச் சுயமாக ஏற்பட்ட சொல்லொழுக்கில் நான் எழுத்தில் வடிக்கிறேன். கவிதை என்பது பெருகிய உணர்வின் இறுகிய இசையோட்டமான சிந்தனையின் சிறைப் பிடிப்பு” என்று அவர் சொல்கிறார்.
ஆனாலும் என்ன? இவற்றையெல்லாம் தாண்டி அவரது கவிதைகள் கவிதைகளாக நின்று நிலைக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன என்பதைப் பல்கலைக் கழக சமூகம் அவரது நூலை வெளிக் கொணர்ந்ததன் மூலம் நாம் உணர்ந்து கொள்கிறோம். இன்றும் அவரை நினைத்து உரை நிகழ்த்துவதன் மூலம் தெரிந்து கொள்கிறோம். இன்றும் இன்னும் அவர் தனது கவிதைகளுக்காகவே நினைத்துக் கதைக்கப்படுகிறார் என்பதன் மூலம் புரிந்து கொள்கிறோம்.
கலாநிதி நுஃமான் தொடர்கிறார்...”பஸீல் காரியப்பர் தனது கவிதைகளை நினைவில் இருத்தி, அவற்றை இயல்பாகப் பேச்சோசையுடன் சொல்லிக் காட்டும் திறன் மிக்கவர். அவர் தன் கவிதைகளைச் சொல்லும் போது அவரது செய்யுளின் சந்த முறிவுகளை நாம் உணர முடியாது. கவிதை சீரான சந்தத்துக்குள் மட்டும் இல்லை. அது எழுப்பும் உணர்வு, சிந்தனை வீச்சு, செறிவான படிமங்களின் ஒழுங்கமைப்பு ஆகியவற்றுக்குள் இருக்கிறது. இவ்வகையில் பஸீலின் பெரும்பாலான எழுத்துக்கள் கவிதையாகி இருக்கின்றன.”
உங்களது கவிதைகள் இலக்கண விதிகளை மீறியல்லவா நிற்கின்றன என்று நீங்கள் என்றாவது அவரைக் கேட்டிருந்தால் அவர் என்ன பதில் சொல்லுவார் என்று நினைக்கிறீர்கள். “அப்படியான கவிதைகளைத்தான் நீங்கள் ரசிப்பீர்களானால் என்னுடைய கவிதைகளை விட்டு விடுங்கள்” என்றே பதில் சொல்லியிருப்பார். ‘இப்போது நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் என்றெல்லாம் பேசப்படுகிறதே?’ என்று ஒரு கேள்வி. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில், “இது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது!”
இந்தப் பதிலைப் பார்த்து விட்டு மற்றொரு கவிஞரும் சிறந்த படைப்பாளியுமான என்.ஏ.தீரன் என்கிற நௌஷாத் காரியப்பர், ‘பெண்ணியம், தலித்தியம் போன்றவை பற்றித் தனக்குத் தெரியாது என்று பாவலர் சிரிப்பது பாவலரின் சிந்தனை வரட்சியைக் காட்டுகிறது என்பதை விட அவர் அவை பற்றிக் கூற விரும்பவில்லை என்று என்னை நான் ஏமாற்றிக் கொண்டேன்’ என்று குறிப்பிட்டார். இதே நௌஷாத் பாவலரின் மரணத்துக்குப் பிறகு ஏறக்குறைய 25 அந்தியாயங்களில் பாவலரின் கவிதைகளையும் அவரது வாழ்க்கை பற்றியும் எழுதியவர். அந்தத் தொடரின் ஆறு அத்தியாயங்கள் வரை ‘விடிவெள்ளி’ பத்திரிகையில் வெளிவந்தன. பத்திரிகையில் இலக்கியம் இடம் பெற்றுவந்த அந்தப் பக்கம் சிறுவர் பக்கமாக மாறியதால் அத்தொடரைப் பிரசுரிக்க முடியாத நிலையில் இருப்பதை விடிவெள்ளியினர் தெரிவித்தனர்.
பாவலரின் கவிதை நூலில் உள்ள கவிதைகள் யாவுமே வாசித்து ரசிக்கத் தக்கவைதான். குறிப்பாக இரண்டு கவிதைகளை இங்கு சுட்டிக் காட்டுவது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன். 1983க்கு முன்னர் தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதங்களின் மூலம் பேசப்படுவதற்கு முன்னர் தமிழ் முஸ்லிம் உறவு எப்படியிருந்தது என்பதை 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும் அறிவோம். இனிய கனவாக, நினைந்தழும் நினைவாக, கவலையுடனும் மகிழ்வுடனும் அசை போடும் நாட்களாக இன்னும் நமது மனங்களில் அவை இருக்கின்றன. மீண்டும் அக்காலத்தை எட்டிப் பிடிப்பதற்காக நாம் ஆசைப்படுகிறோம். அது எதிர்காலப் பரம்பரைக்கு நாம் செய்யும் கைம்மாறு மட்டுமல்ல நமது கடமையும் கூட. இதில் கருத்து வேறுபாடுகள் யாருக்கும் இருக்க முடியாது.
‘ஓ.. ஒரு பெண்ணாள்’ என்ற தலைப்பில் பாவலர் எழுதிய கவிதையை நாம் முதலில் பார்க்கலாம். இன ரீதியான பார்வையை அவர் என்ன வார்த்தைகள் கொண்டு எதிர் கொள்கிறார் என்பது அவதானிக்கப்பட வேண்டியது.
ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே
ஓ.. ஒரு பெண்ணாள் நின்றாள்
வாடிய முகமும் தோளில்
வளர்த்திய சேயுமாய்ச் சற்று
ஆடிய போதிலெல்லாம்
அடுத்தவர்க்கு அணைப்பேயாகி
ஓடிடும் பஸ்ஸ_க்குள்ளே
ஓ... ஒரு பெண்ணாள் நின்றாள்
ஆசனத்தில் இருந்த அன்பர்
அடுத்திருந் தவரைப் பார்த்துப்
பேசினார் ‘உங்கள் இனப்
பெண்தானே எழுந்து சற்று
இடம்தனைக் கொடுங்கள்’ என்றே
இரங்கினார் பஸ்ஸ_க்குள்ளே
அடைபட்ட பெண்ணில் அவர்
அனுதாபம் பெருகி நின்றார்
தாய்! ஒரு சேயினோடு
தவிப்பதில் பேதம் காணும்
நாயுனை என்ன என்பேன்
நாமெல்லாம் மனிதரல்லோ!
மனித மகத்துவம் பேசும் இந்தக் கவிதையில் எந்த இனத்தைச் சார்ந்தவன் அவ்வாறு சொன்னான், எந்த இனப் பெண்ணாள் சேயொடு நின்றாள் என்பதற்கான எந்தக் குறியீடும் கிடையாது என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
காடையனும் கடப்புளியும் எல்லா இனத்திலுமிருக்கிறான். பொது நிறுவனங்களில் வயிறு வளர்ப்பவன் எல்லா இனங்களிலுமிருக்கிறான். கடன் வாங்கிவிட்டுக் கம்பி நீட்டுபவன் எல்லா இனங்களிலுமிருக்கிறான். தானே காசைக் கொடுத்துப் போட்டி நடாத்தச் சொல்லித் தானே முதல் பரிசை வாங்கிப் பத்திரிகையில் படமும் பெயரும் போடுபவன் எல்லா இனத்திலுமிருக்கிறான். இனம், மதம் என்று எடுத்ததற்கெல்லாம் பிரிவினை பார்ப்பவன் எல்லா இடத்திலுமிருக்கிறான். தப்புச் செய்பவன் யாராக இருந்தாலும் மனித நேயத்தைப் பாதிக்கச் செய்பவன் எவனாக இருந்தாலும் அவன் தண்டிக்கவும் கண்டிக்கவும் படவேண்டியவன். இதை அழகாகத் தன் கவிதையில் பாவலர் பொறித்திருப்பதைக் காண்கிறோம்.
சரி இவ்வாறான மனப்பாங்கற்றுப் போக என்ன செய்ய வேண்டும் என்பது இன்னொரு கவிதையில் பாவலரால் சொல்லப்படுகிறது. அந்தக் கவிதைக்குப் பெயர் ‘துளசி’
துறை நீலாவணையிலிருந்து
ஒரு துளசிச் செடி கொண்டு வந்தேன்
வேர் நொந்து போகாமல் நீர் வார்த்து
ஓரமாய்க் கெல்லி ஈரமண்ணோடு
உசுப்பாமல் கொண்டு வந்து
எங்கள் இல்லம் இருக்கும்
கல்முனைக்குடி மண்ணைக் கெல்லி
அதனுள் வைத்தேன்
அம்மண்கள் கலந்தன
மனிதரைப் பழித்தன
துளசியின் இலைகள் என்னைப் பார்த்து
மெல்லச் சிரிக்கின்றன.
இந்தக் கவிதை என்ன சொல்கிறது. தமிழர்கள் வாழும் பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்படும் துளசிச் செடி முஸ்லிம்கள் வாழும் மண்ணில் செழித்து வளர்கிறது. ஒரு மண் இன்னொரு மண்ணை ஏற்றுக் கொள்கிறது. ஒரு மண்ணின் பயிர் இன்னொரு மண்ணை ஏற்றுக் கொள்கிறது. கேடுகெட்ட மனிதர்களாகிய நாம்தான் ஒற்றுமைப்படாமல் பிரிந்து கிடக்கிறோம் என்பதைத்தான் அழகுற எடுத்துச் சொல்கிறது.
அமரர் நீலாவணனின் ‘நீலாவணன் இலக்கியப் பேரவை’ நடத்திய கவிதைப் போட்டியில் ‘பாதுகை’ என்ற தனது கவிதை பரிசு பெற்றதாகச் சொல்கிறார் பாவலர். ஆனால் அவரது கவிதைத் தொகுதியில் அக்கவிதையைக் காணவில்லை. ‘கிழக்கிலங்கைக் கவிதைப் பாரம்பரியத்தில் நீலாவணனுக்கு அடுத்த கால கட்டத்தில் கணிப்பிடத்தக்க ஒரு கவிஞராகப் பாவலரை’க் காணும் தென் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ், ‘பொதுசனத் தொடர்பு சாதனங்கள் இவரை மிகவும் பயன்படுத்த விரும்பின. ஆனால் இவர் தானாகவே ஒதுங்கிக் கொள்வார்’ என்கிறார்.
“நறுக்குத் தெறித்தது போன்ற சிக்கனமான சொற்சேர்க்கைகளுக்குள் அழகையும் இனிமையையும் உயிர்ப்பையும் சிறைப்பிடிப்பது இவரது தனித்துவம்’ என்கிறார் மறைந்த சிறுகதை மன்னர் மருதூர்க் கொத்தன்.
நாற்பத்தைந்து அல்லது ஐம்பதைத் தாண்டி ஒரு மனிதன் காதல் வசப்படுவது செய்தியாகிவிடுகிறது.
ஊர் ஓய்வில்லாமல் பேசும் விஷயமாகிவிடுகிறது. இந்தப் பிரச்சினை கவிஞனுக்குக் கிடையாது. அறுபத்தைந்து வயதிலும் காதலைப் பாடுவான். பேரன் கல்யாண வயதிலிருக்கும் போதும் பெண்ணைப் பாடுவான். பெண்ணை அங்கம் அங்கமாக வர்ணிப்பான். அது ஒரு சமூகக் குற்றமாக ஒரு போதும் பார்க்கப்பட்டதில்லை. அது மொழிக்கும் இலக்கியத்துக்குமான வரப்பிரசாதமாகவே லரவேற்கப்பட்டது, வரவேற்கப்படுகிறது. பாவலர் ஒரு சின்னப் பெண்ணைப் பார்க்கிறார். ‘குறுக்குச் சிறுத்தவளே’ என்றோ ‘முத்தமிட்டு நெத்தியல மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு’ என்றோ அவர் பாடவில்லை. அவளைச் செல்லமாகச் ‘சிறுக்கி’ என்று அழைக்கிறார். கவிதையைப் பார்ப்போம்.
முக்காட்டுத் தொங்கலோடு
முன் உசப்பில் கை இருத்தி
சொக்குகளில் மேயும்
சுடர்விழியைப் பாதி செய்து
வக்கா வரம்பில்
வடிவெடுத்து நடப்பது போல்
சேலை சிக்கி நடைபயிலும் சிறுக்கி
என் மூத்த மகன்
உன்னை விரும்புவதாய்
ஒரு வார்த்தை சொன்னால் நான்
இன்றே உன் வீடு வந்து
இணக்கத்தைக் கேட்டிடுவேன்.
சிறுக்கியைக் கண்டு அவரது காமமோ காதலோ விழித்துக் கொள்ளவில்லை. வயது போகப் போகச் சில கழங்களுக்கு ஏக்கமாய் வடிவெடுக்கும் ஆசை துளிர்க்கவில்லை. கள்ளக் கண்ணால் பார்த்துக் ‘கணக்குப் பண்ண’வில்லை. உன்னை அணைக்க ஆசையாயிருக்கிறது என்று பாடவில்லை. நான் இருபது வருடம் பிந்திப் பிறந்திருக்க வேண்டுமே என்று பிதற்றவில்லை.
அவரது சிந்தனை மகனுடன் அவளைச் சேர்த்துப் பார்க்கிறது. எத்தனை அழகிய மனம் இது. எத்தனை அழகிய பண்பு இது. பாவலரை அணைத்துக் கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. இந்தக் கவிதையில் ஒரு நாட்டுப் பாடலின் தூய்மையைப் பார்க்கிறேன். அதன் வாசனையைப் பார்க்கிறேன். எல்லோரும் மகனுக்கு நல்ல வசதி வாய்ப்புள்ள மனைவியைத்தான் எதிர்பார்ப்பார்கள். வயலில் நடக்கும் உழைக்கும் வர்க்கச் சிறுக்கியையே மருமகளாக்க விரும்பும் பாவலரின் உயர்ந்த மனப்பாங்கை என்னவென்று சொல்வது.
வெளிவந்த ‘ஆத்மாவின் அலைகள்’ என்ற அவரது நூலில் உள்ள எல்லாக் கவிதைகளுமே எடுத்துக் காட்டுக்குரியவை. ஒரு உரையில் அத்தனையையும் கையாள்வது சாத்தியப்படுவதில்லை. குறிப்பாக ஒரு பயிற்சிக் கொப்பி கொண்டு வராத மாணவனை அடித்து விட்டுப் பின்னர் அவனது வறுமை தெரிய வரும்போது தனக்குள் அழுது அவனிடம் மன்னிப்புக் கோரும் கவிதையையும் ஒரு சின்னப் பெண்ணின் காதை அழகானது என வர்ணித்து அதில் நகை இல்லாமல் வேப்பங் குச்சி செருகப்பட்டிருப்பதை விசாரித்து ‘விரைவில் நகை வரும் அதற்குப் பிறகும் கூட உனது காதைப் பார்க்க விரும்புகிறேன்’ என்ற பச்சாதாபமும் தந்தைப் பாசமும் பீறிட்டு வழியும் கவிதையும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.
முதற் காதல் பற்றி இங்கு நான் யாருக்கும் சொல்லித் தரத் தேவையில்லை. அநேக ஆண்களினதும் அநேக பெண்களினதும் நெஞ்சாங் குழிக்குள் இன்னொரு பெண் - இன்னொரு ஆண் இருக்கிறாள் - இருக்கிறான். இதை நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது சிலருக்கு யார்யாரோ ஞாபகத்துக்கு வந்து ஊசியால் குத்தி விட்டது போல ஒரு வலி எடுத்திருக்கும். நெஞ்சுக்குள் இறப்பு வரை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசியம் கடலின் அலைகளைப் போல ஓயாமல் சிந்தனைக் கரையைத் தழுவிக் கொண்டேயிருக்கும். கவிஞர்கள் சிலர் இதை வெளியே சொல்லி விடுவார்கள். சிலர் ஒளித்து வைத்துக் கொண்டு தனிமையில் ஏக்கமுற்று இன்பம் காணுவார்கள்.
பாவலருடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது தனது தாஹிறாவைப் பற்றிச் சொன்னார். அந்தத் தாஹிறா பற்றி அவரது நூலில் கவிதையொன்று உள்ளது.
மாங்கொட்டை விளையாடும் காலம் என்று ஆரம்பிக்கிறது கவிதை.
“...............
மழைக் கூதல் எனக்கு
மகிழ்ச்சியாய் இருந்தது
அரைக்கால் சட்டைக்குள்
ஓர் ஆணியும் இருந்தது
நான் சாய்ந்து கொண்டிருந்த
எங்கள் வீட்டுச் சுவரில்
ஒரு காவியம் வரைந்தேன்
‘தாஹிறா’ என்று
பலகாலம்
அப்பதிவு சுவரில் நிலைத்தது
அதைப் பார்க்கும் போதெல்லாம்
ஒரு சிரிபு;பம் தழைத்தது
சுவரை இடித்தனர் - புதுமனை கட்டினர்
வரைந்த ஓவியம் அழிந்தே போனது
ஆயினும் என்ன
ஆண்டுகள் பலப்பல மாண்டு போனாலும்
அந்த எழுத்துக்கள்
அரூபமாய்
என் நெஞ்சில் நிலைத்த நிழல்
அவர் தனது தாஹிறாவைப் பற்றிச் சொல்லி முடித்த பிறகு “எல்லா ஆண்களின் நெஞ்சுக்குள்ளும் ஒரு தாஹிறா இருக்கிறாள்” என்று நான் பதில் சொன்னேன்,
மாணவப் பருவத்திலேயே ‘கவிஞன்’ என்று அடையாளம் பெற்றவர் பாவலர். ஆசிரியரான பிறகு நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூடக் கவிதையிலேயே கடிதம் எழுதும் கவிதைப் பித்துப் பிடித்த மனிதர். இவரது ஆசிரியர் திரு.அருளையா அவர்கள் பாவலரை ‘உமர் கையாம்’ என்று அழைத்த போது ‘உமர் கையாம் என்றால் யாரு சேர்?’ என்று கேட்டேன்’ என்று சொல்லிச் சிரித்தார்.
‘நற்பண்புகளை உள்ளடக்கிய அழகிய ஓர் ஆத்மாதான் என் வாழ்வின் தேடல்’ என்று சொல்லும் பாவலர், ‘ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருப்பது போல எனது வாழ்க்கைக்குப் பதிவு எனது கவிதைகள்’ என்று சொல்லியிருக்கிறார்.
2002ம் ஆண்டு அரச விழாவாக உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நாம் நடத்தினோம். இம்மாநாட்டை முன்னெடுத்து நடத்தியது எமது இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம். மாநாட்டுக்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதற்குள்ளிருந்து எந்நேரமும் செயல்படத் தயாரான அமைப்புக்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. இந்தக் குழுவில் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கவிஞர் தாஸிம் அகமது, கவிஞர் கலைவாதி கலீல், அல்ஹாஜ் என்.எம்.நூர்தீன், கவிஞர் ஏ.ஆர்.ஏ.ஹஸீர் ஆகியோருடன் நானும் அங்கத்துவம் வகித்தேன். இந்தக் குழுவிடம் நான் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அந்தக் கோரிக்கை என்னவென்றால் மாநாட்டின் கவியரங்குக்கு இலங்கைக் கவிஞனே தலைமை வகிக்க வேண்டும் என்பதுதான்.
சத்தியமாக நான் எந்தக் கவிஞனையும் மனதில் கொண்டு இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. இந்தியாவில் மாநாடு நடந்தால் இந்தியக் கவிஞர் தலைமை வகிக்கிறார். நமது நாட்டில் நடந்தால் நமது கவிஞனே தலைமை வகிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாக இருந்தது. இந்தியாவிலிருந்து எந்தக் கொம்பன் வந்தாலும் விரும்பினால் நமது கவிஞன் தலைமையில் பாடட்டும். இல்லையேல் போகட்டும் என்ற உறுதியான மனோ நிலையில் நான் இருந்தேன். எனது கோரிக்கையை குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
பிறகு ஏற்பாட்டுக் குழுவின் கலந்துரையாடலின் பின்னர் பாவலர் பஸீல் காரியப்பரைத் தலைமை வகிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பாவலர் கொழும்புக்கு வரும் வரைக்கும் நான் மட்டும் பதட்டத்தில் இருந்தேன். நல்ல வேளையாக மனிதர் வந்து சேர்ந்து கவியரங்குக்குத் தலைமை வகித்தார். அதுதான் நான் கடைசியாக நேரில் அவரைச் சந்தித்துப் பேசிய கடைசிச் சந்தர்ப்பம்.
கொடுத்து விட்டு வந்த மரண அறிவித்தல் ஒலிபரப்பாவதைக் கேட்க அன்று இரவு வானொலிப் பெட்டியருகில் அமர்ந்திருந்தேன். கண்டி வைத்தியசாலையிலிருந்து அவரது ஜனாஸாவை ஊருக்கு எடுத்துச் சென்று கொண்டிருப்பார்கள் என்று நேரம் கணிப்பிட்டேன். கையில் அவரது கவிதைப் புத்தகம்.
அதில் காட்டுங்கள் என் சிரிப்பை என்று ஒரு கவிதை.
பறந்து விட எந்தன் உயிர்
பழுதான யந்திரத்தை
கழுவுங்கள் கபனிடுங்கள்
காடடுங்கள் என் சிரிப்பை
தொட்டிலிடை வைத்திடுங்கள்
தோழமையாய் ஆட்டிடுங்கள்
வெட்டி வைத்த மணவறையுள்
வைத்திடுங்கள்
மீசான் கட்டைகளை நாட்டுங்கள்
கபுர் மண்ணைக் கூட்டிடுங்கள்
மண்மகளைக் கட்டிக் கலந்து
கனிந்து அயர்ந்து உறங்குகையில்
விட்டு விலகாத விதி பெறுவோம்
வியர்த்தும் போவோம்: காதல்
ஒட்டுறவால் சங்கமித்து நான்
அவளாகிப் போவேன்
பட்டந்தருவார்கள் எனக்கு
மண் என்று
ஒரு கட்டாந்தரையைக் காட்டி
அப்பொழுது அம்மண்ணை
வெட்டி எடுத்து விருந்திடுங்கள்
பயிர்களுக்கு
கண்ணடி மண் நெற்தாயின்
காலடியைச் சேர்ந்திடுமா
சின்னி விரல் மண்ணினை ஓர்
சிறு குரக்கன் ஏற்றிடுமா
என் உடம்பின் எல்லா
இழையங்களும் மனிதர்
உண்ணும் பயிர் செழிக்க
உதவிடுங்கள்: நன்றி சொல்வேன்
எந்த மனிதனுக்கு அந்த
உணவு என்று எனைக் கேட்டால்
நொந்து நலிவோரின்
நோவினைகள் மாய்க்க எழும்
அந்த மனிதனுக்கே
அணுவேனும் உதவி செய்ய
எந்தன் உடல் மண்ணை
எருவாக ஆக்கிடுங்கள்
பாவலரே, இது உத்தமமான ஆசை. உன்னதமான ஆசை. இறந்த பிறகு உடலைப் பயிர்களுக்குப் பசியாறக் கொடுக்கும் படி உயில் எழுதிய உலகின் முதலாவது மனிதர் நீங்கள்தான்!
உங்களது கவிதை நூலை நான் வெளிடத் தராமல் நீங்கள் தவிர்த்திருக்கலாம். எனது கவிதை நூலுக்கு மதிப்புரை தராமல் என்னை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் மறைந்த பிறகு உங்களது மரணத்தை உலகறியச் செய்வேன் என்று என் மீது வைத்திருந்தீர்களே நம்பிக்கை அது ஒன்றே உங்களிடம் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆத்ம அங்கீகாரமாகும். என் வாழ்வின் நல்ல பக்கங்களுக்குக்காக எனக்குக் கிடைத்த உயர்ந்த பரிசுமாகும்.
(17.09.2010 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நிகழ்த்திய உரை)

இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
1 comment:
பாவலர் - கிளி
அருமையானதொரு உரை என்கிற வரிகளில் சிக்கனமாய்ச் சுருக்கி விட முடியவில்லை.
அன்னாரோடு உரையாடி, உறவாடி, ஒரு கிராமத்தில்..சூழலில் வாழ்ந்து அவரது கவிதைகளில் மூழ்கி முத்தெடுத்து மனம் திளைத்ததொரு நிறைவும் சந்தோஷமும்.
ஆங்காங்கே சிருதுளிகளாய் அறிந்துவைத்திருந்த அவர் பற்றிய ஒரு சில செய்திகளை இன்று உங்கள் உரை எனக்கு முளுமைபடுத்தி முழுத்திருப்தி தந்திருக்கிறது. மிகச்சிரிய வயதிலிருந்தே கவிதைகளோடு உறவாடும் எனக்கு இங்கு பதியப்பட்ட கவிதைகள் சந்தோஷம் சேர்த்திருக்கிறது.
//எல்லா ஆண்களின் நெஞ்சுக்குல்லும் ஒரு தாஹிரா இருக்கிறாள்.//
எழுத்தாளனின் பேனா அடிமனசை அழகாய் படம் பிடிக்கும்.பிடித்துள்ளார் //கொடுத்துவிட்டு வந்த மரண அறிவித்தல் ஒளிபரப்பாவதை அன்றிரவு வானொலிபெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தேன். கண்டி வைத்தியசாலையில் இருண்து அவரது ஜனாஸா ஊருக்கு எடுத்து சென்றுகொண்டிருப்பார்கள் என்று நேரம் கணிப்பிட்டேன்.
கையில் அவரது கவிதைப் புத்தகம்
//என் வாழ்வில் நல்ல பக்கங்களுக்காக கிடைத்த உயர்ந்த பரிசாகும்.//
உங்கள் உரையில் மூழ்கிருந்த என்னை ஏதோ ஒரு பிரிவும் சோகமும் ஆட்கொண்டது.
எனது ரசனைக்கு கிடைத்த அதிசிறந்த உரையாக இதனையும் பதிக்கிறேன்.
கைகுலுக்கலுடன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் பேனா என் கண்களையும் ஈரமாக்கிய உன்மை என்னோடு.
[ அல்லாஹும்ம அ'பிர்லஹு வார்ஹம்ஹு... fazeel sir]
Post a Comment