Monday, September 27, 2010

சுதாராஜின் ‘உயிர்க் கசிவு’





என் மனக் கணக்கு

சுதாராஜ் என்ற படைப்பாளி பற்றியோ அவரது சிறுகதைகள் பற்றியோ பத்து நிமிடத்துக்குள் சொல்லி முடிப்பது என்பது தாமரைக் குளத்து நீரைத் தண்ணீர்ச் சொம்பில் தருவதற்குச் சமமாகும்.

இலங்கையில் தமிழில் சிறுகதை எழுதுவோர் தொகை திடீரென அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஒரு சிறு கதையை எழுதி அனுப்பினால் அது பிரசுரம் காண ஆகக் குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகளின் நோக்கம் இலக்கியம் வளர்ப்பதல்ல. இலக்கியத்தையும் ஓர் அம்சமாக அவை இணைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பிரதான நோக்கம் வியாபாரம் என்பதால் தெரிவுகளைக் கவனத்தோடு செய்வதாகச் சொல்ல முடியவில்லை. அதாவது அதி சிறந்தவற்றை மட்டும் பிரசுரிப்பதில்லை. சாதாரண கதைகளும் இடம்பெறுகின்றன. இந்தச் செயற்பாடு பலரை வளர்த்து விட்ட போதும் பத்திரிகையில் கதை பிரசுரமாகிவிட்டால் தாங்கள் ஒரு ‘பிரபல’ நிலையை எய்தி விட்டதாகச் சிலர் மயங்கிக் கிடக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தமிழில் நிறையக் குறைப் பிரசவங்களும் குப்பைகளும் நிறைய ஏதுவாகி விடுகிறது. எவ்வாறாக இருப்பினும் வெகுஜனப் பத்திரிகைகளின் இலக்கியப் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

சிறுகதை எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுவோரை நாம் சிறந்த சிறுகதையாளர்கள், சிறுகதையாளர்கள், சிறுகதை என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்கள் என்று வகுக்கலாம் என நினைக்கிறேன். இந்த முதல் பிரிவில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒரு பிரிவினர் ஓயாமல் இயங்கிக் கொண்டிருப்போர், மற்றையவர்கள் அவ்வப்போது எழுதுபவர்கள். இந்த வகைப்படுத்தலுக்குள் சுதாராஜ் எங்கிருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவர் எந்த நாட்டில் இருந்த போதும் எந்தப் பிரச்சினையால் அலைக்கழிக்கப்பட்ட போதும் தொடர்ந்து எழுதும் சிறந்த சிறுகதையாளர்களுள் ஒருவராக இருக்கிறார்.

எழுத முடிந்த சிலருக்கு எழுதுவதற்கான வலுவான கரு கிடைப்பதில்லை. வலுவான கரு கிடைத்த ஒருவர் சரியாகச் சொல்லத் தெரியாமல் சொதப்பி விடுவதைப் பார்க்கிறோம். எங்கே கதையைத் தொடங்கி எங்கே கொண்டு முடிப்பது என்பது என்று புரியாமல் தடுமாறுவோரும் உள்ளனர். கதை சொல்வதற்கான மொழி வாலாயப்படாதவர்களும் இருக்கிறார்கள். நல்ல ‘நடை’ இல்லாமல் நடுங்குவோரும் நாட்டியமாடுவோரும் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எவையுமே சுதாராஜூக்குக் கிடையாது. அவரது எழுத்துக்கும் கிடையாது.

சுதாராஜ் ஒரு சிறந்த கதை சொல்லி. இலங்கைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் செழுமைக்குப் பெரும் பங்காற்றியவர், பங்காற்றிக் கொண்டிருப்பவர். அவரது சிறுகதைகளில் ஒரு பகுதி ‘உயிர்க் கசிவு’ என்ற தலைப்பில் பெருந்தொகை நூலாக வெளிவருவதன் மூலம் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஓர் உந்துதலையும் உயர்வையும் அடைகிறது என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.

இத்தொகுப்புக்களில் உள்ள கதைகளில் பத்தினைப் பற்றி எனது கருத்துக்களைச் சொல்ல நான் அழைக்கப்பட்டேன். கவிதைகளோடு மட்டும் பரிச்சயம் உள்ள என்னை எதற்காகச் சிறுகதை பற்றிப் பேச அழைத்தார் என்பதை நான் அறியேன். மிக அண்மையில்தான் சிறுகதைகள் சிலவற்றை நானும் எழுத ஆரம்பித்தேன். ஓர் இள நிலைச் சிறுகதையாளனின் கருத்தையும் பெற்றுக் கொள்வது நல்லது என்று நண்பர் சுதாராஜோ அல்லது விழா ஏற்பாட்டுக் குழுவினரோ நினைத்திருக்கக் கூடும்.

சுதாராஜ் நீண்ட காலங்களுக்கு முன்னர் எனக்கு இலவசமாகத் தந்த ‘மனித தரிசனங்கள்’ என்ற அவரது நூல் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. தனது வீடு, தனது வாசல், தானறிந்தவர்கள் என்ற வட்டத்துக்கு அப்பாலும் உலகங்கள் இருக்கின்றன என்பதை உணர்வு பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் அறிந்து வைத்திருப்பவர் இந்தப் படைப்பாளி. நான் அந்த நூலை ரசித்துப் படித்தேன்.

அவரது சிறுகதைகளை நான் படித்திருக்கவில்லை. பொதுவாகச் சிறுகதை எழுதுவது கவிதை எழுதுவதை விடவும் சிரமமாக எனக்குத் தோன்றியிருக்கிறது. சிறுகதை எழுத அசாத்தியப் பொறுமை வேண்டும். அது என்னிடம் கிடையாது. தவிர, சில சிறு கதைகளைப் படிக்க ஆரம்பித்தவுடன் மனதையும் வயிற்றையும் புரட்ட ஆரம்பிப்பதால் அவற்றை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன். இணையத்தில் சில அறபு மொழிச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் படிக்க நேர்ந்த போது சிறுகதைகளில் ஓர் ஆர்வம் ஏற்பட்டது. அவற்றில் சிலவற்றை மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். பிறகு, நமது நல்ல தமிழ்க் கதைகளைத் தேடிப் படிக்கவும் கதைகளை எழுதவும் ஆரம்பித்தேன். இவ்வாறான ஒரு கட்டத்தில்தான் சுதாராஜின் இந்த அற்புதமான நூல் வந்து சேர்ந்திருக்கிறது.

எனக்குத் தரப்பட்ட கதைகளில் நான்கு கதைகளைப் படித்த போது இனிமேல் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று எண்ணினேன். இயல்பாகவே நான் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு நூலையும் தொடர்ந்து படிக்க என்னால் முடிவதில்லை. நான் எப்போதுமே தேர்ந்த நூல்களில் இரண்டை மாறி மாறிப் படிப்பதுண்டு. சுதாராஜ் விடயத்தில் நடந்தது வேறு. ‘மனக் கணிதம்’ என்ற அவரது கதைகளில் ஒன்றை நான்காவது கதையாக நான் படித்ததும் என் மனதில் அக்கதை ஏற்படுத்திய சலனம் புத்தகத்தை மூடு என்று கட்டளை இட்டது. அதாவது அந்தக் கதையிலிருந்து உடனடியாக விடுபட்டு அடுத்த கதைக்கு என்னால் தாவ முடியவே இல்லை. நான் உடனடியாகச் செய்த காரியம் என்னவெனில் சுதாராஜைக் கைத் தொலைபேசியில் அழைத்து என் ஆச்சரியத்தைத் தெரிவித்ததுதான். அவரது எல்லாக் கதைகளையும் தொடர்ந்து படிப்பது ஆபத்தானது என்று என்மனது சொல்லியது. ‘மனக் கணிதத்துடன் மட்டும் நின்று கொள்ளு’ என்று உள்ளுணர்வு என்னை எச்சரித்தது.

‘யாரொடு நோவோம்’ என்பது நான் படித்த அவரது முதலாவது கதை. விமானத்திலிருந்த குண்டு விழும் சூழலைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கதை. மனிதர்கள் தமது உயிர்களைக் காத்துக் கொள்ளப் பறந்து திரியும் அவலக் காட்சி. காணுமிடந்தோறும் பிணங்கள். அகக் காட்சி அற்புதமாக விரிகிறது. கதையின் முடிவில் இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது விட்டுவிட்டுச் சென்ற அப்பு என்ற தாத்தா கிணற்றில் பிணமாகக் கிடக்கக் காண்கிறார்கள். நானென்றால் கதையை அந்த இடத்திலேயே முடித்திருப்பேன். சுதாராஜ் அவரது இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும் என்று பல கோணங்களுக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு சிறுமியின் பார்வையில் கதை நகர்கிறது.

‘மனிதர்கள் இருக்கும் இடங்கள்’ மற்றொரு கதை. கதைக்குப் பொருத்தமான கவித்துவமான தலைப்பு. கதையும் கவித்துவமானதுதான். எல்லா இனத்திலும் மனிதாபிமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் ஒரு நேர்மையான எழுத்தாளனின் பதிவு இது.

சுதாராஜின் எழுத்துக் குறித்து நான் இங்கே சிலாகித்துப் பேசுவதைச் சிலர் விநோதமாகப் பார்க்க இடமுண்டு. முகஸ்துதி, தனிப்பட்ட எதிர்பார்ப்புகள், தனக்கும் பேசுவதற்கு ஒரு வாய்ப்புத் தந்தவர், தனது நூலைப் பாராட்;டி ஒரு மதிப்புரை தந்தவர் என்ற காரணங்களுக்காகவெல்லாம் சும்மா மொக்கை எழுத்துக்களைப் பலர் வாந்தி வருமளவுக்குப் புகழ்வதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். எனக்கு சுதாராஜிடம் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கடந்த காலங்களில் நெருங்கிய உறவும் கிடையாது. நான் உண்மையான எழுத்தை ரசிக்கிறேன். உண்மையான இலக்கியத்தை ஊனாகவும் உயிராகவும் மதிக்கிறேன். எனது முகத்தைச் சுழிக்க வைக்காமல், நூலைத் தூக்கி எறிய வைக்காமல், வெறும் கறுப்பு எழுத்துக்களால் நிறைந்த குப்பையைத் தராமல், ரசித்துப் படிக்க எழுதும் ஒரு படைப்பாளியைப் பற்றி மனந்திறந்து பாராட்டுவது மனச்சாட்சியுடன் வாழும் மற்றொரு படைப்பாளி செய்ய வேண்டிய கடமை என்று நான் நினைக்கிறேன்.

‘மனக் கணக்கு’ ஒரு காதல் கதை. நான் காதல் கதைகளைப் படிப்பதே இல்லை. சுதாராஜ் என்னைப் படிக்க வைத்தார். கதையை ‘தாமரா வீட்டை விட்டுப் போய்ப் பத்து நாட்களாகிறது’ என்று துவங்கியிருக்கிறார். இந்தத் தாமராவுக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பற்றித் தெரிந்து கொள்ள கதையின் பாதியைப் படிக்க வேண்டும். அவர் அதை நகர்த்திச் செல்லும் நளினம் அத்தகையது. இந்தக் கதையில் காம உணர்வு பற்றிய ஒரு வரி கிடையாது. தாமரா என்ற பெண்ணின் உடல் பற்றி ஒரு சொல் கிடையாது. ஆனால் கதை 22 பக்கங்களில் இருக்கிறது. ஓர் ஆணை ஒரு பெண் தனது பெண்மைக்குரிய பண்புகளாலும் அன்பான நடத்தைகளாலும் கருணை மிக்க இதயத்தாலும் எவ்வாறு ஆட்கொள்ளுகிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்லிப் போகிறது இந்தக் கதை. காமத்துக்கும் காதலுக்குமிடையில் இருப்பது ஒரு சிறிய இழைதான். அந்த இழையிலேயே சுதாராஜ் வெகு எளிதாக நடந்து போவது அற்புதமாக இருக்கிறது.

கதையில் சில இடங்களில் அவரது நுண்ணுணர்வுப் பார்வை திகைப்பை ஏற்படுத்துகிறது. சில வசனங்களை இங்கே உதாரணமாகக் காட்ட முடியும்.

‘தடைப்பட்ட உறக்கம் அதிகாலையில் அசதியை ஏற்படுத்தி, பறவைகளின் கீதங்கள் கூட ஏதோ மாயலோகத்தில் ஒலிப்பது போன்ற மயக்கத்தைத் தருகிறது.’

‘சாப்பாடு வயிறு மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல. அது மனமும் சம்பந்தப்பட்டது.’

‘தாமரா அவனது பெயரைச் சாப்பாட்டுப் பார்சலில் எழுதியிருந்தாள். அதற்கு ஏதோ சக்தியிருந்தது. தன்னை ஈர்ப்பது போல தாமராவின் கையெழுத்து... தனது பெயரை அவள் கைப்பட எழுதியது அவனுக்குள் ஒரு குளிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது புலனுணர்வுகளை தாமரா மெல்லத் தட்டியசைக்கத் தொடங்கியிருப்பதை அவன் உணரத் தொடங்கினான்.’

‘இவர்களெல்லாம் தாமராவின் இடத்துக்கு வர முடியுமா என அவனால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. யாரும் யாருக்கும் சமனல்ல. யாரையும் யாருடனும் ஒப்பிடவும் முடியாதுதான்.’

கதை நாயகன் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டுக்காரர்கள்தாம் தாமராவும் அவளது தாயும். தாமரா பத்துத் தினங்கள் மாமா வீட்டுக்குப் போய் விடுகிறாள். இந்தப் பத்துத் தினங்கள் அவள் இல்லாத நிலையில் அவளது பெண்ணுள்ளத்தின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட கதாநாயகன் படும் அவஸ்தைதான் கதை. அவர்கள் தமது காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. கதை முழுக்கவும் ஓர் திருமணமாகாத ஆணின் சிந்தனையோட்டம் பரவியிருக்கிறது. ஒரு இடத்திலாவது ஓர் அசிங்கச் சிரிப்புக் கிடையாது. வக்கிரக் கற்பனையோ, பார்வையோ, எண்ணமோ குறுக்கறுக்காமல் இந்தக் கதை சொல்லப்பட்டமைக்கு சுதாராஜூக்கு ஆளுயரப் பூமாலை ஒன்றைப் போடவேண்டும்.

இக்கதை என்னில் இன்னொரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இந்தக் கதைக்கு ஒரு வலுவான கரு ஒன்று இல்லை. ஆனால் வலுவற்ற ஒரு விடயத்தையும் விக்கித்துப் போகுமளவு செதுக்க சுதாராஜினால் முடிந்திருப்பது அவரது எழுத்து வல்லமைக்கு ஓர் எடுத்துக் காட்டு. சிற்பி திறமையுள்ளவனாக இருந்தால் கருங்கல் அல்ல செங்கல்லிலும் சிலை வடிப்பான்.

ஒரு முறை அம்பை என்கிற ல~;மி இலங்கை வந்து கலந்து கொண்ட ஒரு கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். அதில் ‘ஒரு பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அம்பையைக் கேட்டார். அதற்கு அம்பை திருப்பிக் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? ‘பெண்ணின் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?’ என்ற அபத்தக் கேள்விதான். எனக்குச் சிரிப்பு வந்தது. சிவா மைக்கைக் கீழே வைத்து விட்டார்.

உண்மையில் பெண்ணுக்கு இதயம் இருக்கிறது, மனசு இருக்கிறது என்று குரல் எழுப்புவதாகச் சொல்லும் இவர்களாதாம் பெண்மையைச் சிறுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கதையை மிக மிக அவசியமாகப் பெண்ணியம் பேசும் பெண்கள் படிக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமிடையிலான சுத்தமான, பாசமான, பரிவான, கருணையான நேசம் இருக்கவும் முடியும் என்பதை இக்கதை மூலம் அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

சுதாராஜின் எழுத்து நடை பற்றிக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். மிகச் சாதாரண வார்த்தைகள் கொண்டுதான் அவர் கதை சொல்லிச் செல்கிறார். கதைகளில் ஒட்டு வேலை இல்லை. மேலும் கீழும் தாவிச் செல்லும் பாய்ச்சல் இல்லை. கதைக்குச் சம்பந்தமற்ற அம்சங்களும் இல்லை. புதுமை பண்ணுகிறேன் என்ற கிறுக்குத் தனங்கள் இல்லை. எந்த ஒரு இடத்திலும் நம்மைச் சலிக்கப்பண்ணும் விதமாகவோ கொட்டாவி வரும் விதமாகவோ வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதுமில்லை. அவரது எழுத்து நடையை ஒரு குழாயூடாகச் செல்லும் நீருக்கு ஒப்பிடலாம். அந்தக் குழாய் ‘ப’ வடிவமாகவோ ‘ட’ வடிவமாகவோ ஆங்கில எழுத்தான ‘யூ’ வடிவமாகவோ கூட இருக்காது. அப்படி இருந்தால் நீர்த்திவலைகள் முட்டி மோதியே செல்லும். இவரது கதை நடையானது அழகான இளம் பெண்ணின் இடுப்பு வளைவை ஒத்ததான வளைவூடாகச் செல்லும் நீர் போன்றது. எந்த இடத்திலும் முட்டாது.

எனது சிறுகதை எழுத்தின் முதலாம் பாகம் முடிந்து விட்டிருக்கிறது. இரண்டாம் பாகம் எழுத ஆரம்பிக்கு முன்னர் சுதாராஜின் நூலை முழுமையாகப் படித்து முடித்து விட எண்ணியுள்ளேன். சிறு கதை குறித்த இன்னும் பல நுணுக்கங்களை நான் அதில் கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

சரி. மிகச் சிறப்பாகக் கதை எழுதும் வல்லமை சுதாராஜூக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நல்ல சிறுகதையாளர்கள் என்று சில முக்கியஸ்தர்கள் போடும் பட்டியலில் சுதாராஜின் பெயர்; இருப்பதில்லை ஏன்? என்ற கேள்வி இனி முக்கியத்துவம் பெற வேண்டும்.

(26.09.2010 அன்று தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடந்த சுதாராஜின் ‘உயிர்க் கசிவு’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை.)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Shaifa Begum said...

"ஒரு படைப்பாளியைப் பற்றி மனந்திறந்து பாராட்டுவது மனச்சாட்சியுடன் வாழும் மற்றொரு படைப்பாளி செய்ய வேண்டிய கடமை என்று நான் நினைக்கிறேன்."

சபாஸ் சேர் ! நான் என்ன நினைக்கிறேனோ அதையே எழுத்திலே சொல்லி
விட்டீர்கள். அதற்காக நான் ஒரு எழுத்தாளர் என்று அர்த்தம் அல்ல.இவ்வளவு
அழகாக, உங்கள் நேரத்தை, இந்த புத்தகத்திட்குள் மூளையை விட்டு, அருமையான
ஒரு விமர்சனத்ததை திறம்பட செய்து முடித்திருக்கிறீர்கள். இதனை எழுத்துவடிவில் எடு்த்து வர உங்கள் சிந்தனையோடு நீங்கள் எவ்வளவு போராடி இருப்பீர்கள் என்பதனையும் என்னால் ஓரளவுக்கு உணர முடிகிறது.
.
உண்மையில் சுதாராஜ் என்ற எழுத்தாளரை எனக்கு தெரியாது. உங்கள் விமர்சனம் படித்த
பின்பு தான , இவர் யார்..? எப்படிபட்ட எழுத்தாளர்..? இவரது எழுத்துக்கள் எத்தகையவை.? என்றெல்லாம் அறிந்து கொண்டேன்.
ஒரு படைப்பாளியின் படைப்புக்கு இன்னொரு படைப்பாளி என்ன கௌரவம்
கொடுக்க வேண்டுமோ அதனை சலிப்பு இலலாமல் தாராளமாக உங்கள் தட்டிக்
கொடுப்புகள் மூலம் கொடுத்திருக்கிறீர்கள்.. அந்த வகையில் நான் மதிக்கும்
பெருமைக்குரிய எழு்ததாளர் நீங்கள் !
அதே நேரம் எழுத்தாளர் சுதாராஜ் பக்கமான ஆதங்கம் என்னுள் இருக்கவே
செய்கிறது. ஒருவேளை என் கண்ணோட்டம் பிழையாக இருக்கலாம். இருந்தாலும்
நான் சொல்ல வந்தததை சொல்லியே ஆக வேண்டும்.

இந்த ஆக்கம் சென்ற வருடம் செப்டம்பர் 27 இல் UPLOAD செய்யப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் இந்த எழு்ததாளர் இந்த ஆக்கம் பக்கம்
எட்டி பார்க்காததது ஆச்சரியமாக இருக்கிறது. உயிர்கசிவுக்கான விமர்சனம் உயிரைக் கொடுத்து எழுதியிருக்கிறது தெரிகிறது. இந்தப் பக்கத்தில் ஒரு நன்றி சொல்வதற்கு, உயிர்க்கசிவு ஆசிரியர் ஒரு சிறிய நேரத்தை ஒதுக்கவில்லை என்பது எனது ஆதங்கம்.
அதற்குக் காரணம் எதுவாகவும் இருக்கலாம். நான் எதிர்பாரத்தது இல்லையெனும் போது எனக்குள் ஒரு சலசலப்பு.
”நல்லவை நடக்கட்டும்”
நன்றி

Lareena said...

நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை Sir. அண்மையில் உயிர்க் கசிவு தொகுதியை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். "யாரொடு நோவோம்" என்ற கதையை பாதிக்கு மேல் என்னால் தொடர முடியவில்லை. மனதை யாரோ பிசைவது போன்ற ஓர் அவல உணர்வு மனமெங்கும் வியாபித்தது. சில மணிநேரம் இடைவெளி விட்டு, என்னை நன்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டுதான் மேற்கொண்டு வாசித்து முடித்தேன்.

அக்கதையை, 'என்ன, வெறுமனே ஒரு கதைதானே! என நினைக்க முடியவில்லை. அப்படி ஒரு உயிரோட்டமான/ படிப்பவரைக் கலங்கடிக்கும் எழுத்து நடை.

'மனக் கணிதம்' என்ற வித்தியாசமான தலைப்புடன் மற்றொரு கதை. தமரா எனும் இளம்பெண்ணின் மனப் போராட்டம், அவள் இறுதியில் எடுக்கும் முடிவு, அதற்கான நியாயங்கள் என்பன மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ள விதம் அருமை.

இறுதியாக, எத்தனையோ வெட்டுக்குத்துக்கள், கால்வாரல்கள் மலிந்துள்ள இன்றைய இலக்கிய சூழ்நிலையில், சக எழுத்தாளனின் உண்மையான ஆற்றலை விதந்து போற்றவும் ஒரு மன விசாலம் சித்திக்க வேண்டும். அது உங்களுக்கு வாய்த்திருப்பதையிட்டு பெருமிதம் கொள்கின்றோம்.