Thursday, November 25, 2010

ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை





பயனுள்ளவை என்று கருதுபவற்றை ஏனையவர்களும் பயனடையும் வகையில் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தின் விளைவாகவே இலக்கியங்களும் பிற நூல்களும் தோன்றுகின்றன. புதிதாக அறிந்ததை, அனுபவித்ததை, சிந்தையைக் கவர்ந்ததை எழுத்தாற்றல் படைத்தவர்கள் ஏனையவர்களுடன் சுவைபடப் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் நாடறிந்த கவிஞரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன், தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதிய ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை’ என்ற தொடர் பயணக் கட்டுரையை தொகுத்து நூலுருவில் எமது கரங்களுக்குச் சமர்ப்பித்துள்ளார். சிறுகதை, கவிதை, பத்தி எழுத்து என பல துறைகளிலும் முத்திரை பதித்த அஷ்ரஃப் சிஹாப்தீன் பயண இலக்கியத்திலும் ஆளுமையுள்ள எழுத்தாளர் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

அண்மையில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘தீர்க்க வர்ணம்’, ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவின் போது கவிதாயினி லுணுகல ஸ்ரீ பாடிய கவி வாழ்த்து அஷ்ரஃப் சிஹாப்தீனின் எழுத்தாற்றலைக் கூறும் அழகிய கவி வரிகளாகும்.

இரை மீட்டும் பசுவாய்
இருந்து அசை போட
ஆறு மாதம் வேண்டும்
ஆகக் குறைந்தது...
ஊமையான சொற்கள் கூட
தேனீயாய்ப் பறக்குமே அந்த
சூட்சுமத்தைக் கொஞ்சம்
சொல்லித் தருவாயா?

சொற்களுக்கு இறக்கை கட்டும் கலை தெரிந்த ஆசிரியர் சுவாரஸ்யம் குன்றாமல் நகைச் சுவை இழையோட அவருக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார். இயல்பான அவரது எழுத்தாற்றல் காரணமாக பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை அழைத்துச் செல்கிறார்.

நூலின் பின் பக்க அட்டையில் நாடறிந்த கவிஞர் கலாபூஷணம் அல் அஸ_மத் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“அஷ்ரஃப் சிஹாப்தீன் எனும் பெயர் இலக்கியக் காற்றில் இரண்டறக் கலந்திருக்கிறது. கவிதைச் சிறகுடன் இவர் எழுத்து வானில் நுழைந்த கையோடு வானலைச் சிறகும் இணைந்து பயணத்தை விரிவு படுத்தியது. சிறுகதைக் காலுடன் இவர் இலக்கிய நிலத்தில் நடந்த போது கட்டுரைக் காலும் அணி சேர்த்தது. சொல் - சொல்பவரின் ஆளுமையால் சுவையும் சோதியும் பெறுகிறது. சேதியும் சொல்கிறது. இந்நூலில் அதை நாம் காணலாம்” என்கிறார்.

வழமையான பயணக் கட்டுரைகளில் ஓர் இலக்கியவாதி அல்லது எவரோ ஒருவர் பயணஞ் செய்திருப்பார். அவர் அனுபவங்களைக் கூறுவார். ஆனால் ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ பயண நூலானது நான்கு இலக்கியவாதிகளின் அல்ல.... நான்கு இலக்கிய ஜாம்பவான்களின் கூட்டுப் பயண அனுபவங்களின் வெளிப்பாடாகும். இந்நூலில் இலக்கியத் தகவல்கள், வரலாறுகள் ஏராளமாகக் காணப்படுவதற்குக் காரணம் இவர்களின் இலக்கியக் கூட்டமென்றால் மிகையல்ல.

பயண இலக்கியத்தில் ஆரம்பமே ஆர்ப்பாட்டத்துடன் நகர்கிறது. அஷ்ரஃப் சிஹாப்தீன் கூறுகிறார்;:-

“எங்களது நால்வரது அணியின் ஆட்சித் தலைவராக ஜின்னாஹ்வும் கணக்கு வழக்கு மற்றும் நலன்புரி இயக்குனராக அல் அஸ_மத்தும் பிரதம நீதியரசராக தாஸிம் அகமதுவும் சக்தி மிக்க எதிர்க் கட்சித் தலைவராக நானும் மானசீகமாகச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாரானோம்.”

வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தியவராக சரளமாக உரையாடுவது போன்ற அவரது எழுத்தானது எம்மையும் அவர்களுடன் இழுத்துச் செல்கிறது. எம்மை முதலில் கேரளாவில் படகுச் சவாரி செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். கோழிக் கோடு என்று அழைக்கப்படும் கள்ளிக் கோட்டைக்கு வஸகொடகாமா வந்தது, கள்ளிக் கோட்டைக்கு ஹைதர் அலி படையெடுத்தது போன்ற வரலாற்றுத் தகவல்களை அள்ளி வழங்கிக் கொண்டே ஆலப்புழைப் படகு வீட்டின் இனிய அனுபவங்களைக் கூறுவதுடன் அரிய பல இலக்கியத் தகவல்களையும் தருகிறார். கேரள எழுத்தாளர்களான தகழி சிவசங்கரன், வைக்கம் முகம்மது பஷீர் பற்றிய பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்கிறோம்.

சந்தனத்துக்கும் பட்டுக்கும் பெயர் போன மைசூரின் பயண அனுபவங்களை மணக்க மணக்கக் கூறுகிறார். மைசூர் மகாராஜாவின் மாளிகை வனப்பையும் வரலாற்றையும் சுவைபடக் கூறும் எழுத்தாற்றல் அவரது தனிச் சிறப்பாகும்.

அந்நிய நாட்டவனுக்கு அடிபணிய மறுத்த மைசூர் புலி திப்பு சுல்தானின் வீர வரலாறு பற்றி அரிய தகவல்களும் வரலாற்றுத் தடயங்களின் புகைப்படங்களும் நூலுக்கு அணி சேர்க்கின்றன. திப்பு சுல்தானின் கோட்டைப் பிரதேசமான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ள அருங் காட்சியகத்தில் காணப்படும் திப்புவின் வாட்கள், பீரங்கி என்பவற்றுடன் கும்பாஸ் எனப்படும் திப்புவின் கல்லறை, திப்பு கட்டிய பள்ளிவாசல் போன்றவற்றைக் காணும் போது ஒப்பற்ற வீரன் திப்புவின் வீரத்தை எண்ணி உடல் சிலிர்க்கிறது. இவற்றையெல்லாம் நேரில் காண வேண்டும் என்கிற எண்ணம் துளிர்க்கிறது.

எம்முள் இந்த எண்ணத்தைத் துளிர் விடச் செய்வதே ‘ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை’ என்ற இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

யாழ். அஸீம்நன்றி: விடிவெள்ளி -25.11.2010
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: