Sunday, November 28, 2010

அறபு தேச அரசருக்கு ஓர் அஞ்சல்

மாட்சிமை பொருந்திய சவூதி அரசரின் சமூகத்துக்கு,

எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.

இந்துமா சமுத்திரத்தில் கண்ணீர் வடிவான அழகிய தேசத்திலிருந்து ஓர் ஏழை முஸ்லிம் தங்கள் சமூகத்துக்கு எழுதும் திருமுகமாவது,

நீங்கள் எப்போதும் அமெரிக்காவுடனும் ஏனைய மேலைத்தேய நாடுகளுடனும் மட்டுமே நட்புப் பாராட்டுவதால் இந்தத் தீவு எங்கேயிருக்கிறது என்பது கூட உங்களுக்குத் தெரிந்திருக்காது. அவர்களைப் பகைத்துக் கொள்வதன் மூலம் தங்களது பதவிக்கே ஆபத்து என்பதால் அவர்கள் காலால் இட்டதைத் தலையால் செய்து கொண்டு தலை தப்புவதே தம்பிரான் புண்ணியம் என்று வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை நானும் என்னைப் போன்று உலகளாவிய ரீதியில் லட்சக் கணக்கானோரும் அறிவார்கள்.

அல்லாஹ் உங்களுக்கும் உங்களது தேசத்துக்கும் அளித்திருக்கும் பேரருளைப் போல் வேறு யாருக்கும் வேறு எந்தத் தேசத்துக்கும் அளித்ததில்லை. நாங்கள் கிணறுகளில் தண்ணீர் எடுக்க நீங்களோ எண்ணெய் எடுக்கிறீர்கள். எங்களதும் உங்களதும் கண்ணின் மணியான ரஸ_லே கரீம் (ஸல்) அவர்களை இறைவன் அந்தப் பூமியிலேயே பிறக்கச் செய்தான், இறக்கச் செய்தான். இறையில்லமான கஃபாவையும் அதே பூமிக்கே வழங்கினான்.

அரைகுறைப் படிப்பாளியான நான் ஒரு காலத்தில் முஹம்மது நபியை எதற்காக அந்தத் தேசத்தில் பிறக்க வைத்தான் என்று பல முறை சிந்தித்திருக்கிறேன். சரித்திரத்தை நான் ஆழமாகப் படித்ததில்லை. மனிதர்களைப் படைத்த இறைவனுக்கு தனது நபியை எங்கு பிறக்கச் செய்ய வேண்டும் என்று தெரியாதா என்று சமாதானம் சொல்லிக் கொள்வேன். அறியாமைக் காலத்தில் அந்த நிலத்தில் வாழ்ந்த உங்களது முன்னோர் மிருகங்களுக்கு ஒப்பாக வாழ்ந்திருக்க வேண்டும். மக்காவுக்கு ஹஜ்ஜூக்காகச் சென்ற போது இந்த வினாவுக்கு ஓரளவுதான் எனக்கு விடை கிடைத்தது. சரியான விடையை தங்களது தேசத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக வந்த எனது தேசத்தின் சகோதரி ஆரியவதிதான் கொண்டு வந்தாள்.

இந்தத் திருமுகத்தைத் தங்கள் மேலான சமூகத்துக்கு எழுதும் அஜமி, அறபிகளின் வழித்தோன்றல்தான் என்று சரித்திரத்தில் ஆங்காங்கே குறிப்புக்கள் கிடைக்கின்றன. ஆரியவதி நாட்டுக்குத் திரும்பிய போது அந்தச் சரித்திரக் குறிப்புக்காக நான் வெட்கமும் வேதனையும் அடைந்தேன்.

வறுமை நீக்கவும் வயிற்றுப் பசிக்காகவுமே மூன்றாம் உலகத்திலிருந்து உங்கள் தேசத்துக்குப் பணிப் பெண்கள் வருகிறார்கள். பணக் கொழுப்பிலும் செல்வச் செழிப்பிலும் திமிர்த்து வாழும் தங்களது தேசத்து ஆண்கள் - பேரன் முதல் பாட்டன் வரை இப்பணிப் பெண்களில் பலருக்கு ஆப்பு அடிப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஆணியும் அடிப்பீர்கள் என்பதை ஆரியவதிதான் உயிர்ச் சாட்சியாக வந்து உணர்த்தியிருக்கிறாள்.

உலகத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பல நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமன்றி எல்லா முஸ்லிம்களுமே பெருமைப்படுவதற்குரிய ஒரு அம்சம் அங்கு உள்ளது. அதுதான் இறையில்லமான கஃபா. அது ஒரு கற் கட்டடம்தான். ஆனால் அதன் ஈர்ப்புச் சக்தியும் அதன் முக்கியத்துவமும்தான் அங்கு வருவதையும் அதைத் தரிசிப்பதையும் ஓர் இறை வணக்கமாக்கியிருக்கிறது. எனவே கண்ணுக்கும் சிந்தைக்கும் தெரியும் தாத்பரியம் என்னவெனில் உலகத்தில் எந்த இனத்துக்கும் இல்லாத வகையில் சாதி, இனம், குலம், கோத்திரம், நாடு, கண்டம் , ஏழை, பணக்காரன் என்ற எந்த வேறுபாடுமின்றி அங்கு தோளோடு தோள் இணைவதாகும். இதனால் உலக முஸ்லிம்களே பெருமைப்படுகிறார்கள்.

இந்தப் பெருமையின் பெருமிதத்தில் நாங்கள் வாழ்கின்ற போது ‘வியர்வையை உலருமுன் கூலியைக் கொடுத்துவிடுங்கள்’ என்று கட்டளையிட்ட முகம்மது நபி பிறந்த மண்ணில் வாழும் உங்கள் மக்கள் எமது ஏழைகளுக்கு ஆணி அடிப்பதும் ஆப்பு அடிப்பதும் எவ்வளவு வெட்கக் கேடானது என்பதை நீங்களும் உங்கள் நாட்டு மக்களும் ஏன் இன்னும் உணரவில்லை.

வேறு இனங்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு தேசத்தில் இரண்டாம் சிறுபான்மையாக வாழும் நாங்கள் இதையிட்டு வெட்கப்படுவதைத் தவிரப் பெருமைப்பட முடியவில்லை. இஸ்லாத்தையும் அதன் சாத்வீகப் பண்புகளையும் சமாதானத்தின் தூதையும் எப்படி அந்நிய இனச் சகோதரர்களுக்கு நாங்கள் எடுத்துச் சொல்வது. எங்களைப் போன்ற அப்பாவிகளையும் அவர்கள் ‘ஆணி அடிக்கும் மனிதர்’ கூட்டத்தில்தானே சேர்ப்பார்கள் அரசரே!

ஆணியை ஆரியவதி அடித்தாளா? அங்குள்ள எஜமானர் அடித்தாரா என்பது ஒரு சர்ச்சையாக இருந்த போதும் ஒரு பெண் தனக்குத் தானே 23 ஆணிகளை அடித்துக் கொள்வாளா என்பதைச் சிந்திக்க வேண்டும் இரண்டு ஆணிகளை அடித்தால் போதும்தானே. ஆனால் வீட்டுப் பணிப் பெண்கள் அங்கு நடத்தப்படும் விதங்களையும் அது பற்றிய செய்திகளையும் படிக்கும் போது மனது சுருண்டு போய் விடுகிறது சக்கரவர்த்தி.
அண்மையில் உம்ராக் கடமைக்காக வந்த ஒரு ஆபிரிக்கச் சிறுமி கற்பழிக்கப்பட்டு மேல்மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டாள் என்ற செய்தியைப் படித்த போது நெஞ்சு விம்மி வெடித்தது. இறைவனின் இல்லத்தில் வணக்கத்துக்காக வந்த ஒரு சிறுமிக்கு இந்தக் கதி ஏற்படுவது நன்றாகவா இருக்கிறது உங்களுக்கு? அறியாமைக் காலத்தில் உங்களது முன்னோர் பெண் குழந்தைகளைக் குழி தோண்டிப் புதைத்தார்கள் என்று வரலாறு சொல்கிறது. அதை இப்போது உங்கள் பரம்பரை வேறு ஒரு வடிவில் செய்து வருகிறதா? இந்த நிலை தொடருமாக இருந்தால் நாங்கள் எங்களது பெண்களோடு ஹஜ்ஜூக்கு வருவதற்கு முடியுமா?

குற்றம் செய்தால் அறபிக்கு ஒரு நியாமும் அஜமிக்கு ஒரு நியாமும் செய்யப்படுவதாகப் பேசப்படுகிறது. அறபியின் சொல்லுக்கே அங்கு முதலிடம் தருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்லாத்தில் இந்த நீதி எங்கே இருக்கிறது என்று உங்களைக் கேட்க விரும்புகிறேன்? இஸ்லாத்தின் தண்டனைகள் கடுமையானவை, குற்றங்களைக் குறைப்பவை என்று ஒரு பரவலான கருத்து உண்டு. இதை நீங்கள் ஆள்பார்த்துச் செய்வீர்களாயின் சவூதி அரேபியா அறியாமைக் காலத்தை நோக்கி வேகமாக நகர்வதை நீங்கள் தவிர்க்க முடியாது. மனிதர்களிலிருந்து மிருகங்கள் தோன்றுவதையும் நிறுத்த முடியாது.

எல்லா நாடுகளிலும் எல்லா இனத்தினரிடையேயும் இந்தக் குற்றங்கள் நடைபெறவே செய்கின்றன என்ற வாதம் நமக்குப் பொருத்தமானது அல்ல. நாம் நல்லதை எடுத்துச் சொல்லவும் அல்லதைத் தவிர்க்கவும் வேண்டியவர்கள் என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள். எனவே அதை ஏற்றுக் கொண்டு நாமே முழு உலகத்துக்கும் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

மேற்கத்தேய, சியோனிசச் சக்திகளின் ஆலோசனைகளுக்குத் தயவு செய்த காது கொடுக்காதீர்கள். உங்களிடம் உள்ள பொருளைத் திருடும் வரையே அவர்கள் நண்பர்கள். தமது காரியம் முடிந்தால் அம்போ என்று கைவிட்டு விடுவார்கள். பிலிப்பைன்ஸின் மார்க்கோசுக்கும் ஈரானின் ஷா மன்னருக்கும் நடந்த கதி உங்கள் கண்முன்னால் விரிந்து கிடக்கிறது.

இக்குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களால் எந்த ஏற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத பட்சத்தில் ஆகக் குறைந்த அளவில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றிருக்கிறது. அதுதான் மக்கா, மதீனா, தபூக் ஆகிய மாநிலங்களைத் தனிநாடாக அறிவித்து விடுவது. சர்வதேச முஸ்லிம்களையும் கொண்ட ஒரு குழுவால் அப்பிரதேசம் நிர்வகிக்கப்படட்டும். நீங்களும் அதில் ஒருவராயிருந்து விட்டுப் போகலாம். வருடா வருடம் ஹஜ்ஜூக்காக வரும் முஸ்லிம்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பாதியை இறையில்லங்களைப் பரிபாலிப்பதற்கும் மீதியை மேற்கத்தேய நாடுகளின் சூழ்ச்சிகளால் துன்பமுறும் ஏழை முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக வழங்க முடியும்.

இதன் மூலமே ஹஜ் வணக்கத்துக்காக வரும் முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற முடியும்.

வஸ்ஸலாம்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: