Monday, November 15, 2010

ஜீனி

இனிப்பான சீனியைத் தமிழகத்தில் ஜீனி என்றும் அழைக்கிறார்கள்.

இனிப்பான சீனி என்று நான் சொல்வதற்குக் காரணம் சீனி என்று சிலருக்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பதுதான். இப்பெயர் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் அநேகர் உள்ளனர். அதேபோலத்தான் இலங்கையிலும் இருந்தார்கள் இருக்கிறார்கள். சீனி என்று பெயரிடப்பட்டவர்களை ஜீனி என்று அழைக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் ஸக்கரியாவை ஜக்கரியா எனக் கூப்பிடுகிறார்கள். ஜக்கம்மாவை அங்கும் இங்கும் அப்படியேதான் அழைக்கிறார்கள். சக்கம்மா என்று அழைப்பதில்லை.

தண்ணீரை ஜலம் என்கிறார்கள். சலம் என்றால் அது நீரையும் கூடவே சீழையும் சிறுநீரையும் குறிக்கிறது. அங்கு சர்க்கரையைச் சர்க்கரை என்றும் சீனியையும் அதாவது ஜீனியையும் சர்க்கரை என்றும் சொல்கிறார்கள்.

நான் ஏதோ குழப்புவது போல் தெரிந்தால் பெரு மனது கொண்டு நீங்கள் மன்னிக்க வேண்டும். மேற் சென்னது போன்ற சில விடயங்கள் பற்றி இன்னும் எனக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. இதைப்பற்றி நமது ஆய்வாளர்கள் ஏதாவது எழுதிக் குழப்பியிருந்தால் அதனைத் தயை கூர்ந்து எனக்கும் அறிவிக்கவும். அவர் எப்படிக் குழப்பியிருக்கிறார் என்று பார்த்து நாம் இன்னும் கொஞ்சம் குழம்பலாம், குழப்பலாம்.

நான் உங்கள் முன் பேச - மன்னிக்கவும் - எழுத எடுத்துக் கொண்ட விடயம் ஜீனி வியாதியாகும். இதனை நீரழிவு நோய் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு வியாதி அல்ல என்றும் வியாதிகளின் வாயில் என்றும் சொல்கிறார்கள். வைத்தியர்கள் இப்படி அடிக்கடி ஏதாவது மாற்றி மாற்றிச் சொல்லிச் சொல்லிப் பழகி விட்டார்கள். அவர்கள் வாயில் என்று சொன்னாலும் சரி யன்னல் அல்லது ஜன்னல் என்று சொன்னாலும் சரி நாம் அதனை வியாதியாகவே பேசுவோம்.

உலகத்தில் எழுதிப் பழக வேண்டும் என்று விரும்புவோருக்கும் எழுதுவதற்கு ஏதும் அகப்படாத சிரேட்ட எழுத்தாளர்களுக்கும் எழுதுவதற்கு உகந்த, இலகுவான தலைப்புத்தான் ஜீனி வியாதி. அதனால்தான் நீரும் எழுதுகிறீரோ என்று நீங்கள் கேட்டால் உங்களுக்குப் பதில் கடைசியில் கிடைக்கும்.

ஜீனி வியாதி எத்தனை வகை? அது எப்படி வருகிறது என்ற விபரங்களை இன்றைய சகல வயதினரும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சிறு வயதினருக்கும் இந்த நோய் இருக்கிறது, நோய் பற்றிய விழிப்புணர்வும் இருக்கிறது. இந்நோய் வந்து விட்டால் இறுதி வரை நம்முடனேயே இருந்து விடும் பாக்கியம் அதற்கு வாய்த்திருக்கிறது. எது எதுக்கெல்லாம் மருந்து கண்டு பிடித்து விட்ட வைத்திய விஞ்ஞானிகளுக்கு உடம்பில் இன்சுலினை உருவாக்க ஒரு மயிரிழை முன்னேற்றத்தைத்தானும் அடைய முடியவில்லை. இந்த நவீன யுகத்தில் இவ்விடயம் அவர்களுக்கு மட்டுமன்றி மனித குலத்துக்கே பெருத்த அவமானம். பெரும் சவால்! அந்தக் கால வைத்தியர்கள் ஒரு பச்சிலையில் சுகப்படுத்திய சிரங்குக்குக்கு ஏதாவது ஒரு வெள்ளைப் பிசின் மருந்தைக் கண்டு பிடித்து விட்டுச் சும்மா பீற்றித் திரிகிறார்கள். இன்டர் நெற்றில் லெவல் அடிக்கிறார்கள்.

ஜீனி வியாதிக்காக மருத்துவரிடம் சென்றால் மருந்தை எழுதித் தந்து விட்டு வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் மௌலவி போல அரை மணிநேரம் நமக்கு உபதேசிக்கிறார். காதில் இரத்தம் வழிய வெளியே வந்தால் எதைத்தான் சாப்பிடுவது என்ற கேள்வி எழுந்து நாம் முட்டுச் சந்தில் நிற்பது போலத் தோன்றும். “ஜீனி போட்ட இனிப்புப் பண்ணடம் எதையும் தொடாதே...... வெள்ளரிசிச் சோறு தின்னாதே.... சிவப்பரிசிச் சோறு கூட ஒரு தேனீர்க் குவளை கொள்ளளவுக்கு மேல் உண்ணாதே.... பச்சை இலை, மரக்கறி தவிரக் கிழங்கு வகைகளைக் கிட்டேயும் எடுக்காதே.... மரக்கறியிலும் கரற், பீற் அதிகம் உண்ணாதே.... மாம்பழத்தில் இனிப்பு அதிகம். பழம் தின்ன ஆசையென்றால் பப்பாசிப் பழத்தை நகத்தால் சுரண்டி நக்கிக் கொள்.

முட்டை மஞ்சட் கரு, தயிர், பட்டர், சீஸ் என்பன கொழுப்பை அதிகரிக்கும்... ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றில் கொழுப்பு அதிகம்.... கோழியையும் கூடத் தோல் நீக்கியே சமைக்க வேண்டும்....”

கடைசியாக ஒரேயொரு வழிதான் நமக்கு முன்னால் எஞ்சியிருக்கும். பேசாமல் கயிறு ஒன்றை எடுத்து ஒரு நுனியைக் கழுத்தில் கட்டிக் கொண்டு மறு நுனியை மரத்தில் அல்லது புதரில் கட்டிவிட்டுப் புல்லு மேய்வதுதான் அது.

அதெல்லாம் சரிதான்! ஆட்டிறைச்சியிலும் மாட்டிறைச்சியிலும் கொழுப்பு அதிகம் என்று சொல்கிறார்களே... ஆடும் மாடும் வாழ் நாளெல்லாம் புல்லைத்தானே மேய்கின்றன? அதுகளுக்கு எப்புடீங்கண்ணா கொழுப்பு வருவுது? ஜீனி வியாதி உள்ளவங்கல்லாம் பச்சிலை சாப்பிட்டால் அதே கொழுப்பு வராதுன்னு எப்புடீங்கண்ணா சொல்றது?

உனக்கு ஜீனி வியாதியா...? நட...! நட...!! ஓடு...! பயிற்சி செய்...! என்கிறார்கள். பாக்கிஸ்தான் கிரிக்கட் வீரன் வஸீம் அக்ரமை உங்களுக்குத் தெரியும். அவருக்கும் ஜீனி வியாதிதான். அவரது உடம்பில் ஓர் அங்குலந்தானும் ஊழைச் சதையும் கிடையாது அவர் ஓய்ந்திருந்ததும் கிடையாது. அந்த ஆள் ஓடாத ஓட்டமா...? செய்யாத பயிற்சியா...? அப்ப அவருக்கு எப்பிடீங்கண்ணா ஜீனி வந்துச்சி?

இப்படியெல்லாம் கேள்வி வரும் என்றோ என்னவோ இப்போது புதிய புதிய காரணங்களைச் சொல்லுகிறார்கள். மன அழுத்தம், நித்திரையின்மை, சுகபோக வாழ்க்கை, தனது வயதுக்கும் உயரத்துக்குமான அளவு இன்றிய உடற் பருமன் போன்ற இன்னோரன்ன காரணிகள் ஜீனி வருவதற்குக் காரணமாயிருக்கின்றன. பரம்பரையாகவும் வரும் என்பது ஏற்கனவே சொல்லப்பட்ட கதை.

மன அழுத்தமானது ஏழை, பணக்காரன், உயரதிகாரி, சிற்றூழியன், அரசியல்வாதிகள் என்று சகலரும் ஏதோ ஒரு வகை மனோ அழுத்தத்தின்பால் பட்டவர்களாகவே இருக்கிறார்கள். நவீனங்களும் புது உலகமும் மனிதனுக்கு வழங்கிய நன்கொடைகளில் மன அழுத்;தம் முக்கியமானது.

ஒரு பாடசாலைப் பிள்ளை ஒரு மூட்டைப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு பாடசாலை செல்கிறது. ஒரு பாடத்தில் இரண்டு முதல் நான்கு பயிற்சிப் புத்தகங்களைப் பயன்படுத்துகிறது. பயிற்சிகள் தலைக்கு மேல். போதாததற்கு டியூஷன் வகுப்புப் பயிற்சிகள் வேறு. பிள்ளைக்கு மன அழுத்தம் ஆரம்பித்து விடுகிறது.

காரியாலயத்தில் கணினி இடக்குச் செய்தால் வேலைகள் குவிந்து விடுகிறது. அவசரத்துக்கு லீவு பெற்றுக் கொள்ள முடியவில்லை. மதிய உணவு வேளையில் பாடசாலையிலிருந்து பிள்ளையை வேறு எடுத்து வர வேண்டும். பாதையெல்லாம் வாகன நெரிசல். உயரதிகாரியை நினைத்தால் உதறல் எடுத்து விடுகிறது. வந்து விடுகிறது மன அழுத்தம். இந்த மன அழுத்தம் ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி, இஞ்சி இடுப்பழகிக்கெல்லாம் கூட ஜீனியைத் தாரை வார்த்து விட்டுப் போய்விடுகிறது.

ஜீனிக்குப் பயந்து வாழும் டாக்டர்களின் நிலை இதைவிடப் பரிதாபம். காலை ஒன்பது மணி முதல் (சிலர் அதிகாலை 5.00 மணிக்கு) கதிரையில் அமர்ந்து நோயாளி பார்க்க ஆரம்பித்தால் மதிய உணவுக்கு நிறுத்தி மீண்டும் பிற்பகல் ஆரம்பித்து இரவு 9.00 மணிவரை கதிரையில் அமர்ந்திருப்பவர்கள் அவர்கள். பயணம் செய்வதோ சொகுசு வண்டியில். எனவே அதிகாலை நோயாளி பார்க்காதவர்கள் நாய் துரத்தத் துரத்த தெருவெல்லாம் ஓடுகிறார்கள். (இந்த நாய்ப் பயத்தில்தான் கூடவே மற்றவர்களையும் ஓடச் சொல்கிறார்களோ என்றும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.) அதிகாலை நோயாளி பார்ப்பவர்கள் காலை எட்டு மணி முதல் வீட்டில் ஒரு பந்தை வைத்துக் கொண்டு வியர்வை வழிந்து ஓட, நாயடி பேயடி அடிக்கிறார்கள்.

ஒரு மனிதனின் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ப உடற் பாரம் கட்டுப்படுத்தப்பட்டால் உடம்பில் இன்சுலின் சுரக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஓரளவு மாத்திரைகளுடன் ஜீனியை சமானத்தில் வைத்திருக்கலாம் என்றும் அண்மையில் அமெரிக்காவில் நடந்த ஜீனி வைத்திய மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய வைத்தியர் ஒருவர் எனக்குச் சொன்னார். இது இலகுவான விடயமாக இருக்காது. முயற்சி செய்யுங்கள் என்று டாக்டர் சொன்னால் எனது சாப்பாடு அப்படியொன்றும் அதிகம் கிடையாது என்பார்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் காலையில் முப்பத்தைந்து இடியப்பம் அல்லது ஒரு இறாத்தல் பாண். மதியம் கொஞ்சமாக இரண்டு பீங்கான் சோறு, இரவில் ஒரு பருப்பு வடை, ஒரு பொத்தல் வடை சகிதம் ஐந்து தோசை என்று வெகு சாதாரணமாகச் சொல்லுவார்கள்.

எண்பத்து ஒன்பது கிலோ எடையுள்ள நான் எனது எடையை ஆறு கிலோ குறைக்க வேண்டும் என்று டாக்டர் கட்டளையிட்டார். ‘இப்போதே நான் மெலிந்து விட்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள் டாக்டர்’ என்று சொன்ன போது, உடம்பில் இன்சுலின் சுரக்க வேண்டும் என்றால் இன்னும் குறைத்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டார். நம்ப மாட்டீர்கள். நான் ஏழு கிலோ குறைந்த விட்டேன். நிறை எப்படிக் குறைந்தது என்று எனக்கே தெரியாது. இன்னும் இன்சுலின் சுரப்பதை உணர முடியவில்லை. வைத்தியரிடம் கேட்கலாம் என்றால், ‘அது என்ன பசுவில் பால் சுரப்பது போல் என்றா நினைத்துக் கொண்டாய்’ என்று திருப்பிக் கேட்டு விடுவாரோ என்று சும்மாயிருந்து விட்டேன். நண்பர்கள் இப்போது என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முதலே ‘எப்புடியிருந்த நான் இப்பிடியாயிட்டேன்’ என்று டயலாக் விட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஒருநாள் விட்டு ஒரு நாள் அரை மணி நேரம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்கிறேன். அப்படி நடப்பதற்குக் காரணம் நாய்கள். மேல் மாகாணத்தில் நாய்கள் அதிகம் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? உடல் பருமனும் குறைந்த நிலையில் நடைப் பயிற்சியும் மேற்கொள்வதால் சில வேளை இன்சுலின் அளவுக்கு மேல் சுரந்து விட்டால் என்ன செய்வது என்று டாக்டரைக் கேட்க வேண்டும். அப்படி எனது உடம்பில் மேலதிகமாக இன்சுலின் சுரக்கும் பட்சத்தில் அதை வெளியேற்றிச் சிறிய போத்தல்களில் அடைத்துக் குறைந்த விலையில் கொடுக்க முடியும். உடம்பிலிருந்து இன்சுலின் வடியும் போது மரங்களில் பால் வழிவது, தேன் வழிவது போன்ற அதிசயம் போல நானும் முக்கியத்துவம் பெற்று விடுவேன். ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விடலாம். மாய்ந்து மாய்ந்து கவிதை, கட்டுரை, கதையென்று எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இன்சுலினில் மாத்திரமே ஜீனியைக் கட்டுப்படுத்தி வாழ்பவர்கள் முதலாவது வகை ஜீனி வியாதிக்காரர்கள் என்று வைத்தியர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். தினமும் ஆகக்குறைந்தது மூன்று அல்லது நான்கு வேளை ஊசி மூலம் இன்சுலின் ஏற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகையினர் ஆகக் கூடியது இரண்டு முறை இன்சுலின் ஏற்றிக் கொள்பவர்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிப்பதற்கு முன்னர் இந்த வகைப்படுத்தலில் வைத்தியர்கள் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தால் நான் பொறுப்பாளி அல்லன். இப்பொழுது இன்சுலினை ஊசி மருந்தாக ஏற்றிக் கொள்வதற்குப் பதிலாக உறிஞ்சு மருந்தாகத் தயாரித்திருப்பதாகவும் கூடிய விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாகவும் ஓர் இணையத் தளத்தில் படித்தேன். உறிஞ்சு மருந்து என்பது சளியினால் ஏற்படும் மூச்சு இழுப்பைத் தீர்க்க ஒரு குளிசையை உடை கருவி ஒன்றில் போட்டு உடைத்து உறிஞ்சுகிறார்களே... அப்படி.

அந்தக் குளிசை மேல்நாட்டுச் சந்தைக்கு வந்து அது சரியில்லை என்று புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் போது அங்கு மிஞ்சியுள்ள அனைத்துக் குளிசைகளும் நமது நாட்டுச் சந்தைக்கு வரும். அதை லேட்டஸ்ட் மருந்தாக வைத்தியர்கள் எழுதித் தர நாம் பயபக்தியோடு பாவிக்கத் தொடங்குவோம். யாரோ சிலருக்கு அது திருப்தியளித்து ஜீனியைக் குறைத்து விட்டால் அந்தக் குளிசை போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தாலும் வரலாம். ஏற்கனவே டெட்ரா சைக்கிளின் குளிசைக் கோதுகளை உற்பத்தி செய்து அதற்குள் கோதுமை மாவை அடைத்து விற்ற புண்ணியவான்கள் வாழும் தேசம் இது.

படைப்பாளிகளுள் ஜீனி வியாதியுள்ளவர்களை மட்டும் ஒன்றிணைத்து ஒரு சங்கம் ஆரம்பிக்கும் எண்ணமும் எனக்கு உண்டு. அப்போதுதான் தேசியத் தானைத் தலைவனாக நான் இருக்க முடியும். அடிப்படை அங்கத்துவம் பெற 14 மணி நேரம் உணவருந்தாமல் பெற்ற இரத்தத்தில் ஜீனி சோதித்த வைத்தியச் சான்றிதழ்கள் இரண்டைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இரண்டு வைத்தியச் சான்றிதழ்களிலும் இரத்தத்தில் ஜீனியின் அளவு 135க்கு மேல் இருக்க வேண்டும். இன்சுலின் ஊசி குத்திக் கொள்பவர்கள் விசேட அங்கத்துவம் வழங்கப் பெறுவார்கள். அவர்கள் தமது இன்சுலின் ஊசியை இரண்டு அங்கத்தவர்களுக்கு முன்னால் ஒரு முறை ஏற்றிக் காட்ட வேண்டும்.

இந்தப் படைப்பாளிகளின் படைப்புகளை ஜீனி வியாதி இல்லாதவர்கள் பரிசீலனை செய்வார்கள். சிறந்தவை பரிசுக்குரியவையாகத் தேர்வு செய்யப்பட்டு இன்சுலின் அல்லது ஜீனியைக் கட்டுப்படுத்தும் குளிசைகள் வழங்கப்படும். அதிசிறந்தவற்றை எழுதிய ஒருவர் வருடாந்தம் தெரிவு செய்யப்பட்டு ‘இனிப்பெழுத்து இமயம்’ பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் படுவார்.

ஆபத்தான நோய்களுக்காகவும் ஆபத்தை உண்டு பண்ணும் வேறு நோய்களுக்காகவும் தினமும் மருந்து சாப்பிடும் பலர் ஜீனி வியாதிக்காரரைக் கண்டால் ஏதோ நாளையே செத்து விட இருப்பவனைப் பார்ப்பது போல் பார்த்து, உங்களுக்கு ஜீனியா என்று அனுதாபத்துடன் கேட்பார்கள். அவர்கள் எல்லோரும் அதாவது ஜீனி வியாதி இல்லாதவர்கள் எல்லோரும் நூற்று ஐம்பது வருடங்கள் வாழப் போவது போலவும் அல்லது சாகா வரம் பெற்றவர்கள் போலவும் ஜீனி வியாதிக்காரன் மட்டும்தான் மரணிப்பவன் எனும் தோரணையிலும் அந்தக் குசல விசாரிப்பு இருக்கும். அதாவது ஜீனி வியாதிக்காரன் மட்டும் மரணத்துக்கு வீசா பெற்று விட்டதைப் போல அவர்களுக்கு ஒரு நினைப்பு. அது நம்மை அவ்வப்போது நிலை குலையச் செய்து விடும்.

நான் சொல்வது என்னவென்றால் ஜீனி வியாதியுள்ள எழுபது எண்பது வயதைத் தாண்டிய பலர் இன்னும் சுக தேகிகளாக உலகம் முழுவது வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான். நான் அறிந்த இருவர் எழுபது வயதைத் தாண்டியவர்கள். அவர்களுடன் சண்டையிடுவதற்கு ஜீனி வியாதியில்லாத ஐவர் விக்கற் பொல்லுகளுடன் போக வேண்டும். தனியொருவரோ இருவரோ போய் மாட்டினால் சம்பல் இடித்து விடுவார்கள். அதே வேளை ஜீனி வியாதியே இல்லாத ஆஜானுபாகுவான பலர் பொசுக் பொசுக்கென்று போய்ச் சேர்ந்தும் இருக்கிறார்கள். எனவே இவ்வாறான குசல விசாரிப்பைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக் கொள்ளவே கூடாது.

கட்டுரையை நீட்டக் கூடாது. ஏனெனில் ஒரே இடத்தில் அமர்ந்து மடிக்கணினியில் இதை எழுதிக் கொண்டிருப்பதுவும் ஜீனி வியாதிக் காரனுக்குப் பொருத்தம் அல்ல. நடை பாதையில் பீடாக்காரர் பீடாத் தட்டைக் கழுத்தில் கொளுவிக் கொண்டு செல்வது போல மடிக்கணினியைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்து அல்லது நின்று எழுதுவதற்கு ஒரு பலகை தயார் செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஜீனி வியாதி பார்க்கும் வைத்தியர் அதை உங்களுக்கும் நிச்சயம் சிபார்சு செய்வார். சில வேளை மரப் பலகை அல்லது அலுமினியம் அல்லது iஃபபரில் அப்படியொரு பலகையைத் தயார் செய்து மருந்தகங்களில் விற்பனை செய்யவும் கூடும்.

சரிதான்! இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும் ஜீனி வியாதி குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் நீங்கள் குழப்பத்துடன்தான் இருப்பீர்கள். இதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. ஜீனி வியாதிக்கு வைத்தியம் செய்யும் வைத்தியர்களும் இதே குழப்பத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது எனது முடிபு. இந்தக் குழப்பத்தை நீங்கள் மனதில் எடுப்பதானது உங்கள் உடம்பில் இன்சுலின் சுரப்பதைத் தடை செய்யும் என்பதை மட்டும் என்னால் அறுதியிட்டுச் சொல்லி வைக்க முடியும்.

எனவே எல்லோரும் போல் எப்போதும் போல் நீங்கள் சந்தோசமாக இருங்கள். மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொறாமை, வெறுப்பு, சினம், எரிச்சல் ஆகிய மனோ நிலைகளுக்குள் தள்ளப்படாமல் வாழ்வீர்களாயின் உங்களுக்கு எந்தத் தீங்கும் அண்டாது.

யாராகிலும் ஒரு நபருக்கு மரணம் நேர்வதற்கான காரணம் வேண்டுமாக இருந்தால் அது ஜீனி வியாதியாகவே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு சிறிய சொறிச் சிரங்கே போதும்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: