Sunday, January 16, 2011

பேசும் புத்தகம்



ஹலோ.... அஷ்ரஃப் சிஹாப்தீன்!

நான் மிகவும் மனம் நொந்து போய் இருக்கிறேன். வெளியீட்டு விழாவன்று மிகவும் கம்பீரமாக மேடையில் ஏறி நீங்கள் என்னைப் பெற்றுக் கொண்டு வந்தீர்கள். வீட்டுக்கு வந்து என்னைச் சுற்றியிருந்த அழகான பளபளக்கும் உறையைக் கழற்றி விட்டு என்னை விரித்துப் பார்த்தீர்கள். அணிந்துரை, முன்னுரை, உள்ளடக்கம் ஆகியவற்றைத் தட்டிக் கொண்டு சென்ற நீங்கள் திடீரென என்னை மேசை மீது எறிந்து விட்டு வெறுப்புடன் எழுந்து சென்று விட்டீர்கள்.

முதலில் என்னை எழுதியவன் மீது கோபம் கோபமாக வந்தது. எனக்கு மட்டும் நகருவதற்கு முடியுமாக இருந்தால் நான் உங்களது வீட்டு அடுப்பில் விழுந்து என்னை எரித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் உங்களை ஒரு எழுத்துலக சுல்தானாக நினைத்துக் கொண்டிருக்கலாம். அது உங்கள் இஷ்டம். பலர் அப்படித்தானே நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் என்னைப் படித்துப் பார்ப்பதற்கும் சிலர் இருக்கக் கூடுமல்லவா? உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தூக்கி எறியும் உங்களது மனோபாவம் அகம்பாவமா இல்லையா?

என்னை எழுதியவன் ஓர் அரைவேக்காடாக இருக்கலாம். புத்தகமாக இந்த எழுத்துக்களைப் பார்க்கும் ஆசையில் என்னை வெளியிட்டு விட்டான். அவரவர் திருப்திக்கேற்ப அவரவர் புத்திக்கேற்பத்தான் எல்லோரும் நடந்து கொள்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் சரியோ பிழையோ அவனுக்கு இதை எழுதி வெளியிடும் எல்லாச் சுதந்திரமும் உண்டு.

சில நூல்களை நீங்கள் மிகவும் பத்திரமாகப் பேணி வருகிறீர்கள். என்னைப் போன்றவற்றைக் கண்டும் காணாத மாதிரி நடந்து கொள்வது எனக்கு பெரும் மனத்தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. என்னை நீங்கள் வீசிவிட்டுப் போன பிறகு உங்களது மனைவி செய்தித் தாள்களுடன் சேர்த்து என்னை உங்கள் வீட்டு மூலையில் போட்டதை அறிவீர்களா? உங்களது மூத்த பையன் என்னை எடுத்து முகப்பை மட்டும் பார்த்து விட்டு அடுத்த கணமே மேசையில் இருந்த மற்றொரு புத்தகத்தின் மீது போட்டுவிட்டுச் சென்றான். திறந்தோ படித்தோ பார்க்காமல் மேசையில் போட்டது எனக்கு உறுத்தவில்லை. .ஆனால் முன்னுரையில் பாரதியார் பாடலைத் திருக்குறள் என்று சொல்லியிருக்கும் ஒரு புத்தகத்தின் மேல் நான் விழ நேர்ந்தது எனக்கேற்பட்ட மிகப்பெரும் கௌரவக் குறைவாகும்.

உங்களது புத்தக அடுக்குகளுக்குள் இருக்கும் புத்தகங்கள் சிலவற்றின் பின்னால் உள்ள வெட்கம் கெட்ட அரசியல் பற்றி நான் நன்கறிவேன். நல்ல படைப்புகளைத்தான் நீங்கள் தேர்ந்து பாதுகாப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். படைப்பு நன்றாக இருந்த போதும் அவற்றின் பின்னணிகளை நீங்கள் எந்தளவு தூரம் விளங்கி வைத்துள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

சில தினங்களுக்கு முன்னர் உங்களது புத்தக அடுக்கிலிருந்து நீங்கள் ஒரு நூலை எடுத்து வந்து புரட்டி அதிலிருந்து ஒரு தொலைபேசி இலக்கத்தைப் பெற்றீர்கள் ஞாபகமா? அந்தப் புத்தக எழுத்தாளன் எதை எழுதினாலும் அதற்கு ஒரு அணிந்துரையை யாராவது ஒரு மூத்த பேராசிரியரிடம் பெற்றிருப்பார். பேராசிரியரின் வீட்டில் பழி கிடப்பதனால் தொல்லை பொறுக்காமல் அவரும் நான்கு பந்திகளை எழுதிக் கொடுத்து விடுவார். அவ்வாறு பேராசிரியருக்குச் சிரமம் கொடுத்துப் பெறும் அந்த முன்னுரைக்குப் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. பரிசுத் தேர்வுக்குச் சென்றால் பேராசிரியரின் அணிந்துரைக்காகவே அந்நூல் கவனத்தைப் பெறும் என்பதுதான் அந்த அரசியல். அதாவது தனது எழுத்துக்களில் நம்பிக்கையற்ற நிலையில்தான் அந்தப் படைப்பாளி இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. இவ்வாறான படைப்பாளிகளின் நூல்களை நீங்கள் கொண்டாடுவீர்கள். என்னைப் போன்றவர்களைத் தூக்கி எறிந்து விடுவீர்கள்.

இப்போது உங்கள் முன்னால் கிடக்கும் என்னைக் கணக்கெடுக்காமல் வேறு ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருக்கிறீர்கள். எனது வெளியீட்டு விழாவுக்கு நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகத்தை எழுதிய நபர் சற்றுத் தாமதமாகி வந்து பலரின் கவனத்தை ஈர்த்து முன்னால் அமர்ந்தார். என்னை எழுதியவரைப் பற்றி அறிமுகம் செய்தவரும் என்னை வ pமர்சனம் செய்ய வந்தவரும் என்னைக் கையில் வைத்துக் கொண்டே அந்த எழுத்தாளர் பற்றிக் காதுகளுக்குள் குசு குசுனெ;று பேசிக் கொண்டார்கள். பல போட்டிகளில் அந்தப் படைப்பாளி முதற் பரிசினை வென்றவராம். அது எப்படியென்றால் போட்டி நடத்துவதற்குப் பணம் கொடுப்பதே அவர்தானாம். அவர்கள் பேசிக் கொண்டதில் எனக்கு விளங்கியது என்னவெனில் முதலாம் பரிசுக்குரிய பணத்தை இவரே கொடுத்து விடுவாராம். பிறகு அதே போட்டியில் தானும் கலந்து கொள்வாராம். பிறகென்ன... முதலாம் பரிசும் பத்திரிகைப் பேட்டிகளுமாய் அமர்க்களப்படுத்தி விடுவார்.

உங்களைப் போன்ற சில சிரேஷ்ட எழுத்தாளர்கள் நாற்பது வருடமாக எழுதி ஒரேயொரு நூலை வெளியிட்டு விட்டு முடி சூடிக் கொள்கிறீர்கள். அதன் பிறகு யாருடன் எது சம்பந்தமாகக் கதைக்க நேர்ந்தாலும் உங்களது புத்தகம் பற்றி ஒரு வரியைச் சேர்த்துக் சொல்லிவிடுகிறீர்கள். உலகம் முழுக்க வாழும் எழுத்தாளர்களுக்குக் கடிதமும் மின்னஞ்சலுமாக எழுதித் தொடர்புகளைப் பேணி வருவதன் மூலம் எழுத்தை விட்டும் தூரமாகிய போதும் இன்னும் எழுத்துலக ராசாவாகத்தான் இருக்கிறோம் என்றும் இந்நாட்டு இலக்கியத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறோம் என்றும் உணர்த்த முயல்கிறீர்கள். இதனால் புதியவர்கள் எழுதுவதைப் பொறுத்த வரை மகாத்மா காந்தியின் மூன்று குரங்குகளைப் போல் நடந்து கொள்கிறீர்கள்.

இதனால் என்னைப் போன்ற ஒரு நூலை எழுதிய ஆரம்ப நிலை எழுத்தாளன் கவனிக்கப்படுவதே இல்லை. அப்படிக் கவனிப்புப் பெற வேண்டுமானால் உங்களைப் போன்ற பல மூத்த படைப்பாளிகள் பண்ணும் அனைத்துச் சுத்துமாத்து வேலைகளையும் பண்ணத் தெரிந்திருக்க வேண்டும் என்பது வலிக்கும் உண்மை. சில வேளைகளில் புதிய படைப்பாளிகள் நல்ல படைப்புக்களையும் தரத்தான் செய்கிறார்கள். ஆனால் அவற்றைப் பற்றிப் பேசவும் அதை எழுதியவனைத் தட்டிக் கொடுக்கவும் உங்களுக்கு மனசு கிடையாது. அதற்குக் காரணம் அவன் உங்களைத் தாண்டிச் சென்று விடுவான் என்கிற ஒரு அச்சம்தான். வேறென்ன?

இந்த நாட்டில் தமிழ் இலக்கிய உலகில் யார் புத்தகம் போட்டாலும் அவை அனைத்தும் உடனே விற்றுத் தீர்வதில்லை. ஏனென்றால் நமது சனங்கள் வாசிப்பதில்லை என்று சொல்லிச் சலித்துக் கொள்வீர்கள். அதற்குக் காரணமாகத் தொலைக் காட்சி என்ற ஊடகத்தைக் குற்றம் சுமத்துவீர்கள். எனது கருத்து என்னவென்றால் நீங்கள் எழுதும் எழுத்தானது ரசிக்கத் தக்கதாக, மனதைத் தொடும்படியானதாக இல்லை. தொலைக் காட்சி வருவதற்கு முன்பிருந்தும் கூட இந்நாட்டு எழுத்தாளர்களின் கதி இப்படியேதான் இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக மக்கள் நமது இலக்கியவாதிகளின் புத்தகத்தை வாசிப்பதை விட வடிவேலு, விவேக் காமடியை ரசிக்கலாம் என்று முடிவுக்கு வந்து விட்டார்கள் போல் தோன்றுகிறது. எல்லோருக்கும் தமிழில் எழுதத் தெரிந்திருக்கிறது. ஆனால் எதை யாருக்காக எப்படி எழுத வேண்டும் என்ற வித்தை சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

எனது வெளியீட்டு விழா முடிந்ததும் என்னைக் கையில் வைத்தக் கொண்டு பலரிடம் அளவளாவிக் கொண்டிருந்தீர்கள். அப்போது ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் உங்களிடம் சொன்ன விடயத்தைக் காதாரக் கேட்டுக் கசந்து போனேன். ஒரு கட்டுரையை எழுதியிருந்த சொல்லப்பட்ட அந்த எழுத்தாளர், அந்தக் கட்டுரையில் ஒருவரின் எழுத்துலகச் சாதனைகளைப் பட்டியல் போட்டும் விதந்துரைத்தும் கொண்டு வந்து இறுதியில், இவற்றையெல்லாம் சாதித்தவர் - சாட்சாத் நான்தான்! என்று முடித்திருந்தாராம். இதைக் கேட்டு நீங்களோ வாய்விட்டுச் சிரித்த போது அங்கு நின்ற அனைவரும் வினோதமாய் உங்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

என்னைப் போன்ற புதிய புத்தகங்கள் வருவதால்தான் உங்களது எழுத்துக்கு ஒரு சிரேஷ்ட நிலை கிடைக்கப் பெறுகிறது என்பதை வதியாக மறந்து போகிறீர்கள். என்னை எழுதியவனைப் போன்றே நீங்களும் ஒரு காலத்தில் இருந்தீர்கள். இன்னும் சொல்லப் போனால் அன்றைய உங்களது ஆரம்ப நிலை வறுமை மிக்கது. நான் சொல்லும் வறுமை இலக்கியத்தில். இன்றைய இளைஞனுக்கு பல்வேறு துறைகளிலும் அறிவு உள்ளது. உங்கள் காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த சில நூல்களையும் சஞ்சிகைகளையும் தவிர தகவல் பெறவோ தூண்டுதல் தரவோ வேறு மார்க்கங்கள் இருக்கவில்லை. உங்களில் பலர் இன்னும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது இன்றைய தொழிநுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தியெழுந்த இலக்கியச் சூழலை எதிர் கொள்ள முடியாமல் தத்தளிப்பது புரிகிறது.

பத்திரிகைகளில் அந்த நாட்களில் வந்த கட்டுரைகளையும் தகவல்களையும் கத்தரித்து கோவைப்படுத்திக் கொண்டு அவற்றை உசாத்துணையாகக் கொண்டே பல சிரேட்டங்கள் தமது எழுத்துப் பணியை மேற்கொள்ளுகின்றன. அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைக் கட்டுக்குளேயே உங்களது மனைவி என்னை மூலைக்குத் தள்ளினார். இதைப்போன்ற ஒரு அவலம் யாருக்கும் வரக் கூடாது.

நான் உங்களிடம் கேட்பதெல்லாம் என்னவென்றால், உங்களால், உங்களைப் போன்றவர்களால் என்னைப் போன்ற நூல்களைப் படிக்க முடியவில்லை என்றால் அதற்காக அசூசையாக எங்களை நோக்க வேண்டாம். அருவருக்கத் தக்க முறையி;ல் பெயரும் புகழும் பெற்ற ஏனைய புத்தகங்களுக்குள்ளும் என்னைச் செருகி விட வேண்டாம். அதற்குப் பதிலாக வெள்ளிக் கிழமை பி.ப. உங்கள் வீட்டுப் பாதையால் வரும் பம்பாய் மிட்டாய் விற்பவருக்கோ பெருங் குடி மக்களின் ஜல சந்திக்கு அருகில் வியாபாரம் செய்யும் கடலை வண்டிக்காரனுக்கோ என்னைக் கொடுத்து விடுங்கள். புண்ணியமாய்ப போகும்!

நன்றி: தினகரன் வாரமஞ்சரி 16.01.2011
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

Muruganandan M.K. said...

கிண்டலுடன்
சுவையாகவும் மனதில் உறைக்கும்படியும் சொல்லியிருக்கிறீர்கள்.

Shaifa Begum said...

பேசும் புத்தகமாய் உருவகம் செய்து. இலக்கிய உலக எழுத்தாளர்களின்
நடப்பு நிஜம் சொன்னீரகள். இரு புருவங்கள் உயர்த்தி ஆச்சரியமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.. எல்லாமே சுத்து மாத்து தானா..? ஒருவரை அடித்து நொறுக்கி. பின்னால் தள்ளி முன்னால் போகும் உலகம் எப்போ மாறும் ..?

"பத்திரிகைகளில் அந்த நாட்களில் வந்த கட்டுரைகளையும் தகவல்களையும் கத்தரித்து கோவைப்படுத்திக் கொண்டு அவற்றை உசாத்துணையாகக் கொண்டே பல சிரேட்டங்கள் தமது எழுத்துப் பணியை மேற்கொள்ளுகின்றன. அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைக் கட்டுக்குளேயே உங்களது மனைவி என்னை மூலைக்குத் தள்ளினார். இதைப்போன்ற ஒரு அவலம் யாருக்கும் வரக் கூடாது."

எல்லாமே தில்லு முள்ளு தானா..? அட மாறுங்கப்பா.. இப்போதாவது உங்க சொந்த
மூளைளை துாசு தட்டுங்க இல்லையென்றால். கரையான் அரி்ததுவிடும்.
எழுத்து என்பது ஒரு கலை. மட்டும் அல்ல அது இறைவன் அருள். இங்கு போட்டிக்கோ. பொறாமைக்கோ இடமே இல்லை. திறமை. தெளிந்த அறிவு
உள்ளவர்கள்.. திரும்பிப் பார்க்காமல் போயிட்டே இருக்கலாம்.இது என்னுடைய தாழ்மையான எண்ணம்.

நன்றி பேசும் புத்தகமே ! நல்லாய்ச் சொன்னாய் .!
நாளு பேரு காதில் உறைக்க !